இந்த வலையில் தேடவும்

Friday, January 17, 2014

கலைடாஸ்கோப் -104

கலைடாஸ்கோப் -104 உங்களை வரவேற்கிறது.

Login ....

6-5=2 என்று கன்னடத்தில் ஒரு பேய்ப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. 6 பேர் (இரண்டு பெண்கள் உட்பட) மைசூருக்கு அருகில் ஒரு மலை மேல் ட்ரெக்கிங் செல்கிறார்கள். இரவுக்குள் மலை ஏற முடியாததால் இரவில் ஒரு இடத்தில் டென்ட் போட்டுத் தங்குகிறார்கள்.துரதிர்ஷ்ட வசமாக ,அவர்கள் தங்குவதற்குத் தேர்ந்தெடுத்த அந்த இடத்தில் ஒரு மரத்தில் பேய்கள் ஆணியில் அறையப்பட்டு அடைக்கப்பட்டிருக்கின்றன. அதை அவர்கள் கவனிப்பதில்லை. பாட்டும் கும்மாளமுமாக இரவைக் கழிக்கிறார்கள் எப்படியோ வெளியே வரும் பேய், ட்ரெக் சென்றவர்களில் ஐந்து பேரை ஒவ்வொருவராக வெவ்வேறு விதங்களில் ரூம் போட்டு யோசித்து கொலை செய்கிறது. திரைப்படம் முழுவதும் ட்ரெக் செய்பவர்களில் ஒருவரான ரமேஷ் என்பவரது HD கேமெராவில் பதிவு செய்யப்பட்ட  வீடியோ காட்சிகளாக எடுக்கப்பட்டுள்ளது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது .6 பேரில் ஒருவர் மட்டும் காய்ச்சல் வந்து காட்டுக்குள் ட்ரெக் செய்யாமல் பாதியிலேயே வெளியேறி விடுவதால் பேயிடமிருந்து தப்பிக்கிறார். லாஜிக் இல்லாமல் கடைசியில் வெள்ளை ட்ரெஸ் + கண்களுக்கு கருப்பு மை அணிந்த பேய் வரும் பேய் படங்களில் இதுவும் ஒன்று. சும்மா time -pass க்கு ரசிக்கலாம்.


btw , மக்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. நுரையீரல் ஸ்பாஞ் போன்ற மென்மையானது என்பது உட்பட எதையும் யாரும் சீரியஸாக  எடுத்துக் கொள்வதில்லை. ஸ்க்ரீனில் பேய் வரும் போது சிரிக்கிறார்கள். கமெண்ட் அடிக்கிறார்கள். ஹ்ம்ம் :( 21st செஞ்சுரியில் எல்லாருக்கும் குளிர் விட்டுப் போய் விட்டது போலும் ! பேய்ப்படம் பார்த்து விட்டு அன்று இரவு பாத் ரூமுக்கு அம்மாவை கூட்டிப் போகும் பசங்களும் இன்று வழக்கொழிந்து விட்டனர் போலும்! சின்ன வயதில் வா அருகில் வா படம் பார்த்து ஒரு மாதம் மந்திரித்து விட்ட கோழி போல் திரிந்தது ஞாபகம் வருகிறது.  ஒரு திரைப்படத்தின் தாக்கம் நம்மிடையே அதைப் பார்த்து முடித்த சில நிமிடங்களுக்கே (ஏனோ) நீடிக்கிறது. ஒரு படத்தின் வெற்றி அதன் தாக்கம் நம்மிடையே எத்தனை நாள் நீடிக்கிறது என்பதை வைத்தே அளவிடப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். பேய்ப்படம் பார்த்து விட்டு நம் வீட்டிலும் பேய் வந்து விடுமோ என்றெல்லாம் பயப்படும் ஆசாமிகள் இன்று இல்லை என்று தெரிகிறது. பொதுவாக ரொமாண்டிக் படம் ஒன்று பார்த்தால் நாமும் இப்படி இருக்கலாம்; ரொமான்ஸ் செய்யலாம் என்று தோன்றும். ஹாலிவுட் சண்டைப்படம் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த நொடிக்கு நம்மை ஹீரோவாக ஜாலியாக  imagine செய்து கொள்வோம். இது அந்த படத்துடன் ஹீரோ ஹீரோயினுடன் ஏற்படும் ஒரு தற்காலிக association அவ்வளவு தான். படம் முடிந்து வெளியே வந்ததும் இயல்பு வாழ்க்கையின் எதார்த்தம் நம்மை தொற்றிக் கொள்கிறது.இ .எம்.ஐ, பாலன்ஸ் சீட், ஆடிட்டிங், வீக்லி ரிப்போர்ட் , கஸ்டமர் மீட்டிங் கவலைகள் நம்மை மீண்டும் தொற்றிக் கொள்கின்றன. இன்று நம் முன்னே பேய் வந்தால் நாம் பயப்படுவதை விட முதலில் ஆச்சரியப் படுவோம் என்றே தோன்றுகிறது.

A subject for a great poet would be God's boredom after the seventh day of creation.
-Friedrich Nietzsche   

[உலகத்தைப் படைத்து விட்டு கடவுள் என்ன செய்திருப்பார் என்பது கவிதைக்கான நல்ல கற்பனை... வாசகர்கள் முயற்சிக்கலாம்.!

ஒரு ஹைக்கூ உதாரணம்:

உலகைப் படைத்து விட்டு 
கடவுள் கண் மூடினார் 
திறந்து பார்த்த போது 
உலகம் அழிந்து விட்டிருந்தது!]

6-5=2 என்பது என்ன கணக்கு என்று தெரியவில்லை. may be , தப்பித்து வரும் ஒரு நபருடன் பேய் கூட வந்து விடுகிறதோ என்னவோ?
இந்த தப்புக்கணக்கு  சித்தாந்தம் உளவியலில் 2+2=5 என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.(consensus reality ). ஓஷோ பின்வரும் உளவியல் சோதனையை செய்யச் சொல்கிறார். ஒரு ஏழெட்டு பேர் கொண்ட நண்பர்கள் குழுவில் யாரேனும் ஒரு victim ஐத் தேர்வு செய்யவும். ஒரு நாள் குழுவில் உள்ள மற்ற நண்பர்கள் அவரிடம் 'ஏய் , உனக்கு என்ன ஆச்சு, டல்லா தெரியற? உடம்பு சரியில்லையா' என்று சும்மானாச்சும் கேட்க வேண்டும். முதலில் ஒருத்தர் ரெண்டு பேர் கேட்கும் போது அவர் சும்மா லைட்டாக  விட்டு விடுவார்.அதெல்லாம் இல்லையே . நல்லா தான் இருக்கேன் என்று  அதையே நான்கைந்து பேர் கேட்கும் போது அவர் உண்மையிலேயே களைப்பாக, நோய் வந்தது போல உணர ஆரம்பிக்கிறார். சில சமயம் அவருக்கு உண்மையில் நோய் கூட வந்து விடுகிறது!!! நிறைய பேர் சொல்லும் போது , நிறைய பேர் நம்பும் போது அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று நம் மனம் நம்ப ஆரம்பித்து விடுகிறது. உண்மையில் நாம் நன்றாகத்தான் இருக்கிறோம், 2+2=4 என்று நம் உள் மனதுக்குத்  தெரியும்.ஆனால் இத்தனை பேர் சொல்வதால் ரெண்டும் ரெண்டும் ஐந்தோ ஒருவேளை மாத்திட்டாங்களோ என்று கூட நினைக்கத் தோன்றும்.ஹிட்லரின் mass hypnotism ! 

நோய் ஏற்படுவது மட்டும் அல்ல. நம்பிக்கையால் நோய் குணமாகவும் செய்கிறது. இதை faith healing என்கிறார்கள். அல்லது Placebo ட்ரீட்மென்ட்! ஏதோ கலர் கலராக வைட்டமின் மாத்திரைகளை கொடுத்து இதை விடாமல் சாப்பிடுங்கள் ; குணமாகி விடும் என்று பெரிய பெரிய வியாதிகளை குணப்படுத்துவது. பெரிய பெரிய அறுவை சிகிச்சைகளைக் கூட இந்த முறையில் செய்திருகிறார்கள்.சும்மா பெரிய பெரிய கருவிகள் மானிட்டர்கள் நர்சுகள் எக்ஸ்பெர்டுகள் , ஹெட் லைட் எல்லாம் நோயாளியை சுற்றி நின்று கொண்டிருப்பார்கள்.  நோயாளியை semi -conscious ஆக வைத்திருப்பார்கள். நர்ஸ் அந்த போர்செப்ஸ் எடுங்க, டைலேடர் கொடுங்க ரிட்ராக்டர் கொடுங்க  என்று சும்மனாச்சும் பேசிக் கொள்வார்கள். முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்வார்கள்.அறுவை சிகிச்சை மட்டும் நடந்தே இருக்காது. ஆச்சரியமாக சில நாட்களில் நோயாளி குணமடைந்து விடுவார்!

Tinkerbell effect என்று ஒன்று உள்ளது. மக்கள் நம்புவதாலேயே சில விஷயங்கள் இருக்கின்றன என்று அது சொல்கிறது.உதாரணம் உங்கள் கையில் இருக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டு. உண்மையில் அது வெறும் காகிதம்.அதன் உண்மை மதிப்பு 50 பைசா இருக்கும் அவ்வளவு தான் . ஆனால் அதற்கு 1000 ரூபாய் மதிப்பு எப்படி மதிப்பு வருகிறது? பத்திரமாக பர்சில் வைத்துக் கொள்கிறீர்கள்? அடிக்கடி இருக்கிறதா என்று பார்க்கிறீர்கள்? வாங்கும் போதும் கொடுக்கும் போதும் கவனமாகக் கொடுக்கிறீர்கள்? மாஸ் ஹிப்னாடிஸம் !!

நிற்க...

ஒரு கவிதை..ஹிஹி 

உன் 
இடையைக் காட்டி 
என்னை 
'ஹிப்' நாடிஸம் செய்கிறாய்! 

Youtube இல் ஒரு வீடியோ பிரபலம் ஆவதும் ஒரு புத்தகம் best seller ஆவதும்  டிங்கர் பெல் விளைவு தான். நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள் நாமும் பார்க்கலாமே என்று சில பேர் பார்க்கிறார்கள். அது அதை மேலும் பிரபலமாக்குகிறது.விளம்பரங்கள்,  டிரைலர்கள் எல்லாம் இந்த TB effect ஐ ஏற்படுத்தும் முயற்சி தான்.

 Reverse effect இதற்கு இருக்கிறது என்கிறார்கள். ஒன்றின் மீதுள்ள அதீத நம்பிக்கையே சில சமயம் எதிர் மறையான விளைவுகளைக் கொடுத்து விடுகிறது. உதாரணம் ஒரு குறிப்பிட்ட endemic வியாதிக்கு ஒரு குறிப்பிட்ட மருந்து நன்றாக குணமளிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அப்போது நிறைய மக்கள் அதை எடுத்துக் கொள்வார்கள். நிறைய பேர் எடுத்துக் கொள்ளும் போது அந்த நோய்க்குக் காரணமான நுண்ணுயிரி அதற்கு எதிர்ப்பு சக்தியை சுலபமாக வளர்த்துக் விடுகிறது. அப்போது அந்த மருந்து அந்த நோயை குணப்படுத்தும் தன்மையை இழந்து விடுகிறது.இந்த சீசனில் கூட்டம் இருக்காது என்று ஒரு இடத்துக்கு போனால் அப்படியே எல்லாரும் நினைத்து அங்கே வந்து விட்டிருப்பதால் கூட்டம் நிரம்பி வழிகிறது. reverse effect !

தாமஸ் என்ற சிந்தனையாளர், 'If men define situations as real, they are real in their consequences" என்கிறார். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தமிழில் சொல்வதானால் சந்தர்ப்பங்கள் உண்மை என்று கொண்டோம் என்றால் அவைகளின் விளைவுகள் உண்மையாகவே இருக்கும். இன்னும் புரியவில்லை என்று சொன்னால் சின்ன வயதில் கேட்ட புலி வருது கதையை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.

நம்பிக்கை அதானே எல்லாம் என்று பிரபு சொல்வது கொஞ்சம் உண்மை தான். குழந்தை ஒன்று எல்லா விஷயங்களையும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே கற்றுக் கொள்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் பகுத்தறிந்து சோதனை செய்து ஏற்றுக் கொள்ளும் அளவு அதனிடம் அறிவோ பக்குவமோ இருப்பதில்லை.அந்த ரூமில் பூச்சாண்டி இருக்கான் என்றால் அப்படியே நம்பி விடுகிறது. வளர்ந்த பிறகும் கூட மனிதன் பூச்சாண்டி போல பல விஷயங்களை 'நிறைய பேர் நம்புகிறார்கள்; அதனால் அது உண்மை தான்' என்று ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விடுகிறான்.கார்ப்பரேட் சாமியார்கள் நாட்பட்ட வியாதிகளை குணப்படுத்துவதும் இதே சமாசாரம் தான்.

இதைத்தான் புத்தர் 'சரியான புரிந்துணர்வு (சம்ம சதி) என்று அழைக்கிறார்.
மற்றவன் சொல்கிறான், வேதம் சொல்கிறது , விஷ்ணு சஹஸ்ர  நாமம்

பரமம் யோ மஹத்தேஜஃ பரமம் யோ மஹத்தபஃ |
பரமம் யோ மஹத்-ப்ரஹ்ம பரமம் யஃ பராயணம்

என்று சொல்கிறது. எனவே விஷ்ணு தான் தெய்வம்.

குரான்  பிஸ்மில்ல இர் ரஹீம் ம நிர் ரஹீம் என்று சொல்கிறது . அல்லா தான் கருணையுள்ளவன் இதையெல்லாம் நம்பாதே என்கிறார் புத்தர் . சம்ம சதி, உனக்குள் தேடலை மேற்க்கொள் ; கடவுள் என்று ஏதேனும் தென்படுகிறதா  பார் ; objective ரியாலிட்டி இருக்கிறதா பார் என்கிறார் புத்தர்.


சரி. தத்துவம் போதும். கொஞ்சம் கணக்கு பேசலாம்.

2+2= 5 :)
ஒரு பையன்  sin 2X = 2 sin X cos X என்று நிரூபி என்ற question க்கு

LHS x 0 = RHS x0

LHS = RHS என்று விடை எழுதினானாம்.

இந்த நிரூபணத்தில் உள்ள ஆதாரமான பிழை என்ன என்று கண்டுபிடியுங்கள். பூஜ்ஜியத்தால் வகுப்பது! இதன் படி நாம் 6-5 =2 என்றும் நிரூபிக்கலாம் :)

இதை Mathematical Fallacy என்கிறார்கள்.இப்படி 1=2, 1=0 என்பதற்கெல்லாம் நிரூபணங்கள் கிடைக்கின்றன. சிம்பிள். ஒரு நேர் முழு எண்ணுக்கு (positive integer ) இரண்டு வர்க்க மூலங்கள் இருக்கும் என்பதால் இந்த அபத்தங்கள் வருகின்றன.இதன் மூலம் எல்லா எண்களும் சமம் தான் என்று நிரூபிக்கலாம்.

1=1
√1 = √1
-1 = 1
2=0
4=2  (add 2)
4= 0 (since 2=0)


சரி... 1+1 =2 என்பது LKG பாப்பாவுக்கு கூடத் தெரிகிறது. ஆனால் 1+1=2 என்பதற்கு நிரூபணம் ஏதாவது இருக்கிறதா என்றால் surprisingly இல்லை!!
இதை கணிதம் axioms என்கிறது.axiom என்றால் மேலும் பகுக்க முடியாத மேலும் பகுதிகளாக விளக்க முடியாத அனைவரும் அறிந்த உண்மை. இந்த இடத்தில் தான் கொஞ்சம் இடிக்கிறது. ஒட்டு மொத்த கணிதமும் இயற்பியலும் இந்த axiom களின் மேல் நிற்கிறது. சில common sense களின் மேல் இது இப்படித்தான் இதை நிரூபிக்க முடியாது மேலும் உள்ளே டைவ் செய்ய முடியாது என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. உதாரணம் a + b = b + a. இதை நம்மால்  மறுக்க முடியாது. நிரூபிக்கவும் முடியாது. 2+3 = 3+2 என்று சொல்லியெல்லாம் நிரூபிக்க முடியாது. இரண்டு ஆடுகளுடன் மூன்று ஆடுகளை சேர்த்தாலும் மூன்று ஆடுகளுடன் இரண்டை சேர்த்தாலும் ஒரே மாதிரி எண்ணிக்கை தான் கிடைக்கும் என்கிற common sense ஐ மட்டுமே நம்பி இது உண்மை என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.மேலும் a=b, b=c என்றால் a =c என்று சொல்வது. குவாண்டம் இயற்பியல் இந்த axiom களை அடிமட்டம் வரை சென்று ஓரளவு விளக்குகிறது அல்லது விளக்க முயல்கிறது. நாக்கில் சர்க்கரை வைத்தால் இனிக்கிறது. ஏன் என்று இன்று ஒரு சயின்டிஸ்ட்-இற்கும் தெரியாது!

கடவுளும் இந்த மாதிரி ஒரு axiom தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
வாழ்க்கையின் ஒரு funny விதி என்ன என்றால் complex things cannot be proved ; Simple ones too ! தாயுமானவர் சொல்வது போல கடவுள் என்பது  மன வாக்கு எட்டா சித்துரு ! 


நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய்
   நிறைவாய் நீங்காச்                          
சுத்தமுமாய் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை
   சுடராய் எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
   மனவாக் கெட்டாச்
சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச்
   சிந்தை செய்வாம்

பல சமயங்களில் இந்த assumption உண்மையாய் இருந்து விடுகிறது. ஆனால் சில சமயம் தவறாக ஆகி விடுகிறது. உதாரணமாக இரண்டு புள்ளிகளை குறைந்த தூரத்தில் இணைக்கும் ஒரு வடிவம் நேர்க்கோடாக இருக்கும் என்று ஜியோமெட்ரி சொல்கிறது. ஆனால் நவீன இயற்பியல் இரண்டு புள்ளிகளை குறைந்த தூரத்தில் இணைக்கும் வடிவம் நேர்க்கோடாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது.எனவே முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகி விடுகிறது!சரி. chemistry பற்றியும் கொஞ்சம் பேசி விடலாம். நமீதா மாஸ்டர் சொல்லும் கெமிஸ்ட்ரி அல்ல! ஸ்கூலில் கெமிஸ்ட்ரி மட்டும் பயங்கர அலர்ஜியாக இருந்தது. அதுவும் மத்தியான சாப்பாட்டுக்குப் பிறகு முதலில் வரும் பீரியட் கெமிஸ்ட்ரி என்றால் கேட்கவே வேண்டாம்.கெமிஸ்ட்ரியில் இரண்டு ஆதார சங்கடங்கள் இருந்தன. ஒன்று சமன்பாடுகளை balance செய்வது. இன்னொன்று சேர்மங்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வது. மெக்னீசியம் சல்பைட் மோனோ ஹைட்ரேட் , சில்வர் டெட்ரா ப்ளுரோ போரேட் என்றெல்லாம்! இன்னும் இரண்டு practical சங்கடங்கள் chemistry lab இல் இருந்தன. ஒன்று , கொடுக்கப்பட்ட உப்பை நுகர்ந்து, சுவைத்து, தொட்டுப் பார்த்து,தடவி, சூடாக்கி, அதில் கலந்து, இதில் முக்கி கிட்டத்தட்ட அதனுடன் குடும்பமே நடத்தி கடைசியில் அது என்ன பொட்டாசியம் பெர்மாங்கனேட்டா சோடியம் குரோமேட்டா என்று யுரேகா என்று கத்தாத சொல்வது. அடுத்து solution  எப்போது நிறம் மாறுகிறது என்று கண்களில் பினால்ப்தலின் சாரி எண்ணெய் விட்டுக் கொண்டு கரெக்ட்டாக பியூரெட் ரீடிங் பார்ப்பது! நான் ரெண்டையும் தப்பாகவே செய்தேன். !!!

இப்போதெல்லாம் ஸ்கூலில் இதேதான் இருக்கிறதா இல்லை advanced ஆகி விட்டதா தெரியவில்லை. +2 படிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்.பழச் சாறுகளில் pH கண்டுபிடிப்பது, டீ யின் அசிடிடி கண்டுபிடிப்பது, தண்ணீரில் பாக்டீரியா content கண்டறிவது என்றெல்லாம் வந்து விட்டதாக அறிகிறேன். சரி.

நானோ புடின் (Nanoputian )என்று ஒரு ஆர்கானிக் மூலக்கூறு இருக்கிறது. இதன் specialty என்ன என்றால் இதன் வடிவம் ஒரு மனிதன் நடனமாடுவதைப் போல இருக்கிறது.சும்மா FYI ...
டை ஹைட்ரஜன் ஆக்ஸைடு என்று இன்னொரு சேர்மம் இருக்கிறது. ரொம்ப nasty .நிறம் அற்றது. எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் வேதியியல் பண்புகளைக் கொண்டது. அமைதியாக இருந்து கொண்டே சில சமயம் பேராபத்து தரக் கூடியது. மனிதனுக்கு பெரும்பாலான நோய்கள் வரக் காரணமானது.சில சமயம் மரணத்தைக் கூட உண்டு பண்ணுகிறது.  பொதுவாக ஒருவரை எரித்து விடவும் உறைய வைக்கவும் வல்லமை கொண்டது.சில ஆர்கானிக் மூலக்கூறுகளுடன் இணைந்து கார்போனிக் அமிலங்களை உருவாக்கி மரங்களையும், சிற்பங்களையும் , நம் பொக்கிஷங்களையும் அரித்து அழிக்க வல்லது.கொஞ்சம் ஆற்றல் கொடுத்து உசுப்பி விட்டால் ஒரு நகரத்தையே துவம்சம் செய்யக் கூடியது.

அது பொதுவாக 'தண்ணீர்' (என்று அழைக்கப் படுகிறது!!! :)

*****
சில கவிதைகள்!

சந்தோஷ் என்பவரின் ப்ளாக்கில் (tumblr )இருந்து .கற்பனைகள் வித்தியாசமாய் இருக்கின்றன.நிலாவுக்கு 
branches உண்டு 


எனக்காக என்று எண்ணிக்கொண்டிருந்தேன் !
அவளுக்காகவும் என்னை பார்க்க வந்திருக்கிறாள் !
நிழல் - தெரியாத உண்மை …வெளிச்சம் - தெரியும் பொய் …
எங்கோ எவளோ என் கண்களால் ரசிக்கப்படாமலேயே ஒவ்வொரு நொடியையும் கழித்துக் கொண்டிருக்கிறாள் !
நான் ஒன்னு சொல்லுவேன் ஆனா நீ நம்பக்கூடாது !
கண்ணனின் female versionனடி நீ ! 
இன்றை இன்றே கொன்றுவிடுங்கள் நாளை வரை காத்திருப்பதாக இல்லை !
கண்ணில் படவேண்டும் என்பதற்காகவே மறைந்திருக்கிறாள் …
அவள் உடல் மிருகம் … கண்கள் பேய் …
என் விழிகளில் அவள் மட்டும் 24 frames/sec ல் கடப்பதில்லை …
அவளை ரசிக்க இன்னும் இரு கண்கள் வேண்டும் … அவள் கவனிக்காதபடி …
நான் எதை பார்க்க வேண்டும் என்பதை வெளிச்சம் நிர்ணயக்கின்றது …
அவள் விழி கடிகாரத்தில் இரண்டே நொடிகள் … இரவு மற்றும் பகல் …
வளர வளர நம்ம கிட்ட இருக்கிற குழந்தைத்தனம் மறைவது மட்டுமில்லாம … எப்படி குழந்தைகள் கிட்ட நடந்துகனும் என்பதையும் மறந்துவிடுகிறோம் 
ஒவியனின் கைஎழுத்து அழகா இருக்கனும்னு அவசியம் இல்ல …

ஓஷோ ஜோக் 

முல்லா நசுருதீன் எப்போதும் வள வள என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.

ஒருநாள் முல்லாவின் நண்பர் ஒருவர் ' முல்லா நீங்கள் ரொம்பப் பேசுகிறீர்கள்' என்று குற்றம் சாட்டினார்.

முல்லா, "இயற்கையாகவே அது வந்து விட்டது, ஏனென்றால் என் அப்பா ஒரு அரசியல் வாதி; மேலும் என் அம்மா ஒரு பெண்" என்றார்.log -off 


சமுத்ரா 

5 comments:

Anonymous said...

so your mother is also a "woman" ,,,,,,,,

இரசிகை said...

அது பொதுவாக 'தண்ணீர்' (என்று அழைக்கப் படுகிறது!!! :)

thoppi.. thoppi..


vishayangal therinjukkathaan inthap pakkam varren naan..:)

vazhthukal.

திண்டுக்கல் தனபாலன் said...

கணக்குகளுக்கு நன்றி... கணக்கு கவிதையும்...!

Raja Singh said...

வழக்கம் போல் பதிவுகள் அருமை. தொடருக

Anonymous said...

Excellent Sir.
தொடர்ந்து எழுதுங்கள் கலைடாஸ்கோப் படிக்க வந்து ஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் இங்கு நிறைய பேர் வாசிக்கிறார்கள் ஆனால் கமென்ட் போடுவதில்லை நானும். இதுதான் முதல் தடவை கமென்ட் போடுகிறேன்.