இந்த வலையில் தேடவும்

Monday, March 3, 2014

கலைடாஸ்கோப் -107

கலைடாஸ்கோப் -107 உங்களை வரவேற்கிறது.


ச.ப.பு :

மிஸ்டர் .போன்ஸ் - டாக்டர் .எம். பார்த்தசாரதி

இந்த நூலில் இடம்பெற்றுள்ள, எலும்புகள் பற்றிய சில சுவையான தகவல்கள்:


* ரத்த அணுக்கள் உருவாவது எலும்புகளில் தான். இதயம், மூளை, நுரையீரல் என அனைத்து உறுப்புகளுக்கும் Z பிரிவு பாதுகாப்பு அளிப்பதும் எலும்புகள் தான். எலும்புடன் ஒட்டியிருக்கும் தசைகள் மூளையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு எலும்புகளை இயக்குகின்றன. ஆனால் அந்த  தசைகளுக்கு பிடிமானமே எலும்புகள் தான்.

* 70 கிலோ எடை கொண்ட உடலை தரையில் நிலைநிறுத்தும் பாதத்தின் நீளம் ஒன்பது/பத்து அங்குலங்கள் மட்டுமே. ஒரு தலைசிறந்த கட்டடக் கலைஞரால் கூட சாதிக்க முடியாத விஷயம் இது. 28 எலும்புகளால் ஆன ஒரு ஆர்ச் வடிவ மேடையே நம் பாதம்.தட்டை வடிவ துடுப்பு போன்று நம் பாதம் இல்லை.

* குதிகால் தோலுக்கு மேல் ஒருவித ஸ்பெஷல் கொழுப்பு இருக்கிறது.இப்படிப்பட்ட ஸ்பெஷல் கொழுப்புடன் சேர்ந்த தோல் குதிகாலில் மட்டுமே உண்டு.உடம்பின் வேறு பகுதிகளில் தோலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தொடைப் பகுதியில் இருந்து சிறிது தொலை எடுத்து அந்த இடத்தில் பொருத்திவிட முடியும். ஆனால் குதிகால் தோலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினம்.

* ஆர்த்தோ டாக்டர் என்பவர் எலும்புக்கு மட்டும் அல்ல. எலும்பு அதைச் சார்ந்த தசைகள், நரம்புகள் ஆகியவையும் அவரது எல்லைக்குள் வருபவை தான். அதே சமயம் மண்டையோடு முழுவதும் எலும்புதான் என்றாலும் அதில் ஏற்படும் சிக்கல்களை நியூரோ சர்ஜன் தான் சரி செய்வார். தாடை எலும்புகள் சம்பந்தபப்ட்ட பிரச்சினைகளை சிறப்பு பல் டாக்டர் அல்லது பிளாஸ்டிக் சர்ஜன் சரி செய்வார்.

* மூட்டு மாற்று என்பது முழங்கால் மூட்டுப் பகுதி முழுவதையும் மாற்றுவது அல்ல. மூட்டின் மேல்தளத்தை மட்டுமே மாற்றுவது.

* சில எலும்பு முறிவுகளை ஒரு எக்ஸ் -ரே வில் கண்டுபிடிப்பது கஷ்டம். அதனால் ஒரு டாக்டர் ஒரு முறை ஒரு பொஷிஷனில் எக்ஸ்-ரே எடுத்து விட்டு எலும்பு முறிவு எதுவும் இல்லை என்று சொல்லலாம்.பிறகு வேறு ஒரு டாக்டர் வேறு ஒரு கோணத்தில் எக்ஸ்-ரே வோ சி.டி .ஸ்கேனோ எடுத்து எலும்பு முறிந்திருக்கிறது என்று சொல்லலாம்.எனவே மூன்று கோணங்களில் எக்ஸ்-ரே இரண்டு மூன்று முறை எடுத்துப் பார்த்து உறுதி செய்து கொள்வது நல்லது.

* ஆண்களுக்கு 18 வயது வரையும் பெண்களுக்கு 16 வரையும் எலும்புகள் வளர்கின்றன. இந்த வளர்ச்சி மில்லி மீட்டர் மில்லி மீட்டராக gradual ஆக இல்லாமல் திடீரென்று வளர்ந்து பின் நின்று விடுவது பின்னர் திடீரென்று வளர்வது என்று வளர்கிறது.இதனால் குழந்தைகள் திடீரென்று உயரமாகி விட்டதாக உணர்கிறோம்.


*************

இந்த தர்மம், தானம், அறம் , கொடை ,etc இவைகளைப் பற்றி கொஞ்சம் சிந்திக்கலாம்.இவைகளைப் பற்றி பேசாத தமிழ் நூல்களே கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லலாம்.சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை  என்கிறது திருக்குறள்.


தமிழ் இலக்கியங்களில் உள்ள ஒரு irony என்ன என்றால் இரவு மற்றும் இரவச்சம் என்பன இரண்டுமே இடம் பெறுவது தான்.

இரவச்சம் என்றால் ஒருவரிடம் சென்று ஒன்று கொடு என்று கேட்பதற்கு நாணுவது.

மேலே அப்படிச் சொன்ன வள்ளுவர் இரவச்சத்தில் 

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து 
கெடுக உலகியற்றி யான்.

என்கிறார். 
(பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக)

ஐயமிட்டு உண் என்று சொல்லி விட்டு பின் ஏற்பது இகழ்ச்சி என்று சொல்வது!!!

லாஜிகலாகப் பார்த்தால் ஒருவருக்கு தானம் கொடுப்பது என்பது அவரது பெருந்தன்மையை இழிவுபடுத்துவதாகும். மேலும் அவரை இன்னும் சோம்பேறியாக்கும் முயற்சி! ஆனாலும் கோயிலுக்குப் போய் விட்டு வெளியே வரும்போது கிழிந்த உடைகளுடன் கையேந்தும் கிழவியைப் பார்த்து விட்டு இப்படியெல்லாம் யோசிக்கக் தோன்றுவதில்லை. உடனே சில்லறையைத் தேடுகிறோம். ஒருவருக்கு மீனை தானமாக அளிப்பதற்குப் பதில் மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்கிறது ஒரு பொன்மொழி. இந்த விதத்தில் பார்த்தால் எல்லா தானங்களையும் விட ஒருவர் கல்வி கற்பதற்கு நாம் உதவி செய்வதே பெரிய தானம் என்று தோன்றுகிறது. பின்னாளில் காலத்திற்கும் அவர் தன் சொந்தக் காலில் நிற்பதற்கு நாம் உதவுகிறோம்.

ஒருவர் ஏன் தானம் செய்கிறார்?

* புண்ணியம் வேண்டி. இப்போது தானம் செய்தால் சொர்க்கத்தில் ஊர்வசி டான்ஸ் பார்க்கலாம் என்ற நப்பாசை.

* நச்சரிப்பைத் தவிர்க்க. தர்ம சங்கடத்தைத் தவிர்க்க. இல்லை என்றால் அய்யா தர்மப்ரபு நாலு நாளா சாப்பிடலை என்று நச்சரித்தபடி பின்னால் வருவார்கள். 

* உண்மையான கழிவிரக்கத்தில். பார்த்தால் பாவமாக இருக்கிறதே என்ற கருணையில்.

* தானம் தர்மம் செய்யும் போது அது நம் ego வை ஒருவிதத்தில் பூர்த்தி செய்கிறது.

* மற்றவர்கள் பார்ப்பார்கள் பாராட்டுவார்கள் என்ற ஆசையில். 

* அன்றாடம் நாம் செய்யும் சின்னச் சின்னப் பாவங்களை தற்காலிகமாக புண்ணியமாக மாற்ற ஒரு  முயற்சி.

 

அவ்வையாரின் சுவையான பாடல் ஒன்று

காரைக்கால் ஆள்வான் என்பவன் மகாக் கருமி. அவனிடம் பொருள் நாடி வரும் புலவர்களை எல்லாம் நாளை வா நாளை வா என்று சொல்லியே காலம் கடத்துகிறான். அவனுக்கு பாடம் புகட்ட நினைத்த அவ்வை, அவன் மாளிகைக்கு செல்கிறாள். அவ்வையாரை நன்கு வரவேற்று ஆசனத்தில் அமரச் செய்த ஆள்வான்  இத்தகைய அரிய தமிழ் மூதாட்டிக்கு என்ன பரிசு கொடுத்தாலும் தகும். நாளை வாருங்கள் ஒரு யானையை தானம் தருகிறேன் என்கிறான். அவ்வையும் அடுத்த நாள் போகிறாள். அது பாருங்க இந்த வயசான காலத்தில் யானையை எப்படி சமாளிப்பீர்கள்? எனவே குதிரை ஒன்று தயாராய் இருக்கிறது. நாளை வந்ததும் வாங்கிக்கலாம் என்கிறான். அவ்வை மறுநாள் வருகிறாள் . அது வந்து, பாட்டி!குதிரை வேகமாப் போகும் அதில் ஏறி நீங்கள் விழுந்து கிழுந்து விட்டால் ? எனவே நல்ல கறவை எருமை ஒன்று ரெடி. நாளை வந்தால் கையோட இழுத்துட்டுப் போகலாம் என்கிறான். அவ்வை சலிக்காமல் மறுநாள் வருகிறாள்.இப்போது ஆள்வான், எருமையை நீங்க குனிஞ்சு நிமிர்ந்து எப்படி கறப்பீர்கள் ? அதனால் ஒரு முடிவு பண்ணி விட்டேன். நல்ல புடவை ஒன்று தந்து விடுகிறேன். உங்களுக்காக சிறப்பாக நெய்யச் சொல்லியிருக்கேன் நாளை வந்து விடுங்கள் என்கிறான். அவ்வை மறுநாள் போகிறாள். என்ன இது கிழவி புரிந்து கொண்டு போய் விடுவாள் என்று பார்த்தால் மீண்டும் மீண்டும் வருகிறாளே என்று ஆள்வான் தாங்க முடியாத வயிற்று வலி என்று வேண்டுமென்றே படுத்து விடுகிறான். வேலையாளை விட்டு அவ்வையிடம் எஜமானுக்கு வயித்து வலி, நாளை வாங்க! என்று சொல்லச் சொல்கிறான். அவ்வை பாடுகிறாள்:

கரியாகிப் பரியாகிக்  காரெருமை தானாகி
எருதாகிப் முழப் புடவையாகி - திரித் திரியாய்
தேரைக் கால் பெற்று மிகத் தேய்ந்து கால் நோய்ந்ததே
காரைக் கால் ஆள்வான் கொடை !

இதைப் பாடியதும் அவனுக்கு உண்மையிலேயே வயிற்று வலி வந்து விடுகிறது. 'கிழவி போய் விட்டாள் எஜமான்; நடித்தது போதும்'என்று வேலையாள் சொல்லியும் அவனுக்கு வலி நின்ற பாடில்லை. அப்படியே வீட்டைப் பூட்டாமலேயே ஓடிப் போய் அவ்வையின் காலில் விழுகிறான்; உன்னிடம் தானம் கேட்டு நடந்தவர்களின் கால் வலி தான் இன்று உனக்கு வயிற்று வலியாக வந்தது என்று சொல்கிறாள் அவ்வை.

"இன்று என்பாரிலும் நாளை என்பாரிலும்
இல்லை என்பார் மிக நல்லோரே"


 

************
All the World's a stage - Shakespeare

...
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்றை  நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா?  -பாரதிதாசன் 


தமிழை இயற்றமிழ் , இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்று பிரித்திருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உரைநடைத் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ்!

தமிழ் உரைநடைக்கு மிகவும் ஏற்ற மொழி என்று சொல்வார்கள். தெலுங்கு இசைக்கும், கன்னடம் நாடகத்துக்கும். தமிழ் உரைநடைக்கு ஏன் ஏற்றதாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்!

* தமிழ் எழுத்து நடைக்கு ஒரு standard form இருப்பது. பேச்சில் பல மாறுபாடுகள் இருந்தாலும் எழுதும் போது எல்லாரும் ஒரே மாதிரி எழுதுவது.

* சொற்றொடர்கள் உயிர்மெய் எழுத்துகளில் பெரும்பாலும் நிறைவு பெறுவது.

* சமஸ்கிருதம் போன்ற மொழிகளைப் போல ஒரு எழுத்துக்கு வெவ்வேறு அழுத்த உச்சரிப்புகள் இல்லாமல் இருப்பது.

* வல்லின எழுத்துகள் அதிகம் உபயோகப்படுவது

இதனால்தான் இயற்றமிழ் முதலில் வருகிறது போலும். தமிழ் இசைக்கு அவ்வளவாக ஏற்ற மொழி அல்ல என்று சொன்னால் சில பேர் அடிக்க வருவீர்கள்.

நாடகம் தமிழில் மட்டும் அல்ல. எல்லா மொழிகளிலும் பெரும்பாலும் மறைந்து போய்  விட்டது. பெங்களூருவில் சில அரங்கங்கள் 500, 1000 ரூபாய் டிக்கெட்டுகளுக்கு நாடகங்களை அரங்கேற்றுகின்றன. அப்பர் கிளாஸ் மட்டுமே அனுபவிக்க முடியும். தெருக்கூத்து எல்லாம் வரலாறு ஆகி விட்டது!

ஷேக்ஸ்பியர் சொல்வது போல உலகமே நாடக மேடை என்று எடுத்துக் கொண்டால் தினம் தினம் free யாகவே நாடகம் பார்க்க முடியும்! நானாடி பதுகு நாடகமு!!!


*******************

Do not take Silence as an insult - It's not!

ஆங்கிலத்தில் இந்த இரண்டு வார்த்தைகள் உள்ளன. Introvert மற்றும் Extrovert !

ஒருவரை நாம் வெகு சுலபமாக 'முசுடு, உம்மணா மூஞ்சி, மண்டைக்கனம், என்றெல்லாம் சொல்லி விடுகிறோம். ஒருவர் தன் energy யை எப்படி செலவிட விரும்புகிறார் என்பதைப் பொறுத்தே இந்த வரையறைகள் அமைகின்றன. ஒருவர் மற்றவர்களுடன் சகஜமாகப் பழகுவதன் மூலம் மகிழ்ச்சி அடைகிறார். இன்னொருவருக்கு தனியாக இருப்பதில் அதிக மகிழ்ச்சி. ஒருவர் introvert என்று எப்படித் தெரிந்து கொள்வது. மேலோட்டமாக

* பத்து பேர் சேர்ந்திருக்கும் இடத்தில் யார் மிகக் குறைவாக அல்லது கடைசியாகப் பேசுகிறாரோ அவர்.

* எப்போது escape ஆகலாம் என்ற சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பவர்.

* மற்றவர் சொல்வது தவறு என்று தெரிந்திருந்தும் எதற்கு வம்பு என்று அதை பெரும்பாலும் ஆமோதிப்பவர்.

* ம்ம்,,,ஆமாம்,,, சரி,,,அது தான்,,,யா யா (தனுஷ் ஏதோ ஒரு படத்தில் சொல்வாரே) , யெஸ் , என்று ஓரிரண்டு வார்த்தைகளில் பதிலை முடித்து விடுபவர். புதிதாக டாபிக் ஒன்றைத் தொடங்காதவர் .

* அதிக expressions காட்டாதவர். ( ரகுவரன் போல ). ஜோராகப் பேசாதவர்.

* ஏழெட்டு பேர் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தால் ஏதோ ஒன்றை படித்துக் கொண்டோ பார்த்துக் கொண்டோ நோண்டிக் கொண்டோ இருப்பவர்.இவற்றை வைத்து ஒருவர் முசுடு என்றோ பழகத் தெரியாதவர் என்றோ socialize செய்யத் தெரியாதவர் என்றோ முடிவு கட்டி விடுவது முட்டாள் தனம்.

* அவரது topic of interest வேறாக இருக்கலாம்.

* தகுந்த சூழ்நிலையில், தகுந்த இடத்தில், காலத்தில் தேர்ந்தெடுத்த நண்பர்களுடன் அவர் பேச்சில் வெளுத்துக் கட்டுபவராக இருக்கலாம்.

* அவர் மிகச் சிறந்த listener ஆக இருக்கலாம். தேவையில்லாமல் வார்த்தைகளைப் பேச விரும்பாமல் இருக்கலாம்.

* ஒருவருடன் பேசிப் பழக நேரம் எடுத்துக் கொள்பவராக இருக்கலாம். முதன் முறை சந்தித்த உடனேயே ஓட்டை வாய் போல எல்லாவற்றையும் கொட்டி விடுவதில் இஷ்டம் இல்லாதவராக இருக்கலாம்.


மேலும், ஒவ்வொருவருக்கும் அவரது personal space ஒன்று உள்ளது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப் பொய்யார் பெறும் பேறத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா....

-திருவாசகம்

யதக்ரே த்றுஸ்யன்தே தஶஶரபலாஃ பாதயுகலீ
னகாக்ரச்சன்மானஃ ஸுர முகுட-ஶாணைக-னிஶிதாஃ

-ஐந்து அம்புகள் கொண்ட மன்மதன் சிவனை வெல்ல, உன் கால்களையே அம்புறாத் தூணியாய் செய்தான்;  உன் பாதத்தின் விரல்கள் பத்து அம்புகள்; அதன் விரல் நுனிகள் உன்னை வணங்கும் தேவர்களின் கிரீடங்களினால் கூராக்கப்பட்டனவோ - சௌந்தர்ய லஹரி

பிரம்ம கடிகின பாதமு 
பிரம்மமு தானெனி பாதமு - அன்னமையா 

உனது பாதம் அடடட இலவம் பஞ்சு 
-திரைப்படப் பாடல் 

முத்து சிறி புரந்தர விட்டல நின்னடி மேலே 
பித்து கொண்டிருவ எனகேகே பயவு  - புரந்தர தாசர் 

நம் உடம்பில் மிகக் குறைவாக கவனிக்கப்படும் உறுப்பு எது என்றால் பாதம் எனலாம். முதல் பகுதியில் சொன்னது போல பாதம் தான் நம்மை சதா தாங்குகிறது.அதுவும் நாம் ஓடும்போது உந்தத்தால் ஏற்படும் கூடுதல் எடையையும் (கிட்டத்தட்ட இரண்டு மடங்கு) தாங்குகிறது.

அதீத அழகுணர்ச்சி உள்ளவர்களால் அன்றி பாதம் பொதுவாக கவனிக்கப் படுவதில்லை!செருப்புக் கடையில் சென்று செருப்பு வாங்கும்போது மட்டுமே என்ன இவ்வளவு வெடிப்பா என்று பார்க்கிறோம்.

கடவுளுக்கு கண்களை விடவும், கைகளை விடவும், இந்தப் பாதமே அதிகம் புகழப்படுகிறது என்று தோன்றுகிறது.   பாதத்தைப் புகழாத பக்தி இலக்கியமே கிட்டத்தட்ட இல்லை எனலாம்.கடவுளின் பாதம் என்பது ஒரு metaphor போலும் !! கடவுளின் பாதத்தில் வீழ்வது சரணாகதியை உணர்த்துகிறது. எல்லா முயற்சிகளும் பொய்த்து விட்ட, எல்லா உதவிகளும் நின்று விட்ட, எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டு விட்ட இனி அவனைத் தவிர ஒரு புகல் இல்லை என்னும் நிலை.

ஒருவரது காலில் விழுவது நம்மைத்  தாழ்த்திக் கொள்வதைக் குறிக்கிறது. அது மறைமுகமாக, வார்த்தைகளால் சொல்லப் பட்டாலும் கூட! உன் கால்ல வேணா விழறேன் , கையை காலா நினைச்சிக்கோ போன்ற சீரியல் வசனங்களை அடிக்கடி கேட்டிருப்பீர்கள்.

காதலில் பாதத்தை வர்ணிப்பது கொஞ்சம் குறைவு தான் என்று தோன்றுகிறது. தாமரை போன்ற பாதம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். உடலில் மிகக் கீழான இரு இடத்தில் இருப்பதால் அதற்கு இயற்கையாகவே கடைசி இடம். பாதத்தில் முத்தமிடுவது சரி. I like you as a whole package என்று சொல்லாமல் சொல்வது. ஆனால் பாதத்தின் மீது ஏற்படும் அதீத விருப்பத்தை உளவியல் foot fetishism என்று சொல்லி தனிப்படுத்தி விடுகிறது.

எனது காலணிகளைப் பற்றிய உங்கள் பெருமை என்று ஒரு ad வருகிறது. ஒரு நடிகையின் காலணிகள் பற்றி நமக்கு என்ன பெருமை இருக்க முடியும்?stupid !

ஓஷோ ஜோக்

முல்லா நசுருதீனின் மனைவி ஒரு சமையல் புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு முதன் முறையாக சமைக்கத் தொடங்கினாள் .

முல்லா மாலையில் வீடு திரும்பியதும் அவரை கண்ணீருடன் வரவேற்றாள்.

'என்ன ஆச்சு?' என்றார் முல்லா.

'அன்பே, ரொம்ப வருத்தமா இருக்கு. உங்களுக்காக இன்று நான் ஆசை ஆசையாய் சமைத்த சிக்கன் பீஸை பூனை தின்று விட்டது. இப்படி ஆயிருச்சே' என்றாள் அழுது கொண்டே.

முல்லா, "சரி, சரி,வருத்தப்படாதே, நாளைக்கு வேற பூனை ஒண்ணு வாங்கிக்கிட்டா போச்சு" என்றார்.

சமுத்ரா 


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பிச்சை இடுவதில் கூட பேதம் உண்டு...!

இன்றைக்கு பாதம் தான் அதிகம் கவனிக்கப்படுகிறது... ஏனென்றால் இனிப்பானவர்கள் அதிகம் ஆகிக் கொண்டிருப்பதால்...!

எலும்புகள் பற்றிய தகவல்களுக்கு நன்றி...

கரந்தை ஜெயக்குமார் said...

எலும்புகள் பற்றிய தகவல்கள் அருமை
நன்றி

G.M Balasubramaniam said...

எல்லா செய்திகளும் ரசிக்க வைத்தது. எல்லாமே நன்றாக இருந்தது கண்ணனைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். இன்னும் வெளியிடவில்லை. நானும் கால்களைப் பார்த்து எழுதி இருக்கிறேன் கடவுளென்றால் நினைவுக்கு வருவது கால்கள் தானோ.?

இரசிகை said...

vazhakkam pola nalaa irunthuchu
vazhthukal.