இந்த வலையில் தேடவும்

Showing posts with label கலைடாஸ்கோப். Show all posts
Showing posts with label கலைடாஸ்கோப். Show all posts

Friday, July 8, 2016

கலைடாஸ்கோப்-112

கலைடாஸ்கோப்-112 உங்களை வரவேற்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கலைடாஸ்கோப்பில் சந்திக்கிறோம்.

காந்தம் என்பது சிறுவயதில் இருந்தே நமக்கு அறிமுகமான ஒன்று. காந்தத்தையும் ,பேப்பரையும், மணல் துகள்களையும் வைத்து பேய் உருவம் நகர்த்தி இருப்போம். மூன்றாம் வகுப்பு அறிவியல் பாடத்திலேயே
காந்தம் வந்து விடுகிறது என்று நினைக்கிறேன். காந்தம் என்பதற்கான வரையறைகள் circular ஆக இருக்கின்றன. உதாரணமாக, A magnet is a material that possesses magnetism.  Magnetism is a force produced by a magnet. இப்படி.

காந்தவிசை என்பது பிரபஞ்சத்தின் ஆதாரமான விசைகளில் ஒன்று. ஆச்சரியமாக அது மின் விசைக்கு (electrical )இரட்டையாக இருக்கிறது. மின் விசையால் காந்தமும்,காந்தத்தால் மின் விசையும் தோன்றுகின்றன.
இன்று நாம் அனுபவிக்கும் எல்லா luxury யிலும் காந்தம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்குவகிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. நிலை காந்தங்களை சுற்றி மின் கடத்திகளை அசைக்கும் போது அதில் மின்சாரம் வருகிறது.

மோட்டார் ஒன்றை ஓட விட்டு அதில் ஒரு ஜெனெரேட்டரை இணைத்து அந்த ஜெனெரேட்டரில் இருந்து வரும் பவரை மறுபடியும் அந்த மோட்டாருக்கே கொடுத்து இப்படி இயக்க முடியுமா? இல்லை. ஏன் என்று இன்டர்நெட்டில் படித்துக் கொள்ளுங்கள். அதே போல கீழ்க்கண்ட படத்தில் இருக்கும் வண்டி ஓடாது. troll physics.


ஒரு காந்தத்தை இரண்டாகப் பிளக்கும் போது ஒன்றில் அதன் வட துருவமும் இன்னொன்றில் அதன் தென் துருவமும் சென்று விடுவதில்லை. மாறாக பிளக்கப்பட்ட ஒவ்வொரு துண்டும் N S  N S என்று தனித்தனி காந்தம் ஆகி விடுகிறது. (பூரணத்தைப் பிளந்தால் பூரணம் வருவது போல. i .e ., கொழுக்கட்டை பூரணம் அல்ல) முழுக்க முழுக்க வடதுருவம் மட்டுமே உள்ள , அல்லது தென் துருவம் மட்டுமே உள்ள காந்தம் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. இதை ஒரு analogy உடன் ஒப்பிடலாம். 100% ஆண் என்றோ 100% பெண் என்றோ யாரும் கிடையாது. after all , ஆண் ஒரு பெண்ணிடம் இருந்தும் பெண் ஓர் ஆணிடம் இருந்தும் பிறப்பதால். இரண்டு துருவங்களும் ஒருவரிடம் இருக்கின்றன.(N மற்றும் S ). முழுக்க முழுக்க ஒரு பெண்ணிடம் இருந்து பிறந்த ஆணை 100% ஆண் என்றும் முழுக்க முழுக்க ஓர் ஆணிடம் இருந்து பிறந்த பெண்ணை 100% பெண் என்றும் சொல்ல முடியும். (Or should it be other way?) ஏவாள் ஒரு ஆணிடம் இருந்து மட்டுமே பிறக்கிறாள். ஏசு ஒரு பெண்ணிடம் இருந்து மட்டுமே பிறக்கிறார் .
ஏவாள் 100% பெண்ணா? opposite உதாரணம் இந்து மதத்தில் கிடைக்கிறது. பிரம்மா முழுக்க முழுக்க ஓர் ஆணிடம் இருந்து மட்டுமே தோன்றுகிறார். (அவர் தான் 100%ஆணா ?) சீதை முழுக்க முழுக்க அம்மாவிடம் (பூமி) இருந்து பிறக்கிறாள். 

செக்ஸ் என்னதான் fascinating  ஆக இருந்தாலும் இந்த இரண்டு பேரிடமும் இரண்டு துருவங்களும் இருப்பதால் சீக்கிரமே சலித்தும் விடுகிறது. It's not a sex between N and S; it is between NS - NS . orgasm ஏற்பட்டு சமாச்சாரம் வெளியேறியதும் எல்லாமே சோபை இழந்து  என்னடா இந்தக் கருமத்துக்காகவா இத்தனை ஓட்டம் ஓடினோம் என்று சலிப்புத் தட்டுகிறது. அந்த சமயத்தில் மனிதனின் creativity பன் மடங்கு அதிகரிக்கிறது என்கிறார்கள். creative ஆன சமாச்சாரங்களை ஆரம்பிக்கும் முன் masturbate செய்து விடுங்கள் என்கிறார்கள். (இன்டெர்வியூ வுக்கு போகும் முன்னர் கூட) இதனால் உடல் கொஞ்சம் சோர்வடைந்தாலும் மூளை புத்துணர்வாகும். இத்தனை நேரம் செக்ஸ் சிந்தனைகளுக்கு சென்று கொண்டிருந்த எனெர்ஜி இப்போது கவிதை எழுத உபயோகிக்கப்படும். நிற்க. இன்னும் கூட அர்த்த ராத்திரி சானல்களில் சுய இன்பம் உலகமகா பாவம் என்ற ரேஞ்சில் டுபாக்கூர் டாக்டர்கள் ஓர் அழகிய பிகரை அருகில் அமர்த்திக் கொண்டு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்கள். 'இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்வேன்' என்கிறார் ஒருவர். 'என்னப்பா, வாழ்க்கையா வீணா போச்சே, பொண்டாட்டி உன்னை டைவர்ஸ் பண்ணிருவா ப்ளா ப்ளா  '......ஓகே . back to physics .

முழுக்க முழுக்க ஒரே துருவத்தால் ஆன காந்தத்தை magnetic molopole என்று அழைக்கிறார்கள்.( காந்தத்தின் சகோதரி மின்சாரத்தில் இது எப்போதும் சாத்தியம். முழுக்க முழுக்க + சார்ஜ். அல்லது - சார்ஜ்.)  இது சீதை, ஏவாள், ஜீசஸ், பிரம்மா போல மிகுந்த ஆற்றல் மிக்கது. இன்னொன்றின் கலவையே இல்லை. ஜீஸஸும் ஏவாளும் சந்தித்தோ, பிரம்மாவும் சீதையும் சந்தித்தோ செக்ஸ் வைத்துக் கொண்டால் அது சரித்திரமாக இருக்கும். அந்த காமத் தீயில் அவர்கள் வெந்து ஒன்றும் இல்லாமல் அழிந்தே போய் விடுவார்கள். well , புராணப்படி அவர்களுக்கு அம்மா-மகன் உறவு வருவதால் இது சாத்தியமில்லை. (unless incest fetish) அது போல north molopole ஒன்றும் south molopole ஒன்றும் சந்தித்துக் கொண்டால் ஒன்றை ஒன்று இடம் தெரியாமல் அழித்துக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் ஆற்றல் பூமியையே சில வினாடிகளில் துகள் துகளாக வெடித்துச் சிதற வைத்து விடும். உண்மையான காதல், அல்லது காமம் என்பது அழிவு, பேரழிவு என்கிறார்கள் சிந்தனையாளர்கள்.
'காதலில் மரணம் ஏழாம் நிலை' என்று வைரமுத்து சொல்வதாக ஞாபகம். 

'நான்' என்பதன் அழிவு. ஆண், பெண் என்ற அடையாளங்களின் ,துருவங்களின் அழிவு. நம்முடைய அடையாளத்தை உருத்தெரியாமல் முற்றிலும் அழித்து விடும் another half ஐத் தேடிக் கொண்டிருக்கிறோம். நாம் எல்லாரும் ஆண் பெண் கலந்தவர்கள் என்பதால் அந்த perfect சங்கமத்துக்கு வாய்ப்பே இல்லை. ஒருவரை '9' என்று கேலி செய்யும் முன்னர் இந்த விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

மோனோபோல் என்பதை இன்னும் விஞ்ஞானிகள் தேடி வருகிறார்கள். துகள் முடுக்கிகளில். கிராவிட்டான் போல. ஒவ்வொரு 10 ^ 28 துகள்களுக்கு ஒரு துகள் மோனோபோல் ஆக இருக்கலாம் என்கிறார்கள். 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி Blas Cabrera என்பவர் magnetic molo pole ஒன்றைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தார். (Valentine 's day mono pole )ஆனால் அது equipment malfunction !!

பூமி கூட ஒரு மெகாசைஸ் காந்தம் என்கிறார்கள்.பூமியின் உள்ளகத்தில் இருக்கும் இரும்புக் குழம்புகள் வழியே ஓடும் மின்சாரத்தால் இந்தக் காந்தப்புலம் பூமிக்கு கிடைக்கிறது. காம்பஸ் ஒன்றின் வடதுருவம் பூமியின் வடதுருவத்தைக் காட்டுகிறது. வெயிட், வடக்கும் வடக்கும் ஒன்றை ஒன்று விலக்க வேண்டும் அல்லவா?நாம் உண்மையில் வடதுருவம் என்று அழைப்பது பூமி காந்தத்தின் தென் துருவம். (magnetic south pole ).பூமியின் இந்தக் காந்தப்புலம் நம்மை தீங்கு செய்யும் காஸ்மிக் கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் செய்கிறது.



பூமியினுடைய geographic south pole பற்றிக் கொஞ்சம் பேசலாம். பூமியின் சாய்வினாலும், வருடத்துக்கு 6 மாதங்கள் சூரிய ஒளி கிடைக்காததாலும் வெண்பனி கொஞ்சநஞ்ச  சூரிய ஒளியையும்  திரும்பப் பிரதிபலித்து விடுவதாலும் , கடல் மட்ட உயரம் காரணமாகவும் south pole மிக மிகக் குளிராக இருக்கிறது. வடதுருவத்தை விட. (வெம்மையில் இருந்து தப்பிக்க உங்கள் வீட்டு மொட்டை மாடி தளத்துக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கவும். வீடு கூலாக இருக்கும்) . ஆறு மாதங்களுக்கு ஒரு முறையே சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் நடக்கின்றன.' நாளை சூரியன் உதிக்க மறந்தாலும் நான் இந்தக் காரியத்தை செய்வேன்' போன்ற 
புராண கால சபதங்களை நாம் துருவங்களில் மேற்கொள்ள இயலாது. மார்ச் முதல் செப்டெம்பர் வரை சூரியன் மறையாமல் தொடுவானிலேயே ரவுண்ட் அடிக்கும். temperature 30 டிகிரிக்கு வந்தாலே சென்னைவாசிகள் ஸ்வெட்டர், மங்கி குல்லாய் எல்லாம் தேடுகிறார்கள். தென் துருவத்தில் வெப்பநிலை -89 டிகிரி செல்ஸியஸ் வரை விழுகிறது. எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாத அண்டார்டிக் பிரதேசத்தில் இந்நாளில் 2 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஆராய்ச்சி  செய்பவர்கள். இந்தியா கூட அங்கே தட்சின் கங்கோத்ரி, மற்றும் மைத்ரி எனும் இரு ஆய்வகங்களை அமைத்துள்ளது. அங்கே என்ன ஆராய்ச்சி என்றால் புவி வெப்பமயமாதல், நுண்ணுயிரி etc மேலும் விண்கல் ஆராய்ச்சி. வெண்பரப்பின் மீது விண்கல் ஏதேனும் விழுந்தால் சுலபமாகப் பார்க்க முடியும்.

விண்கல் என்றதும் ஞாபகம் வருகிறது. பூமி மீது இரவில் தினமும் தீபாவளி நடந்து கொண்டிருக்கிறது. மேலிருந்து விழும் விண்கல் வளிமண்டலத்தில் உராய்ந்து எரிந்து விடுவதால். மற்றபடி ஒன்றிரண்டு எப்படியாவது தப்பித்து விழுந்து விடும். இவை பொதுவாக asteroid belt எனப்படும் பகுதியில் இருந்து விழுகின்றன. நம் நம் சூரிய தேவன் இரண்டு அழகான பெல்ட்-களை அணிந்து கொண்டுள்ளான். ஒன்று செவ்வாய் மற்றும் வியாழனுக்கு இடைப்பட்ட asteroid belt .இன்னொன்று கிரகங்கள் எல்லாம் முடிந்தபின் கிட்டத்தட்ட 50 AU தொலைவுக்குப் பரவிக்கிடக்கும் 
kuiper belt .இதில் உள்ள புளூட்டோ உட்பட்ட இப்படிப்பட்ட பெரிய பாறைகள் trans neptunian objects என அழைக்கப்படுகின்றன. btw செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே ஒரு கோள் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். தற்போது மிஸ்ஸிங். அஸ்டிராய்டு பெல்ட்டை அப்படி இருந்து அழிந்து போன ஒரு கிரகத்தின் மீதிகள் என்றும் , கோள் ஆவதற்கு முயற்சி செய்து தோற்றுப்போன கற்கள் என்றும் சொல்கிறார்கள்.Paul Davies என்பவர் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலத்தை ஆக்கிரமித்த ஏலியன்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக இந்த கிரகத்தை உபயோகித்துவிட்டு பின்னர் வெடிக்கச் செய்திருக்கலாம் என்கிறார்.

topic change 

யூ டியூப்பில் தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் கேட்கக் கிடைக்கின்றன.
ஜான் ஜெபராஜ் போன்றோரின் 'சத்தாய் நிஷ்களமாய் ' போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. நிற்க. ஸ்தோத்திரம், சுதன்,
கிருபை, மாட்சிமை, ஜபம், பரலோகம், பரிசுத்தம், சகாயம், கர்த்தர்,
பிதா, ரட்சகம் ,மகிமை, பராக்கிரமம், துதி, பலி, ஆசிர்வாதம்,
கீதம், பாக்கியவான், சத்துரு, நாமம், ஜீவன் , விஷேஷம், ஐஸ்வரியம் 
அதிசயம், தரிசனம் ,தயை ,ஆத்துமா ,ஜீவிதம் போன்ற பெரும்பாலும் சமஸ்கிருத வேர் உள்ள சொற்கள் கிறிஸ்துவத்தின் உதவியால் இன்னும் தமிழில் வழங்கிக் கொண்டுள்ளன.

தேவனே என்னை ஆசீர்வதியும் 
ஜீவனுள்ள பிதாவே 
பரலோகப் பிதாவே போன்ற பிரயோகங்கள் பெருமாளுக்கும் பொருந்தும். ஆனால் கேட்டதுமே கிறிஸ்துவ வாசனை வீசிவிடும் சொற்கள்.

.ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ் செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறது போல தம்முடைய ஜனங்களை கடாட்சிகிறவரே ¨C ஸ்தோத்திரம்,

போன்ற வினோத வார்த்தைப் பிரயோகங்கள்.


நிற்க.

பேஸ்புக்கில் சண்டைகளுக்கு பஞ்சம் இல்லை. இந்துவாக இருந்து 
பின்னர் சமீபத்தில் கிறிஸ்துவர் ஆன come live (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் , தன் சுவரில், சர்வலோகப் பிதாவை ஸ்தோத்திரம் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் பிற மதத்து துர் ஆத்மாக்களை 'பாவிகளே, நீங்கள் கர்த்தரிடத்தில் வரும் வரை உங்களுக்கு மீட்பு இல்லை' என்று நான் டீசண்ட் ஆக சொன்னதை கொஞ்சம் harsh ஆக நிந்தித்து  எழுதிக் குவிக்க இந்துக்கள், முஸ்லிம்கள் இவர்கள் அனல்பறக்கும் கமெண்டுகளை தந்து நமக்கு பொழுது போக வைக்கிறார்கள்.

இந்த மதச் சண்டை புராண காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.
வைணவ-  சைவ, சைவ- சமண, சமண- பௌத்த, வைணவ- பௌத்த,
சண்டைகள். அப்போது கிறிஸ்துவம் உள்ளே வரவில்லை போலும். வைணவர்களைக் கேட்டால் ராமானுஜர் சமணர்களை வாதத்தில் வென்று சீடர்கள்  ஆக்கினார் என்பார்கள். சமணர்களைக் கேட்டால் கதை வேறு விதமாக இருக்கும். எது உண்மையான தெய்வம்?
சிவ வாக்கியர் சொல்வதைக் கேளுங்கள் 

“கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
“வெட்டவெளி” தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.. 

கட்டை மட்டையை எல்லாம் கும்பிட்டுக் கொண்டிருக்கும் மூடனே என்கிறார்.


கல்யாண்ஜி யின் கவிதைகள் இரண்டு
========================

அடிக்கடி
பார்க்க முடிகிறது யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண் புழுவைப் பார்த்து


காக்காய் கத்தி
இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.
காதில் விழவே காணோம்
உப்பு விற்கிறவரின் குரல்,
கோலப்பொடி விற்கிறவரின் குரல்.
என்னவோ ஆகத்தான் போகிறது
இந்த உலகத்துக்கு
இன்றைக்கு.

ஓஷோ ஜோக்
===========


அடல்ட் ஒன்லி.

ஸ்பிரோஸ்கி. போலந்து விவசாயி. தன் பண்ணைக்கு ஆள் எடுக்கிறான்.

ஒருவன் வந்து நின்றான். நேர்முகத் தேர்வு ஆரம்பமானது.

"ஏம்ப்பா , நீ மூக்கை எப்படி சிந்துவாய்? பண்ணிக் காட்டு"

அவன் அசூசையாக உணர்ந்தாலும், வேலை கிடைக்க வேண்டும் என்பதால், விரலால் மூக்கை மூடி , பலமான ஒலியெழுப்பி மூக்கை சிந்திக் காட்டினான்.

"உன்னை வேலைக்கு எடுத்துக்கிறேன்" என்றான்.

"அவ்ளோதானா அய்யா? வேற கேள்விகள் எதுவும் இல்லையா?"

"இல்லைப்பா, அவ்ளோதான். ஏன்னா, இதுக்கு முன்னாடி இருந்தவன் தினமும் மூக்கை சிந்தி குட்டி குட்டி பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி என்னோட மனைவி படுக்கையில் போட்டுக் கொண்டிருந்தான்"


சமுத்ரா 




Saturday, November 15, 2014

கலைடாஸ்கோப்-111

கலைடாஸ்கோப்-111 உங்களை வரவேற்கிறது

Without mathematics, there's nothing you can do. Everything around you is mathematics. Everything around you is numbers.
Shakuntala Devi


111 -என்ற நம்பர் ஸ்பெஷலா என்று தெரியாது. ஒரு படத்தில், வடிவேலு நான் பத்து போட்டதுக்கே இப்படி பீல் பண்றேளே , அங்க ஒருத்தர் --- போட்டுட்டு எப்படி நடந்து வரார் பாருங்கோ! என்பார். அந்த விதத்தில் வேண்டுமானால் இது ஸ்பெஷல் என்று சொல்லலாம்.

ஒரு முறை ராமானுஜன், கணித அறிஞர் ஹார்டியுடன் ஒரு  டாக்ஸியில் போய்க் கொண்டிருந்தாராம்.அந்த டாக்ஸியின் நம்பர் 1729. ஹார்டி, அதைப் பார்த்து விட்டு 'என்ன ஒரு சலிப்பான நம்பர்' என்றாராம். அதற்கு ராமானுஜன், 'இல்லை, இது மிகவும் சுவாரஸ்யமான எண் ,1729 என்பது இரண்டு நேர்க் கனங்களின் கூட்டுத்தொகையாக இரண்டு வழிகளில் எழுதக்கூடிய மிகவும் சிறிய எண் என்றாராம்.


1729 = 1^3 + 12^3 = 9^3 + 10^3


எந்த ஒரு எண்ணுமே சலிப்பான எண் இல்லை என்கிறது 'interesting number paradox '. எப்படி என்றால், சலிப்பான எண்களின் குழு(set ) ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்'...உங்களுக்கு சலிப்பான எண்கள் என்று தோன்றுவதை ஒரு செட்டில் எழுதுங்கள்...e .g { 19, 37, 43, 93, 113....} இதில் முதலில் வரும் எண் , (19) சலிப்பான எண்களில் சிறியது என்றாகிறது. ஆனால் 'சலிப்பான எண்களில்  சிறியது' என்ற பண்பே அந்த எண்ணை ஒரு விதத்தில் ஸ்பெஷல் ஆக்கி விடுகிறது. எனவே அந்த எண் சலிப்பான எண் அல்ல . அதை செட்டில் இருந்து நீக்கி விடுவோம். இப்போது அடுத்த எண் (37) இதே லாஜிக்கின் படி அடிபட்டுப் போகிறது. எனவே uninteresting எண்களின் set காலி என்று நிரூபிக்கப்படுகிறது. வேறு விதத்தில் சொன்னால் எல்லா எண்களுமே interesting தான்....

Happy number என்று இன்னொன்று உள்ளது. 13 என்பது happy நம்பர். எப்படி என்றால் அதன் இலக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத் தொகை கடைசியில் 1 என்று வர வேண்டும்.

13

1 ^ 2 + 3 ^ 2 = 10
1 ^ 2 + 0 ^ 2 = 1

இப்படி எண்களை வைத்து சும்மா விளையாடுவதை recreational mathematics என்கிறார்கள். சரி, சும்மா விளையாட்டுக்கு என்றால் பரவாயில்லை. எண்களுக்கும் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று சொல்லும் நியூமராலஜி-யை சுத்த பேத்தல் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். exam ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர், மொபைல் நம்பர், கார் நம்பர், employee நம்பர் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்து 7 வருதா, அப்பாடா என்று பெருமூச்சு விடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதாவது ஒரு க்ரூப் 'எண்கள் நமது கண்கள்' என்கிறது. இன்னொரு க்ரூப் 'எண்கள் வெறும் எண்கள் 'என்கிறது. பண்டிட் ----என்று ஒரு ந்யூமராலாஜி நிபுணர். நிறைய clients போலிருக்கிறது அவருக்கு. ஒரு போர்டு, marker இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு நன்றாக சம்பாதிக்கிறார். பேர் சொல்லுங்க,  பிறந்த தேதி சொல்லுங்க, நேரம் சொல்லுங்க, கல்யாண நாள் சொல்லுங்க என்கிறார், சீரியசாக அதை போர்டில் எழுதுகிறார்.

பேர் என்ன சார்?
 TS ராதாக்ருஷ்ணன்
சரி
டேட் ஆப் பர்த் ?
20-8-1953

(போர்டில் ஏதோ கணக்கு போடுகிறார்)

20 இல் பிறந்திருக்கீங்க...சந்திரன் ஆதிக்கம் அதிகம் இருக்கும்....2, 11, 20 தேதிகளில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நல்ல பலன்களையே கொடுப்பார். ஆனா பாருங்க, உங்க பேருக்கு 44 நம்பர் வருது . 44 நம்பர் வந்தால் (8)வாழ்க்கையில் போராட்டங்களும், கடும் சோதனைகளும் வரும்... ரைட்டா என்கிறார். அவரும் ரொம்ப சரி என்கிறார்.கைதட்டல்....

நிற்க. நம்மிடம் பொதுவாக, யாராச்சும் 'உங்க வாழ்க்கையில் எப்போதும் போராட்டம் தானே, சோதனை தானே?' என்றால் நாம் பெரும்பாலும் ஆமாம் என்று தான் தலையாட்டி வைப்போம். Nobody's life is a bed of roses! அவர்களின் போராட்டம் என்ன என்று பார்த்தால் அதிகபட்சம் காலை ஏழரை மணிக்கு எழுந்து , எட்டேகால் பஸ்ஸை பிடிக்க ஓடுவதாக இருக்கும்! சில பேருக்கு காலையில் பெட்டை விட்டு எழுந்திரிப்பதே பெரும் போராட்டம் தான்.

உங்க நம்பர் 8 வருகிறது. எனவே வாழ்க்கையில் எப்போதும் சிக்கல் தான். எனவே இதை மாற்றி விடுங்கள். உங்கள் பேர் இன்றிலிருந்து  T.S.R ராதாக்ருஷ்ணன். 46 வருகிறது. கூட்டுத்தொகை 1. ஓஹோன்னு இருப்பீங்க என்கிறார். 46 நாட்களில் நீங்க எங்கேயோ போகப் போறீங்க(?) என்கிறார்.

well , வாழ்க்கையை மாற்றுவது இவ்வளவு சுலபமா என்று தெரியவில்லை. சும்மா பெயரில் ஒரு R சேருங்க எல்லாமே நலம்; இனிமேல் போராட்டம் இல்லை; சோதனை இல்லை;  என்று சொல்வது அபத்தமாகத் தோன்றலாம்.  நம் வாழ்க்கையின் சூட்சுமம் வேறு எங்கோ இருக்கிறது.எனக்கும் அபத்தமாகவே தோன்றுகிறது. பண்டிட்ஜி நடுநடுவே குட்டிக் குட்டி ஆன்மீகக் கதைகளை சொல்கிறார். அவை வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கின்றன.


எந்தப் பேச்சாளராக இருந்தாலும் அவ்வப்போது குட்டிக் குட்டி கதைகள் சொல்லி ஆடியன்ஸ்சை மகிழ்விப்பது முக்கியம். ஹரிகதையில்  இது மிகவும் முக்கியமான அம்சம். உதாரணத்துக்கு ஒன்று  பார்க்கலாம் . நாரத கர்வ பங்கம்.


நாரதர் எல்லாருக்கும் பஞ்சாயத்து பண்ணி வைப்பவர். எல்லாருடைய கர்வத்தையும் பங்கம் செய்பவர். டான்ஸ் ப்ரோக்ராம் களில் சில நேரம் சத்யபாமா கர்வ பங்கம் என்று பார்த்திருப்பீர்கள் . சத்யபாமாவுக்கு நான் தான் கண்ணனின் பேவெரெட் என்ற கர்வம் வந்து விடுகிறது.  இரண்டாம் தாரத்துக்கு இது இயல்பு தான். மூத்தவள்  ஏதோ ஒருவிதத்தில் சலித்துப் போய் விட்டதால்தான் நம்மிடம் வந்தார் என்ற ஒரு நினைப்பு!இதை நாரதர் அறிந்து கொண்டு அவளுக்குப் பாடம் புகட்ட வருகிறார்.

நாரதர்: நாராயண, நாராயண!

பாமா: வாரும் நாரதரே, என்ன இந்தப் பக்கம்?

நாரதர்: நாராயண, கழுதை கெட்டால் குட்டிச் சுவரம்மா, எனக்கு கண்ணனை தரிசிப்பதை விட வேறென்ன வேலை?

பா: இங்கே யார் கழுதை, யார் குட்டிச்சுவர்???சரி ..விடுங்க. கிருஷ்ணர் இங்கே இல்லையே? ருக்மிணி வீட்டில் அல்லவா இருக்கிறார்?

நா: ஓ , அப்படியா? தப்பான இடத்துக்கு வந்து விட்டேன், ஒரு புருஷனை அவன் முதல் தாரத்தின் வீட்டில் தான் முதலில் சென்று பார்க்க வேண்டும் என்ற அறிவு கூட எனக்கு இல்லை, வயதாகி விட்டது இல்லையா? மூளை மழுங்கி விட்டது...கிருஷ்ணனுக்கு ,புறப்படுவதற்கு முன் ஒரு missed call ஆவது விட்டிருக்க வேண்டும்!

பா: ஹலோ, நாரதரே,  ராத்திரி இங்கே தான் தங்குவார். அங்கே சும்மா ஒண்ணு ரெண்டு மணிநேரம் தான்...வம்சம் சீரியல் முடிஞ்சதும் வந்திருவார்.

நா:  என்னம்மா இப்படி வெள்ளந்தியா இருக்கியேம்மா?  வம்சம் சீரியல் பார்க்கிறார்னு நெனைக்கிறே..... அங்கே வம்சத்தை வளர்க்கிற காரியம் பார்த்துண்டிருக்கார். கொஞ்சல் என்ன, குலாவல் என்ன? முதல் மனைவி மேல அவ்ளோ பாசம்னா ரெண்டாவதை ஏன் கட்டிக்கணும்?

பா: (குழப்பம்) அப்படியா சொல்றேள்? அங்கே போய் சும்மா அட்டெண்ட்டன்ஸ் போட்டுட்டு வர்றார் னல்ல நினைச்சேன்.

நா:  அய்யோ மண்டு, கொஞ்சம் சுதாரிச்சுக்கோ...இப்ப கூட பாரு, ஏதோ பாரிஜாத மலராம், ரொம்ப ஒசத்தியாம்,,,எங்கோ கண்காணாத தேசத்தில் கிடைக்கிறதாம். அதை கொண்டுவந்து அவள் தலையில் சூட்டி அழகு பார்க்கிறார். உன்னிடம் அதைப் பற்றி மூச்சு விட்டிருப்பாரா? ஒருநாள் கனகாம்பரம் வாங்கித் தந்திருப்பரா?

(நாரதர் இப்போது ருக்மிணி வீட்டுக்கு வருகிறார்)

 நாராயண , நாராயண

ருக்மிணி: வாருங்கள், தேவரிஷி,,,,ஆசனத்தில் அமருங்கள்...

நா: என் ஆசனம் இருக்கட்டும் அம்மா, கிருஷ்ணனின் ஆசனம் காலியாய் உள்ளதே, எங்கே அவர்?

ரு :  இப்போதான் பாமா வீட்டுக்குப் போனார்.

நா: நீ சந்தோஷமாய் வழியனுப்பி வைத்தாயாக்கும், காலம் தெரியாதவளாய் இருக்கிறாயே, கையில் தான் சக்கரம் வைத்திருக்கார், காலிலுமா சக்கரம் கட்டியிருக்கார்? அங்க தான் 24x 7 இருக்காரே? அப்படி என்ன அவசரம்?
காலில் வெந்நீர் ஊற்றியது போல?

ரு : காலில் வெந்நீர் அல்ல. கங்கை என்னும் தண்ணீர்! இல்லை முனிவரே, என் மேல் தான் அபிமானம், இப்போகூட காஸ்ட்லியான ஒரு பூ வாங்கிக் கொடுத்திருக்கார்.

நா: அய்யோ அசடே, உனக்கு பூ கொடுக்கலேம்மா,அல்வா கொடுத்திருக்கார்

ரு : புரியலையே...

நா:  என்னமோ சொல்லிட்டேன், நான் ஏன் குட்டையை குழப்பணும்...உனக்கு பூ வாங்கிக் கொடுத்துட்டு அங்கே வாரா வாராம் ஷாப்பிங் கூட்டிட்டுப் போய் பர்கர் சாப்பிடறார், போன வாரம் கூட ரெண்டு பெரும் ஐ மாக்ஸ்ல Interstellar பார்த்துருக்கா...

இப்படி குட்டையைக் கிளப்பிய நாரதர் கலகம் கடைசியில் நன்மையிலேயே முடிந்தது. கிருஷ்ண துலாபாரக் கதையை நாமெல்லாம் கேட்டிருப்போம்.

எல்லாருடைய கர்வத்தையும் தீர்க்கிறேன் என்று அவருக்கே ஒருநாள் கர்வம் வந்து விட்டது..பூனைக்கு யார் மணி கட்டுவது? பூனைக்கு மணிகட்ட குரங்கை தேர்ந்தெடுத்தார் பகவான்.

ஒருநாள் ஹனுமாரை சந்திக்கிறார் நாரதர்

ஆஞ்சநேயா , உன் இசையைக் கேட்டு ரொம்ப நாளாச்சு, கொஞ்சம் பாடிக் காட்டேன்.

கையில் வீணை இல்லையே...

இந்தா, என் மகதி வீணை, இதில் பாடு,,,, ஹமீர் கல்யாணி பாடு, கேட்கணும் போலிருக்கு.

அனுமார் பாடுகிறார். அவர் இன்னிசையில் எதிரே இருந்த மலை ஒன்று குழம்பாக உருகி ஓடுகிறது. அப்படியே இவர்கள் உட்கார்ந்திருந்த இடம் வரை வருகிறது. வீணை அதில் மாட்டிக் கொள்கிறது. அனுமார் பாட்டை நிறுத்துகிறார். ஓடிய குழம்பு அப்படியே மீண்டும் உறைந்து பாறையாய் நின்று விடுகிறது.

அந்தோ என் வீணை ஆப்பட்டுடுத்தே? என்று கலங்குகிறார் நாரதர்,

அனுமார், நாரதர், 'நீர் பாடுமே, உங்கள் பாட்டில் நதி மீண்டும் உருகி வீணை வந்து விடும்' என்கிறார்.

நாரதர் பாடுகிறார். பாடினார், பாடினார், பாடிக் கொண்டே இருந்தார், நாட்கள் நகர்ந்தனவே தவிர நதி அசைந்து கொண்டுக்கவில்லை.

கடைசியில் தோல்வியை ஒப்புக் கொண்ட நாரதர், 'அப்பா, அனுமா, சங்கீதத்தில் என்னை மிஞ்சியவன் யாருமில்லை என்ற இறுமாப்பில் இருந்தேன், என் கண்களைத் திறந்தாய்!, தயவு செய்து மீண்டும் பாடி என் வீணையை மீட்டுக் கொடு' என்கிறார்.


இப்படி, கதைகள் மூலமே, ஹரிகதைகள் மூலமே இசை இந்தியாவில் பரவியது. கச்சேரிகள் மூலம் அல்ல. இன்றைய இந்த 'கச்சேரி format' , மிகவும் பிற்காலத்தில் வந்தது. 100, 120 வருடங்களுக்கு முன்! அதற்கு முன் கச்சேரி என்று கிடையாது. மும்மூர்த்திகள் காலத்திலும் கிடையாது. வயலின் கூட இந்திய இசையில் கிடையாது. வயலின் வெளி நாட்டில் இருந்து work permit வாங்கிக் கொண்டு வந்தது. பின்னர் மெட்ராஸ் பிடித்துப் போய் க்ரீன்கார்ட் வாங்கிக் கொண்டு விட்டது!

இப்போது இசைக்கு எப்படியோ ஒரு format வந்து விட்டது. முதலில் வர்ணம்...இப்போது சில ஆர்டிஸ்டுகள் கச்சேரிக்கு முன் உரையே நிகழ்த்துகிறார்கள். காதில் ஜிமிக்கி ஆடுகிறது. பட்டுச் சேலை பரபரக்கிறது. நன்றாகப் பாடுகிறார்களோ இல்லையோ,  ஒரு frequent interval இல் பக்க வாத்தியத்தைப் பார்த்து சில மைக்ரோ மீட்டர் மந்தகாசப் புன்னகை சிந்துகிறார்கள்.  தீம் எல்லாம் கூட வைத்துப் பாடுகிறார்கள்.

[ஒரு கவிதை:

நின்னே பஜன

இந்த வருடம் கலைமாமணி கிடைக்குமா?
சபாவில் கூட்டமே இல்லையே?
ஏனோ இந்த வருடமும்
மத்தியான ஸ்லாட் தான் கிடைக்கிறது
மைக் சரியாக வேலை செய்யுமா?
புடவைக்கு மேட்சாக எடுத்து வைத்த
நெக்லஸ் மறந்து விட்டதே!
'ராமா, உன்னை அல்லால் ஒரு நினைவே இல்லை'
என்ற பொருள் கொண்ட கீர்த்தனையை
பாடகி ஆரம்பித்தார்...]

மிகப்பொதுவாக வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு தியாகராஜ ஸ்வாமிகள், தன் ஓட்டு வீட்டில் பசி பட்டினி கிடந்து உஞ்ச விருத்தி எடுத்து பக்தி ஒன்றே பிரதானமாகப் பாடிய பாடல்களை இங்கே பணத்துக்காய், புகழுக்காய் ஏசி ஹாலில் அமர்ந்து கொண்டு பகட்டுக்கும் டம்பத்துக்கும் மத்தியில் பாடுகிறார்களே என்பது.

உதாரணமாக, த்யாகராஜர் கிட்டத்தட்ட ஒரு கையறு கிளையில் இதைப் பாடுகிறார்.

ராமா , உனக்கு உபசாரம் செய்ய, பணிவிடை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த சந்தடியில் என்னை மறந்து விடாதே,சீதை இருக்கிறாள், அந்தரங்கமாக சேவை செய்ய லக்ஷ்மணன் இருக்கிறான், நீ கட்டளை இடாமலே உன் தேவைகளைப் புரிந்து கொண்டு நிறைவேற்ற எல்லாவற்றுக்கும் மேலாக அனுமன், உன் கண் அசைவைப் புரிந்து கொண்டு சேவையாற்ற!

இத்தனை பேர் இருக்கிறார்கள் ; இந்த ஏழையால் நமக்கு ஆவதென்ன என்று நினைத்து விடாதே, உன் அருளை வேண்டி நான் ஒருத்தன் இங்கு கதறிக் கொண்டிருக்கிறேன் என்பதை மறந்து விடாதே

க்ருப காவெலன நின்னேனி
கீர்தினி பல்குசுனுன்டக

உபசாரமு ஜெசேவாரு உன்னாரனி மரவகுரா

ఉపచారము జేసేవారున్నారని మరవకురా

అ. కృప కావలెనని నే నీ
కీర్తిని పల్కుచునుండగ


ஜேசுதாஸ் பாடுவதைக் கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.



இதைப் பாடும்போது த்யாகராஜர் he meant it !!பாடகர் பாடும் போது அதை mean செய்கிறாரா என்று அவரைத்தான் கேட்க வேண்டும்.


உனக்கு எல்லா ராகமும் தெரிந்திருந்து என்ன பயன்? சுஸ்வரமாகப் பாடி என்ன பயன்? தாள சுத்தம், சாகித்ய சுத்தம்,ராக சுத்தம் இருந்தென்ன?  உலகில் உள்ள வாத்தியங்கள் எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டு திருவிளையாடல் பாலையா மாதிரி  பாடினாலும் என்ன பிரயோஜனம்? main ingredient பக்தி இல்லையே என்று கேட்கிறார் புரந்தர தாசர்.

'தாள மேளகளு இத்து பிரேம இல்லத கான

ஹரி கேளனு ; ஹரி தாளனு '


உங்களுக்கு ஒரு விருந்து வைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் ...கார்ன் சூப், டொமேடோ சூப்,சப்பாத்தி,ரொட்டி ,பட்டர் நான்,குல்ச்சா, மசாலா பாப்பட் , நவரத்ன குருமா ,நீல்கிரி குர்மா, ஆலு கோபி, பிந்தி பிரை , கேப்பெஜ் பொரியல் ,பாலக் பன்னீர்,குஜராத்தி கடி,கீமா மட்டர் ,தால் ,ராஜ்மா, ஜீரா ரைஸ், கீ ரைஸ், சின்சுவான் பிரைட் ரைஸ், மலாய் கோப்தா , கேப்சிகம் கறி ,வெஜ் பிரியாணி,ஒயிட் ரைஸ், கேரளா ரைஸ்,மஸ்ரூம் நூடுல்ஸ், ராய்தா,சௌத் சாம்பார், பெப்பர் அண்ட் ஜீரா ரசம்,டொமேடோ ரசம்,  ரசம், கர்ட் ரைஸ்,ஜாமூன், ப்ரூட் சாலட்,கட் ப்ரூட்ஸ்,ஐஸ் க்ரீம், டிஸ்யூ, டூத் பிக், பிங்கர் போல், etc etc இத்தனையும் இருக்கிறது.

ஆனால் உங்களுக்கு சரியான வரவேற்பில்லை. முகம் கொடுத்துப் பேசுவதில்லை, மரியாதை இல்லை, சலித்துக் கொண்டே பரிமாறுகிறார்கள், வெறும் தங்கள் பகட்டைப் காட்ட, பார் நான் எத்தனை பணக்காரன் என்று காட்ட, show off ! ;  இத்தனை அயிட்டத்தை நீ பார்த்தும் இருக்க மாட்டாய் என்ற தோரணையுடன்..அப்படிப்பட்ட விருந்தை என்ன தான் சுவையாக இருந்தாலும் நாம் ரசிப்போமா?? மோப்பக் குழையும் அனிச்சம் என்று வள்ளுவர் சொல்வது மாதிரி.

பக்தி இல்லாமல் பேகடா என்ன? பகுதாரி என்னடா என்கிறார் தாசர்.


இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இந்த கச்சேரி format இப்போது வந்தது, வர்ணம், அப்புறம் விநாயகர் பாட்டு, சின்ன கிருதிகள் இரண்டு, ராக மாலிகை , மெயின் அயிட்டம் , தனி ஆவர்த்தனம், ராகம் தானம் பல்லவி, தில்லானா, போனால் போகிறது என்று கடைசியில் தமிழில் திருப்புகழ் , மங்களம் இப்படி!


முதலில் இசை ஹரிகதை வடிவத்திலேயே இருந்தது, ஹரிகதை, பஜனை, இப்படித் தான் அது வளர்ந்தது. சங்கீதமும், கோயிலும் , பக்தியும் பிரிக்க முடியாத அம்சங்களாய்  இருந்தன. போன நூற்றாண்டில் தான் சங்கீதம் கோயில்களையும், ஏழை பக்தர்களின் ஓட்டு வீடுகளையும் தெருக் கோடிகளையும் விவாகரத்து செய்து விட்டு மெஜெஸ்டிக் சபாக்களை மேரேஜ் செய்து கொண்டு விட்டது .

நாடகம், தெருக்கூத்து இவைதான் சினிமாவுக்கு முன்னோடி; ஆனால் சினிமா வந்ததும் அவை வழக்கொழிந்து ஒபோய் விட்டன; அதே போல் தான் ஹரிகதை கச்சேரிக்கு முன்னோடி; இப்போது அது அருகி விட்டது; ஏதோ சில பேர் செய்கிறார்கள்...uniqueness , originality இல்லை,, யாரோ ஒரு ஹரிகதை பிரபலத்தைப்  பின்பற்றி அவர் voice , mannerism , பாணி எல்லாவற்றியும் காபி அடித்து..


சரி....back to the topic !


நம்பர், alphabet எல்லாம் மனிதன் கண்டுபிடித்தது; அது எப்படி வாழ்க்கையை பாதிக்கும்? இயற்கைக்கு எண்களைப் பற்றித் தெரியுமா? Does Nature know how to count? கொஞ்சம் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால்,,,, சரி நமக்கு இஷ்டமான physics ஐ எடுத்துக் கொள்வோம் :) physics என்ன சொல்கிறது?

Martin Rees என்ற விஞ்ஞானி   JUST SIX NUMBERS என்ற புத்தகம் எழுதி இருக்கிறார். இயற்கை ஒரு கை தேர்ந்த mathematician என்கிறார்.

முக்கியமான ஆறு எண்கள் பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ளன என்கிறார். அந்த எண்களில் ஒரு மிகச் சிறிய மைக்ரோ மாறுபாடுகள் இருந்திருந்தாலும் பிரபஞ்சம் உருவாகி இருக்காது. இந்த 6 மாறிலிகள் (constants) நம் பிரபஞ்சத்தின் இருப்புக்குக் காரணமாகின்றன. உதாரணமாக N என்பது அணுவில் உள்ள கூலூம் விசைகளுக்கும் ஈர்ப்பு விசைக்கும் உள்ள விகிதம். இது மிகப் பெரிய எண் . இதில் ஒரு ஜீரோ குறைந்தாலும் நாமெல்லாம் வந்திருக்க மாட்டோம்.

பிரபஞ்சம் ஏன் இவ்வளவு கச்சிதமாக இருக்கிறது என்ற கேள்விக்கு anthropic principle என்ற ஒன்றை காரணம் சொல்கிறார்கள். நாம் பூமியில் இருப்பது மிக மிக மிக அதிர்ஷ்ட வசத்தால். கொஞ்சம் சூரியனுக்குப் பக்கத்தில் இருந்தால் வெந்து போவோம். கொஞ்சம் தூரத்தில் இருந்தால் உறைந்து போவோம். பக்கத்தில் வியாழன் இல்லை என்றால் விண்கற்கள் தாக்கியே செத்துப் போவோம். நிலா இல்லை என்றால் நம் ஆர்பிட்  நிலையாய் இராது;ஏன் எப்படி கச்சிதமாக இருக்கிறது ; யாராச்சும் இதன் blueprint ஐ டிசைன் செய்தார்களா என்று கேட்டால் 'அது அப்படி இருப்பதால் தான் நீ தோன்றி இந்தக் கேள்வியைக் கேட்க முடிகிறது' என்கிறார்கள். எப்படி சரியாக வட்டத்துக்குள் அம்பை எய்தீர்கள் என்று கேட்டால் 'ரொம்ப சிம்பிள், முதலில் எய்து விட்டு பிறகு வட்டத்தை வரைந்து கொள்வது' ...ரொம்பவே careful ஆக tune செய்யப்பட்டு பிரபஞ்சம் உருவானதா இல்லை குருட்டாம்போக்கில் உருவாகி மனித மூளைக்கு tune செய்யப்பட்டது போன்ற பிரமையை உருவாக்குகிறதா?

answer :  தெரியாது !

இன்னொரு முக்கியாமன எண் இந்த மூன்று. ஆன்மீகத்தில் மும்மூர்த்தி, மூன்று கண் மூன்று உலகம்  என்று என்னென்னவோ சொல்கிறோம். இயற்பியலில் இது எப்படி முக்கியம் என்றால் நம் பிரபஞ்சத்தில் மூன்று பரிமாணங்கள் (spatial dimensions ) உள்ளன. குறைந்தோ அதிகமாகவோ இருந்தால் நம்மால் இருக்க முடியாது. உதாரணம் 5th dimension ...இதைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். Interstellar விமர்சனத்துடன் :)))))))))


ஓஷோ ஜோக்:


லிட்டில் எர்னி பள்ளியில் இருந்து சீக்கிரமே வந்து விட்டான் .
" ஏன் சீக்கிரமே  வந்துட்டே' எர்னி என்றாள் அவன் அம்மா.
ஒண்ணுமில்ல...டீச்சர் மேஜைக்கு கீழ டைனமைட் குச்சி வெச்சுட்டேன்...
'எர்னி,, இது தப்பு, உடனே ஸ்கூலுக்கு திரும்பிப் போய் மன்னிப்பு கேளு'

எர்னி :  எந்த ஸ்கூல்?



சமுத்ரா..



Tuesday, June 10, 2014

கலைடாஸ்கோப் -109

கலைடாஸ்கோப் -109 உங்களை வரவேற்கிறது.

மீண்டும் நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும்.

“Write. Rewrite. When not writing or rewriting, read. I know of no shortcuts.”
—Larry L. King
ஒரு புத்தகத்தை எழுத குறைந்த பட்சம் 100 புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பார்கள்.நிறைய நாட்களாகப் படிக்கவில்லை. அதனால் எழுதவும் இல்லை. சிம்பிள்!
A வரிசையில் சில விஷயங்கள் பேசுவோம்.

A for AshtaVakra:

அஷ்ட வக்கிரர் பற்றிய கதை புராணத்தில் வருகிறது. அவர் கருவில் இருந்த போது, தன் தந்தையின் வேத உச்சரிப்பில் பிழை உள்ளது என்று சுட்டிக்காட்ட 8 முறை ஊஹும் என்று ஆட்சேபணை செய்தாராம். தந்தைகள் சில பேருக்கு தங்கள் மகன்கள்  தங்களை விட  புத்திசாலியாக இருப்பது பிடிப்பதில்லை போலும்.எனவே அவர் தந்தை, நீ உடலில் எட்டு கோணல்களுடன் பிறப்பாயாக என்று சபித்து விடுகிறார். உடல் தான் கோணலே தவிர கோணல் புத்தி இல்லாதவர் அவர்.

மகாராஜா ஜனகருக்கும், அஷ்ட வக்ரருக்கும் அன்னியோன்யமான குரு சிஷ்யர் உறவு இருந்தது. ஜனகர், அரசராக இருந்த போதிலும் வாழ்வின் உண்மையான குறிக்கோளை அடைவதில் ஆர்வம் காட்டினார். தனக்கு ஞானம் தரத் தயாராக இருக்கும் குருவை  காலமாகத் தேடி வந்தார்.

ஒருநாள் ஜனகரின் அரசவையில் அஷ்ட வக்கிரர் நுழைகிறார். அவரது வினோதமான உருவத்தைப் பார்த்து சபையில் இருந்தவர்கள் உடனே வாய்விட்டு சிரித்து விடுகிறார்கள். அஷ்ட வக்கிரர் " என் உடலில் உள்ள கோணல்கள் மட்டுமே உங்களுக்குத் தெரிகிறது. ஆனால் என் சித்தம் நடுநிலை தவறாது நேராக நிற்கிறது; அதைக் காணத் தவறிய உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் ;என்று சொல்கிறார்.

ஜனகருக்கு தன்னால் ஞானத்தை அளிக்க முடியும் என்று அஷ்டவக்ரர் சவால் விடுகிறார். கடைசியில் ஜனகர் அவரிடம் இருந்து ஞானம் அடைகிறார்.

அஷ்ட வக்கிரர் ,ஜனகரின் அரண்மனையில் தங்கி அவருக்கு ஞான போதனைகள் செய்கிறார். இதை சகிக்காத அவரது சீடர்கள் ' ஜனகர் வெறுமனே பகட்டுக்காக ஞானி போல நாடகம் ஆடுகிறார். அரண்மனை சுகபோகங்கள் என்ன, ராணிகள் என்ன, நகை ,ஆபரணங்கள் என்ன? இவராவது ஞானியாவது? நம் குரு இவரது பகட்டுகளில் மயங்கி விட்டார்' என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

ஒருநாள் அ .வ , ஜனகருக்கு தனி அறை ஒன்றில் உபதேசம்  செய்து கொண்டிருக்கிறார்.அப்போது , பணியாள் ஒருவன் ஓடி வந்து, அரசரே, அரண்மனையில் நெருப்பு பற்றிக் கொண்டது; ஆபரணங்கள், ஆடைகள் எல்லாம் நாசம்; உடனே வாருங்கள் என்கிறான். ஜனகர், "அப்படியே ஓடி விடு, நான் என் குருவுடன் இருக்கும்போது தொந்தரவு செய்யக் கூடாது என்று தெரியும் அல்லவா? என்ன தைரியம் உனக்கு? ஓடி விடு" என்று கோபிக்கிறார்.

இன்னொருநாள் அ .வ. தன் சீடர்களுக்குப் உபதேசம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது , பணியாள் ஒருவன் ஓடி வந்து , 'நீங்கள் காய வைத்திருந்த துணிகளை எல்லாம் குரங்குகள் கிழித்துக் கொண்டிருக்கின்றன, உடனே போய்ப் பாருங்கள்' என்கிறான். சீடர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடிப் போய்  பார்க்கிறார்கள். அங்கே குரங்குகள் எதுவும் இல்லை.

அ .வ, அவர்களைப் பார்த்து, இப்போது ஜனகரின் தன்மையை, அவரது அர்ப்பணிப்பைப் புரிந்து கொண்டீர்களா? தன் அரண்மனை எரிந்தாலும் சத்சங்கத்தை தொந்தரவு செய்ய விரும்பாத அவர் எங்கே? வெறும் கெளபீனத் துணிகளுக்காக சத்சங்கத்தை மறந்து விட்டு ஓடிய நீங்கள் எங்கே என்கிறார்.


நம்மிடம் பெரும்பாலான விஷயங்களில் அந்த அர்பணிப்பு, Sincerity ஒருமுகத் தன்மை இருப்பதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சும்மா எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் மேய்ந்து கொண்டு இருக்கிறோம். எல்லாவற்றிலும் ஒரு compromise செய்து கொள்கிறோம்

பட்டினத்தார் சொல்வது போல

கை ஒன்று செய்யக் கண் ஒன்று நாட
கருத்தொன்று எண்ண - புலால் கமழும்
மெய் ஒன்று சேர

இப்படி ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு திசையில் நம்மை இழுத்துச் செல்கிறது.

புலன்கள் என்றதும் ஒன்று ஞாபகம் வருகிறது.

விவேக சூடாமணியில் ஆதி சங்கரர் சொல்கிறார்.

- ஸ்பரிசத்தால் கெடுவது யானை  : ஆண் யானையைப் பிடிக்க குழி தோண்டி இலை தழைகளை மூடி, அந்தப் பக்கத்தில் பெண் யானையை நிறுத்தி வைப்பார்கள். ஆண் யானை பெண் யானையின் தீண்டுதலுக்கு ஆசைப்பட்டு ஓடி வந்து அந்தக் குழியில் மாட்டிக் கொள்ளும்.

-செவி இன்பத்தால் கெடுவது மான்: மானைப் பிடிக்க வேடன் கொம்பு ஊதுகிறான். அதன் இசையில் மயங்கி மான் மாட்டிக் கொள்கிறது.

- நாவின் சுவையால் கெடுவது மீன்; தூண்டிலில் மாட்டப்பட்ட இரையை சுவைக்க வந்து மாட்டிக் கொள்கிறது.

- கண்களின் இன்பத்தால் மாட்டிக் கொள்வது விட்டில் பூச்சி.

-வாசனையால் கெடுவது வண்டு.

ஆனால் மனிதனோ இந்த ஐந்து புலன்களின் மூலமும் கெட்டுப் போகிறான்.



கடவுள் தானே, ஞானம் தானே, அதெல்லாம் மெதுவாகப் பார்த்துக் கொள்ளலாம். திருப்பதிக்குப் போய் ஏசி லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி விட்டு, நகை நட்டு அணிந்து கொண்டு,வி .ஐ.பி க்யூவில் போய் ஒரு அரை நிமிடம் தரிசனம் செய்து விட்டு, உண்டியலில் 1000 ரூபாய் போட்டு விட்டு லட்டு சாப்பிட்டு விட்டால் முடிந்தது. வைகுண்டத்தில் ஒரு சீட் புக் ஆகி விடும் என்று நினைக்கிறோம்.

ராம கிருஷ்ணரிடம் சிஷ்யர் ஒருவன் வந்து, கடவுளுக்கான தாகம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறான்.ரா.கி அவனை நேரடியாக கங்கைக்கு அழைத்துச் சென்று தலையைப் பிடித்து முக்குகிறார். உள்ளே அவன் மூச்சு விட முடியாமல் திணறுகிறான். ராம கிருஷ்ணர் அழுத்துவதை விட வில்லை.அவனுக்கு இப்போது வாழ்வா சாவா என்ற பிரச்சினை.உள்ளே ஜீவ மரணப் போராட்டம் நடக்கிறது. மிகவும் போராடி தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி முட்டி மோதி வெளியே வருகிறான்.

அப்போது ரா.கி. "உள்ளே உனக்கு வேறெதாவது ஞாபகம் வந்ததா? மனைவி, வீடு, ஆசிரமம், உணவு,மாடுகள், கடன்கள், ?? இல்லையே, உயிர் பிழைத்து வர வேண்டும் என்ற ஒரே ஒரு தீவிரக் குறிக்கோள் தானே இருந்தது, கடவுளுக்கான தாகம் எப்போது இந்த அளவு இருக்கிறதோ மறு நொடியே உனக்கு அவன் தரிசனம் கிட்டும்" என்கிறார்.


A  for Arjuna

அர்ஜுனன் மிகச் சிறந்த வீரன்தான். ஆனால் சில சமயங்களில் அவனுடைய maturity level குறைவாகவே இருந்துள்ளது. இரண்டு நிகழ்ச்சிகளை சொல்கிறேன்.

1.ஒருநாள் அர்ஜுனன் தன் நண்பனும், பகவானும் ஆன கிருஷ்ணனுக்கு பிரம்மாண்டமாக பூஜை செய்ய விழைகிறான். தேசத்தின் பல்வேறு தோட்டங்களில் இருந்து புத்தம் புதிய அன்றலர்ந்த மலர்களை நூற்றுக் கணக்கான வண்டிகளில் தருவிக்கிறான்.

கிருஷ்ணன்  பூஜைக்கு வந்து அமர்கிறான்.

அர்ஜுனன், அர்ச்சனை செய்யத் தொடங்கும் முன், கிருஷ்ணன், 'அர்ஜுனா, நிறுத்து' என்று சொல்லி விட்டு 'என்ன இது, ஏற்கனவே எனக்கு அர்ச்சனை செய்யப்பட்ட நிர்மால்ய மலர்களை மீண்டும் எனக்கு அர்ப்பிக்கிறாயே , இது தான் உன் சிறப்பான பூஜையா?' என்று கேட்கிறான்.

குழப்பமடைந்த அர்ஜுனன், 'என்ன இது கண்ணா, உனக்காக ஸ்பெஷலாக
பார்த்துப் பார்த்து தருவித்த மலர்களை நிர்மால்யம் என்கிறாயே!' என்ன விளையாடுகிறாயா? , என் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டாய் என்கிறான்.

கிருஷ்ணன் புன்னைகையுடன் , 'இல்லை அர்ஜுனா, நிஜம் தான், வண்டி வண்டியாக மலர்கள் வந்து கொண்டிருந்த அதே பாதையில் காலையில் பீமனும் வந்து கொண்டிருந்தான்; மலர் வண்டிகளைப் பார்த்த பீமன், உடனே என்னை மனதில் நினைத்துக் கொண்டு, 'கிருஷ்ணா அத்தனை மலர்களும் உன் பாதங்களுக்கு அர்ப்பணம்' என்று சொன்னான். உண்மையான பக்தி எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள் என்கிறான்.


2. குரு க்ஷேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக வீற்றிருக்கிறான். அர்ஜுனன் கர்ணனுடன் மோதுகிறான். கர்ணன் , தன் அஸ்திரத்தைத் தொடுத்து , அர்ஜுனன் தேரை இருபது அடி பின்னால் நகர்த்துகிறான். கோபமடைந்த அர்ஜுனன், பதில் அஸ்திரம் தொடுத்து, கர்ணன் தேரை இருநூறு அடிகள் பின்னே நகர்த்துகிறான்,

கண்ணனை நோக்கி , ' கண்ணா, பார்த்தாயா என் பராக்கிரமம், கர்ணனை விட பத்து மடங்கு வலிமை' என்கிறான். கண்ணன் ஒரு புன்னகையை சிந்துகிறான்.

சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு அன்றைய போர் முடிந்ததும் கிருஷ்ணன் அர்ஜுனனை தேரில் இருந்து இறங்கச் சொல்கிறான்.  இருவரும் இறங்கியதும், கிருஷ்ணன், மேலே தேர்க் கொடியில் வீற்றிருக்கும் அனுமனை அங்கிருந்து விலகுமாறு கேட்டுக் கொள்கிறான். அப்போது தேர் உடனே சுக்கு நூறாக வெடித்துச் சிதறுகிறது.

கிருஷ்ணன் , 'அர்ஜுனா, பீஷ்மரின் சக்தி வாய்ந்த அஸ்திரங்கள் இந்த ரதம் முழுவதும் தைத்துள்ளன. என்னுடைய சக்தியை இதில் பிரயோகித்து இதை சிதறி விடாமல் நான் காத்து வந்தேன், மேலும், அனுமானின் ரட்ஷை இந்தத் தேருக்கு இருந்தது. இத்தனை சக்திகளால் கட்டுப்பட்ட இந்தத் தேரை, 20 அடிகள் பின்னால் நகர்த்திய கர்ணன் பெரியவனா? ஒன்றும் இல்லாத வெறும் வண்டியை 200 அடிகள் பின்னால் நகர்த்திய நீ பெரியவனா? என்று கேட்கிறான்.அர்ஜுனன் தலை குனிகிறான்.

-சில சமயம், சந்தர்ப்பம், சூழ்நிலை, காலம் இவைகளை கருத்தில் கொள்ளாமல் நாம் ஒப்பீடு செய்கிறோம். நான் இவ்வளவு செய்திருக்கிறேன்; அவன் என்னோமோ இத்துனூண்டு செய்து விட்டு அலட்டிக் கொள்கிறான் என்கிறோம். அந்த 'இத்துனூண்டு' அவன் சக்திக்கு மிகப் பெரியதாக இருக்கலாம்.


A for AIDS


மனிதனுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படுகின்றன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், ஒரு நுண்ணுயிரி ஏன் மனிதனுக்கு நோய் ஏற்படுத்துகிறது?? லாஜிகலாகப் பார்த்தால் மனிதனுக்கு நோய் ஏற்படுத்துவது நுண்ணுயிரிக்கு சாதகமானது இல்லை. ஆரோக்கியமான உடல் தான் அதற்கு நீண்ட நாள் இருக்க இடம் அளிக்க முடியும் . ஆனால் ஒரு மனிதனை நோய்வாய்ப் பட வைப்பதில் சில நன்மைகள் அவைகளுக்கு இருக்கின்றன. ஒன்று , ஒரு ஆள் சலித்து விட்டால் அவனது வாந்தி, தும்மல், இருமல்,சளி  மூலம் வெளியேறி வேறொரு ஆளை அடைந்து விடலாம்.மேலும், தன்னை வேறொரு host இடம் கொண்டு சேர்க்கும்  carrier ஐ கண்டுபிடிக்கலாம். பெரும்பாலான நுண்ணுயிரிகள் கொசுக்களை மிகவும் விரும்புகின்றன. ஏனென்றால் கொசுக்கள் அவைகளை நேரடியாக host இன் ரத்தத்தில் தற்காப்பு செல்கள் விழித்துக் கொள்ளும் முன்னேயே அலேக்காக சேர்த்து விட முடியும்.இதனால்தான் பெரும்பாலான தொற்று நோய்கள் சாதாரண கொசுக்கடியில் ஆரம்பிக்கின்றன. ஆனால் எய்ட்ஸ் இதற்கு விதி விலக்கு . கொசுவின் உடலில் ஒட்டிக் கொள்ளும் ஹெச்.ஐ.வி வைரஸ் (ஏனோ) கொசுவின் வளர்சிதை  மாற்றத்துக்கு ஜீரணமாகி விடுகிறது. ஆனால் வைரஸ்கள் தங்கள் தடைகளை அகற்ற mutation எனப்படும் மாற்றங்களுக்கு உட்படுபவை. அப்படி ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் ஆபத்து தான். ஒரு சாதாரண கொசுக்கடி, எய்ட்ஸ்!!!

நுண்ணுயிரிகளுக்கு மனிதனைப் பற்றிய கவலை இல்லை. அவை அவற்றின் வேலையை செய்கின்றன. பெரும்பாலான நோய்கள் ஏற்படுவது கிருமிகள் நமக்கு ஏதோ செய்கின்றன என்பதால் அல்ல. நம் உடல் அவைகளுக்கு எதிராக சில முயற்சிகள் எடுப்பதால். கிருமிகளுக்கு எதிரான போரில் நம் உடலின் பாதுகாப்பு சிஸ்டம் நல்ல ஆரோக்கியமான செல்கள் சிலவற்றையும் தவறுதலாக அழித்து விடுகிறது.

மனித உடலுக்கு லட்சம் வழிகளில் ஆபத்து வர முடியும். லட்சம் வெள்ளை அணுக்களை ரெடியாக வைத்திருப்பது இயலாத காரியம். எனவே நம் உடல் ஒரு சில வீரர்களை மட்டும் active duty யில் வைத்திருக்கும்.ஏதேனும் ஒரு அந்நிய வஸ்து உள்ளே நுழைந்தால் அந்த சில வெள்ளை அணுக்கள் அதை அடையாளம் கண்டு கொண்டு இன்னும் நிறைய வீரர்கள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கும். உடல் நிறைய வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும். நோய் ஏற்படும் போது நாம் களைப்பாக உணர்வது இதனால் தான்.

பொதுவாக, உடலின்  வெள்ளை அணுக்கள் இரக்கம் அற்றவை. தன் வழியில் வரும் ஒவ்வொரு கடைசி அந்நியனையும் கொன்றழித்து கடைசியில் தான் சாகவும் தயங்காதவை . வெள்ளை அணுக்களின் இந்த இரக்கமற்ற தாக்குதல்களில் இருந்து தப்பிக்க வைரஸ்கள் இரண்டு யுத்திகளைக் கையாள்கின்றன.ஒன்று உடனடியாக தாக்கி விட்டு வெளியேறி விடுவது. இன்னொன்று வெள்ளை செல்கள் கண்டுபிடிக்காத படி மெளனமாக செல்களின் உட்கருவில் அமர்ந்திருப்பது. மாதக் கணக்கில், வருடக் கணக்கில். ஹெச். ஐ. வி வைரஸ் இந்த வகை. உள்ளே நுழைந்ததும் அவை அவசரக் குடுக்கை போல செயல்பட்டு வெள்ளை செல்களை உசுப்பி விடுவதில்லை. நிதானமாக, பொறுமையாக இந்த ஆளை அணு அணுவாக அனுபவித்து சாகடிப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டு 'காதல் என்பது தூங்கும் மிருகம்' என்று சினிமா பாட்டுகள் சொல்வது போல தூங்கும் மிருகங்களாக உள்ளே இருக்கின்றன.

வெயிட். இந்த வைரஸ்கள் மிருகமும் அல்ல. தாவரமும் அல்ல. உண்மையில் அவைகளுக்கு உயிரே இல்லை.பீட்டர் மெடாவர் என்ற உயிரியல் அறிஞர் வைரஸ்களை 'A piece of nucleic acid surrounded by bad news' என்கிறார். உயிரற்ற அவை ஒரு தகுதியான சூழ்நிலை கிடைத்ததும் அந்த உயிரியின் செல்களில் புகுந்து அதன் மரபணு தகவல்களைத் திருடி தனதாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுகின்றன. வைரஸ்கள் மிகவும் எளிமையானவை. அவைகள் இனப்பெருக்கம் செய்ய ஏழெட்டு ஜீன்களே போதும். (பாக்டீரியாக்களுக்கு ஒரு சில லட்சம்  செல்கள் தேவைப்படுகின்றன)இத்தனை 'எளிமையான' இந்த ஹெச். ஐ.வி. வைரஸ் ஒரு மனிதனின் வாழ்வை எத்தனை சிக்கலாக்கி விடுகிறது பாருங்கள்.


A for Absolute

Absolute மற்றும் Relative என்று இரண்டு சொற்கள் இருக்கின்றன. absolute என்றால் எதையும் சாராத , தனித்துவமான, தனித்து இயங்கக் கூடிய ஒன்று என்கிறார்கள். ஆனால் absolute என்று அழைக்கப்படத் தகுதியான ஒன்று இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை . காலம்  வெளி, இவைகள் கூட சார்புடையவை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

சரி கடவுளையாவது absolute என்று சொல்ல முடியுமா என்று யோசிப்போம். கடவுளை மொழிகள் சம்பூர்ணா(முழுமையான), அத்யந்தா(நிரம்பிய), அசீமா (எல்லை அற்ற) ,ஸ்வதந்த்ரா (சுதந்திரமான) ,அமீஷா (கலப்படமற்ற)  என்றெல்லாம் வர்ணிக்கின்றன. ஆனால் இந்த adjective கள் கடவுளுக்கு உண்மையிலேயே பொருந்துமா? எதனுடனும் சாராத ஒன்று பிரபஞ்சத்தை ஏன் படைக்க வேண்டும்? பகவான் ஏதோ ஒரு விதத்தில் தன் பக்தனை சார்ந்துள்ளான் . படைப்பவன் ஒரு விதத்தில் படைப்பை சார்ந்துள்ளான் .பக்தன் இல்லாத பரமன் ஏது ? பகவான் உலகைப் படைத்ததன் மூலம், அவதாரங்கள் எடுப்பதன் மூலம் தன் தனித்துவத் தன்மையில் இருந்து இறங்கி வருகிறானா??

கடவுள் உண்மையிலேயே absolute ஆக மாறிவிட்டால் எல்லாமே அழிந்து போய் விடுமா?

யோசிப்போம்.


ஓஷோ ஜோக்.


பார் ஒன்றில் நுழைந்த ஒரு முரட்டு தடியன் கண்டிப்பாக சண்டை போடும் முடிவில் இருந்தான். பாரின் நடுவில் நின்று கொண்டு தன் வலது கைப் பக்கம் இருப்பவர்களைப் பார்த்து 'இந்தப் பக்கம் இருப்பவர்கள் அறிவில்லாத வெட்டி புறம்போக்கு சோம்பேறி சனியன்கள் ',,இதை மறுப்பவர்கள் என்னுடன் சண்டைக்கு வாருங்கள் என்று ஆர்ம்ஸை முறுக்கினான். யாரும் எழுந்திரிக்கவில்லை. இப்போது அவன்  இடது பக்கம் திரும்பி 'இந்தப் பக்கம் இருப்பவர்கள் தொடை நடுங்கி பசங்கள் ; கோழை அலிகள்' என்று திட்டினான். திடீரெனெ அங்கே உட்கார்ந்திருந்த முல்லா எழுந்தார்.

'என்ன, என்னுடன் சண்டை போடுகிறாயா? 'என்றான் தடியன்.

'இல்லை அய்யா, நான் இங்கே தவறான பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கறேன் என்று தோன்றுகிறது. மாற்றிக் கொள்கிறேன்' என்றார்.


சமுத்ரா

Sunday, March 30, 2014

கலைடாஸ்கோப் -108

கலைடாஸ்கோப் -108 உங்களை வரவேற்கிறது.


போன கலைடாஸ்கோப்பில் பாதத்தைப் பற்றிப் பேசினோம். இன்று தலை!


"A good head and a good heart are always a formidable combination"
-Nelson Mandela

சிவாவின் 112 தியானப் பயிற்சிகள் பற்றி ஓஷோ விரிவாகப் பேசி இருக்கிறார். அதில் ஒரு தியானத்தை இப்போது பார்ப்போம்.

"உங்களைத் தலையற்றவராக உருவகித்துக் கொள்ளுங்கள்"

இந்த தியானம் மிகவும் உபயோகமானதாகும். ஏனென்றால் நாம் எப்போதும் நம் மையம் நம் தலையிலேயே இருப்பதாக (தவறாக) நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  மூளைக்கு மிக அதிக முக்கியத்துவம் தந்து விடுகிறோம். இந்த உணர்ச்சி நம்மை மேலும் மேலும் இறுக்கமானவர்களாகவும் பதட்டப்படுபவர்களாகவும் வைத்திருக்கிறது. ஒரு மாறுதலுக்காக சில நாட்கள் உங்கள் தலை மறைந்து போய் விட்டதாகவும் உங்கள் மையம் இதயத்துக்கு இறங்கி வந்து விட்டதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் பார்ப்பவை, கேட்பவை, நினைப்பவை இவையெல்லாம் இதயத்தில் இருந்தே செய்வதாக உருவகியுங்கள்.

இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினை தலையில் இருந்து இதயத்துக்கு வர முடியாதது தான்.24 x 7 நாம் தலையிலேயே வாழ்கிறோம். ஒரு வக்கீல் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பின்னும் வக்கீலாகவே இருக்கிறார். ஒரு ஆசிரியர் வீட்டுக்கு வந்த பின்னும் ஆசிரியராகவே இருக்கிறார். ஒரு மேனேஜர் ஆபீசில் இருந்து வீடு திரும்பினாலும் கூட மேனேஜராகவே வலம் வருகிறார். இதயத்துக்கு இறங்கி வர முடிவதில்லை. ஈகோ வை, இமேஜை விட்டுக் கொடுக்க முடிவதில்லை. ஹை கோர்ட் நீதிபதி, ஒரு ஜெனரல் மேனேஜர், வீட்டில் குழந்தைகளுடன் உப்பு மூட்டை விளையாடுவதா??? வெங்காயம் நறுக்குவதா? கடைக்கு சென்று கால் கிலோ உளுந்தம் பருப்பு வாங்குவதா?????

தலை இல்லாதவராக நம்மை உருவகித்துக் கொள்வதால் இந்த அடையாளம் அழிந்து விடுகிறது. தலை இல்லாவிட்டால் இஞ்சினியர் என்ன, டாக்டர் என்ன, கவிஞர் என்ன, எல்லா அடையாளங்களும் அறுந்து விடுகின்றன. இதயம் மையமாகி விடும் போது மட்டுமே உண்மையான அன்பு மலர்கிறது. ஏனென்றால் மூளையால் அன்பு செலுத்த முடியாது. மூளையால் ஒருவரை கவனித்துக் கொள்ள (care ) முடியமே தவிர அன்புக்கு இதயம் மட்டுமே மையமாக உள்ளது. நீங்கள் வீட்டுக்கு வந்த பின்னும் கூட டாக்டராகவோ, விஞ்ஞானிவாகவோ இருந்தால் உங்களால் அன்பு செலுத்த முடியாது.. இதயம் மையமாகி விடும் போது மட்டுமே இது சாத்தியமாகிறது. மேலும் எல்லையிலாத அமைதி உங்களுக்குள் நிறைகிறது.

ஓஷோ மேலும் சொல்கிறார்: தியானத்தில் மேலும் ஆழ்ந்து செல்லும் போது இதயம் கூட உங்கள் உண்மையான மையம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.அறிவு (intellect ) , உணர்வுகள் (emotions ) இவை இரண்டையும் கடந்த ஒரு மையம் உங்களுக்கு இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். தொப்புளுக்கு அருகே அது இருக்கிறது. இந்த மையத்தின் மீது தான் ஜப்பானில் தியானம் செய்கிறார்கள். இதயத்தின் மீது தியானம் செய்வது சிறந்தது என்றாலும் சில சமயம் அது உங்களை உணர்சிகளில் இருந்து மீள இயலாமல் செய்து விட வாய்ப்புள்ளது.

சரி.,,,,,, change topic ..

இப்போது சாப்பிடுவதைப் பற்றி ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

பொதுவாக நாம் சாப்பிடுவதை மிக வன்முறையுடன் செய்கிறோம். விலங்கின் உள்ளுணர்வு இன்னும் நமக்குள் இருக்கிறது. மிருகங்கள் எந்த ஆயுதங்களையும் உபயோகப்படுத்துவதில்லை.அவை தம் பற்களையும் நகங்களையும் பயன்படுத்தியே இரையைக் கொன்று தின்கின்றன. அதே போல நாம் உணவு உண்பதை ஒரு கொலை போலவே செய்கிறோம். அது சைவ உணவாகவே இருந்த போதிலும். மிருகங்கள் உணவை அவசர அவசரமாக உண்கின்றன. எதிரிகளிடம் இருந்து, போட்டி விலங்குகளிடம் இருந்து  ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தில். மனிதனும் காடுகளில் வாழ்ந்த போது இந்த அவசரத்துடனேயே சாப்பிட்டான்.அந்தப் பழக்கம் இன்னும் நமக்குள் unconscious ஆகத் தொடர்கிறது. இன்று நமக்கு எந்தத் தலை போகிற அவசரமும் இல்லை.ஆற அமரச் சாப்பிடுவதற்குள் எவனாவது வந்து மனைவியையோ மகளையோ கடத்திக் கொண்டு போய் விடுவான் என்ற பயமும் இல்லை. உணவை அனுபவித்து உண்பது எப்படி என்று நமக்குத் தெரிவதில்லை.இது நமக்குள் சென்று ரத்தமாகி, சதையாகி  நம்மை வாழ வைக்கிறது என்ற உணர்வுடன், மதித்து நாம் உண்பதில்லை.ஏதோ குப்பைத் தொட்டியில் குப்பையை வீசுவது போல உள்ளே தள்ளுகிறோம்.

ஆற அமர, பந்தியில் அமர்ந்து எல்லாருடனும் சேர்ந்து சாப்பிடுவதை நாம் தாழ்வாக நினைக்கிறோம். நின்று கொண்டு ஸ்டைலாக இரண்டு நிமிடங்களில் சாப்பிட்டு விட்டு டிஸ்யூ பேப்பரில் கை துடைத்துக் கொள்கிறோம். பந்தியில் அமர்ந்ததும் சாதம் வரை எல்லா அயிட்டங்களும் பரிமாறி முடிக்கும் வரை இலையில் கை வைக்கக் கூடாது என்பது புராதனமான பண்பாடு. சபை நாகரிகமும் கூட. மிருகங்கள் மட்டுமே போடப் போட அவசரத்துடன் பிடுங்கி சாப்பிடும்.


சத்குரு :

உங்கள் உடலை கவனித்தால் 40 லிருந்து 48 நாட்களுக்குள் ஒரு சுழற்சிக்கு உள்ளாவதை உங்களால் உணர முடியும். இந்த காலத்தை ஒரு 'மண்டலம்' என்கிறோம்.ஒவ்வொரு மண்டலத்திற்கும் உடலுக்கு 3 நாட்களுக்கு உணவு தேவைப்படுவதில்லை. சிரமமில்லாமல் அந்த நாட்களில் நீங்கள் உணவைத் தவிர்க்க முடியும்.வளர்ப்புப் பிராணிகள் கூட சில நாட்களில் உணவைத் தவிர்ப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். குழந்தைகளும் இதை செய்யும். ஆனால் இன்றோ பெற்றோர் தங்கள் குழந்தைகளை உணவு உண்ணச் சொல்லி திணிக்கின்றனர்.

விரதம் என்பது உங்கள் உடல் உங்களிடம் கேட்கும் இடைவேளை. இதனைப் புரிந்து கொள்ளும் சூட்சுமம் பலருக்கும் இல்லாததால் இந்தியாவில் ஏகாதசி என்னும்  ஒரு நாளைக் குறிப்பிட்டு வைத்தனர். இப்படிக் குறிப்பிட்டாலாவது மக்கள் இதைத் தவறாமல் கடைபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதைச் செய்தனர். ஆனால் உடலை வருத்தி, கட்டாயப்படுத்தி உணவில்லாமல் செய்வது சரியல்ல.


சரி. தியானம், யோகம் என்று போர் அடிக்க விரும்பவில்லை.


"மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா"


“What hath night to do with sleep?” 
― John Milton, Paradise Lost

“Whoever thinks of going to bed before twelve o'clock is a scoundrel.” 
― Samuel Johnson

உங்களுக்கு பகல் பிடிக்குமா? இரவா?  எனக்கு இரவு தான் பிடிக்கும்.

இரவு பயம் தருவதாக, துன்பம் தருவதாக எப்போது இருக்கும்?

1. தீராத நோய் இரவில் அதிகமாகும் போது
2. காதலன்/ காதலியின் பிரிவுத் துயர் இரவில் அதிகமாமும் போது
(காதலும் நோய் தான் என்றால் பாயிண்ட் (2) அனாவசியம்!)

மற்றபடி இரவு ஒரு gift !


இரவு வருகிறதே, காதலன் அருகில் இல்லையே என்று ஏங்கும் டைப்பில் பாடல்கள் அக இலக்கியத்தில் ஏராளம். குறுந்தொகையை எடுத்துக் கொள்வோம். ஒன்றிரண்டு பாடல்கள்:

குறிஞ்சி

வரவேண்டிய நேரத்தில் வராமல் அதென்ன பொருள் சேர்க்கப் போவது? மார்கழி வாடை வீசுகிறது! மாலை வருகிறது. இப்போது அவர் கூட இல்லை.இளைமையும் தனிமையும் இருக்கும் போது அனுபவிக்காமல் எப்போது அனுபவிப்பது??

பெருந் தண் வாடையும் வாரார்;
இஃதோ தோழி நம் காதலர் வரவே?


முல்லை 

இரவு தூக்கம் வரவில்லை. என்னடி செய்வேன்? எருமை தன் கொம்பை அசைக்கும் போதெல்லாம் அதன் கழுத்து மணியோசை அவர் வரும் தேர் மணியோசை போலக் கேட்கிறதே!

திரிமருப்பு எருமை நிற மை ஆன் 
வருமிடத்து யாத்த பகுவாய்த் தெண் மணி 


நெய்தல் 

நான் தான் இரவு தூங்காமல் புலம்புகின்றேன். நீயும் இரவு முழுவதும் ஒலிக்கிறாயே ! கடலே! யாரால் நீ துன்பமுற்றாய்?

யார் அணங்குற்றனை - கடலே ! பூழியர் 
..

வெள் வீத் தாழை திரை அலை
நள்ளென் கங்குலம் கேட்கும், நின் குரலே?

இன்னொரு பாடல்

எல்லை கழிய முல்லை மலர
கதிர் சினம் கழிந்த கையறு மாலை
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்
எவன்கொல் வாழி ?-தோழி!
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே 

இரவு வருகிறதே என்று அஞ்சும் தலைவியின் பாடல் . அகராதி இல்லாமலேயே எளிதாகப் புரியும் ...

வார்த்தைப் பிரயோகங்களைக் கவனிக்கவும்.

"கதிர் சினம் தணிந்த கையறு மாலை"!!

இரவு, வெள்ளம் போல நான்கு பக்கங்களில் இருந்தும் என்னை மெல்ல மெல்லச்  சூழ்கிறது என்கிறாள்.'கங்குல் வெள்ளம்'; இந்தத் தொடராலேயே இந்தப் பாடலை எழுதியவருக்கு கங்குல் வெள்ளத்தார் என்று பெயர் ஏற்பட்டு விட்டது! இரவை கொஞ்சம் unusual ஆக வெள்ளத்துடன் ஒப்பிட்டதால்!


கவிதை என்றால் சும்மா, மானே தேனே கண்ணே மணியே நீயில்லாமல் நானில்லை காபியில் சக்கரை இல்லை என்றெல்லாம் எழுதாமல்   இப்படிப்பட்ட catching lines ஒன்றிரண்டு இருக்க வேண்டும். படிப்பவர்கள்  'அட' என்று வியக்கும் படி!

சங்க இலக்கியங்களில் புலவர்கள் சிலர் அவர்கள் பாடிய catching lines மூலம் அறியப்படுகிறார்கள்.

*அணிலாடு முன்றிலார்
*கல்பொரு சிறு நுரையார்
*குப்பைக் கோழியார்
*மீன் ஏறி தூண்டிலார்

அணில் கொஞ்சம் பயந்த சுவாபம் கொண்ட பிராணி. கொஞ்சம் தனித்தே இருக்கும். அந்த அணில் சும்மா இறங்கி வந்து முற்றத்தில் ஜோராக பயமின்றி  விளையாடுகிறது என்றால் அங்கே பொதுவாக மனித நடமாட்டம் இல்லாத தனிமை நிலவுகிறது என்று நினைக்கத் தோன்றும். காதலனைப் பிரிந்து அப்படிப்பட்ட அமானுஷ்யத் தனிமையில் தவிக்கிறேன் என்கிறாள் தலைவி. மேலோட்டமாகப் பார்த்தால் அணிலாடு முன்றில் என்றால் ஏதோ சந்தோஷமாக  அணில்கள் விளையாடும் முன்றில் கொண்ட மகிழ்ச்சியான வீடு என்று தலைவி பாடுகிறாள் என்று நினைக்கத் தோன்றும். அப்படி இல்லை!

கல்பொரு சிறு நுரை என்றால் என்ன உவமை என்று குறுந்தொகையில் தேடிக் கொள்க!

அந்தக் காலத்தில் குறிஞ்சி, முல்லை போன்ற நிலங்களில் இயற்கை வளம் செறிந்திருந்தது . புலவர்கள் சுற்றுப் புறங்களில் தாங்கள் பார்த்த மான், மயில், குரங்கு, புன்னை மரம் இவற்றை தங்கள் பாடல்களில் பாடினார்கள். மானுண்டு எஞ்சிய நீர், குரங்கு உருட்டும் மயில் முட்டை என்றெல்லாம். இப்போதெல்லாம் முதலில் யாரும் காதல் கடிதம் எழுதுவதில்லை. எழுதினாலும் எதைக் குறிப்பிடுவது? எங்கே பார்த்தாலும் பிளாட்டுகள் , அபார்ட்மெண்ட் கள் , கார்கள், சூப்பர் மார்க்கெட்டுகள்..!! இதை வைத்து என்ன catching lines எழுத முடியும். உங்களுக்கு எழுத முடிந்தால் சொல்லுங்கள்.


சரி.

"இரவில்" ஏதோ ஒரு வசீகரம் இருப்பதாகத் தோன்றுகிறது. இரவு பற்றி ஒரு கவிதை

சூரியக் காதலன்
போனதும்
பூமிப் பெண் நாணம் கொண்டு
போர்த்தும்
கறுப்பு மேலாடை! ஹி ஹி நான் எழுதியது!


முன்பு சொன்ன அந்த catching lines மூலம் இரவு பற்றி ஒரு கவிதை எழுத முயற்சி செய்யுங்கள். catching lines என்பது எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.

சரி. கவிதை போதும்.

பூமியின் அதிசயங்களில் ஒன்று அதன் பகல் பொழுதும் இரவும் கிட்டத்தட்ட 12 மணி நேரமாக இருப்பது. மிகக் குறைவான பகல் பொழுது தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான ஒளியைத் தராமல் போகலாம். அதே சமயம் மிக அதிகமான பகல் அவைகளை கருகச் செய்து விடலாம்.

இருள் தான் பிரபஞ்சத்தின் இயற்கை என்பதை கவனித்திருக்கிறீர்களா? ஒளி செயற்கை! சராசரியாக பூமியில் இரவுப் பொழுதை ஒப்பிடும் போது பகல் சற்றே அதிகம் என்கிறார்கள்.Equinox எனப்படும் பகலும் இரவும் சமமாக இருக்கும் நாட்களிலும் கூட பகல் ஒருசில நிமிடங்கள் அதிகமாகவே உணரப்படுகிறது. இதற்குக் காரணம் வளிமண்டலத்தில் ஒளிவிலகல் காரணமாக சூரியன் தொடு வானத்தில் உதிக்கத் தொடங்கும் முன்னரேயே அதன் ஒளி நம்மை வந்தடைந்து விடுகிறது!


டெக்னிகலாக இரவு என்பது பூமியின் own நிழல் தான். பூமி சுழல்வதால் ஏற்படும் தற்காலிக ஒளி மறைப்பு! பிரபஞ்சத்தில் தன் அச்சை மையமாகக் கொண்டு சுழலாத (rotation ) கிரகங்கள் இருப்பது  மிக மிக அரிது  என்கிறார்கள். தூக்கி எறியப்படும் எந்த ஒரு பொருளும் சிறிது சுழலவே செய்கிறது. அது கோள (spherical) வடிவில் இருந்தால் சுழலும் சாத்தியக்கூறு இன்னும் அதிகரிக்கிறது. சூரியனிடம் இருந்து தூக்கி வீசப்பட்ட நெருப்புக் கோளமானது தன் முதல் angular momentum (சுழற்சி)ஐ இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. நாம் ஒரு பந்தை தரையில் சுழல வைத்தால் அது இரண்டு காரணங்களுக்காக நின்று விடுகிறது. ஒன்று காற்றின் தடை இன்னொன்று தரையுடன் உராய்வு. இந்த இரண்டும் இல்லாததால் பூமி தன் சுழற்சியை இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. (பூமியின் காற்று மண்டலம் அதனுடன் சேர்ந்தே சுழல்கிறது!)
நம் காலின் கீழே பூமி சுழல்வதால் நாம் குதிக்கும் போது வேறு ஒரு இடத்தில் ஏன் land ஆவதில்லை என்பதையும் இதுவே விளக்குகிறது. நாம் அனைவரும் பூமியுடன் சேர்ந்து ஒரே சுழற்சி வேகத்தில் இருக்கிறோம்.!!

பூமி சுழல்வதாலேயே இரவு வர வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
இரண்டு சாத்தியங்கள் பூமி சுழன்றாலும் இரவு ஏற்படாமல் வைக்க முடியும்.
ஒரு கிரகம் அதன் தாய் நட்சத்திரத்துடன் phase lock எனப்படும் நிலையில் இருந்தால். அதாவது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் (rotation ) காலமும் நட்சத்திரத்தை சுற்றும் காலமும் (revolution )ஒன்றாக அமைந்தால். (நம் நிலா போல!) இப்படி phase lock இல் இருந்தால் கிரகத்தின் ஒரு பகுதி எப்போதும் சூரியனை நோக்கிக் கொண்டிருக்க மற்ற பகுதி நிரந்தர இருளில் இருக்கும். ஒரு பேச்சுக்கு நாம் சூரியனுடன் லாக்கில் இருந்தால் (பூமி சூரியனை ஒரு நாளில் சுற்றினால் அல்லது தன்னை 365 நாட்களில் சுற்றினால்) சூரியனை நோக்கிக் கொண்டிருக்கும் சூடான பகுதியில் கடல்கள் எப்போதோ ஆவியாகி இருக்கும். சூரிய வெளிச்சம் தீண்டாத பகுதியில் -70 டிகிரி வெப்பம் நிலவலாம். அது நீரையும் ஏன், காற்றைக் கூட உறைய வைத்து விடும். பூமி கிட்டத்தட்ட வெள்ளியைப் போல ஆள் இல்லாமல் மின்னிக் கொண்டிருக்கும்!

இன்னொன்று Olber's paradox என்னும் ஒரு concept .

நாமாக இருந்தால் சனிக்கிழமை இரவு எந்த பார்ட்டிக்குப் போவது என்று யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால் ஆல்பெர்ஸ் இரவு ஏன் இத்தனை இருட்டாக இருக்கிறது என்று யோசித்தார். காலம் காலமாக பிரபஞ்சம் என்பது என்றுமே மாறாத , முடிவில்லாத(infinite ) ஒன்று என்று நம்பப்பட்டு வந்தது. (Static universe ). பிரபஞ்சம் அப்படி இருந்தால் காலம் காலமாக எரியும் நட்சத்திரங்களால் இரவு வானம் (வெளி) எப்போதோ ஒளியூட்டப்பட்டிருக்கும். இந்த ஒளியை இடையில் உள்ள ஹைட்ரஜன் வாயுத்திரள்கள் தடுக்கும் என்றாலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஆற்றலின் காரணமாக அவையும் கடைசியில் எரியத் தொடங்கி பிரபஞ்சத்தில் ஒளியை இன்னும் அதிகரிக்கும். ஆனால் பிரபஞ்சத்தில் பெரும்பாலும் குளிராகவும் கும்மிருட்டாகவும் இருக்கிறது.

பிரபஞ்சத்தின் இரண்டு பண்புகள்  இந்தப் புதிருக்கு விடையளிக்கின்றன.
ஒன்று ஒளியின் வேகம். ஒளி முடிவில்லாத வேகத்துடன் உடனே பரவுவதில்லை. எனவே சில நட்சத்திரங்களின் ஒளி இன்னும் நம்மை வந்தடையவில்லை. இன்னொன்று பிரபஞ்சம் விரிவது. பிரபஞ்சம் விரிய விரிய அது அதிக ஆற்றல் கொண்ட ஒளியை நீட்டித்து குறைந்த ஆற்றல் கொண்ட, கண்களுக்குப் புலனாகாத மைக்ரோ அலைகளாக மாற்றி விடுகிறது.

மேலும் எந்த ஒரு விண்மீனும் முடிவில்லாமல் எரிவதில்லை. குறிப்பிட்ட காலம் எரிந்து முடித்து ஓய்வெடுத்துக் கொள்கிறது!

எனவே இரவு நமக்கு எதுவும் நிரந்தரமல்ல, சாசுவதம் அல்ல, பிரபஞ்சம் உட்பட என்று நினைவுபடுத்துகிறது!!

உலகில் நீண்ட தூரப் பயணங்கள் பெரும்பாலும் இரவில்தான்  நடக்கின்றன.
நாம் தினமும் வெளியில் இடைவிடாமல்  பயணித்துக் கொண்டிருக்கிறோம். சூரியனை சுற்றிய பயணம். இந்தப் பயணத்தில் நாம் பகலில் அதிக தூரம் செல்கிறோமா இரவிலா என்று யோசித்துப் பார்த்தால், இயற்பியல் இரவில் என்று பதில் தருகிறது. இரவில் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் தூரமும் சூரியனை சுற்றும் தூரமும் கூடுகின்றன. பகலில் பூமி தன்னைத் தானே சுற்றும் தூரம் சூரியனை சுற்றும் தூரத்தில் இருந்து கழிக்கப்படுகிறது.
சுழலும் சக்கரம் ஒன்றின் மேற்பரப்பில் பொருத்தப்பட்ட காகிதத்தை கவனியுங்கள். காகிதம் சக்கரத்தின் முன் பக்கத்தில் இருக்கும் போது அது மிக விரைவாக கண்களில் இருந்து மறைந்து கீழே வந்து விடுகிறது. பின் பக்கம் கொஞ்சம் மெதுவாக மேலே ஏறுவது போலத் தோன்றுகிறது. இதே விளைவு தான் பூமிக்கும்!


இரவைப் பற்றிய ஒரு கவிதை.....மொழிபெயர்ப்புடன்!

Hymn to the night- Henry Wadsworth Longfellow

இரவுக்கு ஒரு பாடல்


I heard the trailing garments of the Night 
Sweep through her marble halls! 
I saw her sable skirts all fringed with light 
From the celestial walls! 


இரவுப் பெண்ணின் சரியும் ஆடை 
இசைக்கும் ஒலியைக் கேட்டேன் 
கறுத்த உடைகள் ககன ஒளியால் 
கதிரென மின்னுதல் கண்டேன்!


I felt her presence, by its spell of might, 
Stoop o'er me from above; 
The calm, majestic presence of the Night, 
As of the one I love.

நான் இரவினை உணர்ந்தேன் 
என்னை சுற்றிச் சூழ்ந்ததவள் கறுப்பு 
என் அன்பின் காதலி போல 
எத்தனை இதம் அவள் இருப்பு!

I heard the sounds of sorrow and delight, 
The manifold, soft chimes, 
That fill the haunted chambers of the Night, 
Like some old poet's rhymes.

சோகமும் சுகமும் கலந்து 
எத்தனை விதம் அவள் சத்தம் -அது 
தனித்த இடங்களை இனித்து நிறைக்கும் 
மூத்த கவிஞனின் சந்தம்!

O holy Night! from thee I learn to bear
 What man has borne before! 
Thou layest thy finger on the lips of Care 
And they complain no more.

புனித இரவே உன்னால் நான் 
பொறுமையின் இலக்கணம் அறிந்தேன் 
உதட்டின் மீது விரலை வைத்து -நீ 
உலகை அடக்குதல் வியந்தேன்!

Peace! Peace! Orestes-like I breathe this prayer! 
Descend with broad-winged flight, 
The welcome, the thrice-prayed for, the most fair, 
The best-beloved Night! 


விரிந்த சிறகுகள் கொண்டேன்மீது 

இறங்கு இரவே இறங்கு 
உன்னையே நான் ஆராதிப்பேன் -நீயே 
உயிர்மை தந்த இரவு!
**************




Creativity என்பதைப் பற்றிப் பேசி விட்டு முடித்துக் கொள்வோம்.




நம் எல்லோருக்குள்ளும் படைப்புத் திறன் இருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் நாம் அதை வெளிப்படுத்துவதில்லை. ஒவ்வொரு குழந்தையும் அதீதமான படைப்புத் திறனுடனேயே பிறக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்த நாம் வாய்ப்புகளை உருவாக்கித் தருவதில்லை. எனவேதான் அது சாமான்களைப் போட்டு உடைக்கிறது. destructive ஆக மாறுகிறது.

creativity என்பது மாஸ்லோவின் தேவைகளின் படிநிலைகளில் (hierarchy of needs ) மேலே உச்சியில் இருக்கிறது. அதாவது மற்ற கீழ்நிலைத் தேவைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்ட பின் , ஒரு relaxed மன நிலையில் நம் படைப்புத் திறன் வெளிவருகிறது. ஆதிமனிதன் உணவுக்கும் இருப்பிடத்துக்கும் அலைந்து கொண்டு இருந்த போது கவிதை எழுதி இருப்பான் என்று எதிர்பார்க்க முடியாது. creativity , மனிதனின் எல்லாத் தேவைகளும் நிறைவேற்றப்பட்ட பின் மேலும் மேலும் refinement ஐ விரும்புகிறான் என்று காட்டுகிறது. விலங்குகள் creative ஆக இல்லை. படைப்புத்திறன் மனிதனுக்கே உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று என்று தோன்றுகிறது. ஒரு விதத்தில் இந்த creativity மனிதனைக் கடவுளுக்கு அருகில் கொண்டு வருகிறது என்று கூட சொல்லலாம்.


நம் வேலை creative ஆக இல்லையே , செய்ததையே செய்கிறோமே , ஒரே script ஐயே எழுதுகிறோமே வாழ்க்கை ரோபோட்டிக் ஆக இருக்கிறதே என்ற ஆதங்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. வேலையில் தான் நம் படைப்புத் திறனைக் காட்டவேண்டும் என்பது இல்லை. சின்னச் சின்ன விஷயங்களில் கூட காட்டலாம்.

இன்று டெக்னாலஜியின் வளர்ச்சியால் நாம் creative ஆக இருப்பதன் வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. அதாவது ஏதோ ஒருவரின் அதீத creativity மற்ற பல பேர்களின் படைப்புத் திறனைக் குறைத்து விடுகிறது.

அந்தக் காலத்தில் பெண்கள் creative ஆக இருக்க நிறைய வாய்ப்புகள் இருந்தன.  இப்போது எல்லாமே ரெடிமேட் ஆகி விட்டது.  வீட்டில் தோட்டம் போட்டு காய்கறிகள் விளைவித்தார்கள். அதை வைத்து முற்றிலும் கையாலேயே சமையல் செய்தார்கள். மத்தியான வேளைகளில் பூ கட்டினார்கள். கோலம் போட்டார்கள். பாட்டு பாடினார்கள். ஏன் , காப்பிப்பொடி கூட வீட்டிலேயே செய்தார்கள்.இப்போது காய்கறிகள் கட் செய்யப்பட்டு பேக்கட்டுகளில் வந்து விட்டன. சாதம் மட்டும் செய்து வைத்தால் போதும் . லெமன் ரைஸ், வாங்கி பாத் என்று எல்லாப் பொடிகளும் கடைகளில் கிடைத்து விடுகிறது. கோலம்  போட்ட டைல்ஸ்கள் வந்து விட்டன. யாருக்கோ கட்டிய வீட்டில் குடியேருகிறோம் . யாருக்கோ தைத்த துணிகளை அணிந்து கொள்கிறோம். யாருக்கோ சமைத்த உணவை உண்ணுகிறோம். யாருக்கோ விளைவித்த காய்கறிகளை பழங்களை சாப்பிடுகிறோம்!

ஆனாலும், நாம் நம் creativity யை அவ்வப்போது வெளிப்படுத்தலாம்.

* மாதம் ஒருநாள் முற்றிலும் கையாலேயே சமையுங்கள். மிக்ஸி , கேஸ் இப்படி எதுவும் இல்லாமல். மசாலா வகையறாக்களை நீங்களே அரையுங்கள் ! இப்போது மால்களில் மினி சைஸ் அம்மிகள் கூடக் கிடைக்கின்றன. எப்போதும் இட்லி, உப்புமா, நூடுல்ஸ் என்று செய்யாமல் புதுப்புது அயிட்டங்களை முயற்சி செய்யுங்கள்.


* நேரம் கிடைக்கும் போது ஏதேனும் புதிதாகக் கற்றுக் கொள்ளுங்கள். புதிய பாஷை , ஸ்விம்மிங் , கேட்டரிங் , டைலரிங், சங்கீதம், நடனம் இப்படி 

* கவிதை எழுத முயற்சி செய்யுங்கள். ஏதேனும் ஓவியம் வரையுங்கள். தனியாக இருக்கும் போது பாடுங்கள்....(ஒரு safety க்கு தனியாக இருக்கும் போது என்று சொன்னேன்!) சேக்ஸ்பியர் தான் கவிதை எழுத வேண்டும் பிக்காஸோ தான் ஓவியம் வரைய வேண்டும், பிதோவான் தான் சிம்பனி செய்ய வேண்டும் என்றில்லை.  சுருக்கமாக, ஏதேனும் ஒன்றை படைக்க முயற்சி செய்யுங்கள்.

* குழந்தைகளுக்கு ரெடிமேட் பொம்மைகள் வாங்கித் தராமல் நீங்களே ஏதேனும் செய்து தர முடியுமா என்று யோசியுங்கள்.பேப்பரில் கூட எத்தனயோ art செய்யலாம். கரண்ட் போனால் உடனே யு.பி.எஸ். ஸுக்கு ஓடாமல் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து குழந்தைகளுடன் நிழல் உருவங்கள் உருவாக்கி விளையாடுங்கள்.பார்க்க 

https://www.youtube.com/user/arvindguptatoys



* புதுப்புது விளையாட்டுகளை யோசித்து குழந்தைகளுடன் விளையாடுங்கள்.
  சில creative விளம்பரங்கள் :-


பெர்மனெண்ட்  மார்க்கர்!






 
3D TV

ஆப்ரிக்கன் சபாரி

Electro recycling robot

ஓஷோ ஜோக்.

ஹென்றி தன் நண்பனுடன் சலிப்பாக சொல்லிக் கொண்டிருந்தான்.

"ஹ்ம்ம்..எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. கல்யாணம் ஆன புதிதில் என் மனைவி வாசலில் இருந்து நியூஸ் பேப்பர் கொண்டு வருவாள். என் நாய் இடைவிடாமல் குறைக்கும். இப்போது என் நாய் பேப்பர் கொண்டு வருகிறது, மனைவி குரைக்கிறாள் " ,,

நண்பன், " இதில் கவலைப்பட என்ன இருக்கிறது? எப்படி இருந்தாலும் இன்றும் உனக்கு அதே சேவைகள் கிடைக்கின்றனவே " என்றான்.

Wish you  a happy new year!!!



சமுத்ரா