இந்த வலையில் தேடவும்

Sunday, January 30, 2011

இன்பத்துப்பால் இலவசம்!

உள்ளே எங்கிருக்கிறது
என்று
அறிந்து கொள்ளமுடியாத
உயிர் போல-
ஆழத்தில்
உறங்கிக் கிடக்கிறது காதல்!
கொஞ்சம் கீறினால்
குபுக்கென வெளிவரும்
குருதி போல
தயாராக இருக்கிறது காமம்!

கணக்கில்லாத வருடங்கள்
கால் கட்டை விரலில் நின்று
கடும் தவம் செய்தால் மட்டும்
காட்சி தரும்
பிரம்மனைப் போல இருக்கிறது அன்பு!
ரொட்டித் துண்டைக்
காட்டியதும்
வாலாட்டிக் கொண்டு வரும்
நாயைப் போல இருக்கிறது காமம்!


காலை மாலை சாதகம் செய்து
கழுத்தளவு நீரில் நின்று
உயிரை உருக்கிக்
குரலை முறுக்கி
காலம் மறந்து
உழைத்த பின் வெளிவரும்
சங்கீதம் போன்றது பக்தி...
சென்ற வினாடி வரை
எந்த
அறிகுறியையும் காட்டாமல்
திடீரெனப் புறப்படும்
தும்மல் போன்றது காமம்...

மேலிருந்து
நேரடியாக விழும்
மழைத் தண்ணீரையே உணவாகக் கொள்ளும்
சக்கரவாகப் பறவை போல்
வைராக்கியம் மிக்கது ஞானம்
எச்சில் இனிப்பு
தரையில் விழுந்தால்
எங்கிருந்தோ வந்து மொய்க்கும்
எறும்புகள் போன்றது காமம்..


மலையை மத்தாக்கி
பாம்பைக் கயிறாக்கி
விஷத்தை எதிர் கொண்டு
ஆயிரம் வருடங்கள்
கடல்கடைந்த பின் வெளிப்படும்
அமுதம் போல
அரிதாய் இருக்கிறது ஆன்மா!
கடல் நீர் ஆவியானவுடன்
கண்காட்டும்
உப்பு போல
உடனடியானது காமம்!

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு
ஒருமுறை
பூக்கும் குறிஞ்சிப்பூ போன்றது
பேரானந்தம்!
நீர் இல்லா நிலத்திலும்
நொடியில்
தலைகாட்டும்
புல் போல இருக்கிறது காமம்


கடன் கொடுக்கும்
வங்கி போல
நடையாய் நடக்க வைத்து
உயிரை விலைகேட்கிறது கருணை
பணத்தை
வீதியில் வீசி எறிந்தால்
பறந்து வந்து
சண்டையிட்டு அள்ளிக் கொள்ளும்
மனிதர்களைப் போல
இருக்கிறது காமம்..

ஒரு சீட்டுக்கட்டால்
மெது மெதுவாய் உருவாகும்
கோபுரம் போல மென்மையானது அன்பு
அந்த கோபுரத்தை
ரசனையின்றி
ஒருநொடியில் சாய்த்து விடும்
மின் விசிறிக்காற்று போல
அவசரத் தனமானது காமம்!


விளக்கு,
திரி,
எண்ணெய்,
நெருப்பு
இவையெல்லாம் கூடினால் மட்டுமே
வெளியாகும் சுடர் போன்றது காதல்!
விளக்கணைக்கக் காத்திருக்கும்
இருட்டு போல
வாசலில் காத்திருக்கிறது காமம்

ராவணன்
கையிலாயத்தைப் பெயர்த்துத்
தூக்கியது போன்ற
பிரயத்தனம் அன்பு
நம் அறிவு கூட இன்றி
நம்மிடம் ஒட்டிக் கொண்டு விடும்
தூசி போன்றது காமம்

ஆம்...
பக்தியைத் தூண்டத்தான்
எவ்வளவு முயற்சிகள்?
நாட்கணக்கில் விரதங்கள்,
நாமாவளிகள்,
மந்திர கோஷங்கள்,
பஜனைகள்,
சத்சங்கங்கள்,
மலையேற்றம்,
காவி உடைகள்,
உபவாசம்,
தீபாராதனை
திருமஞ்சனம் என்று..
ஆனால்
காமத்தை அழைக்க
காற்றின் ஒரு
'கணநேர '
உடை விலக்கல்
போதுமானதாய் இருக்கிறது!


முத்ரா





17 comments:

Chitra said...

வித்தியாசமான கவிதைங்க..... ! நிறைய சிந்தித்து எழுதி இருக்கீங்க.

சக்தி கல்வி மையம் said...

கவிதைன்னா இதுதாங்க..

நாங்களும் எழுதுரோமே.. ச்சே..

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_31.html

கணேஷ் said...

ரெம்ப அருமையா இருக்குங்க..

arasan said...

எளிமையான வார்த்தைகளை வைத்து அற்புதமான கவிதை வடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

VELU.G said...

அற்புதமான கவிதை

ஆனால் காமம்தான் இத்தனை மனித உயிர்களையும் படைத்து இருக்கிறது

Ashok D said...

:)

பா.ராஜாராம் said...

சூபர்ப்! :-)

ஒரு தொடர் பதிவு அழைப்பு மக்கா. ஆனால் தம்பி வேறொரு தளத்திற்கு இணைப்பு தந்திருக்கிறான். அதுவும் உங்கள் தளம்தானா என தெரியவில்லை. உங்களின் இந்த லின்க்கை தம்பிக்கு மெயில் செய்திருக்கிறேன். மாற்றுவான்.

நேரமிருப்பின் தொடருங்களேன்..

சமுத்ரா said...

பா.ரா... யார் அந்த தம்பி?

பா.ராஜாராம் said...

என் தம்பிதான், சமுத்ரா!

அவன்தான் இத்தளம் தொடங்கி பேணி வருவது.கனடாவில் இஞ்சினியராக இருக்கிறான். படைப்புகளை அவனுக்கு மெயில் செய்வதோடு என் வேலை முடிகிறது. கூடுதலாக பின்னூட்டம் இட தெரியும். :-)

எப்பவும் இணைப்பு அனுப்புவேன். இந்த முறை தவறி விட்டேன். இப்ப தூங்குவான். மெயிலை பார்த்ததும் மாற்றுவான்.

கோபம் கொண்டு ஆள் வைத்து அடித்துவிட வேண்டாம். புள்ளப் பூச்சி. (பிறகு என் தம்பி எப்படி இருப்பான்) :-)

கோநா said...

nice samudra.

ரேவா said...

வித்யாசமான அழகான கவிதை... படங்களும் மிக நேர்த்தியாய் இருக்கிறது
வாழ்த்துக்கள் தோழா

அன்புடன் மலிக்கா said...

மிக அழகிய வரிகளால் ஆழமான கவிதை வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

ஐயோ.. சான்ஸே இல்ல.. அத்தனையும் வெகு அருமை.

Unknown said...

Arumaiyaaga irukkirathu...

ரிஷபன் said...

கவிதை மழை.. வார்த்தைகளின் அணிவகுப்பில் அர்த்தங்கள் ஆச்சர்யமாய் கை கோர்த்து பிரமிப்பில் வாசித்து முடித்த நான்!

arul said...

arumai

Kavinaya said...

வாவ்! அசத்தல்!