இந்த வலையில் தேடவும்

Tuesday, November 8, 2011

கலைடாஸ்கோப்-43

லைடாஸ்கோப்-43 உங்களை வரவேற்கிறது...

&

இந்தியர்கள் பேசும் ஆங்கிலத்தைக் கிண்டல் செய்கிறது சமீபத்தில் படித்த கட்டுரை ஒன்று. என்னதான் சிலர் 'இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பு தான் சிறந்தது' என்று வாதாடினாலும்,ஆங்கிலம் பேசும் போது இந்தியர்கள் செய்யும் சில பொதுவான தவறுகளை சுட்டிக் காட்டுகிறது அந்தக் கட்டுரை.அவற்றில் சில:-

* Question களுக்கு பதிலாக வாக்கியங்களுக்கு 'ஆ' விகுதியை உபயோகிப்பது.
உ.தா: Did he come என்பதற்கு பதில் ஹி கேம் ஆ? என்று கேட்பது. (இது தமிழர்களின் ஸ்டைல்!)
is it up ? என்பதற்கு பதில் இட் இஸ் அப்பா? என்று அப்பா அம்மாவை எல்லாம் இழுப்பது.

*Simple tense உபயோகிக்காமல் continuous tense உபயோகிப்பது. I don't understand என்று சொல்வதற்கு பதில் I 'm not understanding என்பது.

(இரண்டு மாணவர்கள் பேசுவதைப் பார்த்து எரிச்சல் அடைந்த ஒரு ஆசிரியரைப் பற்றிய ஜோக் ஒன்றை நீங்கள் கேட்டிருக்கக் கூடும்.I talk and only I talk..why you two middle middle talk?! )


(Principal is rotating the college. You go and under stand the tree இவைகளைக் கூட நீங்கள் கேட்டிருக்கக் கூடும்)

* subject மற்றும் verb இவற்றுக்கு அக்ரீமென்ட் இல்லாமல் பேசுவது. 'Does he really comes ?' மேலும் 'One of my friend is coming'

*இரண்டுமுறை verb - ஐ உபயோகிப்பது. 'Is the stupid guy is there around?'

* நான் ஊரில் இல்லை என்பதை 'I'm out of station' என்று சொல்வது..இங்கே ஸ்டேஷன் எல்லாம் எங்கே வந்தது? 'I 'm away from ...' என்று சொன்னால் போதும்.

*ஒரே பொருள் தரும் இரண்டு சொற்களை உபயோகிப்பது : 'Can you repeat this again?'
I can able to do this என்று சொல்வது.
It may not be possible என்று சொல்வது.
I will come by 5 pm in the evening!? என்பது

*தவறான Question-tag களை உபயோகிப்பது: It rotates.Isn't it?

சரி இங்கிலீஷ் பேசுவது என்று முடிவு செய்தாகி விட்டது. பேசுவதைத் தப்பில்லாமல் பேசுவோமே?

&& இந்த
இங்கிலீஷ் பேசுவது என்பதை வைத்துக் கொண்டு திரைப்படங்களில் எத்தனை காமெடிகள்? அது ஏனோ நம் தமிழ்ப் படங்களில் எப்போதும் ஹீரோயின் தஸ்ஸு புஸ்ஸு என்று ஆங்கிலத்தில் பிளந்து தள்ள நம் ஹீரோ ABCD கூட தெரியாத மக்காக இருப்பார். ரஜினி ஏதோ ஒரு படத்தில் I can டாக் இங்கிலீஷ் வாக் இங்கிலீஷ் என்பார்.தனுஷ் ஒரு படத்தில் யா யா என்று அதை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்.விக்ரம் ஒரு படத்தில் ரீமா சென்னிடம் Whats ur name என்பதற்கு கூட பதில் தெரியாமல் திணறுவார்.ஆர்யா , நயன்தாரா சொல்லும் PARDON என்பதை ஏறுமாறாகப்
புரிந்து கொண்டு பாட ஆரம்பிப்பார்.come home என்பதை கெட்ட வார்த்தையாக எடுத்துக் கொள்வார் தனுஷ்.என்ன தான் சொன்னாலும் பெண்கள் ஆண்களை விட மிக சீக்கிரமாக ஆங்கிலத்தின் நுணுக்கங்களை கிரகித்துக் கொள்கிறார்கள். பள்ளிகளில் பெரும்பாலும் ஆங்கிலத்துக்கு 'டீச்சரம்மா ' இருக்க தமிழுக்கு 'வாத்தியார்' தான் இருப்பார். இங்கே பெங்களூரு பஸ்களில்
'முந்தின நில்தானா' என்று ஆண்குரல் கன்னடத்தில் சொல்ல பெண் குரல் ஸ்டைலாக 'Next stop is electronic city' என்று சொல்லும்.


&&&
சில பேர் குழந்தையைக் கிள்ளி விட்டு விட்டு தொட்டிலையும் ஆட்டுவார்கள். அவர்களைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் குழந்தையைக் கொன்று போட்டுவிட்டு தொட்டிலை ஆட்டுபவர்களை என்ன சொல்வது?- இப்படி யோசிக்க வைத்தது சமீபத்தில் படித்த கட்டுரை ஒன்று.

சில கம்பெனிகள் பூமியை தங்களால் முடிந்த அளவு மாசுபடுத்தி விட்டு இப்போது 'eco action' 'green earth' போன்ற அழகழகான வார்த்தைகளுடன் கண் துடைப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளன.உண்மையிலேயே பூமி மேல் அக்கறை இருந்தால் இவர்கள் தங்கள் பிசினஸை மூடி விட்டு சம்பாதித்தது வரை போதும்,இனிமேலாவது பூமியைக் காப்பாற்றலாம் என்று வீட்டுக்குப் போகத் தயாராய் இருக்க வேண்டும். அப்படி செய்ய மாட்டார்கள். பூமியை வெப்பமடையச் செய்யும் காரணிகளில் Manufacturing எனப்படும் உற்பத்தியில் பெரும்பங்கு இருக்கிறது. இந்த நிறுவனங்கள் சரமாரியாக பொருட்களை உற்பத்தி செய்து இயந்திரங்கள் மூலம் வெப்பத்தை வெளித்தள்ளி விட்டு தங்கள் கம்பெனி வெப்-சைட்டில் மட்டும் பசுமையாக மரம்,செடி,கொடி பறவை எல்லாம் போட்டுக் கொள்கிறார்கள். சில ஐ.டி. கம்பெனிகளில் பூமிக்காக ஓடுகிறார்களாம்.மராத்தான் ஓடினால் பூமி சரியாகி விடுமா என்ன? பூமியைக் காப்பாற்ற , அவர்கள், தங்கள் கணிப்பொறிகளை எல்லாம் நடுரோட்டில் கொண்டு வந்து உடைக்கத் தயாரா என்றுதான் தெரியவில்லை.

ஐ.டி. கம்பெனி ஒன்று சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை ஜூல் வெப்பத்தை ஏ.சி யின் மூலம், விளக்குகளின் மூலம், கம்ப்யூட்டர்கள் மூலம் வெளித்தள்ளும் என்று யோசித்துப் பாருங்கள்.கடப்பாறையை முழுங்கி விட்டு சுக்குக் கசாயம் குடித்த கதையாக செய்ததெல்லாம் செய்து விட்டு சாணிப் பேப்பரில் புத்தகம் போதுவது, எகோ பிரிண்டர்கள் உபயோகிப்பது போன்ற கண் துடைப்புகள்.

புவி வெப்பமயமாதல் பற்றி சமீபத்தில் கோவையில் ஓவியப் போட்டி ஒன்றை (யாரோ) நடத்தினார்களாம்.அய்யா புத்திசாலிகளே! அந்த ஓவியப்போட்டிக்கு பிள்ளைகள் கொண்டுவரும் உபகரணங்களில் பெரும்பாலானவை மரங்களில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றன!

சமீபத்தில் படித்த ட்விட் ஒன்று 'மரம் வளருங்கள்; மின் கம்பங்களுக்கு கீழே யாரும் ஞானம் அடைந்ததாக செய்தி இல்லை' என்கிறது.ஆம். மின் கம்பங்களின் கீழே யாரும் ஈர்ப்பு விதியைக் கண்டுபிடித்ததாகக் கூட செய்தி இல்லை.

&&&&

கல்யாணம் ஆன புதிதில் (ஹனிமூனில்) மனைவிகள் தங்கள் கணவர்களை செல்லமாக நாயே பேயே எருமையே தடியா காட்டுமிராண்டி என்றெல்லாம் திட்டுவார்கள். காலம் நகர நகர உண்மையாகவே இப்படியெல்லாம் திட்ட ஆரம்பித்து விடுவார்கள். அப்பாவி கணவர்களும் சரி இன்னும்
செல்லமாக தான் நம்மை தடிமாடு குரங்கு என்றெல்லாம் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள்.சில கணவர்களுக்கு நம்மை திட்டுகிறார்கள் என்பது கூடத் தெரியாது பாவம். பின்னே இப்படியெல்லாம் திட்டினால்? விவேக சிந்தாமணியில் ஒரு பாடல்:

அரவிந்த நண்பன் சுதன் தம்பிமைத்துனன் அண்ணன் கையில்
வரமுந்தி ஆயுதம் பூண்டவன் காணும்மற்று அங்கவனே
பரமன் திகிரியை ஏந்திய மைந்தன் பகைவன் வெற்பை
உரமன் றெடுத்தவன் மாற்றான் தன் சேவகன் ஒண்தொடியே.

இரண்டு பெண்கள் தங்கள் கணவர்களைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். பாட்டைப் பார்த்தால் என்னவோ பெருமையாக பேசிக் கொள்கிறார்கள் என்று தோன்றும்.ஒருத்தி தன் கணவனை எருமைமாடு என்கிறாள். இன்னொருத்தி தன் கணவனை குரங்கு என்கிறாள். எப்படி என்று பார்ப்போம்.

பெண் 1

அரவிந்த நண்பன்: தாமரையின் நண்பன் : சூரியன்
சுதன் :சூரியனின் மைந்தன்: கர்ணன்
தம்பி: கர்ணன் தம்பி அர்ஜுனன்
மைத்துனன்: அர்ஜுனனின் மைத்துனன் : கண்ணன்
அண்ணன்: கண்ணனின் அண்ணன் பலராமன்
கையில் வரமுந்தி ஆயுதம் : பலராமன் கையில் உள்ள ஆயுதம் ஏர்
பூண்டவன் : ஏரில் பூட்டப்பட்ட எருமைமாடு

பெண் 2 :

திகிரியை ஏந்திய பரமன்: சக்கரம் தாங்கிய திருமால்
மைந்தன்: திருமால் மைந்தன் மன்மதன்
பகைவன் : மன்மதனை எரித்த சிவபெருமான்
வெற்பை உரமன் றெடுத்தவன்: சிவன் வாழும் கைலாய மலையை தோள்களால் தூக்கிய ராவணன்
மாற்றான்: ராவணன் பகைவன் ராமன்
தன் சேவகன்: ராமன் தூதன் அனுமான் (குரங்கு)

ஒன்றொடியே : கொடி போன்றவளே (கணவனை கண்டபடி திட்டி விட்டு தோழியை கொடியென்று வர்ணிப்பது கொஞ்சம் ஓவர்)

I'd insult you..but you should be smart enough to notice என்பார்கள். இப்படியெல்லாம் திட்டினால் யாருக்கும் புரியாது என்பது வேறு விஷயம் (இம்சை அரசன் புலிகேசியை புலவர் புண்ணாக்கு, அண்டங்காக்கா என்றெல்லாம் திட்டுவது போல) அந்தக் காலத்தில் திட்டுவதற்கு கூட செய்யுளில் தான் திட்டினார்கள் என்ற விஷயம் வியப்பாக இருக்கிறது.


&&&&&

ஒரு கவிதை

சுண்டக் காய்ச்சிய பாலைக்
குடித்து விட்டு பழம் சாப்பிட்டாகி விட்டது.
குட் நைட் போட்டாகி விட்டது
துவைத்து உலர்த்திய படுக்கை விரிப்பை
மடிப்பு இன்றி போர்த்தியாகி விட்டது
காலுக்கும் கைக்கும் தலையணை வைத்தாகி விட்டது
மெல்லிய இசையை பின்னணியில் தவழ
விட்டாயிற்று
விளக்குகளை எல்லாம் அணைத்தாகி விட்டது
.
..
...
....
.....

(ஏதாவது தப்புத்தப்பாக கற்பனை செய்தால் அடிவிழும். கவிதை இப்படி முடிகிறது)

இந்த பாழாய்ப் போன தூக்கத்தை
எங்கிருந்து கொண்டுவருவது?

&&&&&&

பென்சில்நதி என்ற ப்ளாக்கில் ராஜா சந்திரசேகர் என்பவர் அழகழகான (சிறு) கவிதைகளை எழுதி வருகிறார். அவற்றில் என்னைக் கவர்ந்த சில கவிதைகள் கீழே:

பல வருடங்களாக
பக்கத்து வீட்டிலிருந்தவர்
அறிமுகமானார்
பிணமாகப் போனபோது

ஆகாயம் வரைந்தால் போதும்
மழை பெய்யும்
சொல்கிறாள் குழந்தை

நடந்த போது
எத்தனையோ பேர்
கடந்து போனார்கள்
அவர்களுக்கு
நானும் ஒருவனாக
அப்படித்தான் போயிருப்பேன்

வார்த்தைகளை
அடுக்கி வைத்தேன்
படியேறிப் போனது
கவிதை

ஆரம்பித்தபோது
இது கண்ணீர்
இப்போது
திரவ ஆயுதம்

எனக்கும் உனக்கும்தான்
இடைவெளி
எனக்கும்
என்னுள் இருக்கும்
உனக்குமல்ல

தையல் மெஷினில்
அம்மா தைத்துக்கொண்டதே இல்லை
கிழிந்துபோன காலத்தை

ஒரு நட்சத்திரத்திற்கு
உன் பெயர் வைத்தேன்
மறுநாள் வந்து
கூப்பிட்டுப் பார்த்தேன்
எல்லா நட்சத்திரங்களும்
திரும்பி பார்த்தன

&&&&&&&

கொஞ்சம் சீரியஸ் ஆகி இருந்தால் சிரியுங்கள். ஏனெனில் வாழ்க்கை ஒரு கொண்டாட்டம். ஒரு ஓஷோ ஜோக். வர்ட்டா?

ஒரு இளைன் தன் புதிய அபார்ட்மெண்டை தன் நண்பர்களுக்கு சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தான். ஒரு இடத்தில் ஒரு டமாரமும் ஒரு சுத்தியலும் வைக்கப்பட்டிருந்தன.

அவன் நண்பர்கள் வியப்படைந்து 'இது என்ன?' என்று கேட்டார்கள்.

அதற்கு அவன் 'இதுவா இது
தான் பேசற கடிகாரம்'

'பேசற கடிகாரமா' அது எப்படி?

'பாருங்க' என்று சொல்லி விட்டு அந்த சுத்தியலால் டமாரத்தை ஓங்கி அடித்தான்.

பக்கத்து பிளாட்டில் இருந்து ஒரு குரல் கேட்டது

'டேய் , அங்க எவன்டா மட்ட மத்தியானம் ரெண்டு மணிக்கு சவுண்டு குடுக்கறது?'

முத்ரா


15 comments:

பால கணேஷ் said...

-ஆஹா... பேசற கடிகாரம் பிரமாதம்.
-ராஜா சந்திரசேகரின் கவிதைப் புத்தகம் படித்திருக்கிறேன். நீங்கள் தொகுத்தவை அருமை. குறிப்பாக முதல் கவிதை.
-மெத்தைய வாங்கினேன், தூக்கத்தை வாங்கலன்னு வைரமுத்து சொன்ன மாதிரி அந்தக் கவிதையும் அருமை.
-எமனேறும் பரியே, எட்டேகால் லட்சணமே... என்பது போல திட்டுவதற்கும் அழகுத் தமிழ் பயன்பட்டிருப்பதை மிக ரசித்தேன்.
-ஆங்கிலம்... நான் இன்னும் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்பதை அறிந்தேன்.
-மொத்தத்தில் கலைடாஸ்கோப்பின் வர்ணஜாலங்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்னை. நன்றி.

CS. Mohan Kumar said...

ஆங்கில உபயோகம் பற்றி நீங்கள் எழுதியது ரசித்தேன். கூடவே ராஜா சந்திரசேகர் கவிதைகள் சிலவும்

ப.கந்தசாமி said...

பேசற கடிகாரம் எங்க கிடைக்கும்?

SURYAJEEVA said...

அருமையாக இருந்தது படிக்க..

பூமி said...

வழக்கம் போல் அருமை... ஆங்கிலம் பேசும்போது எனக்கே நான் பேசுவதைக்கேட்க சிரிப்பு வந்ததுண்டு... கேட்பவன் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று விட்டுவிடுவது... :)

ILA (a) இளா said...

ஆங்கிலம் - எப்படி பேசினால் சரி என்றும் சொல்லிடுங்களேன்.

பொன் மாலை பொழுது said...

வழக்கம் போல வண்ணக்கலவை !

Jayadev Das said...

நம் தாய்மொழியில் பேசும்போதும் பல தவறுகளைச் செய்வோம், ஆனால் ஒருபோதும் திருத்திக் கொள்ள வேண்டுமென்று எண்ணமாட்டோம், ஆங்கிலத்தில் மட்டும் தவறே இல்லாமல் பேச வேண்டுமென்று நினைப்போம். இது இயல்பு. இலங்கை வானொலியில் நாம் செய்யும் தவறுகள் பல இல்லை. அதே மாதிரி லண்டனில் பிறந்தவர்கள் கூட சில தவறுகளை பேசும் போதும், எழுதும் போதும் செய்வார்கள். அப்படியானால், ஒரு மொழியை எப்படித்தான் பேச வேண்டும்? தப்போ ரைட்டோ அந்தந்த ஊரில் எப்படி பேசுகிறார்களோ அப்படி பேச வேண்டியதுதான். அர்த்தம் விளங்கினால் சரி. ஆங்கிலத்தை ஆங்கிலேயர் மாதிரி பேசணும்னா அதுக்கு லண்டனில் பிறந்திருந்தத்தாலோ, வளர்ந்திருந்தாலோ, பழகியிருந்தாலோதான் முடியும். இந்தியாவில் இருக்கும் வரை இங்க என்ன பேசுகிறோமோ அது, நேத்திக்குத்தான் வந்தேன் என்பதை - I came yesterday only என்பதாகட்டும், இல்லை I could not be able to come என்பதாகட்டும் அதுதான் இங்கிலீஷ்....

Haana said...

It rotates.Isn't it

ethil enna thavaru?

சமுத்ரா said...

'Can you repeat this again?'
-Can you repeat this? or
-Can you do this again?

I can able to do this
-I'm able to do this or
-I can do this

It may not be possible
-It is not possible or
-It may not happen

I will come by 5 pm in the evening

-I will come by 5 pm Or
-I will come by 5 in the evening

It rotates.Isn't it?

-It rotates.Doesn't it?

பிரசன்னா கண்ணன் said...

My Colleague also use to speak like "Is it still persisting?" :-)

பிரசன்னா கண்ணன் said...

Up to me, Language is just a medium, which should make the opponent to understand what we are trying to say.. That's it..

அப்பாதுரை said...

சுவாரசியம். கட்டுரை எழுதியவரை கேனடாவுக்கு அனுப்புங்கள். ஏ விகுதியை உபயோகித்து, அங்கே அப்பே அம்மேயை விளிக்கிறார்கள் இஸ் இட் அப்பே? (is it up, eh?)

ராம்ஜி_யாஹூ said...

மனைவி , குழந்தை தூங்கி விட்டார்களா என்று உறுதி செய்தாகி விட்டது

மோடத்தை சத்தம் வராமல் ஆண் செய்தாகி விட்டது
மோடத்தின் லைட் தெரியாமல் இருக்க துணி போட்டு மூடியாகி விட்டது

போகன் பகிர்ந்த மூன்று யு ட்யுப் பஸ் களுக்கு லைக் போட்டாகி விட்டது
முகப் புத்தகத்தில் மனோ வர்ஷா, அதிஷா, மதுமிதா வரிகளை லைக் செய்தாகி விட்டது

ட்விட்டரில் ரோசா வசந்திற்கு சம்பந்தம் இல்லது பதில் ட்விட் அடித்தாகி விட்டது

Aba said...

//'I'm out of station'//

இது காலப்போக்கில் ஆங்கில மரபுத்தொடராகவும் (idiom) உருமாறலாம்.. யார்கண்டது?


நேரம் கிடைத்தால் இந்தப் பதிவின் பின்னூட்டப் பகுதியை வாசித்துப்பாருங்கள்.

http://www.cnngo.com/mumbai/life/10-indianisms-652344?page=0,1

ஜெர்மன் மக்கள் வசிக்கும் பகுதிகளில், ஆங்கிலம் பேசும்போது, ஜெர்மன் மொழியின் நேரடி மொழிபெயர்ப்பான "I have hunger" தான் பயன்படுத்தப்படுகின்றதாம். அதனால் நாம் செய்வது பெரிய தப்பில்லை போலதான் தெரிகிறது..


//பல வருடங்களாக
பக்கத்து வீட்டிலிருந்தவர்
அறிமுகமானார்
பிணமாகப் போனபோது //

நிதர்சனம்.

ஓஷோ ஜோக் கலக்கல்.