இந்த வலையில் தேடவும்

Monday, May 27, 2013

கலைடாஸ்கோப்-90

லைடாஸ்கோப்-90 உங்களை வரவேற்கிறது.


ஆசை முகம் மறந்து போச்சே -இதை 
யாரிடம் சொல்வேனடி தோழி !


Even if you fall on your face, you're still moving forward.
Victor Kiam

நகுமோமு கனலேனி நா ஜாலி தெலிசி - தியாகராஜர்.



நம்மை சுற்றிலும் உலகம் முகங்களால் நிரம்பி உள்ளது. விதம் விதமான, ரகம் ரகமான , வகை வகையான முகங்கள்!கருப்பான, சிவப்பான, உருண்ட, நீளமான, வட்டமான , அழகான, மீசை வைத்த, மீசை இல்லாத, தாடி வைத்த, தாடி இல்லாத, கண்ணாடி போட்ட, கண்ணாடி  போடாத  ...இப்படி ..

முகங்களுக்கு தான் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம்! ஏதோ ஒரு போர் . போர் முடிந்ததும்  தலை அற்ற உடல்கள் நிறைய கிடந்தனவாம். உடலை வைத்து ஒருத்தரைக் கூட அடையாளம் சொல்ல முடியவில்லையாம்  ...அதாவது அவர்கள் சொந்த மனைவி, அம்மா இவர்களால் கூட..!முகம் போல, உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானவை என்றாலும் முகம் இல்லாமல் போனால் நம்மில் எத்தனை பேரால் மனிதர்களை அடையாளம் காண இயலும்?

யாரும் இல்லாத போது ஓய்வறையில் உள்ள கண்ணாடியில் முகம் பார்க்காதவனே உண்மையான ஞானி என்று சொல்வார்கள் ! - அதே முகம் தான் என்று தெரியும்...அரை மணி நேரம் முன்பு தான் கண்ணாடியில் பார்த்திருப்போம்! அதே மூக்கு...அதே உதடு...அதே மீசை..ஆனாலும் அப்படி பார்த்து தலை முடியை கொஞ்சம் அப்படி நீவி விட்டுக் கொள்ள  வேண்டியது!  mirrors are addictive !

முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து செய்யக் கூடிய தியானங்கள் கூட இருக்கின்றன.கொஞ்ச நேரம் நாம் கண்ணாடியைப் பார்க்கிறோம் என்பதை மறந்து விட்டு கண்ணாடியில் உள்ள உருவம் நம்மைப் பார்ப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்போது, பார்ப்பது, பார்க்கப்படுவது, பார்வை இவற்றால் ஒரு மூடிய வளையம் (closed loop ) ஏற்பட்டு தியானத்தின் அனுபவம் கிட்டுமாம். சரி, கண்ணாடி முன்னால் நின்று கொண்டு தியானம் செய்ய யாருக்கு நேரம்??..லிப்ஸ்டிக்கை சரி செய்வதிலும் மீசையை ட்ரிம் செய்வதிலுமே நேரம் போய் விடுகிறது!

முகங்களை ஞாபகம் வைத்துக் கொள்வது ஒரு பெரிய கலை என்று தோன்றுகிறது. எனக்கு ஏனோ அந்தக் கலை அவ்வளவாகக் கை வரவில்லை. பேசி முடித்து விட்டு அப்பால் நகர்ந்ததும் முகம் மறந்து போய் விடும். (இதுவும் ஒருவேளை நல்லது தானோ!) ஹோட்டலில் நம்மை கவனிக்கும் சர்வர் யார் என்பதோ பஸ்ஸில் நாம் இறங்கும் ஸ்டாப்பை கேட்ட ஆள் யார் என்பதோ என்னால் முகத்தை வைத்து ஞாபகம் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அவர் அணிந்திருந்த சட்டையையோ இல்லை வேறு ஏதோ ஒரு அடையாளத்தையோ கவனிக்க வேண்டி இருக்கிறது!

வாய்ப்பாட்டுப் பாடும் பெண்ணே மௌனங்கள் கூடாது
வாய் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது.

சொல்லுக்கும் அர்த்தத்துக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது.

[ஒரு நிமிடம்: மௌனம் சரி...அது என்ன மௌனங்கள்???  தமிழ் சினிமா பாடல்களில் இது போல நிறைய சொல்லாடல்கள் இருக்கின்றன. 'பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு' 'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே' 'ஓர் நாள் உன்னைக் காணாவிடில்' தனக்குளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்  ...இப்படி..மௌனங்கள் தேடல்கள் இவையெல்லாம் சரி தானா...?!என்னையா ? பாட்டை ரசிச்சுட்டு போவியா..என்கிறீர்களா .அதுவும் சரி தான். ]


மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

“Don't raise your voice, improve your argument."

― Desmond Tutu
    
இதன் விளைவாகவோ என்னவோ குரல்களை அடையாளம் காண்பது எனக்கு எளிதாக இருக்கிறது. குரலை வைத்து அன்னிக்கு ட்ரைன்ல மீட் பண்ணமே அவங்க தானே! என்ற லெவலுக்கு..ஒருவரின் முகம் மறந்து விட்டாலும் குரல் அவ்வளவு சீக்கிரம் மறந்து போவதில்லை. முகமும் குரலும் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா? நல்ல உயரமான, ஸ்மார்ட்டான, ஜிம் பாடி உள்ள சினிமா ஹீரோக்கள் பலர் டீன் ஏஜ் பையனின் குரலில் பேசுகிறார்கள். அதே சமயம் ஒருவரது manly -ஆன குரலை வைத்து நாம் அவரை என்னவோ ஏதோ என்று ஆஜானுபாகுவாக கற்பனை செய்து வைத்திருந்தால் அவர் ஒல்லியாக ஸ்கூல் பையன் போல தோற்றமளிப்பார்.

ஒருவருடைய personality -இல் அவரது குரல் பெரும் பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம். வடிவேலு காமெடி ஒன்றில் வில்லன் ஒருவன் தன் அடியாட்களை கூட்டிக் கொண்டு வந்து மிரட்டுவான். ஆனால் வாய் திறந்து பேசும் போது கீச்சுக் குரலில் பேசுவான் :-)ஒருவரின் குரல் அவரது கேரக்டருடன் ஒன்றவில்லை என்றால் நமக்கு எதையோ மிஸ் செய்தது போல இருக்கிறது.அதே போல ஊமையாக வரும் ஒரு கேரக்டருடன் நம்மால் சுலபமாக இணைந்து விட முடிவதில்லை.



நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

voice modulation என்பது மனிதனுக்கு வாய்த்திருக்கும் மிகப்பெரியதொரு வரப் பிரசாதம் ... எல்லாரிடமும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி, நியூஸ் வாசிப்பவர் மாதிரி பேசினால் எப்படி இருக்கும்?வேலையாட்களிடம் பேசும் போதும், முதலாளியிடம் பேசும் போதும் , காதலியுடன் பேசும் போதும், நண்பருடன் பேசும் போதும், குழந்தைகளுடன் பேசும் போதும் நம் குரல் எப்படி ஆட்டோமாடிக் --ஆக தன்னை மாற்றிக் கொள்கிறது?அதிசயம் தான்.ஒருவர் எவ்வளவு romantic -என்பதை அவரது குரலே காட்டிக் கொடுத்து விடுகிறது ..காதலில் குரல் தான் மெயின் கேரக்டர்...என்னதான் காதலாகி கசிந்துருகினாலும் காதலியுடனோ காதலனுடனோ பேசும் போது உங்கள் குரலும் ரொமாண்டிக் ஆக இருக்க வேண்டும். தர்பாரி கானடா  ஒரு மாதிரி  காதில் நுழைந்து மயிலிறகால் மனதை வருடுமே அது போல!  சண்டைக்கு  வருவது போலவோ மார்க்கெட்டில் கத்திரிக்காய் பேரம் பேசுவது போலவோ பேசக் கூடாது. சில பேர் வாயைத் திறந்தாலே ஏதோ டிரெயினை பிடிக்கப் போகும் அவசரத்துடனேயே பேசுவார்கள். சில பேர் போல்லீஸ் ஸ்டேஷனில் கைதியுடன் பேசும் போலீஸ் போல பேசுவார்கள்.. இப்படி இருந்தால் நீங்கெல்லாம் எப்படி பாஸ் லவ் பண்ணுவீங்க? நெளிவு, சுழிவு , ஏற்றம், இறக்கம், கொஞ்சல், கெஞ்சல் , முனகல், சில சமயம் வெறும் காத்துதான் வருது என்ற அளவுக்கு நீங்கள் உங்கள் குரலை காதலிப்பதற்கு முன் பழக்கிக் கொள்ள வேண்டும். ஆண் என்றால் ரகுவரன் மாதிரி ஒரே கட்டையில் பேச வேண்டும் என்ற ரூலெல்லாம் இல்லை. நான் ஆம்பிளை..நான் எப்படி அப்படியெல்லாம் பேசறது என்றால் நீங்கள் காதலிக்கவே லாயக்கு இல்லை....times are changing ..

தொடர்புடைய ஒரு விஷயம்...பதிவர் ஒருவர்  கேட்டது...உருவங்களையும் சத்தங்களையும் நம்மால் அசை போட முடிகிறது...ஆனால் வாசனையையும் சுவையையும்  முடிவதில்லை...ஏன்? அதாவது, இறந்து போன பாட்டி கனவில் வருகிறாள். அவளைப் பார்க்க முடிகிறது...ஏன்டா 'பூர்வி கல்யாணி ' தானே பாடறே..இன்னும் ப த ப ஸா பிரயோகமே வரலையே' என்கிறாள். அதைக் கேட்க முடிகிறது...ஆனால் பாட்டி செய்யும் மைசூர் பாகின்  சுவையையோ அவள் சேலையில் இருந்து வரும் வாசனையையோ உணர முடிவதில்லை... இது ஏன்? மேலும், ஒளியையும் ஒலியையும் நம்மால் எத்தனை தூரத்துக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடிகிறது. ஆனால் வாசனையையும் சுவையையும் கடத்த முடிவதில்லை.

well ..

'ஒளி ' என்பது மிக நிச்சயமான ஒரு விஷயம். it exists ! அது ஒருவகை ஆற்றல்..பிரபஞ்சம் இருக்கும் வரை எங்கோ ஒரு மூலையில் ஒளியும் இருந்தே தீரும்.[ எல்லா இயற்பியல்  வினைகளிலும்  ஒளி ஒரு  அழையாத  விருந்தாளி போல வந்து விடுகிறது. It's very difficult not to produce the light என்கிறார் ஒரு இயற்பியலாளர்.] ஒரு நிறுவனத்தில் ஒருவருக்கு பதவி உயர்வு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவரும் ஜாலியாக அதை ஏற்றுக் கொள்கிறார். போகப் போக அந்தப் பதவியின் சுமைகளும் பொறுப்புகளும் அவரால் தாங்க முடியாத அளவுக்குச் சென்று' போதும்டா சாமி..இந்த உயர்ந்த இடம் எனக்கு வேண்டாம்...பழைய போஸ்டிலேயே போட்டுடுங்க ' என்று கேட்டுக் கொண்டு மீண்டும் பழைய சீட்டுக்கு வந்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். இது மாதிரி, அணுவுக்குள் ஜாலிக்காக உயர் ஆற்றல் மட்டங்களுக்கு செல்லும் எலக்ட்ரான்கள் பின்னர் நொந்து போய் மீண்டும் தங்கள் சொந்த        வீ(கூ)டுகளுக்குத் திரும்பும் போது வெளி வரும் நிம்மதிப் பெருமூச்சு தான் ஒளி  (அல்லது பொதுவாக Electro magnetic radiation ....)எனவே ஒளி உண்மை..

Don't look at me in that tone of voice
 David Farber quotes

அடுத்து இந்த ஒலி (sound ) ஒளியைப் போல அவ்வளவு உண்மை அல்ல.காற்றோ தண்ணீரோ அல்லது ஒரு திடப் பொருளிலோ ஏற்படும் அழுத்தம் அதை அதிர வைக்கிறது..இந்த அதிர்வுகள் மெல்ல மெல்ல அதே ஊடகத்தில் நகர்ந்து நகர்ந்து ஒலியாக உணரப்படுகின்றன. பூமியின் வளிமண்டலத்தை தாண்டியதும் நாம் இவ்வளவு நேரம் சிலாகித்த நம் குரல் வீணாகப் போய் விடும்.எல்லாருமே ஊமைகள் தான். சைகை பாஷை தான். கிளி மொழியாள் , தேன் மொழியாள் , மஞ்சு பாஷினி , மிருது பாஷிணி இந்த செல்லம் கொஞ்சுதல் எல்லாம் மேலே ஒரு நூறு கிலோ மீட்டருக்கு அப்புறம் செல்லுபடி ஆகாது. பயப்பட வைக்கும் நீண்ட நெடிய மௌனம்!

வெட்ட வெளியே விரியும் மௌனமே! மனதுக்கு
எட்டவொண்ணாத இறையே !-

என்று சித்தர் பாட்டு போல 'விரியும் மௌனம்!'

[கொசுறு: ஏழெட்டு குட்டிக் குழந்தைகள் ஒரு வீட்டில் இருந்தால் வீடு எப்படி களேபரமாக இருக்கும்? அதே போல எலக்ட்ரான் குட்டிகளை வைத்துக் கொண்டுள்ள அணுவின் வீடு எப்படி இருக்க வேண்டும்? எலக்ட்ரான்-களுக்கு இடையே சண்டைகள், சச்சரவுகள், போட்டிகள், தாவல்கள், திரும்பல்கள், போதாக் குறைக்கு பக்கத்து வீட்டு பெற்றோர்களுடன்                                                    பங்கிடுதல்கள் ,..இத்தனை இருந்தும் நமக்கு இந்த களேபரங்கள் ஏன் கேட்பதில்லை? ]

சத்தம் என்பது வெளிச்சம் போல அவ்வளவு absolute இல்லை என்பதால் அதை நெடும் தூரத்துக்கு கடத்த அதை மீண்டும் மின்காந்த அலை என்ற குதிரை மீது ஏற்றி அனுப்ப வேண்டும். ஏற்றி அனுப்புவது என்பது கூட சரியில்லை. modulation ! ஆளுக்குத் தகுந்தபடி குதிரையையே  மாற்றுவது!

மறு முனையில் குதிரை எப்படியெல்லாம் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை வைத்துக் கொண்டு
இந்த ஆளைத்தான் அனுப்பி இருப்பார்கள் என்று அவரை re -construct செய்வது!
 மாறும் ஒலிக்கேற்ப மின்காந்த அலையின் சில பண்புகளை அதிர்வெண்ணை அல்லது உயரத்தை திருத்தி அதைக் கடத்துவது!

அடுத்து, இந்த வாசனை சுவை போன்றவை வெறுமனே biological experiences ...
ஒளி ,ஒலி  போன்றவை பொதுவாக எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். எஸ் பி பி பாடுகிறார் என்றால் அவர் இரண்டு பேருக்கு ஒரே மாதிரி தெரிவார்; பாடுவது இரண்டு பேருக்கு ஒரே மாதிரியே கேட்கும்.அனால், வாசனை என்பது தனிப்பட்ட அனுபவம்..ஜலதோஷம் வந்தால் வாசனையே தெரியாது.smell , taste , they don't have an existence on their own !

அல்வா இனிப்பாக இருக்கிறது; மல்லிகைப்பூ மணக்கிறது, சாக்கடை துர்நாற்றம் வீசுகிறது என்று சொன்னால், வாசனை என்பது பூவின் ஒரு inherent குணம் அல்ல.அதன்  உள்ளார்ந்த பண்பு அல்ல...பூவில் உள்ள சில கெமிகல்கள் மூக்கில் உள்ள வாசனை நரம்புகளுடன் வினை புரிவதால் வரும் ஒரு அனுபவம். ஆகவே வாசனையை அறிய பூவும் வேண்டும் மூக்கும் வேண்டும். IOW இனிப்பு சர்கரையிலா இல்லை நாக்கிலா என்று சொல்வது கஷ்டம்.


பேரின்பம் மெய்யிலா ? நீ தீண்டும் கையிலா?

மூக்கு இல்லாத போது வாசனை இல்லை...அப்படி என்றால் கண்கள் இல்லாத போது பூவும் இல்லையா




well , நாம் பார்க்காத போது , நம் அனுபவத்தில் வராத போது , நாம் உணராத போது  ஒரு பொருள் இருக்கிறதா (objective reality ) அல்லது நாம் இருப்பதால் தான் எல்லாமே இருக்கிறதா என்ற வாதம் இது வரை முடிவில்லாமல் தொடர்கிறது. பூனை கண்ணை மூடினால் பிரபஞ்சம் இருண்டு விடுமா?

நாம் வாயில் வைத்தவுடன் உருவாகும் சுவை போல நாம் பார்க்கும் போது பொருள்கள் உருவாகின்றனவா? ஒரு வீடியோ கேம் போல!நாம் navigate செய்து கொண்டு செல்லச் செல்ல மரமும், வானமும், மனிதர்களும் dynamic ஆக உருவாகிறார்களா?

சரி..நீங்கள் போகும் போது தான் சேலம் பஸ் ஸ்டாண்டும், அதன் கடைகளும், மனிதர்களும், பஸ்களும் உருவாக்கப்படுகிறார்கள் என்ற கொள்கை அபத்தமாகத் தோன்றினாலும், இந்தத்  தியரியின்  நீர்த்த  வடிவம்  ஒன்று  உண்டு .. நீங்கள் சென்றால் சேலம் பஸ் ஸ்டாண்ட் நீங்கள் செல்லாமல் இருந்தால் எப்படி இருக்குமோ அதை விட கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் மாறுகிறது. கேயாஸ் தியரி!!!உங்களுடைய involvement விஷயங்களை கொஞ்சம் மாற்றி விடுகிறது.ஏதோ ஒரு விஷயம் மாறி இருக்கலாம்.

பிரபஞ்சத்தின் விஸ்தீரணத்துடன் ஒப்பிடும் போது பூமி ஒன்றுமே இல்லை தான். ஆனால் பூமியின் இருப்பு பிரபஞ்சத்தை ஏதோ ஒரு விதத்தில் பாதித்து விடுகிறது.

observer -independent experiment சாத்தியம் இல்லை என்று குவாண்டம் இயற்பியல் கை விரித்து விடுகிறது. கவனிப்பவர் தன்னை அறியாமல் கவனிக்கப்படுவதை மாற்றி விடுகிறார் என்கிறது. வேறொரு விதத்தில் சொன்னால், எதனாலும் கவனிக்கப்படாத , எதனுடனும் (போட்டான்-களுடன் கூட!) வினை புரியாத, எதனுடனும் சாராத  ஒன்றை நாம் அனுபவத்தில் கொண்டு வருவது கஷ்டம். பூவைப் பார்க்கிறோம் என்றால் பூவுடன் அதைப் பார்ப்பவர் சம்பந்தப் படுகிறார் என்று அர்த்தம். பார்ப்பவனால், உணர்பவனால், அனுபவிப்பவனால் மாற்றப்படாத , விகாரம் அடையாத ஒன்று உள்ளதா? நிர்விகாரம் ஆன பரப்ரம்ஹமா அது?

வேளுக்குடி கிருஷ்ணன் சொல்வது:

ப்ரஹ்மம் உபாதான காரணமாக இருக்க வேண்டுமானால், அது மாறித்தானே ஆக வேண்டும். ப்ரஹ்மம் மாறி ஜகத்தாக பரிணமிக்கிறது. சரி, ஆனால் இதில் ஓர் ஐயம் எழும். ப்ரஹ்மம் மாறுகிறதென்றால், விகாரம் அடையும் என்று பொருள். ஆனால், வேதாந்தமோ, ப்ரஹ்மத்திற்கு விகாரம். அதாவது, மாறுதலே கிடையாது; ஒரே ஸ்வரூபத்தோடே இருப்பது – என்று கூறுகிறது.
  
ஒரே ஸ்வரூபத்தோடே மாறுதல் இல்லாமல் இருக்க வேண்டுமானால், உபாதான காரணமாக முடியாது. உபாதான காரணமாக, அதாவது குடத்திற்கு மண் போன்று, இருக்க வேண்டுமானால், மாறித்தான் தீர வேண்டும். 
அப்போது ‘ப்ரஹ்மம் நிர்விகாரம்’ என்கிற பெருமை அழிந்து போகும். ஆக, இந்தப் பெருமை கூற வேண்டுமேயானால் அதை இழக்க வேண்டும். அந்தப் பெருமை கூற வேண்டுமானால் இதை இழக்க வேண்டும். ஆனால், வேதாந்தமோ ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகவும், அதே சமயத்தில் ப்ரஹ்மத்தை எந்த மாறுதலுக்கும் உட்படாத நிர்விகார தத்துவமாகவும் கூறுகிறது. பின் எப்படி இந்த இரண்டையும் சேர்த்துப் பார்க்கப் போகிறோம்? கேளுங்கள். 


மேலும் படிக்க:


 * ஜென் கதை ஒன்று...நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கக் கூடும்.

ஒருவனுடைய மனைவி இறந்து கொண்டிருக்கிறாள். மரணப் படுக்கையில் அவள் தன் கணவனிடம் 'நான் உங்களை மிக மிக நேசிக்கிறேன்..எனவே என் மரணத்துக்குப் பிறகு வேறு யாருடனும் நீங்கள் காதல் கொள்ளக் கூடாது; உங்களை நான் மரணத்துக்குப் பிறகும் கண்காணித்துக் கொண்டே இருப்பேன்' என்கிறாள்.

மனைவி இறந்ததும், சில மாதங்கள் அவன் தனித்து இருக்கிறான். பிறகு ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுக்கிறான். அவளை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறான். அன்று இரவே அவனது மனைவி, பேயாக வந்து அவனை எச்சரிக்கிறாள், 'நீ எப்படி இவ்வாறு  செய்யலாம்'  என்று கேள்விகளால் துளைத்தேடுக்கிறாள். அவனுக்கும் அவன் புதிய காதலிக்கும் நடந்தவைகளை ஒன்று விடாமல் கூறுகிறாள். தனக்கு எல்லாமே தெரியும் என்றும் எதையும் அவளிடமிருந்து மறைக்க முடியாது என்றும் கூறுகிறாள். தினமும் வந்து அவன் தூக்கத்தைக் கெடுக்கிறாள்.

இந்த தொல்லையில் இருந்து விடுபட வேண்டி அவன் ஒரு ஜென் குருவை சென்று சந்திக்கிறான். அவர் அவனுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுத்து மறுமுறை ஆவி அவனிடம் வரும்போது அதை செயல்படுத்தும்படி சொல்கிறார்.

அன்று இரவு மறுபடியும் ஆவி வருகிறது. அதனிடம் அவன், 'உனக்கு எல்லாம் தெரியுமா?' என்கிறான். அது' ஆமாம்...எல்லாம்' என்கிறது..

உடனே அவன் பக்கத்தில் இருந்த மூட்டையில் இருந்து கைப்பிடி அளவு பீன்ஸ் விதைகளை அள்ளிக் கொண்டு, "இதில் மொத்தம் எவ்வளவு பீன்ஸ் விதைகள் உள்ளன என்று சொல்லேன்" என்கிறான்.

உடனே அந்த உருவம் மறைந்து விடுகிறது...அதற்குப் பிறகு அது திரும்ப வரவே இல்லை!


.
..
...
....
.....


இதில் இருந்து நமக்குத் தெரியும் விஷயம் என்ன....? இரண்டு சொல்கிறார்கள்.


ஒன்று : கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு...எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்து விடாது...

but ,எனக்குப் பிடித்த version இதுதான்:

இரண்டு: அந்த ஆவி என்பது உண்மையில் அவனுடைய மனம் தான். வேறொன்றும் இல்லை. அவன் மனச்சாட்சி தான் அவனை தினமும் அலைக்கழிக்கிறது. தனக்கு எல்லாம் தெரியும் என்கிறது. காதலியுடன் நடந்த ஒவ்வொன்றும் அவனுக்குத் தெரியும் என்பதால் அந்த ஆவிக்கும் தெரிகிறது. ஆனால், கையில் சரியாக எத்தனை பீன்ஸ் விதைகள் உள்ளன என்பது அவனுக்கே தெரியாது. எனவே அவனது மனதின் பிம்பமான ஆவிக்கும் தெரிவதில்லை. எனவே கேள்வி கேட்டதும் அது மறைந்து விடுகிறது.மனம் தான் மிகப் பெரிய பேய் !




ஒரு ஹைக்கூ:

பறவை பறந்ததும்
கொஞ்ச நேரம்
ஆடும் கிளை!



ஓஷோ ஜோக்:

அன்புள்ள இலியா,

எப்படி இருக்கிறாய் அன்பே? சில வாரங்கள் முன்பு நாம் பிரிந்து விட்டோம்.
ஞாபகம் இருக்கிறதா? அதில் இருந்து என்னால் நானாக இருக்கவே முடியவில்லை. என் மனச்சாட்சி என்னைக் கொல்கிறது .உன் போல அன்பும் அழகும் நிறைந்த பெண்ணை நான் பிரிந்தது எத்தனை முட்டாள்தனம்?

இப்போதும் என் இதயத்தில் உனக்கான இடம் இருக்கிறது அன்பே. இப்போது தான் உணர்கிறேன்...உன்னை நான் எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறேன்.
உன்னிடம் இருந்து விலகிச் சென்றுள்ளேன்...உன்னுடைய அன்பைப் புரிந்து கொள்ளாமல் கல் இதயத்துடன் பிரிந்து விடலாம் என்றேன்..

இப்போதும் சொல்கிறேன்..உண்மை அன்பு, சுயநலம் அற்ற காதல் என்றால் என்ன என்பதை உணர்ந்து விட்டேன். எனக்கு நீ வேண்டும்..உன் இதயத்தின் தொடுதல் வேண்டும் அன்பே..என் செல்லமே...என் வாழ்வில் இன்னொரு வாய்ப்பு தருவாயா? பாலைவனம் போன்ற என் மனதில் மீண்டும் உன் அன்பெனும் பூ மலருமா ? என் முட்டாள் தனத்தை மறந்து என்னை மீண்டும் நீ கருணை கூர்ந்து ஏற்றுக் கொள்ள மாட்டாயா, என் உயிரே! பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்  என் இளவரசி!

இப்படிக்கு
என்றென்றும் உன்னை மறவாத
ஜார்ஜ்.

[பின் குறிப்பு:  சமீபத்திய ஸ்டேட் லாட்டரியில் முதல் பரிசு வென்றதற்கு என்
உளமார்ந்த வாழ்த்துக்கள்..]


சமுத்ரா ...

Tuesday, May 14, 2013

கலைடாஸ்கோப்-89

லைடாஸ்கோப்-89 உங்களை வரவேற்கிறது.

தினத்தந்தி நாளிதழ் விளம்பரத்தில் 'மாந்திரீகம்' என்று ஒரு காலம் வருகிறது. ஆண் ,பெண் வசியம் , தொழில் வசியம், மை வசியம் , எல்லாம் வல்ல ஜக்கம்மா அருளால் ஒரே நாளில் உங்கள் மனதுக்குப் பிடித்தவர், உங்களை இதுவரை அலட்சியம் செய்தவர்  உங்களைத் தேடி வருவார் என்றெல்லாம்! தன் துணையை இம்ப்ரெஸ் செய்வதற்கு பலவித டெக்னிக்-களை உயிரினங்கள் கடைபிடிக்கின்றன.இயற்கையில் தெரியும் வர்ண ஜாலங்களில் 90% இந்த இம்ப்ரெஸ் செய்யும் விஷயத்தினால் வருவது தான்! மனிதன்  இப்போது இப்படி மாந்திரீகம், சூனியம் என்று இறங்கி விட்டான் போலும்!தமிழ் சினிமாவிலும் ஹீரோயினை கரெக்ட் செய்வதற்கு காலம் காலமாக ஹீரோக்கள் பல டெக்னிக்குகளை கையாண்டு வருகிறார்கள் .பழைய காலத்து ஹீரோக்கள் ஸ்வரம் போட்டுப் பாட்டுப் பாடியும் ஓவர் ஆக்டிங்கில் நாதஸ்வரம் வாசித்தும் ஹீரோயினை இம்ப்ரெஸ் செய்வார்கள். பிற்காலத்திய ஹீரோக்கள் ரவுடிகளை தாமே செட் செய்து அவர்களை அடித்துத் துவைப்பது போல நடித்து ஹீரோயினை வியக்க வைப்பார்கள். முரளி போன்ற ஹீரோக்கள் மேடையில் பாட்டுப் பாடினாலே ஹீரோயின் மயங்கி விடுவார் என்று எதிர்பார்ப்பார்கள். இப்போதைய ஹீரோக்கள் கூலிங் கிளாஸ், கோட்டு எல்லாம் போட்டுக் கொண்டு லேசான தாடி வைத்துக் கொண்டு , பிஸ்டல் வைத்துக் கொண்டு தீவிரவாதி கூட்டத்தில் போய் சேர்ந்து கொண்டு ,கார் சேஸிங் செய்து  'வாடா பின்லேடா' என்று கவித்துவமாக சைடு ஆக்டர்கள் ஆடும்  குத்தாட்டத்தை ரசித்து இப்படி என்ன என்னவோ செய்து ஹீரோயினை வழிக்குக் கொண்டு வருவார்கள்.

 
துணையை இம்ப்ரெஸ் செய்ய இவ்வளவு மெனக்கெட வேண்டுமா?


ஜீ -தமிழ் சானலில் வரும் ராமாயணத்தில் இருந்து ஒரு காட்சி:



சீதையின் சுயம்வரத்தில் ராமர், லட்சுமணன், மற்றும் குரு விஸ்வாமித்திரர் அமர்ந்திருக்கிறார்கள். மண்டபத்தின் நடுவே சிவதனுசு வைக்கப்பட்டிருக்கிறத.சுற்றிலும் நிறைய சிற்றரசர்கள், பேரரசர்கள், தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள்! ஒவ்வொரு ராஜாவாக எழுந்து வந்து சிவ தனுசை தூக்க முடியாமல் தோல்வியை சந்திக்கிறார்கள். ' வில்லை சுண்டு  விரலால் தூக்கி நாண் ஏற்றி சீதையை மணப்பேன் ' என்று மார் தட்டியவர்கள் வில்லை அசைக்கக் கூட முடியாமல்  மண்ணைக் கவ்வுகிறார்கள். அப்போது, ஜனகர் , வேதனையடைந்து 'இந்த உலகத்தில் வீரர்களே இல்லையா?, பூவுலகில் ஆண்மை மறைந்து போய்விட்டதா என்று புலம்புகிறார். சீதை, 'என்ன ராமர் இன்னும் ஆசனத்தை விட்டு எழுந்திரிக்கவில்லையே' என்று தவிக்கிறாள். ராமர் புன்னகை மாறாமல் அப்படியே அமர்ந்திருக்கிறார்.

இலட்சுமணன் எழுந்து 'ரகுகுலத் தோன்றல் ராமர் அமர்ந்திருக்கும் சபையில் என்ன பேசுகிறீர்கள், அவர் கண்ணசைத்தால் இந்த வில் என்ன, பூமிப் பந்தையே நான் பெயர்த்தெடுப்பென் ' என்கிறான் கோபமாக .ராமர் அவனை பேசாமல் இரு என்று சொல்லிவிட்டு மீண்டும் புன்னகை மாறாத முகத்துடன் அமைதி காக்கிறார். சபையில் இருக்கும் மற்ற அரசர்கள் ராமரை ஏளனம் செய்கிறார்கள். பூமியை தகர்ப்பது இருக்கட்டும்...சின்னப்பயல் ராமன் முதலில் எழுந்து வந்து இந்த வில்லை அசைக்கட்டும்' என்று. அப்போதும் ராமர் முகத்தில் அதே எக்ஸ்பிரஷன் .

 விஸ்வாமித்திரர், 'ராமா, இப்போது நீ சென்று வில்லை எடு' என்கிறார். அப்போது தான் ராமர் இருக்கையில் இருந்து எழுந்து, குருவை வணங்கி விட்டு வில்லை எடுக்கிறார்.

'எடுத்தது கண்டார்; இற்றது கேட்டார்'!

-வள வளா , டிராமா, ஹங்காமா, show -off , பந்தா , எதுவும் இல்லை.டேய் உங்களால் முடியாததை நான் செய்கிறேன் பார் என்று அவர்களை முறைப்பது...ஏளனமாகப் பார்ப்பது...ஊ ஹும்...at least , வில்லை முறித்த பிறகு?...நாமென்றால் கிளைமாக்சில் தமிழ் சினிமா ஹீரோ பேசுவது போல ஒரு அரை மணி நேரத்துக்கு  நீண்ட வசனம் பேசி இருப்போம்.. 'பாத்தீங்களா ,, என்னமோ பேசினீங்க..சீதை எனக்கு தான்...இப்ப உங்க முகத்தை எங்க வைச்சுப்பீங்க...அப்படியே ஓடிப் போயிருங்க... சீதைக்கு நான் தான் என்பது விதி! 'ஊ ஹும்...expression மாறாமல் மீண்டும் வந்து சீட்டில் உட்கார்ந்து கொள்கிறார்...


காதலியை இப்படியும் இம்ப்ரெஸ் செய்யலாம்!

என்ன சொன்னோம்....விதி! ஆங்..இதைப் பற்றி we will talk about shortly ! kung -fu panda !



ச.ப.பு:-



'திசை கண்டேன் வான் கண்டேன்'- சுஜாதா 

-தலைப்பைப் பார்த்ததும் ஏதோ ஆழ்வார் பாசுரம் என்று நினைத்தேன்... அனால் இது பாரதிதாசனின் கவிதை!


ஆண்ட்ரமீடா காலக்ஸியில் நோரா என்ற கிரகத்தில் இருந்து பூமியை அழிக்க வருகிறான் பாரி என்னும் ஆர்கான் பிரஜை. நோரா கிரக வாசிகள் மனிதர்களைக் காட்டிலும் தொழில் நுட்பத்தில் பன்மடங்கு முன்னேறியவர்கள். காலக்சிகளுக்கு இடையே பாலம் ஒன்று அமைக்க வேண்டி இருப்பதால் அதற்கு இடைஞ்சலாக இருக்கும் பூமியை அனிஹிலேட்டர்  கதிர்கள் மூலம் தாக்கி அழித்து விடுவது அவர்கள் நோக்கம். பாரி தன்னுடைய செயற்கை அறிவு பெற்ற 121 என்ற விண்கலத்தில் ஏறி பூமிக்கு வருகிறான். முழுக் கதையையும் சொல்லி போர் அடிக்காமல் நாவலில் இருந்து சில விஷயங்கள் மட்டும்:


* இங்கிருந்து இருபது லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஆண்ட்ரமீடாவில் இருந்து புறப்பட்டு பாரி ஒரே நாளில் பூமிக்கு வந்து விடுகிறான். இது எப்படி? ஒளியை விட எதுவும் வேகமாக செல்லாதே என்று கேட்டால் அவன் பயணிக்கும் 121 ஒரு டெக்யான் இஞ்ஜின் . hyperspace எனப்படும் வெளியின் உயர் பரிமாணங்களில் பயணிக்கக் கூடியது. முருகன் மெனக்கெட்டு பூமியை சுற்றி வந்து கொண்டிருக்க, விநாயகர்  பெற்றோரை சுற்றி வந்து நோகாமல் நுங்கு தின்றதை, சாரி ஞானப்பழம் தின்றதைப் போல ஒரு short cut ! அதிக விவரங்களுக்கு அ -அ -அ படிக்கவும்.

* பகுத்தறிவு பெற்ற மெஷின் தன் இஷ்டப்படி செயல்படாமல் இருக்க (yes, intelligence shall seek freedom!) அதன் எஜமானர்களிடம் இருந்து keep -alive மெசேஜ்களை ஒரு குறிப்பிட்ட இடை வெளியில் ரிசீவ் செய்ய வேண்டும் என்று கதையில் சுஜாதா சொல்கிறார்.மூன்று ஹெல்த் -செக் மெஸ்சேஜ் களை விட்டு விட்டால் மெஷின் படுத்து விடும்!

* நினைத்த உருவத்தை எடுத்துக் கொள்ளும் morphing என்ற டெக்னிக்கை பாரியும் அவன் இயந்திரமும்(121) பயன்படுத்துகிறார்கள். அவர்கள் கிரகத்தில் இருந்து அவர்களுக்கு எட்டு முறை மட்டுமே மார்ப் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.கடற்கரையில் 121 ஒரு குதிரையாக மாறி விடுகிறது. பிறகு புறாவாக,ஆட்டுக் குட்டியாக, மனிதனாக!

[சில details : மார்பிங் என்பது சினிமாவில் சிங்கம் ஒன்று புறப்பட்டதே என்று பின்னணியில் பாட்டு ஒலிக்க ரஜினி  முகத்தை சிங்கமாக மாற்றிக் காட்டுவது. நிஜத்தில் இப்படி மாற்ற முடியுமா ? இன்று வரை முடியாது. ஏன்,ஒரு நிஜப் பொருளை காப்பி பேஸ்ட் கூட செய்ய முடியாது. டிஜிடலில் எல்லா மாயாஜாலமும் சாத்தியம். கம்ப்யூட்டரில் ctrl +c  அழுத்தி விட்டு ஒரு எழுத்தையோ கட்டுரையையோ படத்தையோ பைலையோ  எத்தனை முறை வேண்டுமானாலும் பேஸ்ட் செய்யலாம் அல்லவா . தற்காலிகமாக ரிஜிஸ்டர்களில் மின்சாரம் தங்குகிறது அவ்வளவே. நிஜத்தில் இப்படி ஒரு பொருளை படியெடுக்க முடியாது.[அப்படி இருந்தால் நம்மை நாமே காபி பேஸ்ட் செய்து ஒரு இமேஜை ஆபீசுக்கு அனுப்பி விட்டு நாம் வீட்டில் உட்கார்ந்து F டி .வி பார்க்கலாம்!] இப்போதைக்கு அதிகபட்சம் ஒரு பொருளின்  'இமேஜை ' படியெடுக்கலாம் .optical scan செய்து அதுபோல ஒரு முப்பரிமாண ஹோலோக்ராம் இமேஜை தத்ரூபமாக  உருவாக்கலாம். ஆனால் அது ஒரு உள்ளீடற்ற மாய உருவமாகவே இருக்கும். 

ஆனால் molecular  re -arrangement எனப்படும் மூலக்கூறு அமைப்பு மாற்றம் மூலம் ஒரு பொருளை வேதியியல் முறையில் முற்றிலும் இன்னொரு பொருளாக மாற்ற முடியும்.இது சுலபம். தண்ணீரை ப்ரிஜ்ஜில் வைத்து பனிக்கட்டியாக மாற்றுவது போல ரொம்ப சுலபம். பாலை தயிராக்கலாம். தயிரை வெண்ணெய் ,அதை நெய்..அதன் வேதியியல் பண்புகள் மாறுகின்றன அவ்வளவே..சில வேதியியல் சங்கிலிகள் அறுந்து, சில பிணைக்கப்பட்டு , சில இடம் மாறி...ஒரு விதமான தேர்தல் நேர கூட்டணிகள் போல, flexible ! 

இயற்பியல் முறையில் மாற்றம் என்பது கொஞ்சம் கஷ்டம்..ரசவாதம்! 
அதாவது ஒரு தனிமத்தையே (element ) இன்னொரு தனிமமாக மாற்றுவது. மெஷின் ஒன்று குதிரையாக மாற இரும்பை கார்பனாக down grade  வேண்டி இருக்கும்!  அணுக்கருவைப் பிளக்க வேண்டி இருக்கும்.அதீத ஆற்றல் தேவைப்படும்! மனிதனை அப்படியே ஒரு குதிரையாக மாற்றுவது அதைக் காட்டிலும் சற்றே  சுலபம் (ரெண்டுமே கார்பன்) என்றாலும்  இப்போதைக்கு அசாத்தியம்.இதற்கு உயிரியல் ரீதியான மாற்றங்கள் தேவைப்படும். அதற்கு நமக்கு ஜீன்களின் மொழி  வசப்பட வேண்டும். நீ குதிரை! மனிதன் அல்ல; நீ நன்றாக ஓட வேண்டும் பிடரி மயிர் வளர வேண்டும், வால் வேண்டும், கொள்ளு சாப்பிட வேண்டும் , பெண் குதிரையை கண்டால் ஜொள்ளு விட வேண்டும்,உடை இல்லாவிட்டால் பப்பி ஷேமாக பீல் பண்ணக் கூடாது   என்றெல்லாம்  ஜீன்கள் ரீ -ப்ரோக்ராம் செய்யப்பட வேண்டும். மேலும் சைஸை மாற்றுவதற்கு நானோ டெக்னாலஜி கைவர வேண்டும்.



TCF  (to confuse further ) நான் குதிரையாக மாறுவது என்றால் என்ன? ஆன்மீக ரீதியிலும் இது இடிக்கிறது.என்னுடைய உயிர் குதிரையின் வடிவில் தன்னை உணர்வதா?

நான் என்பது வெறுமனே என் ஞாபகங்கள் தான் என்றால் என் மூளையையும் குதிரையின் மூளையையும் இடம் மாற்றினால் போதும்! ஆனால் மூளையை மாற்றும் அளவு இன்னும் மனிதன் வளரவில்லை!

ராமு சோமு என்ற இரண்டு பேர் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது ராமு சோமுவின் உருவில் தன்னை உணர்வானா? இல்லை முற்றிலுமாக சோமுவாகவே மாறி விடுவானா? இயற்பியல், வேதியியல், உயிரியல் எதுவாக இருந்தாலும் கடைசியில் ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது....ஆமாம்... WHO AM  I ?


ஜக்கி வாசுதேவின் ஒரு கவிதை:

எது எல்லை?


உதிரம் தந்து தன் கருப்பையில் 
சுமந்தவளின் உடைமையா நான்?
இல்லை...
உணவளித்து உயிர் காக்கும் 
உருண்ட பூமிக்கு 
உரியவனா நான்?
இல்லையில்லை...
உற்சாகமாய் இயக்கி நடத்தும் 
உடலுக்கும் மனதுக்கும் 
உரிமையுண்டா என் மீது?
கிடையாது...
எதற்கும் அடங்காத 
எல்லையற்றவன் நான்!


* மொத்தத்தில் சுஜாதாவின் 'திசை கண்டேன் வான் கண்டேன்' தமிழில் ஒரு சுவாரஸ்யமான சயின்ஸ் பிக்சன் நாவல்...ஆனால் சில பல இடங்களில் சுஜாதாவின் பாணி நம்மை சலிப்படைய வைக்கிறது...சுஜாதாவின் எல்லா நாவல்களிலும் யாரோ ஒரு ஆள், அது மனிதனோ, மெஷினோ பார்க்கும்  எல்லாப் பெண்களையும் படுக்கைக்கு அழைக்கும், உடை களைய விளையும் , அங்கங்களை வர்ணிக்கும் maniac -ஆக இருந்து விடுகிறார். நாவலில் 121 என்ற இயந்திரம் செங்கமலம் என்ற பெண்ணைக் காதலிக்கிறது. அது பேசும் காதல் டயலாக்குகள் டூ மச்!

ஆனால் சுஜாதாவிடம் பிடித்த விஷயம் அவராது balance செய்யும் சாமார்த்தியம். பாலன்ஸ் என்றால் என்ன? ரொம்ப intellectual ஆன ஒருவனின் பார்வையும் இருக்கிறது. சாதாரண ஆள்,common man  கடற்கரையில் காதலியுடன் அமர்ந்து கொண்டு படகு மறைவில் சுண்டல் சாப்பிடும் சாதாரணன்  ஒருவனின் பார்வையும் இருக்கிறது...அதீத பாலுணர்வில் வெளிப்படும் உரையாடல்களும் இருக்கும்..அதே சமயம் ' பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தில் நாளை நடக்க இருக்கும் உங்கள் முதலிரவு ஒரு மேட்டரே இல்லை' போன்ற டயலாக்குகளும் இருக்கும். இன்று என்ன என்னவோ இஸம் இஸம் என்று சொல்லிக் கொண்டு , என் நாவல் விற்கவில்லையே , தமிழ் நாட்டில் எல்லாரும் முட்டாள் பயல்கள் என்றெல்லாம் புலம்பும் எழுத்தாளர்களிடம் இந்த versatility மற்றும்  balancing இல்லை என்பது தான் நிதர்சனம். வெண்டைக்காய் பிஞ்சாய் இருந்தால் வியாபாரத்துக்கா பஞ்சம்? முத்தின வெண்டைக்காய் வைத்துக் கொண்டு விற்கவில்லையே விற்கவில்லையே என்றால்?!


* இப்போது பெரியவர்களுக்கான ஷாப்பிங் -ஐ விட குழந்தைகளுக்கான ஷாப்பிங் தான் பர்ஸை அதிகம் பதம் பார்க்கிறதாம்.சரி, குழந்தைகளுக்கான டிரஸ்-களை கடைகளில் தான் வாங்க வேண்டும். அனால் பொம்மைகளை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். செலவு மிச்சம். இந்த லிங்கைப் பாருங்கள். சுலபமாகக் கிடைக்கும் வாட்டர் பாட்டில், ஸ்ட்ரா, பாட்டில் மூடிகள்,பலூன், கம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி விளையாட்டு சாமான்களை செய்து கொடுக்கலாம். மேலும், குழந்தைகளுக்கு சைக்கிள் கேப்பில் அறிவியலையும் சொல்லித் தரலாம்.சாம்பிளுக்கு ஒன்று:



 
* kung -fu பாண்டா பாத்திருக்கிறீர்கள் தானே?




இந்தப் படத்தின் தாரக மந்திரம் "There are no accidents in life " என்பதாகும். மூத்த குங்-பூ மாஸ்டராக வரும் ஆமை இதை அடிக்கடி சொல்கிறது. 

வாழ்க்கையில் எல்லாமே தற்செயல் தான் என்று நம்புவது ஒரு அணுகுமுறை. இன்னொன்று, வாழ்வில் எல்லாமே முன்பே  தீர்மானிக்கப் பட்ட விஷயங்கள் என்று நம்புவது! வாழ்வில் எல்லாமே தற்செயல் தான் என்ற நினைப்பு மனிதனை அவ்வளவாக கவர்வதில்லை...நான் பிறந்ததே தற்செயல் தானா? என் வாழ்க்கைக்கு உள்ளார்ந்த மதிப்பு எதுவும் இல்லையா? என்று அவனை மிகவும் சஞ்சலப்பட வைக்கிறது.மாறாக எல்லாமே தீர்மானிக்கப்பட்டது தான்..நீ எந்தக் காலேஜ் படிக்க வேண்டும், யாரை கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் , எங்கே வேலை செய்ய வேண்டும் எல்லாமே தீர்மானிக்கப்பட்டது தான் என்று சொன்னால் சரி என்னைப் பற்றி தீர்மானிக்க ஏதோ ஒரு சக்தி கிக்தி இருக்கிறது என்று மனிதன் தேற்றிக் கொள்ள முடியும்.

பிரபஞ்சம் தோன்றியதே ஒரு accident என்கிறது இயற்பியல். உயிர்கள்  தோன்றியதே ஒரு விபத்து.. பரிணாமம் என்பது ஒரு விபத்து என்கிறது உயிரியல்.

ஆம்..பிரம்மா நம் தலையில் எதுவுமே எழுதவில்லை...சித்திர குப்தனும் நாம் இன்று எத்தனை பெக் குடிக்கிறோம் யாருடன் டேட்டிங் செல்கிறோம்  என்று கணக்கு வைத்துக் கொள்ளப் போவதில்லை...எல்லாமே on -the -go 
ஒரு திட்டமிடப்படாத நாடகம் போல dynamic -ஆக செல்கின்றன. இந்த கருத்தை உறுதியாக நம்பும் மேற்கத்திய சிந்தனையாளர் ஒருவர் இப்படி சொல்கிறார்:

"நான் பிறந்ததே ஒரு விபத்து தான்...என் அப்பா ஒரு மழைக்கால இரவில் பயணம் மேற்கொண்டிருந்தார். ஒரு நாள் இரவு டாக்சி பிடித்து ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவேண்டி இருக்கிறது. கடும் மழை காரணமாக மரம் முறிந்து  விழுந்து முக்கால் வழியில் டாக்சி நின்று விடுகிறது. பிறகு நடந்தே ரயில் நிலையம் வந்து சேருகிறார் . ஆனால் தான் செல்ல வேண்டிய ரயிலை மயிரிழையில் தவற விட்டு விடுகிறார். அது ஒரு மிகச் சிறிய ஸ்டேஷன்...ஜனங்கள் எல்லாரும் கடைசி ரயிலில் சென்று விடுகிறார்கள். அவருக்கோ மிகவும் பசி...உணவு வேண்டி  ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள ஹோட்டல்களைத் தேடி அலைகிறார்...நேரம் பாதி ராத்திரியைக் கடந்து விடுவதால் எல்லா உணவு விடுதிகளும் மூடி விடுகின்றன. தூரத்தில் ஒரு ஹோட்டலில் மட்டும் மங்கிய விளக்கு எரிகிறது. அங்கே ஓடிச் செல்கிறார். ஓட்டலை நடத்தும் பெண் அதை கிட்டத்தட்ட மூடியே  விட்டார். இவர் ஓடி வருவதைப் பார்த்து ஒரு நிமிடம் தயங்கி பின் கதவைத் திறக்கிறார். 'சாப்பிட ஏதாவது கிடைக்குமா' என்று அப்பா கேட்கிறார். அந்தப் பெண் அவர் நிலையைக் கண்டு அனுதாபப்பட்டு , உள்ளே அழைத்துச் சென்று சாப்பிட கொடுக்கிறாள். ஹோட்டலை நடத்தும் தன் பெற்றோர் வெளியூருக்கு சென்றுள்ளதாக சொல்கிறாள். வெளியே பலத்த மழை காரணமாக அப்பா அங்கேயே அன்று இரவு தங்கிக் கொள்கிறார். மழை , குளிர், தனிமை, இரவு இவையெல்லாம் சேர்ந்து இருவரையும் மயக்கி இணைய வைக்கிறது. அப்படித் தான் நான் பிறந்தேன்"


- வாழ்க்கையில் எல்லாமே தீர்மானிக்கப்பட்டு விட்டது என்பதை நான் நம்பவில்லை.  என் பிறப்பு முதலிலேயே தீர்மானிக்கப்படவில்லை...அது ஒரு விபத்து...அன்று மட்டும் மழை வரவில்லை என்றால் நான் பிறந்திருக்க மாட்டேன். ஸ்டேஷனுக்கு அப்பா ஒரு சில நிமிடங்கள் முன்னதாக வந்திருந்தால் நான் பிறந்திருக்க மாட்டேன். அப்பா வேறு ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தால் நான் பிறந்திருக்க மாட்டேன். அந்தப் பெண் ஒரு அரை நிமிடம் முன்பு கதவை மூடி இருந்தாலோ அல்லது அப்பாவைப் பார்த்து இரக்கப்படாமல் இருந்திருந்தாலோ நான் பிறந்திருக்க மாட்டேன்.. நான் பிறக்க வேண்டும் என்பதற்காக இயற்கை இத்தனை விஷயங்களை சங்கிலித் தொடராக கச்சிதமாக அமைக்குமா என்று நான் சந்தேகிக்கிறேன். இது முடிவில்லாத சங்கிலித் தொடர்..எப்படி என்றால் நான் பிறக்க வேண்டும் என்று இயற்கை மழையை அன்று பெய்விக்க வேண்டும். அதற்கு வானிலை சாதகமாக இருக்க வேண்டும். அன்று இரவு அம்மாவின் பெற்றோர்களை ஊருக்கு அனுப்ப வேண்டும். மரத்தை முறித்து சாலையில் விழ வைக்க வேண்டும்...ஹோட்டல் காரர்களை சீக்கிரம் கதவடைக்க வைக்க வேண்டும். அம்மாவை தூங்காமல் இருக்க வைக்க வேண்டும். எனவே நான் பிறக்க வேண்டும் என்றால் அதில் கிட்டத்தட்ட ஒரு நூறு பேராவது சம்பந்தப் பட்டிருக்க வேண்டும்.என் விதி இந்த நூறு பேரை அன்று பாதித்ததா? இந்த நூறு பேரும் அன்றைக்கு அந்த நிலைக்கு வருவதற்கு மேலும் ஒரு ஆயிரம் பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம். (உதாரணம் இதில்  ரயில்வே ஊழியர்   கூட சம்பந்தப் பட்டிருக்க வேண்டும்...ஏதோ ஒரு காரணத்துக்காக அவர் சிக்னலை இரண்டு நிமிடம் கழித்து கிளியர் செய்திருந்தால் அவர் ரயிலை விட்டிருக்க மாட்டார். ) 

எனவே இது ஒரு முடிவில்லாத சங்கிலித் தொடர். 


கார்ல் சாகன் 'If you want to make an apple pie from scratch , you have to create the universe first' என்பார். அதைப் போல இவர் பிறப்பதற்கு முதலில் பிரபஞ்சம் தோன்றுவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் போலிருக்கிறது!


எனவே எல்லாமே விபத்து தான்...

'இதில் நீ என்ன அடியே நான் என்ன ஞானப் பெண்ணே 
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?'


ஆனால் வெயிட் ....Seems there is a hope!

 குங்-பூ மாஸ்டர் எதுவுமே விபத்து இல்லை என்கிறது....ஒன்று நடக்க வேண்டும் என்றால் அது நடந்தே தீரும்..அதைத் தடுக்க முயன்றாலும் அது நடந்து விடும். in fact , அதைத் தடுக்க நாம் செய்யும் முயற்சியே அது நடக்க தூண்டுகோலாக அமையும். இப்படித்தான் படத்தில் நடக்கிறது...வில்லன் சிறுத்தை (தாய்-லுங்) சிறையில் இருந்து தப்பிக்காமல் இருக்க காவலை பலப்படுத்தும்படி சொல்லி ஆமை குரு, ஒரு வாத்தை தூதுவனாக அனுப்புகிறார். வாத்து சென்று சிறையின் தலைமைக் காவலாளியிடம் தகவலை சொல்கிறது...என் பாதுகாப்பையா சந்தேகிக்கிறாய் என்று எரிச்சல் அடைந்த ஜெயிலர், அதற்கு,' பார் இந்த சிறையில் காற்று கூட உள்ளே நுழைய முடியாது, வெளியே செல்ல முடியாது'...என்று சொல்லி அதற்கு சிறையை சுற்றிக் காட்டுகிறான் . சிறையின் உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கொடூர வில்லன் சிறுத்தையையும் காட்டுகிறான் .அப்போது வாத்தின் இறகு ஒன்று சிறையில் விழுந்து விடுகிறது....சிறுத்தை அதை வைத்துக் கொண்டே எப்படியோ தப்பித்து வெளியே வந்து விடுகிறது ... ஆக , சிறுத்தை தப்பி விடாமல் இருக்க வாத்தை தூது அனுப்பிய செயலே அதைத்  தப்பிக்க வைத்து விடுகிறது!!இதுதான் விதியோ!

அவர் பிறக்க வேண்டும் என்று இயற்கை தீர்மானித்து விட்டால், அது எப்படியோ அவர் அப்பாவையும் அம்மாவையும் சந்திக்க வைத்து விடும்...மழை , ரயில், டாக்ஸி , ஹோட்டல்,மரம்  என்பவை இந்த நாடகத்தின் ஸைடு ஆக்டர்கள் தான் என்பதைக் கவனிக்க...மழை வந்ததால் தான் அவர் பிறந்தார் என்பதல்ல...மழை வெறுமனே அவர் பிறப்பதற்கான சாத்தியத்தை அதிகரித்தது அவ்வளவே ..

அவரின் வாதம் இது தான்.....

அவரது பிறப்புக்கான சாத்தியம் பல்வேறு விஷயங்களின் பெருக்கல் பலன்:

பிறப்பு = மழை x டாக்ஸி x ரயில் x ஹோட்டல் x பெற்றோர் x பெண் x............


இதில் ஒன்று பூஜ்ஜியம் என்றாலும் பிறப்பு = 0 என்று ஆகி விடும் என்கிறார்.

ஆனால் இதில் பல்வேறு விஷயங்களை நாம் group செய்ய முடியும். உதாரணமாக அதே மழை காரணமாக அவளது பெற்றோர்கள் அன்று ஹோட்டலுக்குத் திரும்பாமல் இருந்திருக்கக் கூடும். அதே மழை காரணமாக அந்த டாக்ஸி வழியில் சிக்கி இருக்கக் கூடும்.எனவே அவைகளை நாம் சமன்பாட்டில் இருந்து நீக்கி விட முடியும். அதாவது 

மழை  = மழை  + டாக்ஸி + பெற்றோர் ...எனவே இங்கே டாக்ஸி , பெற்றோர் ஆகிய சாத்தியக் கூறுகள் மழையை சார்ந்தே இருக்கின்றன. அப்படியே ,மற்ற ஓட்டல் காரார்கள் ஏன் சீக்கிரம் கதவை மூடினார்கள்... ஒருத்தர் மனைவியுடன் சண்டை போட்டார், ஒருத்தருக்கு லூஸ் மோஷன் இன்னொருத்தர் காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி நாம் சமன்பாட்டை பிறப்பு = ...x மனைவி x அவர் சாப்பிட்ட சாப்பாடு x... என்று முடிவில்லாமல்  தேவையும் இல்லாமல் extend செய்யத் வேண்டியதில்லை ....விதி, விஷயங்களை சுலபமாக converge செய்து விடும். 'இன்னிக்கு பெரிய மழைப்பா ...இதுல யார் வரப்போறா.. ஹோட்டலை மூடிடலாம்..' அவ்வளவே.....எனவே இந்த லாஜிக் மூலம் பிறப்பு = மழை என்று சமன்பாட்டை பயங்கரமாக சுருக்கி விடலாம்.....if  மழை =1 பிறப்பு =1....சரி..அன்று மழை எப்படி வந்தது? காற்றின் ஈரப்பதம் அது இது என்று ஆரம்பித்தால் நான் விளையாட்டுக்கு வரவில்லை...!

 விதி வலியது.எப்படியோ அது ராவணன் வதத்திற்கு கச்சிதமாக  ஏற்பாடு செய்து விடுகிறது...எப்படியோ..ராமன் எடுக்கும் போது வில் எடை குறையட்டும் என்று பார்வதி வரம் தருவதில் இருந்து, ராமன் சீதை விவாகம் நல்ல முகூர்த்தில் நடக்காமல் இந்திரன் தந்திரம் செய்வதில் இருந்து, கைகேயி மனதில் வெறுப்பை விதைப்பதில்  இருந்து!  விதி வலியது!


‘நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று; பயந்து` நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;   மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்.


If my life is an accident,  I  would like to claim my insurance.

ok...

பாண்டா, தான் ஒரு டிராகன் வாரியர் (உயர்ந்த போர் வீரன்) ஆக வேண்டும் என்று விரும்புகிறது...ஆனால் தன் பருத்த உடம்பை வைத்துக் கொண்டு எப்படி குங்-பூ கற்றுக் கொள்வது என்று வருத்தப் படுகிறது. அப்போது அதன் குருவான நரி சிபூ 'உனக்கு என்ன பிடிக்குமோ அதை வைத்தே உனக்கு குங் -பூ சொல்லித் தருகிறேன் என்கிறார். பாண்டாவுக்கு சாப்பிடுவது என்றால் பிடிக்கும்..எனவே குக்கீகளை வைத்துக் கொண்டு அதை பாண்டாவுக்கு சாப்பிட கொடுப்பது போல கொடுத்து ஆனால் அதை சாப்பிட விடாமல் ஸ்டன்ட் செய்து குங்-பூவை சொல்லித் தருகிறார் நரி மாஸ்டர். கடைசியில் பாண்டா தான், வில்லன் சிறுத்தையை சண்டை போட்டு ஜெயிக்கிறது!


நாமும் இதே டெக்னிக்கை வாழ்க்கையில் கடை பிடிக்கலாம் போலிருக்கிறது.  ஆபீசில் மிக நன்றாக  கஸ்டமர் issue -க்களை  தீர்க்கும் ஒருவரால் வீட்டில் , சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகளை தீர்க்க முடிவதில்லை என்றால் ...சிம்பிள் ...வீட்டையே ஆபீஸாக கற்பனை செய்து கொண்டு விட வேண்டியது! ஆபீஸில் என்ன என்ன டெக்னிக்களை கையாளுவோமோ அதை வீட்டிலும் உபயோகித்துப் பார்ப்பது...bug  raise செய்வது, status அப்டேட் செய்வது, மீட்டிங் வைப்பது, ரிவ்யூ செய்வது என்று...

அல்லது, உங்களுக்கு கிரிக்கெட் பிடித்திருந்தால் வாழ்க்கையையே ஒரு மெகா கிரிக்கெட் மேட்சாக உருவகம் செய்து கொண்டு விடுங்கள்... உங்களுக்கு வரும் பிரச்சனைகள் தான் உங்களை நோக்கி வரும் பந்துகள்..நீங்கள் அதை விளாசித் தள்ளி சிக்ஸர் அடிக்கப் போகிறீர்களா இல்லை அவுட் ஆகப் போகிறீர்களா என்பது உங்கள் சாமார்த்தியம்!: )

 kung-fu பாண்டாவில் இருந்து இன்னும் ஒரே ஒரு விஷயம்:

"There is no level -zero "

-பயிற்சியை முதலில் லெவல் ஜீரோவில் இருந்து ஆரம்பிக்கலாம் என்கிறது பாண்டா.. ஆனால் குரு பாண்டாவை எடுத்த எடுப்பிலேயே கடுமையான பயிற்சியில் தள்ளி விட்டு விடுகிறார்...

"There is no level -zero "

-கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங்-கில் array களைக் குறிப்பிடும் போது  a [0] என்று முதல் member -ஐ குறிப்பிடுவோம்...சில பேர் ஒரு வரிசையின் முதல் உறுப்பினரை 0 என்றே குறிப்பிட வேண்டும் என்கிறார்கள். அதாவது பூஜ்ஜியத்தில் இருந்து எண்ணுவது...ஒரு விஷயத்தில் மிக மிக அடிப்படையான தகுதியை zeroth என்று குறிப்பிடுவார்கள். உதாரணமாக 
வீடு கட்ட மூன்று விஷயங்கள் தேவை...

1. நல்ல இஞ்சினியர் 
2. நல்ல லொகேஷன் [தண்ணீர் காற்று போக்குரத்து போன்றவை]
3. நல்ல மூலப் பொருட்கள்..

அப்படியானால் பணம்? பணம் வேண்டாமா என்று கேட்டால்..'பணமா' பணம் அது zeroth requirement (0. பணம் )என்று மிக மிக அடிப்படையானதை ஜீரோ என்று குறிப்பிடுவது![பூஜ்ஜியம் இல்லை என்றால் 1 2 3.. எதுவுமே இல்லை!] இப்படி எண்ணினால் மூன்று வேதங்கள், நான்கு பூதங்கள், ஏழு திசைகள், எட்டு செல்வங்கள் என்று வரலாம்! :)

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்று சொன்னாலும் கடிகாரங்கள் எப்போதும் 24:00 என்று காட்டுவது இல்லையே! 23:59 க்குப் பிறகு 00:00 என்று தானே வருகிறது!

ஜக்கியின் ஜோக் ஒன்று:

 சங்கரன் பிள்ளை ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். அவருக்குப் பக்கத்தில் இருந்த அமெரிக்கர் ஒருவர் தன் நெற்றிப் பொட்டைத் தட்டினார்.பீப் பீப் என்ற சத்தம் கேட்டது. 

"அது அலாரம் ஒலி ...என் மண்டைக்குள் நேரம் சொல்லும் ஒரு மைக்ரோ சிப்பைப் பொருத்தி இருக்கிறேன்" என்றார் அமெரிக்கர்.

சற்று நேரம் கழித்து ட்ரிங் ட்ரிங் என்று ஒலி கேட்டது . ஜப்பானியர் ஒருவர் தன் உள்ளங்கையை எடுத்து காதில் வைத்துக் கொண்டார்...பேசி முடித்ததும், " என் மொபைல் போன் . கைக்கு உள்ளேயே பொருத்திக் கொண்டு விட்டேன்" என்றார்.

சங்கரன் பிள்ளைக்கு பொறாமை...எதுவும் சொல்லாமல் டாய்லெட்-டுக்குள் சென்று விட்டார். திரும்பி வரும் போது அவருடைய பின்புறம் காகிதம் ஒட்டிக் கொண்டு இருந்தது.

அமெரிக்கரும் ஜப்பானியரும் அதைச் சுட்டிக் காட்டிய போது ,

"சே ! என் ஆபீஸில் இருப்பவர்களுக்கு எப்போது பேக்ஸ் அனுப்ப வேண்டும் என்கிற விவஸ்தையே இல்லை" என்று உரக்க சலித்துக் கொண்டார்.
 சமுத்ரா