கலைடாஸ்கோப் -66 உங்களை வரவேற்கிறது.
பூனைகளைப் பற்றிய ஒரு கவிதை. -மனுஷ்யபுத்திரன்
பூனை
எச்சரிக்கை உணர்வுள்ள மிருகம்
மழைக்கான அறிகுறி துவங்கும் முன்பே-அது தன்
குட்டிகளை எங்கோ ஒளித்து வைத்துவிடுகிறது.
பூனை உள்ளுணர்வுள்ள ஒரு மிருகம்
எந்த இருட்டிலும் அதற்குத்
தன் பாதைகள் தெரியும்.
பூனை நம்பிக்கையுள்ள ஒரு மிருகம்
எத்தனை நேரம் ஆனாலும் அது
எனக்காகக் காத்திருக்கிறது.
பூனை பிடிவாதமுள்ள ஒரு மிருகம்
அது தனக்கான உணவைப் பெற்றுக் கொள்ளும்வரை
அங்கேயே நின்று கொண்டிருக்கிறது.
-இப்படி நீள்கிறது அந்தக் கவிதை.
எந்த மிருகத்திற்கும் இல்லாத ஓர் அழகு பூனைக்கு இருப்பது போலத் தோன்றுகிறது. மனிதர்களை பயமுறுத்தாத அதன் அளவான உருவம், சிறிய புடைத்த காதுகள், கூர்மையான கண்ணாடி போன்ற கண்கள், மெத்தென்ற உடல்...சில சமயங்களில் பூனை தவம் செய்யும் ஒரு ஞானியைப் போல் மோன நிலையில் உட்கார்ந்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.எனக்கு நாய்களை விட பூனைகளைத் தான் அதிகம் பிடிக்கும். வீட்டுக்கு புதிதாக வருபவர்களை 'வள்' என்று எரிந்து விழுந்து எந்தப் பூனையும் பயமுறுத்துவதில்லை.தங்கள் எஜமான விசுவாசத்தை அந்தப் பிராணிகள் மிகவும் delicate ஆக சூக்சுமமாகவே வெளிப்படுத்துகின்றன .நாய்களைப் போல மேலே வந்து விழுந்து உடலெங்கும் நாக்கால் வருடாமல் நம் கால்களை நாணத்தோடு உரசுகின்றன.மனிதர்களின் மன நிலையை பூனைகள் நாய்களை விட அதிகமாகவே புரிந்து கொள்கின்றன என்றே தோன்றுகிறது.
பூனை, குட்டி போடும் இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு மிகவும் மெனக்கெடுகிறது. மனித இனம்தான் அடிவயிற்றில் லேசாக வலிவந்தாலே ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறது.பெரும்பாலான மிருகங்கள் SELF DELIVERY தான் செய்து கொள்கின்றன. பீரோக்களின் அடியில், டி.வி வாங்கிய அட்டைப்பெட்டியில், பழைய துணிக்கூடையில், வீட்டு உத்திரத்தில் என்று பூனை தன் குட்டிகளை மிகவும் பாதுகாப்பாக வைக்கிறது.கொஞ்சம் ஆபத்து என்று தெரிந்தாலும் உடனே இடம் மாற்றி விடுகிறது.குட்டிப் பூனைகள் சுற்றி விளையாடிக் கொண்டிருக்க தன் வாலை மட்டும் அசைத்தபடி அரைக்கண் மூடிப் படுத்திருக்கும் தாய்ப் பூனையைப் பார்ப்பது ஒரு பரவசம்!
பூனைகளிடம் இருந்து நாம் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று தோன்றுகிறது. ஓஷோ சொல்வது போல RELAXED YET WATCHFUL என்ற விழிப்பு நிலையும் ஓய்வும் கலந்த ஒரு நிலையில் பூனைகள் இருக்கின்றன. நாம் விழிப்பு நிலையில் ஓய்வை மறந்து விடுகிறோம்! பசித்திருந்தாலும் பூனை தன்னை சுத்தம் செய்து கொள்ள மறப்பதே இல்லை. வழியில் எத்தனை தடைகள் வந்தாலும் பூனை தன் உடலை வளைத்து எத்தனை குறுகிய இடத்திலும் நுழைந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறது.பூனை தன்மானம் உள்ள மிருகமும் கூட. பல சமயங்களில் நாம் நிராகரித்த உணவை அது தொடுவதே இல்லை.
என்னதான் வீட்டில் பாலும் தயிரும் போட்டு வளர்த்தாலும் பக்கத்து வீட்டு சமையல் அறையை நோண்டி தயிரும் பாலும் திருடுவதில் சுகம் காண்பதில் பூனை கிருஷ்ண பரமாத்மாவை ஒத்துள்ளது.
பூனை நான்காவது மாடியில் இருந்து குதித்தாலும் எந்த வித பாதிப்பும் இன்றி உயிர் பிழைத்து விடும் என்று படித்த ஞாபகம். அது கீழே லேன்ட் ஆகும் போது தன் உடலையே ஒரு பாராசூட் போல செயல்படுத்துகிறதாம்!
சில வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் பிங்கி என்ற பூனை இருந்தது. எங்களுடன் ரொம்பவே நெருக்கமாக இருந்தது. ஒரு முறை நான்கு குட்டிகளைப் போட்டிருந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு வழக்கம் போல வீட்டை விட்டு எங்கோ சென்றது. ஆனால் பாவம் திரும்பி வரவே இல்லை.என்ன ஆயிற்று, நாய் கடித்து விட்டதா, வாகனத்தில் அடிபட்டு விட்டதா ஒன்றும் தெரியவில்லை. குட்டிகள் பாலுக்காக கத்தத் தொடங்கின. தேங்காய்த் தொட்டியில் வைத்த பாலையும் குடிக்கத் தெரியவில்லை. கடைசியில் குட்டிகள் கண் முன்னே சாவதை விரும்பாத நாங்கள் ஒரு சாக்கில் போட்டு தொலைதூரத்தில் விட்டு வந்து விட்டோம்.இப்போது நினைத்தாலும் மனதை கனமாக்கும் நிகழ்வு அது.
இந்த லிங்கில் எறும்புகளோடு பேச்சுவார்த்தை என்ற கவிதை உள்ளது. எழுதியது வைரமுத்து. படித்துப் பாருங்கள்.
Yesterday I played golf at 11:30 pm, and the day before I went for a long walk at 2 am. It doesn't matter what time it is, and I need less sleep. Simon Wilson, England
பூமியின் (வட அரைக்கோளத்தின்) 'மிக நீண்ட நாள் ' நேற்று வந்திருக்கிறது. (பொதுவாக ஜூன் 21 ). பகல் பொழுது மிக அதிகமாக இருக்கும் நாள்.ஆங்கிலத்தில் இதை Summer Solstice என்று அழைக்கிறார்கள். நமக்கு வெய்யில் காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்ட போதிலும் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் இது வேனிற்காலத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
இப்போது இந்தப் படத்தைப் பாருங்கள். படத்தில் சூரியனின் நிலையை வைத்துக் கொண்டு அதன் நேரத்தை ஊகியுங்கள். 6 -7 am என்றோ 6 -7 pm என்றோ சொன்னால் நீங்கள் தப்பு. இந்தப் படம் நடு ராத்திரிக்கு சிறிது நேரத்துக்குப் பிறகு எடுக்கப்பட்டது. 'நார்வேயில்' .. இப்போது நார்வே நாட்டுக்கு சுற்றுலா சென்றால் அதன் 'நள்ளிரவு' சூரியனை (Mid night Sun ) நாம் தரிசிக்க முடியும்.வருடத்துக்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அங்கே சூரியன் முழுவதும் மறைவதே இல்லை. தொடுவானத்துக்கு அருகிலேயே எதையோ மறந்து விட்டது போல தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. 'சூரியன் மேற்கே மறைய மறந்தாலும்' 'கிழக்கே உதிக்க மறந்தாலும்' 'விடியாத இரவென்று ஏதும் இல்லை' போன்ற புளித்துப் போன இலக்கிய/சினிமா டயலாக்குகள் வடக்கே நகர நகர செல்லுபடியாகாது.வட துருவத்தில் இன்னும் மோசம். வருடத்துக்கு ஒருமுறை தான் சூரிய உதயம்/அஸ்தமனம்.
வட துருவத்துக்கு அருகேயுள்ள கனடா போன்ற நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களை இது குழப்புகிறது.கோடையில் இரவு ஒன்பது மணிவரை வெளிச்சம் இருக்கிறது. குளிர் காலத்தில் மூன்றரை மணிக்கே இருட்டத் தொடங்கி விடுகிறது. ஆபீஸ் ஆன்சைட்டில் கனடா சென்றிருந்த போது இந்த விஷயங்கள் புதுமையாக இருந்தன.இரவு ஒன்பது மணிக்கு சூரியனைப் பார்ப்பது பரவசமாக இருந்தது.மேலும் அவர்கள் DAY LIGHT SAVINGS என்று சொல்லி கோடையில் வேண்டுமென்றே கடிகாரங்களை ஒரு மணி நேரம் Advanced ஆக திருப்பிக் கொள்கிறார்கள். உண்மையில் காலை ஐந்து மணி தான் ஆகியிருக்கும். ஆனால் ஆறுமணி என்று வைத்துக் கொள்கிறார்கள்.பகல் வெளிச்சத்தை பயன்படுத்திக் கொண்டு மின் விளக்குகளின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என்று அப்படி செய்கிறார்கள்.'கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி' என்று அஜீத் பாடுவது போல. கனடா ஆபீசில் இன்னும் கடிகாரங்களை அட்ஜஸ்ட் செய்யாதவர்கள் ஒருமணிநேரம் முன்னதாக வைத்துக் கொள்ளவும் என்று அறிவிப்பு செய்தது புதுமையாக இருந்தது.
வெளிநாட்டு சுற்றுலாவில் என் முதல் சாய்ஸ் 'நார்வே' தான்...இந்த ப்ளாக்கின் வாசகர்கள் யாராவது ....(வேண்டாம்..சாரு லெவலுக்கு பில்ட் அப் இப்போதே வேண்டாம்)
தன் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை அதிகம் மாறாத ஒரே விளையாட்டு சதுரங்கம் என்கிறார்கள். என்னதான் இந்த விளையாட்டு மனிதனுள் இருக்கும் போர்க்குணத்தை, வன்முறையை அதிகரிக்கிறது (எப்படா அடுத்தவனை வெட்டலாம்) என்று ஒரு சாரார் குற்றம் சாட்டினாலும் செஸ் பொதுவாக மனிதனின் புத்திக் கூர்மையை, பிரச்சனைகளை சுலபமாகத் தீர்க்கும் Problem solving skill களை ,முடிவெடுக்கும் திறமையை, பின்னால் வரும் சிக்கல்களை முன்பே ஊகிக்கும் திறமையை வெகுவாக வளர்க்கிறது என்கிறார்கள்.முடிந்தால் பள்ளிகளில் செஸ் விளையாட்டை கட்டாயமாக்குவது நல்லது. விஸ்வநாதன் ஆனந்த் அளவு சாம்பியன் ஆக வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாவிட்டாலும் CHESS IS FUN !
ஒரு விதத்தில் நம் வாழ்க்கையே ஒரு மிகப் பெரிய சதுரங்க விளையாட்டு தான். விதி நமக்கு எதிராக காய்களை அனாயாசமாக நகர்த்துகிறது. சில சமயம் விதியை நாம் வென்று விடுகிறோம். அல்லது வெல்வதாக நினைத்துக் கொள்கிறோம். பல சமயங்களில் விதி நம்மை இங்கும் அங்கும் நகர விடாமல் நமக்கு check mate வைத்து விடுகிறது.அதற்கு நம் அடுத்தடுத்த நகர்ச்சிகளை முன்பே ஊகிக்கும் திறமை இருக்கிறது.
செஸ்ஸில் போர்வீரன் ஒருவன் கட்டத்தின் அடுத்த முனைக்கு போய் விட்டால் அவனுக்கு ராணியின் பலம் வந்து விடும் என்று நமக்குத் தெரியும். எதிரியை மிகவும் பக்கத்தில் அனுமதிக்கக் கூடாது என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.மந்திரி குறுக்கே மட்டும் நகர்கிறது. மந்திரி என்பவர் குறுக்கு வழிகளில் சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.[இதை இன்றைய மந்திரிகளுக்கு சொல்லித் தரவும் வேண்டுமோ?] ராஜா முக்கியம் என்றாலும் அது ஒரு டம்மி பீஸ் . காட்டில் ஆண் சிங்கம் ஹாயாக உட்கார்ந்திருக்க பெண் சிங்கங்கள் வேட்டையாடுவது போல செஸ்ஸிலும் ராணி மட்டுமே புகுந்து விளையாடுகிறது. எனக்கு மிகவும் பிடித்த ஒரு பீஸ் யானை தான். நேர்மையான பீஸும் கூட. குறுக்கே வெட்டுவதில்லை. எப்போதும் நேராகவே செல்கிறது. இதனால்தானோ என்னவோ யானையால் வெட்டுப்படுவது அந்த விளையாட்டில் மிகவும் குறைவாக இருக்கிறது.
சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து client ஒருவர் இங்கே ஆபீசுக்கு வந்திருந்தார். வழக்கம் போல எங்கள் மேனேஜர் அவரிடம் ஓவராக வழிந்து கொண்டு மைசூர் , பேலூர் என்று சுற்றிக் காட்டி நல்ல பெயர் வாங்கிக் கொண்டார்.இந்தியர்களின் ஒரு விஷயம் தன்னை மிகவும் ஆச்சரியமூட்டுவதாக அந்த client ,மீட்டிங் இன் போது சொன்னார்.அது, இந்தியர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கும் விதம் விதமான , வகை வகையான , கலர் கலரான இனிப்புகள்.வெளிநாட்டில் டோனட் எனப்படும் இனிப்பை விட்டு வேறு பார்த்ததில்லை என்று அவர் சொன்னார்.சர்க்கரையையும் மாவையும் வைத்துக் கொண்டு எத்தனை இனிப்பு காம்பினேஷன் களை இந்தியர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள் என்று வியந்தார்.
ஒரு சிம்பிளான இனிப்பு கூட இல்லாத இந்திய மதிய உணவை நினைத்துப் பார்ப்பது கஷ்டம் தான். வெளிநாட்டில் ஆபீஸ் நண்பர் ஒருவர் இரவு உணவுக்கு அழைத்திருந்தார்.(மனைவியுடன் வந்திருந்தார்). விருந்து தடபுடலாக இருந்தது. ஆனால் ஸ்வீட் செய்ய மறந்து விட்டார் மனைவி. கடைசியில் சாப்பிட்டு கைகழுவும் போது தான் இந்த விஷயம் அவர் மனைவிக்கு ஞாபகம் வந்தது. ஏதோ செய்யக்கூடாத தவறு நிகழ்ந்து விட்டது போல நெர்வஸ் ஆகி விட்டார் அவர் மனைவி. (மிகவும் traditional போலும்)அய்யோ ஸ்வீட் வைக்கவில்லையே, அது தப்பாச்சே என்று கடைசி வரை புலம்பிக் கொண்டே இருந்தார். நண்பர் பிரிட்ஜில் இருந்த சாக்லேட்டை ஸ்வீட்டாக பாவித்து (ஸ்வீட் எடு கொண்டாடு!) சாப்பிடப் பணிக்கும் வரை அவர் ஓயவில்லை. 'இனிப்பு' என்பது இந்தியர்களின் உணவில் எத்தனை முக்கியமான பங்கு வகிக்கிறது பாருங்கள். காலையில் எழுந்ததும் வாசல் தெளித்து கோலம் போடுவது போல தான் இந்த இனிப்பு சமாச்சாரமும். எல்லாம் மங்களகரமாக இருக்கிறது என்று மறைமுகமாக அறிவிப்பது!
இனிப்பை வைத்துக் கொண்டு இந்தியர்களிடையே, குறிப்பாக தென்னிந்தியர்கள் , குறிப்பாக பிராமணர்களிடையே நிறைய வேடிக்கைகள் சண்டைகள் நடந்துள்ளன.மைசூர் பாக்கில் எண்ணெய் சேர்த்து விட்டார்கள், ஜிலேபியில் ஸ்வீட் கம்மி, லட்டு கெட்டியாகப் போய் விட்டது போன்ற ஜுஜுபி மேட்டர்களுக்குக் கூட கல்யாணமே நின்று போகும் அளவு கொண்டு வந்திருக்கிறார்கள். அதே போல இனிப்பு இல்லாத பண்டிகைகளை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.ராம நவமிக்குப் பானகம், விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை , கிருஷ்ண ஜென்மாஷ்டமிக்கு ரவாலட்டு என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு இனிப்பை Associate செய்து விட்டோம் நாம்.
எனக்கு பிடிக்காத ஸ்வீட் என்றால் இந்த so called மைசூர் பாக்.என்ன தான் நெய் விட்டு மிருதுவாக செய்திருந்தாலும் மை.பா என்றாலே மைல் தூரம் ஓடி விடுவேன்.மிகவும் பிடித்தது இந்த so called பாதுஷா.குங்குமப் பூவெல்லாம் போட்டு கலர்புல் ஆக இருக்குமே அதே தான்.அதை சாப்பிடும் போதே ஒரு பரவச நிலை உள்ளிருந்து கிளம்பும். ஜிலேபி கூட ஓகே தான். சிக்கலாக இருந்தாலும் சில சமயங்களில் வாழ்க்கை இனிப்பாகவும் இருக்கிறது என்ற தத்துவத்தை (இந்த தத்துவம் சொல்லும் பழக்கத்தை விட மாட்டான் இவன்!)ஜிலேபியில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஜாமூன் ஓகே தான். ஆனால் அது வாயில் வைக்கும் முன்னரே கரைந்து விடுவதால் அதன் மீது எனக்கு ஒரு அன்பான எரிச்சல்! சரி. இனிப்புகளை பற்றிப் பேசி தேவையில்லாமல் உங்கள் நாவின் உணர்ச்சி நரம்புகளை புடைக்க வைத்த பாவம் தீர்வதற்கு சில ஓஷோ ஜோக்குகள்.
ஒரு ஆள் மிக வேகமாக காரை டிரைவ் செய்ததற்காக ட்ராபிக் போலீசால் பிடிக்கப்பட்டான். அதிவேகத்திற்கான தண்டனை சீட்டு எழுதும் முன் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது.
" நான் அப்பவே சொன்னேன், கேட்டா தானே நீங்க? இத்தனை வேகமாகவா போறது? அறிவில்லையா? அங்கே ஹாரன் அடிக்க சொன்னேனே ஏன் அடிக்கலை?எத்தனை தடவை சொல்றது? ஸ்பீடா போக வேண்டாம்னு? திருந்தவே மாட்டீங்களா? காசை தண்டம் அழறதே வேலையாப் போச்சு. நான் சொல்லறதை கேட்டாதானே மூளை மளுங்கிருச்சா?"
ட்ராபிக் போலீஸ் சீட்டை கிழித்துப் போட்டு விட்டு ' சார் , நீங்க போங்க, இந்த தண்டனையே உங்களுக்குப் போதும்' என்றார்.
:):):)
முல்லா நசுருதீன் தியேட்டர் ஒன்றில் இண்டர்வல் முடிந்து சீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
வரிசையின் கடைசியில் அமர்ந்திருந்த ஆளைப் பார்த்து 'என்னங்க , நான் போகறப்ப உங்க காலை மிதிச்சுட்டேனா?' என்றார்.
'ஆமாம்' என்றான் அந்த ஆள். முல்லா மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்த்து.
முல்லா பக்கத்தில் நின்றிருந்த மனைவியிடம் திரும்பி 'அப்பாடா இது நம்ம வரிசை தான். குழப்பம் தீர்ந்துச்சு' என்றார்.
:):):)
முல்லா நசுருதீன் பயங்கரமாகக் குடித்து விட்டு தன் காரில் ஏறிக் கொண்டிருந்த போது ஒரு போலீஸ்காரர் பார்த்து விட்டார்.
'நீங்க காரை ஓட்டப் போறதில்லை தானே?' என்று கேட்டார் டிராபிக் போலீஸ்.
'கண்டிப்பா ஓட்டுவேன். என்ன லூசு மாதிரி பேசறீங்க, இப்ப நான் இருக்கிற கண்டிஷன்ல என்னால எப்படி நடந்து போக முடியும்' என்றார் முல்லா.
:):):)
சமுத்ரா
5 comments:
பூனயயை நீங்கள் தூக்கிப்போட்டால் சரியாக விழுவது cat righting reflex என்கிறார்கள் யு tube இல் நிறைய காணொளி இருக்கிறது பாருங்களேன்
http://en.wikipedia.org/wiki/Cat_righting_reflex.
செஸ் விளையாடனுமா? வாங்க , அதுக்குள்ளே இருக்குற சில "சமாச்சாரங்களை " சொல்லித்தர்றேன்., தினமும் செஸ் விளையாடாம தூங்குரதில்லை., எனது கடைசி இடுகை பார்கலைன்னு நினைக்கிறேன் !
பூனை பற்றிய தகவல்கள் தெரிந்தவைதான் என்றாலும் சுவாரஸ்யம். ஆனாலும் எனகென்னவோ நாய்தான் பிடிக்கும்! பூனையைத் தூக்கி உயரே சுவரில் எறிந்தால் சுவரில் கப்பென ஒட்டிக் கொள்ளும்!
வருடத்தின் மிக நீண்ட பகல் பொழுது ஜூன் 21 ஆ, 22 ஆ என்று சந்தேகம் உண்டு எனக்கு!மறையாத சூரியன் பேஜார்தான் இல்லை?!
ஸ்வீட்டில் பிடிக்காது என்று ஒன்று உண்டு என்று சொல்வதே ஆச்சர்யம். அதிகமாக விரும்பாதது என்று வேண்டுமானால் சொல்லலாமோ...
ஜோக்ஸ் எல்லாமே ரசிக்க முடிந்தது.
கலைடாஸ்கோப்புக்கு நன்றி. பூனைக்கும் நாய்க்கும் இருக்கும் முக்கிய வித்தியாசம் DOGS ARE FAITHFUL TO THE PEOPLE. BUT CATS ARE FAITHFUL (? ) TO THE PLACE.I LIKE DOGS RATHER I DISLIKE CATS. பாலிலிருந்து செய்யும் இனிப்பைவிட மற்றவை விருப்பம் அதிகம். அது என்ன, நமக்குள் இவ்வளவு பேதம் எனக்கு பாதுஷா பிடிக்காது. கலைடாஸ்கோப் எல்லாமே ரசிக்கிறேன். அதுதான் எதையும் குறிப்பிட்டு எழுதவில்லை.
//என்னதான் வீட்டில் பாலும் தயிரும் போட்டு வளர்த்தாலும் பக்கத்து வீட்டு சமையல் அறையை நோண்டி தயிரும் பாலும் திருடுவதில் சுகம் காண்பதில் பூனை கிருஷ்ண பரமாத்மாவை ஒத்துள்ளது.//
Nice lines
Post a Comment