இந்த வலையில் தேடவும்

Tuesday, November 29, 2011

கலைடாஸ்கோப் -45

லைடாஸ்கோப் -45 உங்களை வரவேற்கிறது.

ஒன்று
======


Good project management is not so much knowing what to do and when, as knowing what excuses to give and when.

ஒரு மீட்டிங்-கின் போது எங்கள் மேனேஜர் 'I have been managing this project for...' என்று சொல்வதற்குப் பதிலாக 'I have been damaging this project' என்று சொல்லி விட்டார்.உண்மையை சொல்ல வேண்டும் என்று சொன்னாரா இல்லை நாக்கு குழறி விட்டதா தெரியவில்லை.மேனேஜர் -களுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே உள்ள உறவு மாமியார்-மருமகள் உறவு போல எப்போதும் உராய்வுகள் நிறைந்ததாகவே இருக்கிறது. அவன் தான் சரியில்லை என்று இவனும் இவன் தான் சரியில்லை என்று அவனும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வது!

உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒன்று: இன்னொருவரைப் பற்றிக் கவலைப்படாமல் மாங்கு மாங்கு என்று தன் வேலையை (மட்டும்)பார்க்க வேண்டும் என்ற மனோபாவம் கொண்டவர்கள். இன்னொன்று, தான் வேலை செய்யாமல் பிறரை நிர்வாகம் மட்டும் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள். இந்த இரண்டு வேலைகளில் எது சுலபம் எது கடினம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்லுவார்கள். மேனேஜரைக் கேட்டால் பத்து பேரை கட்டி மேய்க்கும் வேலை தான் சவாலானது என்று சொல்வார். தொழிலாளியைக் கேட்டால்
'அவரை ஒருநாள் நாங்கள் செய்யும் வேலையை செய்து பார்க்கச் சொல்லுங்க; அப்ப தான் எங்க கஷ்டம் புரியும்' என்று சொல்வார்கள்.

மேனேஜரைப் பற்றி கேலியாக இப்படி சொல்வார்கள் 'ஒரு பெண் ஒன்பது மாதத்தில் ஒரு குழந்தையைப் பெற்றால் ஒன்பது பெண்கள் சேர்ந்து ஒரு மாதத்தில் ஒரு குழந்தையைப் பெற முடியும் என்று நினைப்பவர்' ...மேலும், you can relax and take your own time..but make sure that the work is completed before this Friday!?! போன்ற அருமையான அர்த்தம் பொதிந்த வாசகங்களை உதிர்ப்பது மேனேஜர்களுக்கு மட்டுமே கைவந்த கலை.

ஆனால் நிர்வாகம் செய்வது என்பது ஆடுகளை மேய்ப்பது போல சுலபமான வேலை அல்ல. ஏனென்றால் ஆடுகள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். ஒன்றுக்குப் பின் ஒன்று வசியம் செய்து விட்டது போல சமர்த்தாக நடக்கும்.ஆனால் மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம், ஒவ்வொருவருக்கும் ஒரு குணம்!மேலும் இப்போதெல்லாம் தினம் பதினாறு மணிநேரம் வேலை வாங்கும் அடிமைமுறை நடைமுறையில் இல்லை. கொஞ்சம் ஏதாவது மாறுதலாக சொல்லிவிட்டாலே மோப்பக் குழையும் அனிச்சம் போல H .R இடம் போட்டுக் கொடுத்து விடுவார்களோ SKIP LEVEL MEETING வைத்து விடுவார்களோ என்று மேனேஜர்களும் இன்று பயப்பட வேண்டி இருக்கிறது.மேனேஜருக்கு கஸ்டமரிடம் பதில் சொல்ல வேண்டும்;திடீரென்று வந்து நாலுநாள் லீவ் கேட்கும் ஆளை Handle செய்ய வேண்டும். அடுத்த ரிலீசுக்கு Resource Management செய்யவேண்டும்;எதிர்பார்க்காமல் வந்து ரிசைன் செய்யும் ஆளுக்கு back -up பிளான் இருக்க வேண்டும்.இப்படி எத்தனையோ!

கடைசியாக : Good project managers know when not to manage a project.


இரண்டு
=========

தனியாக இருக்கும் போது பயமாக இருந்தால் உடனே லாப்-டாப்பை ஆன் செய்து ஏதாவது ஒரு பேய்ப்படம் பார்ப்பது வழக்கம்(?) . it works ! Law of Reverse Effects என்பார்கள். திகில் படம் என்பதற்கான வரையறை காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறி வருகிறது.மிகப் பழைய படங்களில் மண்டை ஓடு, எலும்புக் கூடு இதையெல்லாம் காட்டினால் போதுமானதாக இருந்தது. பிறகு வெள்ளைப்புடவை கட்டிக் கொண்டு வந்தால் போதும் அது தான் பேய் என்று நம்பி எடுக்கப்பட்ட படங்களும் இருந்தன. ஆனால் உண்மையிலியே ஜகன் மோகினியில் வரும் சிவப்புத் தலை வெள்ளை உடல் பேய்கள் கொஞ்சம் திகிலாகத் தான் இருக்கும்.

'வா அருகில் வா' பொம்மையைப் பார்த்து விட்டு அடுத்த மூன்று மாதம் ராத்திரியில் உச்சா போக அம்மாவை எழுப்பியது நினைவில் வருகிறது.இப்போதெல்லாம் (பெரும்பாலான) திரைப்படங்களில் ஆவி, பேய், போன்றவை Out -dated concepts ஆகி விட்டன. மக்கள் கற்பனைத் திறன் மிக்க திகில் கதைகளை எதிர்பார்க்கிறார்கள். சமீபத்தில் பார்த்த ஒரு படம்
WRONG TURN ! ஆங்கிலத் திகில் திரைப்படங்களில் பெரும்பாலும் ஒரு ஏழெட்டு பேர் (கல்லூரி மாணவர்கள் குறிப்பாக) ஒரு தனிமையான காடு, மலைப் பிரதேசங்களுக்கு விடுமுறையைக் கழிக்கப் புறப்படுவார்கள். முதல் பதினைந்து நிமிடங்களுக்கு அந்தப் பருவத்துக்கே உரிய குறும்புகளை செய்து கொண்டு குதூகலமாக இருப்பார்கள். அப்புறம் அங்கே வாழும் ஒரு முகமூடி சைக்கோ கொலைகாரனோ இல்லை மனித மாமிசம் தின்னும் விகாரமான மனிதர்களோ இருப்பார்கள். ஒவ்வொருவராக விதம் விதமாகக் கொலை செய்வார்கள். சில பேரை அப்படியே கத்தி ஒரே துண்டாக தலையை வெட்டி விடும். சில பேர் பாவம். பக்கத்தில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருக்க கைகால் கட்டி படுக்க வைத்து ஒவ்வொரு சதையாக அறுத்து வறுத்து ருசித்து சாப்பிடுவார்கள்.பக்கத்தில் பசியில் அழும் குழந்தைக்கு வாயில் கட்டைவிரலை வெட்டி சப்ப வைப்பார்கள்.சரி இதற்கு மேல் வேண்டாம். கடைசியில் ஒருத்தரோ இரண்டு பேரோ எப்படியோ அந்த ஆபத்தில் இருந்து தப்பி வெளியே வருவார்கள்.SAW போன்ற திகில் படங்களில் ஒருவரை எத்தனை விதமாக Creative ஆக சாகடிக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்திருப்பார்கள்.

உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒரு விதத்தில் Cannibal தான் என்று உளவியல் சொல்கிறது .அதாவது மனிதன் உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் தன் இனத்தின் மாமிசத்தை ஒருமுறையாவது சாப்பிட்டு ருசி பார்க்கவேண்டும் என்ற ஆழ்மன ஆசை இருக்கிறதாம். காதலில் ஈடுபடும் இருவர் LOVE BITE செய்வதும், partner இன் உடம்பை ஈரமாக்குவதும் இந்த ஆழ்மன ஆசையின் வெளிப்பாடுகள் தானாம்.சரி இந்த டாபிக் எனக்கு ஒருமாதிரி இருக்கிறது. முழுதாக முடிக்கக் கூடத் தோன்

மூன்று
=======

விஜய் டி.வி. யின் ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி பார்த்திருக்கிறீர்களா? போட்டியாளர்களில் ஒருவருக்கு ஒரு வார்த்தை கொடுக்கப்படும். அவர் தன்னுடைய பார்ட்னருக்கு தொடர்புடைய ஒற்றை வார்த்தை க்ளூ-க்களைக் கொடுத்து அவரை சரியான விடையை ஊகிக்க வைக்க வேண்டும். கண்டிப்பாக தமிழ் வார்த்தைகளைத் தான் உபயோகிக்க வேண்டும். அவ்வப்போது அந்த நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட காமெடிகள் நடக்கும்.

ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தை 'வகுப்பு'. இதற்குத் தொடர்புடைய ஒருசொல் வார்த்தைகளை சொல்லி பதிலை ஊகிக்க வைக்க வேண்டும். அதிக பட்சம் மூன்று க்ளூ!

பெண் 1 : பல்லி (அவர் சொல்ல நினைத்தது பள்ளி!)
பெண் 2 : பூரான் ?
பெண் 1: நடப்பது (பள்ளியில் நடப்பது வகுப்பு)
பெண் 2 : கரப்பான்பூச்சி?
பெண் 1 : புத்தகம்
பெண் 2: புழு (புத்தகப் புழுவாம்!)

நிகழ்ச்சி நடத்துபவர்: இதுக்கு தான் தமிழ்ல ல, ள எல்லாம் சரியா படிச்சுட்டு வரணும்கறது.

சில வார்த்தைகள் நமக்கு இயந்திரத்தனமாக வேறு ஒரு வார்த்தையுடன் இணைப்பைத் தருகின்றன. கடல் என்றால் நம்மில் நிறைய பேர் அடுத்த வார்த்தை அலை என்று தான் சொல்வோம்.இதே போல எதிரெதிரான விஷயங்கள் எப்போதும் ஒட்டிக் கொண்டே இருக்கின்றன. (வார்த்தைகளில்) நண்பன்-எதிரி , இரவு-பகல், வானம்-பூமி, இன்பம்-துன்பம்.

வார்த்தை இணைப்பு என்பதை மூளை பல வழிகளில் செய்கிறது. சில உதாரணங்கள்:

எதுகை : மயில் -குயில்,பட்டி-தொட்டி
மோனை : ஆடி- அமாவாசை,சூடு-சொரணை
உறவு : அம்மா- அப்பா, சித்தி-சித்தப்பா
பாகம் : கடல் - அலை, மரம்-இலை
எதிர்: சிரிப்பு -அழுகை, ஆண்-பெண் ,குண்டு-ஒல்லி
பட்டப்பெயர் : நிழல்கள் -ரவி, வால்டர்- வெற்றிவேல்,வெண்ணிற ஆடை- நிர்மலா
பணி : கடிகாரம்- நேரம், உழவன் -விவசாயம்
உணர்ச்சி : பேய் -பயம், நாய் -நன்றி
உணவு : இட்லி -சாம்பார் , பூரி-கிழங்கு , சரக்கு-ஊறுகாய் (?)

(இன்னும் உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்)

இந்த Association பெரும்பாலும் எல்லாருக்கும் இப்படி தான் இருக்கும். ஒருவர் எந்த அளவு நார்மல் என்று இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். உதாரணமாக,டாக்டர் என்று சொன்னால் மருந்து, ஊசி, நர்ஸ்,ஸ்டெதஸ்கோப் இப்படி எதையாவது சொல்ல வேண்டும். சாமியார் என்று சொன்னால் ஆசிரமம், காவி, அருள்வாக்கு, ரஞ்சிதா என்று எதையாவது சொல்ல வேண்டும். டாக்டர் என்றால் கேரம்போர்ட் என்றோ சாமியார் என்றால் டைனோசர் என்றோ சம்பந்தம் இல்லாமல் உளறினால் ஒன்று அவர் ஜோக் செய்ய வேண்டும்.இல்லை Something Wrong !

ஒருவர் ஒரு வார்த்தையை எதனுடன் இணைக்கிறார் என்பதை வைத்துக் கொண்டு அவரை எடை போடமுடியும். உதாரணமாக பொங்கல் என்று சொன்னதும் தை என்றோ தீபாவளி என்றோ சொன்னால் அவர் விழாக்களை விரும்புபவர் என்று ஊகிக்கலாம். அனால் முந்திரிப்பருப்பு என்றோ அன்னபூர்ணா என்றோ சொன்னால் அவர் சரியான தீனிப்பண்டாரம் என்று அர்த்தம்.
சரி அம்மா என்றால் பெரும்பாலும் எல்லாரும் அப்பா என்றோ அன்பு என்றோ பாசம் என்றோ குழந்தை என்றோ சொல்வார்கள். சரிதானே?

என்னது? உங்களுக்கு அம்மா என்றதும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஞாபகம் வருகிறதா? கைகொடுங்கள்..உங்களுக்கு அரசியலில் சேர நேரம் வந்துவிட்டது.

நான்கு
======

சில பேருக்கு சாப்பாடு சூடாக இருந்தால் தான் உள்ளே இறங்கும். எங்கள் சொந்தக்காரர் ஒருத்தர் இருக்கிறார். காபி சுடச்சுட இருக்க வேண்டும் அவருக்கு.நாமெல்லாம் அப்படிக் குடித்தால் நாக்கு வெந்து விடும்! கொஞ்சம் சூடு குறைந்து இருந்தாலும் தயவு பார்க்காமல் தரையில் வீசி விடுவார். சாப்பாடு சூடாக இல்லை என்று ஹோட்டலில் சர்வருடன் சண்டை போடும் சிலரை நாம் பார்த்திருப்போம்.சூடு என்பதை ஏழாவது ருசி என்பார்கள் சிலர்.என்னைப் போன்ற சில பேருக்கு அப்படியே Opposite ! சூடு என்பது உணவின் ருசியை மறைத்து விடுகிறது என்று நம்பும் ரகம்.

மீன்குழம்பு கொதிக்கக் கொதிக்க சாப்பிடுவதை விட நேத்து வைத்த மீன்குழம்பு தான் ருசியாமே? வெஜிடேரியன் என்பதால் இதை சரிபார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.ஆனால் இங்கே பிசிபேளே பாத் என்ற ஒரு சமாச்சாரம் இருக்கிறது.பிசி என்றால் சூடு என்று அர்த்தம். ஆனால் எனக்கு என்னவோ அது ஆறி இருந்தால் தான் மிகவும் ருசிக்கிறது.

ஒரு பெண் தன் கணவனுக்கு தினமும் கீரைக்கறி செய்து போட்டாளாம்.(வறுமை பாவம்!) ஒரு நாள் அவன் கோவித்துக் கொண்டு 'என்னடி தினமும் இந்த கருமம் தானா' என்று அதை அப்படியே சுவரில் தூக்கி எறிந்து விட்டானாம். கோவித்துக் கொண்டு வெளியே போனவன் சாயங்காலம் வயிறு காய்ந்து திரும்பி வந்து 'செவுத்துக் கீரையை வழிச்சுக் கொட்டடி செவுட்டு வெள்ளாட்டி' என்றானாம். ஆம். இந்த அனுபவம் நமக்கும் ஏற்பட்டிருக்கும். காலையில் என்ன இன்னிக்கும் உப்புமா தானா என்று சலித்துக் கொண்டு சாப்பிடாமல் போய் விட்டு சாயம்காலம் திரும்பி வந்து 'அந்த உப்புமா இருந்தா போடேன்' என்று அசடு வழிந்த தருணங்கள் நமக்கு இருந்திருக்கும். சாயங்காலம் உப்புமா ஆறிப்போய் இன்னும் சுவையாக இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஐந்து
======

சில பேர் 'நான் கடைசி வரையில் ஒரு மாணவனாக கற்றுக் கொண்டே இருக்க விரும்புகிறேன்' என்று சொல்வார்கள். இது எப்போதும் உண்மை இல்லை. சில பேர் உண்மையிலேயே வயதை மறந்து எதையாவது புதிதாகக் கற்றுக் கொண்டே இருப்பார்கள். எங்கள் அத்தை ஒருவருக்கு 75 + வயது ஆகிறது. தினமும் ஒரு கீர்த்தனையாவது மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற உறுதியில் இருக்கிறார் இன்னும். 'பாவயாமி' ல முகாரி பல்லவி மறந்துருச்சு , ஆரபிக்கு நிஷாதம் வருமா என்று எதையாவது ஆர்வக்கோளாறில் கேட்டுக் கொண்டே இருப்பார்.

வயது ஏற ஏற கற்றுக் கொள்ளும் ஆர்வம் குறைவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.ஒன்று உடல் சார்ந்தது. புத்தகத்தை விரித்தால் கண் சொக்கும். கால் மரத்துப் போய் விடும். முதுகு வலிக்கும் இப்படி. மன ரீதியான காரணம் இதையெல்லாம் படித்து என்ன ஆகப் போகிறது என்ற விரக்தி.என்னோடு படித்த கடைசி ரேங்க் வாங்கியவன் ,எல்லாப் பாடத்திலும் ஃபெயில் ஆனவன் எல்லாம் ஃபாரினில் செட்டில் ஆகி இருக்கும் போது நான் தேவையில்லாமல் Godel's incompleteness theorem , Space time curvature , சங்க இலக்கிய வரலாறு என்றெல்லாம் ஏன் படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற விரக்தி. சரி ஒரு கட்டத்துக்கு மேல் எக்ஸாம் ஹாலில் உட்காரவும் முடிவதில்லை.இஞ்சினியரிங்-இல் சுமார் ஐம்பது பேப்பர்களை மூன்று மணிநேரம் உட்கார்ந்து எழுதிய உடம்புக்கு இப்போது பேங்க் எக்ஸாம் -இரண்டு மணிநேரம் உட்கார முடிவதில்லை. ஒருவரை , அவரது திறமைகளை மூன்று மணிநேரம் அவர் உட்கார்ந்து எழுதும் விடைகளை வைத்து எடை போடும் அமைப்பு எனக்குப் பிடிப்பதில்லை.மேலும் இப்படி எல்லாம் கேள்விகள் வந்தால் அதைப் பொறுமையாகப் பிரித்து விடை கண்டுபிடிக்கும் பொறுமையும் இல்லை :-(
எனவே முதல் கேள்விக்கு A எழுதினோமா இதற்கு C எழுதலாம் என்ற ரேஞ்சில் தான் எழுதி விட்டு வந்தேன்.இதையும் மீறி எனக்கு பேங்கில் வேலை கிடைத்தால் அது போன ஜென்மப் புண்ணியமாகத்தான் இருக்கும்.

ஆறு
=====

ஒரு கவிதை :-

தான் இருக்கும் பாத்திரத்தின்
வடிவத்தை எடுத்துக் கொள்ளுமாம் தண்ணீர்- சரிதான்
கீழே ஊற்றியதும்
பிரபஞ்சத்தின் வடிவத்தை எடுத்துக் கொள்ளும்
ஆசையில் விரைந்து ஓடுகிறது!

ஏழு
====

|அவசரத்துக்கு வேறு ஜோக் கிடைக்கவில்லை.மன்னிக்கவும்|

ஒருநாள் ஹெல்த் அதிகாரி ஒருவர் விவசாயி ஒருவருக்கு உள்ளாடை அணிவதன் நன்மைகளை விளக்கினார்.

'பாருப்பா , ரெண்டு நன்மை இருக்கு, ஒண்ணு, இது ரொம்ப சுத்தமானது, இன்னொன்னு இது வெதுவெதுப்பா இருக்கும்"

அதிக வற்புறுத்தலுக்குப் பிறகு விவசாயி அதை அணிந்து கொண்டான். சிறிது நேரம் கழித்து அவனுக்கு இயற்கையின் அழைப்பு வந்தது. புதர்ப்பக்கம் ஒதுங்கினான்.ஆனால் பழக்கதோஷத்தில் உள்ளாடையைக் கழற்ற மறந்து போய் விட்டான்.

மேட்டர் முடிந்ததும் திரும்பிப் பார்த்தான். 'அட அவரு சொன்னது நெசம் தான் இது உண்மையிலேயே சுத்தமானது' என்று நினைத்துக் கொண்டான்.அப்புறம் தன் ட்ராக்டரில் போய் உட்கார்ந்தான் .இப்போது 'அட அவரு சொன்னது இன்னொன்னும் நெசம் தான்..எவ்வளவு கதகதப்பா இருக்கு' என்றான்.


முத்ரா



Tuesday, November 22, 2011

அணு அண்டம் அறிவியல் -53

அணு அண்டம் அறிவியல் -53 உங்களை வரவேற்கிறது.


முதன்முறை கேட்கும் போது ஒரு கருத்து உங்களுக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றவில்லை என்றால் பின்னர் அது வெற்றி பெறுவதற்கு எந்த சாத்தியமும் இல்லை -ஐன்ஸ்டீன்.


INVISIBILITY - யின் முடிவுரையைப் பார்த்து விட்டு பிரபஞ்சம் பற்றிய நம் உரையாடல்களைத் தொடரலாம்.


ஹோலோக்ராம் (hologram ) என்பது ஒருவிதமான புகைப்படம்.ஆனால் அது சாதாரண ஒளியை வைத்து எடுக்கப்படாமல் லேசரை வைத்து எடுக்கப்படும்.ஹோலோக்ராமின் சிறப்பு என்ன என்றால் அதன் புகைப்படங்கள் 3D விளைவு தரும்படி இருக்கும்.நிறைய புத்தகங்களில் ஹோலோக்ராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.சில நாடுகளின் கரன்சியில் கூட இது இருக்கும்.ஒரு சக்திவாய்ந்த லேசர் ஒளிக்கற்றையை இரண்டு கற்றைகளாகப் பிரிக்கிறார்கள். ஒரு புகைப்படப்பிலிம் மீது ஒரு பகுதி பட்டு அதை ஒளிரச் செய்கிறது.பிரிந்து சென்ற இன்னொரு ஒளிக்கற்றை ஒரு கண்ணாடியால் எதிரொளிக்கப்பட்டு மீண்டும் அதே பிலிம் மீது பட்டு ஒளிருகிறது. இரண்டு ஓளிக்கற்றைகளின் குறுக்கீடு (INTERFERENCE)விளைவு காரணமாக இப்போது பொருளின் முப்பரிமாண பிம்பம் நமக்குக் கிடைக்கும். சாதாரண ஃபோட்டோவில் ஒருவரை ஒரே ஒரு கோணத்தில் தான் பார்க்கலாம். ஆனால் ஹோலோக்ராமில் நிஜத்தில் பார்ப்பது போலவே அவரின் வெவ்வேறு கோணங்களைப் பார்க்க முடியும்.சரி இதை வைத்துக் கொண்டு எப்படி ஒருஆளை மறைப்பது?


ஒரு ஆளுக்கு முன்னால் கச்சிதமாக அவர் அளவே உள்ள ஒரு ஹோலோக்ராபிக் திரையை வைக்க வேண்டியது.அவருக்குப் பின்னால் இருக்கும் காட்சிகளை (அவரால் மறைக்கப்படும் காட்சிகளை மட்டும் ) ஹோலோக்ராபி மூலம் படம் எடுத்து இப்போது திரையில் அதை ப்ராஜெக்ட் செய்ய வேண்டியது.அந்த பிம்பம் 3D பிம்பம் என்பதால் இப்போது அந்த ஆள் நம் கண்களில் இருந்து மறைந்து விட்டது போலத் தோன்றும். துணியில் உள்ள ஓட்டையை மறைக்க அதே மாதிரி உள்ள துண்டுத் துணி ஒன்றை அதன் மீது ஒட்டித் தைக்கிறோமே அது போல.இப்போதெல்லாம் திரையே தேவையில்லை.வெற்றிடத்த்தில் கூட ஹோலோக்ராம் இமேஜை ஒளிரச்செய்ய முடியும்!இது ஒளியானது அந்த ஆளை ஊடுருவிச்சென்று விட்டதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கும்.

Holographic principle என்று ஒரு தத்துவம் இயற்பியலில் இருக்கிறது.எப்படி சினிமா திரை இரண்டு பரிமாணமாக இருந்து கொண்டு உள்ளே முப்பரிமாணக் காட்சிகளைக் காட்டுகிறதோ ,அதேபோல நம் பிரபஞ்சத்தை ஒரு ஹோலோக்ராபிக் ஸ்டிக்கர் என்கிறது இந்த தத்துவம்.The Mirror என்ற பேய்ப்படம் பார்த்திருக்கிறீர்களா? இரண்டு பரிமாணம் என்று நாம் நினைக்கும் கண்ணாடிகளுக்குள் ஒரு பெரிய உலகம் இருக்கிறது என்று சொல்கிறது அந்தப்படம். ஹீரோ சும்மா இருக்காமல் ஒரு பாழடைந்த கட்டிடத்துக்கு சென்று அங்கே ஒரு கண்ணாடி மட்டும் தூசு படியாமல் இருப்பதைப்பார்க்கிறார்.அதை நோண்டி உள்ளே இருந்த பேய்களை உசுப்பி விட்டுவிடுகிறார்.கண்ணாடி உலகத்தில் இருந்த பேய்கள் வெளியே வந்து ஹீரோவையும் அவன் குடும்பத்தையும் பயமுறுத்தும்.கடைசியில் எல்லாக் கண்ணாடிகளையும் பெயிண்ட் பூசி மறைப்பார்கள்; தெருவில் போட்டு உடைப்பார்கள். கடைசியில் ஹீரோ பேய்களை அழிக்க மாட்டார்.ஹீரோ கண்ணாடி உலகத்துக்குள் புகுந்து பேயாகவே மாறி விடுவார்.( Objects in the mirror are closer than they appear என்பது படத்தில் டைட்டில் லைன்!)

இந்தத் தத்துவத்துக்கு இது மிகச்சரியான உதாரணம் இல்லை என்றாலும் Black hole entropy என்று நமக்குத் (எனக்குத்) தெரியாத டாபிக்கில் எல்லாம் ஆழம் தெரியாமல் காலை விட விரும்பவில்லை. சுருக்கமாக சொல்வது என்றால் ஒரு முப்பரிமாண பரப்பைப் (பிரபஞ்சம் உட்பட)பற்றிய எல்லா விஷயங்களும்அதன் இருபரிமாண விளிம்பில் பூசப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறது இந்தத்தத்துவம்.உதாரணமாக ஒரு வீட்டுக்குள் என்ன நடக்கிறது (சண்டைபோடுகிறார்களா, காதல் செய்கிறார்களா, பாத்திரங்களை எடுத்து வீசிக்கொள்கிறார்களா) என்று சுவரில் தெரியும் அவர்களின் 2-D நிழலை வைத்தே சொல்லி விடலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் ,மனைவி ஒரு கத்தியை எடுத்து கணவனுக்கு பக்கவாட்டில் அசைத்தாலும் நிழலைப் பார்ப்பவர்களுக்கு கணவனைக் கத்தியால் குத்தி விட்டது போலத் தவறாகத் தோன்றும்)இதைப் பற்றி இன்னும் தெரிய வேண்டும் என்றால் ஸ்டீபன் ஹாகிங் அவர்களுக்கு மெயில் செய்து கேட்கவும்.
S.W.Hawking@damtp.cam.ac.uk என்னை விட்டு விடவும்


ஒரு ஆளை சுலபமாக மறையச் செய்ய இன்னொரு வழி அவரை சில உயர்ந்த பரிமாணங்களுக்கு (higher dimensions ) அனுப்புவது.உதாரணமாக 2D திரையில்(சினிமாவில்) எல்லாரும் நடித்துக் கொண்டிருக்கும் போது ஹீரோ திரையைக் கிழித்துக் கொண்டு நம்மை நோக்கி முப்பரிமாண உலகத்துக்கு வந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது அவரை திரையில் இருக்கும் இருபரிமாண மனிதர்கள் பார்க்க முடியாது.(படத்தில்) இரண்டு பூச்சிகள் ஒரு தட்டையான இருபரிமாண வெளியில் (நீளம் அகலம்)உலவுகின்றன.ஆனால் அந்த தட்டையான பரப்பின் முனையில் ஒரு மிகச் சிறிய அளவே உள்ளே மூன்றாம் பரிமாணம் உள்ளது (உயரம்)அதன் வழியே ஒரு பூச்சி பயணிக்குமானால் அதைப் பார்க்கும் இன்னொரு பூச்சியின் இருபரிமாண பார்வையில் இருந்து அது மறைந்து விடும்!


ஆவிகள், ஆத்மா போன்ற ஆராய்சிகளில் ஈடுபடும் சிலர் , (குறிப்பாக மரணத்துக்குப் பிறகு மனிதன் எங்கே போகிறான் என்று)அவை மனிதனால் காண முடியாத நான்காம் அல்லது ஐந்தாம் பரிமாணத்தில் இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.(எனவே நீங்கள் வீட்டில் தனியாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் உங்கள் தலைக்குமேல் குறைந்தபட்சம் நூறு பேய்களாவது சுற்றிக் கொண்டிருக்கலாம். (சும்மா தான் சொன்னேன்..எங்காவது இன்றைக்கு ராத்திரி பயந்து உச்சா போய் விடாதீர்கள்).


நவீன இயற்பியலின் முக்கியமான ஒரு கொள்கை ஸ்ட்ரிங் தியரி எனப்படும் இழைக்கொள்கை. பிரபஞ்சம் முழுவதும் ஊடாடும் ஒரு மெல்லிய இழை தன் அதிர்வுகளுக்கு (Vibrations )ஏற்ப எலக்ட்ரானாகவும் ப்ரோட்டானாகவும் பழனிச்சாமியாகவும் தெரிகிறது என்று நம்பும் கொள்கை. வயலினில் கம்பி ஒன்று தான். கம்பிக்கு அழுத்தம் கொடுக்காமல் போ(bow )வை தேய்த்தால் ஸா கேட்கிறது. கொஞ்சம் அழுத்தம் (இன்னொரு விரலால்)கொடுத்தால் ரி.இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் காந்தாரம்.இப்படி அந்த இழை (Whatever it is)தன் அதிர்வுகளுக்கு ஏற்ப துகள்களாக வெளிப்படுகிறது என்கிறார்கள்.சரி இந்த இழைக் கொள்கை கேட்பதற்கு பிரமாதமாக இருந்தாலும் இதை உண்மையாக்க நமக்கு குறைந்தபட்சம் பத்துக்கும் மேற்பட்ட பரிமாணங்கள் தேவைப்படுகின்றன.இன்றும் கூட சில விஞ்ஞானிகள் நான்கு பரிமாணங்களுக்கு மேல் பிரபஞ்சத்தில் இல்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.இது ஏன் என்றால் ஐந்தாம் பரிமாணத்தை ஒப்புக் கொண்டால் ஆத்மா, கடவுள் போன்ற விஷயங்களுக்கு எங்கே இடம் கொடுத்து விடுவோமோ என்ற பயம் தான்.








Theodor Kaluza

Theodor Kaluza என்ற ஜெர்மன் விஞ்ஞானி, ஐன்ஸ்டீனின் ஈர்ப்பியல் சமன்பாடுகளை எடுத்துக் கொண்டு அதற்கு ஒரு பரிமாணம் கூடுதலாக அளித்து ஐந்து பரிமாணத்தில் கணக்கிட்ட போது ஆச்சரியமாக மாக்ஸ் வெல்லின் மின்காந்த (ஒளி) சமன்பாடுகள் விடையாகக் கிடைத்தன. ஒளியையும் ஈர்ப்பையும் இணைக்கும் பாலமாக ஐந்தாம் பரிமாணம் இருக்கலாம் என்ற ரகசியத்தை இது வெளியிட்டது.குரங்கு பிடிக்கப் போய் பிள்ளையார் வந்த கதையாக சந்தோஷமடைந்து இதை அவர் ஐன்ஸ்டீனிடம் சொல்ல ஐன்ஸ்டீன் அவரை உற்சாகப் படுத்தி ஐந்தாம் பரிமாணம் பற்றிய கட்டுரைகளை சர்வதேச அறிவியல் அரங்குகளில் சமர்பிக்கச் சொன்னார்.ஆனால் வழக்கம் போல சில தலைமை விஞ்ஞானிகள், ஐந்தாவது பரிமாணமாவது மண்ணாவது , அப்படியே ஓடிப்போயிரு,ஏதோ ஐன்ஸ்டீன் சொன்னாரே என்று உன் பேப்பரை போர்டுக்கு எடுத்துக் கொண்டோம் என்று திட்டி அனுப்பி விட்டனர்! [நிறைய விஞ்ஞானிகள், இயற்பியல் வரலாற்றில் இப்படி அவமானத்தையும் வேதனையையும் அனுபவித்திருக்கிறார்கள். வெப்பவியக்கவியலின் விதிகளை வகுத்த போல்ட்ஸ்மான் என்ற ஒரு அரிய விஞ்ஞானியை தற்கொலை செய்ய வைத்து விட்டு சினிமா நடிகர்களை கௌரவிக்கும் சமுதாயம் இது!]

இயற்பியலின் புதிர்களை விடுவிக்க வேண்டும் என்றால் உயர்ந்த பரிமாணங்களை கருத்தில் கொண்டே ஆகவேண்டும் என்ற பார்வைக்கு கலூசாவின் கொள்கை வித்திட்டது.உதாரணமாக ஒளி என்பது இன்றுவரை மனிதனுக்குப் புதிராக இருக்கிறது.அது துகளா,அலையா , ஏன் அது எப்போதும் ஒரே வேகத்தில் செல்கிறது போன்ற புதிர்கள்.நம்மால் ஒருவேளை ஐந்தாம் பரிமாணத்தில் நுழைய முடிந்தால் ஒளியின் அத்தனை ரகசியங்களும் வெளிப்படுமோ என்னவோ!


இன்னொரு விஷயம் என்ன என்றால் உயர்ந்த பரிமாணத்தில் இருப்பவர் ஒருவர் தனக்குக் கீழே இருக்கும் பரிமாணங்களை ஒரே பார்வையில் பார்க்க முடியும். கீழே இருப்பவர் உயர்ந்த பரிமாணத்தில் இருக்கும் விஷயங்களைப் பார்க்க முடியாது. சுவாரஸ்யமான ஒன்று என்ன என்றால் காலம் நான்காம் பரிமாணம் என்றால் ஐந்தாம் பரிமாணத்தில் இருப்பவர் காலத்தையும் கடந்த காலம் எதிர்காலம் என்ற வேறுபாடு இன்றி சுலபமாகப் பார்க்க முடியும்.(Precognition )

சரி.. இப்போது back to பிரபஞ்சம்.


அறிவியலில் நிறைய கண்டுபிடிப்புகள் தற்செயலாகத்தான் நிகழ்ந்துள்ளன.(உ.தா: பென்சிலின்) இதுவும் அப்படித்தான்.


1964 ஆம் ஆண்டு அர்னோ பென்சியாஸ் மற்றும் ராபர்ட் வில்சன் என்ற இரு இயற்பியல் மாணவர்கள் எகோ சாட்டிலைட்டில் இருந்து வரும் ரேடியோ சிக்னல்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.எகோ சாட்டிலைட் என்பது டெலிவிஷன் சிக்னல்களைத் திருப்பி விடும் நாசாவின் ஒரு சிறிய சாட்டிலைட்.சிக்னல்களை உள்வாங்க மிகத் துல்லியமான ஒரு ஹார்ன் ஆன்டெனா அவர்களுக்கு உதவியது.சிக்னல்களின் தரம் துல்லியமாக இருக்க வேண்டும் என்று மிகக் கவனமாக அந்த ரேடியோ/மைக்ரோவேவ் ரிசீவர் வடிவமைக்கப்பட்டிருந்தது.ரிசீவரின் வெப்பம் தேவையில்லாத குறுக்கீடுகளை உருவாக்கும் என்று அது மிக மிகக் குறைந்த வெப்ப நிலைக்கு (4K )குளிரூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

இவ்வளவு செய்த போதும் அந்த ரிசீவர் ஒரு சீரான மங்கலான NOISE ஐ உள்வாங்கியபடி இருந்தது.இந்த ஆய்வை இரவில் செய்த போதும் அந்த சீரான மைக்ரோவேவ் துடிப்பு தொடர்ந்தது.ஆறுமாதங்கள் கழித்து (துடிப்பு தூரத்து விண்மீனில் இருந்து வந்திருக்கலாம் என்பதால்) செய்த போதும் அந்த சீரான மைக்ரோவேவ் துடிப்பு தொடர்ந்தது.ஆன்டெனாவில் இருந்த குப்பைகளை அகற்றி, எல்லாவற்றையும் மறுபடி சுத்தம் செய்து பார்த்தபோதும் துடிப்பு தொடர்ந்தது.இந்த தேவையில்லாத குளிர் மைக்ரோவேவ் சத்தம் (3K noise ) அவர்கள் ஆராய்ச்சிக்கு ஒரு தலைவலியாக இருந்தது.(சோப்பு போட்டு எத்தனை முறை தேய்த்தாலும் போகாத அழுக்கு போல).ஆனால் இந்தத் தலைவலி தான் பின்னாளில் தங்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தரப் போகிறது என்று அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.....




சமுத்ரா

Friday, November 18, 2011

அணு அண்டம் அறிவியல்-52

அணு அண்டம் அறிவியல்-52 உங்களை வரவேற்கிறது.

ஒரு மாறுதலுக்காக இன்று ஒரு வேறுபட்ட டாபிக்கைப் பார்ப்போம்.

INVISIBILITY - ஒரு பொருளை முற்றிலுமாக கண்ணில் இருந்து மறைத்தல்.இது நம் புராணக் கதைகளில் ரொம்ப ஜுஜுபி. கடவுள்கள் தவம் செய்யும் பக்தனுக்கு வரம் கொடுத்து விட்டு 'டஷ்' என்று மறைந்து போய் விடுவார்கள்.மாயாபஜார் போன்ற படங்களில் ஒரு மந்திரக் கம்பளத்தைப் போர்த்திக் கொண்டதும் சிலர் கண்களில் இருந்து மறைந்து விடுவார்கள்.இன்றும் கூட திரைப்படங்களில் தர்மசங்கடமான சூழ்நிலைகள் வரும்போது விவேக் 'எஸ்கேப்' என்று சொல்லிவிட்டு
'டஷ்' என்று மறைந்து போய் விடுவார். திரைப்படங்கள் 2D என்பதால் இது சுலபம்.விவேக் இருக்கும் Frame ஐத் தொடர்ந்து உடனடியாக விவேக் இல்லாத Frame -ஐ வைத்தால் (Sound effect டுடன்) மேட்டர் முடிந்தது.ஆனால் நிஜ உலகம் 3D ! இங்கே ஒரு பொருளை மாயமாக மறையவைக்க ரொம்பவே மெனக்கெட வேண்டும்.இதற்கு இயற்பியலின் விதிகள் அனுமதிக்கின்றனவா என்று பார்க்கலாம்.மாஜிக் நிபுணர் ஒருவர் ஒரு யானையை அப்படியே பார்வையாளர்கள் கண்ணில் இருந்து மறைய வைத்திருக்கிறார். இது ஒரு டிரிக் தான்.எப்படி என்று கடைசியில் பார்ப்போம்*

இயற்கை சில சமயங்களில் உயிரினங்களை அதன் எதிரிகளின் கண்களில் இருந்து சாமார்த்தியமாக மறைய வைக்கிறது. இதற்கு
Camouflage என்று பெயர். இந்த படங்களைப் பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன்.




ஒருவிதத்தில் பார்த்தால் நாமெல்லாம் முக்கால் குருடுகள். நிறைய மின்காந்த அலைகள் நமக்குத் தெரிவதே இல்லை. வெப்பத்தை நாம் உணர்கிறோமே தவிர பார்க்க முடிவதில்லை. எப்.எம்.ஸ்டேஷன்கள் , டி.வி. ஸ்டேஷன்கள் வெளியிடும் ரேடியோ அலைகள் நமக்குத் தெரிவதில்லை.மைக்ரோவேவ் அலைகள், புற ஊதாக் கதிர்கள் (UV ) அகச்சிவப்புக் கதிர்கள் (Infra red ) எக்ஸ்-ரே கதிர்கள் எதையும் நம்மால் பார்க்கமுடிவதில்லை.(நல்ல வேளையாக!) அப்படிப் பார்க்க முடிந்தால் உலகம் நமக்கு ஒரு இரண்டுவயதுக் குழந்தை கலர் பென்சில்களால் கிறுக்கிய காகிதம் போலத் தெரியும்!

சூரியன் தன் பெரும்பாலான ஆற்றலை கட்புலனாகும் (visible )அலைநீளத்தில் வெளியிடுகிறது (390 to 750 nm ) இந்த அலைநீளத்துக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படி நம் கண்கள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன.[ஒரு பொருள் வெளியிடும் மின்காந்த அலைகளின் அலைநீளம் (அல்லது அதிர்வெண்) அதன் வெப்ப நிலையை சார்ந்தது.சூரியனின் வெப்பநிலை 5780 கெல்வின் டிகிரி என்பதால் அது தன் ஆற்றலை 400 nm to 700 nm வரம்பில் வெளித்தள்ளுகிறது. எனவே பூமியில் பெரும்பாலான உயிர்களின் கண்கள் இந்த அலைநீளத்தை கிரகித்துக் கொள்ளும்படி வளர்ச்சி அடைந்துள்ளன. பூமியின் சில உயிரினங்கள் யூ.வி.அலைகளையும் பார்க்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.ஒரு நட்சத்திரம் நம் சூரியனை விட இன்னும் அதிகமான வெப்பநிலையில் இருந்தால் (ஒரு கோடி கெல்வின்கள்) அது எக்ஸ்-ரே கதிர்களை அதிகமாக வெளித்தள்ளும். அப்போது அந்த நட்சத்திரத்தை சுற்றும் கிரகத்தில் ஒருவேளை உயிர்கள் இருந்தால் அவைகளின் கண்கள் எக்ஸ்-ரே கதிர்களைப் பார்க்கும்படி பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும்.அவற்றின் தோல் எக்ஸ்ரே கதிர்கள் ஊடுருவாதபடி அமைக்கப்பட்டிருக்கும். அப்போது அவர்கள் எலும்புமுறிவின் போது உள்ளே பார்க்க (அதிக ஆற்றல் கொண்ட)காமா கதிர்களைப் பயன்படுத்தக்கூடும்.

எனவே INVISIBILITY யின் முதல் சாத்தியக்கூறு ஒரு பொருளை நம் கண்கள் க்ரகிக்கமுடியாத அலைநீளம் உடைய அலைகளாக மாற்றுவது.

சரி முதலில் ஒரு பொருளை நாம் எப்படி 'பார்க்கிறோம்' என்று பார்க்கலாம். ஒரு பொருளைப் பார்ப்பதற்கு கண்டிப்பாக ஒளி (ஒளிமூலம்)தேவை. (சுலபமாக ஒருபொருளை மறைய செய்வது என்றால் வெறுமனே லைட்டை அணைத்துவிடுவது ஒரு எளிய டெக்னிக்!) சில விலங்குகள் இருட்டில் பார்க்கும் என்று சொல்வது தவறு. ஒரு சிறிய அளவேனும் ஒளி இருந்தால் தான் அவைகளால் பார்க்க முடியும்.ஒளிமூலத்தில் இருந்து வரும் ஒளி பொருட்களின் மீது பட்டு சிதறடிக்கப்படுகிறது.இப்படி கோடிக்கணக்கான போட்டான்கள் (ஒளித்துகள்கள்) ஒரு பொருளின் மீது பட்டுச் சிதறி நம் கண்ணை அடைகின்றன.எப்படி வௌவால்கள் தங்களுக்குத் திரும்பி வரும் ஒலியை வைத்துக் கொண்டு பொருட்களை எடைபோடுகின்றனவோ அதேபோல நம் கண்கள் சிதறடிக்கப்படும் ஓளியை வைத்துக் கொண்டு பொருளின் முப்பரிமாண பிம்பத்தை மூளைக்கு அனுப்பி வைக்கின்றன. எனவே ஒளி ஒரு பொருளினால் சிதறடிக்கப்படாமல் அப்படியே முழுவதும் அதன் வழியே சைலண்டாக ஊடுருவ முடிந்தால் அதை நம்மால் பார்க்க முடியாது.ஒருவிதத்தில் இது ஒலிக்கு(sound ) opposite . ஒரு பொருள் ஒலியைத் தடுத்தால் அதன் பின்னே இருப்பவருக்கு அது கேட்காது.ஆனால் ஒரு பொருள் ஒளியைத் தடுத்தால் தான் அதை ஒருவர் பார்க்கமுடியும்.


சரி.

ஆட்டுக்குட்டி, ஐஸ்வர்யாராய் போன்ற திடப்பொருட்களில் அணுக்களும் மூலக்கூறுகளும் பீக்-அவரில் பயணிக்கும் நகரப்பேருந்துகள் போல நெருக்கமாக இடைவெளி இன்றி அடைக்கப்ப
ட்டிருக்கின்றன.அவற்றின் வழியே ஒளி நுழைந்து செல்வதற்கு முடிவதில்லை. எனவே மேலே படும் எல்லா ஒளியும் திரும்பி விடுகிறது.சுத்தமான தண்ணீர் ஓரளவு அந்தப்பக்கம் என்ன இருக்கிறது என்று காட்டுகிறது.இது ஏன் என்றால் தண்ணீரில் (அல்லது திரவங்களில்) மூலக்கூறுகள் அத்தனை நெருக்கமாக இருப்பதில்லை. கவிதை கருத்தரங்குகளில் மனிதர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேண்டாவெறுப்பாக உட்கார்ந்திருப்பதைப் போல மூலக்கூறுகளுக்கு இடையே நிறைய இடைவெளி இருக்கிறது.ஒளி இந்த இடைவெளி வழியே சுலபமாக உள்ளே புகுந்து போய் விடுகிறது. ஆனால் தண்ணீரின் மீது விழும் எல்லா ஒளியும் உள்ளே புகுந்து அந்தப்பக்கம் போவதில்லை.அதன் மூலக்கூறுகளால் சில போட்டான்கள் சிதறடிக்கப்பட்டு நம் கண்ணை அடைகின்றன.ஆனால் வாயுக்கள் சுத்தமாக நம் கண்களுக்குத் தெரிவதில்லை.இது ஏன் என்றால் முதலில் வாயுக்களில் மூலக்கூறுகள் மிக மிக விலகி மிக அதிக இடைவெளிகளுடன் அலைகின்றன . பெரும்பாலான ஒளி இந்த இடைவெளிகள் வழியே புகுந்து விடுகிறது. மேலும் வாயுக்களின் மூலக்கூறுகள் திரவ மூலக்கூறுகள் போல அவ்வளவு பெரிதாக இருப்பதில்லை.(அதிகபட்சம் இரண்டு மூன்று வாயு அணுக்கள் இணைந்து இருக்கும்)எனவே இந்த மூலக்கூறுகள் ஒளியின் இரண்டு முகடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் (அலைநீளத்தில்) சுலபமாக பொருந்தி விடுகின்றன.எனவே ஒளி கிரேட் எஸ்கேப்!

படிகத்தின் மூலக்கூறு அமைப்பு


சில திடப்பொருட்கள் சிலசமயம் ஓளியை அப்படியே தங்களுக்குள் கடந்து செல்ல அனுமதிக்கும். (படிகங்கள், கண்ணாடி) இது ஏன் என்றால் அவற்றின் ஒழுங்கான அடுக்கி வைக்கப்பட்ட மூலக்கூறு அமைப்பு (Crystal Structure )லைப்ரரியில் இரண்டு Rack -களுக்கு இடையே உள்ள இடைவெளியில் அந்தப்பக்கம் பார்க்க முடிவது போல இந்த அடுக்குகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் ஒளி புகுந்து சென்று விடுகிறது.ஆனால் ஒரு பொருள் நம் கண்களில் இருந்து முற்றிலும் மறைந்து போக வேண்டும் என்றால் அது ஒளிக்கு 100 % Transparent ஆக இருக்க வேண்டும் என்று தெளிவாகிறது.அதாவது தன்மீது விழும் ஓளியை நூறு சதவிகிதம் உள்ளே சமர்த்தாக அனுமதிக்க வேண்டும்.அதை கிரகித்துக் கொள்ளவோ திருப்பி விடவோ கூடாது.

இன்னொரு சாத்தியக்கூறு என்ன என்றால் அந்தப் பொருள் தன் மீது விழும் எல்லா ஒளியையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.(ஆனால் இப்போது பொருள் கருப்பாக இருக்கும்) ஆனால் ஒருபொருள் தன் மீது விழும் எல்லா ஒளியையும் அப்படியே நிரந்தரமாக கிரகித்துக் கொள்ள முடியாது. (அப்படி செய்தால் அது கருந்துளை(Black hole ) ஆகி விடும்) ஓளியை உள்வாங்கிக் கொள்ளும் பொருளின் எலக்ட்ரான்கள் குரங்குகள் தின்ற கொழுப்பில் உச்சிமரம் ஏறுவது போல அணுவின் உயர்ந்த ஆற்றல் மட்டங்களுக்கு சென்று அமர்ந்து கொள்ளும்.ஓர் அணுவில் எலக்ட்ரான்கள் இப்படி Excited state இல் வெகுநேரம் இருக்க முடியாது.தாங்கள் சாப்பிட்ட ஓளியை உமிழ்ந்து மீண்டும் பழைய நிலையில் சென்று அமர்ந்து கொள்ளும்.இப்போது உமிழப்பட்ட போட்டான்கள் (வேறு அலைநீளத்துடன்) பொருளில் இருந்து கடத்தப்படும்(கதிர்வீச்சு) .இப்படி மூலக்கூறுகள் தேவையில்லாமல் அலைக்கழிக்கப் படுவதால் கறுப்புப்பொருள் ஒன்று எளிதில் சூடடைந்து விடுகிறது.[இந்தத் தத்துவத்தில் தான் லேசர் வேலை செய்கிறது.ஒரு வாயுவை மிக அதிக ஆற்றல் கொடுத்து அதன் எலக்ட்ரான்கள் உயர் ஆற்றல்மட்டங்களுக்கு தாவும்படி செய்ய வேண்டியது.பிறகு இந்த எலக்ட்ரான்கள் மீண்டும் தங்கள் பழைய நிலைக்குத் திரும்பும் போது உமிழப்படும் எல்லா போட்டான்களும் ஒரே சமயத்தில் ஒரே வீச்சுடன் ராணுவ வீரர்கள் போல வரிசையாக வர ஆரம்பிக்கும்.லேசர் என்பது மிகவும் செறிவுபடுத்தபப்ட்ட ஒளி.]

[சரி. ஓளியை (ஆற்றலை) உள்வாங்கிய பொருள் அதை கதிர்வீச்சாக வெளியிட்டே ஆக வேண்டும். ஆனால் ஒரு கருந்துளைக்குள் போகும் ஒளி என்ன ஆகிறது?கருந்துளையின் அபார ஈர்ப்பு காரணமாக ஒரு சிறிய துமி** கூட அதிலிருந்து வெளியேற முடியாது.ஒருபுறத்தில் கருந்துளை தன் மீது விழும் எல்லா ஒளியையும் கிரகித்துக் கொண்டே இருக்கிறது. இன்னொருபுறம் அது வெளியேறும் வாசல் அடைக்கப்பட்டு விட்டது.இதற்கு விடையாக ஸ்டீபன் ஹாக்கிங், கருந்துளைகளில் இருந்து கூட கதிர்வீச்சு நடைபெறும் என்று அனுமானிக்கிறார் (Hawking 's radiation ) ]

ஓகே.

ஒரு பொருளை கண்களில் இருந்து மறைக்க இயற்பியல் ரீதியான இன்னொரு வழி, அதன் மீது விழும் அத்தனை ஒளியையும் தொடர்ந்து வளைத்து ஒளி அந்த பொருளை சுற்றிக் கொண்டு அந்தப்பக்கம் போவது போலச் செய்வது. இந்த வகையில் அந்தப் பொருளின் பின்னே என்ன இருக்கிறதோ அது நமக்குத் தெரியும்.அந்தப் பொருள் ஓளியை எதுவும் செய்யாததால் நம் கண்களில் இருந்து மறையும்.

ஒளி ஒரு ஊடகத்தில் இருந்து இன்னொரு ஊடகத்துக்கு செல்லும் போது (ஒருமுறை) வளையும் என்று நமக்குத் தெரியும். தண்ணீரில் அமிழ்த்தி வைக்கப்பட்ட ஸ்கேல் ஒன்று வளைந்து தெரிவது இதனால்தான். வெற்றிடத்தில் ஒளி ஹைவேயில் செல்லும் வாகனம் போல எந்தத் தடையும் இன்றி வேகமாகப் பயணிக்கிறது.அது அடர்த்தி அதிகம் உள்ள ஒரு ஊடகத்தில் நுழையும் போது அதன் அணுக்களால் தடுக்கப்பட்டு ஜனநடமாட்டம் நிறைந்த சந்தில் பயணிக்கும் வாகனம் போல வேகம் குறைகிறது.தூரத்து விண்மீனில் இருந்து வரும் ஒளி வெற்றிடத்தில் இருந்து நம் வளிமண்டலத்தில் நுழையும் போது இந்த Refraction , ஒளிவிலகல் நடைபெறுகிறது. இது அந்த விண்மீனின் இருப்பிடத்தைப் பிழையாகக் காட்டும் என்பதால் இந்த விளைவை கான்சல் செய்யும் படி வானவியலாளர்கள் தங்கள் டெலஸ்கோப்புகளை அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள். ஒரு விண்மீன் தொடுவானத்துக்கு மிக அருகில் இருந்தால் அப்போது அதை தொலைநோக்கியில் பார்த்து ஆராய்ச்சி செய்வதை கூடுமான அளவு தவிர்ப்பார்கள்.

ஒளி ஒரு அடர் ஊடகத்தில் நுழையும் போது எந்த அளவு வேகம் குறைகிறது என்பதை Refractive Index என்ற எண்ணின் மூலம் அளவிடுவார்கள்.இது எப்போதுமே ஒன்றைவிடப் பெரிய பாசிடிவ் எண்ணாக இருக்கும். உதாரணம் காற்றின் ஒளிவிலகல் எண் 1 .0003 ,நீருக்கு 1 .33 ..
Meta Material எனப்படும் ஒரு கற்பனை வஸ்து எதிர்மறை ஒளிவிலகல் எண்ணுடன் இருக்கும் என்கிறார்கள் (Negative Refractive Index )இதன் வழியாக செல்லும் ஒளி ஒரு கண்ணாடியைப் போன்றோ அல்லது தண்ணீரைப் போன்றோ வளைக்கப்படாமல் படத்தில் இருப்பது போல வளைக்கப்படும். மெட்டா திரவத்தில் கை வைத்தால் உங்கள் கை முறிந்து இடதுபக்கம் தொங்குவது போலத் தெரியும்) எனவே இந்த மெட்டா மெட்டீரியல்களைப் பயன்படுத்தி தகுந்த தொழில்நுட்பத்துடன் ஒரு பொருள் தன்மீது விழும் ஒளியைத் தொடர்ந்து வளைக்கும்படி செய்து அந்த பொருளை ஒளி சுற்றிக்கொண்டு செல்லும்படி செய்தால் அந்தப் பொருள் மாயப் போர்வை போர்த்திக் கொண்ட ஹாரிபாட்டர் போல நம் கண்களில் இருந்து முற்றிலுமாக மறையும்.

INVISIBILITY க்கான மற்ற சாத்தியங்களை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.



* யானை எப்படி மறைந்தது என்றால்: யானையை ஒரு கூண்டுக்குள் வைக்க வேண்டியது. கூண்டின் தடிமனான கம்பிகளுக்கு பின்னால் நீண்ட மெல்லிய கண்ணாடிகளை மறைத்து வைக்க வேண்டியது.மாகிக் செய்பவர் கூண்டை துணியால் மூடும் மிகச் சிறிய நேர இடைவெளியில் இந்த கண்ணாடி ஸ்லாப்-கள் பார்வையாளர்களை நோக்கி திரும்பி 45 டிகிரி சாய்த்து வைக்கப்படும். கூண்டுக்கு மேலும் பின்னாலும் இதே போன்ற கண்ணாடிகள் உண்டு.படத்தில் காட்டியிருப்பது போல இந்த கண்ணாடிகள் கூண்டுக்கு பின்னால் இருக்கும் பிம்பங்களை பிரதிபளித்து பார்வையாளர்கள் அதைப் பார்ப்பார்கள். கூண்டின் கம்பிகள் தெரியும். அதற்கு இடையே உள்ள இடைவெளிகளில் கூண்டின் பின்னால் இருக்கும் பொருட்கள் தெரியும்.ஆனால் யானை மட்டும் சாமார்த்தியமாக கண்ணாடிகளால் மறைக்கப்படும்.
** சிலர் அறிவியலை தமிழில் மொழிபெயர்க்கும் போது PARTICLE என்பதற்கு துகள் என்று சொல்லாமல் துமி என்று சொல்கிறார்கள்.(உதாரணம்: இயற்பியலின் தாவோ)துமி என்பது துகளை விட சிறியது .திரவத்தின் சிறிய பகுதியை துளி என்பது போல திடத்தின் சிறிய பகுதியை துமி!இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் கம்பர்.அரசர் கம்பரையும் ஓட்டக்கூத்தரையும் தனித்தனியே ராமாயணம் எழுதும்படி பணிக்கிறார். சிறிது காலம் கழித்து இருவரையும் அழைத்து இதுவரை எத்தனை எழுதி இருக்கிறீர்கள்? என்று கேட்கிறார். ஒட்டக்கூத்தர் கடல் காண் படலம் வரை எழுதி இருப்பதாக சொல்கிறார்.கம்பரோ இன்னும் ஒருபாட்டு கூட எழுதியிருக்கவில்லை. இருந்தாலும் தன்மானத்தை இழக்க விரும்பாமல் தான் 'திருவணைப் படலம் 'வரை எழுதி இருப்பதாகச் சொல்கிறார். அப்படியானால் அதில் இருந்து ஒரு பாட்டுப் பாடுங்கள் என்று அரசன் கேட்க 'குமுதன் என்னும் படைத்தலைவன் வேரோடு மலையைப் பிடுங்கி கடலில் தூக்கி வீசியபோது நீர்த்துமிகள் தெளித்தன, அதைக்கண்டு வானவர் இன்னொரு முறை அமுதம் வரும் என்று துள்ளினார்கள்' என்று பாடினார்.இதைக் கேட்டு ஒட்டக்கூத்தர் தமிழில் துமி என்ற வார்த்தையே இல்லை.எனவே நீங்கள் பதட்டத்தில் உருக்கட்டி பாடிய பாடல் இது என்று சாதிக்கிறார்.கம்பரோ கலைவாணியை மனதில் நினைத்துக் கொண்டு இந்த வார்த்தை கிராமப்புறங்களில் புழக்கத்தில் உள்ளது என்கிறார். இதை உண்மையா என்று சோதிக்க மூன்று பேரும் மாறுவேடத்தில் நகர்வலம் செல்கிறார்கள்.அப்போது சரஸ்வதி மோர் விற்கும் பெண்ணாக வந்து தன் குழந்தைகளிடம் “பிள்ளைகளே! சற்றுத் தள்ளிப்போய் விளையாடுங்கள். உங்கள் மீது மோர்த்துமி தெளிக்கப் போகிறது.” என்று கூறி கம்பரின் வாக்கை மெய்ப்பிக்கிறாள்.


சமுத்ரா

Tuesday, November 15, 2011

கலைடாஸ்கோப் -44

லைடாஸ்கோப் -44 உங்களை வரவேற்கிறது.

ஒன்று
=======

உலகில் பெரும்பாலான குழந்தைகள் மார்ச்-இல் இருந்து ஜூன் வரை உள்ள மாதங்களில் பிறக்கின்றன என்று சொல்கிறார்கள்.
(கோடைக்காலத்தில்) இது அவர்களுடைய பெற்றோர்கள் அதற்கு முந்தைய கோடையில் இணைந்திருக்கவேண்டும் என்பதை
தெளிவாக்குகிறது. 'லாஜிக்' கின் படி பார்த்தால் உலகின் பெரும்பாலான குழந்தைகள் குளிர்காலத்தில் தான் பிறக்க வேண்டும் (ஹி ஹி)மேலும் குளிர் அதிகம் உள்ள நாடுகளில் தான் மக்கள் தொகை அதிகம் இருக்க வேண்டும்.ஆனால் உல்டாவாக குளிர் அதிகம் உள்ள நாடுகளில் மக்கள் தொகை குறைவாக இருக்க வெய்யில் வாட்டி எடுக்கும் இந்தியா போன்ற நாடுகளில் ம.தொ. நிரம்பி வழிகிறது. இதற்கு விடையாக
ஓஷோவின் 'காமத்தில் இருந்து கடவுளுக்கு' புத்தகத்தில் (From Sex to Super consciousness) இருந்து ஒரு விளக்கம்:

"காமம் அல்லது பாலுணர்வுக்கும் சூரியனுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. காமத்தின் இலக்கணமான காமசூத்ரா வெப்ப நாடான இந்தியாவிலேயே தோன்றியது.மிக அதிக கற்பனைத்திறன் மிக்க பாலியல் கதைகள் அரேபியா போன்ற மிக சூடான பிரதேசங்களில் தான் தோன்றின.சூரியன் தன் அதிகபட்ச சக்தியில் இருக்கும்போது உங்கள் ஆசையும் தூண்டப்படுகிறது. சூரியன் மேகங்களால் மறைக்கப்பட்டோ பனி மூடியோ மப்பும் மந்தாரமுமாக இருக்கும் போது உங்கள் பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்கள் சரிவர வேலைசெய்வதில்லை. எனவேதான் மதங்கள் சூரியனை உயிர்களின் தந்தை என்று அழைக்கின்றன .அறிவியல் ரீதியாக இது சரி என்ற போதிலும் உளவியல் ரீதியாகவும் இது பொருந்தும்."


- இனிமேல் ஊட்டி கொடைக்கானலுக்கு ஹனிமூன் போனால் இரண்டு மூன்று நாட்களில் சென்னைக்கு திரும்பி வந்து விடுங்கள்.இங்கேயே இருந்தால் எத்தனை ரொமாண்டிக் ஆக இருக்கும் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள்.


இரண்டு
========

இரண்டு (ஆங்கிலத்) திரைப்படங்கள் பற்றி பேசலாம்.

The Enchanted :-


புராண கேரக்டர்கள் சிலர் (எமன், சித்ரகுப்தன் etc) நவீன உலகத்துக்கு வந்தால் என்ன நடக்கும் என்று திரைப்படங்கள் தமிழில் பார்த்திருக்கிறோம்.குழந்தைகளின் கார்டூன் உலகத்தில் வாழும் கேரக்டர்கள் நிஜ வாழ்க்கையில் வந்தால் எப்படி இருக்கும்?

சிட்னி இளவரசி ஜிசலே வும் இளவரசன் எட்வர்ட்-டும் காதலர்கள். எட்வர்டின் சித்தி சூனியக்காரி நரிசா அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் தன் சக்திகள் அழிந்து போய்விடும் என்பதால்
ஜிசலேவைக் கொல்ல முயற்சிக்கிறாள்.அவர்கள் திருமணத்துக்கு முன்னர் அவளைத் தனியாக அழைத்துச் சென்று ஒரு மாயக்கிணற்றுக்குள் தள்ளி விட்டு விடுகிறாள். அதில் விழும் ஜிசலே,இன்றைய நியூயார்க் நகரில் வந்து விழுகிறாள்.இதுவரை கார்டூனாக இருந்த ஜிசலே ,இப்போது நிஜப்பெண்ணாக
மாறுகிறாள்.நவீன உலகத்தின் கார்கள், கட்டிடங்கள் ,மனிதர்கள் இவற்றின் அறிமுகம் இல்லாதததால் மிகவும் சிரமப்படுகிறாள்.அவள் அணிந்திருந்த திருமண நகைகள் திருடப்படுகின்றன.இறுதியில் நல்ல மனம் கொண்ட ராபர்ட் என்ற (டைவர்ஸ் ஆன )ஒருவரை சந்திக்கிறாள்.

ராபர்ட்டின் மகள் மார்கனுக்கு அவளை மிகவும் பிடித்து விடுகிறது. தன் இளவரசன் எட்வர்ட் வரும்வரை தனக்கு அடைக்கலம் தரும்படி
ஜிசலே,ராபர்டைக் கேட்டுக் கொள்கிறாள்.இதை விரும்பாத ராபர்டின் காதலி நான்சி அவனுடன் சண்டை போட்டுக்கொண்டு வெளியேறுகிறாள்.சூனியக்காரி நரிசா, இளவரசியை கொல்ல ஒரு வில்லனை (காமெடியன்) நவீன உலகுக்கு அனுப்புகிறாள். அவன் ஜிசலேயைக் கொல்ல செய்யும் முயற்சிகள் காமெடி பீசாக முடிகின்றன.இது வேலைக்கு ஆகாது என்று
தானே அங்கே வருகிறாள் நரிசா . இளவரசன் எட்வர்டும் நவீன உலகத்துக்கு வந்து சேருகிறான்.இதற்கிடையில்
ஜிசலே-விற்கும் ராபர்ட் டிற்கும் மெல்லிய காதல் வளர்ந்து விட்டிருக்கிறது.

கார்டூன் இளவரசியும் கார்டூன் இளவரசனும் நிஜ உலகில் சந்திக்கிறார்கள்.ராபர்ட் -டிடம் விடை பெற்றுக்கொண்டு பிரிந்து செல்கிறார்கள். தங்கள் உலகத்துக்கு திரும்பி விடலாம் என்று இளவரசன் எட்வர்ட் சொல்ல ,ஜிசலே தான் இந்த நகரத்தை விரும்புவதாகவும் இங்கேயே இருக்கலாமே என்றும் கேட்டுக் கொள்கிறாள்.

ஜிசலே-எட்வர்ட் மற்றும் ராபர்ட்-நான்சி இரண்டு ஜோடிகளும் ஒரு டான்ஸ் பார்ட்டியில் சந்திக்கிறார்கள். எல்லாரும் தங்கள் ஜோடியை மாற்றி நடனமாடும்படி அங்கே ஒரு அறிவிப்பு வருகிறது . எட்வர்ட் நான்சியுடனும் ஜிசலே ராபர்டுடனும் இப்போது ஆடுகிறார்கள். இந்த புது ஜோடிகளுக்கிடையே கெமிஸ்ட்ரி (?) மலர்கிறது.அப்போது அங்கே வரும் சூனியக்காரி நல்லவள் போல வேடமிட்டு ஜிசலேவை விஷ-ஆப்பிள் ஒன்றைக் கடிக்க வைக்கிறாள். ஜிசலே மயக்கமடைந்து கீழே விழுகிறாள்.
இன்னும் ஒரு நிமிடத்தில் அவள் இறந்து விடுவாள் என்று எல்லாரையும் மிரட்டுகிறாள். இளவரசன் எட்வர்ட் உண்மையான காதலின் முத்தம் (true love 's kiss ) மட்டுமே அவளை காப்பாற்ற முடியும் என்று சொல்லிவிட்டு அவளை முத்தமிடுகிறான். ஆனால் இளவரசி கண் திறக்கவில்லை. நொடிகள் நகருகின்றன.இன்னும் பத்து வினாடிகளே இருக்கின்றன.சூனியக்காரி ஏளனமாகச் சிரிக்கிறாள்.எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருக்க, திடீரென்று ராபர்ட் எழுந்துபோய் அவளை முத்தமிடுகிறான். இளவரசி பிழைக்கிறாள். சூனியக்காரி கடைசியில் அழிகிறாள்.

ஜிசலே ராபர்டை மணந்து கொண்டு நியூயார்க்கிலேயே தங்கி விடுகிறாள். எட்வர்டை மணந்து கொள்ளும் நான்சி கார்ட்டூன் உலகத்துக்கு சென்று அங்கே மகிழ்ச்சியாக இருக்கிறாள் ;அலறும் தன் செல்போனை தூக்கி எறிகிறாள்!

-நாம் சில சமயம் இந்த நகர வாழ்க்கையை வெறுத்து கார்டூன் உலகுக்கு சென்று விடமாட்டோமா,பறக்கும் குதிரை ,மான்கள் இழுத்துச் செல்லும் ரதம், பேசும் பூனை,நமக்கு உடை அணிவிக்கும் குருவிகள், மந்திரக்கோல்,தங்க நீர்சீழ்ச்சி,சித்திரக்குள்ளன் இதையெல்லாம் பார்க்க மாட்டோமா என்று ஏங்குகிறோம். ஆனால் கார்டூன் கேரக்டர்கள் நம் உலகிற்கு வந்தால் நம் ரியலிஸ்டிக்- ஆன,இயல்பான வாழ்க்கைமுறையை விரும்பக்கூடும் ,இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்கிறது இந்த திரைப்படம்.

மூன்று
=======
The Evolution :-


ஒரு பெரிய விண்கல் பூமியில் விழுகிறது. உயிரியல் துறை பேராசிரியராக இருக்கும் இராவும் மண்வளத்துறையில் இருக்கும் அவர் நண்பர் ஹாரியும் அந்தப்பாறையை ஆராய்ச்சி செய்ய வருகிறார்கள்.அந்தப் பாறையில் இருந்து ஒருவிதமான நீல நிற திரவம் கசிகிறது.அதை தங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டு செல்கிறார் இரா. அந்த திரவத்தை லாபில் ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது அதில் நைட்ரஜனை ஆதாரமாகக் கொண்ட ஒருசெல் உயிரிகள் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார் .சில மணி நேரங்களிலேயே அவை பலசெல் உயிரிகளாகப் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. இரா, அரசாங்கத்துக்குத் தெரியாமல் தன்னுடைய ஆராய்ச்சியைத் தொடரலாம் என்று முடிவெடுக்கிறார்.மீண்டும் பாறையின் ஸ்பெசிமனை எடுக்க பாறை இருந்த இடத்துக்கு செல்லும் போது அதை அரசாங்க அதிகாரிகள் ஆக்கிரமித்து விட்டிருப்பதைப் பார்க்கிறார் இரா.அவரை உள்ளே விட மறுக்கிறார்கள் அதிகாரிகள்.

இதனிடையே பல செல் உயிரினங்கள் இரண்டாகப் பிரிந்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன. பேராசிரியர் இராவும், ஹாரியும் ஒருநாள் இரவு பாறை இருக்கும் சுரங்கத்துக்கு யாருக்கும் தெரியாமல் செல்கிறார்கள்.அங்கே சென்று பார்க்கும் போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கே பலவகையான மாமிசம் தின்னும் தாவரங்களும், விலங்குகளும் ஏகத்துக்கு வளர்ந்து விட்டிருக்கின்றன.அவை ஒன்றை ஒன்று தின்று உயிர் வாழப் பழகி விட்டிருக்கின்றன. எப்படியோ உயிரினங்கள் சுரங்கத்தை விட்டு வெளியே வந்து மனிதர்களைத் தாக்குகின்றன.

ஒரு பெரிய வெடிகுண்டைப் போட்டு அந்த வேற்றுக்ரக உயிரினங்களை அழிக்க அமெரிக்க ராணுவம் முடிவெடுக்கிறது.இங்கே இராவும் அவரது நண்பர்களும் உயிரினங்களை அழிக்க ரகசிய திட்டம் தீட்டுகிறார்கள். அந்த உயிரினங்கள் நைட்ரஜன் மூலங்களால் ஆனவை என்றும் செலினியம் என்ற தனிமம் மட்டுமே அவற்றை விஷம் போல அழிக்கவல்லது என்றும் இரா கண்டுபிடிக்கிறார்.லாபில் இருந்த உயிரி சாம்பிளின் மீது ஹாரி ஒரு எரிந்த தீக்குச்சியை தற்செயலாக வீச அது ஊதிப் பெருத்து வளர்ந்து விடுகிறது. வெப்பம் அந்த வேற்றுக் கிரக உயிரிகளின் பரிணாம வளர்ச்சிக்கு வெகுவாக துணை புரியும் என்றும் அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். ராணுவம் அந்த உயிர்கள் மீது அணுகுண்டு போடுவதை எப்படியாவது தடுக்க
வேண்டும் (இல்லையென்றால் அந்த உயிர்கள் பெருத்து உலகத்தையே அழித்துவிடும்)என்று(ம்) அவர்கள் முடிவெடுக்கிறார்கள். இதற்கிடையில் அந்த உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் ஒரு மனிதக்குரங்கு அளவுக்கு வந்துவிடுகின்றன.

நைட்ரஜன் வளர்சிதை மாற்றத்தை தடுக்கவல்ல செலினியம் அவர்களுக்கு 5000 காலன் தேவைப்படுகிறது.அதை எங்கே திரட்டுவது என்று எல்லாரும் கவலைப்பட, ஒரு மாணவன் அது ஒரு ஷாம்பூவில் வேதிப்பொருளாக இருக்கிறது என்கிறான். இரவோடு இரவாக அவர்கள் ஷாம்பூ பாட்டில்களைப்பிதுக்கி அதை ஒரு வண்டியில் சேகரிக்கிறார்கள். அவர்கள் ஸ்பாட்டுக்கு வரும் முன்னரே ராணுவம் முந்திக் கொண்டு வெடிகுண்டை வீசி விடுகிறது. வெடிகுண்டின் வெப்பத்தின் துணையால் அந்த உயிரினம் பலமைல்கள் தூரத்துக்கு அகன்று பூதாகாரமாக ஊதிப் பெருக்க ஆரம்பிக்கிறது.பேராசிரியர் இராவின் குழு வண்டியில் வேகமாகச் சென்று அந்த உயிரியின் ஆசனவாயில் ஷாம்புவைப் பீச்சுகிறது. உயிரினம் செலினியத்தால் சிதைவடைந்து வெடித்துச் சிதறுகிறது.இதே முறையில் பூமியில் உள்ள வேற்றுக் கிரக உயிரினங்களை அழிக்க முடியும் என்று எல்லாரும் ஆறுதல் அடைகின்றனர்.

சரி.

பரிணாமம் என்பது ஒரு அற்புதமான விஷயம்.இந்தப் படத்தில் வருவது போல ஒரே வாரத்தில் ஈறு பேனாகி பேன் பெருமாளாகும் கதையெல்லாம் உண்மையில் நடக்காது. ஒரு செல் உயிரினத்தில் இருந்து மனுஷப்பயல் வருவதற்கு கிட்டத்தட்ட 20 கோடி வருடங்கள் ஆகி இருக்கிறது. மனிதன் வரவேண்டும் என்றுதான் இயற்கை இத்தனை தவமிருந்து மெனக்கெட்டதாக ஒரு கோஷ்டி சொல்கிறது.இன்னொரு கோஷ்டி அதெல்லாம் இல்லை; தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி கூடிக் கிழப்பருவம் எய்தி மடியும் அற்ப மனிதப்பயலைப் படைக்க இயற்கை மெனக் கெடவில்லை. இயற்கையின் படி எடுப்பதில் ஏற்பட்ட(சிறு) பிழைகளால் வந்த தற்செயல் தான் நாம் என்கிறது.

அதாவது இயற்கை அன்னை தன் சமையல் குறிப்பு புத்தகத்தில் இருந்து விதிமுறை மாறாமல் அளவு மாறாமல் கிரமம் தவறாமல் ingredients ஐச் சேர்த்து சமையல் செய்து கொண்டே வந்து கொண்டிருந்தாள். ஒரு நாள் கவனக் குறைவாக ஏதோ ஒன்றை மாற்றிப் போட்டு விட்டாள் என்று வைத்துக் கொள்வோம்.(சீரகத்துக்கு பதில் பெருங்காயம்) அய்யோ தவறு செய்து விட்டோமே என்று பதைபதைத்து அயிட்டத்தை வாயில் வைத்துப் பார்க்கும் போது அது முன்னதை விட இன்னும் சுவையாக இருக்கிறது. அட! இது பரவாயிலையே என்று புதிய ரெசிபியை (யும்) செய்ய ஆரம்பிக்கிறாள் அவள்.இது மாதிரி தான் பரிணாம வளர்ச்சியும். தப்பிப் பிறந்த குழந்தைகள் போல நாமெல்லாம் தப்பில் பிறந்த குழந்தைகள்!

நான்கு
=======

'இந்தியாவில் மட்டும்' என்ற தலைப்பில் வந்திருந்த இ- மெயிலில் எனக்குப் பிடித்த இரண்டு புகைப்படங்கள்.

(ரெண்டாவது படத்தில் உட்கார்ந்திருப்பவர் கண்டிப்பாக மைக்-செட் காரராக இருக்க வேண்டும்)


ஐந்து
=====

வழக்கம் போல ஓஷோ ஜோக்.

ஒரு ஹிப்பி ராணுவத்தில் சேர விரும்பினான். உடற்தகுதி தேர்வுக்கு சென்ற அவனை அதிகாரி 'பாருப்பா நீ தேவைக்கு அதிகமா ஆறு கிலோ வெயிட் இருக்க .அதிக எடையை குறைக்கறக்கு முன்னாடி உன்னை சேர்த்துக்க முடியாது' என்று கறாராக சொல்லி விட்டார்.

ஹிப்பி உடனே ஒரு சலூனுக்கு சென்று கட்டிங் செய்து கொண்டு ஓடி வந்தான். அதிகாரி அவனை மீண்டும் எடை பார்த்ததில் மூன்று கிலோ குறைந்திருந்தான்.

'இதைப்பாருப்பா ரூல்ஸ் ரூல்ஸ் தான், இன்னும் நீ மூணு கிலோ வெயிட் அதிகம் இருக்க, போய் குறைச்சுட்டு வா' என்றார் அதிகாரி.

ஹிப்பி உடனே 'அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை சார், இப்பவே போயி ஒரு பப்ளிக் பாத்ரூம்ல குளிச்சுட்டு ஓடி வந்துர்றேன்' என்றான்.

சமுத்ரா

Tuesday, November 8, 2011

கலைடாஸ்கோப்-43

லைடாஸ்கோப்-43 உங்களை வரவேற்கிறது...

&

இந்தியர்கள் பேசும் ஆங்கிலத்தைக் கிண்டல் செய்கிறது சமீபத்தில் படித்த கட்டுரை ஒன்று. என்னதான் சிலர் 'இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பு தான் சிறந்தது' என்று வாதாடினாலும்,ஆங்கிலம் பேசும் போது இந்தியர்கள் செய்யும் சில பொதுவான தவறுகளை சுட்டிக் காட்டுகிறது அந்தக் கட்டுரை.அவற்றில் சில:-

* Question களுக்கு பதிலாக வாக்கியங்களுக்கு 'ஆ' விகுதியை உபயோகிப்பது.
உ.தா: Did he come என்பதற்கு பதில் ஹி கேம் ஆ? என்று கேட்பது. (இது தமிழர்களின் ஸ்டைல்!)
is it up ? என்பதற்கு பதில் இட் இஸ் அப்பா? என்று அப்பா அம்மாவை எல்லாம் இழுப்பது.

*Simple tense உபயோகிக்காமல் continuous tense உபயோகிப்பது. I don't understand என்று சொல்வதற்கு பதில் I 'm not understanding என்பது.

(இரண்டு மாணவர்கள் பேசுவதைப் பார்த்து எரிச்சல் அடைந்த ஒரு ஆசிரியரைப் பற்றிய ஜோக் ஒன்றை நீங்கள் கேட்டிருக்கக் கூடும்.I talk and only I talk..why you two middle middle talk?! )


(Principal is rotating the college. You go and under stand the tree இவைகளைக் கூட நீங்கள் கேட்டிருக்கக் கூடும்)

* subject மற்றும் verb இவற்றுக்கு அக்ரீமென்ட் இல்லாமல் பேசுவது. 'Does he really comes ?' மேலும் 'One of my friend is coming'

*இரண்டுமுறை verb - ஐ உபயோகிப்பது. 'Is the stupid guy is there around?'

* நான் ஊரில் இல்லை என்பதை 'I'm out of station' என்று சொல்வது..இங்கே ஸ்டேஷன் எல்லாம் எங்கே வந்தது? 'I 'm away from ...' என்று சொன்னால் போதும்.

*ஒரே பொருள் தரும் இரண்டு சொற்களை உபயோகிப்பது : 'Can you repeat this again?'
I can able to do this என்று சொல்வது.
It may not be possible என்று சொல்வது.
I will come by 5 pm in the evening!? என்பது

*தவறான Question-tag களை உபயோகிப்பது: It rotates.Isn't it?

சரி இங்கிலீஷ் பேசுவது என்று முடிவு செய்தாகி விட்டது. பேசுவதைத் தப்பில்லாமல் பேசுவோமே?

&& இந்த
இங்கிலீஷ் பேசுவது என்பதை வைத்துக் கொண்டு திரைப்படங்களில் எத்தனை காமெடிகள்? அது ஏனோ நம் தமிழ்ப் படங்களில் எப்போதும் ஹீரோயின் தஸ்ஸு புஸ்ஸு என்று ஆங்கிலத்தில் பிளந்து தள்ள நம் ஹீரோ ABCD கூட தெரியாத மக்காக இருப்பார். ரஜினி ஏதோ ஒரு படத்தில் I can டாக் இங்கிலீஷ் வாக் இங்கிலீஷ் என்பார்.தனுஷ் ஒரு படத்தில் யா யா என்று அதை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்.விக்ரம் ஒரு படத்தில் ரீமா சென்னிடம் Whats ur name என்பதற்கு கூட பதில் தெரியாமல் திணறுவார்.ஆர்யா , நயன்தாரா சொல்லும் PARDON என்பதை ஏறுமாறாகப்
புரிந்து கொண்டு பாட ஆரம்பிப்பார்.come home என்பதை கெட்ட வார்த்தையாக எடுத்துக் கொள்வார் தனுஷ்.என்ன தான் சொன்னாலும் பெண்கள் ஆண்களை விட மிக சீக்கிரமாக ஆங்கிலத்தின் நுணுக்கங்களை கிரகித்துக் கொள்கிறார்கள். பள்ளிகளில் பெரும்பாலும் ஆங்கிலத்துக்கு 'டீச்சரம்மா ' இருக்க தமிழுக்கு 'வாத்தியார்' தான் இருப்பார். இங்கே பெங்களூரு பஸ்களில்
'முந்தின நில்தானா' என்று ஆண்குரல் கன்னடத்தில் சொல்ல பெண் குரல் ஸ்டைலாக 'Next stop is electronic city' என்று சொல்லும்.


&&&
சில பேர் குழந்தையைக் கிள்ளி விட்டு விட்டு தொட்டிலையும் ஆட்டுவார்கள். அவர்களைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் குழந்தையைக் கொன்று போட்டுவிட்டு தொட்டிலை ஆட்டுபவர்களை என்ன சொல்வது?- இப்படி யோசிக்க வைத்தது சமீபத்தில் படித்த கட்டுரை ஒன்று.

சில கம்பெனிகள் பூமியை தங்களால் முடிந்த அளவு மாசுபடுத்தி விட்டு இப்போது 'eco action' 'green earth' போன்ற அழகழகான வார்த்தைகளுடன் கண் துடைப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளன.உண்மையிலேயே பூமி மேல் அக்கறை இருந்தால் இவர்கள் தங்கள் பிசினஸை மூடி விட்டு சம்பாதித்தது வரை போதும்,இனிமேலாவது பூமியைக் காப்பாற்றலாம் என்று வீட்டுக்குப் போகத் தயாராய் இருக்க வேண்டும். அப்படி செய்ய மாட்டார்கள். பூமியை வெப்பமடையச் செய்யும் காரணிகளில் Manufacturing எனப்படும் உற்பத்தியில் பெரும்பங்கு இருக்கிறது. இந்த நிறுவனங்கள் சரமாரியாக பொருட்களை உற்பத்தி செய்து இயந்திரங்கள் மூலம் வெப்பத்தை வெளித்தள்ளி விட்டு தங்கள் கம்பெனி வெப்-சைட்டில் மட்டும் பசுமையாக மரம்,செடி,கொடி பறவை எல்லாம் போட்டுக் கொள்கிறார்கள். சில ஐ.டி. கம்பெனிகளில் பூமிக்காக ஓடுகிறார்களாம்.மராத்தான் ஓடினால் பூமி சரியாகி விடுமா என்ன? பூமியைக் காப்பாற்ற , அவர்கள், தங்கள் கணிப்பொறிகளை எல்லாம் நடுரோட்டில் கொண்டு வந்து உடைக்கத் தயாரா என்றுதான் தெரியவில்லை.

ஐ.டி. கம்பெனி ஒன்று சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை ஜூல் வெப்பத்தை ஏ.சி யின் மூலம், விளக்குகளின் மூலம், கம்ப்யூட்டர்கள் மூலம் வெளித்தள்ளும் என்று யோசித்துப் பாருங்கள்.கடப்பாறையை முழுங்கி விட்டு சுக்குக் கசாயம் குடித்த கதையாக செய்ததெல்லாம் செய்து விட்டு சாணிப் பேப்பரில் புத்தகம் போதுவது, எகோ பிரிண்டர்கள் உபயோகிப்பது போன்ற கண் துடைப்புகள்.

புவி வெப்பமயமாதல் பற்றி சமீபத்தில் கோவையில் ஓவியப் போட்டி ஒன்றை (யாரோ) நடத்தினார்களாம்.அய்யா புத்திசாலிகளே! அந்த ஓவியப்போட்டிக்கு பிள்ளைகள் கொண்டுவரும் உபகரணங்களில் பெரும்பாலானவை மரங்களில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றன!

சமீபத்தில் படித்த ட்விட் ஒன்று 'மரம் வளருங்கள்; மின் கம்பங்களுக்கு கீழே யாரும் ஞானம் அடைந்ததாக செய்தி இல்லை' என்கிறது.ஆம். மின் கம்பங்களின் கீழே யாரும் ஈர்ப்பு விதியைக் கண்டுபிடித்ததாகக் கூட செய்தி இல்லை.

&&&&

கல்யாணம் ஆன புதிதில் (ஹனிமூனில்) மனைவிகள் தங்கள் கணவர்களை செல்லமாக நாயே பேயே எருமையே தடியா காட்டுமிராண்டி என்றெல்லாம் திட்டுவார்கள். காலம் நகர நகர உண்மையாகவே இப்படியெல்லாம் திட்ட ஆரம்பித்து விடுவார்கள். அப்பாவி கணவர்களும் சரி இன்னும்
செல்லமாக தான் நம்மை தடிமாடு குரங்கு என்றெல்லாம் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள்.சில கணவர்களுக்கு நம்மை திட்டுகிறார்கள் என்பது கூடத் தெரியாது பாவம். பின்னே இப்படியெல்லாம் திட்டினால்? விவேக சிந்தாமணியில் ஒரு பாடல்:

அரவிந்த நண்பன் சுதன் தம்பிமைத்துனன் அண்ணன் கையில்
வரமுந்தி ஆயுதம் பூண்டவன் காணும்மற்று அங்கவனே
பரமன் திகிரியை ஏந்திய மைந்தன் பகைவன் வெற்பை
உரமன் றெடுத்தவன் மாற்றான் தன் சேவகன் ஒண்தொடியே.

இரண்டு பெண்கள் தங்கள் கணவர்களைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். பாட்டைப் பார்த்தால் என்னவோ பெருமையாக பேசிக் கொள்கிறார்கள் என்று தோன்றும்.ஒருத்தி தன் கணவனை எருமைமாடு என்கிறாள். இன்னொருத்தி தன் கணவனை குரங்கு என்கிறாள். எப்படி என்று பார்ப்போம்.

பெண் 1

அரவிந்த நண்பன்: தாமரையின் நண்பன் : சூரியன்
சுதன் :சூரியனின் மைந்தன்: கர்ணன்
தம்பி: கர்ணன் தம்பி அர்ஜுனன்
மைத்துனன்: அர்ஜுனனின் மைத்துனன் : கண்ணன்
அண்ணன்: கண்ணனின் அண்ணன் பலராமன்
கையில் வரமுந்தி ஆயுதம் : பலராமன் கையில் உள்ள ஆயுதம் ஏர்
பூண்டவன் : ஏரில் பூட்டப்பட்ட எருமைமாடு

பெண் 2 :

திகிரியை ஏந்திய பரமன்: சக்கரம் தாங்கிய திருமால்
மைந்தன்: திருமால் மைந்தன் மன்மதன்
பகைவன் : மன்மதனை எரித்த சிவபெருமான்
வெற்பை உரமன் றெடுத்தவன்: சிவன் வாழும் கைலாய மலையை தோள்களால் தூக்கிய ராவணன்
மாற்றான்: ராவணன் பகைவன் ராமன்
தன் சேவகன்: ராமன் தூதன் அனுமான் (குரங்கு)

ஒன்றொடியே : கொடி போன்றவளே (கணவனை கண்டபடி திட்டி விட்டு தோழியை கொடியென்று வர்ணிப்பது கொஞ்சம் ஓவர்)

I'd insult you..but you should be smart enough to notice என்பார்கள். இப்படியெல்லாம் திட்டினால் யாருக்கும் புரியாது என்பது வேறு விஷயம் (இம்சை அரசன் புலிகேசியை புலவர் புண்ணாக்கு, அண்டங்காக்கா என்றெல்லாம் திட்டுவது போல) அந்தக் காலத்தில் திட்டுவதற்கு கூட செய்யுளில் தான் திட்டினார்கள் என்ற விஷயம் வியப்பாக இருக்கிறது.


&&&&&

ஒரு கவிதை

சுண்டக் காய்ச்சிய பாலைக்
குடித்து விட்டு பழம் சாப்பிட்டாகி விட்டது.
குட் நைட் போட்டாகி விட்டது
துவைத்து உலர்த்திய படுக்கை விரிப்பை
மடிப்பு இன்றி போர்த்தியாகி விட்டது
காலுக்கும் கைக்கும் தலையணை வைத்தாகி விட்டது
மெல்லிய இசையை பின்னணியில் தவழ
விட்டாயிற்று
விளக்குகளை எல்லாம் அணைத்தாகி விட்டது
.
..
...
....
.....

(ஏதாவது தப்புத்தப்பாக கற்பனை செய்தால் அடிவிழும். கவிதை இப்படி முடிகிறது)

இந்த பாழாய்ப் போன தூக்கத்தை
எங்கிருந்து கொண்டுவருவது?

&&&&&&

பென்சில்நதி என்ற ப்ளாக்கில் ராஜா சந்திரசேகர் என்பவர் அழகழகான (சிறு) கவிதைகளை எழுதி வருகிறார். அவற்றில் என்னைக் கவர்ந்த சில கவிதைகள் கீழே:

பல வருடங்களாக
பக்கத்து வீட்டிலிருந்தவர்
அறிமுகமானார்
பிணமாகப் போனபோது

ஆகாயம் வரைந்தால் போதும்
மழை பெய்யும்
சொல்கிறாள் குழந்தை

நடந்த போது
எத்தனையோ பேர்
கடந்து போனார்கள்
அவர்களுக்கு
நானும் ஒருவனாக
அப்படித்தான் போயிருப்பேன்

வார்த்தைகளை
அடுக்கி வைத்தேன்
படியேறிப் போனது
கவிதை

ஆரம்பித்தபோது
இது கண்ணீர்
இப்போது
திரவ ஆயுதம்

எனக்கும் உனக்கும்தான்
இடைவெளி
எனக்கும்
என்னுள் இருக்கும்
உனக்குமல்ல

தையல் மெஷினில்
அம்மா தைத்துக்கொண்டதே இல்லை
கிழிந்துபோன காலத்தை

ஒரு நட்சத்திரத்திற்கு
உன் பெயர் வைத்தேன்
மறுநாள் வந்து
கூப்பிட்டுப் பார்த்தேன்
எல்லா நட்சத்திரங்களும்
திரும்பி பார்த்தன

&&&&&&&

கொஞ்சம் சீரியஸ் ஆகி இருந்தால் சிரியுங்கள். ஏனெனில் வாழ்க்கை ஒரு கொண்டாட்டம். ஒரு ஓஷோ ஜோக். வர்ட்டா?

ஒரு இளைன் தன் புதிய அபார்ட்மெண்டை தன் நண்பர்களுக்கு சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தான். ஒரு இடத்தில் ஒரு டமாரமும் ஒரு சுத்தியலும் வைக்கப்பட்டிருந்தன.

அவன் நண்பர்கள் வியப்படைந்து 'இது என்ன?' என்று கேட்டார்கள்.

அதற்கு அவன் 'இதுவா இது
தான் பேசற கடிகாரம்'

'பேசற கடிகாரமா' அது எப்படி?

'பாருங்க' என்று சொல்லி விட்டு அந்த சுத்தியலால் டமாரத்தை ஓங்கி அடித்தான்.

பக்கத்து பிளாட்டில் இருந்து ஒரு குரல் கேட்டது

'டேய் , அங்க எவன்டா மட்ட மத்தியானம் ரெண்டு மணிக்கு சவுண்டு குடுக்கறது?'

முத்ரா