இந்த வலையில் தேடவும்

Thursday, April 28, 2011

கடவுளும் நானும்


கடவுளுக்கான இடம்
====================

கடவுளுக்கான இடம்
எல்லா வீடுகளிலும் இருக்கிறது
சில வீடுகளில்
பிரம்மாண்டமான பூஜை அறையில்
சில வீடுகளில்
புத்தக அலமாரிகளில்
சில வீடுகளில்
கடுகு, சீரக டப்பாக்களுக்கு மத்தியில்
பேச்சுலர்களின் அறைகளில்
ஒற்றை விநாயகர் பொம்மையாய்
கடவுளுக்கான இடம்
எல்லா வீடுகளிலும் இருக்கிறது

கடவுளும் நானும்
=================

போதும்
கடவுளைப் பார்த்து நான் பரவசப்பட்டது
பேருந்தின் வேகத்தில்
பின்னால் மறையும் கோவில்களைப் பார்த்து
கன்னத்தில் போட்டுக் கொண்டது
ஊர்வலத்தில் வந்த
பிள்ளையார்களை வணங்கி
ஓடிப் போய் விபூதி பூசிக் கொண்டது
கடவுள் படம் காலில் பட்டு விட்டால்
பதறிப் போய் கண்களில் ஒற்றியது
மணிக்கணக்கில் கால்கடுக்க வரிசையில் நின்று
கருவறையின் தெளிவில்லாத பிம்பத்தைப் பார்த்து மெய்மறந்தது
போதும்
கடவுளைப் பார்த்து நான் பரவசப்பட்டது
இனிமேல்
என்னைப் பார்ப்பதற்காய்
கடவுள் பரவசப்படட்டும்!


கடவுள் version -2
==================

தட்டினால்தான் திறக்கிறார்
கேட்டால்தான் கொடுக்கிறார்
கெட்டவர்களை 'நின்று' தான் கொல்கிறார்
நாம் ஒன்று நினைக்க அவர் ஒன்று நினைக்கிறார்
பிரளயம் நிகழ்ந்த பின்
அடுத்த யுகத்திலேனும்
கொஞ்சம்
மேம்படுத்தப்பட்ட கடவுள் கிடைத்தால் பரவாயில்லை!

நிதர்சனம்
===========

நாட்கள் தொடங்குவதென்னவோ
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தான்

இன்று எனக்கான
பிரமோஷன் கடிதம் வரக்கூடும்

இன்று நான் அனுப்பிய
கவிதை பத்திரிகையில் வந்திருக்கக்கூடும்

பாட்டிக்கு உடம்பு பரவாயில்லை என்று
அம்மா போன் செய்யக் கூடும்

பேருந்தில் அந்தப் பெண் இன்று
என்னைப் பார்த்து புன்னகைக்கக் கூடும்

வங்கியில் விண்ணப்பித்த கடன்
ஓ.கே என்று கடிதம் வரக்கூடும்..

என்றெல்லாம்
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்..

அனால்
நாட்கள் முடிவதென்னவோ
அதே
18 -பி பேருந்தின்
வியர்வைப் பயணத்துடனும்
அதே
ராகவன் மெஸ்ஸின்
பரோட்டாக்களுடனும் தான்...


~முத்ரா


Tuesday, April 26, 2011

அணு அண்டம் அறிவியல்-23

அணு அண்டம் அறிவியல்-23 உங்களை வரவேற்கிறது

ஜென் (Zen) குருமார்கள் தங்களிடம் புதிதாகச் சேரும் சீடர்களுக்கு முதலில் தியான முறைகளையோ, மந்திரங்களையோ , சாஸ்திரங்களையோ கற்றுத் தரமாட்டார்கள்.
அவர்களுக்கு கோவான்கள் (Koans ) எனப்படும் புதிர்களைக் கொடுத்து அவற்றுக்கான விடையைக் கண்டுபிடிக்குமாறு சொல்வார்கள். சரியான விடையைக் கண்டுபிடித்து சொன்னால் தான் உன்னை சீடனாக ஏற்றுக் கொள்வேன் என்றும் சொல்லி விடுவார்கள். கோவான்கள் என்பவை சாதாரணப் புதிர்கள் அல்ல. ஏனென்றால் அவற்றுக்கு தீர்வே இல்லை. (Unsolvable )

உதாரணமாக இதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்: ஒரு வாத்து சிறியதாக இருக்கும் போதே ஒரு கண்ணாடிக் குடுவையில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. வாத்து பெரிதாகி அந்தக் குடுவையை முழுதும் அடைக்கும் அளவு வளர்ந்து விடுகிறது.இப்போது அந்த வாத்தை வெளியே எடுக்கவேண்டும். அந்த முயற்சியில் வாத்தும் சாகக்கூடாது. குடுவையும்
உடைந்து விடக்கூடாது. ஆனால் வாத்தை வெளியே எடுக்க வேண்டும்..இது தான் மாணவருக்குக் கொடுக்கப்படும் ஒரு ஜென் கோவான்

இதை மாணவர் மாதக்கணக்கில் யோசித்து கொண்டு வரும் விதம் விதமான விடைகளை எல்லாம் ஜென் குரு நிராகரித்து விடுவார்..ஏனென்றால் இதற்கு விடையே இல்லை.இந்தப் புதிர் மாணவனைப் பைத்தியமாக அலையச் செய்யும்..கடைசியில் ஒரு நாள் இந்த கடினமான மனப்போராட்டத்தின் இடையே அவனுக்கு ஞானம் சித்திக்கிறது.உடனே அவன் குருவிடம் ஓடி வந்து 'வாத்து எப்போதும் உள்ளே போனதே இல்லை ' (The Goose is out ) என்கிறான்.குருவும் அவனை அணைத்துக் கொண்டு அவனுக்கு தீட்சை அளிக்கிறார்...சும்மா இந்த பதிலை மனப்பாடம் செய்து கொண்டு வந்து குருவிடம் சொன்னால் அவர் மாணவனின் கண்களில் ஞானம் இல்லை என்பதை அறிந்து கொண்டு கையில் கிடைப்பதை எடுத்து வீசி அவனை விரட்டி விட்டு விடுவார்.

இன்னொரு கோவான் இப்படிப் போகிறது: ஓர் அடர்ந்த காடு. அதில் உங்களை பசி கொண்ட மூர்க்கமான சிங்கம் ஒன்று துரத்துகிறது. நீங்களும் உயிருக்கு பயந்து வேகமாக ஓடுகிறீர்கள். அப்போது ஒரு பெரிய பள்ளத்தின் விளிம்புக்கு வந்து விடுகிறீர்கள் . சிங்கத்திற்கு பயந்து அதில் குதித்து விடுகிறீர்கள். அதிர்ஷ்ட வசமாக ஒரு மரத்தின் விழுது ஒன்று உங்கள் கையில் கிடைக்கிறது. அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே எதேச்சையாகக் கீழே பார்த்தால் அங்கே இன்னொரு கொடிய சிங்கம் உறுமிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது. இது போதாதென்று நீங்கள் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் மர விழுதை மேலே ஒரு எலி கொறித்துக் கொண்டிருக்கிறது.இந்த சூழ்நிலையில் நீ எப்படித் தப்பிப்பாய்? என்பது தான் கோவான்.

சரி. இந்த கோவானுக்கும் விடை இல்லை. உண்மையான சிங்கத்திடம் இருந்து கூட ஒருவேளை நாம் தப்பித்து விடலாம். ஆனால் நம்மை மரணம் என்ற சிங்கம் விடாமல் துரத்துகிறது. காலம் என்ற எலி நம் நாட்களை அறுத்துக் கொண்டிருக்கிறது. இதில் இருந்து எப்படித் தப்பிப்பது? நோ சான்ஸ்! சீடன் இந்தப் புதிரின் மீது வருடக்கணக்கில் தியானம் செய்யும் போது திடீரென்று அவனுக்கு தப்பிக்க ஒரு வழி இருப்பதாகத் தோன்றுகிறது. (அதாவது வெளியே தப்பிக்க வழிகள் ஏதும் இல்லை..எனவே தனக்கு 'உள்ளே' சென்று விடுவது)அவனுக்கு ஞானமும் வாய்க்கிறது

குவாண்டம் இயற்பியலிலும் கோவான்கள் இருக்கின்றன. 'ஒளி'யைப்பற்றி சிந்திப்பது கூட ஒரு கோவான் தான் என்கிறார்கள். (ஐன்ஸ்டீன் இன்னும் கொஞ்சம் சிந்தித்திருந்தால் அவர் ஜென் நிலையை அடைந்திருக்கக் கூடும்!) ஒளியின் ரகசியம் இன்று வரை மனிதனுக்குப் பிடிபடவில்லை. ஒளி என்பது அலையா? பொருளா? அல்லது இரண்டும் கடந்த ஒன்றா ? என்பது ஒரு கோவான். ஒளித்துகளான போட்டானை நிறை இல்லாத துகள் என்கிறார்கள்.. நிறை இல்லாமல் ஒரு துகள் எப்படி இருக்க முடியும்? என்பதுவும் ஒரு கோவான் தான்.(
போட்டானுக்கு நிறை இருந்தால் ஒரு பொருளை பகலில் எடை போட்டால் ஒரு நிறையும் இருட்டில் எடை போட்டால் வேறு ஒரு நிறையும் கிடைக்கவேண்டும்.என்ன தான் துல்லியமான கருவிகளைக் கொண்டு எடை போட்டாலும் நாம் பார்ப்பதாலேயே போட்டான்கள் பொருளின் மேல் விழுந்து அதன் நிறை சிறிது அதிகரித்து விடக்கூடும்.இன்னொரு Uncertainty !)

மின்னலைப் பார்த்து பயந்து கொண்டிருந்த மனிதன் இன்று ஒளியை வைத்து லேசர், பைபர் ஆப்டிக்ஸ், ஹோலோக்ராம் என்றெல்லாம் முன்னேறி இருக்கிறான். ஆனாலும் ஒளியின் nature என்ன என்பது சரியாகத் தெரியவில்லை. சில வி
ஞ்ஞானிகள் ஒளியின் இயல்பைப் புரிந்து கொள்ளும் புலனறிவு மனிதனுக்கு இல்லை என்கிறார்கள்.

உதாரணமாக நம்மால் நீளம், அகலம், ஆழம் (உயரம்) என்ற மூன்று பரிமாணங்களைக் கற்பனை செய்ய முடியும்..ஆனால் இந்த மூன்றைத் தாண்டி நான்காவது பரிமாணத்தைக் கற்பனை செய்ய முடியாது. இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த
விஞ்ஞானியாகக் கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கிங் தன்னாலேயே நான்காவது பரிமாணத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்கிறார்.

மனிதனின் அறிவுக்கு எல்லை இருக்கிறதா?

எலெக்ட்ரான்கள் அணுவில் ஒரு ஆற்றல் மட்டத்தில் இருந்து இன்னொன்றுக்குத் தாவுவதை Quantum leap என்று சொல்வார்கள்.இதில் ஒரு வினோதம் என்னவென்றால் எலக்ட்ரான் ஒரு ஆற்றல் மட்டத்தில் இருந்து இன்னொன்றுக்குத் தாவும் போது இடைப்பட்ட புள்ளிகளில் அதை நம்மால் உணர முடிவதில்லை. இங்கே மறைந்து அங்கே தோன்றுகிறது. இப்போது இந்த படத்தைப் பார்க்கவும்

Y
^
| () Observer
| _ | _
P --->A --------------------------B C --------------------------------------------D ---> X

இரண்டு பரிமாண வெளியில் ஒரு துகள் 'P ' A என்ற புள்ளியில் இருந்து
B என்ற புள்ளிக்கு நகருகிறது .B என்ற புள்ளியில் அது இரண்டு பரிமாண உலகில் இருந்து விடுபட்டு முப்பரிமாணத்திற்கு வருகிறது
(கம்ப்யூட்டர் திரையை விட்டு உங்களை நோக்கி செங்குத்தாக) பின்னர் முப்பரிமாணத்தில் பயணித்து மீண்டும் C என்ற புள்ளியில் இரண்டு பரிமாண உலகில் இணைகிறது. இதை இரண்டு பரிமாண உலகில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு துகள் B யில் இருந்து மறைந்து C யில் தோன்றியது போல இருக்கும். ( Particle is said to have tele-ported from B to C)


மனிதனின் அறிவின் விஸ்தாரம் என்ன? நாம் இயற்கையின் ரகசியங்களை அறிந்து கொள்ளும் Privilege ஐ இயற்கை நமக்குக் கொடுத்திருக்கிறதா? சாப்ட்வேர் Application களில் பயனாளிகள் (users ) உள்ளே நுழைவதற்கு அவர்களுக்கு ஒரு privilege கொடுக்கப்படும்.( ஒன்று இரண்டு மூன்று என்று) privilege ஒன்று என்ற கணக்குடன் (account ) நாம் உள்ளே நுழைந்தால் அந்த application இல் எந்த மாற்றத்தையும் நாம் செய்ய முடியாது. இருப்பதையெல்லாம் பார்வையிட மட்டுமே முடியும். privilege ஐந்து என்று உள்ளே நுழைந்தால் தான் நமக்கு முழு அதிகாரமும் கிடைக்கும்.

இயற்கை நமக்குக் கொடுத்துள்ள privilege என்ன? குறைந்த அதிகாரத்துடன் பிரபஞ்சத்தின் உள்ளே நுழைந்து விட்டு தாம் தூம் என்று குதிக்கிறோமா நாம்?இப்படி நிறைய விஷயங்கள் நம்மை ஒன்று சேர்ந்து பயமுறுத்தினாலும் இன்றைக்கும் அறிவியலில் பிரபஞ்ச சூத்திரத்தை அறியும் பயணம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. நாமும் நம் பயணத்தைத் தொடருவோம்..


குவாண்டம் tunneling என்ற விளைவைப் பற்றி சொல்வதாக சொல்லியிருந்தோம். அதைப் பார்ப்பதற்கு நாம் RADIOACTIVITY என்று அழைக்கப்படும் கதிரியக்கம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது

1896 இல் ஹென்றி பெக்யூரல் என்ற பிரெஞ்சு
விஞ்ஞானி இருளில் ஒளிரும் சில கனிமங்களைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்தார்.அதாவது சில கனிமங்களை வெய்யிலில் சூரிய ஒளியில் வைத்தால் அவை ஒளியை உள்வாங்கி பின்னர் இருட்டில் வைக்கும் போது ஒளிரும். ஒரு போட்டோ பிலிமை ஒளி புகாத கறுப்புக் காதிதத்தில் சுற்றி அதன் மேல் சிறிய அளவில் யுரேனியத்தை வைத்து சோதனை செய்ய வேண்டியது. யுரேனியம் சூரியனின் மின் காந்த ஆற்றலை உள்வாங்கி அதை X - கதிர் போன்ற கண்ணுக்குத் தெரியாத கதிர்களாக பின்னர் வெளிவிடுகிறதா என்று கண்டறிவது அவரின் நோக்கம்.அப்படி வெளிவிட்டால் அவை கறுப்பு காகிதத்தை ஊடுருவி பிலிமில் பதிவாகும் என்பது அவரது ஐடியா. (ஒரு வருடம் முன்பு தான் X -கதிர்கள் ராண்ட்ஜன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன)
டைட்டானிக் காப்டன் லெவலுக்கு
போஸ் கொடுக்கும் இவர் தான்
பெக்யூரல்


ஆனால் அவரது துரதிர்ஷ்டம் (அல்லது அதிர்ஷ்டம்!) இரண்டு நாளாக வெய்யிலே வரவில்லை.ஒரே மேகமூட்டமாக இருந்தது. சரி சூரியன் வரும் வரை காத்திருக்கலாம் என்று அவர் இந்த பொட்டலத்தை மேஜை டிராயரில் வைத்து மூடி விட்டு சன் டி.வி சீரியல் பார்க்கப் போய் விட்டார். இரண்டு நாள் கழித்து வந்து எடுத்துப் பார்த்ததில் பிலிமில் யுரேனியத்தின் இமேஜ் விழுந்திருந்தது. (இயற்பியல் வரலாற்றில் இன்னொரு யுரேகா!!) யுரேனியம் ஏதோ கதிர்களை வெளியிடுகிறது என்று அனுமானிக்க முடிந்தது..ஆனால்
பெக்யூரல் அதற்கு வெளியில் இருந்து எந்த ஆற்றலையும் கொடுக்கவில்லை .யுரேனியத்தின் அந்த மாயக் கதிர்கள் கனமான அந்த காகிதத்தையும் ஊடுருவிச் சென்றிருக்க வேண்டும்.

கனமான தனிமங்கள் இயற்கையிலேயே 'சிதையும்' என்ற இந்த கண்டுபிடிப்பிற்காக (கதிரியக்கம்) அவருக்கு 1903 ஆம் ஆண்டின் நோபல் பரிசு கிடைத்தது.

ஹைட்ரஜன் வாயுவின் அணுவில் ஒரே ஒரு ப்ரோடான் மட்டும் உள்ளது. அதில் மேலும் மேலும் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் அதிகரித்துக் கொண்டே சென்றால் நமக்குக் கனமான தனிமங்கள் கிடைக்கும். ஆனால் இதற்கு ஒரு எல்லை இருக்கிறது. லோடு அதிகம் ஏற்றிய லாரிகள் வழியெங்கும் மணலை சிந்திக் கொண்டே செல்வது போல அதிக லோடு ஏற்றப்பட்ட தனிம அணுக்கள் நியூட்ரான் மற்றும் ப்ரோட்டான்களின் கனம் தாங்காமல் தவிக்கின்றன. நம் யுரேனியம் 92 புரோட்டன்களுடனும் 146 நியூட்ரான்களுடனும் தத்தளிக்கிறது. இவ்வளவு துகள்களை சமாதானத்துடன் ஒன்றாகப் பிணைக்க முடியாமல் அணுக்கரு வலிய விசை (nuclear strong force ) தடுமாறுகிறது. எனவே இரண்டு ப்ரோட்டான்கள் மற்றும் இரண்டு நியூட்ரான்கள் ஒன்றாக இணைந்து ஒரு 'ஆல்பா துகளாக' அணுக்கருவை விட்டு வலுக்கட்டாயமாக வெளித்தள்ளப்படுகின்றன. அணுக்கருவின் binding energy (பிணைப்பு ஆற்றல்) யில் ஒரு பகுதி இயக்க ஆற்றலாக மாற்றப்பட்டு ஆல்பா துகள்கள் அபாரமான வேகத்துடன் வெளி வருகின்றன. அவைகளின் வேகம் என்ன தெரியுமா? வினாடிக்கு 15 ,000 கிலோ மீட்டர்கள் ..மனிதனிடம் இப்போது உள்ள ஜெட் விமானங்களை விட ஆயிரம் மடங்கு அதிக வேகம். இதனால் தான் கதிரியக்கம் மனித உடலை சிதைத்து விடுகிறது. இந்த வேகத்தில் வரும் ஆல்பா துகள்கள் நம் உடலின் வீக்கான வேதியியல் பிணைப்புகளை எளிதில் உடைத்து விடுகின்றன.


அல்பா துகளை வெளியே தள்ளிய யுரேனியம் அணு இப்போது லேசான 'தோரியம்' அணுவாக மாறி ரிலாக்ஸ் ஆகிறது

இப்போது ஒரு சந்தேகம் என்னவென்றால் அணுக்கருவிடம் இருந்து அதன் துகள்கள் வெளியே எஸ்கேப் ஆகுவது சுலபம் அல்ல. அணுக்கருவின் விளிம்பை high potential barrier என்கிறார்கள்.(அதிக ஆற்றல் தடுப்புச் சுவர் )அதை எதிர்த்துக் கொண்டு துகள்கள் எப்படி வெளியே வர முடியும்? அவற்றுக்கு அந்த அளவு இயக்க ஆற்றல் இருப்பதில்லை.அது ஒரு விதமான கம்சனின் காராக்ரகம். தேவகியோ வசுதேவரோ அவ்வளவு சீக்கிரமாக காவலை மீறி தப்பி விட முடியாது. ஆனாலும் வசுதேவர் தப்பித்தார். கிருஷ்ணனும் உள்ளே வந்தான் !!!
ராஜா ரவிவர்மாவின் 'கிருஷ்ணன் பிறப்பு'


எப்படி வசுதேவர் தப்பித்தார் என்றால் அவர் Quantum Tunneling மூலம் தப்பித்தார் என்று கூட சொல்லலாம்..அவர் எப்படித் தப்பித்தாரோ அதை விட்டு விடுவோம்..அணுக்கருவின் இந்த சிறையில் இருந்து அல்பா துகள் எப்படி தப்பிக்கிறது என்று பார்ப்போம் அடுத்து அத்தியாயத்தில்..

முத்ரா





Sunday, April 24, 2011

கலைடாஸ்கோப்-15

லைடாஸ்கோப்-15 உங்களை வரவேற்கிறது

பேச்சும் எழுத்தும்
=================

நன்றாக எழுதுகிறீர்கள் என்று சில பேர் சொல்கிறார்கள். நன்றி.. ஏதோ ஓரளவு எழுத வருமே தவிர பேசச் சொன்னால் சரளமாக நாலு வார்த்தைக்கு மேல் பேச வராது.பேசுவதும் எழுதுவதும் மூளையின் வேறு வேறு 'டிபார்ட்மென்ட்' போலத் தெரிகிறது. மிகப் பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் மேடையில் பேசுவதற்குத் தயக்கம் காட்டியிருக்கிறார்கள் and vice versa
அது எப்படி? எதை பேச நினைக்கிறோமோ அதை எழுதி விடலாமே, எதை எழுத நினைக்கிறோமோ அதை அப்படியே பேசி விடலாமே என்று நீங்கள் கேட்கலாம்..but it is not that simple !
பேச வராததால் வாழ்க்கையில் நிறைய வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். 'சரியாப் பேசவே வரலை நீயெல்லாம் வாழ்க்கையில் எப்படி முன்னுக்கு வரப்போகிறாய்?' என்று முகத்துக்கு நேராகவே சில பேர் கேட்டிருக்கிறார்கள். 'இன்டர்வியூ' போகும் போது என்னை விட அம்மா தான் அதிகம் டென்ஷன் ஆவாள்..நான் ஐந்து மணிக்கு எழுந்தால் அம்மா நாலரை மணிக்கே எழுந்து கொள்வாள்..

சரக்கு நல்லதாக இருந்து என்ன செய்ய? சந்தையில் வாய் சாதுரியம் காட்டினால் தானே அது விற்பனை ஆகும்? :(

'குரல் இல்லாதவனுக்கு விரல்' என்று சங்கீதத்தில் சொல்வார்கள்.அதாவது பாடுவதற்கு நல்ல சாரீரம் வாய்க்காவிட்டால் வயலின், புல்லாங்குழல்,வீணை என்று வாத்தியம் இருக்கவே இருக்கிறது.'
குரல் இல்லாதவனுக்கு விரல்' என்பது இங்கேயும் பொருந்தும்..

நன்றாக எழுதுவது என்பது ஒரு balancing effect அவ்வளவு தான்.கண் தெரியாதவர்களுக்கு காது கூர்மையாக இருக்கும் என்பார்களே..அது மாதிரி..பதிவர் சந்திப்பு ஏதாவது வைத்தால் 'இப்போது சமுத்ரா அவர்களைப் பேருரை ஆற்ற அழைக்கிறோம்' என்று யாராவது அழைத்து விடாதீர்கள் ஆமாம்..

ஒரு ஆங்கிலப் பழமொழி நினைவுக்கு வருகிறது " நீங்கள் நாலு பேர் மத்தியில் வாயைத் திறக்காமல் இருந்தால் அவர்கள் உங்களை ஒரு முட்டாள் என்று நினைக்கக் கூடும்..வாயைத் திறந்து விட்டால் நீங்கள் அதை நிரூபித்து விடுவீர்கள்"

Hard Engineers
==================

பெங்களூருவில் சாப்ட்வேர் கம்பெனிகளின் தொட்டில் என்றால் அது 'எலக்ட்ரானிக் சிட்டி' தான் என்று இருந்தது. (அல்லாரும் ஆபீஸ்ல தூங்குனா 'தொட்டில்'ன்னு தானே சொல்லணும்?) இப்போது வெவ்வேறு இடங்களில் 'டெக் பார்க்குகள்' வந்து விட்டன.EC புராதனமானது என்பதால் அதற்கு இருக்கும் அழகு இப்போது புதிதாக முளைத்த டெக் பார்க்குகளுக்கு இல்லை..மான்யதா IBM டெக் பார்க்கில் வெய்யில் வாட்டி எடுக்கிறது. அங்கே ஒரு கம்பெனியில்
'இன்டர்வியூ' இருந்தது. ('இன்டர்வியூ' பாஸ் ஆகாதது ஏன் என்று அறிந்து கொள்ள முந்தைய பகுதியைப் படிக்கவும்)

எல்லா கட்டிடங்களும் ஒரே மாதிரி இருந்து பயமுறுத்தியதால் யாரையாவது அந்த கம்பெனி எங்கே இருக்கிறது என்று கேட்கலாம் என்று முடிவெடுத்தேன். கொடுமை என்னவென்றால் அங்கே நடந்து வந்தவர்களில் முக்கால்வாசிப்பேர் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு காதுக்கு இயர் போன் மாட்டிக் கொண்டு குடையில் தங்களை மறைத்துக் கொண்டு 'எங்களுக்கும் வெளி உலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்ற லெவலுக்கு இருந்தார்கள். இப்படியே நிறைய பேர் வந்து கொண்டிருந்ததால் கடுப்பாகி ஒரு முடிவுடன் ஒரு 'குடை + கூலிங் கிளாஸ் + இயர்போன்' யுவதியை அணுகி வழி கேட்டேன்..அதற்கு அவர் வேண்டா வெறுப்பாக காதில் இருந்து இயர்போனை கர்ணன் குண்டலத்தைப் பறித்த மாதிரி அலட்டிக் கொண்டு உருவி Yes ?? என்றார்..நான் வழி கேட்டதும் தெரியாது என்று தலையை ஆட்டினார்..கடைசியில் அதே கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு 'எலக்ட்ரீஷியன்' ஆபத்பாந்தவனாய் எனக்கு வழிகாட்டி ரிஷப்ஷன் வரை அழைத்துச் சென்று விட்டு உதவினார்.

வருடத்திருக்கு பத்து லட்சம் பதினைந்து லட்சம் சம்பாதிப்பதாலோ என்னவோ தாங்கள் எல்லாருக்கும் ஒரு படி மேல் ( or at least different from others !) என்று அவர்கள் நினைக்கிறார்கள் போல..
software engineers எல்லாம் Hard engineers ஆக மாறிக் கொண்டிருக்கிறார்கள். நான் IT க்கு வந்ததை வாழ்வின் தவறுகளில் ஒன்றாக நினைக்கிறேன். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் no IT ..மழை ஓய்ந்த சாயங்கால நேரம் ஒன்றில் , சிற்றூர் ஒன்றில், பள்ளி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது பிள்ளைகளுக்கு மிக்சர் வாங்கிப் போகும் வாத்தியாராகப் பிறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்


கபீர் கே தோஹே
=================

அக்கா ஹிந்தி படித்துக் கொண்டிருந்த போது
கபீர் கே தோஹே விழுந்து விழுந்து மனப்பாடம் செய்வாள். நீயும் ஹிந்தி படி பிற்காலத்தில் உபயோகம் ஆகும் என்று சொல்வாள்..ஹிந்தி கற்றுக் கொள்ள மிகவும் எளிது என்றாலும் ஏனோ கற்றுக் கொள்ளவில்லை. வேடிக்கை என்ன என்றால் ஹிந்தி ஆறு பரீட்சை பாஸ் செய்த அவள் எங்களுக்கு மூன்றாம் வீட்டிலேயே கல்யாணம் ஆகி செட்டில் ஆகி விட்டாள்..நான் தான் புனே எல்லாம் சென்று யாராவது மணி என்ன என்று கேட்டால் அசடு வழிந்து அவருக்கு வாட்சைக் காட்ட வேண்டியிருந்தது.

ஏன் சொல்கிறேன் என்றால் கவிர்கள் ,ஞானிகள் ,இலக்கியவாதிகள் இவர்கள் எல்லாம் உயிரைக் கொடுத்து தங்களை அர்ப்பணித்து எழுதியதை, அவர்களின் பரவச அனுபவத்தில் விளைந்த கவிதைகளை, பாடல்களை, அவர்களின் ஜீவானுபவத்தை, நாம் இன்று ரெண்டு மார்க் , ஐந்து மார்க் கேள்விகளாக தரம் தாழ்த்தி விட்டோம் என்பது ஒரு வருந்தத்தக்க விஷயம்.

தேரா மன்னா என்று விளித்து 'வாயிற் கடைமணி நாடு நா நடுங்க ' என்று எழுதிய போது இளங்கோவடிகளுக்கு உண்மையிலேயே நடுநா துடித்திருக்கும்.ஆனால் அதுவே மனப்பாடச் செய்யுளாக வரும்போது இன்று எத்தனை மாணவர்களுக்கு அந்த ஒரிஜினல் பரவசத்தின் ஒரு கீற்றாவது வந்து போகும் என்று தெரியவில்லை (நடுநா எல்லாம் நடுங்காவிட்டாலும் பரவாயில்லை)

சரி இப்போது கபீரின் ஒரு தோஹெ பார்க்கலாம்

கால் கரே ஸோ ஆஜ் கர், ஆஜ் கரே ஸோ அப்
பல் மே பிரளய் ஹோயேகி பஹூரி கரோகே கப்

தமிழில்:

நாளை செய்யவிருப்பதை இன்று செய்; இன்று செய்வதை இப்போ
பேரழிவு எப்போது
ம் வரலாம்..நீ நற்செயல் செய்வது எப்போ ?

நம் ஆட்கள் தான் தப்பர்த்தம் செய்து கொள்வதில் கில்லாடிகள் ஆயிற்றே ? ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது: ஒரு ஆபீசில் மானேஜர் தன் துணை மானேஜரைப் பார்த்துக் கேட்கிறார்: "நாளை செய்ய நினைப்பதை இன்றே செய்யுங்கள்" என்று ஆபீசில் எழுதி வைக்கச் சொன்னேனே? ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா? என்று

துணை மானேஜர் சொன்னார் : "ஆம் நல்ல பலன்..தலைமை குமாஸ்தா டைப்பிஸ்டை இழுத்துக் கொண்டு ஓடி விட்டார்..காசியர் பத்தாயிரம் பணத்துடன் தலைமறைவாகி விட்டார் ..ஐந்து பேர் வேலையை ராஜினாமா செய்து விட்டார்கள்!"

ஒரு கவிதை
===========

(கல்லூரி மாணவியின் ஆட்டோக்ராப் புத்தகத்தில் இருந்து)

இமைகள் பிரிந்தால்
காட்சி உருவாகிறது
உதடுகள் பிரிந்தால்
வார்த்தை உருவாகிறது
கரைகள் பிரிந்தால்
நதி உருவாகிறது
பாதைகள் பிரிந்தால்
பயணம் உருவாகிறது
நம்
இருவரின்
பிரிவில் மட்டும் ஏன் ஒரு
நரகம் உருவாகிறது?

மேலே சொன்னது சுடாத கவிதை..இப்போது ஒரு சுட்ட கவிதை
===================================================

உன் கவிதையை நீ எழுது

எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி

எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி

நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது

உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது

சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது

நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது

எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது

எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்

தத்தளிப்பைப் பற்றி எழுது

எழுது உன் கவிதையை நீ எழுது

அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்

ஒன்று செய்

உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று

என்னைக் கேட்காமலேனும் இரு.


By பசுவையா (or ) பசவய்யா..

(இதைப் படித்ததும் இந்தக் கவிதை எனக்கு ஏன் தோன்ற வில்லை என்று கேட்கத் தோன்றுகிறது. பசு(ச)வையா..Law of reverse effects ! )

ஓஷோ ஜோக் இல்லாத கலைடாஸ்கோப்பா? இப்போது ஒரு ஓஷோ ஜோக்

ஓஷோ ஜோக்
=============

கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவ மாணவியர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் பிரின்சிபால் பேசினார்

"இந்த ஒரு விஷயத்தை மாத்திரம் எல்லாரும் நன்றாக நினையில் வையுங்கள்..மாணவியர்களின் ஹாஸ்டலில் பையன்கள் யாரும் நுழையக் கூடாது..மாணவர்கள் ஹாஸ்டலில் பெண்களும் நுழையக் கூடாது.இந்த விதியை யாராவது மீறியது தெரிந்தால் அவர்களுக்கு முன்னூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் ..இரண்டாவது முறை விதியை மீறினால் ஐநூறு ரூபாய் அபராதம்..அதே ஆள் மூன்றாவது முறையும் பிடிக்கப்பட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்...புரிந்ததா ?" என்றார் கடுமையாக

அப்போது ஹாலின் பின் பக்கத்தில் இருந்து ஒரு குரல்
கேட்டது "சார், சீசன் பாஸ் ஏதாச்சும் இருக்குதுங்களா?"


முத்ரா


Tuesday, April 19, 2011

அணு அண்டம் அறிவியல்-22

அணு அண்டம் அறிவியல்-22 உங்களை வரவேற்கிறது..

இயற்பியலில் நிறைய மாறிலிகள் உள்ளன (constants ). உதாரணமாக புவி ஈர்ப்பு மாறிலி (G ) இதன் மதிப்பு



இது ஏன் இந்த குறிப்பிட்ட மதிப்பைக் கொண்டிருக்கிறது? -11 என்று இல்லாமல் -12 என்று இருந்திருந்தால் என்ன ஆயிருக்கும்? தெரியாது! நம் நிலவு பூமியை விட்டு ஓடிப்போயிருக்கலாம்.கடல்கள் குழிகளில் தங்காமல் சிதறிப் போயிருக்கலாம். நாமெல்லாம் வராமல் இருந்திருக்கலாம். இயற்பியல் மாறிலிகள் ஏன் அந்த ஒரு குறிப்பிட்ட மதிப்பை மட்டும் பெற்றிருக்கின்றன (well , it has to be something !) என்றால் ANTHROPIC PRINCIPLE என்ற தத்துவத்தை சொல்கிறார்கள். இந்த பிரபஞ்சம் ஏன் இது மாதிரி இருக்கிறது என்று கேட்டால் அதற்கு ஒரு மொக்கையான பதில் தருகிறார்கள் :அதாவது பிரபஞ்சம் இந்த மாதிரி இருக்கிறது..இல்லையென்றால் இந்தக் கேள்வி கேட்பதற்கு நீ இருக்கமாட்டாய்..We see the Universe as it is, because we are..

உங்கள் உயிர் நண்பரை நீங்கள் ஏனோ வருடக்கணக்கில் சந்திக்கவில்லை..திடீரென்று ஒரு நாள் அவர் நினைவு வந்து SURPRISE ஆக இருக்கட்டும் என்று அவர் வீட்டுக்கு செல்கிறீர்கள். ஆனால் அவரோ ஒரு பெரிய விபத்தில் சிக்கி கைகால் முறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு படுத்திருக்கிறார்...அவர் மனைவியைப் பார்த்து "ஐயோ, ஏன் இப்படி, இப்படியா இவனை நான் பார்க்க வேண்டும்?" என்கிறீர்கள்..அதற்கு அவர் 'நீங்கள் பார்ப்பதால் தான் அவர் இப்படி அடிபட்டு படுத்திருக்கிறார்' என்று சொன்னால் எப்படி இருக்கும்? இது தான் ANTHROPIC PRINCIPLE(மனிதத் தத்துவம்)

இன்றைக்கு இருக்கும் நூற்றுக்கணக்கான இயற்பியல் மாறிலிகளின் unique மதிப்புகள் பூமியில் நாமெல்லாம் வாழ்வதற்கு, வளர்வதற்கு ,சண்டை போட்டுக் கொள்வதற்கு,ஹனிமூன் சென்று உலகம் மறந்து 'புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது' என்று பாடுவதற்கு இவற்றுக்கெல்லாம் நமக்கு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

உதாரணமாக குவாண்டம் உலகில் முக்கியமாக 'பிளான்க் மாறிலி' (h ) இதன் மதிப்பு :



இது மிக மிகச் சிறிய ஒரு நம்பர். ஆறுக்குப் பிறகு முப்பத்து நான்கு பூஜ்ஜியங்களைப் போட்டு கிடைக்கும் நம்பரின் தலைகீழ் விகிதம் எடுத்தால் கிடைக்கும் ரொம்பச் சிறிய எண். இது இவ்வளவு சிறியதாக இருப்பதால் தான் நம்மால் சாதாரண வாழ்க்கையில் குவாண்டம் விளைவுகளை உணர முடிவதில்லை.சாதாரண வாழ்க்கையில் நாம் 'இன்னும் கொஞ்சம்' என்ற பதத்தை அதிகம் உபயோகிக்கிறோம். காதலி நேரம் ஆகிறது வீட்டுக்குப் போகலாம் என்றால் இன்னும் 'கொஞ்ச' நேரம் இரு டார்லிங் என்கிறோம். கார் டிரைவரைப் பார்த்து இன்னும் கொஞ்சம் வேகமாப் போங்க என்கிறோம். ஆனால் குவாண்டம் உலகில் இயற்கை இப்படி குத்து மதிப்பாக கணக்கு போடுவது இல்லை. ஆற்றல், ஒளி , காலம் இவைகளை ஒரு குறிப்பிட்ட அளவுகளில் (quanta ) தான் அதிகரிக்க முடியும் என்பது அதன் விதி.

நாம் சொந்தமாக ஒரு மளிகைக் கடை வைத்திருந்தால் ரசத்துக்குப் பருப்பு வேண்டும் என்றால் மூட்டையில் இருந்து அளக்காமல் அப்படியே அள்ளி எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு வரலாம்..ஆனால் கஸ்டமருக்கு விற்கும் போது குறைந்த பட்சம் அரைக்கிலோ என்று கவரில் போட்டு விற்பது போலத்தான் இது. இயற்கை என்ற கறாரான வியாபாரியின் கஸ்டமர்கள் தான் நாமெல்லாம்! கிரேக்க அறிஞர் ஒருவர் 'வெளி (space ) தொடர்ச்சியாக இருந்தால் ஒருத்தரை கன்னத்தில் அறையவே முடியாது ' என்றாராம்..அது எப்படி? சினிமாவில் மகள் ஓவராகப் பேசினால் அவளது அம்மா பளார் என்று அவளை அறைய முடிகிறதே? இதுவும் 'குவாண்டா' என்ற தத்துவத்தின் மூலம் தான் சாத்தியம் ஆகிறது...எப்படி என்று யோசிக்கவும்..மூளைக்கு கொஞ்சமாவது வேலை கொடுங்கள் ப்ளீஸ்..

புராதன இயற்பியலின் படி ஒரு பொருள் வெப்பப்படுத்தப்பட்டால் அது எல்லா அதிர்வெண்களிலும் ஆற்றலை சகட்டு மேனிக்கு வெளியிட வேண்டும். இதனால் நாம் ஒரு ப்ரூ காபி போட்டுக் கொண்டு கப்பில் எடுத்துக் கொண்டு வந்தால் கூட UV கதிர்வீச்சு காரணமாக நமக்கு தோல் கான்சர் வந்து விடும்.ஆனால் அப்படியெல்லாம் வருவதில்லை. இயற்கை நாம் சந்தோஷமாக மனைவியுடன் காபி குடிப்பதை அனுமதிக்கிறது. இந்தப் புதிரை மாக்ஸ் பிளான்க் எப்படி விடுவித்தார் என்று முதலிலேயே பார்த்திருக்கிறோம்.(Still, துவரம் பருப்பை அரைக்கிலோ பாக்கெட்டில் அடைக்கலாம்.ஒரு கிலோ பாக்கெட்டில் அடைத்து விற்கலாம்.அதிக பட்சம் இரண்டு கிலோ பாக்கெட்..ஆனால் ஐந்து கிலோ பொட்டலத்தை கட்டிக் கடையில் வைத்தால் கஸ்டமரால் அதைத் தூக்கிப் போக முடியாது என்று அதை வாங்காமலேயே விட்டு விடலாம் அல்லவா.அதே மாதிரி அதிக அதிர்வெண்களில் இயற்கை மிகப்பெரிய hv
ஆற்றல் ஆற்றல் பொட்டலங்களைக் கட்ட வேண்டி இருக்கிறது. இந்த கணிசமான ஆற்றலை எலக்ட்ரான்களின் oscillations உருவாக்க முடிவதில்லை)

இயற்கையின் நிறைய விதிகள் பின்னணியில் பின்னிப்பிணைந்து நம்மை சொகுசாக வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன

பிளான்க் மாறிலி அவ்வளவு சின்னதாக இல்லாமல் கொஞ்சம் பெரிதாக (உதாரணம் 0 .5 JS ) இருந்திருந்தால் உலகம் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பது வேடிக்கையான விஷயம். h அதிகம் என்பதால் மிகக் குறைந்த அதிர்வெண்களில் கூட மிகப் பெரிய ஆற்றல் பொட்டலங்கள் (hv) கட்டப்பட்டு ஒரு டார்ச் லைட்டின் வெளிச்சம் நம் கைகளைப் புண்ணாகி விடக்கூடும். கொஞ்ச நேரம் கொஞ்ச தூரம் என்றெல்லாம் குருட்டாம் போக்காக நம்மால் சொல்ல முடியாது.சதுரங்கத்தில் காய்கள் நகர்வது போல நிறைய கட்டுப்பாடுகளுடன் தான் நாம் இயங்க வேண்டி வரும்.

h அதிகம் என்பதால் அப்போது உலகில் UNCERTAINTY கணிசமாக இருக்கும். துப்பாக்கி சுடுதலில் நாம் பதக்கம் எல்லாம் வாங்க முடியாது. 'ஸ்க்ராடிஞ்சர் கண்ணாடி' என்ற ஒன்றை நாமெல்லாம் சதா அணியவேண்டி வரலாம்..(ஒரு பொருள் எங்கே இருக்கிறது என்பதை அது probability amplitude எடுத்து நமக்கு ஓரளவு காட்டும்)

அந்தக் காலத்தில் எல்லாம் ராஜ குமாரிகளை மணப்பதற்கு இளைஞர்கள் சுயம்வரங்களில் சர்க்கஸ் வித்தைகள் செய்ய வேண்டியிருந்தது. பாஞ்சாலியின் சுயம்வரத்தில் அர்ஜுனனுக்கு ஒரு கஷ்டமான TASK இருந்தது. மூன்று துளைகளைக் கொண்ட ஒரு வட்ட வடிவத் தட்டு ஒரு பொறியின் உதவியுடன் மேலே சுழன்று கொண்டு இருந்தது. அதன் பின்னே ஒரு மீன் உருவம் வைக்கப்பட்டிருந்தது. இந்த அமைப்பு கீழே உள்ள பாத்திரத்தில் இருக்கும் நீரில் பிரதிபலிக்கும். அந்த பிம்பத்தைப் பார்த்துக் கொண்டே அர்ஜுனன் மேலே பார்க்காமல் வில்லில் அம்பு தொடுத்து மேலே இருக்கும் மீனின் கண்ணை அம்பு எய்து குத்த வேண்டும்! (நான் இந்த விளையாட்டுக்கு வரலை!)

அர்ஜுனன் அந்த தட்டின் சுழலும் வேகம், அதன் சுற்றளவு, பாத்திரத்துக்கும் அதற்கும் உள்ள தூரம்,நானின் elasticity இவற்றையெல்லாம் கணக்கிட்டு அம்பு விட்டானா இல்லை அவன் நண்பன் மாயக் கண்ணன் ஏதாவது தில்லாலங்கடி செய்து அவனுக்கு உதவினானா என்பது தெரியாது. ஆனால் என்ன தான் கணக்கிட்டாலும் h அதிகமாக இருந்தால் நம்மால் இப்படியெல்லாம் வீர சாகசம் செய்து காலரை தூக்கிவிட்டுக் கொள்ள முடியாது. முக்கியமாகக் கிரிக்கெட் ஆட முடியாது! 'சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன் யாண்டுளனோ ' என்று தலைவியை வினவ முடியாது!

மொத்தத்தில் உலகம் ஒரு மாயாபஜார் மாதிரி தோற்றமளிக்கும். (மகாபாரதத்தில் வரும் இன்னொரு சுவாரஸ்யமான கதை இது. அர்ஜுனன் கல்யாணத்தைப் பார்த்தோம்.இப்போது அவன் மகன் அபிமன்யு கல்யாணத்தையும் பார்க்கலாம்.அவனுக்கும் பலராமர் மகள் வத்சலாவிற்கும் காதல் மலர்கிறது. ஆனால் துரியோதனன் சூழ்ச்சி செய்து பலராமனை மயக்கி தன் மகன் லகுனகுமாரனுக்கே வத்சலாவை மணமுடித்து வைக்க வேண்டும் என்று வாக்கு வாங்கி விடுகிறான். பீமன் மகன் கடோத்கஜன் அபிமன்யுவின் காதலுக்கு உதவி செய்கிறான். துரியோதனன் குறித்த கல்யாணத் தேதியில் ஒரு மாயா நகரை உருவாக்கி தானே வத்சலாவாக உருமாறி செல்கிறான்.. அந்த மாயா நகரில் ஏகப்பட்ட ரகளைகளுடன், காமெடிகளுடன் மாயா வத்சலா-நிஜ லவன குமாரன் திருமணம் நடக்கிறது. உங்கள் வாழ்வை அவ்வப்போது இனிமையாக்க ஒரு மத்தியான நேரத்தில் இது போன்ற பழைய படங்களை குழந்தைகளுடன் உட்கார்ந்து பாருங்கள்.. )




வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3x10 8 m /s ...இது மிக பிரம்மாண்டமான ஒரு வேகம்.ஒரு வினாடியில் ஒளி நம் பூமியை ஏழு முறை சுற்றி வந்து விடும்.இது மட்டும் இவ்வளவு அதிகமாக இல்லாமல் ஒலியின் வேகத்துக்கு சமமாக இருந்திருந்தால் நம் வாழ்வில் ரிலேடிவிடியின் விளைவுகள் கணிசமாக இருக்கும். ஒரு மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து விட்டு வந்தால் கீழே பூமியில் இருப்பவர்களுக்கு ஒரு வாரம் ஓடிப்போயிருக்கும் !

நாம் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்க்கும் போது அது நம் இறந்த காலத்தின் பிம்பத்தையே காட்டுகிறது. நாம் இந்த கணத்தில் எப்படி இருக்கிறோம் என்று பார்க்கவே முடியாது.


ஒளியின் வேகம் மிக அபாரமாக இருப்பதால் நமக்கு உலகில் எல்லா விஷயங்களும் சமகாலத்தவையாகத் தெரிகின்றன. ஆனால் நாம் ஒருவரைப் பார்க்கும் போது நாமும் அவரும் காலத்தால் பிரிக்கப்பட்டிருக்கிறோம். நம் இருவருக்குமான தொடர்பு (communication) என்பது நாம் இருவரும் ஒளிக்கூம்பின் உள்ளே இருந்தால் மட்டும் சாத்தியம்.(இது என்ன என்பதைப் பிறகு பார்க்கலாம்) ஒளியைப் பற்றி ஏராளமான சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன அ-அ-அ வில்! அதே போல வானத்தில் நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் இந்தக் கணம் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. நூற்றுக் கணக்கான வருடங்களுக்கு முன்னர் அவை எப்படி இருந்தன என்ற SNAPSHOT ஐ தான் நாம் பார்க்கிறோம்.

ஜார்ஜ் காமவ் (George Gamow March 4 1904 – August 19, 1968 ) குவாண்டம் இயற்பியலில் முக்கியமான ஒரு நபர். 'Quantum tunneling ' போன்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். அவர் இயற்பியலை எளிமையாக விளக்க நிறைய சயின்ஸ் பிக்சன் நாவல்களை எழுதியிருக்கிறார். 'இயற்பியலை உலுக்கிய முப்பது வருடங்கள் (Thirty years that shook Physics ) என்ற நாவல் மிகப் பிரபலமானது. Mr. Tompkins in Wonderland
(அற்புத உலகில் மிஸ்டர். டாம்ப்கின்ஸ் ) என்ற ஒரு அருமையான நாவல்.இதில் அவர் ஒளியின் வேகம் மிகவும் குறைவாக இருந்தால் உலகத்தில் என்ன என்னவெல்லாம் நடக்கும் என்று அழகாக வர்ணித்திருக்கிறார். மற்ற வி ஞ்ஞானிகளைப் போல பீட்டா காமா என்றெல்லாம் ஓவராக சீன் காட்டாமல் இயற்பியல் சாதாரண மனிதனையும் சென்று அடைய வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர் அவர். என்னைப் போன்ற மரமண்டைகளுக்குப் புரியும் வகையில் இயற்பியலை அடிப்படையாகக் கொண்டு நிறைய ஃபிக்சன் நாவல்கள் எழுதியிருக்கிறார் அவர்.

ஒளி வேகம் மிகவும் குறைவாக இருந்தால் ஒன்று மட்டும் நிச்சயம்..கிரிக்கெட் மாட்சுகளை நாம் நேரலையாகப் பார்க்க முடியாது..உலகக் கோப்பையில் தோனி சிக்சர் அடித்து நிதானமாக ஒரு நாள் கழித்து தான் சென்னையில் நாம் எல்லாரும் ஆரவாரம் செய்வோம்..பட்டாசு வெடிப்போம்.சட்டையைக் கழற்றி விட்டு ரோடுகளில் உருளுவோம்.. Too late no ?

இயற்பியலின் இந்த மாறிலிகள் தற்செயலாக இந்த மதிப்புகளைப் பெற்று இருக்கின்றனவா இல்லை மேலே யாரேனும் ஆசாமி ஒரு பெரிய கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு இந்த மதிப்புகளைக்
கணக்கிட்டாரா என்று தெரியவில்லை. ANTHROPIC PRINCIPLE மனித இனத்திருக்கு ரொம்பவே முக்கியத்துவம் தருகிறது. நாம் வருவதற்கு தான் இயற்கை இத்தனை மெனக்கெட்டதாம். ஆனால் நாமோ இதையெல்லாம் மறந்து விட்டு ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என்றெல்லாம் ரொம்பவே பிஸியாக இருக்கிறோம்..


ஜார்ஜ் காமவ் பற்றி சொல்லும் போது குவாண்டம் Tunneling என்று ஒரு விளைவைக் குறிப்பிட்டோம்..அப்படி என்றால் என்ன? பேய்ப் படங்களில் ஆவிகள் சர்வ சாதாரணமாக பூட்டிய கதவை ஊடுருவிக் கொண்டு உள்ளே போகுமே கிட்டத்தட்ட அது மாதிரி தான் ...அதைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு கொஞ்சம் அணுக்கருவுக்குள் எட்டிப் பார்ப்போம் வாருங்கள்..

முத்ரா


Monday, April 18, 2011

கலைடாஸ்கோப்-14

லைடாஸ்கோப்-14 உங்களை வரவேற்கிறது

What a plenty of things
=================

இன்றைய ஷாப்பிங் மால்களுக்குள் நுழைந்தால் "What a plenty of things I don't need " என்று யாரோ சொன்னது எவ்வளவு உண்மை என்பது தெரிய வரும். அங்கே இருப்பவைகளில் என்பது சதவிகிதத்திற்கும் மேல் நமக்குத் தேவையில்லாதவை. We can do without them ! ஷாப்பிங் முடிந்து பில் போடுவதற்காக கியூவில் நின்றிருக்கும் போது மற்றவர்கள் பர்சேஸ் செய்த பொருட்களைக் கவனிப்பதே ஒரு ஆனந்தம் தான் ..விதம் விதமான , எத்தனை வேறுபட்ட பொருட்கள்! இது வரை நாம் பார்த்திராத, பெயர் தெரியாத டப்பாக்கள்.ஸ்நாக்ஸ் கவர்கள்,பொம்மைகள் . கியூவில் நிற்கும் இரண்டு பேர்வாங்கிய பொருட்கள் எப்போதுமே ஒரே மாதிரி இருக்காது..பில் கவுண்டரில்அமர்ந்திருப்பவர்கள் இந்த மனிதர்கள் எத்தனை CRAZY ஆக இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்ப்பார்களோ இல்லையோ தெரியவில்லை ..(எதை வைத்தாலும் வாங்கி விடுகிறார்கள்) அண்ணாச்சிக் கடைகளில் நின்று அரைக்கிலோ வெல்லம், கால் கிலோ பருப்பு என்று 'கேட்டு' வாங்கி விட்டு கடைசியில் மிஞ்சும் சில்லறையில் குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்த காலம் இப்போது பெரும்பாலும் இல்லை.'அனுராகமுலேனி' என்ற பாடலில் த்யாகராஜர் சொல்கிறார் "வக வககா புஜியிஞ்சி' ..வகைவகையாக சாப்பிட்டும் மனிதன் திருப்தி அடையவில்லையே என்று..நவநாகரீக ஹோட்டல் ஒன்றின் 'மெனு' க்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஒரு கிரந்தம் போல தூக்கிவந்து வைக்கிறார்கள்.முழுவதும் படித்து முடிக்க ஒரு அரைநாள் ஆகும் போலிருக்கிறது.அதில் சத்தியமாக எனக்கெல்லாம் 70 % க்கும்மேல் அது கருப்பா சிவப்பா என்று தெரியாது.'மலாய் கோஃப்தா ' என்றெல்லாம் வாயில் நுழையாத பெயர்கள்!..வாழ்வின் அத்தனை ருசிகளையும் மனிதன் சுவைத்துப் பார்க்க ஆசைப்படுவது சரி தான்..ஆனால் where is the limit ? ஏசுநாதர் பிராத்தனை செய்யும் போது கடவுளிடம் 'இறைவா எங்களுக்கு தினப்படி ரொட்டியும் வெண்ணையும் கொடு' என்று தான் ப்ரார்த்திக்கிறாரே தவிர 'ஒரு தவா நான், ஒரு கோபி மஞ்சூரியன், ஒரு சின்ச்வான் பிரைடு ரைஸ் என்று லிஸ்ட்டெல்லாம் போடவில்லை..Be simple !

சாரிகே நமஸ்கார மாடு
=====================

கலைடாஸ்கோப் -இற்கு டாபிக் கிடைக்கவில்லை என்றால் வெளியே கிளம்பிச்சென்று மனிதர்களை நோட்டம் விடுவது வழக்கம்.(எப்படியோ இந்த வாரம் ரெண்டு டாபிக் கிடைத்து விட்டது:)) சனிக்கிழமை அன்று 'Forum' சென்று ஒரு டூத் பேஸ்ட் (?) வாங்கிக் கொண்டு வெளியே வந்த கொஞ்ச தூரத்தில் ஒரு ஏழைத் தம்பதி (அழுக்கான,கிழிந்த உடைகள் என்றெல்லாம் உயர்வு நவிற்சி அணியில் எழுத விரும்பவில்லை) என்னை நெருங்கி காலில் விழாத குறையாக 'சாப்பிட்டு மூன்று நாள் ஆகிறது..கருணை காட்டுங்க' என்று கெஞ்சினார்கள்..பக்கத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தன.
அந்த குழந்தைகளின் முகத்தைப் பார்க்கும் போது ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி என்னை நெருடியது. அவசரமாக முப்பது ரூபாய் கொடுத்து விட்டு 'மொதல்ல குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்க' என்று கூறி விட்டு நகர்ந்தேன்..அந்தப்பெண் தன் குழந்தைகளிடம் 'சாரிகே நமஸ்கார மாடு' என்றார்..அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்..மாலின் உள்ளே குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து கரடி பொம்மை வாங்கித்தந்தவர்களையும் ஒரு முறை நினைத்துக் கொண்டேன்...Can 't help !

Reality Squares
============


Magic square கள் பற்றித்தெரியும் என்று நினைக்கிறேன்..எப்படிக் கூட்டினாலும் ஒரே எண் விடையாக வருவது. அது எப்படி வருகிறது என்ற கணிதத் தந்திரத்தை எல்லாம் இப்போது டிஸ்கஸ் செய்து போரடிக்க விரும்பவில்லை..(தெரியாதுன்னு சொல்லு!) எனக்கு என்னவோ அவை மாய சதுரங்கள் அல்ல வாழ்வின் நிதர்சனத்தை நமக்கு எடுத்து உரைக்கும் Reality squares என்று தோன்றுகிறது .வாழ்க்கையில் பல சமயங்களில் நாம் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறோம். அவன் கார் வாங்கி விட்டானே, அவன் பங்களா கட்டிவிட்டானே, என்னோடு படித்தவன் வெளிநாடு போய்விட்டானே என்றெல்லாம்..ஆனால் இவையெல்லாம் வாழ்க்கைக்கான நமது PARTIAL VIEWS ! வாழ்வை முழுமையாகப் பார்க்கும் போது அது எல்லாருக்கும் கடைசியில் ஒரேவிதமான கூட்டுத்தொகையைத்தான் தருகிறது.யாராக இருந்தாலும் கடைசியில் விடை ஒன்று தான்..சதுரத்தின் ஒரு பகுதியை மட்டுமே பார்த்துவிட்டு அவனுக்கு 10,15,30,50 என்று ஏறிக்கொண்டே போகிறது..எனக்கு இறங்குகிறது என்று கூறுவது போல தான் இது..முழு சதுரத்தையும் பொறுமையாகக் கடைசி வரை முழுமையாகப் பாருங்கள்..மாய சதுரங்கள் அமைப்பதில் கடவுளைப் போல ஒரு கணித மேதை யாரும் இல்லை என்று தெரியவரும்.Yes ...கடைசியில் எல்லாப் பக்கங்களில் இருந்தும் எல்லாருக்கும் ஒரே கூட்டுத்தொகை தான் இங்கே

பசவண்ணா
==========



கர்நாடகாவில் பசவண்ணரை எல்லாரும் தெய்வமாக மதிக்கிறார்கள். பதினோராம் நூற்றாண்டில் அங்கே வாழ்ந்த மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிஅவர். பசவண்ணரின் வசனங்கள் கன்னடத்தில் மிகவும் பிரபலம். நீதிநெறிகளையும் உயர்ந்த தத்துவங்களையும் எளிமையான வசன கவிதையில் சொல்வது.மூட நம்பிக்கைகளை அப்போதே சாடி எதிர்த்தவர் அவர்:

அவரது வசனங்களில் ஒன்றின் தமிழாக்கம்

நெய்யை விட்டு நெருப்பை வளர்த்து
நீயே தெய்வம் என்று வணங்குவீர்
செய்யும் சடங்கில் சிதறிய தீப்பொறி
சடுதியில் வளர்ந்தால் சடங்கையா செய்வீர்?
உய்யும் படிக்கே உயிருக்கு அஞ்சி

உதகம் எடுத்து ஊற்றி அணைப்பீர்
குய்யோ முறையோ என்று கதறி
கூடி இருப்போரை உதவிக்கழைப்பீர்

பாரதியார் படத்தை சட்டைப்பையில் வைத்திருக்கும் ஒரு இளைஞரை தமிழ்நாட்டில் பார்க்க முடியுமா? இங்கே நாம் பாரதியாரையும் திருவள்ளுவரையும் பேச்சுப் போட்டியில் பரிசு வாங்குவதற்கும், பஸ்ஸில் எழுதிவைப்பதற்கும் மட்டும் பயன்படுத்துகிறோம்!

samudra 's twits
================

நாதெள்ளா வருது..எழுநூறு வருஷ பாரம்பரியம் வருது..ஏராளமான நகைகள் வருது # எங்களுக்கு பணம் எங்கேயிருந்து வருது?

ஒரு ஓஷோ ஜோக்
================

ஒரு ஆள் பாருக்கு (BAR ) போய் ஒரு மார்டினி ஆர்டர் செய்தான்..கோப்பையில் ஊற்றி அதை குடிக்கப் போகையில் அவசரமாக அவனுக்கு ஒன் பாத்ரூம் வந்ததால் எழுந்து போனான்..
தான் திரும்பி வருவதற்குள் மார்டினியை யாரும் குடித்துவிடக் கூடாது என்று நினைத்து ஒரு துண்டுச்சீட்டில் "நான் இதில் எச்சில் துப்பி இருக்கிறேன்" என்று எழுதி வைத்து விட்டுப் போனான்

திரும்ப வந்ததும் அங்கே இன்னொரு துண்டுச்சீட்டு வைக்கப்பட்டு அதில் எழுதியிருந்தது "நானும் தான்"


முத்ரா

Friday, April 15, 2011

குறையொன்றும் இல்லை!

ஏழைகளுக்கு
அது செய்தேன்
இது செய்தேன்
என்கிறார்கள்
ஏழைகளே இல்லாமல் செய்தேன்
என்று யாருமே சொல்வதில்லை!

நீங்கள்
பரமபத நாற்காலியில் போயமர்ந்ததும்
உங்களை ஏணியில் ஏற்றி விட்ட
இந்த-
பகடைக் காய்களை எறிந்து விடுவீர்கள்!

எங்கள் வாழ்வை
வண்ணமயமாய் ஆக்குவோம் என்றீர்கள்
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
வழங்குவீர்கள் என்று தெரிந்திருக்கவில்லை..

அலைவரிசைத் தொடர்களை நாங்கள்
அழுதுகொண்டு பார்த்திருக்க
அலைக்கற்றை ஊழல் ஒன்றை
அரங்கேற்றி விட்டீர்கள்

நாங்கள் விளைத்த அரிசியை
எங்களுக்கே
ஒரு ரூபாய்க்கு விற்கிறீர்கள்!
நோய்களை நீங்களே
நடவு செய்து விட்டு
'இலவச ஆம்புலன்ஸ்' என்று
இருமுகம் காட்டுவீர்கள்!

குளிரில் நடுங்கிய மயிலுக்கு
தன் மேலாடை தந்தவன் தமிழன்
நீங்களோ
கடைத்தேங்காயை எடுத்து
வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறீர்கள்
ஆம்-
இலவசங்களை
கொடுத்து விட்டு -எங்கள்
இறையாண்மையைப்
பிடுங்கிக் கொண்டீர்கள்

நீங்கள் தின்று
எறிந்த மிச்சத்தை
நாவைக் காட்டிக் கொண்டு
நக்குவதற்கு
நாங்கள் நாய்கள் இல்லை!

வாக்குக்காக
கை கூப்பும் போது
வாயு மைந்தன் போல்
வால் சுருட்டி நிற்கிறீர்கள்
ராஜ்ஜியம் கிடைத்ததும் -ஏன்
ராவணனாய் மாறுகிறீர்கள்?

வீரனாய் விவேகியாய்
வெள்ளித் திரையில் தோன்றி விட்டு
வீதிக்கு வந்ததும்
வேட்பாளரை அடிப்பீர்கள்!

கையில் இட்ட
மை கூட
காலத்தால் அழிந்து விடும்-எங்கள்
நெற்றியில் போட்ட நாமம் தான்
நித்தியத்துவம் பெற்று விட்டது

உண்மையிலேயே எங்களுக்காய்
ஓடாய் உழைத்திருந்தால்
இன்று ஏன்
ஓடி ஓடி பிரச்சாரம் செய்கிறீர்கள்?

சொன்னதை செய்வது
உங்கள் தர்மம்-ஆனால்
செய்ததை சொல்வது
சிறுபிள்ளைத்தனம்

பெரியார் விதைத்த கொள்கையை
அண்ணா வளர்த்த திராவிடத்தை -இன்று
காமெடி பீசுகளிடம்
கடன்கொடுத்து விட்டீர்கள்..

வேடிக்கை பார்ப்பதில்
வல்லவன் தமிழன்
குஷ்புவைப் பார்க்க வந்த கூட்டத்தை
'குலவிளக்குகளே' என்று கூசாமல் சொல்கிறீர்கள்

குறளுக்கு விளக்கம் எழுதுபவர்களே
"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் "
என்று தமிழ்க்குரவன் செப்பியது
'டாஸ்மாக்' கை அல்ல!

மீனவர்களுக்காய் நீங்கள் கடிதம்
எழுதிக்கொண்டிருக்க
அவர்கள் இறப்புச்செய்தியை
எமன்
'பேக்ஸ்'இல் அனுப்புகிறான்

ஆம்
உங்கள் வசையாடல்களை
வேடிக்கை பார்ப்பதை விட்டு-எங்களுக்கு
வழியொன்றும் இல்லை
கொடநாடுகள் இருக்கும் வரை
ஆள்பவர்களுக்கும்
குறையொன்றும் இல்லை!



சமுத்ரா




Wednesday, April 13, 2011

அணு அண்டம் அறிவியல்-21

அணு அண்டம் அறிவியல்-21 உங்களை வரவேற்கிறது

இயற்பியலில் 'அணிகள்' அவ்வளவாக உபயோகப்படுத்தப்பட்டதில்லை.. அணி என்றதும் 'மௌனம் என்றொரு சாவியைப் போட்டு மனதைப் பூட்டாதே' என்று சொன்னால் ஏகதேச உருவக அணி வருகிறது என்ற லெவலுக்கு தமிழின் மீது கொலைப்பற்று கொண்டு நீங்கள் நினைத்தால் தவறு..'அணி' என்றால் இங்கே கணிதத்தில் வரும் 'MATRIX '! இந்த அணிகளுக்கு நிறைய பயன்பாடுகள் உள்ளன.
உதாரணமாக ஒரு மின் சுற்றில் (electric circuit ) எந்தெந்த பகுதிகளின் (segment ) வழியே எத்தனை மின்சாரம் (current ) பாய்கிறது என்று இதை வைத்து சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும்..

அதாவது V = I R என்றால் இதை [V ] =[I ] [R ] என்று எழுதலாம்..

வெர்னெர் ஹைசன்பெர்க் தனது ஊரில் Hay fever என்று ஒரு விதமான காய்ச்சல் பரவி வந்ததால் அதிலிருந்து தப்ப கொட்டின்ஜென் நகருக்குச் சென்றிருந்தார் .அங்கு சென்றவர் சும்மா இருக்காமல் Matrix mechanics என்று அழைக்கப்படும் ஒரு புதிய கணிதம்-கம்-இயற்பியலை ஆராய்ந்து கொண்டிருந்தார்..System ஒன்றை அலசுவதற்கு சும்மா சகட்டு மேனிக்கு மாறிகளை (variables ) எடுத்துக் கொள்ளாமல் அதை விளக்குவதற்கு நம்மால் எதையெல்லாம் கவனிக்க முடிகிறதோ [observables ] அதை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும் என்பது அவரது அனுமானம்.எனவே அவர் எலக்ட்ரானின் நிலை (q ) மற்றும் உந்தம் (p ) ஆகியவற்றை (மட்டும்) எடுத்துக் கொண்டு கணக்கிட்டார்..சாதாரண கணிதத்தில் நாலை ஐந்தால் பெருக்கினாலும் ஐந்தை நாலால் பெருக்கினாலும் விடை ஒன்று தான் (commutivity
) ஆனால் மாட்ரிக் மெகாநிக்சில் அப்படி இல்லை..
அதாவது எதை முதலில் போடுகிறோம் என்பது முக்கியமானது.

[p][q] not equal to [q] [p]



இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை([p][q]-[q][p]) அவர் கணக்கிட்ட போது அவருக்கு ஆச்சரியமாக பிளான்க் மாறிலி கிடைத்தது! (h bar
) சரி பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்து விட்டதே என்று அவர் அதை அப்போதைக்கு அப்படியே விட்டு விட்டார்..பின் நாட்களில் இது இயற்பியல் உலகைப் புரட்டிப் போடும் ஒரு தத்துவமாக உருவாகும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.


ஹைசன்பெர்க் -இன் நிச்சயமில்லாத் தத்துவத்திற்கு (uncertainty principle ) இப்படி ஒரு மொக்கையான அறிமுகம் கொடுத்ததற்கு மன்னிக்கவும்..இப்போது உண்மையிலேயே நிச்சயமின்மை என்றால் என்ன என்று பார்க்கலாம்..

எலக்ட்ரானைப் பார்க்கிறோம் என்று சொல்வது குவாண்டம் இயற்பியலில் முற்றிலும் தவறு...எலக்ட்ரானின் விளைவுகளை detect செய்கிறோம் என்று சொல்வது தான் கொஞ்சம் சரி..இந்த சித்தாந்தத்தை 'macroscopic 'உலகத்திற்கு நீட்டித்தால் 'நான் உன்னைப் பார்க்கிறேன்' என்று சொல்வது கூடத் தவறு தான்..'உன் விளைவுகளை என் புலன்கள் அறிகின்றன' என்று தான் சொல்ல வேண்டும்..ஒரு வேண்டுகோள்..இப்படியெல்லாம் தப்பித்தவறி கூட உங்கள் காதலியிடம் சொல்லிவிடாதீர்கள்!

ஒரு பொருள்(object ) அல்லது நிகழ்வு(event ) என்பது அதன் 'விளைவுகளில் (effect ) இருந்து வேறுபட்டதா இல்லை இரண்டும் ஒன்று தானா என்பது பிலாசபியில் ஒரு hot topic ! ஆனால் வி
ஞ்ஞானிகள் நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாம் என்பதால் ஒரு நிகழ்வுக்கும் அதன் விளைவுக்கும் மிகக் குறைந்த இடைவெளி தான் உள்ளது.அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார்கள்.
உதாரணமாக நாம் பிரபஞ்சத்தைப் பார்க்கிறோம்..நிலா, மின்னும் நட்சத்திரங்கள், காலக்சிகள்..ஆனால் அது நிலவு" as it is " தானா அல்லது அது உண்மை நிலவு ஏற்படுத்தும் விளைவா (projection ) என்பது தக்குனூன்டு மனுசப் பதராக இருக்கும் நமக்குக் தெரியாது.



புலன்களின் வழியே வரும்போது உண்மை மறைக்கப்பட்டு விடுகிறது அல்லது குறைந்த பட்சம் வடிகட்டப்பட்டு விடுகிறது (senses distort reality ) என்பது ஆதி சங்கரரின் வாதம்."மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா" என்று அவர் சொல்லும் போது எல்லாம் மாயை, அங்கே எதுவுமே இல்லை என்ற பொருளில் சொல்லவில்லை.எது இருக்கிறதோ அதை நம் மனம் திரித்து விடுகிறது ,அது அப்படியே தெரிவதில்லை..நம்மை வந்து அடையும் போது அது முற்றிலும் வேறாக இருக்கிறது.எது இருக்கிறதோ அது மாற்றப்பட்டு தெரிகிறது என்பது தான் அதன் பொருள்.கயிறு தான் இருக்கிறது..அது நம்மை அடையும் போது நம் மனம் அதை பாம்பாகத் திரித்து விடுகிறது!

YES ..

பாம்பென்று எண்ணிப் பயந்திருந்த பொருளை எல்லாம்
தாம்பென்று அறிந்து நான் தகர்த்தெறிவ தெக்காலம்??

காண்பதெல்லாம் மறையும் என்றால் மறைந்ததெல்லாம் காணும் அன்றோ என்று பாரதி பாடுவதற்கும் இந்த அர்த்தம் தான்..
இதனால் தான் கடவுளுக்கு ஒரு வடிவம், குணம் இவற்றைக் கொடுப்பதை சில மதங்கள் கண்டிப்பாக எதிர்க்கின்றன. இந்து மதத்தில் கூடக் கடவுளுக்குப் பெயரே 'நிர்குணப் பிரம்மம்' தான்..yes it is a phenomenon without characteristics ...ஏனென்றால் கடவுளுக்கு ஒரு குணம் கொடுத்த மாத்திரத்தில் அது அவரது 'விளைவாக' மாறி விடுகிறது. உண்மை அதன் விளைவில் இருந்து வேறுபட்டது என்பதால் கடவுளை அவரது குணத்தால் விவரிக்க முடியாது. இதனால் தான் கடவுள் மிகவும் மறைந்து இருக்கிறார்..அவர் இருப்பதற்கான சுவடே தெரிவதில்லை..அப்படி அவர் வெளிப்பட்டால் அந்த வெளிப்படுத்துதலே அவரை பல மடங்கு குறைத்துக் காட்டி விடுகிறது.


இந்த விஷயம் அதாவது எலக்ட்ரான் அல்லது பிரபஞ்சம் என்றெல்லாம் நமக்குத் தோன்றுவது உண்மையிலேயே எலக்ட்ரான் அல்லது பிரபஞ்சமா இல்லை ஏதோ ஒன்று இருந்து அதன் விளைவுகளை , side effect களை நாம்
எலக்ட்ரான் அல்லது பிரபஞ்சம் என்று தப்பும் தவறுமாக உணர்கிறோமா என்ற விஷயம் இன்றும் நிறைய விஞ்ஞானிகளை நெருடுகிறது.இருந்தாலும் இன்னும் இயற்கையின் சூத்திரங்களை அறிந்து கொள்ளும் முயற்சி நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பகலில் ஒரு பொருளை நாம் பார்க்கிறோம் என்றால் அங்கே நிறைய விஷயங்கள் நடக்கின்றன..சூரியன் ஹைட்ரஜன் அணுக்களை அதீத அழுத்தத்தில் ஓட்ட வைத்து E =MC2 இன் படி ஹைட்ரஜனின் நிறை இழப்பை மின் காந்த ஆற்றலாக மாற்றி நம் கண்ணுக்குத் தெரியக்கூடிய அலைநீளங்களில் வெளித்தள்ளுகிறது.அந்த அலைகள் ஒளியின் வேகத்தில் பயணித்து கிட்டத்தட்ட எட்டு நிமிடங்களில் நாம் பார்க்கின்ற பொருளின் மேற்பரப்பின் மீது பட்டு விலக்கப்படுகின்றன . அப்படி விலக்கப்பட்ட அந்த அலைகள் நம் கண்களுக்குள் நுழைந்து (கண்களின் ரசாயனங்கள் அந்த குறிப்பிட்ட அலைநீளத்தை மட்டுமே உறிஞ்சுகின்றன ) விழித்திரையில் அந்தப் பொருளின் ஒரு தலைகீழ் பிம்பத்தை விழி லென்சின் துணையால் உருவாக்குகின்றன. அந்த தலைகீழ் பிம்பம் வேதியியல் துடிப்புகளாக நரம்புகளின் மூலம் மூளைக்கு அனுப்பப்படுகிறது .மூளை அதை நேராக்கி அலசி ஆராய்ந்து இது இன்னது, இன்ன தூரத்தில் உள்ளது,இன்ன நிறத்தில் உள்ளது ..இது ஆண், இது பெண் ,இது ஆட்டுக்குட்டி என்றெல்லாம் ஒருவழியாக அறிந்து கொள்கிறது..இந்த நிகழ்வுகளில் எங்காவது ஒரு இடத்தில் இம்மி பிசகினாலும் கூட நமக்கெல்லாம் சங்கரர் சொல்லும் மாயை என்றால் என்ன என்பது விளங்கும்! ஒரு பேச்சுக்காக நம் கண்களின் அமைப்பு இன்னும் நுட்பமான அலைநீளங்களை கிரகிக்கும் படி அமைந்திருந்தால் அவை X -ray கதிர்களையும் உள்வாங்கக் கூடும்..அப்போது நாம் பார்ப்பதெல்லாம் எலும்புக்கூடாக மாறி டான்ஸ் ஆடும் ...yes கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லை!

சரி மேட்டருக்கு வருவோம்..

நிச்சயமின்மைக்கு ஓர் உதாரணம்..(இது ஒரு உதாரணம் தான்..நிச்சயமின்மை என்றால் இது தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்!)

ஒரு அம்மா தன் ஐந்து வயது குழந்தையைப் பார்த்து "கண்ணு, போய் அப்பா என்ன பண்றார்னு பாத்துட்டு வா" என்கிறாள்..அப்பாவோ தன் அறையில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறார்..தன் அறைப்பக்கம் யாரோ வருவது போலத் தோன்றவே அவசர அவசரமாக அதை அணைத்து விட்டு கையில் ஒரு நியூஸ் பேப்பரை எடுத்து வைத்துக் கொள்கிறார்..
குழந்தையும் பார்த்து விட்டு சமர்த்தாக "அம்மா அப்பா பேப்பர் படிக்கிறார்" என்று சொல்லி விடுகிறது. அதாவது அப்பா என்ன செய்கிறார் என்று அறிந்து கொள்ள அம்மா செய்த முயற்சியே அப்பா செய்து கொண்டிருந்ததை மாற்றி விடுகிறது. இதே ஐந்து வயது குழந்தைக்கு பதில் ஒரு வயது குழந்தை வந்தால் அப்பா கண்டு கொள்ளாமல் சிகரெட் பிடிப்பதைத் தொடரக்கூடும் ..ஆனால் அந்த ஒரு வயதுக் குழந்தைக்கு திரும்ப சென்று அம்மாவிடம் உண்மையை சொல்லும் அளவு ஞானம் (ஆற்றல்) இருப்பதில்லை..

ஒரு பொருளை நாம் பார்க்க முடிகிறது என்றால் அந்தப் பொருளின் அளவு ஒளியின் அலைநீளத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.எலக்ட்ரான் போன்ற துகள்கள் மிகச் சிறியவை என்பதால் அவற்றின் அளவை விட குறைந்த அலைநீளம் உள்ள அலைகளை அனுப்பி மட்டுமே அவற்றை நாம் வேவு பார்க்க முடியும். (அனுமார் ராவணன் அரண்மனையில் நுழையும் போது தன்னை சிறியதாகக் குறுக்கிக் கொள்வாரே அது மாதிரி) ஆனால் குறைந்த அலை நீளம் என்றால் அதன் அதிர்வெண் அதிகமாக இருக்க வேண்டும்..
ஆனால் குவாண்டம் இயற்பியலின் அலை-துகள் இருமைப்படி ஒளியின் ஒரு சிறிய பொட்டலத்தின் குறைந்த பட்ச ஆற்றல் E = hv ..அதிக அதிர்வெண் கொண்ட அலைகளை அனுப்புவதால் ஒளித்துகளின் ஆற்றலும் அதிகமாக இருக்கும். படம்..கிளிக் செய்து பெரிதுபடுத்தவும்



இந்த ஆற்றலானது ஒளித்துகள் (photon ) சென்று எலக்ட்ரானை மோதும் போது எலக்ட்ரானுக்கும் கொஞ்சம் transfer செய்யப்பட்டு எலக்ட்ரானின் திசைவேகம் (அல்லது உந்தம்) சகட்டு மேனிக்கு மாற்றமடைந்து விடுகிறது.

அதாவது இருப்பிடத்தை துல்லியமாக அறியும் முயற்சி அதன் உந்தத்தில் உள்ள துல்லியத்தன்மையை கெடுத்து விடுகிறது. சரி குறைந்த அதிர்வெண் உள்ள அலையை உபயோகப்படுத்தினால் அது எலக்ட்ரானை அவ்வளவாகப் பாதிக்காது.ஆனால் குறைந்த அதிர்வெண் உள்ள அலை தனது பரவிய அலைநீள வரம்பின் காரணமாக நமக்குப்
பொருளின் இருப்பிடத்தை தோராயமாகத்தான் காட்டும். (நம் உதாரணத்தில் ஒரு வயது குழந்தையைப் போல)

ஒரு தேனி பெரிய அறை ஒன்றில் இருந்தால் அது பெரும்பாலும் சுவரில் நிலையாக அமர்ந்திருக்கும்.(அறையின் எந்த இடத்தில் உட்கார்ந்திருக்கும் என்று நம்மால் சரியாக சொல்ல முடியாது. அதாவது வேகத்தை துல்லியமாக சொல்லும் போது இருப்பிடம் தவறி விடுகிறது) இதே அந்த அறையை கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாக்கிக் கொண்டே வந்து ஒரு பாக்ஸ் அளவுக்கு செய்து விட்டால் தேனி தான் சிறைப்பட்டதை உணர்ந்து கொண்டு வேகமாக உள்ளே பறக்க ஆரம்பிக்கும்..இப்போது அதன் இருப்பிடத்தை துல்லியமாக சொல்ல முடியும் (பாக்ஸ் சிறியது என்பதால்) என்றாலும் அது கோபத்தில் இருப்பதால் என்ன வேகத்தில் அலைபாயும் என்று சொல்ல முடியாது.

இது வரைக்கும் நாம் சொன்னதை
Complementarity என்கிறார்கள்..அதாவது ஒரே பொருளின் இரண்டு பண்புகள் ஒன்றுக்கொன்று எதிராய் இருக்கின்றன. ஓஷோ கடவுளைப் பற்றி இவ்வாறு கேட்கிறார்: கடவுள் மிகவும் கருணை உள்ளவர் மற்றும் நீதி தவறாதவர் என்கிறீர்கள்..அவர் கருணை உள்ளவராக இருந்தால் நீதி நியாயம் இவற்றில் compromise செய்து கொண்டு போகட்டும் போ என்று மன்னித்து விடுவார் ..நீதிமானாக இருந்தால் கருணையை எல்லாம் அப்பால் வைத்து விட்டு நடுநிலையில் நின்று தீர்ப்பு வழங்க வேண்டும்.ஆகவே கடவுள் ஒன்று கருணைக்கடலாக இருக்க வேண்டும் இல்லை நீதிமானாக இருக்க வேண்டும்..

but God is both !



கடவுளின் இந்த
Complementarity யை உணர்ந்து கொண்டவர் போல தியாகராஜர் தன் கிருதிகளில் சொல்வதைப் சொல்வதைப் பாருங்கள்

கருணா ஜலதே தாசரதே (ராகம்: நாத நாமக் கிரியா) -கருணைக் கடலே தசரதன் மைந்தா

காரு பாரு சேயுவாரு கலரே
(ராகம்: முகாரி) -நீதி நெறி தவறாது ஆட்சி செய்பவர் உன்னைப் போல இல்லை

சமுத்ரா