இந்த வலையில் தேடவும்

Friday, June 28, 2013

கலைடாஸ்கோப்-93

லைடாஸ்கோப்-93 உங்களை வரவேற்கிறது.

@@#%)@$#%

Danger is real; fear is optional - After earth




வில் ஸ்மித் நடித்திருக்கும் AFTER EARTH சயின்ஸ் பிக்ஸன் திரைப்படம் அவ்வளவாக ஓடவில்லை என்று தெரிகிறது. படத்தில் நகைச்சுவையோ,
சஸ்பென்ஸோ , திரில்லரோ இல்லை. ஆனாலும் எனக்குப் பிடித்திருந்தது.
பூமியில் இருந்து நோவா எர்த் எனப்படும் கிரகத்துக்கு பயணம் போகும்
வில் ஸ்மித் குழு எதிர்பாராத விதமாக ஒரு கனமான கிரகத்தின் ஆஸ்டிராய்ட்
பெல்டுக்குள் மாட்டிக் கொள்கிறது. கிரகத்துக்குள் இழுக்கப்பட்டு விண்கலம் கீழே விழுந்து நொறுங்குகிறது.விண்கலத்தில் ஹீரோ, மற்றும் அவரது மகன் தவிர எல்லாரும் இறந்து விடுகிறார்கள். (?!) ஹீரோவுக்கு தொடை எலும்பு பயங்கரமாக முறிந்து விடுகிறது. அவரால் எழுந்து நிற்கக் கூட இயலவில்லை. இந்நிலையில் தகவல் மையத்துக்கு செய்தி அனுப்பும் கருவி எங்கோ விழுந்து விடுகிறது. அதைத் தேடி எடுத்து தகவல் அனுப்பினால் மட்டுமே இரண்டு பேரும் உயிர் பிழைக்க முடியும். இந்நிலையில் அவர் தனது 13 வயது மகனை புத்தம் புதிய கிரகத்தில் கருவியைத் தேடி வருமாறு வெளியே அனுப்புகிறார். அந்தப் பையன் கருவியை தேடி எடுத்தானா, தனக்கு வரும் ஆபத்துகளை சமாளித்து தன் குறிக்கோளில் வெற்றி அடைந்தானா என்பது தான் படம்.

புதிய கிரகத்தை காட்டுவதற்கு இயக்குனர் (சியாமளன்) செட்டெல்லாம் போட்டு மெனக்கெடவில்லை என்று தெரிகிறது. ஆப்பிரிக்காவிலோ எங்கோ போய் எடுத்து விட்டார். ஒரு  கிரகம் 100% பூமி மாதிரியே இருக்குமா என்று தெரியவில்லை. கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று மெகா சைஸ்
மரங்களையும் ,குரங்குகளையும், கழுகுகளையும் காட்டி இருக்கிறார்கள்.
அந்த ராட்சஸ கழுகு சிந்துபாத் கதைகளில் வருவது போல பையனை அலேக்காக  தூக்கிச் சென்று தன்  மெகா சைஸ் கூட்டில் குஞ்சுகளுக்கு உணவாக வைக்கிறது!

 கனமான கிரகங்களில் மெகா சைஸ் உயிரினங்கள் தோன்ற முடியாது என்று ஒரு விதி இருக்கிறது. ஏற்கனவே கிரகத்தின் gravitational pull அதிகமாக இருக்கும் போது டைனோசர் போன்ற மெகா சைஸ் விலங்குகள் evolve ஆனால் அதன் அதீத எடை காரணமாக அந்த விலங்கு நடக்கக் கூட முடியாது.

பூமியைப் போன்ற இன்னொரு கிரகத்துக்கு குடி பெயர்ந்து விட வேண்டும் என்ற ஆசை மனிதனை நெடுநாளாய் ஆட்டிப் படைத்து வருகிறது. இப்போது
பூமி overload ஆகி ஒரு பழைய , பாழடைந்த  மெகா சைஸ்  குப்பைத் தொட்டி ஆகி விட்டது. பச்சைப் பசேலென்ற இன்னொரு வீட்டைக் கண்டுபிடித்து கொஞ்சம் கொஞ்சமாக அதை ஆக்கிரமித்து மரங்களை வெட்டி, அங்கேயும் பிளாட்டு போட்டு சீரியல் நடிகர்களை வைத்து கூவிக் கூவி  வியாபாரம் செய்யலாம் என்று ஆசைப் படுகிறான்.இதுவரை  பூமியைப் போல நிறைய நூற்றுக் கணக்கான கிரகங்களை கண்டு பிடித்திருக்கிறார்கள். தன் தாய் நட்சத்திரத்திடம் இருந்து habitable zone எனப்படும் பாதுகாப்பான அதே சமயம் வெதுவெதுப்பான தூரத்தில் சுற்றும் பாறைக் கிரகங்களில் தண்ணீர் இருக்கும் என்று வைத்துக் கொண்டால் அங்கே உயிர்கள் இருக்க 80% சாத்தியம் இருக்கும் என்று சத்தியம் செய்கிறார்கள். ஏனென்றால் தண்ணீர் ப்ரோடீன்களை கரைப்பதற்கும் சுமந்து செல்வதற்கும் தோதானது.

ஆனால் பிரச்சினை என்ன என்றால் அந்த கிரகங்கள் மிகவும் தூரத்தில் உள்ளன. அதை சென்று அடைய ஒளிக்கே சில நூறு ஆண்டுகள் பிடிக்கும். உயிரியல் மனிதனின் வயதை ஆயிரம் ஆண்டுகளாக அதிகரிக்கும் வித்தையை கண்டுபிடிக்க வேண்டும். இயற்பியல், ஒளி வேகத்தில் 80% செல்லும் விண்கல தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும். அப்போது வேண்டுமானால் இது சாத்தியம். ஒரு நாள், நாம் இந்த சலித்துப் போன பழைய வீட்டை விட்டு விட்டு புது வீட்டில் கிரகப் பிரவேசம் செய்யலாம்.

உண்மையிலேயே புதிய வானம் புதிய பூமி!

புதிய சூரியன், புதிய நட்சத்திரங்கள், புதிய காற்று...wow !

சரி...புதிய கிரகத்துக்கு போய் மனிதன் என்ன செய்யப் போகிறான்..அங்கேயும்
இதே அபத்தங்களை தான் செய்வான். 'நீ அடிச்சா அடி..நான் அடிச்சா இடி ' என்று வசனம் பேசும் ஹீரோக்களை வைத்து படம் எடுப்பான்; சக மனிதனிடம் கடன் கொடுத்து விட்டு சண்டை போடுவான் என்று pessimistic ஆக யோசிக்க வேண்டாம். புதிய வீட்டில் எப்படியோ சில நூற்றாண்டுகளுக்கு வாழ்க்கை சுவாரஸ்யமாகவே இருக்கும்.

FEAR IS OPTIONAL
என்ற வரி என்னை மிகவும் கவர்ந்தது.

சின்னக் குழந்தையாக இருந்ததில் இருந்து நாம் ஏதோ ஒன்றுக்கு பயப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். ஒரு குழந்தை கிட்டத்தட்ட எல்லாவற்றுக்கும் பயப்படுகிறது. கேட்டைத் தாண்டி வெளியில் போகவே தயங்குகிறது. நாம் வேறு தனியா போகாதே பூச்சாண்டி இருக்கும் பூதம் இருக்கும் என்று சொல்லி வளர்க்கிறோம். வளர வளர பயங்கள் குறைகின்றனவே தவிர மறைவதில்லை.

We fear things in proportion to our ignorance of them.
Christian Nestell Bovee 

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்று பாட்டெலாம்
தெரியும் என்றாலும் நம் பயங்கள் மறைவதே இல்லை. தெனாலி கமல் தன் பயங்களை வெளியே சொல்கிறார். நாம் சொல்வதில்லை.அவ்வளவு தான்.  என் 'பய' லிஸ்டில் பூனைக்குட்டி, கார் ஒட்டுதல், உயரமான மாடியில் இருந்து கீழே பார்த்தல், மிகக் குளிர்ந்த பானங்களைக் குடித்தல், பெங்களூருவில் ரோட்டை க்ராஸ் செய்தல் போன்றவை அடக்கம்.

பயங்களில் மிகவும் அபாயமான பயம் எது என்றால் தன்னைப் பற்றிய பயம் என்கிறார் ஓஷோ. (fear of oneself ) . நமக்குள்ளே செல்ல பயம்.. நாம் நாமாகவே இருக்க பயம். கணவன், அதிகாரி, டாக்டர், மகன், நண்பன், அண்ணன், போன்ற அத்தனை முகமூடிகளையும் வீசி விட்டு நம்மை நாமே நிர்வாணமாகப் பார்க்கும் பயம்.நம் உண்மை முகத்தை நேருக்கு நேர் தரிசிக்கும் பயம். இது தான் உண்மையான பயம் என்கிறார் ஓஷோ. நம் எல்லாருக்கும் இந்த பயம் இருக்கிறது.

+++*+++++

*புத்தகங்களில் அதிகம் விற்பது இந்த you can win , நீங்களும் சாதிக்கலாம்,
போன்ற தன்னம்பிக்கை டைப் புத்தகங்கள் தானாம். இதிலிருந்து நம் மக்களுக்கு தன்னம்மிக்கை ரொம்பவே குறைவு என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். in fact , அது கொஞ்சம் அதிகம்.Dunning–Kruger effect , மனிதர்கள் தங்கள் திறமைகளை இயல்புக்கு அதிகமாகவே மதிப்பிடுகிறார்கள் என்று சொல்கிறது. interview விற்கு செல்லும் போது நீங்கள் எடுத்துச் செல்லும் resume -ஐ உற்றுப் பாருங்கள் புரியும்.

இந்த slightly over -confidence அல்லது over estimation  நம்மில் நிறைய பேரிடம் இருக்கிறது. திறமையை மட்டும் அல்ல தங்கள் உணர்வுகளை, IQ வை, ஞாபக சக்தியை , தன் செயல்பாட்டை, பிரபல்யத்தை, ஆரோக்கியத்தை இப்படி எல்லாவற்றையும் மனிதர்கள் ஒரு படி மேலேயே மதிப்பிடுகிறார்கள்.


உதாரணத்துக்கு

-நானா? எனக்கென்ன நல்லா தான் இருக்கேன் fit like a fiddle என்பார்கள். 'எனக்கு இதெல்லாம் வராது' என்ற ஒரு அலட்சியம் அல்லது அதீத நம்பிக்கை. ஆனால் இந்த அலட்சியமே அவர்கள் உயிருக்கு ஒருநாள்  உலை வைத்து விடும். உடல், அவ்வப்போது அறிகுறிகள் காட்டினால், மாடி ஏறும் போது கொஞ்சம் சுருக்கென்று இதயத்தில் வலித்தால், ச்சே, ச்சே நான் என்ன குடிக்கிறேனா, நான் வெஜ் சாப்பிடுகிறேனா , யோகா எல்லாம் பண்றேன் எனக்கு 50 வயசு தானே?  எனக்கெல்லாம் ஒன்னும் வராது என்ற அலட்சியம். நம் ஆரோக்கியத்தைப் பற்றிய over estimation .

- நாம் நம் ஞாபக சக்தியை அதிகமாகவே மதிப்பிடுகிறோம். இதெல்லாம் நான் ஞாபகம் வைத்துக் கொள்வேன். நாலு டிஜிட் நம்பர் தானே,,,ஜுஜுபி என்று நினைத்துக் கொண்டு அப்புறம் ஏ .டி .எம் ம்முக்குப் போய் கார்டை நுழைத்து விட்டு பின் நம்பர் ஞாபகம் வராமல் திண்டாடுவோம்.

The palest ink is better than the strongest memory என்பதை மறந்து விடுகிறோம்.

-நம் popularity யைக்கூட ...நம்மை நிறைய பேருக்குத் தெரியும் என்ற over estimation .'எனக்கு அவரை (அவருக்கு என்னை) நன்றாகவே தெரியுமே' என்று over confidence உடன் ஒரு ஆளை பார்க்கச் செல்கிறோம்.. அன்னிக்கு ட்ரைன்ல பார்த்தனே...ரொம்ப நல்லா பேசினார். சென்னை வந்தா கண்டிப்பா வீட்டுக்கு வரணும்னார். போன் நம்பர் கொடுத்தார்.

கடைசியில் அவரைத் தேடிக் கொண்டு போனால் யார் நீங்க ?? என்பார்.

- last but not least , நம் திறமைகளை...


SQL server எனக்கு தூசு மாதிரி... query எல்லாம் சூப்பரா எழுதுவேன் என்று சொல்கிறோம். SQL0900 - Application process not in a connected state என்று error வந்தால் முழிப்போம். எல்லா ராகமும் அத்துப்படி, சூப்பரா பாடுவேன் என்று நினைத்துக் கொண்டிருப்போம். கடைசியில் பாடிக் காட்டினால் கர்ண கடூரமாக இருக்கும். ஹிந்தி தானே !தெரியுமே!கபீர் கே தோஹே எல்லாம் படித்திருக்கிறோமே என்று மிதப்பில், மும்பை போய் விட்டு  ஆட்டோக் -காரரிடம் பேசுவதற்கு தயங்குவோம்.

skills என்பது வேறு exhibition skills என்பது வேறு.


ச.ப.பு:


"நான் வீட்டுக்குப் போக வேண்டும் "

-தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியச் சிறுகதைகள்

தமிழில்: மதியழகன் சுப்பையா

இதில் ஒரு கதையை மட்டும் சுருக்கிக் கொடுத்துள்ளேன்.

"சைக்கிளை திருட்டு கொடுத்ததன் சுகம் " -அசோக் சுக்லா





முதலில் நானும் சைக்கிளை திருட்டு கொடுத்து நிற்கும் ஒரு மாறுபட்ட சுகத்துக்கு பரிச்சயமற்றிருந்தேன். என் சைக்கிளைத் திருடி எனக்கிந்த தேவ சுகத்தை அளித்த அந்த மகா புருஷனை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
பற்றுகளை விட்டு சிந்திக்கையில் எனது சைக்கிள் திருட்டுப் போனதாகக் கருதவில்லை. அது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது எனலாம். மேதைகளும் புரட்சியாளர்களும் நாடு கடத்தப்பட்டதற்கு வருத்தப்படாத நாம், சைக்கிள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு ஏன் கவலைப்பட வேண்டும்?

நான் வீடு திரும்புவதற்குள் சைக்கிள் திருட்டுப் போன செய்தி அப்பகுதி முழுவதும் பரவி விட்டிருந்தது. வீட்டை வந்தடைவதற்குள் வழியில் ஒரு நூறு பேருக்காவது பதில் சொல்லி இருப்பேன். அன்றுதான் நான் இவ்வளவு பிரபலமானவன் என்பதையே அறிந்தேன்.

என் மனைவி குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள் . அவள் மற்ற பெண்களோடு சேர்ந்து ஒப்பாரி வைப்பதில் அலாதி விருப்பமுள்ளவள் . அற்பமான விஷயங்களுக்குக் கூட மணிக்கணக்கில் அழும் ஆற்றல் கொண்டவள்.

என் மகன் சைக்கிள் திருடு போன செய்தியை கர்வத்துடன் மற்ற சிறுவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்கு முதன் முதலாக கர்வப்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் அவர்கள் தந்தையர்களின் சைக்கிள்கள் திருட்டுப் போகாதது குறித்து அவர்கள் வருத்தப்பட்டிருக்கலாம்.

நமது நாட்டில் துக்கம் விசாரிப்பது மிகப் பெரிய கலை. செருப்பு பிய்ந்து போனதை அப்பா செத்துப் போனதற்கான சம கம்பீரத்தோடு துக்கம் விசாரிப்பவர்களையும் காண முடியும்.விசாரிக்க வந்தவர்களின் பேச்சுக்கள் சற்று விபரீதமானவையே.ம்ம்...எது நடக்கணுமோ அது நடந்து தானே ஆகணும்...கவலைப்பட்டா எப்படி? எழுந்து குளி போ! அல்லது "கழுத, போவணுமுன்னு இருந்துச்சு, போச்சு...இப்ப என்ன வாழ்க்கையா போச்சு! - புதியதாய் யாரேனும் வந்தால், நிச்சயம் என் மனைவி ஓடிப் போனதாய்த்தான் நினைப்பார்கள்.

ஓரிரு நாட்கள் சுற்றுப்புறத்தில் சைக்கிள் திருட்டுப் போன சோகம் அப்பியிருந்தது . நான் எங்கே போனாலும் தொடர்ந்திருக்கும் அரட்டைகள் அப்படியே நின்றுவிடும். எல்லாரும் என்னை அனுதாபத்துடன் பார்த்துப் பேச ஆரம்பித்து விடுவார்கள். இப்படியாய் சாகாமல் செத்துப் போனவனின் நிலையை அனுபவிப்பேன்.

இறந்த பின் நான் என்னைப் பற்றிய பேச்சுகளை கேட்க இயலாது தான். ஆனால் சைக்கிளை இழந்ததன் காரணமாய் நான் அதை அனுபவித்து விட்டேன்.

என் சைக்கிளைத் திருடி எனக்கு இந்த அற்புத சுகத்தின் அனுபவத்தைத் தந்த அந்த மகராசனை மீண்டும் வணங்கி மண்டியிடுகிறேன்.

*

Management இல் 80-20 விதி என்று ஒன்று இருக்கிறது. Law of  Vital few என்று சொல்லப்படும் ....ஒரு கம்பெனியின் லாபத்தில் 80 சதவிகிதம் அதன் 20 சதவிகித வாடிக்கையாளர்களிடம் இருந்து வருகிறது என்று சொல்கிறது இந்த விதி.மேலும் உங்களின் 80% உழைப்பு நீங்கள் வேலை செய்யும் 20% நேரத்தில் இருந்து கிடைக்கிறது என்கிறது. மேலும், கம்பெனியின் 80% உற்பத்தி அதன் 20% தொழிலாளர்களிடம் இருந்து கிடைக்கிறதாம்.

இந்த விதி நம் தினசரி வாழ்க்கைக்கும் பொருந்தும் போல இருக்கிறது. சமையலின் 80% ருசி அதில் போடப்பட்டுள்ள 20% பொருட்களிடம் இருந்து வருகிறது. ஒரு திரைப்படத்தின் 80% அதன் 20% சீன்களில் இருக்கிறது.  நம்முடைய பிரச்சனைகளில் 80% சில முக்கியமான 20% காரணங்களால் வருகிறது. இப்படி.....அந்த 20%  VITAL FEW , முக்கியமான ஆனால் குறைவான அந்த சமாசாரங்களை கண்டுபிடித்து விட்டால் போதும். 80% விஷயங்கள் தெளிவாகி விடும்.

நம் வாழ்க்கைக்கும் இந்த 80-20 விதி பொருந்தும் போலத் தெரிகிறது. நாம் நம் 80% வாழ்க்கையை அதன் 20% காலத்தில் வாழ்ந்து முடித்து விடுகிறோம். அந்த இருபது சதவிகிதம் ஆளுக்கு ஆள் வேறுபடலாம்.அந்த 80% வாழ்க்கை  20-40 வயது ஆகவோ அல்லது 40-60 வயது ஆகவோ இருக்கலாம்.

படித்ததில் பிடித்தது:


Don’t judge each day by the harvest you reap; but by the seeds you plant




ஓஷோ ஜோக்

சிறைக்கு வந்த ஒரு புதிய கைதி அங்கே ஏற்கனவே இருந்த பழைய வயதான
கைதியைப் பார்த்து ஹலோ என்றான்.

ப. கைதி புதியவனைப் பார்த்து 'என்ன தப்பு செய்தாய்?' என்றான்.

பு. கைதி " ஷாப்பிங் மாலில் திருடி விட்டேன்" என்று சொல்லி விட்டு "நீங்கள்?" என்றான்.

நானா...நான் இங்கே இருக்கணுமுன்னு தலைவிதி...எப்படி வாழ்ந்தேன் தெரியுமா? அனில் அம்பானியின் வாழ்க்கை போ!...வருஷக்கணக்கா..கப்பல் மாதிரி நாலைஞ்சு காரு. பெரிய பங்களா,,,நீச்சல் குளம்; பெண்கள்.. உலகத் தரமான ரெஸ்டாரன்ட்-களில் டின்னர்..ஹ்ம்ம்...

"ஓ ..அப்படியா" என்று ஆதங்கப்பட்ட பு.கைதி "அப்புறம் என்ன ஆச்சு,,இப்படி?" என்றான்.

"அதுவா, ஒரு நாள் அம்பானி அவர் கிரெடிட் கார்ட் காணம் -முன்னு போலீஸில் கம்பிளயன்ட் செய்து விட்டார்"

சமுத்ரா ..

Friday, June 21, 2013

கலைடாஸ்கோப் -92

லைடாஸ்கோப் -92 உங்களை வரவேற்கிறது.


Time takes time

It's okay to go to hell.  Just don't stay there

-Freedom from fear

மேட்டர் உள்ளே.....


#@!%)@%&$#%

'sleep like a baby' என்ற caption உடன் ksrtc இன் multi -axle வோல்வோ செமி ஸ்லீப்பர் பஸ் ஒன்று இருக்கிறது.போன வாரம் அதில் ஊருக்குப் போனேன்.

sleep like a baby does,  குழந்தை தூங்குவது போலத் தூங்குங்கள் என்று தானே இருக்க வேண்டும்? அது என்ன குழந்தை போலத் தூங்குங்கள்? ஒரு பெயர்ச் சொல்லையும் ஒரு வினைச் சொல்லையும் எப்படி ஒப்பிட முடியும்?
சரி...என்னை அடிக்க வருவதற்கு முன் மேட்டரை சொல்கிறேன்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

தூங்கும் போது நான் செருப்பை கழற்றி விடுவேன். காலையில் ஒரு ஐந்து மணி சுமாருக்கு எழுந்து பார்த்தால் ஒரு செருப்பை எங்கேயோ காணோம்.
காந்திபுரம் ஸ்டாப் நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்..அது எப்படி ஒரு செருப்பு, குத்துக் கல் போல வைத்த இடத்திலேயே இருக்கும் போது இன்னொன்று மட்டும் எங்கோ மாயமாய் போக முடியும்?
F =MA போன்ற இயற்பியல் விதிகள் ஒரு செருப்புக்கு மட்டும் எப்படி apply ஆயின? இரண்டையும் பக்கத்து பக்கத்தில் தானே வைத்தேன்? செருப்புகள் எப்போதும் entwined ஆக இருப்பதே இல்லை போலும்!

மற்றவர்களின் கால்களை கவனித்தேன்...எல்லாரின் கால்களிலும் இரண்டு செருப்புகள் அழகாக அமர்ந்திருந்தன. நம்மிடம் ஒரு குறை இருக்கிறது என்றால் அதே குறை மற்றவர்களிடமும் இருக்கிறதா என்று பார்ப்போம்.
நம் சட்டையில் ஒரு பட்டன் இல்லை என்றால் எதிரே வரும் எல்லாருடைய
பட்டன்களையும் கவனிப்போம். நம்முடைய குடையின் கம்பி வெளியே வந்திருந்தால் எதிரே வரும் எல்லாருடைய கம்பியையும் கவனிப்போம்.
நம் பல்வரிசை சரியாக இல்லை என்றால் நம்மிடம் பேசும் எல்லாருடைய பல்லையும் கவனிப்போம்....fact என்ன என்றால் நாம் தான் நம் பட்டன் குடைக்கம்பி பல்வரிசை பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருப்போம். மற்றவர்கள் அதைக் கவனிக்கக் கூட மாட்டார்கள். உதாரணமாக , ஒரு நாள் இரண்டு கால்களிலும் வேறு வேறு செருப்பு போட்டுக் கொண்டு வெளியே போய்ப் பாருங்கள்...95% பேர் அதை கவனிக்க மாட்டார்கள்...:)

என் செருப்பு காணாமல் போகவில்லை என்றால் ஏன் மற்றவர்கள் கால்களை கவனிக்கப் போகிறேன்? நம்மிடம் உள்ள ஒரு குறை, நம் observation skills ஐ எத்தனை அதிகமாக்கி விடுகிறது? நமக்கு சரியாக பேச வராது என்றால் சரளமாகப் பேசும் ஒருவரை கூர்ந்து கவனிப்போம். கறை நல்லது என்பது போல குறையும் நல்லது போலும்! மற்றவர்கள் கால்களில் செருப்புகள் இருந்தன என்று சொல்வதை விட செருப்புகள் அழகாக இருந்தன..டிஸைன் டிசைனாக கலர் கலராக விதம் விதமாக... வாழ்க்கையில் இப்படி செருப்புகளை கூர்ந்து கவனித்தது இதுவே முதல் முறை...முடிந்த மட்டும் கால்களால் துழாவி செருப்பு எங்கேயாவது இருக்கிறதா என்று பார்த்தே ன்...ஹூஹும்...அறிகுறியே காணோம்.

காந்திபுரத்தில் இறங்கவில்லை என்றால் கடைசி ஸ்டாப் மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட். அங்கிருந்து கா. பு. க்கு நூறு ரூபாய் அழ வேண்டும். எனக்கு முன்னால் சீட்டில் அமர்ந்திருந்தவர்கள் சீட்டை நன்றாக பின்னால் பரப்பி விட்டுக் கொண்டு (இன்னும்)சுக நித்திரை செய்து கொண்டிருந்தார்கள் . sleep like a baby ! வந்தது வரட்டும் என்று அப்படியே உட்கார்ந்து விட்டேன். காந்திபுரம் காந்திபுரம் என்று கண்டக்டர் கத்தியதும் பேக்கை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு சீட்டின் அடியிலும் வெ .மா. இத்யாதிகளை தற்காலிகமாக விட்டு விட்டுத்  தேடினேன். எனக்குத் தெரிந்த இயற்பியலின் படி செருப்பு நான் அமர்ந்திருந்த சீட்டுக்கு பின்னால் சென்றிருக்க வாய்ப்பில்லை  என்று நினைத்துக் கொண்டு....

கடைசியில் என்னை இத்தனை அவதிக்குள்ளாக்கிய அந்த செருப்பு மூன்று சீட்டுகள் முன்னால்  தள்ளி ஒரு சீட்டின் அடியில் சென்று நிலை கொண்டிருந்தது. இதற்குள் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் விட்டு பஸ் நகர்ந்து விட்டிருந்தது...நான் அவசரமாக ஸ்வல்ப நிலிசி என்று சொல்லி விட்டு அரக்கப் பறக்க இறங்கினேன்.. கண்டக்டர் 'அது ஏனு நித்தெ ஒடித்தாரப்பா  ஜன ' என்று அலுத்துக் கொண்டார். (என்ன தூக்கம் ஜனங்களுக்கு) நான் பட்டுக் கொண்டிருந்த அவஸ்தை அவருக்கென்ன தெரியும் பாவம்....

இனிமேல் பஸ்ஸில் செல்லும்போது செருப்பை கழற்றக் கூடாது; அப்படியே கழற்றினாலும் சீட்டுடன் கட்டி வைத்து விட வேண்டும் என்று முடிவெ -டுத்துக் கொண்டேன். after all ஒரு சின்ன செருப்பு என்ன பாடு படுத்தி விடுகிறது மனிதனை!

* உங்களால் இரண்டு நிமிடம் ஆபீசில் கம்ப்யூட்டரை நோண்டாமல் 'சும்மா' அமர்ந்திருக்க முடியுமா? 


இந்தத் தளத்துக்கு சென்று பாருங்கள்.  சும்மா இரண்டு நிமிடம் மௌஸை அசைக்காமல் டேபை மாற்றாமல் ஜி-மெயிலை பார்க்காமல் மெசெஞ்செரில் 
அரட்டை அடிக்காமல் அப்படியே அலைகளின் இசையைக் கேட்டபடி 'சும்மா' அமர்ந்திருக்கவும். 'சும்மா' இருப்பது என்பது வடிவேலு சொல்வது போல ரொம்பவே கஷ்டமான விஷயம் தான்.. 

சும்மா தான் இருக்கேன் என்று ஈசியாகக் சொன்னாலும் நாம் எல்லாரும் உண்மையிலேயே 'சும்மா' இருப்பதில்லை. ஏதோ ஒன்று செய்து கொண்டே தான் இருக்கிறோம்.சுண்டு விரல் நகத்தையாவது நோண்டிக் கொண்டி ருக்கிறோம்.  உடல் சும்மா இருந்தாலும் மனம் சும்மா இருப்பதில்லை.   'சொன்னது கேட்டாயே அகப்பேய் சும்மா இருந்துவிடு' என்று புலம்பினாலும் நம் அகப்பேய் சும்மா இருப்பதில்லை. 

கோயம்பத்தூர் ஈஷா யோக மையத்தில் தியான லிங்கத்தின் அருகில் யாரையும் பேச அனுமதிப்பதில்லை. கோயிலுக்குள் நுழையும் போதே 'பேசாதீர்கள்' என்று ஜாடை செய்து பேரமைதியில் நம்மை உள்ளே அனுப்பி வைக்கிறார்கள் வாலண்டியர்கள்.பெண்கள் தங்கள் கொலுசுகளை கழற்றி விட வேண்டும். ஜீன்ஸ் பேண்டுகளை கீழே உரசா வண்ணம் மடித்து விட்டுக் கொள்ள வேண்டும். 

மௌனத்தை கலைக்கும் வண்ணம் அல்லது மௌனத்தை மேலும் ஆழப்படுத்தும் வண்ணம் ஒருவர் உட்கார்ந்து மிருதங்கம் வாசிக்கிறார். முதலில் மிகவும் slow pace இல் ஆரம்பிக்கும் நடை மெல்ல மெல்ல வேகமெடுத்து ஓட ஆரம்பிக்கிறது. பேச்சற்ற மகா மௌனத்தில் அந்த லயம் நமக்குள் புகுந்து ஏதோ செய்கிறது.சுற்றிலும் பேச்சுகளின் சாகரத்தில் இருந்து பழகி விட்ட நமக்கு அந்த ஆழ்ந்த மௌனம் புதிதாகவும் புதிராகவும் இருக்கிறது. உள்ளே தியான லிங்கத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள அரையிருட்டுக் குகைகளில் அமர்ந்து தியானம் செய்யலாம். மணி அடித்ததும் எழுந்து வந்து விடலாம். கர்ப்ப கிரகத்தை விட்டு வெளியே வந்து 
சித்தர்களின் சிலைகள் இருக்கும் மண்டபத்தை விட்டு வெளியேறும் வரை பேச அனுமதி இல்லை. அப்புறம் வெளியே வந்து வழக்கம் போல 
வம்சம் சீரியலில் ரம்யா கிருஷ்ணன் அணிந்த சேலை, கேண்டீனில் பஜ்ஜி இருக்கிறதா, ATM இல் பணம் வரவில்லை கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி போன்ற வேதாந்த தத்துவ விசாரங்களில் ஈடுபடலாம்.

சரி....வாயை பேசாமல் இரு என்று சொல்ல முடியும்.. ஆனால் மனதை?
அது விடாமல் பேசிக் கொண்டு தானே இருக்கிறது? mind is a b--ch ...




*
I hate slow replies என்று எங்கோ படித்தேன். how r u என்று sms அனுப்பினால் அரை மணிநேரம் கழித்து fine என்று reply அனுப்புபவரா நீங்கள்? அதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள். sms என்றால் ஐந்து நிமிடத்துக்குள் email என்றால் அரை மணி நேரத்துக்குள் ஏதாவது  reply அனுப்பி விடுங்கள். sms அனுப்புகிறாயா அனுப்பு..நான் எப்போது சௌகரியமோ அப்போது தான் பதில் அனுப்புவேன் என்று சொல்லாமல் சொல்லாதீர்கள்.

சரி. இது கொஞ்சம் டூ மச்...

:)



டைரி எழுதும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? இன்று 90% மக்களுக்கு அந்தப் பழக்கம் இல்லை என்று நினைக்கிறேன். டைரி என்பது எழுதும்போது மிகவும் சலிப்பாக இருக்கலாம். அதே டைரியை ஒரு இருபது முப்பது வருடம் கழித்து படிக்கும் போது எப்படி இருக்கும்????அப்படியே கடந்த காலத்துக்கு டைம் மெஷினில் பயணித்த effect கிடைக்கும் அல்லவா?

பாட்டி டைரி எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தாள் . "இன்று காலை 
திருப்பூரில் இருந்து பேபி வந்திருந்தாள் . ஒரு டஜன் ரஸ்தாளிப் பழங்கள் வாங்கி வந்தாள் . அவள் வீட்டுக்காரர் பென்ஷன் விஷயமாக வெளியூர்  பேங்குக்கு சென்றதால் பேரனுடன் அவள் மட்டும் வந்திருந்தாள் . வாங்கி பாத் மற்றும் ரசம் சமைத்தேன்..அப்பளம் சுட்டேன்.கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டிருந்து விட்டு ஸ்வாபிமான் நாடகம் பாத்தோம். மது ஸ்கூலில் இருந்து சீக்கிரமாகவே வந்து விட்டான். பரீட்சை சுமாராக எழுதி இருப்பதாக சொன்னான். மாலை பேபி ஊருக்குக் கிளம்பினாள் . ஒரு பாட்டு பாடச் சொன்னேன். சரஸ்வதி மனோஹரியில் 'எந்த வேடுகொந்து ராகவா' பாடினாள் .காவேரி மாமி கொடுத்த ஆரஞ்ச் கலர் ஜாக்கெட் பிட் , தேங்காய் வைத்துக் கொடுத்தேன். பையன் கையில் ஐந்து ரூபாய் கொடுத்தேன்.."

பதினைந்து வருடம் கழித்துப் படிக்கும் போது , பாட்டியின் வாங்கிபாத் ரசம் இவைகளின் வாசம் மெதுவாக வந்து போகும்!

டைரிகள் எத்தனை சுவாரஸ்யமானவை! அதுவும் மற்றவர்களது டைரிகள்!

ராபர்ட் ஷீல்ட் என்ற ஆசாமியின் டைரியை இதுவரை யாரும் முறியடி க்கவில்லை என்கிறார்கள்.அவரது டைரியில்  கிட்டத்தட்ட நான்கு கோடி வார்த்தைகள்! தினமும் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை என்ன செய்தேன் என்று எழுதி இருக்கிறார். உச்சா போனது, சாண்ட்விட்ச் செய்தது, பல்பு மாற்றியது, ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டது எல்லாம்! இப்போது இந்த மெகா டைரியின் ஆறு பக்கங்கள் மட்டுமே பொது மக்களுக்கு திறந்து  விடப்பட்டுள்ளன. ஐம்பது வருடம் கழித்து மற்ற பக்கங்கள் வெளியே வருமாம். நானும் டைரி எழுதுகிறேன் என்று புது டைரி வாங்கிக் கொண்டு எத்தனையோ முறை கிளம்பி இருக்கிறேன். ஒரு வாரம் அதிக பட்சம் பத்து நாள் எழுதி விட்டு பின்னர் 'இதெல்லாம் என்ன வரலாற்றிலா வரப்போகிறது'
நான் இன்று மசாலா தோசை சாப்பிட்டால் என்ன, இட்லி வடை சாப்பிட்டால் என்ன என்று சலித்துக் கொண்டு டைரியை கடாசி விடுவேன்.ராபர்ட் ஷீல்ட் அளவுக்குப் பொறுமை கிடையாது! டைரி எழுதினால் authentic ஆக எழுத வேண்டும் என்றும் நினைக்கிறேன். எனக்கே உரித்தான சில அந்தரங்கங்களை  டைரி மூலம் வெளிப்படுத்தவும் தயக்கம்.

*
நைவென் (NIVEN ) - I LIKE HIM ....அறிவியல் புனைவு எழுத்தாளர் அவர்.

அவர் சில funny விதிகளை எழுதி உள்ளார்.

F × S = k. The product of Freedom and Security is a constant. To gain more freedom of thought and/or action, you must give up some security, and vice versa

- அரசியல் தலைவர்கள் விஷயத்தில் இது எவ்வளவு உண்மை! முதல்வன் படத்தில் அர்ஜுன் முக்காடு போட்டுக் கொண்டு கிராமத்துக்கு செல்வதை நினைவு படுத்திக் கொள்ளவும்.

It is a sin to waste the reader's time

- ஒரு புத்தகத்தைப் படித்து முடித்ததும் சே ,இதில் போய் நேரத்தை வீணடித்து விட்டோமே,வேறு ஏதாவது செய்திருக்கலாம் என்று தோன்றக் கூடாது. ஒரு நல்ல கதை என்பது 95% அதன் கிளைமாக்ஸில் ஒளிந்து கொண்டிருக்கிறது என்கிறார் சுஜாதா. 

Ethics change with technology 

-இது எவ்வளவு உண்மை? 

உதாரணமாக , இந்த இன்டர்நெட் யுகத்தில் கூட புடவை உடுத்த சொல்லறியே பாட்டி என்கிறாள் ஒரு பெண். இண்டெர்னெட்டுக்கும் புடவைக்கும் என்ன சம்பந்தம்? Ethics change with technology!

- To listen to somebody else's diet is one the worlds's dullest subjects.

சில பேர் எப்போதும் தங்கள் டயட்டைப் பற்றிப் பேசுவார்கள்...அது உங்களை எரிச்சல் அடைய வைக்கும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? எரிச்சல் அடைய வைத்தாலும் பரவாயில்லை. உங்களை guilty ஆக feel செய்ய வைத்து விடுவார்கள்.  வீட்டுக்கு வந்தவருக்கு நீங்கள் ஆசையாக பூரி சமைக்கட்டுமா என்றால் பயங்கரமாகப் பதறி 'ஐயோ,, பூரியா..எண்ணெய் அயிட்டம் பக்கம் நான் தலை வைத்துப் படுப்பதே இல்லை' என்பார்கள். அப்பாவியாக அவர்களுக்கு நீங்கள் டீ போட்டுக் கொண்டு போய்க் கொடுத்தால் அய்யோ டீ காபி எல்லாம் நான் தொடுவதே இல்லை என்று விஸ்வாமித்திரர் ரேஞ்சுக்கு பந்தா காட்டுவார்கள். டேய், நீ என்ன சாப்பிட்டா எனக்கு என்னடா என்று கேட்கத் தோன்றும். சரி, மாம்பழமாவது அரிந்து கொடுக்கலாம் என்று கொடுத்தால் மாம்பழம் உடம்புக்கு ஹீடாச்சே என்று உங்களை கதி கலங்க வைப்பார்கள். ஹோட்டலுக்குக் கூட்டிப் போனால் ச்சே ஹோட்டலா இது....இரண்டு தடவை சாப்பிட்டாலே பி.பி எகிறி விடும்.
என்ன எண்ணெய் ! என்று சலித்துக் கொள்வார்கள். மேலும் , நானெல்லாம் டெய்லி லெமன் ஜூசில் தேன் கலந்து குடிப்பேன்; கேரட் ஜூஸ் குடிப்பேன்..கடுக்காய் சாப்பிடுவேன், என்று சுய புராணம் பாடி கடுப்படிப்பார்கள்.

இன்னொருவர் வீட்டில் இருக்கும் போதோ அல்லது இன்னொருவருடன் ஹோட்டலுக்கு செல்லும் போதோ அதிகம் குறை சொல்ல வேண்டாமே ப்ளீஸ்...உங்கள் டயட்டை வீட்டில் கண்டிப்பாக கடை பிடியுங்கள்...ஆனால் ஒரே ஒரு வேளை உங்கள் நண்பரோ உறவினரோ அன்புடன் தரும் அயிட்டங்களை முகத்தில் அறைந்தது போல மறுத்து விடாதீர்கள். ஒரு வேளை சர்க்கரை அதிகமான காபி குடிப்பதால் ஒன்றும் வந்து விடாது. சர்க்கரை அதிகம் என்றாலும் அதை உடனே சொல்லி விடத்தான் வேண்டுமா? 

அன்பு என்பது எத்தகைய விஷத்தையும் முறியடிக்கக் கூடியது என்பதை மறந்து விடாதீர்கள்!


இன்னொரு பொன்மொழி ஞாபகம் வருகிறது 

"Eat healthy; stay fit - die anyway"


samudra's tweets:

(எல்லாமே மொக்கை தான். எனவே பொறுத்தருள்க..)

*வெப்-சைட்டுகளில் forgot password ? ஆப்ஷன்  இல்லாவிட்டால் நம் 
ஞாபக சக்தி எவ்வளவோ  சிறப்பாக இருந்திருக்கும். 

*சில பெர் ஏன் தப்புத்தப்பாக எழுதுகிறார்கள்?

* டீச்சர்: 6:14 am க்கும் 7:51 am க்கும் இடையே எத்தனை நேரம்? 
மாணவன்: 3 நிமிடம்..டீச்சர்: உனக்கு கணக்கு தெரியவில்லை. மா: உங்களுக்கு காலை தூக்கத்தைப் பற்றித் தெரியவில்லை.

* இன்று ரூமை கிளீன் செய்தேன் என்று ஒரு பேச்சிலர் சொன்னால் 
கதவில் இருந்து படுக்கைக்கு நடக்க வழி ஏற்படுத்தினேன் என்று அர்த்தம்.

* சில ஆட்டோ டிரைவர்களுக்கு flight ஓட்டுவதாக எண்ணம்!

* தூங்குபவர்களை எழுப்புவது பாவம் என்றால் T .T .E க்களுக்கு நரகம் நிச்சயம். 

* கலியுகம் என்பது அண்டர்வேரை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் யுகம்.

* காலங்களில் அவள் வசந்தம்; கலைகளிலே அவள் ஓவியம். பானங்களில் அவள் ஜிகிர்தண்டா.பேய்களிலே அவள் காஞ்சனா!

* அதிக பகல் பொழுது கொண்ட ஜூன்-21 வாழ்த்துக்கள்.. இன்னிக்காவது ஏதாவது உருப்படியா செய்யணும்...


ஓஷோ ஜோக்.

திருடன் ஒருவன் பெரிய வசதியான ஒரு வீட்டில் , நள்ளிரவு நேரத்தில் நுழைந்து , யாரும் விழித்திருக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு 
சுதந்திரமாக பொருட்களைத் திருட ஆரம்பித்தான்.

அப்போது கூண்டில் இருந்த கிளி ஒன்று " சாமி உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது..." என்றது.

திருடன் ஒன்றும் பேசாமல் தன் வேலையைத் தொடர்ந்தான்.

கிளி மீண்டும் " சாமி உன்னை கவனித்துக் கொண்டிருக்கிறது" என்றது.

திருடன் ஒன்றும் பேசவில்லை. சில வினாடிகள் கழித்து கிளி மீண்டும் அதையே சொன்னது. 

எரிச்சல் அடைந்த திருடன் " முட்டாள்,,,கிளியே வாயை மூடு...என்ன விதமான கிளி நீ, மதப் பிரசாரம் செய்யும்  கிளியா? உன் பெயர் என்ன?" என்றான்.

"என் பெயர் பூசாரி" என்றது கிளி.

"எந்த மடையன் உனக்கு பூசாரி என்று பெயர் வைத்தான்?"

"ஏன், இந்த வீட்டின் எஜமானர் தான். அவர் தான் தன் வேட்டை நாய்க்கும் சாமி என்று பெயர் வைத்தார்" என்றது.


சமுத்ரா 



Friday, June 14, 2013

கலைடாஸ்கோப்-91

லைடாஸ்கோப்-91 உங்களை வரவேற்கிறது.


&^%^$%$@#%$#%$#@@#%^ 



Your most important sale in life is to sell yourself to yourself.
Maxwell Maltz 

இந்த offer -கள் என்றாலே எனக்கு ஏனோ ஒரு அலர்ஜி. சில பேர் இருக்கிறார்கள். எங்கே, எந்தக் கடையில் எத்தனை பர்சண்ட் offer என்று up -to -date ஆக இருப்பார்கள். எனக்கு offer , discount ,sale ,reduction sale ,clearance sale ,weekend sale ,புதன் கிழமை டிஸ்கவுண்ட் மண்ணாங்கட்டி இவைகளில் சுத்தமாக  நம்பிக்கை கிடையாது. ஷாப்பிங் போக வேண்டும் என்று தோன்றினால் கிளம்பிப் போய் என்ன வேண்டுமோ வாங்கிக் கொண்டு வந்து விடுவேன். பில்லைக் கூட நோண்டி நோண்டிப் பார்க்க மாட்டேன்.அவ்வளவு தான். அதே போல இந்தப் பேரம் பேசும் சமாச்சாரமும் பிடிப்பதில்லை. மாலில் சொன்ன விலை கொடுத்து வாங்கி வருபவர்கள் மாம்பழம் விற்கும் பாட்டியிடம் பேரம் பேசுவது அபத்தமாக இருக்கிறது.

I was long brought up to think that it was nothing short of a crime to miss a sale.- James Cash Penney 

இந்தக் கலியுகத்தில் இப்படி அப்பாவியாக இருக்கிறாயே என்று கேட்கிறீர்களா?

சரி.

கலி யுகத்தில் தர்மம் தன் ஒரே காலில் நின்று கொண்டிருக்கிறது என்பார்கள். இன்று நம் அரசியல்வாதிகள் ஏதோ தத்தித் தத்தி நடந்து கொண்டிருக்கும் தர்மத்தின் அந்த ஒரு காலையும் எப்படியாவது உடைத்து விட்டு தர்மத்தை total முடமாக ஆக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். 

வெயிட்,, முடமான சாதுப் பசு தர்மம் மீண்டும் நாலு கால் பாய்ச்சல் சிறுத்தையாக மாறி ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்டுடா என்ற டயலாக்குடன் 
களமிறங்கும் என்றெல்லாம் சொல்லாதீர்கள். பாரதியார் காலத்தில் இருந்தே இது சலித்துப் போய் விட்டது.

தருமத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் 
தருமம் மறுபடி வெல்லும்-


மறுபடி எப்போ வெல்லும் சார்? இளமைக் காலங்களில் கஷ்டப்பட்டு விட்டு பல் விழுந்த 
பழுத்த கிழம் ஆனதற்கு பிறகு தருமம் வென்று என்ன ஆகப் போகிறது? பதினான்கு ஆண்டுகள் ராமன் தன் இளமையை செலவழித்து கஷ்டப்பட்டு விட்டு அப்புறம் தர்மம் வென்று என்ன ஆகப் போகிறது? பாண்டவர்கள் பதிமூன்று வருடம் கஷ்டப்பட்டு நாய் படாத பாடு பட்ட  பின்னர் தர்மம் வென்று என்ன ஆகப் போகிறது? 'பார், தர்மம் வென்றது' என்று சொல்லிக் காட்டக் கூட எதிரிகள் கூட  யாரும் மிஞ்சி இருக்கவில்லை.

இந்த விஷயம் the so called நல்லவர்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது. கெட்டவர்கள், அநியாயம் செய்பவர்கள், தர்மத்தின் காலை உடைத்து முடமாக்குபவர்கள் , எப்படி சந்தோஷமாக இருக்கிறார்கள்? ஏதோ ஒரு நாள் அவர்களுக்கு தண்டனை கிடைக்கலாம். ஆனால் இன்று சுகமாகத் தானே இருக்கிறார்கள்? சத்தியம், தர்மம், நீதி,நியாயம் எல்லாம் பொய் தானா?

சுஜாதாவின் தலைப்பு ஒன்று நினைவில் வருகிறது

'வாய்மையே வெல்லும் - சில சமயங்களில்'


சில சமயங்களில் வாழ்க்கை நமக்கு எதிர்பாராத சில ஆச்சரியங்களைத் தருகிறது....இப்ப தான் லாட்டரியைத் தடை பண்ணிட்டாங்களே என்று கேட்காதீர்கள்...பணம் மட்டுமே எல்லாம் அல்ல. முன் பின் தெரியாத ஒருவர் உங்களைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைக்கிறார். அதுவும் கூட வாழ்வின் சின்ன சந்தோஷம் தான். என்றைக்கும் பயங்கர கூட்டத்துடன் வரும் பஸ் இன்று நிறைய காலி சீட்டுகளுடன் வருகிறது. ...அது கூட எதிர்பாராத சின்ன சந்தோஷம் தான். கேண்டீனில் இன்று உங்களுக்கு மிகவும் பிடித்த இட்லி உப்புமா ..அதுவும் கூட...

“For every minute you are angry you lose sixty seconds of happiness.” 
― Ralph Waldo Emerson

“One of the keys to happiness is a bad memory.” 
― Rita Mae Brown

ஜென் குரு ஒருவர், தன் இரண்டு சீடர்களை அழைத்து ஒரு அறையைக் காட்டி 'இதைப் பற்றி சொல்லுங்கள்' என்றார்.

ஒரு சீடன் ' குருவே, இந்த அறை ஒன்றுமில்லாமல் காலியாக இருக்கிறது' என்றான்.

இன்னொருவன் ' குருவே, இந்த அறை வெறுமையால் நிரம்பி இருக்கிறது' என்றான்.

ஆம்..

Do not enter without permission என்பதும்

Please enter with permission

என்பதும் ஒன்று தான். ஆனால் சொல்லும் விதத்தில் எத்தனை வித்தியாசம்!


எல்லாமே நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது.

உண்மை , சத்தியம் அல்லது truth என்றால் என்ன என்று இரண்டு விதத்தில் இங்கே சிந்திக்க முடியும். (கேள்வி கேட்டவர்  : https://twitter.com/ammuthalib)

ஒன்று புத்தர் சொல்வது போல 'உண்மை என்பது பொய் இல்லாமை' அவ்வளவு தான். உன்னிடம் உள்ள பொய் என்னும் ஆடைகள் கழன்று விழுந்து விட்டால் வரக் கூடிய நிர்வாணம் தான் 'உண்மை' என்கிறார் அவர். உண்மை என்று தனியாக எதுவும் கிடையாது. பொய் மறைந்து விட்டால் அந்த நிலை தான் உண்மை...வெங்காயம் ஒன்றை உரிப்பது போன்றது இது..இது நானா? உடல் நானா? எண்ணங்கள் நானா? உணர்ச்சிகள் நானா? இல்லை இல்லை என்று மறுத்துக் கொண்டே போகப் போக கடைசியில் இருக்கும் ஒன்றுமின்மை 'அனத்தா ' - அதுவே சத்தியம்..இந்த அணுகுமுறையில் உண்மை என்பதற்கு ஒரு இருத்தல் இல்லை. ஒரு வித நெகடிவ் அப்ரோச்...பொய் தான் இருக்கிறது என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.

இதற்கு இன்னொரு அணுகுமுறை உண்டு. அதாவது, பொய் என்பது பொய் உண்மை தான் உண்மை (?) என்று சொல்வது. உண்மை மட்டுமே உள்ளது. பொய் அல்லது அசத்தியம் , மாயை என்று ஒன்றுமே இல்லை. இருட்டு என்று ஒன்றுமே இல்லை.ஒளி மட்டுமே இருக்கிறது..விளக்கை கொண்டு வந்தால் இருட்டு தானாக விலகி விடும். எனவே உன்னிடம் இருக்கும் பொய்களை கைவிட முயற்சி செய்யாதே...(இல்லாததை எப்படி துறக்க முடியும்?) முதலில் உண்மையை நாடு. உண்மையின் தரிசனம் கிடைத்ததும் பொய் தானாகவே விலகி விடும் என்று சொல்வது.ஜெ .கிருஷ்ண மூர்த்தி யின் அணுகுமுறை...

இரண்டு பேரும் அடையும் இடம் ஒன்று தான். ஆனால் நாம் செல்லும் பாதை ஏன்  வறண்டதாக , சோகமானதாக, சலிப்புடையதாக  பரதேசி திரைப்படம் போல பாலைவனப் பயணமாக இருக்க வேண்டும்? ஏன் அது சோலைகளின் வழியே , நந்தவனங்களின் வழியே, மலர்களின் இடையே பறவைகளின் கானத்துடன் இருக்கக் கூடாது? மாயையை கை விடு என்று சொல்வது negative approach உண்மையை அடைந்து விடு என்று சொல்வது positive ...

ஓஷோ இரண்டு விதமான தியான முறைகளை சொல்கிறார்.

ஒன்று, நான் ஒன்றுமே இல்லை...ஜீரோ...பூச்சியம் என்று பாவித்துக் கொள்வது. இன்னொன்று நான் தான் எல்லாம் , நான் தான் பிரபஞ்சம்..நான் எங்கும் வியாபித்தவன் என்று பாவித்துக் கொள்வது.  முதலாவது அகங்காரம் அற்றதாகவும் இரண்டாவது அகங்காரம் கொண்ட வாக்கியமாகவும் தோன்றலாம். ஆனால் அகங்காரம் எப்போதும் பின்வாசல் வழியே வருகிறது என்று சொல்கிறார் ஓஷோ. நான் ஒன்றுமே இல்லை...நான் பூச்சியம்..நான் கால் தூசி பெறாதவன் என்னும் போது அகங்காரம் மறைமுகமாக வெளிப்படுகிறது. நான் தான் எல்லாம் என்று சொல்லும் போது அங்கே அகங்காரம் இருப்பதில்லை.நான் தான் எல்லாம் நீ கூட இல்லை. நீயே இல்லாத போது அகங்காரத்தின் தேவை என்ன??

மற்றொரு நண்பர் கேட்டார்..கீதையில் கண்ணன் எப்படி 'நான் விலங்குகளில் சிங்கம், மாதங்களில் மார்கழி, பறவைகளில் கருடன், அசுரர்களில் பிரகலாதன் ' என்று சொல்லலாம்? I 'm the best என்னும் கர்வமா?அப்படியானால் சிங்கம் மட்டும் தான் கண்ணனா? பூனை, பன்றி நாய் இவைகளை பகவான் கீழ் என்று சொல்கிறாரா???பாரபட்சம் பார்க்கிறாரா? கீதை மறைமுகமாக துவைத சித்தாந்தத்தை சொல்கிறதா?

-எனக்கு இதற்கு சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை...may be , பகவான் தன்னை பரிணாமத்தின் சீரிய வடிவம் என்று சொல்கிறார் போலும் என்று சொன்னேன். பறவை என்று சொன்னால் கருடன் பறவைக்கு  உரித்தான பரிணாமத்தின் உச்சத்தை அடைந்து விட்டது என்று சொல்லலாம். அகன்ற இறக்கைகள், கூர்மையான பார்வை...கழுகுக்கு மேல் இன்னொரு பறவையைப் படைத்தால் அதன் பெரும்பாலான feature -கள் redundant-ஆகவே இருக்கும் என்றேன்...இதை நண்பர் ஒப்புக் கொள்ளவில்லை. அதெப்படி...காக்கா பரிமாண வளர்ச்சி பெறவில்லையா? காக்கா கழுகாக மாற வேண்டுமா ஒருநாள்? அப்படியானால் பகவான் கழுகுகளையே படைக்கலாமே?...

ஆனால் கிருஷ்ணன், 'பறவைகளில் நான் காகம்' என்று சொல்லி இருந்தால் அது கொஞ்சம் உறுத்தும். என்னடா நட்டு கழன்ற கேஸா என்று நினைப்போம். பறவைகளில் நான் எல்லாம்...காகம், கிளி, குருவி, கருடன் எல்லாம் நான் தான் என்று சொல்லி இருந்தால் அதுவும் அசுவாரசியம். எல்லாமே நான் தான் என்று சொல்லி விட்டுப் போகலாமே...பேதம் சில சமயங்களில் சுவாரஸ்யமாக இருக்கிறது.. உயிரின் ஆதாரமே பேதம் தான். ஏதோ ஒரு விதத்தில் பேதம் இருக்கும் வரை வாழ்க்கையும் சுவாரஸ்யமாக இருக்கும் .



அப்பன்னாசாரியார் இயற்றிய ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்திரம்:

[மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர் மரிக்கும் போது இன்னொருவரைப் பிரித்து விடும் என்பார்கள். எனக்கு பாட்டியின் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது.ராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் நேரத்தில் அப்பனாசாரியார் அவர் அருகில் இல்லை..ஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படத்தில் டெல்லி கணேஷ் நதியைக் கடந்து ஓடி வருவதை பார்த்திருப்பீர்கள்]

"ஜீவேஷ பேத குண பூர்த்தி ஜகத் ஸு சத்வ
நீசோச்ச பாவ முக நக்ர கனைஹி சமேத
துர்வாதி அஜாபதி கிலைஹி குரு ராகவேந்த்ர "

- இதற்கு இரண்டு பொருள் சொல்கிறார்கள். ஒன்று literal :

ஜீவ ஈஷ  - உயிர்களில் பெரியது -i .e ..யானை
பேத - யானையை கிழித்துப் போடும் வல்லமை பெற்ற முதலை
நீசோச்ச பாவ முக - முதலையின் மேல், கீழ் தாடை
அஜாபதி - பெரிய ஆடு

அதாவது, தன்னை எதிர்த்து வாதிடுபவர்களுக்கு (ஆடுகளுக்கு)(அத்வைதிகளுக்கு)  முதலை போன்றவர் ராகவேந்திரர்.

மற்றொன்று subtle ..

ஜீவனும் ஈசனும் வேறு...இறைவன் குண பூர்த்தி ஆனவன். உலகம் உண்மை என்ற துவைதக் கருத்துகளை நிலை நாட்டியவர்.


well..அத்வைதம் இறைவனை நிர்குண பிரம்மம்  என்கிறது. துவைதம் , பரம குண பூரணன் என்கிறது. குணமற்றவன், குணங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று இறைவனை நினைப்பது ஒரு அணுகுமுறை. இது கொஞ்சம் boring 
என்னடா ஒரு குணமும் இல்லையா? யார் அவன்?சுரணை அற்றவனா?
எத்தகையவன் அவன் என்று நினைக்கத் தோன்றும்.

...எல்லா குணங்களும் நிரம்பியன் என்று நினைப்பது இன்னொன்று. இரண்டாவது கொஞ்சம் கொண்டாட்டமானது. எல்லா குணங்களும் இறைவனுக்கும் உண்டு .கோபம், அன்பு, காமம், கருணை, வாத்சல்யம், வெறுப்பு,விரக்தி  என்று.நிர்குணப் பிரம்மத்தால் அல்ல குண பூர்ண பிரம்மத்தால் மட்டுமே பிரபஞ்சத்தை சிருஷ்டிக்க முடியும் என்று துவைதம் நம்புகிறது.

கடவுளுக்கு குணமே இல்லை என்றால் குணங்களை உடைய மனிதர்களை எப்படிப் படைக்க முடியும்? ஒன்றைப் படைப்பதற்கு முன்னால் அதை அனுபவத்தில் உணர்ந்திருக்க வேண்டாமா? காதல் கதை எழுதும் முன்னர் உங்களுக்கு காதலின் அனுபவம் இருந்திருக்க வேண்டாமா? என்கிறது அது. அப்படியானால் இந்தக் குணங்கள் எல்லாமும் பரமாத்மாவுக்கும் உண்டு என்றால் அதற்கும்   ஜீவனுக்கும் என்ன வித்தியாசம்? என்று கேட்பது புரிகிறது.ஜீவனுக்கு உள்ள குணங்கள் அனைத்தும் பரமாத்மாவுக்கும் உண்டு. ஆனாலும் இரண்டும் சமம் அல்ல....ஜீவனைக் காட்டிலும் மேலானது பரமாத்மா. உதாரணமாக, ஜாவா இஞ்சினியர் வரவில்லை என்று ஒரு நாள் ரிசர்ச் அனலிஸ்ட் ப்ரோக்ராம் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் எழுதுவது தானே இவரும் எழுதுகிறார்? அதே கோடிங் ஸ்டைலை தானே பின் பற்றுகிறார்? in fact கொஞ்சம் ஸ்லோவாக டைப் செய்கிறார்? என்று கேட்கலாம். எஸ் ...இப்போது இருவருமே ஒன்று போலத் தோன்றலாம். ஆனால் அனலிஸ்ட் என்பவர் டிரெய்னியை விட பல மடங்கு உயர்ந்தவர்...

சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர் ஆனாலும் அவர் அனலிஸ்ட் -ஐ விடத் 
தாழ்ந்தவர்.

லக்ஷ்மியே ஆனாலும் அவள் ஸ்ரீமன் நாராயணை விடத் தாழ்ந்தவள்.



ராமன் ரொம்ப anthropic ஆகத் தெரிகிறானே?நமக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம். பெண்டாட்டி காணாமல் போனதற்கு

மீண்டு மீண்டு வெதுப்ப, வெதும்பினான்,
'வேண்டுமோ எனக்கு இன்னமும் வில்?' 

என்றெல்லாம் புலம்புகிறான்.

அப்புறம் நமக்கும் ராமனுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம்.
நாமெல்லாம் டிரெய்னி..ராமன் பிசினஸ் அனலிஸ்ட்....

அத்வைதம் த்வைதம் இவற்றை கீழே உள்ள படத்தில் விளக்க முயல்கிறேன்.




 

எல்லாமே பிசினஸ் தான் போலிருக்கிறது உலகத்தில்:


எல்லாப் பிரச்சனைக்கும் இப்படி எளிய தீர்வு இருந்தால் எப்படி இருக்கும்?!





ச.முத்துவேலின் ஒரு கவிதை இப்போது:

வீட்டுக்குள் புகுந்த பாம்பு
ஒளிந்துகொண்டது எங்கோ
கண்டுபிடித்துவிட்டால்
ஒளிந்திருக்கும் பாம்புக்கு
ஒன்றே இருப்பிடம்
காணாத பாம்புக்கு
வீடெங்கும் இடங்கள்
நூறு நூறு உடல்கள்
நூறு நூறு தலைகள்
நூறு நூறு அசைவுகள்.



ஜோக்.


டீச்சர் ஒருத்தியின் பிறந்த நாளைக்கு ஸ்கூலில் குழந்தைகள் எல்லாரும் பரிசு கொடுத்தார்கள்.

மலர் வியாபாரியின் குழந்தை ஒன்று ஒரு பரிசுப் பெட்டியைக் கொண்டு வந்து 'மிஸ்...இதுக்குள்ள என்ன இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்' என்றது.

அவள்....'flowers ' என்றாள் ...உள்ளே மலர்கள் இருந்ததன..

சாக்லேட் வியாபாரியின் குழந்தை ஒன்று ஒரு பரிசுப் பெட்டியைக் கொண்டு வந்து 'மிஸ்...இதுக்குள்ள என்ன இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்' என்றது.

அவள் சாக்கலேட் என்றாள் ...உள்ளே சாக்கலேட்கள் இருந்ததன..

மதுபான வியாபாரியின் குழந்தை ஒன்று ஒரு பரிசுப் பெட்டியைக் கொண்டு வந்து 'மிஸ்...இதுக்குள்ள என்ன இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்' என்றது.

அவள், பெட்டியை உயரத் தூக்கிப் பிடித்து அதில் இருந்து ஒழுகிய திரவத்தை வாயில் பிடித்தாள் ...நன்றாக சுவைத்துப் பார்த்து விட்டு, "பீர்" என்றாள் ..

"இல்லை" என்றது குழந்தை.

அவள் மீண்டும் உயரத் தூக்கிப் பிடித்து அதில் இருந்து ஒழுகிய திரவத்தை சுவைத்தாள் ...நன்றாக சுவைத்துப் பார்த்து விட்டு, "ஒயின்"" என்றாள் ..


இல்லை என்ற குழந்தை, 'மிஸ் , அது ஒரு நாய்க்குட்டி" என்றது.

நன்றி: everythingfunny.org 



சமுத்ரா