இந்த வலையில் தேடவும்

Monday, February 29, 2016

கலியன் -4 (இறுதி)

பிரபாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது...கடிதம் நான் இதுவரை பார்த்திராத ஒரு லேசான மெடீரியல் -இல் இருந்தது.எழுதப்பட்டதா அச்சிடப்பட்டதா தெரியவில்லை.


படிக்க ஆரம்பித்தேன்.

"அன்பின் மகேஷ், ஸ்டீபன், ரகு,சந்துரு, வருண்..
 
நான் தான் பிரபா. ட்ரெக்கிங் -இல் இருந்து எங்கே காணாமல் போனேன் என்று நீங்கள் கவலைப்படுவது தெரியும். கவலை வேண்டாம். நான் இப்போது கலியனின் காலத்தில் இருக்கிறேன். கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பின்னோக்கி வந்திருக்கிறேன். இங்கே எல்லாமே எனக்கு விசித்திரமாய் இருக்கிறது. உங்களை , பெற்றோர்களை விட்டுப் பிரிந்த துயரம் ஒருபுறம்; புதியதொரு காலத்தில் அன்னியனாய் வந்து சேர்ந்த அவலம் ஒருபுறம். சொன்னால் நம்பமாட்டீர்கள். நான் இங்கே நிர்வாணமாக அழைத்து வரப்பட்டேன். எதிர் காலத்தில் இருந்து இறந்த காலத்துக்கு வரும் உற்பத்தி செய்யப்பட்ட எந்த ஒரு பொருளும் காலவெளி வளையத்தை உருவாக்கி விடும் என்பதால்.

இவர்களின் விதிப்படி என்னை இறந்த காலத்துக்கு கொண்டு வர ஒரு replacement ஆக கலியனை 21ஆம் நூற்றாண்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.கலியன் அத்தனை அப்பாவி அல்ல. நம்மிடம் இதைப்பற்றி மூச்சு விடவில்லை அவர்.

இங்கே காலதீதர் என்ற ஒரு விஞ்ஞானி இருக்கிறார். காலம்  மற்றும் வெளியின் சூட்சுமங்களை எப்படியோ அறிந்து வைத்துக் கொண்டு சர்வாதிகாரம் செய்கிறார். இங்கே ஓர் அரசர் இருந்தாலும் அவர் பெயருக்கு தான். இவர் தான் எல்லாம். எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் என்னை அழைத்து வந்திருக்கிறார்கள். நான் மிகுந்த சிரமப்பட்டு இந்த எதிர்காலத்துக்கு செய்தி அனுப்பும் வித்தையை இவர்களிடம் திருடி உங்களுக்கு செய்தி அனுப்புகிறேன். இது உங்களை வந்து சேரும் என்று நினைக்கிறேன். எனக்கு அதிக நேரம் இல்லை. மற்றவை அடுத்த கடிதத்தில்!"

எனக்கு கடிதத்தை படித்ததும் குழப்பம் தான் ஏற்பட்டது. இதெல்லாம் சாத்தியம் தானா?இல்லை யாராவது விளையாடுகிறார்களா?

கடிதத்தை பற்றி நான் யாரிடமும் சொல்லவில்லை.

இரண்டு நாள் கழித்து இன்னொரு கடிதம்.

"நான் தான் பிரபா, மீண்டும். உங்களுக்கு இன்னும் சில விஷயங்களை சொல்ல வேண்டும். நான் தான் உங்களுக்கு தகவல் அனுப்ப முடியுமே தவிர நீங்கள் எனக்கு அனுப்ப முடியாது. ஒருவழித் தகவல். இறந்த காலத்துக்கு தகவல் சொல்லும் டெக்யான் தொழில்நுட்பம் இன்னும் இவர்களுக்குப் பிடிபடவில்லை. இங்கிருந்து இவர்கள் கலியனை கட்டுப்படுத்தினார்கள். ஆனால் அவர் தன் பயண ரகசியத்தை யாரிடமோ கூற முற்பட்டதால் அவர் வாழ்க்கையை அலுங்காமல் முடித்து விட்டார்கள். 

இங்கே நான் நன்றாகவே இருக்கிறேன். செயற்கை தீண்டாத காலம். எல்லாமே அழகு. நான் கலியனின் மகள் கோதையை கல்யாணம் செய்து கொண்டேன். இந்த தேசத்தின் பெண்கள் மிக அழகு. கறுப்பழகிகள். நான் ஒரு விதத்தில் அதிர்ஷ்டசாலி தான். என்ன உங்களையும் அப்பா அம்மாவையும் மிகவும் மிஸ் செய்கிறேன். அவர்கள் இதை எந்த அளவுக்கு நம்புவார்கள் என்று தெரியவில்லை. முடிந்தால் இதைக் காட்டி நான் இன்னும் சாகவில்லை என்று சொல்லவும்!மற்றவை அடுத்த கடிதத்தில்!"


அன்று இந்த விஷயத்தை ஸடீபனிடம் சொன்னேன். கடிதத்தைக் காட்டினேன்.

"ஸம் ஒன் ஈஸ் ப்ளேயிங் அரௌண்ட் மகேஷ்!" என்றான்.

"பிரபாவை யாரோ கடத்தி இருக்காங்க. நம்ம கிட்ட இருந்து ஏதோ அவங்களுக்கு ஹ்யூஜ் அட்வான்டேஜ் இருக்கு. பிரபா இனிமேல் திரும்பி வர முடியாத இடத்துக்கு போயிட்டது போல நாடகம் ஆடறாங்க! "

எனக்குக் குழம்பியது.

"வி ஆர் ட்ரேப்ட் . அடுத்த குறி நம்ம யாரோ தான்! "

இதெல்லாம் என்ன? ஏன் எங்கள் வாழ்க்கையில் இத்தனை குழப்பங்கள்?பிரபா சாகவில்லையா? உண்மையில் அந்தக் காலத்துக்குப் போய் விட்டானா? எப்படிப் போனான்? 

"இந்தப் பெட்டிக்கு கடிதம் எப்படி வரதுன்னு வாட்ச் பண்ணுவோம்!" என்றான் ரகு.

மறுநாள் இரவு ஒவ்வொருவராக உட்கார்ந்து பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு விடிய விடிய காவல் காத்தோம். ஹூம். கடிதம் வரவில்லை.

இதற்காக ஆபீசுக்கு போகாமல் இருக்க முடியுமா? வீட்டுக்கு வந்ததும் மற்றொரு கடிதம் இருந்தது .ஒரு கடிதம் வந்ததும் அதற்கு முதலில் வந்த கடிதங்கள் காணாமல் போய் விடும்.

"நலம் தானே? நீங்கள் யாரும் அந்தப் பெட்டியைப் பார்க்காத போது தான் கடிதம் வரும். இதை குவாண்டம் டி -கொஹரன்ஸ் என்று ரகு சொல்லி இருக்கிறான். இன்னொரு விஷயம். முக்கியமான விஷயம். அங்கே உங்களுக்கு ஒரு மாதம் போனால் இங்கே எனக்கு ஒரு வருடம் போய் விட்டிருக்கும். இந்தக் கடிதங்களை நான் மாத இடைவெளிகளில் எழுதினாலும் உங்களுக்கு அது நாட்கள் இடைவெளியில் கிடைக்கும்!"
மற்றவை அடுத்த கடிதத்தில்"- கடிதம் குறுகியதாக அவசரத்தில் எழுதப்பட்டது போல இருந்தது.

இப்போது நாங்கள் எதையும் செய்ய முடியாதவர்களாக இருந்தோம். என்ன இது இப்படியெல்லாம் நடக்கிறது?

சந்துரு ஒரு ஐடியா சொன்னான். இந்தப் பெட்டியையே தீ வைத்து அழித்து விடலாம் என்றான். நான் போலீசில் எல்லா  உண்மைகளையும் சொல்லி விடலாம் என்றேன். ரகு பத்திரிக்கைக்கு சொல்லலாம் என்றான். "இறந்த காலத்தில் இருந்து வரும் இன்லண்ட் லட்டர்" என்ற தலைப்பை நான் கற்பனை செய்து பார்த்தேன். ஸ்டீபன் இதில் எதையுமே ஏற்கவில்லை. "இட்ஸ் இன்டரெஸ்டிங்..இது எதுவரை போகிறதோ அதுவரை போகட்டும் பார்க்கலாம் " என்றான்.

மற்றொரு கடிதம்.3 மாதம் கழித்து.

"நலமா? இங்கே என் ஞாபகங்களை அழித்து விடப் .போகிறார்கள். நான் முழுவதுமாக சங்ககாலப் பிரஜை ஆகப் போகிறேன். அதற்குப் பின் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியாது. அந்தப் பெட்டியும் மறைந்து விடும். என்னைப் பற்றி கவலைப் படாதீர்கள். நான் இங்கே அருமையாக இருக்கிறேன். எனக்கு இப்போது இரண்டு பெண் குழந்தைகள்! டேக் கேர்!"

நாங்கள் அந்தக் கடிதத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இன்னொரு மூன்று மாதம் கழித்து ஒரு கடிதம்.

"மகேஷ் மற்றும் நண்பர்களுக்கு. இது தான் என்னுடைய இறுதிக் கடிதம். நான் சொல்லப்போவதை மிக மிக மிகக்  கவனமாகக் கேளுங்கள். நான் இப்போது காலதீதருடன் நன்றாக நட்புக் கொண்டு விட்டேன். இப்போது தான் ஒரு அதிர்ச்சி கரமான தகவல் வெளியானது.கலியனை நம் காலத்துக்கு அனுப்பும் போது இவர்கள் ஒரு தவறு செய்து விட்டார்களாம்.இதனால் நம் எல்லாருடைய உலகக் கோடுகளிலும் (world line ) ஒரு வளையம் ஏற்பட்டு விட்டது. இது மிகவும் ஆபத்தானது. இதில் மாட்டிக் கொண்டால் அனந்த காலத்துக்கு முடிவில்லாமல் நடந்ததே நடந்து  கொண்டிருக்கும். வளையத்தின் தொடக்கத்துக்கு வரும் போது நம் ஞாபகங்கள் அழிந்து விட்டிருக்கும்!"

"ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் ஒரு எக்ஸிட் பாயண்ட் , ப்ரேக் பாயன்ட் இருக்கிறது. சி ப்ரோகாம் -மில் வருவது போல. அந்த எக்ஸிட் பாயிண்ட் வேறெதுவும் இல்லை. என் கடிதம் தான். ஒருவிதத்தில் நான் கடிதம் எழுதுவது இவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. அந்த எக்ஸ்சிட் பாயன்ட்-ஐ அனுமதிக்கத் தான் என்னை எதுவும் செய்யவில்லை. மற்றபடி நான் ஹிக்ஸ் பீல்ட் மூலம் எதிர்காலத்துக்கு தகவல் சொல்ல இங்கே அனுமதி இல்லை."

..

"எனவே இந்தக் கடிதத்தை படித்து முடித்ததும், வீட்டை காலி செய்து விட்டு, சென்னையை விட்டே, முடிந்தால் மாநிலத்தை விட்டே எங்கோ வடக்குப்பக்கம் சென்று விடவும். இது தான் ஒரே வழி . இந்த சாய்ஸ் ஸ்பேஸ் டைம் ப்ராஞ்சிங் உங்களுக்கு ஒரு இணை பிரபஞ்சத்தை திறந்து வழி விடும். இல்லையேல் நாமெல்லாம் முடிவில்லாத காலவெளிப் பள்ளத்தில் மாட்டிக் கொள்வோம். அது மரணத்தை விடக் கொடுமை. உடனே, உடனே, ஊரைக் காலி செய்து விடவும்!. குட் பை!"


நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

"புல் ஷிட்" என்றான் ஸ்டீபன்.

ரகு ஓனருக்கு போன் செய்தான்.

"என்ன செய்ற, ரகு?"- ஸ்டீபன்.

"வீட்டைக் காலி பண்ணனுமே?"

ஸ்டீபன் கடிதத்தைக் கிழித்தான். ஏனோ அது கிழியவில்லை. பெட்டியைத் தூக்கி சுவரில் வீசினான். சத்தம் வரவில்லை.

"வாட் நான்சென்ஸ், நம்ம இங்க வொர்க் பண்றோம். ஆபீஸ் நடந்து போகிற தூரத்துல இருக்கு.  நம் ரிலேடிவ்ஸ் இங்கே இருக்காங்க. நம் காதலிகள் இருக்காங்க. இதை எல்லாம் விட்டுட்டு எங்க போறதாம்? தயவு செஞ்சு எல்லாரும் வேலையைப் பார்ப்போம்!நம்ம தங்கம் எல்லாம் பணம் ஆனதும் எல்லாரும் துபாய்ல செட்டில் ஆகறோம். எங்க மாமா அங்க பைவ் ஸ்டார் ஹோட்டல் நடத்தறார்!"

"ஸ்டீபன், இதெல்லாம் உண்மை" என்றான் ரகு.

"போதும் உன்னோட டைம் ட்ராவல் நான்சன்ஸ், அண்ட் யுவர் ஸ்பேஸ்டைம் லூப் ஷிட். யாரோ நம்ம கூட விளையாடறாங்க...நம்ம யாரோவோட பகடைக்காய்கள்..இப்ப கூட இது நம்மை அவங்க இடத்துக்கு வரவழைக்கிற டெக்னிக்!"

"அப்படீன்னா, போல்லீஸ்ல சொல்லலாம்" என்றேன் நான்.

"நோ. பிக் நோ!"

"அவன் ஏன் இப்படி சொல்றான்னு தெரியும் மகேஷ் "என்றான் ரகு. "தங்கம், தங்கம்!"
 
"..."

"எங்களுக்குத் தெரியாம எத்தனை டா அடிச்ச?பேராசை பிடிச்சவனே!"

"ட்யூட், மைண்ட் யுவர் வேர்ட்ஸ்.."

இருவருக்குள் சண்டை மூண்டு சட்டையைப் பிடித்தார்கள். நானும் சந்துருவும் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்கள் இருவருக்கும் கேர்ள் பிரண்டுகள் விஷயத்தில் ஏற்கனவே தகராறு இருந்தது.

இருவரையும் தடுத்தோம்.

வீடு ஸ்டீபனின் பெயரில் தான் அக்ரீமெண்ட் ஆகி இருந்தது. நாங்கள் அவன் சொல்லைத் தட்ட முடியாது.  மேலும் அவன் இல்லாமல் எங்களால் தங்கத்தை பணமாக மாற்றவே முடியாது. இன்னும் 2 கிலோ தங்கம் மிச்சம் இருந்தது.
 
"நீ என்னடா சொல்ற?" என்றான் ரகு.
 
"அம் ஹெல்ப்லஸ் " என்றேன்.

ரகு தன் மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பி விட்டான்.

"நான் போறேன், இந்த ராஸ்களுடன் நான் இருக்க மாட்டேன். யூ ஆல் கெட் லாஸ்ட் இன் தி ஸ்பேஸ் டைம் லூப்"

"கெட் லாஸ்ட் " என்றான் ஸ்டீபன்.

அன்று இரவு பசிக்கக் தொடங்கியதும் ரகு திரும்பி வந்து விட்டான். எங்கே போவான்?! பசி வந்தால் பத்தும் பறக்குமே! சண்டை போட்டாலும் நண்பர்கள் அல்லவா. ஸ்டீபன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். "வெல்கம் டு ஷிட் அகைன்" என்றான்.

"நான் படித்த இயற்பியல் படி இதெல்லாம் சாத்தியமே இல்லை" என்றான் ரகு. "டைம் இஸ் லீனியர்"

"ஆல் செட்ட்ல்ட் ..இந்த கசப்பான சாப்டரை இத்தோட எல்லாரும் மறந்துருவோம்!"

மூன்று மாதம் கடந்தது. பிரபாவிடம் இருந்து அதற்குப் பிறகு கடிதம் வரவில்லை. அந்தப் பெட்டி எங்கேயோ மறைந்து விட்டது. எத்தனை தேடியும் கிடைக்கவில்லை.

ஆல் இஸ் வெல் .யாவரும் நலம். பிரபாவுக்கு திதி செய்தார்கள்.போய் வந்தோம். அவன் சங்க காலத்தில் இருக்கிறான் என்று சொன்னால் ஒருமாதிரி பார்ப்பார்கள். விட்டுவிட்டோம். லெட் ஹிம் பி டெட்.

பாருங்கள். இன்று வழக்கம் போல ஆபீஸ் கிளம்புகிறேன். வெள்ளிக்கிழமை. ஜாலி தான். இரவு ட்ரிங்க்ஸ் பார்ட்டி. !!! மதியம் எனக்குப் பிடித்த ஆந்த்ரா மீல்ஸ் ஆபீஸ் கேண்டீனில்.

தூங்கி விட்டேன் போலிருக்கிறது. அதுவும் டெஸ்க் -கிலேயே. மத்தியானம் சாப்பிட்ட ஆந்திரா மீல்ஸின் மயக்கம். கண்களைக் கசக்கிக் கொண்டு அருகில் இருந்த ஸ்மிதா-வைப் பார்த்து 'சாரி' என்றேன். "இட்ஸ் ஓகே டியூட்..கேரி ஆன் "என்று புன்னகைத்தாள் .இது என்ன வேறு ஏதோ ஒரு உலகத்தில் வாழ்ந்தது போல! கொஞ்சம் மங்கலாக ஏதேதோ நினைவில் இருக்கிறது. இதெல்லாம் உண்மையா? ஆம். பிரபாவுக்கு என்ன ஆயிற்று? ஈஸ் ஹி ஓகே !உடனே பிரபாவுக்கு போன் செய்து "உனக்கு ஒண்ணும் இல்லையே!?" என்றேன். அவன் குழம்பிப் போய் "என்னடா, இப்பவே சரக்கு போட்டுட்டியா? திடீர்-ன்னு கால் பண்ணி "உனக்கு ஒண்ணும் இல்லையே? ன்னு கேட்கிறே?என்றான்.
"ஒண்ணும் இல்லை!" என்றேன். "சரி, ஈவ்னிங் பார்க்கலாம், சீக்கிரம் வந்திரு!"
மீட்டிங் முடித்து விட்டு நானும் ரகுவும் கிளம்பினோம்.


.....


மணி இரவு 11:30. ஒரு பெக் உள்ளே போனதும் சிகரெட் தீர்ந்து விட்டதை உணர்ந்தோம். தெருக்கோடியில் இருக்கும் பெட்டிக்கடை ஒன்று சில சமயங்களில் திறந்திருக்கும். அங்கே போய் வாங்கி வரலாம் என்று நானும் பிரபாகரும் சென்றோம்.பேட் லக். கடை மூடி விட்டிருந்தது. சரி எதிர் பிளாட் பேச்சுலர்களிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று திரும்பி வந்தோம்.

பெட்டிக்கடை சந்தில் அவர் நின்றிருந்தார்....

....

8 comments:

வெற்றிவேல் said...

Oh... Lenior time closed loop aagiduchaa?

Nice story bro.

சிவசங்கர் said...

அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. உங்கள் எழுத்துக்கள் நன்றாக இருக்கிறது... தொடர்ந்தும் வரவேண்டும்...

நான் காத்திருக்கிறேன்

radha said...

மிகவும் அருமையான கதை உங்களின் இந்த பயணம் தொடர அந்த ஆன்டவனை வேண்டிக்கொள்கிறேன்

விஸ்வநாத் said...

interstellar படம் மாதிரி இருக்கு
ஏன்னா அந்த படமும் எனக்கு ஒன்னு புரியலே;
ஹிஹிஹி;

Vijayan Durai said...

சுத்துல வுட்டுடீங்களே !!!

Anonymous said...

(இறுதி) - Please Continue Blog ......, And Do Not QUIT .......

BASU said...


கலியன் அருமை!

https://www.youtube.com/watch?v=fVooyfaPYD8

"டைம் லூப்" பற்றிய சிறு புரிதல், மேலே உள்ள குறும்படம் மற்றும் கீழே குறிப்பிட்டுள்ள படம், தரக்கூடும்!

"Groundhog Day" movie

Anonymous said...

குப்பை