இந்த வலையில் தேடவும்

Wednesday, February 5, 2014

கலைடாஸ்கோப் -106

வரவேற்கிறது உங்களை லைடாஸ்கோப் -106


' ராஜு ஜோக்ஸ்' புத்தகம் நம்மை 40 களுக்கும் 50 களுக்கும் அழைத்துச் செல்கிறது! புத்தகக் கண்காட்சியில் வாங்கியது. 

சில ஜோக்குகள் கீழே.!









Elephants and grandchildren never forget.
-Andy Rooney 

Women are like elephants. I like to look at 'em, but I wouldn't want to own one.-W. C. Fields 

இன்னொரு புத்தகத்தைப் பற்றி பேசலாம். 'அழியும் பேருயிர் யானைகள்' - முகமது அலி, யோகானந்த்



சற்றே பெரிய முன்னுரையுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். முன்னுரையில் இயற்கை பாதுகாப்பு என்ற பெயரில் நாம் செய்யும் அபத்தங்களை சுட்டிக் காட்டுகிறது.யானையை கடவுளாக வழிபடும் நாம் அதே கோயில் வாசலில் யானையை கட்டி வைத்து கொடுமைப் படுத்துகிறோம்.ஹைடெக் சாமியார்கள் மரம் நடுகிறோம் என்று கிளம்பி இருக்கிறார்கள். ஊருக்குள் மரம் நடுவது பெரிய விஷயம் அல்ல. மரம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். இயற்கை பாதுகாப்புக்கு ஊர்வலம் போவதால் என்ன பயன்??காடுகள் அழிந்து போவது பற்றி யாருக்கும் கவலை இருப்பதாகத் தோன்றவில்லை.

யானைகளைப் பற்றி பல சுவையான தகவல்களைத் தருகிறது இந்தப் புத்தகம். அவற்றில் ஒரு சில

* மனிதச் செவிக்குக் கேட்காத மீயொலி (ultra sound ) அலைகளைக் கொண்டு யானைகள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்றன.

* காட்டு யானைத் தாக்குதல் என்பது பொதுவாக அதன் விரட்டி விடுதல் ஆகும். மனிதன் மிகைப் படுத்துவது போல அது கொடூரமாகத் தாக்கி காலால் மிதிப்பதில்லை. 10, 20 அடிகள் காதுகளைப் புடைத்த படி வைத்துக் கொண்டு சத்தம் எழுப்பியபடியே புழுதி பறக்க துரத்தி வந்து விட்டு விடுகிறது. இதில் மனிதர்கள் பெரும்பாலும் மயக்கம் அடைந்து விழுந்து  காயமடைகின்றனர். இதுவும் தவறாக யானைத் தாக்குதல் என்றே அறியப்படுகிறது.

* நான்கு முழங்கால்களை உடைய ஒரே விலங்கு யானை.

* யானை தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்வது என்பது இழிவானதல்ல. தொல்லை தரும் பூச்சிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும், அவற்றை விரட்டவும், பூச்சிக்கடி அரிப்பைத் தடுக்கவும், உடல் வெப்பத்தை சீராக்கவும் , வெயிலால் தோல் பொசுங்குவதைத் தடுக்கவும் அப்படிச் செய்கின்றன.

* வயதான பெண் யானை ஒன்று பொதுவாக யானைக் கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறது.தாய் யானை இறந்து விட்டால் குட்டியானையை மற்ற பெண் யானைகள் 'தத்து' எடுத்துக் கொள்கின்றன.


************


நாங்கள் 500,600 sqft வீடு தேடுகையில்
நீயோ 2500 sqft வீடு கட்டினாய்.

நாங்கள் மதுரை சேலம் கோவை என்று பயணித்தால்
நீயோ கனடா கலிபோர்னியா என்று பயணித்தாய்.

நாங்கள் 10000,12000 சம்பளம் தேட
நீயோ 55000 கையில் பெற்றாய்.

நாங்கள் தலைவலி சளி இருமல் என்று திண்டாட
நீயோ ... ஐயோ ஐயோ

இதை எழுதியவர் விஸ்வநாத் . ஓவியங்கள், கவிதைகள் இவர் ப்ளாக்கில் கிடைக்கின்றன. சில சமஸ்கிருத ஸ்லோகங்களை தமிழில் மொழி பெயர்க்கவும் செய்திருக்கிறார்.

ஸ்லோகங்களை மொழிபெயர்க்கும் போது  சில விதிமுறைகள் :

1.முடிந்தவரை original ஸ்லோகத்தின்/பாட்டின் சந்தம் அல்லது தாளம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
2.முடிந்தவரை சம்ஸ்கிருத சொற்களைத் தவிர்க்கவும்.
3.ஒரிஜினலில் இல்லாத சொற்களை சேர்க்க வேண்டாம்!
4.எதுகை மோனை வருவதும் முக்கியம்.

சில உதாரணங்கள்:

"பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் 
கோவிந்தம் பஜ மூட மதே"

இதை.

" கோவிந்தனை வழிபடு ,கோவிந்தனை வழிபடு ,கோவிந்தனை வழிபடு அறிவில்லாதவனே " என்று மொழிபெயர்க்கலாம். (conditions 2,3)அல்லது ஒரிஜினல் சந்தம் மாறாமல்,

துதி கோவிந்தனை துதி கோவிந்தனை 
கோவிந்தனைத் துதி அறிவிலியே!
புறப்படும் காலம் வந்திடும் போதே
இலக்கணம் காக்குமோ கடைவழியே


   -என்றும் மொழி பெயர்க்கலாம்.

conditions 1,2,3 பூர்த்தி செய்யப்படுகிறது.

எது better ?

லிங்காஷ்டகம் 

ப்ரஹ்ம முராரி சுரார்ச்சித லிங்கம் 
நிர்மல பாஸித சோபித லிங்கம் 
ஜன்மஜ  துக்க வினாசக லிங்கம் 
தத் ப்ரணமாமி சதா சிவ லிங்கம் 

-பரமேஸ்வரா - உன்
பாதம் பணிகிறேன்.
தேவர்களின் தேவனே,
புனிதங்களின் புனிதனே,
பூமாலைகளால் அர்ச்சிக்கப்படுபவனே,
பிறப்பு இறப்புத் துயர் தீர்ப்பவனே,
உன்னை வணங்குகிறேன்.

சந்தம் மாறாமல் இருக்க வேண்டும். 
தா ன   த நா ன   த நா ந ந   நா ன ...
த ந ந....

அரி அயன் தேவர்கள் போற்றிடும் லிங்கம் 
அருளொடு புனிதமும் மேவிய லிங்கம் 
பிறவிகள் வேதனை போக்கிடும் லிங்கம் 
போற்றுவன் பரமனின் நிலைபெறு லிங்கம் 

தேவ முனிப் பிரவ ரார்சித லிங்கம் 
காம தஹன கருணாகர லிங்கம் 
ராவண தர்ப விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதா சிவ லிங்கம் 

தேவர்கள் முனிவர்கள் துதிதரும் லிங்கம் 
காமனை வென்றிடும் கருணையின் லிங்கம் 
ராவணன் கர்வம் அழித்தருள் லிங்கம் 
போற்றுவன் பரமனின் நிலைபெறு லிங்கம் 


ஜெயா டி .வியின் தமிழ் சுப்ரபாதம் தூய தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஒரு உதாரணம் 

"கௌசல்யா சுப்ரஜா ராமா , பூர்வ, சந்த்யா ப்ரவர்த்ததே!"

வந்துதித்தாய் ராமா நீ கோசலைதன் திருமகனாய் 
சிந்துமொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது!


ஆனால் சமஸ்கிருதம் ஒரு வரியில் சொல்வதை இரண்டு வரிகளில் சொல்கிறார்கள்.condition (3) நிறைவேற்றப்படவில்லை.

கோசலையின் திருமகனே கீழ்வானம் புலர்கிறது!
கடமைசெய எழுந்தருள்வாய் மனிதரிடை அரிமாவே!  என்று சொன்னால் நலம்.

சரி.



சங்கீதத்திற்கு சுருதி அம்மா , தாளம் அப்பா என்பார்கள். சங்கீதத்தின் குழந்தைகளான ஹிந்துஸ்தானி சங்கீதம், கர்நாடக சங்கீதம் இவற்றில் ஹிந்துஸ்தானி அம்மா செல்லம், கர்நாடக சங்கீதம் அப்பா செல்லம் போலும்! ஹிந்துஸ்தானியில் சுருதி ரொம்பவே முக்கியம். சாஹித்தியம், தாளம் அவ்வளவு முக்கியம் அல்ல.இரண்டாம் பட்சம் தான். அந்நிய ஸ்வரம் வந்தாலும் அபஸ்வரம் வரக்கூடாது என்பதில் குறியாக இருப்பார்கள்.

கர்நாடக இசையில் தாளம் பிரதானம். 


- தாளம் தான் பிரபஞ்சத்தின் உயிர் நாடி என்கிறார் தன் பிரசங்கம் ஒன்றில் விசாகா ஹரி.  இயற்கையில் எல்லாமே ஒரு தாளத்துடன் periodic ஆக நிகழ்கின்றன என்று சொல்லலாம்  .பூமி சூரியனை சுற்றுவது, மலர்கள் மலர்வது, பழங்கள் பழுப்பது , பருவங்கள் மாறுவது இப்படி periodic !இந்தத் தாளம் தப்புவதே இல்லை.

இப்போது ஒரு நொடி என்பதை சீசியம் அணுவிற்குள் நடக்கும் அதிர்வுகளை வைத்து அளவிடுகிறார்கள். இந்த அணுவின் தாளம் எப்போதும் மாறுவதே இல்லை. ஒரு நொடி என்பதை எப்படி வேண்டுமானாலும் நாம் அளவிடலாம். ஆனால் அதன் துல்லியம் முக்கியம். விரல் சொடுக்கும் நேரம் என்று சொல்லலாம். பெண்டுலம் அசையும் நேரம் என்று சொல்லலாம். ஆனால் இவை எல்லாம் எப்போதும் துல்லியமாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.பெண்டுலம் கடிகாரம் ஒரு வாரத்திற்கு ஒரு நொடி என்று தவற விடலாம். ஆனால் அணு கடிகாரம் 20 மில்லியன் வருடங்களுக்கு ஒரு நொடி பிழையை மட்டுமே பதிவு செய்யும்.  ஒரு நொடி என்பது சீசியம் -133 அணுவுக்குள் 9,192,631,770 சுழற்சிகள் நடக்கும் கால அளவு என்கிறார்கள்  .

சில பேர் 'one sec ' என்று சொல்லி விட்டு பாதி நாள் எடுத்துக் கொள்வார்கள். நாம் ஒரு நொடி என்று சாதாரணமாக சொல்வதற்குள் இயற்கையில் எத்தனை விஷயங்கள் நடந்து விடுகின்றன என்று பாருங்கள்!





நாம் ஒரு  சனிக்கிழமை மதியம் வயிறு முட்ட  சாப்பிட்டு விட்டு  வெட்டியாக உட்கார்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டு டி .வி. ரிமோட்டை அழுத்திக் கொண்டிருக்கும் போது நம் உடம்பின் செல்களும் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதில்லை. ஒரு பரபரப்பான தொழிற்சாலைக்கு சற்றும் குறைவில்லாமல் துரித கதியில் உள்ளே வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சத்தமில்லாமல்!!

மனித உடம்பின் ஒரு செல்லை செயற்கையாக உருவாக்க போயிங் 777 ஜெட் விமானத்தின் பாகங்களை எல்லாம் நாம் 5 மைக்ரான் விட்டத்துக்கு சுருக்க வேண்டி இருக்கும் என்கிறார்கள். (மைக்ரான் = ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பாகம்) அது மட்டும் அல்லாமல் தன்னை எப்படி படியெடுத்துக் கொள்வது என்ற தந்திரமும் அதற்குள் திணிக்கப் பட்டிருக்க வேண்டும். அடுத்து செல்களுக்கு இடையேயான communication . ஒரு செல் தான் செய்ய வேண்டிய பணிகளை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளாமல் மொத்த மனித உடம்பின் பணிகளை உள்ளே வைத்துக் கொண்டுள்ளது. ஒரு முழு மனிதனுக்கான code ஒரு செல்லில் உள்ளது! 


செல்கள் நமக்காக எல்லாவற்றையும் செய்கின்றன. நம் உணவை செரித்து அதில் இருந்து ஆற்றலை பிரிக்கின்றன. கழிவை வெளியேற்றுகின்றன. சில செல்கள் பார்க்கின்றன. சில சிந்திக்கின்றன. சில அந்நியப் பொருட்கள் ஊடுவுறும் போது சண்டை போடுகின்றன.மற்ற செல்களுக்கு தகவல் அனுப்புகின்றன. சில செல்கள் பராமரிப்பு வேலை செய்கின்றன. ஒழுங்காக organize செய்யப்பட ஒரு சாம்ராஜ்ஜியமே செல்களுக்குள் இருக்கிறது. இந்த செல்கள் சரியாக வேலை செய்ய மணி ஒன்றுக்கு சுமார் 300 லிட்டர் fresh  ரத்தம் அவைகளுக்கு போயாக வேண்டும்.இதை மறுபடியும் இதயத்தின் தசை செல்களே செய்கின்றன.


செல்களுக்குள் இருக்கும் மைடோ காண்ட்ரியம் செல்லின் ஆற்றல் மையம் என்று அழைக்கப் படுகிறது. உணவையும் ஆக்சிஜனையும் இது A T P எனப்படும் அடினோசின் ட்ரை பாஸ்பேட் ஆக மாற்றுகிறது.ATP நம் செல்களில் ஒரு பேட்டரி போல் செயல்பட்டு நமக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. ஒவ்வொரு செல்லினுள்ளும் ஒவ்வொரு நொடியும் ஒரு பில்லியன்  பேட்டரிகள் தோன்றி அழிகின்றன.

செல்கள் ஒருவித  வீர மரணத்தை தழுவுகின்றன. (programmed cell death)நீ தேவை இல்லை அழிந்து போ என்ற செய்தி வந்தவுடன் தாமதிக்காமல் ஒரு நம்பகம் வாய்ந்த வீரனைப் போல் ஆணையை சிரமேற்கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றன. in fact , மற்ற செல்களிடம் இருந்து குறிப்பிட்ட காலத்துக்கு செய்தி (keep alive ) வரவில்லை என்றால் செல்கள் ஏதோ என்னிடம் சரியில்லை என்று தன்னைத் தானே அழித்துக் கொள்கின்றன. இந்த செல்கள் அழிவது நம் நன்மைக்குத் தான். காலாவதியான மெஷின்களை வைத்துக் கொண்டு நடத்தப்படும் factory போல அல்லாமல் நிமிடத்துக்கு நிமிடம் ப்ரெஷ் மெஷின்களை வைத்து நடத்தப்படுகிறது நம் உடம்பெனும் factory !பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சொல்லாடல் செல்களுக்கு 100% பொருந்தும்.மேலும், வெள்ளை அணுக்கள் போர்த் தாக்குதல்களின் போது சந்தோஷமாக போரிட்டு வீர சுவர்க்கம் எய்துகின்றன. செல்கள் செத்துப் போனதும் அந்த குப்பைகளை கிளீன் செய்யும் துப்புரவுப் பணியையும் சில செல்களே செய்கின்றன. பெரும்பாலும் புது செல்கள் இந்த குப்பைகளில் இருந்தே ரீ சைக்கிள் செய்யப் படுகின்றன. ஒருவிதத்தில் பார்த்தால் நேற்று இருந்த நாம் இன்று இல்லை. மூளை மற்றும் கல்லீரலின் செல்கள் மட்டும் நீண்ட நாள் இருக்கும் என்கிறார்கள்.

நாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னெ என்று வளையாபதி  சொல்வது போல!


உடம்பை பிச்சைப் பாத்திரம், காற்றடைத்த பை, மலம், குப்பை etc  என்றெல்லாம்  சொல்லும் பாடல்களை இனிமேல் நம்பாதீர்கள்!!!


வெயிட்,,,,

சில சமயம் உடம்பை குப்பை என்று சொல்லுவது பொருந்தும். அழிந்து போகவேண்டிய செல்கள் சில சமயம் அழிந்து போகாமல் குழப்பமடைந்து தன்னைத் தானே படியெடுத்துக் கொண்டு பெருக ஆரம்பிக்கின்றன. எந்திரன் படத்தில் 'கெட்ட ' ரோபோட்டுகள் போல!இந்த குழம்பிய செல்களை நாம் கேன்சர் செல்கள் என்கிறோம்.பொதுவாக செல்கள் அரிதாகவே தவறு செய்கின்றன. Cancer is a bad luck!

செல்களின் communication மிகவும் அபாரம் என்று சொல்கிறார்கள். இன்று நாம் கண்டுபிடித்து வைத்திருக்கும் மைக்ரோ பிராசசர்கள் பக்கத்திலேயே வர முடியாது. செல்கள் பெரும்பாலும் updated ஆக இருக்கின்றன. தகவல்களை சதா அனுப்பிய வண்ணம் பெற்ற வண்ணம் இருக்கின்றன. சந்தேகம் இருந்தால் பக்கத்து செல்களுக்கு 'query ' செய்து confirm செய்து கொள்கின்றன.உதவி கோருகின்றன. தான் எப்போது செத்துப் போக வேண்டும் என்று உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா ரேஞ்சுக்கு கேட்டுக் கொள்கின்றன. இவற்றை செல்கள் பெரும்பாலும்  ஹார்மோன்கள் என்ற கொரியர் சர்வீஸ் மூலம் நிறைவேற்றிக் கொள்கின்றன.சில தகவல்கள் தைராய்ட் போன்ற சுரப்பிகளிடம் இருந்து செல்களுக்கு periodic ஆக வருகின்றன. மேட்டர் படத்தைப் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட உறுப்பின் செல்களுக்கு நீவிர்  சற்று  பரவசம் அடைக ; இன்புறுக என்று இந்த ஹார்மோன்களே கொரியர் சர்வீஸ் செய்கின்றன. காதலியைப் பார்க்கும் போதும் சம்பந்தப்பட்ட உறுப்பை (இதயம்) சற்று வேகமாக துடிக்க வைக்கின்றன.சில சமயம் நம் தலை மூளை சில செல்களுக்கு தானாகவே டெலிகிராம் ,தந்தி அனுப்புகிறது.(paracrine signaling) மேலும் செல்கள் பக்கத்து செல்களுடன் ஏம்பா அய்யா  எங்கோ விழுந்து அடிபட்டு ரத்த காயம் போல; என்டோதெலியம் அதிகம் சுரக்கச் சொல்லி எனக்கு வந்த கட்டளை சரிதானே? உனக்கும் வந்துச்சா என்றெல்லாம் பேசிக் கொள்கின்றன.

நம் அறிவுக்கு எட்டாமலேயே இத்தனை விஷயங்கள் கட்டுக்கோப்பாக நம்முள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.


உயிரியல் போதும், கொஞ்சம் மொழியியல் :)

தமிழ்  பொதுவாக ஒரு SOV மொழி. Subject - Object- Verb இந்த வரிசையிலேயே சொற்கள் அமைக்கப் பட்டிருக்கும்.

நான் (S ) பழம் (O ) சாப்பிட்டேன் (V )

நான் (S ) உன்னைக் (O ) காதலிக்கிறேன் (V )

ஆங்கிலம் ஒரு SVO மொழி Subject- Verb- Object

I (S) Love (V) You (O)

இங்கே ஒரு சின்ன விஷயத்தை கவனியுங்கள். தமிழில் SOV என்பதை SVO ஆக  மாற்றினால் பொருள்  மாறுவதில்லை.இலக்கணம் மாறுவதில்லை.

நான் (S ) சாப்பிட்டேன் (V ) பழம் (O )

காதலிக்கிறேன் (V ) நான் (S ) உன்னை (O )

ஆனால் ஆங்கிலத்தை SOV கட்டமைப்பில் மாற்றினால் பொருளற்ற வாக்கியமே வருகிறது.

I (S) Fruit (O) ate (V) - I fruit ate

ஆனால் ஒரு சில சிறப்பான தருணங்களில் கவிதைக்கு அழகு சேர்க்க (figure of speech) ஆங்கிலத்தில் இந்த வரிசை மீறப்படுகிறது. (Anastrophe )

He took his vorpal sword in hand:
Long time the manxome foe he sought—
So rested he by the Tumtum tree,
And stood awhile in thought.

-Lewis Carroll


"Long time the manxome foe he sought"   O -S -V 


நீண்ட நாட்களாக கொடிய பகைவனை அவன் தேடினான்.

O-S-V இது பொதுவாக ஆங்கிலம் பயன்படுத்தும் வரிசை அல்ல.

He sought his manxome foe long time என்பது பொதுவான SVO வரிசை.


சில மொழிகள் V -S -O  என்ற வரிசையில் சொல்லமைப்பு கொண்டுள்ளன.

அராபிக், உருது போன்றவை..பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் , வினைகளுக்கு முக்கியத்துவம் ...கவித்துவமான மொழிகள்!

VSO வரிசை நம் கம்ப ராமாயணத்தில் சில:

*'கண்டனென், (யான் )கற்பினுக்கு அணியை, கண்களால், 
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்


*கண்ணுற்றான் வாலி, நீலக் கார் முகில் கமலம் பூத்து,
மண் உற்று, வரி வில் ஏந்தி, வருவதே போலும் மாலை;

வாங்கினாள், தன் மலர்க்கையில்; மன்னனை முன்னா
ஏங்கினாள் அவ்வனுமனும் 

இப்படி வரும் திருக்குறள் ஏதேனும் ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம்!

உணர்ச்சிப் பூர்வமான வாக்கியங்களுக்கு வினைச் சொல்லே முதலாவதாக வரும் போலிருக்கிறது.


கொல்லுடா அவனை!


ஏமாத்திட்டா மச்சா!


சொல்லடி அபிராமி!


கட்றா வண்டியை!


எடுடா அருவாளை!

பெயர்ச்சொற்கள் இறந்து போனவை என்கிறார் ஓஷோ. Tree என்கிறோம். ஆனால் Tree என்பது ஒரு இறந்து போன ஒன்று அல்ல.நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருப்பது என்கிறார். Treeing என்று சொல்வதே சரி. உண்மையில் ஒரு பாறைக்குள்ளும் ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டுள்ளது. பாறைக்குள்ளும் ஏதோ ஒன்று உயிர்ப்புடன் உள்ளது. rocking என்று சொல்வதே சரி! 


சரி. ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தை தலைகீழாகப் படித்தால் பெரும்பாலும் அர்த்தம் இருக்காது. தலைகீழாகப் படித்தாலும் அர்த்தம் வரும் வாக்கியம் ஒன்று:


"Are you as bored as I am?"

ஓஷோ ஜோக்.

ஒரு சொட்டைத் தலைக்கு பத்து இருபது முடிகளே மிச்சம் இருந்தன. 

பார்பர் ஷாப்பிற்கு ஹேர் கட் சென்ற அவன் " இதப் பாருப்பா, எனக்கு நீ பாதி சார்ஜ்  தான் வாங்கணும் ; எனக்கு முடியே இல்லையே, ரொம்ப அநியாயம் " என்றான்.

பார்பர் " இல்ல சார், நான் உண்மையில் இரண்டு மடங்கு சார்ஜ் வாங்கணும்; முடி எங்கே இருக்குன்னு கஷ்டப்பட்டு தேடித் தேடி வெட்டறேனே " என்றான்.


சமுத்ரா