இந்த வலையில் தேடவும்

Monday, April 22, 2013

கலைடாஸ்கோப் -88

லைடாஸ்கோப் -88 உங்களை வரவேற்கிறது.


ஓஷோ ஜோக்குடன் ஆரம்பிப்போம்.


முல்லா நசுருதீன் ஒருநாள் ஹெல்த் இன்ஸ்பெக்டரிடம் கம்ப்ளைன்ட் செய்தார்.


"சார்,  வீட்ல எங்க சகோதரர்கள் மூணு பேர் இருக்கிறாங்க; அவங்களால ஒரே தொல்லை; அவங்க நிறைய வளர்ப்புப் பிராணிகள் வச்சிருக்காங்க; ஒருத்தன் அஞ்சாறு நாயை உள்ளே வளர்க்கிறான்; இன்னொருத்தன் ஏழெட்டு ஆடு வளர்க்கிறான்; இன்னொருத்தன் உள்ளேயே நாலஞ்சு குரங்கு வளர்க்கிறான்;வீடு பூராம் ஒரே இடைஞ்சல்; நிற்கவே இடம் இல்லை... காத்தும் வெளிச்சமும் கூட உள்ள வருவதில்லை; இதற்கு நீங்க ஏதாச்சும் செய்யணும்" என்றான்.

 "காத்து வரமாட்டேங்குது அப்படீன்னா ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டியதுதானே?" என்றார் ஹெல்த் இன்ஸ்பெக்டர் .
 
 "ஜன்னலைத் திறந்தா நான் வளர்க்கும் புறா எல்லாம் வெளியே போய் விடுமே சார்" என்றார் முல்லா..


Funny one liners -நன்றி ட்விட்டர் .


*உன் எதிரியின் எதிரி யார்? - நீ தான்.

*எப்போதும் பூசணிக்காய் மரத்தின் அடியில் நிற்காதீர்கள்.

*நாம் நம் நட்பை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றுவோம்; எனவே ஒரு ஐநூறு ரூபாய் கடன்கொடு 

*சிறையில் புதிதாக சந்திக்கும் கைதிகள் என்ன கேட்பார்கள் ? :'உன் செல்நம்பர் கொடு"

*பெரியவர்களை மதியுங்கள்; அவர்கள் கூகுள் , விக்கீபீடியா இரண்டும் இல்லாமல் பட்டம் வாங்கியவர்கள்.

*உங்கள் அழைப்பு எங்களுக்கு முக்கியமானது; இப்போது இந்த  இசையை முப்பது நிமிடம் கேளுங்கள்.

*என் வீடு அலங்கோலமாக இருப்பதாக சொல்லாதீர்கள்; இது ஒரு மூன்று வயது குழந்தையால் கஸ்டம் டிசைன் செய்யப்பட்டுள்ளது

* என் நாய் பூனைத் தூக்கம் போடுகிறது.

*சோம்பேறிகளைப் பற்றிய உண்மை # 1845145781437

நீங்கள் அந்த எண்ணைப் படிக்கவில்லை.

*குழந்தையாக இருப்பதும் குடிபோதையில் இருப்பதும் ஒன்று; நாம் என்ன செய்தோம் என்பது நம்மைத் தவிர எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது.

*நல்ல நண்பர்கள் ஒருவரை ஒருவர் மதிப்பிடுவதில்லை; இருவரும் சேர்ந்து மற்றவர்களை மதிப்பிடுகிறார்கள்.

* ஞாபகம் என்பது என்ன என்றால் உன் திருமண நாள் நேற்றே முடிந்து விட்டது என்று சொல்வதாகும்.



Anaphora என்று மொழியியலில் ஒன்று உண்டு. ஒரு சொல் எதைக் குறிக்கிறது என்று தெளிவில்லாத நிலையைத் தருவது அனாபோரா.

உதாரணம் :

"ஒரு டாக்டரா வாக்கிங் போவது எத்தனை முக்கியம் என்று எனக்குத் தெரியும்"

- இந்த வாக்கியத்தில் உள்ள மெல்லியதொரு பிழையை கவனித்தீர்களா?


-நாங்கள் குரங்குகளுக்கு வாழைப்பழங்கள் கொடுத்தோம்; ஏனெனில் அவை பசியாக இருந்தன.

-இங்கே அவை என்பது எதைக் குறிக்கிறது?  குரங்குகளையா ? வாழைப்பழங்களையா ? 


கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி-
கையினில் வேல் தரித்த கருணை சிவ பாலனை !

-இங்கே கையினில் வேல் தரித்தவன் யார்? சிவனா அவன் பாலனா?


-தாமரைக் கண் கொண்ட திருமகள் அரசே  -இதில் தாமரைக்கண் திருமகளுக்கா அல்லது அவள் கணவனுக்கா?


-இவை லாஜிகலாக நம்மால் புரிந்து கொள்ள ஏதுவாக இருப்பவை என்றாலும் (உதாரணம் : அவர் வீட்டில் இல்லை என்று ஒரு பெண் சொன்னால் 'அவர்' என்பது பெரும்பாலும் அவள் கணவனைக் குறிக்கும்)  மொழியின் வாக்கிய அமைப்பின் இலக்கணப்படி இவை பிழையானவை; குழப்புபவை.


-நான் அருவாளை எடுத்துட்டுப் போய் சீவிட்டேன்!

-அவன் உண்மையில் அருவாளை சீவி இருக்கலாம்.


- நேற்று தியேட்டரில் நான் உன்னை என் மனைவியுடன் பார்த்தேன் :)...

[நேற்று என் மனைவியுடன் தியேட்டருக்கு சென்றிருந்த போது அங்கே உன்னைப் பார்த்தேன் என்று சொல்கிறார்!)


இந்த வாக்கியங்களையும்  கவனியுங்கள்:

How to sleep with lot of noise?

:)

Watch chennai super kings rock the country  on Videocon

சென்னையில் 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடி நீராக்கும் நிலையம் அமைக்க முடிவு .

பல்வேறு நிறங்களில் கிடைக்கும் உதட்டுச் சாயம்...


ந்த  ஒரு  விஷயத்தையும் கற்றுக் கொள்வதில் நான்கு படிநிலைகள் உள்ளன.....



1.ஆர்வம்:

விஷயம் புதிது என்பதால் அதன்மீது நமக்கு பயங்கர ஆர்வம் இருக்கும்.. ஒரே வாரத்தில் எல்லாம் கற்றுக் கொண்டு விட வேண்டும் என்று மனம் அவசரப்படும். புதிதாக வேலைக்கு சேருகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்...பார், என் வேலையை சிறப்பாக செய்து ஆறே மாசத்தில் பிரமோஷன் வாங்குகிறேன் என்று நினைக்கும். புதிதாக கார் கற்றுக் கொள்ளும்போது ஆறே மாதங்களில் பார்முலா ஒன்னுக்கு செல்வேன் என்று நினைக்கத் தோன்றும்.புதிதாக பாட்டு கிளாசுக்கு போனால் ஒரே வருடத்தில் அரங்கேற்றம் செய்து ராகம் தானம் பல்லவி பாடுகிறேன் பார் என்று எண்ணும் .ஆசை தான் இருக்குமே தவிர இந்த ஸ்டேஜில் சரக்கு ஜீரோ. கிளெட்ச் எது ப்ரேக் எது என்று கூட தெரியாது. கல்யாணிக்கும் கம்போதிக்கும் வித்தியாசம் தெரியாது!


2. நிதர்சனம் 

விஷயத்தை நெருங்கி கொஞ்சம் தெரிந்து கொள்ள ஆரம்பித்ததும் அது அவ்வளவு எளிமையானதல்ல என்று தெரிய ஆரம்பிக்கும். ஏன் தான் இதை கற்றுக் கொள்ள வந்தோமோ என்று கூட தோன்றும்.நிறைய பிழைகள் செய்ய நேரிடும். கார் இஞ்சின் அவ்வப்போது அணைந்து நின்று விடும். கியர் மாற்றாமல் ஆன் செய்யும் போது முன்னே நகராமல் அடம் பிடிக்கும். சிக்னலில் நின்று கொண்டிருந்தால் அவ்வளவு தான். சிக்னல் விழுந்தும்  வண்டி எடுக்கவில்லை என்றால் பின்னால் நிற்பவர்கள் நம்மை ஏன் தான் உயிர் வாழ்கிறோமோ என்று நினைக்க வைத்து விடுவார்கள். ஆபீசில் application க்குள் log - in  செய்து உள்ளே செல்லவே ஒரு வாரம் ஆகி விடும். RTP இருக்கட்டும் பாட்டு கிளாசில் சரளி வரிசை கூட சுருதி பிசகாமல்  பாட வராது.,இந்த ஸ்டேஜில் ஒருவருக்கு விரக்தி வருவது இயற்கை. நானெங்கே இதை வெற்றிகரமாக முடிக்கப் போகிறேன். நானாவது, மேடை ஏறி  கச்சேரி செய்வதாவது ..இது எனக்கு சரிப்பட்டு வராது என்று பின்வாங்கத் தோன்றும். நிறைய பேர் இந்த ஸ்டேஜில் 'என்னால் முடியாது' என்று பின்வாங்கி இருக்கிறார்கள். இங்கே தான் ஒரு குரு , ஆசிரியர், அல்லது வழிகாட்டி மிகவும் முக்கியம். 'பயப்படாதே, இதெல்லாம் சகஜம், எல்லாம் சரியாகி விடும். நானெல்லாம் உன்னை விட அதிகமாக தப்பு செய்தேன்; வர்ணத்துக்கு வரவே எனக்கு ரெண்டு வருஷம் ஆச்சு.." என்று ஏதாவது சொல்லி உற்சாகமும் ஊக்கமும் தர வேண்டும்.



3. பழக்கம் 

இப்போது விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட ஆரம்பிக்கும்.....He's picking up! இன்னொருவரது உதவி இல்லாமல் தானே விஷயங்களில்  இறங்க முடியும். நாம் நினைத்தது போல சமாசாரம் அவ்வளவு கஷ்டம் இல்லை என்று பிடிபட ஆரம்பிக்கும். ஆனால் இந்த நிலையிலும், தனியாக இன்னொருவர் உதவி இன்றி முடிவுகள் எடுப்பதற்கு தயக்கமாக இருக்கும்.


4. நிபுணத்துவம் 

சார் , எக்ஸ்பர்ட் ஆகி விட்டார். கலையை நன்றாக கற்றுக் கொண்டு , இன்னொருவருக்கு சொல்லித் தரும் அளவு வளர்ந்து விட்டார். விஷயங்களை அவர் இப்போது அனாயாசமாக கையாள முடியும்.

இங்கே ஒரு point ...இந்த படிநிலைகளில் முன்னேற முன்னேற நம் உணர்வு நிலை consciousness மெல்ல மெல்ல குறைகிறது.முதன் முதலில் கார் ஓட்டும் போது இருக்கும் விழிப்புணர்வு , எக்ஸ்பெர்ட் ஆனபிறகு மறைந்து விடுகிறது.கற்றுக் கொள்ளும் ஆர்வமும் படிப்படியாக குறைந்து விடுகிறது. ஒரு விஷயத்தில் நிபுணத்துவம் பெற்ற பின்பும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் மிகுந்திருப்பவர்கள் மிகச் சிலரே...அவர்களால் மட்டுமே அந்தத் துறையில் ஜாம்பவான்களாக நிலைத்திருக்க முடியும். 'ஒவ்வொரு முறை ஆய்வகத்தில் நுழையும் போதும் நான் ஒரு இயற்பியல் மாணவனைப் போலவே உணர்கிறேன்' -இவ்வாறு சொன்னவர் நோபல் பரிசு பெற்ற ஒரு இயற்பியல் விஞ்ஞானி. 



நீ -
சீக்கிரம் வந்து விடாதே 
காத்திருத்தலின் சுகம் -
நன்றாகத்தான் இருக்கிறது!


ஜெயிலில் இரண்டு கைதிகள் புதிதாக வந்து சேர்ந்தார்களாம். ஒரு கைதி இன்னொருவனைப் பார்த்து உனக்கு எத்தனை வருஷம் என்று கேட்டானாம்.. அவன் 'இருபது வருஷம்' என்றானாம். முதலாமவன், 'எனக்கு பத்து வருஷம் தான்.. அதனால் நான் கதவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறேன்.. நீ பின்னால் உட்கார்ந்துக்கோ ' என்றானாம்.

நாம் ஏன் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? 

ஏதோ ஒன்றை? மே தின விடுமுறையை,, சாயங்காலம் கேண்டீனில் போடும் பஜ்ஜியை, வீட்டுக்குப் போனதும் மனைவி செய்யும் தக்காளி ரசத்தை, குழந்தையின் annual ரிபோர்ட்டை , சனிக்கிழமை பிக்ஸ் செய்திருக்கும் date -ஐ, விருந்தினர் வருகையை, இறங்க வேண்டிய ஸ்டாப்பை, மழையை , சுற்றுலாவை,சம்பளத்தை, பத்து மணி சீரியலை, ஆன்லைனில் ஆர்டர் செய்திருக்கும் புதிய போனை ,ரிப்பேர் முடிந்து வரவிருக்கும் பைக்கை, காலை ஏழு மணிக்கு மொட்டை மாடியில் துணி காயப்போட வரும் பிகரை, நமக்குப் பிடித்த ப்ளாக்கில் வரும் புது போஸ்டை, காதலனின் எஸ்.எம்.எஸ்.ஐ? 

ஒரு வேளை , வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குவது இந்த மாதிரி சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் தானோ?

Reading—it’s the third best thing to do in bed.
”

'பார்லிமெண்டில்' எம்.பி.க்கள் அமளி! --அமளி என்ற வார்த்தை ரகளை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டாலும் உண்மையில் தமிழில்  அதற்குப் படுக்கை என்று அர்த்தம்.

"பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்"

 - மெல்லிய குளிர். இதமான மெத்தென்ற படுக்கை,விடிந்தும் விடியாத காலை வேளை !...அப்போது படுக்கையை யார்தான் விரும்ப மாட்டார்கள்? நேற்று பேசும்போது பரம்பொருள் சிவனை மட்டுமே விரும்புவேன் என்று சொன்னவள் இப்போது இப்படி படுக்கையை காதலித்துக் கொண்டு படுத்துக் கிடக்கிறாளே  என்கிறது திரும்வெம்பாவை .


 நாம் எல்லோரும் நம் படுக்கையை காதலிக்கிறோம் :)
 
Haiku about getting up from bed in the morning:



No no no no
no no
no no no
no no no no no

படுக்கை என்பது நமக்கே உரிய பிரத்யேகமான விஷயம். நம் உடைகளை , உணவை,நகைகளை  share செய்து கொண்டாலும் நம் படுக்கையை, போர்வையை, தலையணையை  share செய்ய விரும்ப மாட்டோம் இல்லையா.அதனால் தான் படுக்கையை பகிர்தல் என்பது  நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதற்கு  மாற்றாக சொல்லப்படுகிறதா?

எதுவுமே செய்யாமல் படுத்த படுக்கையாக கிடக்க வேண்டும் என்ற ஆழமான ஆசை மனிதனுக்கு இருக்கிறதாம். எல்லாமே போதும், ஆபீஸ், குடும்பம் ,நண்பர்கள், பணம், புகழ், அலைச்சல்,குடைச்சல் ,பிக்கல் ,பிடுங்கல் எதுவும் வேண்டாம். அப்படியே போட்டது  போட்டபடி  படுத்துவிடலாம் என்று! ஆண்கள் அப்படியே 'பொட் 'டென்று போய் விடுகிறார்கள். பெண்கள், பாட்டிகள் பெரும்பாலும் படுக்கையில் படுத்து விடுகிறார்கள். குடும்பத்துக்கு உழைத்து, எல்லாருக்கும் பொங்கிப் போட்டு,குழந்தைகளை வளர்த்து, வேலை செய்து, கணவனை , மாமியாரை சமாளித்து, மூன்றுநாள் அவஸ்தையை ஏற்றுக்கொண்டு , வீட்டை சுத்தம் செய்து ,சலித்துப் போய் ஆயுள் முழுவதும் படுத்துக் கிடந்தாலும் அந்த சலிப்பு தொலையாது.



ரங்கநாதருக்கே அந்த சலிப்பு தொலையவில்லை போலும்!


ஓடிக் களைத்தோ தேவியைத்  தேடி இளைத்தோ? மரங்கள் ஏழுந் துளைத்தோ?கடலைக்  கட்டி வளைத்தோ?

இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?
ராவணாதிகளை மடித்த வருத்தமோ?
ஏன் பள்ளி கொண்டீரய்யா? ஸ்ரீ  ரங்கனாதா

-ரொம்ப வருத்தமாய் இருந்தாலும் படுத்துக் கொள்ளத் தோன்றும் போலிருக்கிறது!

இறைவனுக்கே படுக்கையை கொடுத்து விட்டோம் நாம்:

 



 இருளிரிய சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி  அணிபனம்  ஆயிரங்களார்ந்த
அரவரசப்  பெருஞ்சோதி அனந்தநென்னும்
அணிவிளங்கும் உயர்  வெள்ளையணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தென்னீர்ப் பொன்னி
திரைக்கையால்  அடிவருடப்  பள்ளி கொள்ளும்
கருமணியைக்  கோமளத்தைக்  கண்டு கொண்டு என்
கண்ணினைகள் என்று கொலோ களிக்கும் நாளே .


-btw , படுக்கையறை என்பது பூஜை அறை போன்றது என்கிறார் ஓஷோ .

கடவுள் அறையில் நுழையும் பக்தியுடனும், வினயத்துடனும் படுக்கையறையில் நுழைய வேண்டுமாம். நாமோ பெட் ரூமில் தான் கரண்ட் பில்லில் இருந்து கம்ப்யூட்டர் வரை எல்லாமும் வைத்திருப்போம்!

 
 “Sleep is good, death is better; but of course, the best thing would to have 
never been born at all”

- Heinrich Heine
 
  
 
 சில விளம்பரங்கள்:-
 
 
 
* ரோட்டில் நிற்கும் பெண் ஒருவரிடம் ஒரு கதக்களி நடனக் கலைஞர் ஒரு
பானத்தைக் குடிக்கக் கொடுத்து விட்டு பயங்கரமாக குத்தாட்டம் போடுகிறார். இந்த விளம்பரத்துக்கு நாலா பக்கமும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.இந்தியாவின் பாரம்பரியமிக்க கலையை எப்படி இவ்வாறு அவமானப் படுத்தலாம் என்று.

 * பையன் அப்பாவிடம் டூர் கூட்டிப் போகும்படி கேட்கிறான். அம்மா,         இ.எம்.ஐ போக எதுவுமே மிஞ்சுவதில்லை,இந்த லட்சணத்தில் டூரா ? என்கிறாள்.அதற்கு அப்பா, கவலைப்படாதே , லோனை வேறு ஒரு பேங்குக்கு மாற்றி விட்டேன் என்கிறார்.

(நீண்ட நாள் டூர் போகும் அளவு குறைந்த இ .எம்.ஐ. தரும் வங்கிகள்
உண்மையில் இருந்தால் தேவலாம்!)


* குழந்தைகள் அம்மாக்களை எதிர்த்து ஸ்ட்ரைக் செய்கிறார்கள். நீண்ட
 நேரம் விளையாட அனுமதிக்கும்படி...அம்மாக்கள் கடைசியில் அவர்களுக்கு பழங்களின் நற்குணங்கள் நிறைந்த பாட்டில் பானம் ஒன்றை தினமும் தருவதாக உறுதி அளிக்கிறார்கள்.

(இதற்கு பழங்களையே தரலாமே!)

* விருந்தினர் ஒருவர் கரப்பான்பூச்சியை அடித்து விடுகிறார். வீட்டுக்காரர்,
 ஏன் அடித்தீர்கள்?அது உயிரோடு இருந்தால் நாங்கள் வைக்கும் பூச்சிக்
கொல்லியை சாப்பிட்டு விட்டு மற்ற பூச்சிகளையும் அதுவே கொன்று
 விடுமே என்கிறார்.

(மனிதன் எத்தனை கொடூரமாக மாறிவிட்டான்!)

* துவக்கம் சரியா இருக்கணும் என்று சொல்லும் விளம்பரத்தை யாராவது
தடை செய்தால் பரவாயில்லை. எரிச்சலாக இருக்கிறது.. ஓடிப்போய்
கல்யாணம் பண்ணிக்கலாம். ரிஷப்ஷனுக்கு எல்லாரையும் கூப்பிடலாம்.
(life is that simple??)



well , சில விளம்பரங்கள் ரசிக்க வைக்கின்றன. இரண்டு குழந்தைகள் தினமும் ட்ரெக் ஒன்று  ஸ்பீட் பிரேக்கரில் ஏறும் போது விழும் பிஸ்கட்டுகளுக்காக காத்திருக்கிறார்கள். ஒருநாள் வண்டியில்  இருந்து

பிஸ்கட்டுகள் விழுவதே இல்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வரும்போது 
ட்ரெக் பின்னால் நகர்ந்து வந்து மீண்டும் ஸ்பீட் பிரேக்கில் ஏறி ஒன்றிரண்டு 
பிஸ்கட்டுகளை உதிர்க்கிறது...கண்ணாடியில் பார்த்து ட்ரெக் டிரைவர் புன்னகைக்கிறார்...


சமுத்ரா