'பிள்ளையார்' பேங்கில்
நெகடிவ் வட்டி போலும்!
நாலு போட்டால்
மூன்று தான் வருகிறது
அனால் அந்த மூன்றும் சும்மாவா?
இந்த யானை
தேனை உண்டு தேவாரம் தருகிறது
பாலைப் பருகி விட்டு பிரபந்தம் தருகிறது!
மூன்று என்ன?
முன்னூறு தரும் இந்த வாரணம்
புல்லை ஏற்று,
புகழை அருளும்
அதன் எளிமை தான் காரணம்!
அப்பன் சிவனுக்கோ
மலையெல்லாம் வீடு
மாமன் ஸ்ரீ ஹரிக்கு
கடல் முழுக்க வீடு
ஆனை முகனுக்கோ
அரச மரத்தடி போதும்
காளை எதற்கு?
கருடன் எதற்கு?
எழுந்தருள்வான் இவன்
எலியொன்றின் மீதும்!
அப்பனுக்கு
இரண்டு தாரம்
தம்பிக்கும்
இரண்டு தாரம்
மாமனுக்கோ
எண்ணற்ற தாரம்
உணர்ந்தவனுக்கோ
ஒன்றுகூட பாரம்!
கணபதி
கட்டை பிரம்மச்சாரி
பிறவிக்
கட்டை அவிழ்க்கும்
கருணை வாரி!
சரசுவதி
கானத்தில் வருவாள்
ஈசன்
மோனத்தில் வருவான்
குருகுகன்
தியானத்தில் வருவான்
கணபதி மட்டும்
சாணத்திலும் வருவான்!
இவன்
மதம் இல்லாத ஒற்றைக் கொம்பன்
சாதி மதம் மறந்து
தன்னை
அன்பால் துதிப்பவர்க்கு அன்பன்
உலகை-
இருவருக்குள் சுருக்கிய
புதுமையாளன்
பெற்றோரை
வலம் வந்து
பழம் பெற்றவன்!
பழம்பெருமை பெற்றவன்!
ஈசுவரி
இச்சை நாயகன் தேரின்
அச்சை முறித்தவன்
யாக்கை மாறி
காக்கை உருவில்
காவிரி விரித்தவன்!
சந்திரன்
முகத்தில்
கரியைப் பூசிய
கரிமுகன்
அரிமுகன்
மருமகன்
கங்கை
விரிமுகன்
திருமகன்!
கணபதி மட்டும்தான்
கிரிக்கெட் விளையாடும்
கலியுக தெய்வம்
மவுஸை இயக்கம்
மனமுகந்த தெய்வம்
அடியவர்
சஞ்சலம் அகற்றும்
குஞ்சரம்
பிரபஞ்ச
காரணம் ஆன
வாரணம்
காலம்
கடந்த
வேழம்
சரி நிகர் அற்ற
கரி
வானை
ஆளும்
யானை
அடியவர்
மன
ஆதங்கம் அகற்றும்
மாதங்கம்
மனத்தாங்கல்
தீர்க்கும்
ஓங்கல்!
தம்பிக்கு
அருளிய
தும்பி
மோதகம் விரும்பும்
போதகம்
சுலபமாய்
இரங்கும்
களபம்
அவா
அகற்றும்
உவா!
கால்வாயில்
கரையும்
நால்வாய்
பிறவிப்
பளுவை குறைக்கும்
வலுவை
நாளை
இந்த -
நாலில் பிறந்த
துதிக்கை
நாயகனை துதிப்போம்
பொரி , அவல் , மோதகம்
படைத்து
அருகம்புல் சாற்றி
ஐங்கரன்
அருளுடன்
ஆனந்தமாய்
வதிப்போம்!
-சமுத்ரா