இந்த வலையில் தேடவும்

Friday, June 10, 2011

அணு அண்டம் அறிவியல் -29

அணு அண்டம் அறிவியல் -29 உங்களை வரவேற்கிறது


சீடர்: குருவே, உங்கள் தேவனுடைய சாம்ராஜ்யத்தின் சிறப்பம்சம் என்ன?
இயேசுநாதர்: அங்கே காலம் என்பதே இருக்காது.

“Time is the longest distance between two places.” -Tennessee Williams

காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே - ஒரு திரைப்படப் பாடல்

நண்பர்களே, சிறியவைகளுக்கான இயற்பியல் (குவாண்டம் இயற்பியல்) சுவாரஸ்யமாக இருந்ததா? குவாண்டம் இயற்பியலில் சொல்வதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்ற போதும் வாசகர்களுக்கு சலிப்பு வராமல் இருக்க கொஞ்சம் டாப்பிக் மாற்றியிருக்கிறோம்.இது வரைக்கும் நாம் பார்த்தது அணு . இப்போது பார்க்கப்போவது அண்டம் . அணுவிற்கு சற்றும் குறையாத அதிசயங்கள் அண்டத்திலும் இருக்கின்றன.


ஏசுநாதரின் மிக அழகான ஒரு பதிலுடன் நாம் ரிலேடிவிடியை ஆரம்பித்திருக்கிறோம். வி
ஞ்ஞானிகளால் மிகவும் ஆராயப்பட்ட ஒரு
ஆன்மீக வாசகம் இது. காலம் என்பதே இல்லாத ஒரு ராஜ்ஜியம் இருக்க முடியுமா? இந்திரனின் சபையில் தேவ கன்னிகளுக்கு
வயதே ஆவதில்லை என்று சொல்வார்கள் . (என்றும் பதினாறு தான் அவர்கள்) அப்படியென்றால் அவர்களுக்கு காலம் நகருவதில்லை என்று அர்த்தம். பகவான் விஷ்ணுவின் மீது அதீத அன்பு கொண்ட பக்தர்கள் 'நித்ய சூரி' களாக மாறுகிறார்கள் என்று ஒரு நம்பிக்கை. இவர்களுக்கும் காலம் என்பது இல்லை.[ஓஷோ கிண்டலாக சொல்வார்: காலம் இல்லையென்றால் தொடர்ந்து 'அல்லேலூயா' என்று மேகத்தின் மீது அமர்ந்து முடிவே இல்லாமல் பாடிக்கொண்டிருக்க வேண்டுமா? அப்படிப்பட்ட சொர்க்கம் எனக்கு வேண்டவே வேண்டாம்] இவை எல்லாம் 'சயின்ஸ் ஃபிக்சன் ' போல தோன்றினாலும் ரிலேடிவிடி என்ன சொல்கிறது தெரியுமா? ஒளிக்கும் (ஃபோட்டான்கள்) கூட காலம் இல்லையாம்..காலம் நகர்வதை ஒளித்துகள்கள் உணர்வதில்லையாம்


காலம் என்பது மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வரம். மனிதனின் சாபமும் அது தான்.

காலம் எப்போது வரம் ஆகிறது? உங்களுக்கு மிக நெருக்கமான ஒருவர் இறந்து விடுகிறார். கணவனோ மனைவியோ அம்மாவோ அப்பாவோ! அப்போது வாழ்க்கையே முடிந்து விட்டது போல நரகமயமாகத் தோன்றுகிறது. ஆனால் காலம் நகர்கிறது. அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் என்று உருண்டோடி வருடங்கள் நகர்கின்றன. ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர்களின் இறப்பு உங்களை பெரிதாக பாதிப்பதில்லை.It 's all part of life ! இந்த விதத்தில் காலம் ஒரு வரம்

காலம் எப்போது சாபமாகிறது? காலம் நகர்வதில்லையே என்று ஒரு விதத்தில்.. இன்டர்வியூ-வுக்கான நீண்ட வரிசையி
ல் காத்திருக்கும் போது , காதலிக்காக காத்திருக்கும் போது...அப்புறம் காலம் நகர்கிறதே என்று ஒரு விதத்தில்..புத்தம் புதிய அழகிய மனைவியுடன் ஹனிமூன் சென்றிருக்கும் போது, ஊட்டியோ, சிம்லாவோ , மெல்லிய குளிர், இளமை, அழகான தனிமையான காஸ்ட்லி ரிசார்ட் + நிறைய காதல் ..இந்த சூழ்நிலையில் காலம் நகர்கிறதே என்று கவலையாக இருக்கும்..(என்ன அதுக்குள்ள ஒரு மணி ஆயிருச்சா??) சூரியன் மேற்கில் விழும் ..மீண்டும் காலையில் விடியும்..அப்புறம் ரிசார்டை காலி
செய்ய வேண்டியது தான்..'இந்த நிமிடம், இந்த நிமிடம் இப்படியே உறையாதா" என்று பாட்டெல்லாம் பாடினால் காலம் அதைக் கேட்காது (ஒரு கருந்துளையின் விளிம்புக்கு (EVENT HORIZON ) நீங்கள் ஹனிமூன் போனால் ஒரு வேளை காலம் உறைந்து போகலாம்!)

[
மரணம் அல்லது எமனுக்கும் இந்திய மொழிகளில் கால்(காலன்) என்று தான் பெயர்
அதாவது காலம் என்பது நம் உயிரை மெல்ல மெல்ல அரிக்கும் மரணம் என்கிறார்கள்...]


காதலில் கூட காலம் உறைந்து விடுவதாக சொல்கிறார்கள்..நீங்கள் யாரையாவது உண்மையாக (?) காதலித்திருந்தால் இதை உணர்ந்திருக்க முடியும் .பாம்பே ஜெயஸ்ரீ பாடும் 'வசீகரா' பாடலில் ரிலேடிவிடி வருகிறதா என்று தெரியவில்லை..எனக்கு காதலில் அனுபவம் இல்லை..எனவே அனுபவம் உள்ள பெரியவர்கள் காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே என்பது எந்த அளவு உண்மை என்று சொல்லவும்.

ஊர் மெச்சும் அழகுடன் இருந்தவர்கள் காலத்தின் போக்கில் முதுகு வளைந்து நரை திரை மூப்பு மேவி படுக்கையில் விழும்விஷயம் நம் சித்தர்களை மிகவும் பாதித்தது என்று தோன்றுகிறது.வாழ்வின் நிலையாமையை விளக்கும் இந்த மாதிரி தத்துவங்களை தமிழ் இலக்கியங்களில் பஞ்சமில்லாமல் பார்க்க முடியும்.

'அங்கம் கலிதம் பலிதம் முண்டம்" என்று உடல் தளர்ந்து முடி உதிர்ந்து பல் விழுந்து தள்ளாடி வரும் கிழவனை பஜகோவிந்தம் வர்ணிக்கிறது

"காலன் வரும் முன்னே கண்பஞ்சடையும் முன்னே" என்று பட்டினத்தாரும் இதையே தான் சொல்கிறார் ..

காலத்தைப் பற்றி சிலர் இப்படி (கொஞ்சம் ஓவராக) ஆன்மீகமாக யோசித்துக் கொண்டிருக்க சிலர் அறிவியல் பூர்வமாகவும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.

“Time is the longest distance between two places.” இதன் அர்த்தம் புரிகிறதா? ஓகே புரியவில்லை என்றால் பரவாயில்லை...போகப் போகப் புரியும்.

ஐன்டீனுக்கும் 'காலம் என்றால் என்ன?' என்ற கேள்வி மனதில் தோன்றியது. நம்மிடம் யாராவது 'டைம் என்ன?" என்று கேட்டால் பெருமிதமாக வாட்சைப் பார்த்து "ஃபைவ் தர்ட்டி " என்கிறோம். ஐன்ஸ்டீனிடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வி அவரை என்னவோ பண்ணியிருக்கவேண்டும். 'டைம்' என்றால் என்ன என்று அவர் யோசிக்க ஆரம்பித்து விட்டார். இதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன், காலம் என்றால் என்ன? காலம் என்பது நம்மை ஆன்மீக ரீதியாகவோ அறிவியல் ரீதியாகவோ பெரிதாக பாதிப்பதில்லை என்று தான் தோன்றுகிறது. சினிமாவுக்கோ டிரெய்னுக்கோ நேரம்
ஆகி விட்டால் மட்டும் நாம் காலத்தைப் பற்றி கொஞ்சம் கவலைப்படுகிறோம்.

சன் டி.வி யில் செய்திகள் ஆரம்பிப்பதற்கு முன் 07:29:01 , 07:29:02, 07:29:03
என்று 07:30:00 வரை நொடிகள் நகர்ந்து கொண்டே இருக்கும் போது இனிமேல் கொஞ்சம் கவனியுங்கள்..அந்த நொடிகளுடன் சேர்ந்து ஏதாவது நகருகிறதா? இல்லை கடிகார முட்கள் நகர்வது வெறுமனே ஒரு இயந்திரவியல் செயல்பாடா? காலம் உருண்டோடியது என்கிறோம்..ஏதாவது உண்மையிலேயே உருண்டு ஓடியதா? இல்லை காலம் என்பது மாயையா?

இயற்பியல் காலத்திற்கு நிறைய வரையறைகள் சொல்கிறது. பிக் பாங் என்ற பிரபஞ்சப் பெரு வெடிப்பின் போது ஒரு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஒன்று வெளி(SPACE) , இன்னொன்று காலம்(TIME)..அதற்கு முன்னே வெளியும் இல்லை காலமும் இல்லை பிறகு எப்படி திடீரென்று வெடித்தது? என்றால் அது இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. வெய்யில் காலத்தில் வியர்வை நனைய ஆபீஸ் சென்று அங்கே மேனேஜரிடம் டோஸ் வாங்கி விட்டு, இன்னும் போன் பில் கட்டவில்லையே என்று வருத்தப்பட்டு சாயங்காலம் மனைவி வாங்கி வரச் சொன்ன எதையோ மறந்து விட்டு அவளிடம் டோஸ் வாங்கும் இந்த பரிதாப நிலைமையை நினைக்கும் போது பிரபஞ்சம் வெடிக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.அதைப் பற்ற வைத்த ஆசாமியை நிறைய பேர் கொலை வெறியுடன் தேடிக் கொண்டிருப்பதாகத் தகவல்!

வெளியும் காலமும் ஒன்றோடொன்று இணை பிரியாத இரட்டைகள் என்கிறது இயற்பியல். அதாவது காலத்தை வெளியின் நான்காவது பரிமாணம் என்கிறது. ஒன்றுக்கு ஒன்று செங்குத்தான மூன்று வெளியின் பரிமாணங்களை (X Y Z ) நம்மால் கற்பனை செய்வது சுலபம் .ஆனால் இந்த மூன்றுக்கும் செங்குத்தான நான்காவது பரிமாணமான 't ' யை கற்பனை செய்வது மனித மூளையால் இயலாத காரியம்..




காலம் என்பது பொறுட்களின் மாற்றத்தால் ஏற்படும் ஒரு விளைவு (side effect ) என்கிறது இன்னொரு வரையறை. காலத்தின் நகர்வு காரணமாக நாம் மாற்றங்களை உணருகிறோமா இல்லை மாற்றங்களால் காலத்தை உணர்கிறோமா என்று சொல்வது கடினம்.(கோழியில் இருந்து முட்டையா முட்டையில் இருந்து கோழியா??) ஒரு பனிக்கட்டி இருக்கிறது. அதை அப்படியே
வைத்திருந்தால் அது உருகி நீராக ஓடுகிறது. காலத்தின் ஓட்டத்தால் அது மாற்றம் அடைந்ததா இல்லை அது உருகி வழிந்து ஓடிய மாற்றத்தால் நாம் காலத்தை உணர்ந்தோமா என்று சொல்வது கடினம்.


நம்மை சுற்றி உள்ள எல்லாம் மாறாமல் அப்படியே ,( நமக்கெல்லாம் வயசாகாமல், பூமி சுழலாமல் எல்லாம் அப்படியே
போட்டது போட்டபடி) இருந்தால் நம்மால் காலத்தை உணர முடியுமா? ஆனால் இது சாத்தியம் இல்லை..மாற்றம் தான் பிரபஞ்சத்தின் ஆதாரம்.இயக்கம் தான் பிரபஞ்சத்தின் இயற்கை. "Natura facit saltus !!! " சமஸ்கிருதம் பிரபஞ்சத்தை சராசரம் என்கிறது . (சரா மற்றும் அசரா ..இயங்குவது மற்றும் நிலையாக இருப்பது..இந்த ஒரே வார்த்தையில் ரிலேடிவிடி மற்றும் குவாண்டம் இயற்பியல் இரண்டும் வந்துவிடுவதை கவனியுங்கள்..ரிலேடிவிட்டி என்பது இயக்கத்திற்கான இயற்பியல்.குவாண்டம் எல்லைக்கு அப்பால் பொருட்களின் இயக்கம் உணரப்படுவதில்லை என்கிறது குவாண்டம் இயற்பியல்) இயக்கம் இருந்தாலே காலமும் இருக்க வேண்டும். ஏனென்றால்
இயக்கம் என்பது வெளி (SPACE ) இல்லாமல் சாத்தியம் இல்லை.
வெளி என்பது காலம் இல்லாமல் சாத்தியம் இல்லை..எனவே இயக்கம் காலத்தை உண்டாக்குகிறது .

சரி இந்த இயக்கம் எந்த அளவு இருக்கலாம்? மிகக் குறைந்த அளவு இயக்கம் என்றால் என்ன? நத்தை நகருவதா? குழந்தைகள் ஒரு நொடிக்கு ஒரு நானோ மீட்டர் வளர்கிறார்கள் என்கிறார்கள்..அதுவா? சரி விடுங்கள் நமக்கு ஞாபக சக்தி என்ற ஒன்று இல்லை என்றால் நம்மால் இயக்கத்தை உணர முடியுமா என்று கேட்கிறார் ஒரு கிரேக்க அறிஞர் !

சரி மிக அதிக இயக்கம் என்றால் என்ன? என்னது ஏரோப்ளேனா?
உளறாதீர்கள்..பின் அதிகபட்ச இயக்கத்திற்கு உதாரணம் என்ன? மிகக் குறைந்த நேரத்தில் அதிக தூரங்களைக் கடக்க வேண்டும்..முயற்சி செய்யுங்கள்.என்னது ராக்கெட்டா? இல்லை!

என்ன சொன்னீர்கள்? ஹ்ம்ம் சரி தான் ! கொஞ்சம் சத்தமாக சொல்லுங்களேன்..என்னது 'ஒளி' யா? யார் சொன்னது? சொன்னவருக்கு ஒரு சாக்லேட் பரிசு...வீசுகிறேன் பிடித்துக் கொள்ளுங்கள்..

ஆமாம் ஒளி தான் அது.பிரபஞ்சத்தில் நடக்கும் அதிகபட்ச இயக்கத்திற்கு உதாரணம். சார்பியலில் ஒளி ஒரு பிரிக்க முடியாத அம்சம். ஒளி பிரபஞ்சத்தின் பேரதிசயம். ஒளியைப் பற்றிய சிந்தனைகள் தான் ஐன்ஸ்டீனை ரிலேடிவிடி என்ற சித்தாந்தத்தை கண்டுபிடிக்கத் தூண்டின.

இந்த பிரபஞ்ச அதிசயம் ஒளி..இதைப் பற்றி அறிந்து கொள்ள நம் -- வில் அடுத்த சில அத்தியாயங்களை அர்ப்பணிப்போம்..


சமுத்ரா


Thursday, June 9, 2011

கலைடாஸ்கோப்- 21

லைடாஸ்கோப்- 21 உங்களை வரவேற்கிறது

எதிர்பாராது வரும் விடுமுறைகள்
==============================

சில பேருக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. நான் எழுதிய ஒரு கவிதைக்கு Anonymous என்ற ஒருவர் எழுதிய பின்னூட்டத்தைப் பார்த்தால் உங்களுக்கே விளங்கும்.

கவிதை

எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எவ்வளவு அழகாக இருக்கின்றன?
வீடு திரும்பி வந்து
குழந்தைகளுடன் விளையாடலாம்...
தோட்டத்துச் செடிகளுக்குத்
தண்ணீர் ஊற்றலாம்..
தொலைக்காட்சி சீரியல்களின்
அபத்தங்களைப் பார்த்துப் புன்னகைக்கலாம்..
காலையில் அவசரமாகப்
புரட்டிய செய்தித்தாள்களை
ஆசுவாசமாய்ப் பார்க்கலாம்..
மனைவியின் சமையலை
நேரலையாய் கண்டு ரசிக்கலாம்..
நண்பனுக்குப் போன் பேசி
நலம் விசாரிக்கலாம்...
நெடுநாளாய் நின்றிருக்கும்
ஒட்டடைகளை நீக்கலாம் ...
ஒரு சிறுவனாய் மாறி
கிரிக்கெட் விளையாடலாம்...

இப்போது இதன் பின்னூட்டம்:

நிஜ வாழ்க்கையில், நடப்பவை எல்லாம் மனைவியின் பதில் களாக!

எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எவ்வளவு அழகாக இருக்கின்றன?

வீடு திரும்பி வந்து
குழந்தைகளுடன் விளையாடலாம்...
அன்பு மனைவி - ஏங்க, இன்னிக்கி லீவு தான, கொஞ்சம் குழந்தைய பார்த்து கிட்டு தூங்க வைச்சிடுங்களேன்

தோட்டத்துச் செடிகளுக்குத்
தண்ணீர் ஊற்றலாம்..
- சும்மாவே இருக்க மாட்டீங்களா? நேத்து தான் தண்ணி ஊத்துனேன், இதுல மழை வேற பெஞ்சது.
உதவி பண்ணலனாலும் உபத்திரவம் பண்ணாம இருக்கலாம் ?

தொலைக்காட்சி சீரியல்களின்
அபத்தங்களைப் பார்த்துப் புன்னகைக்கலாம்..
அன்பு மனைவி- எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க? சீரியல்ல வர்ற பொண்ண கூட சைட் அடிக்கனுமா?

காலையில் அவசரமாகப்
புரட்டிய செய்தித்தாள்களை
ஆசுவாசமாய்ப் பார்க்கலாம்..
அன்பு மனைவி- ஒரே நியூஸ் பேப்பர எத்தன தடவ படிப்பீங்க? இந்த பழைய பேப்பர் எல்லாம் அடுக்கி வைச்சீங்கன்ன, போட்டு எவர் சில்வர் பாத்திரமாவது வாங்கலாம்.

மனைவியின் சமையலை
நேரலையாய் கண்டு ரசிக்கலாம்..
அன்பு மனைவி - வந்து கிச்சன் வேடிக்கை பாக்குறத விட, இந்த தேங்காய் கொஞ்சம் உடைச்சி குடுங்க.

நண்பனுக்குப் போன் பேசி
நலம் விசாரிக்கலாம்...
அன்பு மனைவி - இன்னிக்கி ஒரு நாள் எதோ லீவு. இன்னிக்காச்சும் போன் ஆப் பண்ணி வைங்க. எப்ப பார்த்தாலும் பேச வேண்டியது. அப்படி என்னத்த தான் பேசுவீங்களோ?

நெடுநாளாய் நின்றிருக்கும்
ஒட்டடைகளை நீக்கலாம் ...
அன்பு மனைவி - என்னங்க, அது பக்கத்துக்கு வீடு. நம்ம வீட்ட விட்டுட்டு வேற எல்லாத்துலயும் ஒட்டடை அடிங்க...கடவுளே.. (தலையில் அடித்து கொள்கிறார்)

ஒரு சிறுவனாய் மாறி
கிரிக்கெட் விளையாடலாம்...
அன்பு மனைவி- அதான், உங்களுக்கு வராதுல்ல...அப்புறம் என்ன இன்னும் சின்ன பையன் மாதிரி..மானம் போகுது. ப்ளீஸ் வீடுக்குள்ள வாங்க.

என்ன தான் சொன்னாலும்
வழக்கமான விடுமுறைகளை விட
எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எப்போதும் அழகாய் இருக்கின்றன,,

அன்பு மனைவி- அதெப்படி அழகா இல்லாம போகும் னு கேக்குறேன். வேல வெட்டி எதுவும் இல்லாம, நாள் பூரா சாப்டுட்டு தூங்கிட்டு இருந்தா, இப்படி லாம் கவிதை வேற வரும். எல்லாம் எங்க அப்பா சொல்லணும். இப்படி ஒருத்தர எங்க தான் தேடி பிடிச்சி.....ம்ம்ம்ம்
--------- அன்பு மனைவி

பயணம்
=======

சமீபத்தில் கே.பி.என் சொகுசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 20 க்கும் மேற்பட்டவர்கள் பலியான விபத்தைப் பற்றி படித்திருப்பீர்கள். பாட்டி மிகவும் FEEL செய்து சொன்னாள் என்பதற்காக இப்போதெல்லாம் பெங்களூரில் இருந்து கோயமுத்தூருக்கு மைசூர் வழியாக செல்வதில்லை. (வழியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன)
ஆனால் சேலம் வழியாக சென்றாலும் உயிருக்கு பெரிதாக உத்தரவாதம் இல்லைதான் போலத் தோன்றுகிறது. கதவுகள் ஜன்னல்கள் மூடியிருக்க ஏ.சி யின் மயக்கத்தில் போய்ச்
சேர்ந்து விடுவோம் (ஊருக்கு தான்!) என்ற நம்பிக்கையில் எவ்வளவு ஹாயாக நாம் ஸ்லீப்பர் பஸ்சுகளில் தூங்கிக் கொண்டு வருகிறோம் என்று நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

இனி மேல் புறப்படும் போது ஆஞ்சநேயரை வழிபட்டு 'புத்திர்பலம்' என்ற ஸ்லோகத்தை சொல்லி விட்டு ஒரு பத்து ரூபாய் நோட்டை நேர்ந்து கட்டி வைத்து விட்டு புறப்படு என்கிறாள் அம்மா.நம் உயிரை ஆஞ்சநேயர் காப்பாற்றுவாரா இல்லையா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். பஸ்ஸில் உள்ள அனைவரின் உயிரும் பஸ் டிரைவரின் கையில் தான் இருக்கிறது. விபத்து நடந்து விட்டால் அந்த டிரைவரை தூக்கில் போடு என்றெல்லாம் டென்ஷன் ஆகி குரல் கொடுக்கும் நாம் அதே டிரைவர் இத்தனை நாளாய் ஆயிரக்கணக்கான பேர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்த்ததற்கு ஒரு நன்றியாவது சொன்னோமா தெரியவில்லை. நன்றி வேண்டாம் பஸ்ஸை விட்டு இறங்கும் போது நமக்காக தூக்கம் துறந்து வண்டி ஒட்டிய மகானுபாவர் யார் என்று ஒரு முறை டிரைவரைத் திரும்பிப் பார்த்திருக்கிறோமா என்பது கூட சந்தேகம் தான். ஒரு வினாடிக்கும் குறைவான காலத்தில் முடிவெடுப்பதில் ஏற்படும் குளறுபடிகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கெல்லாம் அந்த டிரைவருக்கு தண்டனை கொடுப்பது மகா அபத்தம். கே.பி.என் டிரைவர்கள் (நான் அறிந்த வரை) அனுபவம் உள்ளவர்கள். மிக அதிக வேகத்தில் ஒட்டுவதில்லை. பத்து மணிக்கு புறப்பாடு என்றால் அதிக பட்சம் பத்து ஐந்துக்குள் புறப்பட்டு விடுகிறார்கள்.என்ன தான் இருந்தாலும் விபத்துகள் நடக்கவே நடக்காது என்று யாராலும் சொல்ல முடியாது.

வீடியோ கேமில் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போது கொஞ்சம் கை பிசகி வண்டி விழுந்து விட்டால் பெரிதாக எதுவும் இல்லை. மீண்டும் ஒரு வண்டி Fresh ஆக திரையில் எங்கிருந்தோ தோன்றும். இல்லை GAME OVER என்று வரும் அவ்வளவு தான். ஆனால் நிஜ பஸ்ஸில்? GAME (called life) OVER என்று எடுத்துக்கொள்ளும் பக்குவம் நமக்கெல்லாம் இல்லை.

என்ன ஒரு துரதிர்ஷ்டம் என்றால் அந்த பஸ் தீப்பிடிக்காமல் இருந்திருந்தால் சில பல காயங்களுடன் நிறைய பேர் பிழைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. (பத்தடி பள்ளம் தான்) ஆனால் இன்றைய சொகுசு பேருந்துகள் பல கம்சனின் சிறை போல எல்லா வழிகளையும் அடைத்துக் கொண்டல்லவா பயணிக்கின்றன? நிறைய பஸ்களில் எமர்ஜன்சி எக்ஸிட் இருப்பதில்லை. இருந்தாலும் அதை திறப்பதற்கு ஒரு Ph .D செய்திருக்க வேண்டும் போலிருக்கிறது. எடுத்ததற்கெல்லாம் முன்னாள் ஆட்சியாளர்களைக் குறைகூறிக் கொண்டிருக்கும் அரசாங்கம் இதையெல்லாம் கொஞ்சம் கவனித்தால் பரவாயில்லை.

(கொசுறு: நாளை ஊருக்கு போகிறேன்.(KPN இல் தான்!) கலைடாஸ்கோப் -22 எழுதுவதற்கு திரும்பி வருவேனா என்பது ஆஞ்சநேயருக்கே வெளிச்சம்)

a Tear and a Smile
=================

கடைசியாக நீங்கள் எப்போது சிரித்தீர்கள்? அது ஒரு நிமிடம் முன்பு இருக்கலாம். ஒரு மணி நேரம் முன்பு இருக்கலாம். ஆபீசில் பக்கத்து சீட்டுக் காரார் சொன்ன மொக்கை ஜோக்குக்கு கூட கெக்கே பிக்கே என்று காரணமில்லாமல் சிரித்திருப்போம். இல்லை மேனேஜரோ நம்மை விட உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவரோ ஏதாவது அபத்தமாக சொன்னார்கள் என்றால் அவரை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்று விழுந்து விழுந்து சிரித்திருப்போம்.(உண்மையில் அழுதிருக்க வேண்டும் ) இல்லை டி.வி யில் கவுண்டமணி 'பேரிக்காய் தலையா' என்றோ 'தீஞ்சு போன ரப்பர் வாயா' என்றோ செந்திலை செந்தமிழில் திட்டிக் கொண்டிருந்தால் அப்போது சிரித்திருப்போம்.

ஆனால் நீங்கள் கடைசியாக எப்போது அழுதீர்கள் என்று நினைவில் கொண்டுவர முடியுமா? தாத்தா இறந்த போது? ஹ்ம்ம்..அப்போதும் உண்மையாக அழவில்லை. ரொம்பவும் எதிர்பார்த்த இன்டர்வியூ ஃபெயில் ஆகி வீடு திரும்பியதும் ஓ என்று அழ வேண்டும் போல தோன்றினாலும் வேறு ஏதோ விஷயத்தில் மனதைத் திருப்பியோ 'You can win ' போன்ற லூசுத் தனமாக புத்தகங்களைப் புரட்டியோ வந்த அழுகையை அப்படியே யு டர்ன் அடித்து உள்ளேயே திருப்பி விட்டு விடுகிறோம். சிரிப்பது உடல்நலத்துக்கு எவ்வளவு நல்லதோ அழுவதும் அந்த அளவு நல்லது என்று இன்றைய மனநல வி
ஞ்ஞானிகள் சொல்வதை நீங்கள் படித்திருக்கலாம். எனவே இனிமேல் அழவேண்டும் என்று தோன்றினால் தயவு செய்து சிரிக்காதீர்கள். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றியோ . உங்கள் social image பற்றியோ கவலைப்படாமல் Leave me alone என்று சொல்லி விட்டு உங்கள் அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டு கண்ணீர் வற்றும் வரை அழுது தீருங்கள்.. அதே போல வாழ்ந்து முடித்து இறந்த ஒரு ஆளின் இழவு வீட்டில் உங்களுக்கு ஏனோ காரணமில்லாமல் சிரிப்பு வந்தாலும் Excuse me சொல்லி விட்டு தனியாக சென்று கெக்கே பிக்கே என்று சிரிக்கவும். இனி கலீல் கிப்ரானின் a Tear and a Smile என்ற ஒரு கவிதை:

என் இதயத்தின் துயரங்களை - ஒரு
கூட்டத்தின் மகிழ்ச்சிக்காக விட்டுக் கொடுக்கமாட்டேன்
என்னிடம் இருந்து வெளியேறும் கண்ணீரை
சிரிப்பாய் மாற்ற முயற்சிக்கவும் மாட்டேன்

என் கண்ணீர் என் கண்ணீராய் இருக்கட்டும்
என் புன்னகை என் புன்னகையாய் இருக்கட்டும்

என் இதயத்தைக் கழுவி வாழ்வின்
ரகசியங்களை வெளிக் கொணரட்டும் என் கண்ணீர்
என் நண்பர்களின் சங்கமத்தில்
இறைத்தன்மையை உணர்த்தட்டும் என் புன்னகை

என் கண்ணீர் என் கண்ணீராய் இருக்கட்டும்
என் புன்னகை என் புன்னகையாய் இருக்கட்டும்

ஒரு கவிதையை மொழிபெயர்ப்பது ஒரு விதத்தில் அதன் அழகைக் கெடுத்து விடுகிறது. முழு கவிதையையும் படிக்க இங்கே கிளிக்கவும்.

Google
========


இன்று கூகிளில் நீங்கள் கிடார் வாசிக்க முடியும். (http://www.google.co.in/) கிடார் இசைக் கலைஞரான லெஸ்டர் வில்லியம் பால் என்பவரின் 97 ஆவது பிறந்த நாளுக்காக கூகுள் இதை செய்கிறது. உங்கள் வீட்டில் ஒரு கீபோர்ட் இல்லையே என்ற ஆதங்கத்தை இன்று நீங்கள் தீர்த்துக் கொள்ளலாம். உங்கள் கணினியின் கீபோர்டையோ மவுசையோ பயன்படுத்தி பிரமாதமாக (?) கிடார் வாசிக்கலாம். நம் ரிநி வாசிக்க ASDFGHJK என்று அழுத்தவும்.

கொஞ்சம் குசும்பு
=================




சின்னப்பயல்
===========

என்பவரின் ஒரு கவிதை இப்போது ...கவிதையைப் பார்த்தால் அவர் 'பெரிய பயல்' போலத் தோன்றுகிறது

சில நிபந்தனைகளுடன்
சிலரை
ஏற்றுக் கொள்ள முடிகிறது

சில புரிதல்களுடன்
சிலருடன்
ஒத்துப்போக முடிகிறது

சில வேறுபாடுகளுடன்
சிலருடன்
வாழ்ந்து விட முடிகிறது

சில சகிப்புகளுடன்
சிலருடன்
பயணிக்க முடிகிறது

சில துருத்தி நிற்கும் உண்மைகளுடன்
சிலரைக்
கடந்து செல்ல முடிகிறது

சில மறைத்துவைக்கப்பட்ட
பொய்களுடன்
சிலருடன் தொடர்ந்து இருக்க முடிகிறது

சில உறுத்தல்களுடன்
இது போன்ற கவிதைகளை
வாசிக்கவும் முடிகிறது


ஓஷோ ஜோக்
=============

துப்பறியும் நிபுணர் ஜேம்ஸின் வீட்டுக்கு டாக்டர் பொட்டேட்டோ
மிக அதிகாலையில் வந்திருந்தார்.

கதவைத் திறந்ததும் ஜேம்ஸ் "வாங்க டாக்டர். பொட்டேட்டோ , என்ன விஷயம்? உள்ள வாங்க..ஆனால் நீங்கள் ஒரு மட்ட ரகமான சாயம் போன சிவப்பு அண்டர்வேர் போட்டிருப்பது தான் கொஞ்சம் நெருடலாக உள்ளது" என்றார்..

அதைக் கேட்டு டாக்டர் பொட்டேட்டோ "அருமை, அற்புதம் மிஸ்டர் ஜேம்ஸ்! அது எப்படி? என்ன தான் பெரிய துப்பறியும் நிபுணராக இருந்தாலும் எப்படி நான் போட்டிருக்கும் அன்டர்வேரை கூட நீங்கள் ஊகித்தீர்கள்? அற்புதம்! எப்படி அது?" என்றார்

"அது ரொம்ப சுலபம் தான் டாக்டர்...நீங்கள் பேண்ட் போட மறந்து விட்டீர்கள்"

முத்ரா



Wednesday, June 8, 2011

அணு அண்டம் அறிவியல் - 28

அணு அண்டம் அறிவியல் - 28 உங்களை வரவேற்கிறது

A _________________________________________________B

என்ன இது ABCD சொல்லித் தரப் போகிறேன் என்று பயந்து விட வேண்டாம். ஒரு துகள் A என்ற புள்ளியில் இருந்து B என்ற புள்ளிக்கு செல்வதாக கற்பனை செய்து கொள்வோம். இப்போது 'A ' மற்றும் 'B ' என்ற இரண்டு புள்ளிகளில் மட்டும் அதை நாம் கவனிப்பதாக வைத்துக் கொள்வோம்.இப்போது A மற்றும் B க்கு இடையில் துகள் எந்தப் பாதையில் பயணித்தது என்று கேட்டால் நியூட்டனின் விதிகளின் படி
A மற்றும் B க்கு இடையே உள்ள மிகச் சிறிய தூரமான நேர்கோட்டில் பயணித்தது என்று சொல்ல முடியும். (படம் 1 ) சிம்பிள்!

சரி இப்போது படம் இரண்டைப் (படம் 2 ) பாருங்கள் . ஏதோ குழந்தை கிறுக்கியது மாதிரி இருக்கிறதா? குழந்தை கிறுக்கியது அல்ல.இயற்கை கிறுக்கியது! குவாண்டம் இயற்பியலின் படி துகள்
A மற்றும் B க்கு இடையில் உள்ள எல்லா சாத்தியமான பாதைகளிலும் பயணிக்கிறது.A யில் இருந்து தொடங்கி உங்கள் வீடு, ஒபாமா வீடு, ஒசாமா வீடு, செவ்வாய் கிரகம், ஆல்பா சென்டாரி என்ற நட்சத்திரம் இங்கெல்லாம் ஊர் சுற்றி விட்டு பின்னர் சமர்த்தாக B யில் வந்து அமர்ந்து கொள்ளலாம் என்கிறது குவாண்டம் இயற்பியல். என்ன விளையாடுகிறாயா? யார் காதில் பூ சுற்றப் பார்க்கிறாய்? கேட்கிறவன் கேனப்பயல் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்கிறாயா என்று நீங்கள் கோபப்படுவது புரிகிறது. ரிச்சார்ட் பெயின்மன் என்பவர் இந்த கொள்கையை முன் வைத்த போது பலர் இப்படி தான் இந்த Sum -over -histories என்ற சித்தாந்தத்தை கடுமையாக எதிர்த்தார்கள்.


குவாண்டம் இயற்பியலில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் இரட்டைப் பிளவு சோதனை (Double slit experiment ) (படம் 3 ) ஒரே துகள் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகளில் பயணிக்கலாம் என்பதற்கான யோசனையை தொடங்கி வைத்தது.

இரட்டைப் பிளவு சோதனையைப் பற்றி முன்பே பல முறை -- வில் அலசியிருக்கிறோம். ஒரு துகளை (ஒளித்துகளோ
எலக்ட்ரானோ ஏதோ ஒன்று ) நேர்க்கோட்டில் பயணிக்க வைத்து அதன் பாதையில் அருகருகே இரண்டு நுண்ணிய துளைகள் உள்ள ஒரு திரையை வைத்த போது ஆச்சரியமாக அந்த ஒரே துகள் ஒரே சமயத்தில் இரண்டு துளைகளின் வழியேயும் நுழைந்து வெளியே வந்தது ! (IOW இரண்டு துளைகளிலும் சென்றதற்கான விளைவுகளை உணர முடிந்தது) எப்படி அது இரண்டு துளைகள் வழியாகவும் சென்றது என்று உறுதியாக சொன்னார்கள் என்றால் அதன் பாதையில் வைக்கப்பட்டிருந்த இன்னொரு திரையில் பதிவான பிம்பங்களைப் பார்த்து! திரையில் INTERFERENCE எனப்படும் கருப்பு வெள்ளை -கருப்பு வெள்ளை- கருப்பு வெள்ளைக் கோடுகள் விழுந்தன. எதனால் இப்படி கோடுகள் விழுந்தன என்று முன்பே விளக்கியிருக்கிறோம்.(சரி இன்னொரு முறை: ஒரு துளை வழியே செல்லும் அலை இன்னொரு துளை வழியே வரும் அலையுடன் interfere அதாவது வினை புரிவதால் அவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படவோ இல்லாமல் போகவோ செய்கின்றன . என்ன இது வரை துகள் என்று சொல்லி விட்டு இப்போது அலை என்கிறீர்களே என்று கேட்டால் இந்த தொடரை முதல் எபிசோடில் இருந்து படிக்கவும் )

வி
ஞ்ஞானிகள் சும்மா இருப்பார்களா? அந்தத் துகள் எந்த துளை வழியே செல்கிறது என்று அறிந்து கொள்வதற்கு திருட்டுத் தனமாக
PARTICLE DETECTOR எனப்படும் ஒரு சிறிய துகள் உணரும் கருவியை ஒரு துளைக்கு அருகே வைத்தனர் . அப்போது உடனே
திரையில் தோன்றிய INTERFERENCE கீற்றுகள் மறைந்து சன்னமான ஒரே ஒரு வெளிச்சக் கோடு மட்டும் அதில் தென்பட்டது. (படம் 4 ) அப்படியானால் அந்தத் துகள் இரண்டு துளைகள் வழியே செல்வதை இப்போது நிறுத்தி விட்டது. அப்படியானால் துகளை நாம் பார்க்கின்ற செயலே அதன் interference எனப்படும் பல-நிலைத் தன்மையை மாற்றி விடுகிறதா?

அதாவது ஒரு துகளை நாம் பார்க்கின்ற வரை , கவனிக்கின்ற வரை அது சாத்தியமான எல்லா நிலைகளிலும் இருக்க முடியும்
என்கிறார்கள். நாம் பார்ப்பதை எப்படியோ உணர்ந்து கொள்ளும் அந்த குவாண்டம் துகள் அவசர அவசரமாக பல நிலைகளில் ஒரு நிலையை மட்டுமே தேர்ந்தெடுத்து நமக்குக் காட்சி தருகிறது. நாம் முதலில் சொன்னது போல இது வாத்தியார் இல்லாத வகுப்பறை போல எப்படி எப்படியோ இருக்கிறது ஒரு பையன் ராக்கெட் விட்டுக் கொண்டிருக்கிறான். இன்னொரு பையன் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறான். இன்னும் இரண்டு பேர் எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருத்தன் தூங்குகிறான். இன்னொருத்தன் புத்தகம் படிக்கிறான் (உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாப்பா??)
ஆனால் வாத்தியார் வந்ததும் எல்லாரும் அவசர அவசரமாக சுதாரித்துக் கொண்டு அமைதியாக புத்தகம் படிப்பது போல 'ஆக்ட்' செய்கிறார்களே! அது மாதிரி தான். வாத்தியாரும் மாணவர்கள் இப்படி தான் எப்போதும் சமர்த்தாக
இருந்திருக்கிறார்கள் என்று தப்புக் கணக்கு போட்டு விடுகிறார்.

இதே மாதிரி குவாண்டம் உலகம் மிகவும் குழப்பம் நிறைந்தது. ஒரே சமயத்தில் ஒரு துகள் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி வியாபித்திருக்கிறது. ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்கிறது.ஆனால் தன் மீது போட்டான்கள் விழுவது தெரிந்ததுமே (யாரோ கவனிக்கிறார்கள் என்று அர்த்தம்) தன் வாலை சுருட்டிக் கொண்டு தன் ஒரு முகத்தை மட்டும் சமர்த்தாகக் காட்டுகிறது. இதை டெக்னிகலாக Quantum De coherence என்கிறார்கள். இந்த DE COHERENCE என்ற வார்த்தை அழகானது. வேடிக்கையாக சொல்வதென்றால் அந்த வார்த்தைக்கு ஆதாமும் ஏவாளும் ஈடன் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள் என்று அர்த்தம். எல்லாம் ஒரு விதமான ஆனந்த புளகாங்கிதத்தில், ஒருமித்த நிலையில் இருக்கின்றன. மனுஷப் பயல் பார்க்கும் போது DECOHERENCE ஆகி ஏதோ ஒப்புக்கு ஒரு நிலையை அவனுக்குக் காட்டுகின்றன. ஆங்கிலத்தின் ECSTASY (பேரானந்தம், பேருவகை) என்ற வார்த்தை எதையும் சாராமல் தனித்திருப்பது என்ற வேரில் (root ) இருந்து வந்தது என்கிறார்கள்.
வாத்தியார் இல்லாத வகுப்பறை (தனிப்படுத்தப்பட்ட குவாண்டம் உலகம்)


இயற்கை தன் நடவடிக்கைகளை ரகசியமாக வைத்திருக்கிறது, அதை மனிதன் அறிய முற்படும் போது ரகசியங்கள் மறைந்து
அது Open -secret என்று சொல்வார்களே அது மாதிரி ரகசியங்கள் மறைந்து விடுகின்றன. உபநிஷத் ( ஸ்வேதஸ்வதார ) "எது எல்லையில்லாததாக எல்லா இடங்களிலும் வ்யாபித்திருக்கிறதோ அதுவே எல்லை உள்ள, ஒரு குறிப்பிட்ட நிலை உடைய ஜீவனாக தோற்றமளிக்கிறது" என்கிறது.இது பரமாத்மாவைப் பற்றி பேசினாலும் நம் டாபிக்குடன் ஓரளவு ஒத்து வருகிறது

மிகச் சிறிய துகள்களுக்கு தான் இந்த பண்பு இருக்கும் என்று சொல்வதை விட 'சூழ்நிலையில் இருந்து எல்லா விதத்திலும் தனிமைப் படுத்தப் பட்ட ' (completely isolated ) ஒரு பொருள் Coherence எனப்படும் பன்முகத் தன்மை கொண்டிருக்கும் என்கிறார்கள். அந்தப் பொருளின் மீது ஒரு போட்டான் கூட விழக்கூடாது. சூழ்நிலையில் இருந்து அது அதீதத் தனிமையில் இருந்தால் அந்தத் துகள் கிட்டத்தட்ட 'பரமாத்மா' வாக மாறிவிடுகிறது. தமிழ் இலக்கியங்களில் கடவுளைப் பற்றி சொல்ல 'தமியன்' 'தனியன்' என்ற சொற்களை உபயோகப் படுத்துவதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அதாவது கடவுளின் பண்புகளில்
ஒன்று தனியாக இருப்பது. ஆங்கிலத்தின் ALONE என்ற சொல் all āna என்ற பதத்தில் இருந்து வந்திருக்கலாம் என்கிறார்கள். அதாவது 'ஒருவன் மட்டுமே ' (இஸ்லாமியர்கள் சொல்லும் அல்லா???) இஸ்லாமியர்களின் தாரக மந்திரமான 'யா ஆலி மதத்' என்பதையும் கவனியுங்கள்

அல்லாவின் திருநாமம்



நம் சாதாரண உலகத்தில் ஏன் குவாண்டம் விளைவுகள் இல்லை ( ஏன் உங்கள் வீட்டு நாய்க்குட்டி ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இல்லை) என்பதற்கான விடையை இது தருகிறது. பெரியதொரு பொருளை அதன் சூழ்நிலைகளில் இருந்து தனிமைப்படுத்தி வைப்பது மிக மிகக் கடினம்.நாய்க்குட்டி மீது கோடிக்கணக்கான போட்டான்கள் ஒவ்வொரு நொடியும் விழுந்து கொண்டே இருப்பதால் தனிமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.(பகவான் கிருஷ்ணர் 'தனிப்பட்டவர்' என்பதாலோ என்னவோ அவரால் ஒரே சமயத்தில் ருக்மிணியின் வீட்டிலும் சத்யபாமாவின் வீட்டிலும் இருக்க முடிகிறது!)

MACROSCOPIC பொருட்களைத் தனிமைப்படுத்தினால் என்ன ஆகும்? உதாரணம் ஒரு நாய், நாய் வேண்டாம் அதை விட சிறிய ஏதாவது? ஓகே ஒரு பூனை? ஓகே.. பூனையும் குவாண்டம் துகள்களைப் போல நடந்து கொள்ளுமா என்று யோசித்து
விஞ்ஞானிகள் 'ஸ்க்ராடிஞ்சர் பூனை' என்ற சோதனையை முன் வைத்தார்கள். இந்த பூனையைப் பற்றியும் நாம் முன்பே பேசியிருக்கிறோம். பூனை தனிமைப் படுத்தப்படும் போது அது ஒரு வேளை உயிரோடு இருக்கலாம் இல்லை உயிரோடு இல்லாமலும் இருக்கலாம். நாம் அதை கவனிக்கும் போது பூனை உயிரோடு இருந்தால் செத்துப் போன பூனை மீண்டும் உயிர் பெற்று வந்தது என்று அர்த்தம். செத்துப் போன பூனை எப்படி உயிரோடு வர முடியும்? வர முடியும் என்று சொல்லி நம்மை மேலும் குழப்புகிறார் ஹ்யூ எவரெட் என்ற அமெரிக்க விஞ்ஞானி. அதாவது ஒரு உலகத்தில் பூனை உயிரோடும் அதற்கு இணையான இன்னொரு (மாய)உலகத்தில் பூனை செத்துப் போயும் இருக்கலாம் என்கிறார் அவர் (Many world interpretation) சாரி நான் இந்த விளையாட்டுக்கு வரலை!

பூனையின் இணை உலகங்கள்


ஒரே துகள் எப்படி ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் (பல இடங்களில்) இருக்க முடியும் என்பதற்கான பதிலையும் ஹைசன்பெர்க் இன் நிச்சயமில்லாத் தத்துவமே தருகிறது. இந்த இடத்தில் தான் இருக்கிறது என்று சொல்லும் போது அதன் இருப்பிடத்தின் (position ) துல்லியத்தன்மை அதிகரிக்கிறது.அப்படியானால் அதன் உந்தம் (momentum ) நிச்சயமற்று கன்னாபின்னா என்று இருக்க வேண்டும்.

துகள் எல்லா பாதைகளிலும் பயணிக்கும் என்றால் அவற்றை எல்லாம் நாம் ஏன் உணர முடிவதில்லை? இது சாத்தியம் என்றால் யாரோ யாருக்கோ அனுப்பிய -மெயிலை நீங்கள் படிக்க முடியுமே? நாம் ஏன் உணர முடிவதில்லை என்றால் WAVE FUNCTION என்று இன்னொரு வார்த்தையை சொல்லி
நம்மை மேலும் குழப்புகிறார்கள்.

2+ 2 = 4 என்று சொல்லலாம் (2+ 2 = 4 தானே? நான் கணக்கில் கொஞ்சம் வீக்.)

இதை வேறு விதமாக 2+2 = 4 + 8 -8 என்றும் சொல்லலாம்

மேலும் 2+ 2 = 4 - 3 + 5 -3 +7 - 1 + 2 -7 என்று எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து கோடிக்கணக்கான வழிகளில் சொல்லலாம். எப்படி எழுதினாலும் ரெண்டும் ரெண்டும் நாலு தான். இது ஏன் என்றால் 'நான்கைத்' தவிர மற்ற எண்கள் எல்லாம் எப்படியோ ஒன்றை ஒன்று 'கான்சல்' செய்து கொண்டு விடுகின்றன. நான்குக்குப் பிறகு ஒரு கோடியை இணைத்தாலும் அதற்குப் பிறகு வரும் மைனஸ் ஒரு கோடியானது அதை கான்சல் செய்து விடுகிறது. நம் வாய்ப்பாட்டில் வரும் 4, -3, 5, 7, -7
என்பவையெல்லாம் WAVE -FUNCTION (அலைசார்பு) கள் . ஒரு துகளின் WAVE -FUNCTION ஆனது அந்தத் துகள் இன்ன இடத்தில் இருக்கலாம் என்பதற்கான சாத்தியத்தை நமக்கு சொல்லும். நாம் கவனிக்கும் ஒரு பாதையை விட்டு மற்ற கோடிக்கணக்கான பாதைகளில் இந்த அலைச் சார்புகள் கச்சிதமாக ஒன்றை ஒன்று கான்சல் செய்து விடுவதால் நாம் துகள் ஒரே ஒரு பாதையில் சென்றதாக உணர்கிறோம். ஸ்டீபன் ஹாகிங் அவர்களின் ஒரு புத்தகத்தில்(The grand design) இருந்து சுட்ட இந்த படத்தைப் பாருங்கள் .

படத்தில் மஞ்சள் அம்புகள் துகளின் வெவ்வேறு இருப்பிடங்களைக் குறிக்கும் அலைச்சார்புகள். நீலக் கோடு அந்த அலைச் சார்புகளின் கூடுதல் (sum )
இரண்டாம் படத்தில் உள்ள நீலக் கோடு மிகச் சிறியதாக இருப்பதைக் கவனியுங்கள். அலைச்சார்புகள் ஒன்றை ஒன்று கான்சல் செய்து கொள்வதால்
துகளின் ஒட்டுமொத்தப் பயணப்பாதை மிக மிகச் சிறியதாக உள்ளது



குவாண்டம் துகள்களின் இந்த அசாதாரண பண்பை (ஒரே நேரத்தில் நிறைய இடங்களில், ஒரே சமயத்தில் நிறைய செயல்கள் ) பயன்படுத்தி 'குவாண்டம் கம்ப்யூட்டர் ' எனப்படும் கணினியை செய்ய முடியுமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய நம் கணினிகள் நூற்றுக் கணக்கான ஆண்டுகள் எடுத்துக் கொண்டு செய்யும் கணக்குகளை குவாண்டம் கணினிகள் ஒரு நொடியின் ஆயிரத்தில் ஒரு பாகத்தில் செய்து விடுமாம். சாதாரண கம்ப்யூட்டரில் 'பிட்' என்று 0 மற்றும் 1
சொல்கிறார்கள். குவாண்டம் கணினியில் இது Qbit என்று அழைக்கப்படுகிறது .ஒரு பத்து அணுக்களை மட்டும் எடுத்துக் கொண்டால் ஒரே சமயத்தில் நமக்கு 2 ^10 அதாவது 1024 தனித்தனி நிலைகள் கிடைக்கும். இது எப்படி என்றால் ஒரு பிரச்சனையை 1024 இஞ்சினியர்கள் தனித்தனியாக அலசுவது போல. Interference
எனப்படும் இணைதல் தத்துவத்தைப் பயன்படுத்தி இந்த 1024 முடிவுகளையும் நம்மால் ஒன்றிணைக்க முடியும். நினைவில் கொள்ளுங்கள்: இந்த 1024 நிலைகளும் அந்த பத்து அணுக்களும் யாராலும் பார்க்கப்படாமல் பரம ஏகாந்தத்தில் இருந்தால் மட்டுமே சாத்தியம்.நாம் பார்த்து விட்டால் ஒரே ஒரு நிலை மாத்திரம் எஞ்சியிருக்கும்.
ஒரே ஒரு இஞ்சினியர் மாங்கு மாங்கு என்று வேலை செய்வதற்கு சமம் இது.ஒரு மெல்லிய நூலை அதிர்வுக்கு உள்ளாக்கும் போது
அது கற்றைகளாகப் பிரிந்து நிறைய இழைகள் தெரிகின்றன. ஆனால் நாம் அதைத் தொட்ட மாத்திரத்தில் ஒரே ஒரு இழை மட்டும் கைக்கு சிக்குவது போல! நமக்கு Output வேண்டும் என்றால் நாம் குவாண்டம் கணினியுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.ஆனால் நாம் தொடர்பு கொண்ட மாத்திரத்தில் அது தன் குவாண்டம் இயல்புகளை இழந்து விடும்! (ஒரு துகள் உணர்வியை வைத்ததும் திரையில் Interference pattern மறைந்து விடுவதை நினைவுபடுத்துங்கள்) கல்லைக் கண்டால் நாயக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்ற கதை தான்! அல்லது வாத்தை சாகடிக்காமல் குடுவையில் வெளியே எடுக்கும் கோவான் போன்றது இது.

ஆனாலும்
விஞ்ஞானிகள் குவாண்டம் கணினிகள் பற்றி இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். துகள்களுக்கு தாங்கள் கவனிக்கப்படுவது தெரியாமல் ஏதேனும் சின்ன சாவித்தாரத்தின் வழியே எட்டிப் பார்க்க முடியுமா? கோயில் நடை சாத்திய பின் அர்த்த ராத்திரியில் கர்ப்ப கிரகத்தின் சாவி துவாரத்தின் வழியே எட்டிப் பார்த்து அம்மன் ஆயிரம் கைகளுடன்
சிம்ம வாகனம் சகிதமாக ஆடிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியுமா என்பது அவர்களின் நப்பாசை.

குவாண்டம் இயற்பியல் மிகவும் 'போர்' அடிக்கிறதா? சரி இதை இங்கேயே விட்டு விட்டு கொஞ்சம் 'ரிலேடிவிடிக்கு' போகலாமா? பயங்கர சுவாரஸ்யமாக இருக்கும் ! காலம் , வெளி, ஒளி என்று!

இன்னும் அதிசயங்களுக்கு காத்திருங்கள்....


முத்ரா

Tuesday, June 7, 2011

ஊழல் ஜுஜுபி(கவிதைகள்)

மழை மோசம்
=============

இந்த மழை ரொம்ப மோசம்
இறங்கி நடக்கும் போது பலமாகவும்
ஒதுங்கி நிற்கும் போது
சன்னமாகவும் பெய்கிறது!

அவர்கள் போகட்டும்
=====================

அவர்கள் நிற்கமாட்டார்கள்
தங்கள் வாகனங்களை வேகம் குறைக்கவும் மாட்டார்கள்
சிவப்பு வண்ணக் காரைத் தொடர்ந்து
சாம்பல் வண்ணக் கார்
பின் வெள்ளை
வெளிர் நீலம் பின்
வெள்ளை ஜீப்புகள்
பேருந்துகள் பைக்குகள் என்று வந்து கொண்டே இருக்கும்!
அவர்கள் நிற்கமாட்டார்கள்
தங்கள் வாகனங்களை வேகம் குறைக்க
வும் மாட்டார்கள்
வெட்டிப்பயல்களான
நாம்
சாலை கொஞ்சம் காலியாகக் காத்திருப்போம்!
அவர்களுக்கு
அழியும் உலகத்தைக் காப்பது
இறந்து கொண்டிருக்கும் உயிர் ஒன்றை காப்பாற்றுவது
ஐன்ஸ்டீன் தியரியை பொய் என்று நிரூபிப்பது
போன்ற அதி முக்கிய அலுவல்கள் இருக்கலாம்
வெட்டிப்பயல்களான
நாம்
சாலை கொஞ்சம் காலியாகக் காத்திருப்போம்!

Little girls are wiser than men
=========================

இது என்ன என்று
என் மகள் கேட்டாள்
"லி
ப்ட்' என்றேன் பெரிமிதமாக
கீழே இறங்கும் போதும்
"லிப்ட்' தானா என்றாள்
என்னிடம் பதில் ஏதும் இருக்கவில்லை..

'கொள்' எனக் கொடுத்தல்
========================

பெறுவதற்கு மட்டும் அல்ல
கொடுப்பதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் போலும்
சில்லறைகளை துழாவி எடுப்பதற்குள்
சாலையைக் கடக்கக் தொடங்கி விடுகிறாள்
குழந்தையுடன் கையேந்திக் கொண்டிருந்த பெண்

தேவை
=======

தாத்தாவுக்கு பெரிதாகத் தேவை எதுவும்
இருக்கவில்லை
காலையில் சுக்கு காபி, கோயில் பூஜை முடிந்து வந்ததும் மிளகு ரசம்
இரவில் பால்
வருடம் ஒருமுறை திருப்பதி!
அப்பாவுக்கும் தான்
காலையில் செய்தித்தாள்
மதியம் பள்ளிக்கு உணவு கொண்டு போக வேண்டும்
மாலையில் வீடு திரும்பும் போது சூடாக பில்டர் காபி
சுஜாதா நாவல்கள்
குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு சில சமயம் டூர்
போஸ்ட் ஆபீசில் எங்கள் பெயரில் கணக்குகள்
அவ்வளவு தான்
நான் தான்
ஏனென்றே தெரியாமல் கார் ஒன்றையும்
முப்பது லட்சம் கொடுத்து வீடு ஒன்றையும்
வாங்கி விட்டு
முழு மாத சம்பளத்தையும் அவைகளுக்காய் அழுகிறேன்!

ஊழல் ஜுஜுபி
==============

ஊழல் ஊழல் என்று வேதனைப்பட்டு
தனிப்படை,வாரியம் எல்லாம் அமைத்து
கஷ்டப்படாதீர்கள்
ஒரு மேடை
கூட உட்கார்வதற்கு பத்து பேர்
நிறைய மீடியா
அப்புறம் கொஞ்சம் உண்ணாவிரதம்
இவையெல்லாம் இருந்தால்
ஊழல்
இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடப் போகிறது!

சுப்ரபாதம்
===========

ஞாயிற்றுக் கிழமைகளில்
சுப்ரபாதங்களைத் தடை செய்யுங்கள்
அதிகாலையில் எழுவது நல்லது தான்..ஆனால்
வாரம் முழுவதும்
உங்கள் வாடிய முகங்களைப் பார்த்து சலித்த கடவுள்
அந்த ஒரு நாளாவது
காலை பத்து மணிவரை
இழுத்துப் போர்த்தியவாறு படுக்கையில்
படுத்திருக்கும்
சுகத்தை அனுபவிக்கட்டும்!

முத்ரா


Friday, June 3, 2011

கலைடாஸ்கோப் -20

லைடாஸ்கோப் -20 உங்களை வரவேற்கிறது

திருவல்லிக்கேணி கண்டேனே
=============================

சென்னை திருவல்லிக்கேணி செல்லும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. பார்த்த சாரதி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்த்தால் ஒரு அரை நூற்றாண்டு காலத்தில் முன்னே பயணிப்பது போல ஒரு உணர்வு வருகிறது. பழமையான ஓட்டு வீடுகள், தெருவில் அலையும் பசுக்கள், கன்றுகள், 'இவ்விடம் ஹிந்தி கற்றுத் தரப்படும்' 'இவ்விடம் எல்லா பூஜை சாமான்களும் கிடைக்கும்' போன்ற போர்டுகள். அங்கே பெரும்பாலான கடைகள், மெடிக்கல் ஷாப்புகள், ஆஸ்பத்திரிகள் எல்லாவற்றின் பெயர்களும் 'பார்த்தசாரதி' என்றுதான் ஆரம்பிக்கின்றன . தெருக்களில் பட்டை நாமம் போட்ட அந்தணர்கள் மூன்று குணங்களில் அடங்காத கடவுளை மூன்று கோடுகளில் அடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

கிருஷ்ணன் போர்க்களத்தில் மொட்டை வெய்யிலில் நின்று கொண்டு அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்த போது மேலே ஏ.சி. இருந்ததோ இல்லையோ தெரியாது ஆனால் இப்போது பார்த்த சாரதி கோயிலில் குளு குளு என்று 20 டிகிரிக்கு
ஏ.சி. செய்திருக்கிறார்கள். எனக்கு நிறைய நாளாகவே ஒரு சந்தேகம் இருந்து வருகிறது:
அர்ஜுனன் ஒரு க்ஷத்திரியன். கிருஷ்ணன் ஓர் இடையன். இரண்டு பேருமே பிராமணர்கள் கிடையாது. ஏன் விஷ்ணுவின் அவதாரங்களில் வாமனர் மற்றும் பரசுராமரைத் தவிர யாரும் பிராமணர்கள் கிடையாது.அப்படி இருக்கும் போது கிருஷ்ணரும் ராமரும் எப்படி பிராமணர்களின் Copyright ஆனார்கள் என்று தெரியவில்லை.இப்போதெல்லாம்
பிராமணர்கள் என்று ஒரு இனம் இருப்பதாகவே தெரிவதில்லை..எல்லாரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ 'வைசியர்களாக' (வியாபாரிகளாக) இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. வேதம் படிக்கும் வர்ணத்தில் பிறந்திருந்தாலும் தன் மகன் வெளிநாடு சென்று டாலர் டாலராக சம்பாதிப்பதில் தான் இன்றைய மாமாக்களும் மாமிகளும் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கிறார்கள்.

பா.சா கோயிலில் கர்ப்ப கிருகத்தின் வெளியே நின்று கொண்டு அந்தணர்கள் கையில் அர்ச்சனைத் தட்டுகளுடன் ஸ்டாக் மார்க்கெட் பற்றியும், யாரோ தற்கொலை செய்து கொண்டது பற்றியும் லௌகீகம் பேசிக் கொண்டிருகிறார்கள். இத்தனைக்கு நடுவில் ஒரு ஆறுதல். வயதான பெண்மணி ஒருவர் கோயில் பிரகாரம் முழுவதும் (மற்றவர்களைப் பற்றி சட்டை செய்யாமல்)உருக்கமாக பாடிக் கொண்டு வந்தார்.'பார்த்த சாரதி உன்னை விட்டா எனக்கு யாருடா இருக்கா?' என்று சத்தமாகவே வழிபட்டார் (?) . அவர் தோற்றத்தைப் பார்த்ததில் உறவுகளால் கைவிடப்பட்டவர் போலத் தோன்றியது. காலில் இருந்த கட்டையும் பொருட்படுத்தாமல் பிரகாரத்தை சுற்றி வந்தார். பாடும் போது குரல் அபாரமாக இருந்தது. இந்த ஒரு பெண்மணிக்காகவாவது பார்த்த சாரதி திருவல்லிக்கேணியில் நிலைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

'நான் சொல்ல வருவதை
விட்டு
மற்ற-
எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறாய்'

என்பது கவிஞர் கனிமொழியின் கவிதை. அதே மாதிரி நாம் பகவத் கீதையில் கிருஷ்ணர் சொன்னதை விட்டு விட்டு வேறு எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம்.நேரம் இருந்தால் ஓஷோவின் 'பகவத் கீதை ஒரு தரிசனம்' (கர்ம யோகம்) படித்துப் பாருங்கள். உங்கள் கண்களில் தானாகவே கண்ணீர் பனிக்கும்.

துணுக்கு: பா.சா கோயிலின் நேர் எதிரே உள்ள ஒரு வீட்டின் கேட்டில் 'கடவுள் ஜாக்கிரதை' ' beware of God ' என்று ஒரு போர்டு தொங்குகிறது. Funny !


டிரஸ்-கோட்
============

ஆபீசுக்கு செல்லும் போது DRESS -CODE என்னவாக இருக்க வேண்டும்? முண்டா பனியன் மற்றும் ஷார்ட்ஸ் ஆகக் கூட இருக்கலாம். (என்னது?) ஆனால் இது இங்கே இல்லை. வேலை விஷயமாக கனடா போயிருந்த போது அங்கே சில பேர் இப்படி தான் ஆபீஸ் வந்தார்கள். வின்டரில் எவ்வளவு குளிரோ (-30 டிகிரி வரை போகிறது) அந்த அளவு புழுக்கம் சம்மரில் அங்கே இருக்கிறது
எனவே ஹாயாக அரை டிராயர் போட்டுக் கொண்டு தான் அங்கே ஆபீசுக்கு வருகிறார்கள்.(காலையில் வந்த உடனேயே TIM HORTENS எனப்படும் காபிக் கடையில் EXTRA LARGE கப்புகளில் காபி வாங்கிக் கொண்டு வந்து ஒரு மணிநேரம் சர் சர் என்று உறிஞ்சுவார்கள்.)

ஆனால் இங்கே இன்போசிஸ் போன்ற சில கம்பெனிகளில் வெளியே அக்னி நட்சத்திரம் கொளுத்தினாலும்
ஷூ, டை, பெல்ட், மற்றும் முழுக்கை சட்டையில் தான் வேலைக்கு வர வேண்டும் என்கிறார்கள்.சென்னை போன்ற நகரங்களில் இந்தக் கோலத்தில் பேருந்துகளிலும் , டூ-வீலர்களிலும் பயணிக்கும் இளை
ர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. பெண்கள் காற்றோட்டமாக சுடிதாரும் சேலையும் அணிந்து வருவதை அனுமதிக்கும் கம்பெனிகள் ஆண்களுக்கு மட்டும் ஏன் இந்த விதிமுறைகளை வைத்திருக்கின்றன? ஷூ, டை முதலியவை குளிர் நிறைந்த பனி பொழிகின்ற நாடுகளுக்காக ஏற்பட்டவை. வெளிநாட்டுக்கார்கள் இங்கே வந்தால் எவ்வளவு குறைவாக உடை அணிய முடியுமோ அவ்வளவு குறைவாக அணிந்து கொண்டுதான் நம் ரோடுகளில் திரிகிறார்கள்.. நாம் என்னடா என்றால் முழுக்கை சட்டையின் மேலே டை கட்டிக் கொண்டு அது போதாதென்று மேலே கனமான கோட் வேறு அணிந்து கொண்டு முட்டாள்தனமாக நடமாடுகிறோம்.

Brand name
============

போன வாரம் ஒரு கடையில் ஒரு மாங்கோ ட்ரின்க் வாங்கினேன்.. ஏன் இது வாங்கி வந்தாய்? 'Slice ' ஸோ 'Maaza ' வோ இல்லையா? என்று டென்ஷன் ஆகி கேட்டாள் அக்கா. ஸ்லைஸ்-சையும் மாஜாவையும் விட்டு வேறு வாங்குவது பெரும் குற்றம் போலிருக்கிறது. ஏதோ ஒரு பெயரில் இருந்த அந்த பானம் நன்றாகவே இருந்தது. Not bad ! இந்த BRAND NAME களால் அதே துறையில் இருக்கும் மற்ற கம்பெனிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன (அல்லது ஒடுக்கப்ப
டுகின்றன) என்பதை நாம் ஏனோ உணர்வதில்லை..இதே மாதிரி டி.வி என்றாலே அது சன் டி.வி தான் என்ற மனோபாவம் நமக்கு உருவாகி விட்டது. நீங்கள் ஒரு வீட்டுக்கு செல்கிறீர்கள்; அங்கே எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து 'மக்கள்' தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதீத விளம்பரங்களின் காரணமாகவோ இல்லை மக்களின் INERTIA எனப்படும் மாறுதலுக்கு தயங்கும் மனோபாவத்தாலோ நமக்கு இந்த Brand NAME மேனியா வந்து விட்டிருக்கிறது. ஒரு பிராண்டை சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தும் போது அது இடம் தெரியாமல் காணாமல் போவதற்கு தான் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன . இந்த Brand NAME மோனோபோலிகளால் அவை கடுமையான போட்டியை சந்திக்க வேண்டி இருக்கிறது.

'பபூல்' என்று ஒரு டூத் பேஸ்ட் வந்தது. 'கேமே' என்று ஒரு சோப்பு வந்தது நினைவில் இருக்கலாம்.அமிர்தாஞ்சனுக்கு முன்னே டைகர் பாம் நிற்க முடியவில்லை. சேவல் படம் போட்ட ஏதோ ஒரு கொசுவர்த்தி சுருள் உங்களுக்கு கனவு போல நினைவில் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீங்கள் நூறு வீடுகளுக்கு சென்றால் அதில் அறுபது வீடுகளில் 'கோல்கேட்' தான் வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியும். இங்கே கர்நாடகாவில் MTR தவிர வேறு சமையல் மசாலாக்களை யாரும் வாங்குவதில்லை.இதற்கு சில விதி விலக்குகள் இருக்கவே செய்கின்றன.உதாரணம் Mozilla Firefox எனப்படும் மொசில்லா நெருப்புநரி பிரவுசர். தனக்கு முன்னே ஏகபோகச் சக்ரவர்த்தியாக கோலோச்சிய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை பின்னுக்குத் தள்ளி இப்போது பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் உலாவியாக இருக்கிறது. (நெருப்புநரியில் நிறைய tab -களை நாம் திறந்து வைத்திருக்கும் போது எதிர்பாராமல் கம்ப்யூட்டர் Restart ஆகி விட்டால் மறு முறை திறக்கும் போது இந்த tab -களை மீண்டும் திறக்கிறது இந்த புத்திசாலி நரி! ) எனக்கு இப்போது கம்ப்யூட்டரில் 'e' என்று பாவமாக ஒரு ஐகான் இருப்பதே மறந்து விட்டது!

அடுத்த முறை ஒரு மாறுதலுக்காக 'surf-excel ' ஐ விட்டு விட்டு உங்கள் வீட்டுக்கு 'பொன்வண்டு' சோப்பு வாங்கி வாருங்கள் ( எச்சரிக்கை: பின் விளைவுகளுக்கு இந்த ப்ளாக் பொறுப்பல்ல)


முகுந்த் நாகராஜன்
====================

னின் கவிதைகளை நண்பர் ராஜகோபால் இ-மெயில் செய்திருந்தார் . அவற்றில் எனக்குப் பிடித்திருந்த சில கவிதைகள் கீழே:


* கை, கால், முகத்தை எல்லாம்
ஈரம் போக துடைத்துக் கொண்டேன்.
இந்த நாக்கை என்ன செய்வது.


* ஓடும் ரயிலில்
அடம் பிடித்து
வாங்கிய குழலில்
அதை விற்றவன்
வாசித்த பாடலை
சலிக்காமல்
தேடிக் கொண்டிருக்கிறது
குழந்தை.

* தோசை மாவை அரைத்து முடித்தாயிற்று.
மோட்டார் போட்டு தண்ணீரை
மேலே ஏற்றியாகி விட்டது.
எட்டு மணிக்குள் பாதுகாப்பான இடம் தேடி
உட்கார்ந்தாகி விட்டது.
8 ஆயிற்று.
மின்வெட்டு ஆகவில்லை.
8.01 ஆயிற்று.
8.02 ஆயிற்று.
பதட்டம் நீடிக்கிறது.


* இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா
வீடு இங்கேதான் இருக்கிறதாம்...
இதெல்லாம் ஒரு காரணமா?


இனி சமுத்ராவின் ஒரு கவிதை
================================

* நான் முகமற்றவன்
தனிமையில் ஒரு பாடலை முணுமுணுக்கும் போதும்
தூங்கச் செல்லும் போதும்
தூங்கும் போதும்
காலையில் விழித்தெழும் போதும்
பல் துலக்கும் போதும்
வீட்டை சுத்தம் செய்யும் போதும்
ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு புன்னகை செய்யும் போதும்
நான் முகமற்றவன்
செருப்பு மாட்டிக் கொண்டு
வெளியே கிளம்பும் போதுதான்
ஏதோ ஒரு முகத்தை
எங்கிருந்தோ எடுத்து
அவசரமாக மாட்டிக் கொள்கிறேன்!

இனி ஒரு ஓஷோ ஜோக்
========================


அன்ட்ரே மற்றும் மர்லின் இரண்டு பெண்கள் ஆப்பிரிக்கன் சபாரிக்கு சென்றிருந்தார்கள். பாரியை ரசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு கொரில்லா குரங்கு மர்லினை சாடாரென்று இழுத்துக் கொண்டு காட்டுக்குள் மாயமாக மறைந்து விட்டது. ஒரு வாரம் அவளை தன் குகையில் சந்தோஷமாக
வைத்திருந்தது. அன்ட்ரே ஊருக்குள் சென்று நாலு பேரை அழைத்துக் கொண்டு வந்து மிகவும் முயற்சி செய்து காடெல்லாம் தேடி ஒரு வழியாக மர்லினை கொரில்லாவிடம் இருந்து மீட்டு விட்டாள்.

மர்லின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள்.

பத்துநாள் கழித்து அவளை சந்தித்த அன்ட்ரே, "மர்லின், எப்படி இருக்கிறாய்? வாழ்வின் மிக மோசமான ஒரு அனுபவத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறாய்.இப்போது எப்படி உணர்கிறாய்?" என்றாள்

"என்ன சொல்வது? பத்து நாள் ஆயிற்று ..ஒரு லெட்டர் இல்லை..போன் இல்லை..ஒரு எஸ்.எம்.எஸ். கூட இல்லை" என்றாள் மர்லின்...



முத்ரா