இந்த வலையில் தேடவும்

Monday, December 23, 2013

கலைடாஸ்கோப் -103

கலைடாஸ்கோப் -103  உங்களை வரவேற்கிறது.

I'd rather be a little weird than all boring.
― Rebecca McKinsey

நீண்ட நாட்களாக எழுதாததற்கு வருதுகிறேன். நான் எழுதாதலால் பெரிதாக ஒன்றும் ஆகி விடவில்லை என்று தெரிகிறது.

இப்போதெல்லாம் இலக்கியவாதி/எழுத்தாளர்/கவிஞர் ஆவதற்கு ஒரு இன்டர்நெட் connection  இருந்தால் போதும் என்று தோன்றுகிறது :):)

கலை என்பதில் இரண்டு வெளிப்பாடுகள் உள்ளன என்று நினைக்கிறேன் . எழுத்து, இசை,ஓவியம், கவிதை,நடனம், சிற்பம்,சினிமா எல்லாவற்றுக்கும்! ஒன்று, ஆத்மார்த்தமாக அப்படியே தனக்குத் தோன்றுவதை தன் திருப்திக்காக மட்டும் வெளிப்படுத்துவது. மற்றொன்று வாசகர்களை/ audience ஐ மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் மன நிறைவுக்காக compromise செய்து கொண்டு restricted ஆக  வெளிப்படுத்துவது . சில பல சமயங்களில் இரண்டும் ஒன்றோடொன்று ஒன்றி விடுகின்றன.அப்படி நடந்தால் அது அதிர்ஷ்டம் தான். ஆனால் பெரும்பாலும் இவை ஒத்துப் போவதில்லை. கவிஞன் , பாடகன், ஓவியன், எழுத்தாளன்,நடிகன்  தன்னை பல நேரங்களில் compromise செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. commercialize செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. வான் கா அல்லது பிக்கோஸோ வின் ஓவியங்களுக்கும் ரவிவர்மா அல்லது முருககானியின் ஓவியங்களுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும்.


பிக்காஸோ ஓவியம் 


தன் மன நிறைவுக்காக மட்டும் வெளிப்படுத்தும் கலையில் ஒரு madness இருக்கவே செய்யும். ஒரு வித வடிகால் போன்றது அது.சில பேர் இதை மட்டுமே கலை என்கிறார்கள். எதனுடனும் சமரசம் செய்து கொள்ளப்படாத இயற்கையான ஒரு வெளிப்பாடு. சில பேர் வணிக மயமாக்கப்படுவதை மட்டுமே கலை என்று அங்கீகரிக்கிறார்கள்.Art is for audience! of audience என்னைப் பொறுத்தவரை , கலை என்பது இந்த இரண்டுக்கும் இடையிலான ஒரு தளத்தில் இருக்கிறது என்று தோன்றுகிறது.

நம் மன நிறைவுக்கு, நமக்குப் பிடித்ததை எழுதலாம் என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.தினம் ஒரு பதிவு கூடப் போடலாம்.  இப்போதெல்லாம் எல்லாரும் Facebook இலேயே எழுதி விடுகிறார்கள். blog என்பது கொஞ்சம் outdated ஆகிக் கொண்டிருக்கிறது. FB யில் நமக்குத் தோன்றியதை எழுதலாம். காசா பணமா

இப்படியெல்லாம்:

கவிதை எழுதலாம் என்று
மொட்டை மாடிக்கு சென்றேன்
ஹைக்கூ கிடைத்தது.
அடுத்த நாள்
ஹைக்கூ எழுதலாம் என்று போனேன்
பக்கத்து மாடியில் ஒரு
குக்கூ கிடைத்தது!

****


“Writing is a socially acceptable form of schizophrenia.” 
― E.L. Doctorow

Clay Shirky என்பவர் இதை mass amateurization என்று அழைக்கிறார். இண்டர்நெட் வந்த பிறகு இந்த கத்துக்குட்டித் தனம் எழுத்து, இசை, போட்டோகிராபி இவைகளில் பயங்கரமாக அதிகரித்துள்ளது என்கிறார்  . நான் ஏதோ ஒன்றைக் கிறுக்கி ட்விட்டரில் போடலாம். நான் பின் நவீனத்துவ எழுத்தாளர் ஆகி விட்டேன் என்று அர்த்தமா?:) தேங்கிய மழைநீரில் படுத்திருக்கும் நாயை படம் எடுத்து best photography என்ற பெயரில் போடலாம்.ஏதோ ஒரு பாட்டை fusion என்ற பெயரில் அபஸ்வரமாகப் பாடி We are Young ஐயும் விரிபோனி யையும் கலந்து கட்டி அடிக்கலாம். no limits !

சரி. We are Young என்றதும் ஞாபகம் வருகிறது.

Tonight,
We are young
So let's set the world on fire
We can burn brighter
Than the sun





-என்று இளைஞர்கள் பாடுகிறார்கள். 

நமக்கு 
இளமை இருக்கிறது 
இன்றிரவு உலகையே உலுக்குவோம் 
சூரியனை விட 
பிரகாசமாய் ஜொலிப்போம் 

-கேட்பதற்கு என்னவோ நன்றாகத்தான்  உள்ளது.இளமை, உடல் பலம், பணம், weekend + girl friend எல்லாம்.

pessimist என்று நினைக்காதீர்கள். பலியிடுவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கும் ஆடு அதன் கழுத்தில் மாட்டியிருக்கும் மாலையை ருசித்துத் தின்பது போல் மனிதன் வாழ்வில் இன்பங்களை அனுபவிக்கிறான் என்கிறது மணிமேகலை.

பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற்றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து  

வேலைக் கண்ணாகக் கொண்டவள் என்று இளைஞர்கள் இவளைப் புகழ்ந்த காலம் போய் இப்போது கோலைக் கண்ணாகக் கொண்டு நடக்கிறாள் என்கிறது நாலடியார்.

திருவள்ளுவர் வேறு இந்த உடலுக்கும் நமக்கும் உள்ள உறவு என்பது பறவைக் குஞ்சுக்கும்  அதன் முட்டைக்கும் உள்ள உறவு போன்றது என்று பயமுறுத்துகிறார். 

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே 
உடம்பொடு உயிரிடை நட்பு

ஒரு வாதம் இளமை நிலைக்காது அதனால் இப்போதே நல்லது (?) செய்துவிடு என்கிறது. இன்னொரு வாதம் anyway இளமை நிலைக்கப் போவதில்லை.காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்  இப்போதே enjoy செய்து கொள்வதில் என்ன தப்பு என்று சொல்கிறது.  இரண்டுமே சரியாகத் தான் படுகிறது. enjoy செய்வதில் தப்பு இல்லை. என்னமோ தான் முதுமையே அடைய மாட்டேன் என்று மற்றவர்களை ஏன் பரிகாசம் செய்ய வேண்டும்? இன்றைய திரைப்படங்கள் அப்படித் தானே செய்கின்றன? சொட்டைத் தலையா, பல்லு போன கிழவா என்றெல்லாம். 

மேலும் ரொம்ப நாளாகவே இந்த விஷயம் என்னை உறுத்தி வருகிறது..நம் திரைப்படங்கள் ஏன் male centered ஆக இருக்கின்றன? ஹீரோவை ஆ ஊ  என்று புகழ்ந்து hero worship செய்து ஹீரோயினை அவனுக்குத் தொட்டுக் கொள்ள ஊறுகாய் போல நியமிக்கின்றன? 

மச்சான் பிகர மடக்கிட்டயா , பிகரை கரெட் பண்ணிட்டயா , உஷார் பண்ணிட்டயா , என்றெல்லாம் பெண் என்பவள் ஏதோ ஒரு வஸ்து போல treat செய்கின்றன.ஹீரோ தான் முக்கியம். அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். வேலை வெட்டி இல்லாத பொறுக்கியாக இருக்கட்டும். தாதாவின் கையாளாக, ரவுடியாக இருக்கட்டும், ஹீரோயின் அவனுக்கு வசப்பட்டு விட வேண்டும். அவ்வளவு தான்! என்ன மாதிரியான logic இது?மேலும் இன்று ஒரு படத்தில் ஒரு பாட்டிலேனும், பெண்ணை நம்பாதே அவள் மோசம் உன்னைக் கழட்டி விட்டு விடுவாள் , வேறு ஒருத்தன் வந்தால் அவன் பின்னே போய் விடுவாள் என்ற அர்த்தத்தில் வரிகள் வருகின்றன. அப்படியெல்லாம் சொல்லி விட்டு கடைசியில் அதே பெண்ணை விழுந்து விழுந்து லவ் செய்வார் ஹீரோ. யாரை ஏமாற்றுகிறார்கள்? காதல் , மூடி திறக்கும் போதே கவுத்துவிடும் குவாட்டராம்.


உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் 
கள்ளுக்கில் காமத்திற் குண்டு

வள்ளுவர் சொல்லாததை இவர் என்ன சொல்லி விட்டார்?

சரி.

Shirky யின் தத்துவம் ஒன்று உள்ளது.  "Institutions will try to preserve the problem to which they are the solution," இதை கொஞ்சம் சந்தித்துப் பாருங்கள். 

டாக்டர்கள் , கேன்சருக்கோ ஹெச் .ஐ .வி க்கோ மருந்து கண்டுபிடிப்பதை ஆதரிப்பார்கள்.ஆனால் அதை வராமலேயே தடுக்கும் bio molecular research க்கு ஆதரிப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள்!



The biggest disease today is not leprosy or tuberculosis, but rather the feeling of being unwanted -Mother Teresa

நோய் ஏன் வருகிறது என்பது இன்னும் ஒரு பில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. Disease is an abnormal condition என்பதோடு பீடியா நிறுத்திக் கொள்கிறது.நன்றாக (சத்தான உணவுகளை) நேரத்துக்கு சாப்பிட்டு, நன்றாகத் தூங்கி, உடற்பயிற்சி செய்து கொண்டு + கவலைப்படாமல் இருந்தால் நோயே வராது என்பது எல்லாரும் ஓரளவு ஒத்துக் கொள்ளும் ஒரு தியரி. ஆனால் இப்படியெல்லாம் இருந்தாலும் எப்படியோ நோய் சைக்கிள் கேப்பில் உள்ளே புகுந்து விடுகிறது.ஆஸ்பிடல் முதலாளிகளையும் டாக்டர்களையும் ஏகபோகமாக வாழ வைக்கிறது.

Free radical என்ற concept பற்றி முன்பே பார்த்திருக்கிறோம். 

ஓரிடத்தில் நெருப்பு விடாமல் எரிவதாக வைத்துக் கொள்வோம். அதில் இருந்து அவ்வப்போது சிறிய தீப்பொறிகள் பறக்கும் . அந்த தீப்பொறிகள் லேசான துணியில் தெறித்து ஓட்டை விழுந்து விடும் .அப்படித்தான் நம் உடம்பில் ஆக்ஸிஜன் உதவியுடன் சக்தி எரிக்கப்படும் போது அது தேவையில்லாமல் பக்கத்தில் இருக்கும் செல்களையும் அரித்து விடுகிறது. இது தான் நம் பிணி, மூப்பு, மரணம் என்ற மூவகைத் துன்பத்துக்கும் காரணம். 

இன்னொரு காரணம் இந்த நுண்ணுயிரிகள்!

மனுஷ்ய புத்திரனின் ஒரு கவிதையைப் பார்த்து விட்டுத் தொடருவோம்.

ஒரு பெரிய கனவு 
உடையும் போது 
நான் காண்கிறேன் 
நூறு நூறு 
சிறிய கனவுகள் 

ஒரு பெரிய நம்பிக்கை 
முறியும்போது 
என்னைத் தாங்குகின்றன 
நூறு நூறு 
சிறிய நம்பிக்கைகள் 

ஒரு பெரிய காதல் 
சிதையும்போது 
என்னைத் தனித்துப்போக விடுவதில்லை 
நூறுநூறு சிறிய காதல்கள் 
எண்ணற்ற சிறிய நம்பிக்கைகளில் 
உடைகிற எதுவும் 
நம் கவனத்தில் கூட வருவதில்லை 
பெரியதெதையும் போல 
கருணையற்றதில்லை 
சிறியவை எவையும்.

-இந்த பூமி சிறியவைகளுக்கானது . காலம் காலமாக அவை தான் பூமியை ஆட்சி செய்து வருகின்றன. மனிதன் இந்த பூமியின் வரலாற்றில் எவ்வளவு recent ஆக வந்தவன் என்பதற்கு Bill Bryson அழகானதொரு analogy சொல்கிறார்:

பூமியின் 4500 மில்லியன் ஆண்டுகள் வரலாறு முழுவதையும் ஒரு நாள் என்று கற்பனை செய்வோம். ஒரே ஒரு நாளில் 4500 மில்லியன் வருடங்களை அமுக்கி விடுவோம். இரவு 12 மணியில் இருந்து மறுநாள் இரவு 12 மணி வரை. ...

'உயிர்' அந்த நாளின் அதிகாலையிலேயே வந்து விடுகிறது. அதாவது அதிகாலை 4 மணிக்கெல்லாம் ஒருசெல் உயிரினங்கள் தோன்றி விடுகின்றன. ஆனால் அடுத்த 16 மணி நேரங்களுக்கு சுவாரஸ்யமாக எதுவும் நடப்பதில்லை.அந்தப் பகல் பொழுது மிகவும் சலிப்பாக நகர்கிறது. இரவு சுமார் 8:30 மணிக்கு முதல் கடல் தாவரங்கள் பாசிகள் முகம் காட்டுகின்றன. அடுத்து 20 நிமிடம் கழித்து முதல் ஜெல்லி மீன் தோன்றுகிறது.9:04 மணிக்கு கடலில் முதல் கணுக்காலிகள் நீந்துகின்றன. அதே சமயம் களிப்பாறை (Burgess Shale ) உயிரினங்கள் தோன்றுகின்றன. பத்து மணி சுமாருக்கு தாவரங்கள் தலை காட்டுகின்றன. அதற்கு சற்று பிறகு விலங்குகள் வருகின்றன.

சுமார் 10:24 மணிக்கு நம் பூமி (தரை) முழுவதும் காடுகளால் மண்டிக் கிடக்கிறது.(இதனால் தான் இப்போது பெட்ரோல் எல்லாம் கிடைக்கிறது!)  பூச்சிகள் இப்போது தலையெடுக்கின்றன. 11 மணி அடிக்க சில நிமிடங்களே இருக்கும் போது டைனோசர்கள் கர்ஜிக்கத் தொடங்குகின்றன. அடுத்த நாற்பது நிமிடங்களுக்கு அவை பூமியை ஆட்சி செய்கின்றன .11:40 மணிக்கு நாள் கிட்டத்தட்ட முடிந்து விடும்போது பாலூட்டிகள் தோன்றுகின்றன. சரி , இந்த நாளில் மனிதப்பயல் எப்போது வருகிறான் தெரியுமா? 11:45? இல்லை. 11:50? இல்லை.11:55? அதுவும் இல்லை.நாள் முடிவதற்கு ஒரு நிமிடம் 17 வினாடிகள் இருக்கும் போது .அதாவது 11:58:49 மணிக்கு தான் மனிதன் வருகிறான். பூமியின் வரலாற்றில் நாம் எவ்வளவு சமீபத்தில் வந்தவர்கள் என்று இந்த  analogy சொல்கிறது. மனிதனின் ஒட்டுமொத்த வரலாறும் சில வினாடிகளில் அடங்கி விடுகிறது.மேலும் இந்த சுவாரஸ்யமான நாளில் அவ்வப்போது கண்டங்கள் நகர்ந்தும் கடல்கள் தோன்றியும், மலைகள் தோன்றி மறைந்தும் பனிப் படலங்கள் மூடியும், இருக்கின்றன. மேலும் ஒரு நிமிடத்துக்கு மூன்று முறை பூமியை ஒரு விண்கல் தாக்கி வந்துள்ளது .இதிலெல்லாம் தப்பிப் பிழைத்து நாமெல்லாம் வந்து ப்ளாக் எழுதுவது அதிசயம் தான்!

மனிதனின் recentness ஐ அறிந்து கொள்ள இன்னொரு உதாரணம். உங்கள் இரண்டு கைகளையும் இரண்டு பக்கமும் பக்கவாட்டில் எவ்வளவு நீட்ட முடியுமோ நீட்டுங்கள். அந்த நீளம் தான் பூமியின் ஒட்டுமொத்த history என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு கையின் நுனியில் இருந்து இன்னொரு கையின் மணிக்கட்டு வரை precambrian யுகம் நீடிக்கிறது. அதில் மனிதனின் வரலாறு சிறிதே வளர்ந்த ஒரு விரல் நகம் அளவு தான்.

இத்தனை recent ஆக வந்து விட்டு நாம் தான் பூமியைப் படைத்தவர்கள் போல ஆட்டம் போடுகிறோம். நம் வடிவத்தில் கடவுள்களைப் படைத்துக் கொண்டோம்! பூமியை பங்கு போடுகிறோம். பிளாட் போட்டு விற்று Sq .feet முன்னூறு ரூபாய் சென்னைக்கு மிக அருகில், என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.அதிகாலை ஐந்து மணியில் இருந்து பூமியில் வசித்து வருபவை பாக்டீரியா. அதை 11:59 க்கு வந்த நாம் ஒண்ட வந்த பிடாரி கதையாக இன்று துன்புறுத்திக் கொண்டிருக்கிறோம்.


நான் ரொம்ப ஹைஜீனிக் , clean habits என்றெல்லாம் பீற்றிக் கொள்பவர்களுக்கு: சுமாரான ஆரோக்கியம் கொண்ட ஒரு மனிதனின் தோலில் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு ஒரு லட்சம் பாக்டீரியா  சுகவாசம் செய்து கொண்டுள்ளன.அவை ஏன் அங்கே உள்ளன என்றால் நம் உடம்பில் இருந்து உதிரும் கோடிக்கணக்கான தோல் செதில்களை (flakes ) சிப்ஸ் போல கொறிப்பதற்கும் நம் உடம்பில் தோல் துளைகள் மூலம்  சுரக்கும் எண்ணெய்களை , மினரல்களை கோக் போல ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக் குடிப்பதற்கும். நாம் அவைகளுக்கு உண்மையிலேயே 'கல்யாண சமையல் சாதம்' .  அன்ன தானம் செய்யவில்லையே என்று வருத்தப் பட வேண்டாம். கோயில்களுக்குப் போனால் ஒரு வாரம் , ஒரு நாள் அன்னதானம் பண்ண பணம் குடுங்க சார் என்று விடாமல் நச்சரிக்கும் பூசாரிகள் பற்றியும் சாமிக் குத்தம் பற்றியும்  கவலை கொள்ள வேண்டாம். நாம் நம்மையே ultimate அன்னதானம் செய்து கொண்டு வருகிறோம். தினமும் கோடிக் கணக்கான ஜீவிகளுக்கு,,,நமக்கு direct சொர்க்கம் தான்! நம் உடம்பின் மிதமான வெப்பமும், நாம் செய்யும் movement களும் அவைகளுக்கு எக்ஸ்ட்ரா benefit வேறு !! பதிலாக , அவை நமக்கு என்ன தருகின்றன தெரியுமா? வாசனை! 

செக்ஸில் வாசனை ஒரு மிக முக்கிய factor என்பது நமக்கெல்லாம் தெரியும். டியூடரென்ட் கம்பெனிகள் இயற்கைக்கு மாறாக இதைப் போட்டுக் கொண்டால் தான் உங்கள் இணை உங்களிடம் கவரப்படும் என்று பொய் பிரசாரம் செய்கின்றன. ஆனால் அதற்கு opposite தான் உண்மை. எந்த body ஸ்ப்ரே யும் போடவில்லை என்றால்தான் இணை இயற்கையாக உடம்பின் வாசத்துக்கு கவரப்படும்.குளிப்பதற்குப் பிறகு செய்வதை விட குளிப்பதற்கு முன்னர் செய்யும் செக்ஸ்சில் தான் 'கிக்' அதிகம் என்கிறது ஒரு ஆராய்ச்சி. விலங்குகள் காலம் காலமாக உடம்பு வாசனையை வைத்து தான் இணையை அடையாளம் கண்டு கொள்கின்றன.நாம் தான் அடையாளத்துக்கு மூக்கை நம்பாமல் கண்களை நம்புகிறோம்.


முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் 
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

-திருவள்ளுவர் Nike deo எல்லாம் போடச் சொல்லவில்லை!

நுண்ணுயிரிகள் பற்றி மேலும் பேசுவோம்.

ஓஷோ ஜோக் 

தவளை ஒன்று ஒரு ஜோசியக்காரரிடம் சென்றது.

'என் எதிர்காலத்தைப் பற்றி சொல்லுங்க ' என்று கேட்டது.

ஜோசியம் சொல்பவன் ' கூடிய சீக்கிரம் நீ உன்னைப் பற்றிய எல்லா விஷயங்களையையும் ஒன்று விடாமல் அறிந்து கொள்ள விரும்பும் ஒரு அழகான இளம்பெண்ணை சந்திப்பாய் ' என்றான்.

'அப்படியா, எங்கே அந்த சந்திப்பு நிகழும்?' என்றது தவளை.

'அவளது ஜுவாலஜி லேபில்'!

சமுத்ரா 




Tuesday, November 19, 2013

கலைடாஸ்கோப் -102

கலைடாஸ்கோப் -102 உங்களை வரவேற்கிறது.

பெங்களூருவில் நவம்பர் மாதத்திலும் வெயில் கொளுத்துகிறது. மழையும் கிடையாது!வியர்க்கிறது !! என்ன தான் காரணம்.செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பி சாமிக் குத்தம் ஏதேனும் செய்து விட்டோமா?

Global warming என்பதே கட்டுக்கதை என்று ஒரு கோஷ்டி சொல்லிக் கொண்டிருக்கிறது. பூமியின் வெப்பநிலை எப்போதும் இப்படி அப்படி அல்லாடிக் கொண்டே வந்துள்ளது;Global temperature என்பது ஒரு சிக்கலான விஷயம் என்றும் அதை ஒரு குறுகிய கால அளவில் அளவிட்டு வெப்பம் அதிகரித்து விட்டது என்றும் சொல்வது சரியல்ல என்கிறார்கள்.

GW என்றால் இதுதான் சுருக்கமாக: நம் பூமி சூரியனிடமிருந்து தனக்கு வரும் வெப்பத்தை அப்படியே உள் வாங்கிக் கொள்ளாமல் ஒரு கணிசமான அளவை திரும்ப வெளிக்கு அனுப்பி விடுகிறது. இந்த வெப்பத்தை விடாப்பிடியாக சில வாயுக்கள் விட்டேனா பார் என்று கிரகித்துக் கொண்டு மீண்டும் பூமிக்குத் திரும்ப அனுப்புகின்றன. இப்படித் திரும்ப அனுப்பாவிட்டால் பூமி ரொம்பவும் குளிராக இருக்கும். நேரடியான சூரிய வெப்பத்தை விட இந்த திருப்பி அனுப்பப்பட்டு u turn அடித்து வரும்  அகச்சிவப்பு (கட்புலனாகாத) கதிரியக்கம் பூமியின் வெப்ப நிலையில் கணிசமான பங்கு வகிக்கிறது. நாம் தொழில் வளர்ச்சி, industrial revolution அது இது என்று ஏதோதோ செய்து வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடை சகட்டு மேனிக்கு கொட்டிக் கொண்டிருக்கிறோம்.

anyway 

சில பேர், பூமி இன்னொரு ice age (பூமி முழுவதும் பனி) நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்கள். பூமி குளிர்ந்து கொண்டிருக்க வேண்டும். இந்த extra green house விளைவு மற்றும் வெப்பமானது பூமி குளிர்ந்து போகாமல் வைத்துக் கொள்ள வேண்டுமானால் உதவலாம்  என்கிறார்கள். அதாவது நாம் இப்போது ஒரு பள்ளத் தாக்கில் உருண்டு விழுந்து கொண்டிருக்கிறோம். வெப்பம் அதிகரித்து விட்டது என்று சொல்வது பள்ளத்தில் அவ்வப்போது தோன்றும் சின்னச் சின்ன மேடுகள்.மேலும் உல்டா விளைவாக , பூமியின் வெப்பம் அதிகரித்தால் அது ice age வருவதற்கு உதவி செய்யுமாம். அதிக வெப்பம் என்றால் அதிக ஆவியாதல். அதிக ஆவியாதல் என்றால் அதிக மேகங்கள். (மிகக் கடுமையான வெயிலுக்குப் பிறகு அதிக மழை வருவது போல!)அதிக மேகம் என்றால் அதிகப்  பனிப்பொழிவு. (மழை என்பதும் பனி தான். வரும் போது உருகி விடுகிறது!)அப்படி ஒரு ice age வந்தால் அது அடுத்த 10000 வருடங்களுக்கு நீடிக்குமாம். ஜாலி தான்! பூமியில் மனிதன் நடக்கத் தொடங்கிய போது ஒரு நீண்ட ice age ஐ எதிர்கொள்ள வேண்டி இருந்தது. எப்படியோ தப்பித்தோம். இன்னொரு ice age இல் 700 கோடி மக்கள் பிழைக்க முடியாது என்கிறார்கள். ஒருவருக்குள் ஒருவர் அடித்துக் கொண்டே முக்கால்வாசி மனித இனம் அழிந்து விடும்.ice age இல் நம் சென்னை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் போலிருக்கிறது !


*******




சுட்டி டி .வி யில் தினமும் இரவு 9 மணிக்கு Penguins of Madagascar வருகிறது.  பாருங்கள். ஜூ -வில் நான்கு பென்குவின்கள் செம ரகளை பண்ணுகின்றன. பார்ப்பவர்களை மீண்டும் சிறுவர்களாக மாற்றி விடுகிறது இந்த அனிமேஷன்  தொடர். அதிலும் ஜூலியன் என்ற வாயாடி லெமூர் தன்னை ஜூவின் ராஜா என்று சொல்லிக் கொன்று அடிக்கும் கூத்துகள் அதகளம்.அது தன்னுடன் எப்போதும் இரண்டு அல்லக்கை -களை வைத்துக் கொண்டு அடிக்கடி வடிவேலு வசனங்கள் பேசி கூத்தடிக்கிறது.

ஜூ -வுக்குப் போவது என்பது (எனக்கு)கொஞ்சம் சலிப்பான விஷயம். பெங்களூருவில் பன்னேருகட்டா ஜூ -வுக்குக் கண்டிப்பாகப் போகாதீர்கள். அங்கே ஒன்றுமே இல்லை.வேஸ்ட்.சபாரி அது இது என்று பணம் பிடுங்குகிறார்கள்! மைசூர் ஜூ ஓரளவு நன்றாக இருக்கிறது. ஒட்டகச் சிவிங்கி ஒன்று தான் என்னைக் கவர்ந்தது. என்ன ஒரு கம்பீரம்! 'சத்தம் போடாதீர்கள்' என்று அங்கங்கே எழுதிப் போட்டிருந்தாலும் வாண்டுகள் பயங்கரமாக  சத்தம் போடுகின்றன.பெரும்பாலான கூண்டுகளில் சம்பந்தப்பட்ட பறவை/ மிருகம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. எவன் பார்த்தால்  என்ன never mind  என்று ஏதோ ஒரு மூலையில் குப்புறப் படுத்து தூங்கிக் கொண்டுள்ளன. குரங்கு ஒன்று மட்டும் தான் active ஆக எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறது. சில முதலைகள் உண்மையில் இது சிலை தான் என்று முடிவுக்கு வரும் அளவுக்கு அசையாமல் போஸ் கொடுக்கின்றன. கூச்சலுக்கு மத்தியிலும் கம்பிகளுக்கு இடையேயும் எதையும் ரசிக்க முடிவதில்லை. மைசூர் ஜூவை ஓரளவு நன்றாகவே maintain செய்கிறார்கள். வானம் முழுவதையும் சொந்தம் கொண்டாட வல்ல பறவைகளை அடைத்து வைத்திருப்பது மட்டும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும், சில மிருகங்கள் காட்டில் இருப்பதை விட இங்கே சந்தோஷமாக இருக்கின்றன என்று தோன்றுகிறது. வேளாவேளைக்கு சாப்பாடு கிடைத்து விடுவதால். 'நமக்கு உரிய எல்லை' இதுதான் என்று ஒரு வழியாக compromise செய்து கொண்டு அதற்குள்ளேயே சந்தோஷமாக வாழப் பழகிக் கொள்கின்றன. சொல்லப் போனால் நாமெல்லாரும் அப்படித் தான். ஒரு கண்ணுக்குத் தெரியாத எல்லையை வரைந்து கொண்டு அதற்குள்ளாக வாழப் பழகிக் கொள்கிறோம் .

ஜூவில் ஒரு டைனோசர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
பில் ப்ரைஸன்  ஒன்று சொல்கிறார். " We must be living in a very boring age of Universe and solar system. No super novae , no asteroid impact, no ice age, no dinosaurs, all are either in distance past or in distance future!"

மைசூரில் wax museum ஒன்றும் இருக்கிறது. போய்ப் பாருங்கள்.

****************
ராக ரஞ்சனி

இந்த ராக ரஞ்சனி எபிஸோடில் நாம் பார்க்க இருக்கும் ராகம். நாட்டைக் குறிஞ்சி.

கோயிலுக்குப் போகிறோம். சாமியை நன்றாகத் தான் பார்க்கிறோம். ஆனாலும் கடவுளை as it as பார்க்க முடியாமல் ஒரு மாடு இடையே எப்போதும் மறைத்துக் கொண்டிருக்கிறது. அதை நம் ஈகோ, ஆணவம் என்று சொல்லலாம். மாயை என்றும் சொல்லலாம். நம்மில் சில பேர் நந்தியின் காதுகளுக்கு இடையே கடவுளை தரிசிக்கக் கூட கற்றுக் கொண்டு விட்டோம்.நந்தனார் என்னும் திருநாளைப்போவார் இந்த நந்தியுடன் compromise செய்து கொள்ள முயலவில்லை என்று தோன்றுகிறது.

எந்த விதத் தடையும் இடையில் இருக்காமல் அப்படியே கடவுளைப் பார்ப்பது தான் உண்மையான தரிசனம் என்கிறார் போலும் நந்தனார்.

வழி மறைத்திருக்குதே மலை போல் ஒரு
மாடு படுத்திருக்குதே




ராகம் நாட்டைக் குறிஞ்சி..ரஞ்சனி காயத்ரி பாடுவதைக் கீழே கேட்கலாம்.



நந்தனார் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

தாழ்ந்த ஜாதிக்காரர்.சிதம்பரம் போய் ஈசனை தரிசிக்க ஆசைப்படுகிறார். அவரது எஜமானரோ மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழித் திருநாளா என்கிறார்.இவரோ சிதம்பரம் நாளை போவேன் நாளை போவேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்.மீதிக்கதை இங்கே டி .எஸ்.பாலக்ருஷ்ண சாஸ்திரிகள் :-



நாட்டைக் குறிஞ்சியில் மிகவும் பிரபலமான திரையிசைப் பாடல் ஒன்று.

வான்மழை விழும் போது மலை கொண்டு காத்தாய் -என் 
கண்மழை விழும் போது எதில் என்னைக் காப்பாய் 

கண்ணன் கறுப்பு என்பதை நயமாக சுட்டிக் காட்டுகிறாள் (ர் )

பாற்கடலில் ஆடிய பின்னும் -உன் 
வண்ணம் மாறவில்லை இன்னும் 
என் நெஞ்சில் கூடியே உன் நிறம் மாறவா 








இந்த ராகத்தைப் பற்றிய விரிவான அலசல் ஆங்கிலத்தில்:


குறிஞ்சி முதல் பாலை வரை ஐந்து நிலங்களை தமிழ்  இலக்கியம் சொல்கிறது.

குறிஞ்சி -மலை 
முல்லை - காடு 
மருதம் - வயல் 
நெய்தல் - கடல் 
பாலை- பாலைவனம் 

சில பேருக்கு குறிஞ்சி romantic ஆக தெரியலாம். முருகன் , ரெண்டு பெண்டாட்டி,hill station , கூடலும் கூடல் நிமித்தமும்! :)

ஆனால்  எனக்கு மிகவும் romantic -ஆகத் தெரிவது இந்த 'முல்லை' தான்.

playboy ஆன கண்ணன் திணைக் கடவுள்.
முல்லைப்பண் (மோகனம்) பாடல் 
முல்லை மலர் 
மான் முயல் 
மாடு மேய்த்தல் 

எல்லாவற்றுக்கும் highlight ஆக romantic ஆன கார்காலம் !!

இருத்தலும் இருத்தல் நிமித்தமும்! காதலன் வருவதற்காக காத்திருத்தல்!
காத்திருத்தலே ஒரு சுகம் தானே!

முல்லைத் திணைக்கான ஒரு பாடல். குறுந்தொகையில் இருந்து.

பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
புன்றலை மன்ற நோக்கி மாலை
மடக்கட் குழவி யணவந் தன்ன
நோயே மாகுத லறிந்தும்
சேயர் தோழி சேய்நாட் டோரே



மேயப்போன பசுக்கள் இன்னும் வரவில்லையே என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் கன்றுகள் போல தொலைவில் பொருள் தேடப் போனவரை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பசுக்கள் மாலை ஆனதும் சமர்த்தாக வீடு திரும்பிவிடும். அவர் இன்னும் வரவில்லையே!

வீடு திரும்புதல் ஒரு சுகம் தான்.சுகம் தான். ஒரு ஜென் ஹைக்கூ 

-பயணம்  கடினமாய்த் தான் 
இருக்கிறது.
அனாலும் 
வீடு திரும்பலின் 
சுகம்!



****

Negative Energy பற்றிப் பேசுகிறது Pizza -II தி வில்லா .

பில்லி, சூனியம், தகடு புதைத்தல் , மந்திரித்தல் எல்லாம் அறிவியல் பூர்வமாக உண்மைதான் என்கிறது இந்தப் படம்.டி -ப்ராக்லி  என்ற விஞ்ஞானி சொல்வது போல எல்லாமே அலைகள் தான் ;மனம் என்பதும் அலைகள் தான் என்று எடுத்துக் கொண்டால் இது ஓரளவு உண்மை.

இயற்பியல் பொதுவாக ஆற்றலை பாஸிடிவ் , நெகடிவ் என்று பிரிப்பதில்லை. எலக்ட்ரான் பாசிடிவ் , ப்ரோடான் நெகடிவ் என்று சொல்வதெல்லாம் ஒரு convenience -க்கு தான்.நிறை (mass ) பாசிடிவ் ஆக இருப்பதாலும் பெரும்பாலான energy சமன்பாடுகள் quadratic ஆக இருப்பதாலும் (உதாரணம் E =m C 2, E =1/2 m V 2) விடை negative இல் வர வாய்ப்பு இல்லை.

ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் இயற்பியலில் நெகடிவ் எனர்ஜி யை நம்புகிறார். பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த ஆற்றல் ஜீரோவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். பிரபஞ்சத்தின் ஆற்றலை ஈர்ப்பு ஒரு negative energy யாக இருந்து balance செய்கிறது என்கிறார். btw , gravity படம் பார்த்தீர்களா? எல்லாரும் ஆஹா ஓஹோ என்கிறார்கள். எனக்கென்னவோ சுமாராகத் தான் தோன்றியது.!

இப்போது ஒரு கவிதை!

I hate gravity
for it pulls me down
for it makes me
jealous of birds
for it makes me
earth bound

I hate gravity
for it makes me fall
for it makes me crawl
for it brings me
again where I started

I hate gravity
for it makes me heavy
for it denies me stars
for it makes my 
antiques break 

 but I love gravity-yes
for it gave me a beautiful moon!

ஓஷோ ஜோக் 


ஒரு சேல்ஸ்மேன் ஆபீஸ் ஒன்றுக்கு சென்றான். அங்கே யாரும் இல்லை. ஒரே ஒரு பூனை மட்டும் பைல்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த அவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.

அப்போது அந்தப் பூனை அவனைப் பார்த்து ' ஆச்சரியப்படாதப்பா , இந்த ஆபீஸில் ஒழுங்கா வேலை செய்யறது நான் ஒருத்தி தான் ' என்றது.

இப்போது சேல்ஸ்மேன் இன்னும் ஆச்சரியப்பட்டு ' அய்யோ பூனை பேசுதே, என்ன அதிசயம், என்ன ஒரு அதிசயப் பூனையை வச்சிருக்கார் இந்த ஆபீஸ் மேனேஜர் ' என்றான்.

பூனை இப்போது 'தயவு செய்து நான் பேசும் விஷயத்தை அவர் கிட்ட  சொல்லி விடாதப்பா ...அப்பறம் அவர் போன் கால் எல்லாம் நான் தான் அட்டன்ட் பண்ண வேண்டி இருக்கும்' என்றது.

சமுத்ரா ....

Sunday, October 20, 2013

கலைடாஸ்கோப் -101

கலைடாஸ்கோப் -101 உங்களை வரவேற்கிறது.

 சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று நரி சொன்னதாக நாமெல்லாம் படித்திருப்போம்.இதை ஆங்கிலத்தில் ஸ்டைலாக Cognitive dissonance என்கிறார்கள்.நம்மால் முடியாவிட்டால் சூழ்நிலை மீதோ அடுத்தவர் மீதோ கிரகங்கள் மீதோ பழிபோட்டு விடுவது! ஆக்ஸிடென்ட் ஆகி விட்டால் நான் நேராகத்தான் போனேன். அடுத்தவன் தான் என் மீது வந்து மோதி விட்டான் என்று சொல்வது.பிசினஸ் சரியாக நடக்கவில்லை என்றால் கேது விரய ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இப்படித் தான் இருக்கும் என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்வது. உப்புமா சரியாக செய்ய வரவில்லை என்றால் இந்த தரம் அண்ணாச்சிக் கடை ரவை ரொம்ப மோசம் என்று சொல்லி விடுவது! ஏதேனும் தவறு நடந்து விட்டால் அதற்கு நாம் 100% பொறுப்பேற்பதே இல்லை என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம், சரி இப்படியெல்லாம் நடக்கனும்னு விதி! நீயா பண்ணலை , ஏதோ கிரகம் ஆட்டி வைக்குது போ! என்று சமாதானம் சொல்லிக் கொள்வது.

பொருட்களை மட்டும் அல்ல..மனிதர்களையும் சில சமயம் இப்படித்தான் இந்தப் பழம் புளிக்கும் என்று ஒதுக்கி விடுகிறோம்.!!!காதல் தோற்றுப் போய் விட்டால், 'பொண்ணா அவ, ராட்சஸி ' என்கிறோம்! 

****************

கவிதையில் சொல்லப்பட்ட வரிகளை விட்ட சொல்லப்படாத வரிகள் அதிகம் இருக்க வேண்டும் என்கிறார் சுஜாதா.

உதாரணமாக:

ஒன்றையொன்று தொடாதவாறு
அருகருகே நடப்பட்டிருக்கின்றன
இரண்டு வேல்கள்.
ஒன்று சக்தி மற்றொன்று சிவம்.
இரண்டின் நிழல்களும் 
ஒன்றன்மீது ஒன்றாகக்கிடக்கின்றன 
தரையில் சூரியன் சரியசரிய.
திடீரென நீண்டுகொண்டே போகிறாள் சக்தி
துரத்திக்கொண்டே போய் 
சிவம்மூச்சிரைத்துக்கொண்டிருக்க
அந்தி வருகிறது
இருளில் மறைகிறார்கள் இருவரும்.- 

இளங்கோ கிருஷ்ணன் 

இதில் சொல்லப்படாத வரிகள் என்ன என்று யோசித்துப் பாருங்கள்.

இனிமேல் கவிதை எழுதும்போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சொல்லப்படாத வரிகள்...கதைக்கு அப்படியே opposite .கதைக்கு சொல்லப்படும் வரிகள் , detail ,வர்ணனை முக்கியம்.

சங்க இலக்கியத்தில் ஒரு பிரபலமான பாடல் .

 அற்றைத் திங்கள் அந்நிலவில்  

அந்த மாதம் அந்த நிலவில்
தந்தை இருந்தார் குன்றும் இருந்தது.
இந்த மாதம் இந்த வெண்ணிலவில் 
வெற்றி முரசு வேந்தர்கள்
குன்றும் கொண்டனர் எங்கள் தந்தையும் இல்லையே!

எந்தப் புலம்பல்களும் இல்லாத கச்சிதமான பாடல்....அப்பா இருந்தாரே இப்ப இல்லையே அய்யோ எல்லாம் போச்சே,மோசம் போயிட்டமே  மூவேந்தர்கள் நாசமாப்போக என்ற சீரியல் புலம்பல்கள் எல்லாம் இல்லை! சொல்லப்படாத வரிகள் அதிகம்...



சீரியல் என்றதும் நினைவுக்கு வருகிறது.பாலிமர் சானலில் ஹிந்தி சீரியல்களை கடமை உணர்ச்சியுடன் டப் செய்து ஒளிபரப்புகிறார்கள்.பெண்கள் பொறுமையின் அணிகலனாக இருப்பது இந்த சீரியல்களை பார்ப்பதாலோ என்னவோ என்று தோன்றுகிறது. பத்து நிமிடம் விடாமல் உங்களால் பார்க்க முடிந்தால் அவார்டே கொடுக்கலாம்.நடிப்பவர்கள் அழகாக இருக்கிறார்கள் என்று பார்ப்பது வேறு விஷயம் :) ஆண்கள் எப்போதும் வீட்டுக்குள் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டும் பெண்கள் full மேக்கப் உடனும் வலம் வருகிறார்கள்.சப்பாத்தி சாப்பிடுவது, கொரியர் வருவது, போன் பேசுவது, என்று indoor இல் விலாவாரியாக காட்டுகிறார்கள். 

 வாழ்க்கையில் இரண்டு அணுகுமுறைகள் இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று சின்னச் சின்ன விஷயங்களை, சாதாரண விஷயங்களை கணத்துக்கு கணம் அனுபவிப்பது. இன்னொன்று, அற்ப விஷயங்களில் ஆழ்ந்து போகாமல் தூரத்து விண்மீனை குறிக்கோளாக வைப்பது. நான் ரொட்டி சுடவும், தரை துடைக்கவும், குழந்தைக்கு கழுவி விடவும் பிறக்கவில்லை என்று நம்புவது! 

ஒரு ஜென் கதை. 

ஜென் குரு ஒருவரிடம் சீடர், 'குருவே, நீங்கள் மேற்கொள்ளும் தியானம் எது?' என்று கேட்கிறார்.குரு ," நான் சாப்பிடும் போது சாப்பிடுகிறேன், தண்ணீர் இறைக்கும் போது தண்ணீர் இறைக்கிறேன், தரை துடைக்கும் போது தரை துடைக்கிறேன் , தூங்கும் போது தூங்குகிறேன்" என்கிறார். 

நண்பர் ஒருவர் இந்தியா செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இறங்கி இருப்பது சரிதானா சார்? இங்கே ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் , அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் மக்கள்? என்று கேட்டார்.மனிதன் கனவு காண வேண்டுமா? சிறகுகளை விரிக்க வேண்டுமா? இல்லை கிடைத்ததை அனுபவித்துக் கொண்டு வாழ வேண்டுமா என்பது கேள்வி. மேலோட்டமாகப் பார்த்தால் இவை ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றன. ஆனால் இவை இரண்டும் ஒன்று தான். ஒரு மரத்தின் வேர்கள் எத்தனை கீழே செல்கின்றனவோ அதன் கிளைகள் அத்தனை மேலே செல்கின்றன. ஓஷோ ஒரு multi -faceted ஜோர்பா புத்தரை வரவேற்கிறார்.அவன் ஜென்னிலும் வாழ்வான்.விண்ணிலும் வாழ்வான்!

 well , அந்த ஜென் குரு சொல்வது போல சாப்பிடும் போது நாம் சாப்பிடுகிறோமா?? 

சாப்பிடுவதைப் பற்றி இப்படி சொல்கிறார் காஞ்சி பெரியவர்.


வயிற்று உபவாசம் மாதிரியே மௌனத்துக்கும் தர்ம சாஸ்திரத்திலே அனேக காலங்களை விதித்திருக்கிறது. "மௌநேந போக்தவ்யம்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சாப்பிடுகிற காலங்களில் பேசப்படாது என்று அர்த்தம். வாய்க்குள்ள இரண்டு வேலைகளில் ஒன்றாகச் சாப்பிடும் போது இன்னொரு வேலையும் தரப்படாது.

 இப்படி விதித்த போதே ருசியையும் கட்டுப் படுத்தியதாக ஆகிறது. "இது வேண்டும். அது வேண்டாம் ; இதற்கு உப்பு போடு, அதற்கு நெய் விடு என்றல்லாம் சொல்ல முடியாதல்லவா? 

சோம வாரம், குரு வாரம், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மௌனம் அனுஷ்டிக்கலாம் .சோமவாரம், குருவாரம், ஆபீஸ் இருப்பதால் ஞாயிற்றுக கிழமைகளில் மௌனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம்.எத்தனையோ கார்யங்களை வைத்துக் கொண்டிருந்தார் காந்தி. ஒரு வீட்டிலே அப்பா என்றாலே எவ்வளவோ கார்யம் இருக்கும். அவரை தேசபிதா என்கிறார்கள். அப்படியிருந்தும் வாரத்தில் ஒரு நாள் மௌனம் வைத்துக் கொண்டிருந்தார். மௌனமாயிருக்கக் கட்டுப்படி ஆகாது என்று எவரும் சொல்ல முடியாதபடி அவர் ஓர் example. 

மௌனமும் பட்டினியும், சேர்ந்தால் அதாவது வாய்க்கு இரண்டு காரியமுமே இல்லாமலிருந்தால் அன்று மனஸ் பார மார்க்கத்திலே நன்றாக ஈடுபடுவதை அனுபவத்திலே தெரிந்து கொள்ளலாம். அதனால் அவரவர் இஷ்ட தெய்வத்துக்காக    சிவராத்திரியோ, சஷ்டியோ, ஏகாதசியோ, பட்டினி கிடக்கிற போது மௌனமாகவும் இருக்கலாம். அம்பாளை உபாசிக்கிறவர்கள் நவராத்திரி பூராவும் மௌனமாயிருப்பார்கள். 

 நாம் பலவிதமான பேச்சுக்களைப் பேசி, கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும் வாக் தேவியான சரஸ்வதிக்கு அபச்சாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயச்சித்தமாக சரஸ்வதியின் நக்ஷத்திரமான மூலத்தில் மௌனம் இருப்பதுண்டு. தினமுமே அரை மணியாவது மௌனமாகத் தியானம் பண்ண வேண்டும். 

நன்றி Facebook

 ******************

நண்பர் அப்துல் , ட்விட்டரில் சுகந்தியின் ட்விட்டுகளை படிக்கும்படி சொன்னார்.சில:

முடிந்தவுடன் தான் தெரிகிறது முடை நாற்றமும் ஊசிய முட்டை பிரியாணியும் அருகில் இருந்தது 

காட்டுத்தீயை அணைக்க வாயால் ஊதுகிறாய், பார்ப்போம்

 form -கள் தான் வேறு வேறு. சொல்ல வருவது என்னவோ ஒன்று தான்.

வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் 
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்தி, 
கொடுங் கோற் கல்லாக் கோவலர் ஊதும் 
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே! என்னும் அகநானூறு ஆகட்டும் 

எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற சமகாலப் பாடலாகட்டும் 

"பக்கி, நான் இன்றோடு இறந்துவிடப்போவதில்லை..". மிச்சம் வை என்ற சுகந்தியின் ட்வீட் ஆகட்டும்....



காமம் தான் எல்லாமுமா? என்று கேட்டேன். இல்லை எல்லாவற்றிலும் காமம் இருக்கிறது என்றார்.பிராய்டின் unconscious subconscious pre-conscious சமாசாரம் போலிருக்கிறது என்று escape ஆகி விட்டேன்.

சரி...பிராய்டின் counter transference என்று ஒன்று இருக்கிறது. தன்னிடம் சிகிச்சைக்காக வரும் client இடமே மனவியல் மருத்துவர் காதல், அன்பு, பாசம் etc etc கொண்டு விடுவது. மருத்துவர் client ஐ influence செய்வதற்கு பதிலாக உல்டாவாக நடந்து விடுவது.

 ஆஸ்பத்திரி க்குப் போவதில் கூட செக்ஸ் மோடிவ் இருக்கிறது என்று பிராயிட் சொல்வதை எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது. நர்ஸை /அல்லது டாக்டரை சைட் அடிக்கலாம் இப்படி ஏதாவது மோடிவ்...என்ன தான் இருந்தாலும் இதுவரை காமம் மற்றும் காதல் இவைகளுக்கு ஒரு clear cut boundary இல்லை....வாட்சன் என்ற மனோவியல் நிபுணர் காமம் ஒன்றாகிவிடும் முயற்சி ;காதல் இரண்டாகும் முயற்சி என்கிறார். காமம் அத்வைதம் காதல் துவைதம்! இதைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!நாம் பொதுவாக காதல்/அன்பு  தன்னை இழக்கும் முயற்சி என்று நினைத்து வந்துள்ளோம்.

 சரி..இப்போது ஒரு கவிதை...with translation 

He whom love touches
Can enjoy no stability.
And he will tasteMany a nameless hour 

உன்னை காதல் தீண்டினால் 
நிலையில்லாமல் போவாய் 
பெயரில்லாத தருணங்களுக்கு 
கைப்பாவை ஆவாய்

 Sometimes burning and sometimes cold,
Sometimes timid and sometimes bold,
The whims of Love are manifold. 

சில நேரம் எரியும் சிலநேரம் குளிரும் 
சிலநேரம் பதுங்கும் சிலநேரம் முழங்கும் 
காதலின் பைத்தியங்களுக்கு கணக்கே இல்லை! 

Sometimes gracious and sometimes cruel,
Sometimes far and sometimes near,
 Oh, how love With one sole act 
Both strikes and embraces!

 கருணை சிலநேரம் கொடூரம் சிலநேரம் 
அருகே சிலநேரம் தொலைவாய் சில சமயம் 
ஒரே ஆத்மா தான் காதலுக்கு 
ஏன் சில சமயம் அடிக்கிறது?
சில சமயம்  அணைக்கிறது?

 Sometimes light, sometimes heavy,
Sometimes somber and sometimes bright,
 In taking and giving,
Thus live the spirits,
Who wonder here below,
Along the paths of Love. 

சிலநேரம் மென்மை சிலநேரம் வன்மை 
இருட்டில் சிலநேரம் ஒளியில் சிலநேரம் 
காதலர்கள் கொடுத்தும் எடுத்தும் வாழ்கிறார்கள் 
அன்பில் பாதையில் ஆச்சரியத்துடன்! 

-Hadewijch of Antwerp

 ஓஷோ ஜோக்
===========

ஹோட்டலில் குழந்தை ஒன்று எப்படியோ ஒரு ரூபாய் காயனை முழுங்கி விட்டது.

அதன் தாய் 'யாராச்சும் காப்பாத்துங்க, சீக்கிரம்" என்று கதறினாள் .

யாராச்சும் டாக்டர் இருக்காங்களா என்று பரபரத்தனர் மற்றவர்கள்.

எங்கிருந்தோ கோட்டு சூட்டு அணிந்த ஆள் ஒருவன் வந்தான்.

 'பதட்டப் படாதீங்க' என்றவன் குழந்தையின் அருகில் சென்று அதை எங்கெங்கோ தட்டினான். சில நிமிடம் கழித்து அந்த காயன் டங் என்ற சத்தத்துடன் வெளியில் வந்து விழுந்தது. 

நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதன் அம்மா, "ரொம்ப நன்றி " "சார், நீங்க யாரு? டாக்டரா, இல்லை மாய மந்திரம் கற்றவரா?" என்றாள் . 

அந்த ஆள் "இரண்டும் இல்லை..நான் இன்கம்டாக்ஸ்-ஸில் வேலை செய்கிறேன் " என்றான். 

சமுத்ரா 

Monday, September 30, 2013

அணு அண்டம் அறிவியல் -74

அணு அண்டம் அறிவியல் -74 உங்களை வரவேற்கிறது.

அறிவியலில் உள்ள ஒரு பெரிய oddity என்ன என்றால், மனிதன், தொலைதூர காலக்ஸிகள் பற்றி தெரிந்து வைத்துள்ளான்.ஆனால் அவன் காலின் கீழே இருக்கும் பூமியைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. The closer a thing is, the little we know about! நமக்கு இன்றும் பூமியின் உள்ளே என்ன இருக்கிறது என்று துல்லியமாகத் தெரியாது. யூகங்களின் பேரில் பூமியை ஒரு மெகா வெங்காயம் போல உருவகித்து நான்கு அடுக்குகளாகப் பிரித்துள்ளார்கள். நாமெல்லாம் இருக்கும் கடினமான ஒரு பாறை அடுக்கு, அடுத்து பாறைகள் உருகி திடமும் அல்லாத திரவமும் அல்லாத ஒரு குழம்பு போன்ற அடுக்கு, அடுத்து முற்றிலும் திரவ அடுக்கு, கடைசியில் , மையத்தில் கடினமான மற்றொரு அடுக்கு.


 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே மனிதன்   நூற்றுக்கணக்கான விண்மீன்களை தெரிந்து வைத்திருந்தாலும் அப்போது பூமியைப் பற்றிய அவன் அறிவு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருந்தது. தோண்டினால் தண்ணீர் வரும், கிணறு வெட்டலாம் அவ்வப்போது நிலநடுக்கும் வருகிறது  என்று மட்டும் தெரிந்திருந்தது.பூமிக்குக் கீழே பாதாள லோகம் + பாதாள பைரவி etc etc இருக்கும் என்று இந்தியாவில் நம்பி வந்தார்கள். சில நாகரீகங்கள் பூமிக்கு அடியில் மனிதனை விட பலமடங்கு சக்தி வாய்ந்த உயிரினங்கள் வாழ்ந்து வந்ததாக நம்பின. இன்று கூட இப்படி 
Fiction திரைப்படங்கள் வருகின்றன!

எட்மன்ட் ஹேலி என்பவர் நம் பூமி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குக் கீழ் வெறும் வெற்று உருண்டை என்கிறார்.!(Hollow earth !) ஒரு பிளாஸ்டிக் பந்து போல! இந்தக் கொள்கை இப்போது நிராகரிக்கப்பட்டு விட்டாலும் இன்னும் சில பேர் இதை நம்புகிறார்கள். extreme ஆன இன்னொரு  தியரி, பற்றி இங்கே கொஞ்சம் பேசலாம்.


The Concave Earth Hypothesis


பிரபஞ்சம் என்பது பூமிக்கு வெளியே இல்லை. உள்ளே இருக்கிறது என்று சொல்கிறது இது . பூமியைத் தவிர வேறொன்றும் இல்லை. பூமி தான் பிரபஞ்சம் என்ற பழைய Geo -centrism கோட்பாடு! பழைய ஒயின் புதிய கோப்பையில்!


 நீண்ட நெடுங்காலமாக மக்கள் பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பி வந்தார்கள்.

என்று படித்திருக்கிறோம். obvious ! சூரியன், சந்திரன் எல்லாம் பூமியை சுற்றுகிறது. கீழே தரை ஆடாமல் அசையாமல் உறுதியாக நிற்கிறது.மேலும் பூமி தான் பிரபஞ்சத்தின் மையம் என்பது நம் ஈகோ-வையும் பூர்த்தி செய்கிறது.சில அதிகப் பிரசிங்கிகள் மட்டும் அவ்வப்போது 'இல்லை, பூமி தான் சூரியனை சுற்றுகிறது (distrust the obvious!) என்று சவுண்டு கொடுத்துக் கொண்டிருந்தாலும் கீழ்க்கண்ட மூன்று காரணங்களால் பூமி தான் மையம் என்று முடிவு கட்டி விட்டனர் .

* பூமி பயணித்துக் கொண்டிருந்தால் நாம் அதன் திசைக்கு எதிரான , ஒரு காற்றோடத்தை உணர வேண்டும். டூ-வீலரில் போகும் போது காற்று நம்மீது வந்து மோதுமே அப்படி. மேலும் பூமி நகரும் போது அந்த அழுத்தத்தை நம் கால்கள் உணர வேண்டும். இப்படியெல்லாம் நடப்பதாகத் தெரியவில்லை.


* பூமி பிரபஞ்சத்தின் மையம். எனவே எல்லாமே மையத்தை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும். அருகில் உள்ள பொருட்கள் (உதா: மரத்தில் இருந்து விழும் ஆப்பிள்) பூமியின் மையத்தை நோக்கி ஈர்க்கப்பட, தொலைவில் உள்ளவை பூமியை  சுற்றி வருகின்றன. ஒருவேளை ,பூமி நிலையாக இல்லை, அது சூரியனை (மையம்) சுற்றுகிறது என்றால் சூரியன் தான் மையம் என்றாகிறது. அப்படி என்றால் ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? அது சூரியனை நோக்கி மேலே அல்லவா போக வேண்டும்?


* பூமி சூரியனை சுற்றும் போது நட்சத்திரங்களின் இருப்பிடம் மாற வேண்டும். (stellar aberration)ஆனால் அப்படி மாறுவதாகத் தெரியவில்லை. எல்லாமே எல்லாப் பருவங்களிலும் அப்படியே நிலை மாறாமல் இருக்கின்றன.



 இந்த வாதங்கள் மிகவும் வலுவானதாக இருந்ததால் இதை எதிர்த்து யாராலும் சூரிய மையக் கொள்கையை நிலைநாட்ட இயலவில்லை. இன்று நமக்கு இந்த மூன்றும் தவறு என்று தெரியும்.

-பூமி, நகரும் போது எல்லாமே ஒட்டு மொத்தமாக நகருகிறது. வளிமண்டலம் உட்பட. எனவே நம்மால் காற்றை உணர முடியவில்லை.


- எல்லாப் பொருட்களும் பிரபஞ்சத்தின் மையத்தை நோக்கி ஈர்க்கப்படுவதில்லை. பக்கத்தில் உள்ள கனமான பொருளின் மையத்தை நோக்கி ஈர்க்கப்படும். எனவே ஆப்பிள் மேலே போவதில்லை.


-நட்சத்திரங்களின் இடமாற்றம் அவை நம்மிடம் இருந்து எத்தனை தொலைவில் இருக்கின்றன என்பதைப் பொருத்தது. பூமி- சூரியன் தொலைவுடன் ஒப்பிடும்போது நட்சத்திரங்கள் மிக மிக அதிக தூரத்தில் இருப்பதால் பூமி எங்கிருந்தாலும் அவைகளின் நிலைகள் அவ்வளவாக மாறுவதில்லை. இதை விளக்க ஒரு எளிமையான சோதனை செய்து பார்க்கலாம்.உங்கள் இடது கை கட்டை விரலை இரண்டு கண்களுக்கு இடையே உள்ள இடத்தில் கண்களுக்கு மிக அருகில் பிடிக்கவும். இப்போது இடது கண்ணை மூடிக் கொண்டு வலது கண்ணால் விரலைப் பார்க்கவும். 
பிறகு வலது கண்ணை மூடிக் கொண்டு இடது கண்ணால் விரலைப் பார்க்கவும். இரண்டு நிலைகளில் விரல் இடம் மாறி இருப்பது அப்பட்டமாகத் தெரியும். தூரத்தில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை (ஜன்னல்) நீங்கள் reference ஆக எடுத்துக் கொள்ளலாம். இப்போது அதே விரலை கண்களில் இருந்து அதிக தொலைவில் கையை எத்தனை நீட்ட முடியுமோ அத்தனை தொலைவில் பிடிக்கவும். இப்போது மீண்டும் பழைய படி செய்யவும். விரல் கண்களில் இருந்து தூரம் இருப்பதால் இரண்டு நிலைகளில் பெரும்பாலும் மாற்றம் இருப்பதில்லை!அதே போல, விண்மீன் நமக்கு அருகில் இருந்தால் அதன் நிலை பூமி நகரும் போது வானில் அடிக்கடி மாறும்.தூரத்தில் இருந்தால் நம் வெற்றுக் கண்களால் உணர முடியாத படி ரொம்பக் குறைவாகவே இடம் மாறும்.

-

 சரி. The Concave Earth Hypothesisஎன்ற இந்தக் கோட்பாடு, நாம் பூமியின் வெளி அடுக்கில் வாழ்வதில்லை. காலியான பூமியின் உள் அடுக்கில் இருக்கிறோம் என்கிறது . சூரியன், சந்திரன், நட்சத்திரம் , பிரபஞ்சம் எல்லாம் உள்ளே!படத்தைப் பார்க்கவும்.concave என்றால் வெளியே குவிக்கப்பட்ட என்று அர்த்தம்.





ஆச்சரியமாக ,வெளியே இருக்கும் பிரபஞ்சத்துக்கு பொருந்தும் இயற்பியல் விதிகள் பிரபஞ்சம் உள்ளே இருந்தாலும் பொருந்துகின்றன. 'வெளியே இருப்பது எதுவோ அதுவே உள்ளேயும்  இருக்கிறது' என்று உபநிஷத் கூறுவது போல. பிரபஞ்சவியலில் உள்ளே வெளியே என்பவை அர்த்தமற்றவை என்பதால் இப்படி இருக்கவும் சாத்தியம் இருக்கிறது. இந்த மாடல், பிரபஞ்சமே ஒரு Optical illusion என்கிறது. நிலா, விண்மீன், நெபுல்லா எல்லாமே பூமிக்கு உள்ளே (?) இருக்கும் சூரியனின் ஒளி வளைந்து வளைந்து வருவதால் ஏற்படும் 'காட்சிப் பிழைகள்' that's  it !ஒரு விண்மீன் நமக்கு, நம் கண்களுக்குத் தெரிகிறது என்பதால் மட்டுமே அது 'இருக்கிறது' என்று எப்படி சொல்ல முடியும்? ஆதி மனிதன் வானம் முழுவதும் வெளிச்சம் என்றும் அதை ஒரு கறுப்புப் போர்வை மறைக்கிறது என்றும் நம்பினான்.அந்தப் போர்வையில் உள்ள வித
வித ஓட்டைகள் தான் சூரியன் சந்திரன் , நட்சத்திரங்கள் என்றும் நினைத்தான். இதுவும் ஏற்றுக் கொள்ளத் தக்க மாடல்தான். அறிவியலில் எந்த மாடலையும் நாம் சரி என்றோ தவறு என்றோ சொல்லிவிட முடியாது. இந்த மாடல் நம் ஆய்வுகளுடன் ஒத்துப் போகிறது என்ற அளவில் மட்டுமே சொல்ல முடியும். ஹாக்கிங் சொல்வது போல அணுவுக்குள் அணுக்கரு இருக்கிறது; அதை எலக்ட்ரான் சுற்றுகிறது என்று சொல்வது தவறு. அணு ஒன்று அதனுள் அணுக்கரு இருந்தால் அதை எதிர்த் துகள் ஒன்று சுற்றி வந்தால் எப்படி நடந்து கொள்ளுமோ அப்படி நடந்து கொள்கிறது என்று மட்டுமே சொல்ல முடியும். 



கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.



 இந்தப் படத்தில் இருக்கும் கீழ் நோக்கிய முக்கோணம் உண்மையில் இல்லவே இல்லை !


எனவே, நாம் பார்ப்பது ஒன்றினால் மட்டுமே ஒரு பொருளின் இருப்பை உறுதி செய்ய முடியாது. அதே போல நாம் பார்க்க முடியாததால் ஒரு பொருள் இல்லை என்றும் சொல்லிவிட இயலாது.
சில பேர், நகர்வு (motion ) என்பதையே மாயை என்கிறார்கள். கீழே உள்ள படத்தைப் பார்க்கவும். 



அதுவும் ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கொள்கைக்குப் பிறகு நிலையான பொருளுக்கும் சீராக நகரும் பொருளுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. Motion ஆச்சரியமாக 'நகர்தல்' என்பதற்கு வரையறைகள் இல்லை...motion mountain என்று ஒரு e -book வருகிறது. முடிந்தால் படித்துப் பாருங்கள்.  நிலையாக இருக்கும் போதும் அதிவேக இயக்கத்தில் இருக்கும் போதும் ஒரு பொருளின் அடிப்படைக் கட்டமைப்பு மாறுவதில்லை. இயற்கையின் விதிகளும் மாறுவதில்லை.வேகமாக நகரும் பொருளுக்கும் உள்ளே அணுக்கள் இயங்கும். ப்ரோட்டான் எலக்ட்ரானை இழுக்கும். ஈர்ப்பு வேலை செய்யும். சிலருக்கு பஸ்ஸில் போனால் வாந்தி வருகிறதே என்றால் அதற்கு வேறு சின்னச் சின்ன லௌகீக காரணங்கள் மட்டுமே. மற்றபடி நீங்கள் 70-A பஸ்ஸில் தாம்பரம் போய்க்கொண்டு இருக்கிறீர்கள் என்று உங்கள் உடம்பில் உள்ள அணுக்களுக்குத் தெரியாது. இயக்கத்தின் special case ஆன Acceleration என்பது கொஞ்சம் விஷயங்களை சிக்கலாக்குகிறது. பஸ்ஸில் (ஒழுங்கான வேகத்தில்) போனால் அது நமக்குத் தெரியாது சரி. பஸ் சடன் பிரேக் போட்டால் ஏன் முன்னே போய் விழுகிறோம்? இதை வைத்து நாம் இயக்கத்தில் இருக்கிறோம் அல்லது இருந்தோம் என்று சொல்லி விட முடியும் அல்லவா?





நியூட்டன் காலத்தில் இருந்தே ஒரு விஷயம் புதிராக இருந்து வந்துள்ளது. அது என்ன என்றால் 
Symmetrical differential equations in an accelerated and inertial frames of motion.. சும்மா பயமுறுத்த சொன்னேன்.அப்படி எதுவும் கிடையாது. அது என்ன என்றால் பக்கெட். ஆம் நாம் பாத் ரூமில் உபயோகிக்கும் பக்கெட்.நம்மாட்கள் பக்கெட்டில் விழுந்த ஓட்டையை எப்படி அடைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க, நியூட்டன், பக்கெட்டை வைத்து பிரபஞ்சத்தின் ஒரு ஆதாரமான புதிரை யோசித்துக் கொண்டிருந்தார் Newton's bucket என்று அழைக்கப்படும் இந்த ஆய்வு எளிமையானது. நீர் நிறைந்த ஒரு பக்கெட்டை கயிற்றில் கட்டி தொங்க விட்டு முறுக்கி விட வேண்டியது. முறுக்கப்பட்ட கயிறு விடுபடும் போது பக்கெட்டில் உள்ள தண்ணீர் நடுவில் குழிந்து ஒரு கிண்ணம் போன்ற ஒரு concave வடிவத்தை எட்டுகிறது.தண்ணீர் ஏன் இந்த வடிவத்தை ஏற்க வேண்டும் என்பது நியூட்டனின் கேள்வி...பக்கெட் சுழல்வதால் அப்படி நடக்கிறது என்று சுலபமாக சொல்லி விட முடியாது.ஆனால் நியூட்டன், தண்ணீர் 'எதைப் பொறுத்து' சுழல்கிறது என்று கேட்கிறார்..தண்ணீர் , பாக்கெட்டைப் பொறுத்து சுழல முடியாது. ஏனென்றால் பக்கெட்டின் சுவரும் அதே வேகத்தில் சுழல்கிறது...

நியூட்டன், நீரின் வடிவம் அது absolute space எனப்படும் மாறாத வெளியைப் பொறுத்து சுழல்வதால் ஏற்படுகிறது என்று எண்ணினார். ஒரு பொருள் நிலையாக இருக்கும் போது அது absolute space ஐப் பொறுத்து நிலையாக இருக்கிறது; நகரும் போது absolute space -ஐப் பொறுத்து நகர்கிறது. முடுக்கத்தின் போது (acceleration )absolute space ஐப் பொறுத்து முடுக்கப்படுகிறது என்று உறுதியாக நம்பினார்.

ஆனால், absolute space என்பது என்ன என்பதை நியூட்டன் சரியாக வரையறுக்க வில்லை.

Leibniz என்னும் ஜெர்மன் இயற்பியல் அறிர், வெளி, absolute space என்ற ஒன்று கிடையாது என்று வாதிடுகிறார். வெளி என்பது பொருட்களை குறிப்பிட உதவும் ஒரு concept அவ்வளவே என்கிறார். பிரபஞ்சத்தில் பொருட்களே இல்லை என்றால் வெளி என்பதற்கு எந்த அர்த்தமும் இருக்க முடியாது என்றும் சொல்கிறார்.மேலும் அவர், வெளி என்பது absolute ஆக எல்லாவற்றுக்கும் ஒரு பின்புல reference ஆக இருக்கும் பட்சத்தில், கடவுள் அந்த அனந்த வெளியில் பிரபஞ்சத்தை எங்கே உருவாக்குவது என்று எப்படித் தீர்மானிக்க முடியும் என்று கேட்கிறார்.

நியூட்டன், absolute space என்ற ஒரு reference ஐ எடுத்துக் கொண்டது ஒரு தேவையில்லாத broad step என்கிறார்கள். பக்கெட்டில் உள்ள தண்ணீர் ஆய்வு நடந்து கொண்டிருக்கும் அறையின் சுவர்களைப் பொறுத்து சுழல்கிறது என்று அந்த சுவர்களை ஒரு reference ஆக வைத்துக் கொண்டிருக்கலாம். அல்லது பூமியை அல்லது தொலைவில் உள்ள ஒரு நிலையான நட்சத்திரத்தை....! absolute space என்பதற்கு எந்த அவசியமும் இல்லை!

இதே ஆய்வை பூமியில் இருந்து விலகி,  எந்த பொருட்களும் இல்லாத வெட்ட வெளியில் செய்வதாகக் கொள்வோம். அப்போது சுழலும் பக்கெட்டில் உள்ள நீர் எந்த வடிவத்தை ஏற்கும்?? அப்போது கூட நாம் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரங்களை reference ஆக வைத்துக் கொண்டு நிலையான நட்சத்திரத்தை பொறுத்து தண்ணீர் சுழல்கிறது என்று சொல்லலாம். ஆனால் அதுவும் இல்லாத எதுவுமே இல்லாத வெட்ட வெளியில் தண்ணீர் சுழலாமல் அப்படியே இருக்கும் என்கிறார் மாக் என்னும் விஞ்ஞானி.

Ernest Mach , நாம் இயக்கத்தை, சுழற்சியை, acceleration ஐ  உணர்வது பிரபஞ்சத்தில் இருக்கும் இன்ன பிற பொருட்களின் இருப்பினால் தான் என்கிறார். அதாவது பிரபஞ்சத்திலேயே நம்முடைய பேருந்து மாத்திரம் இருப்பதாகக் கொள்வோம். அப்போது அது நகர்ந்தாலோ அல்லது நகரும் போது சடன் பிரேக் போட்டாலோ அதை நாம் உணர மாட்டோம். அந்த பஸ்ஸினுள் பிடித்துக் கொள்ள கம்பிகள் எதுவும் தேவையில்லை என்கிறார் மாக்.

ஆகவே, இயக்கம் என்பதே கிட்டத்தட்ட மாயை என்று சொல்லலாம் போலிருக்கிறது.


புத்தர் எத்தனை பேர் சொன்னாலும் கேட்காமல் அங்குலிமாலன் இருக்கும் காட்டுக்குள் நடந்து வருகிறார்.அவன் ஒரு பாறை மேல் உட்கார்ந்திருக்கிறான்.

கொலைகார அங்குலி மாலன், "நில், நகராதே, அசையாதே, அங்கேயே நில் " என்று கத்துகிறான்.

புத்தரோ , "நான் நகரவே இல்லையப்பா.. நான் நகர்வதை என்றோ நிறுத்தி விட்டேன். நீ தான் நகர்ந்து கொண்டு இருக்கிறாய்' என்கிறார்.





ok....பூமிக்குத் திரும்புவோம். 


மனிதனால் உள்ளே நுழைந்து என்ன இருக்கிறது என்று நேரடியாகப் பார்க்க முடியாது.காரணம்: கொதிக்கும் வெப்பம் மற்றும் அழுத்தம்! (சில பேர் பூமியின் உள்ளக வெப்பத்துக்கு அங்கே நடந்து கொண்டிருக்கும் cold fusion காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். உள்ளே ஒரு சூரியன்! )சயின்ஸ் பிக்சன் கதைகளில் மட்டுமே இது சாத்தியம் பார்க்க :Journey to the Center of the Earth -Jules Verne. படிக்க மிகவும் சுவாரஸ்யமான புத்தகம்!


பின்னர் எப்படி பூமிக்குள் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார்கள் என்றால் டைனமைட் போன்ற சமாச்சாரங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட இயந்திர அதிர்வுகளை பூமிக்குள் அனுப்பி அவைகள் எப்படி திரும்பி வருகின்றன என்பதை வைத்து பூமிக்குள் இந்த இந்த அடுக்குகள் இருக்கலாம் என்று கண்டுபிடிக்கிறார்கள்.(சோனார் போல!)மேலும் பூகம்பங்கள் இயற்கையாகவே ஒரு seismic waves போல செயல்படுகின்றன. நில நடுக்கத்துப் பிறகு வீடு போச்சே சித்தப்பா உள்ள போயிட்டாரே என்ற  லௌகீக கவலைகளை விட்டு விட்டு சின்சியராக சில ஜியாலஜிஸ்ட்கள் சீஸ்மோகிராப் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.



Samudra