இந்த வலையில் தேடவும்

Monday, January 7, 2013

சில கவிதைகள் ...

 இலக்கு...

*பல்துலக்கி, முகம் கழுவி,
உடை அணிந்து,
தலைவாரி,
பவுடர் பூசி ,
காலணியை அணிந்து 
கொண்டேன் .
.
..
எங்கே போகிறேன் என்றுதான் 
தெரியவில்லை...


சங்கம்..

*சங்கமே இல்லாத ஜாதியில் பிறந்து 
விட்டேன்
நான் செய்யும் தொழிலுக்கும் ஏனோ 
சங்கம் இல்லை போங்கள் ..
கவிதை எழுதுவோர் சங்கத்தில் 
சேரலாம் என்றால் அது சுட்டுப் போட்டாலும் வராது 
பெண்ணாகப் 
பிறந்திருந்தால் மாதர் சங்கமாவது இருந்திருக்கும் 
ரோட்டரியில் சேரும் அளவு பணம் இல்லை..

என்னவோ போங்கள் 
நாயாகக் கூட பிறந்திருக்கலாம்..
எனக்கென்று குறைந்த பட்சம் 
ப்ளூ க்ராஸ் -ஆவது இருந்திருக்கும்!

 மொழி 


* இருபத்து ஆறே எழுத்துகளுடன் 
ஆங்கிலம்  உலகை ஆள்வதை சொல்லி 
பெருமைப்பட்டார் நண்பர் ஒருவர்...
பாவம் 
அவருக்கு இன்னொரு தெய்வீகமொழி ஒன்று 
ஏழே எழுத்துகளுடன் 
பிரபஞ்சத்தை  ஆள்வது தெரியவில்லை... 

 கவிதை...

* ஸ்ட்ரக்சுரலிசம் , போஸ்ட் மார்டனிசம் 
எக்ஸிஸ்டென்ஸியலிசம் , மார்டனிசம் 
ட்ரான்ஸ் பிக்சன் 
இவை எதுவும் 
இல்லாவிட்டாலும் 
அழகாய்த்தான் இருக்கிறது 
ஒரு குழந்தையின் 
புன்னகைக் கவிதை....

* என்னைக் கவிதை எழுது 
என்று வற்புறுத்தாதீர்கள்...
காலக்கெடு கொடுக்காதீர்கள் 
அது அதற்குரிய காலத்தில்தான் 
பிரசவிக்கப்பட வேண்டும் 
என் கவிதை ஒரு 
குறைப்பிரசவக் குழந்தையாய் இருப்பதை 
நான் விரும்பவில்லை..

பஞ்சம்...

* 'எங்களின்  உடைகளை தீர்மானிக்க 
நீங்கள் யார் ? உங்கள் பையன்களை சரியாக 
வளருங்கள் ' என்ற பதாகையை 
தாங்கி செல்கிறாள் நகரத்து மாடர்ன் பெண் ஒருத்தி..

சரிதான் அம்மா..
பஞ்சம் தலைவிரித்தாடும் பிரதேசம் ஒன்றை 
நீ உனது  ரொட்டிகளை கவனமாக 
ஒளித்து வைத்துக் கொண்டு கடப்பது  தான் 
புத்திசாலித்தனம்....

கனவு..

* டி .வி விளம்பரத்தில்  வருமே ...
பூசிக் கொண்டதுமே எங்கிருந்தோ 
அழகு யுவதிகள் கிளம்பி வந்து 
'செக்ஸி 'யாக கழுத்தைக் கட்டிக் கொள்ளும் 
'டியூடரன்ட் ' 
அதை  நானும் வாங்கி 
அடித்துக் கொண்டு நம்பிக்கையுடன் தெருவில்  நடந்தேன் 
என் மீது 
காக்கா எச்சம் போய் விட்டது....

ஆர்டிகிள்

* பத்திரிகை ஒன்றில் இருந்து உடனே 
ஆர்டிகிள் ஒன்று கேட்டார்கள்..
அகநானூறு பாடல் ஒன்றுக்கு 
விளக்கம் எழுதட்டுமா என்றேன் 
பாஷோவின் கவிதைகளை 
விளக்கி எழுதட்டுமா என்றேன் 
'பூச்சிகளின் அதிசய உலகம்?
ஊஹும்..
'மாயன் கணிப்பு பொய்த்தது ஏன்?'
behaviorism??
வேண்டாம்,,
அதெல்லாம் வேண்டாம் சார்.
இப்போ வந்து வசூலில் சக்கைபோடு போட்ட 
பிரபல சினிமா ஒன்றை 
கண்டபடி திட்டி ஒரு ஆர்டிகிள் கொடுங்க சார்'
என்றார்கள்..
 
காணாமல் போனவர்கள்..

*விளம்பரங்கள் எடுத்துக் கொண்டுவிட்ட 
டி .வி .உலகில் 
காணாமல் போனவர்கள் பற்றிய 
அறிவிப்புகளும் காணாமல் போய் விட்டன...
ராமசாமி  வயது நாற்பத்து ஆறு.
மாநிறம்.உயரம் ஐந்து அடி மூன்று அங்குலம் 
கண்ணுக்குக் கீழ் தழும்பு 
காணாமல் போன அன்று 
மஞ்சள் நிற சட்டை அணிந்திருந்தார்..
..
காவல் துறைக் கட்டுப்பாட்டு அறை 
...


ஹோட்டல்..

* ஹோட்டலில் நான்  ரவா மசாலா தோசையும் 
அவன் ஆனியன் ஊத்தப்பமும் வாங்கிக்கொண்டு 
எதிரெதிரே அமர்ந்தோம் 
நான் அவனது  ஊத்தப்பத்தையும் 
அவன் எனது ரவா மசாலாவையும் 
சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்..

*ஹோட்டலில் அவன் காபி குடித்துக் கொண்டே 
When I was in UK என்று பேசிக் 
கொண்டிருந்தான் ...
பார்னெட், பெக்ஸ்லே  ,கிரீன்விச்,மெர்டன் 
நியூ பிரிஜ் ,கில்கில் 
எல்லாம் அத்துப்படியாம்...
அழுக்கு உடை அணிந்த ஒரு ஆசாமி 
அவனை நெருங்கி 
'மகு,பசவன்குடி போர்த் கிராஸ் எல்லி இதே?
என்றதும் 
தெரியாது என்று அவசரமாகத் தலை அசைத்தான்..

அம்மா...

 *

மொறுமொறு என்று தோசை நான்கு 
சாப்பிட்டாய் விட்டது...
மனம் இன்னும் ஒன்று வேண்டும் என்று 
கேட்டுக் கொண்டிருக்கும் போதே எழுந்து விட்டேன்..
'டேய், அந்த சட்னிக்கு அளவா இன்னொன்னு 
போட்டுக்கோ ' என்று ஒன்றை வைக்கிறாள் அம்மா.
இதற்கு தான் அம்மா வேண்டும் என்பது...


கிருஷ்ணன்..

* நகப்பழம் , விரலில் வழித்த 
வெண்ணை , கொய்யாப்பழம் 
பாலில் நனைந்த அவல் 
என்ன ஒரு combination ...!
கிருஷ்ணா நீ பிறந்ததற்கு 
நன்றிகள்...


சமுத்ரா...



18 comments:

Aba said...

நல்லாயிருக்கு...

#மொழி, கவிதை(1), பஞ்சம், கனவு சூப்பர். காணாமல் போனவர்கள்: புரியவில்லை

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதைகள்! பஞ்சம் கவிதை செம கலக்கல்! பகிர்வுக்கு நன்றி!

அருணா செல்வம் said...

அனைத்தும் அருமை.. அருமை!

Tamil CC said...

அத் தெய்வீகமொழி எது ?

G.M Balasubramaniam said...


கவிதைகள் ஒவ்வொன்றையும் படிக்கும் பொழுது இதழ்களில் முறுவல் மலர்கிறது. இது சிறந்தது அது சிறந்தது என்று சொல்லத் தோன்றவில்லை. சில கவிதைகள் படிப்பவருக்கு எல்லாம் தெரியும் என்று assume செய்வதுபோல் தெரிகிறது. வாழ்த்துக்கள். என் அழைப்பை நீங்கள் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. நினைவுபடுத்துகிறேன்.

சமுத்ரா said...

தெய்வீக மொழி சங்கீதம்
ஏழு ஸ்வரங்கள்...

பால கணேஷ் said...

இலக்கு. பஞ்சம். அம்மா. ஆர்ட்டிகிள் ஆகிய கவிதைகள் மிக ரசிக்க வைத்தன. மற்றவையும் நன்றே.

jeevagv said...

அனைத்தும் அருமை, சமுத்ரா!

Anonymous said...

pancham kavithai super naasookku

Anonymous said...

neengal eluthiya kavithaigalil ivai oru thani ragam..ovvoru kavithaiyum ovvoru feelings

Anonymous said...

oru santhegam.., universe aaraya naam anuppum vinkalangalal yen vadathu allathu idathu pakkam mattum anuppa paduginrana..y not top and bottom..andathirkku mel keel enru illaya..

Anonymous said...

oru santhegam.., universe aaraya naam anuppum vinkalangalal yen vadathu allathu idathu pakkam mattum anuppa paduginrana..y not top and bottom..andathirkku mel keel enru illaya..

adhvaithan said...

இருபத்து ஆறே எழுத்துகளுடன்
ஆங்கிலம் உலகை ஆள்வதை சொல்லி
பெருமைப்பட்டார் நண்பர் ஒருவர்...
பாவம்
அவருக்கு இன்னொரு தெய்வீகமொழி ஒன்று
ஏழே எழுத்துகளுடன்
பிரபஞ்சத்தை ஆள்வது தெரியவில்லை..

pramaatham.. super oh super..

Hariharan said...

Enna romba naala aalaye kaanom?

Anonymous said...

samudra enga romba busy ah. why this long gap..

Sakthi

Anonymous said...

Enga adutha pathivu eppo ?
i am waiting !

Suresh

Unknown said...

அந்த ஏழெழுத்து மொழி எது?

Unknown said...

அந்த ஏழெழுத்து மொழி எது?