இந்த வலையில் தேடவும்
Wednesday, November 19, 2014
நான் கவிஞன்...
Sunday, November 2, 2014
பாருக்குள்ளே நல்ல நாடு
பாரத நாடு
ஊழலிலே நிலை தாழலிலே
தூற்றி வாழலிலே தீமை தாளலிலே
காலமெல்லாமும் அடுத்தவன் உழைப்பில்
கழிப்பதிலே உயர் நாடு !
குப்பையிலே ஆண்கள் தொப்பையிலே -ரோட்டில்
துப்பையிலே நேரம் தப்பையிலே
நட்பின் பெயரால் பகைவர்கள் சிரித்து
நடிப்பதிலே உயர் நாடு!
குடியினிலே சண்டை அடியினிலே
காசின் பிடியினிலே கொசுக் கடியினிலே
அடிமைகள் போல் வேற்று நாட்டவர்க் குழைக்கும்
அறிவினிலே உயர் நாடு!
தூக்கத்திலே மன ஏக்கத்திலே -லஞ்ச
ஊக்கத்திலே பணிகள் தேக்கத்திலே
மாக்களைப் போலவே தாக்கி மடிந்திடும்
மனிதரிலே உயர் நாடு
கொலையினிலே யானை விலையினிலே
ஏய்க்கும் கலையினிலே சதி வலையினிலே
பழைய சாத்திரங்கள் பயனில்லை என்றறிந்தும்
போற்றுவதில் உயர் நாடு!
காட்டத்திலெ போராட்டத்திலே -வெற்று
ஆட்டத்திலே கட்சிக் கூட்டத்திலே
நாட்டினை ஆளும் நரிகளின் வஞ்சக
நகைப்பினிலே உயர் நாடு
கள்ளத்திலே தீமை உள்ளத்திலே -ஊரில்
வெள்ளத்திலே சாலைப் பள்ளத்திலே
நல்லவன் சுகமாய் வாழ விடாது
நெருக்குவதில் உயர் நாடு!
பட்டியிலே மதுப் புட்டியிலே -கஞ்சித்
தொட்டியிலே கந்து வட்டியிலே
வெட்டி வேலை செய்து வீண் வம்பு பேசும்
வீரரிலே உயர் நாடு!
தூசியிலே தண்ணீர்ப் பாசியிலே - கயவர்
ஆசியிலே விலை வாசியிலே
ஊசியை வாங்கி ஒட்டகக் கணக்கெழுதும்
ஊழலிலே உயர் நாடு!
மாசினிலே கோர்ட்டின் கேசினிலே
ஆசிட் வீசினிலே ஸ்கூலின் பீஸினிலே
பேசி மயக்கும் பெருந் தலைவர்கள்
பிறப்பினிலே உயர் நாடு
பகையினிலே போலி நகையினிலே
மோச வகையினிலே மக்கள் தொகையினிலே
புகையினில் திளைத்து புற்றுக்கு மாயும்
பெருமையிலே உயர் நாடு
சமுத்ரா
Friday, July 19, 2013
வாலி - வைணவம் தந்த வைரம்
இன்னொரு கவிதைப் புத்தகத்தை
கிழித்துப்
போட்டுவிட்டான்
எமன்!
Tuesday, September 4, 2012
எமிலி டிகின்ஸனின் காதல் கவிதைகள்
சங்க காலத்தில் பெண்கள் எழுதிய காதல் கவிதைகளே செறிந்திருந்தன.தலைவனுக்கு ரொமாண்டிக் ஆக யோசித்து காதல் கவிதைகள் எழுதுவதற்கு நேரம் இருக்கவில்லை.அவனுக்கு போர்கள் இருந்தன. திரைகடல் ஓடி பொருள் சேர்க்கும் அவசியம் இருந்தது. தலைவி வீட்டில் சும்மா தான் இருந்தாள். டி.வி யோ , ஃபேஸ்புக்கோ, நாளைக்கு துளசி புருஷனுக்கு கோர்ட்டில் என்ன தீர்ப்பு வரும் என்று வாழ்வை சுவாரஸ்யமாக்கும் மெகா சீரியல்களோ இல்லை.எனவே அவள் தலைவனை எண்ணி கவிதை எழுத ஆரம்பித்தாள். தான் அம்மா வீட்டில் எப்படி காலத்தை கழித்தேன், (தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும் சிற்றில் இழைத்தும், சிறுசோறு குவைஇயும் என்றெல்லாம் )என்ன விளையாடினேன், தலைவனை எங்கு எப்போது முதன்முதலில் பார்த்தேன், எப்படி இருவருக்கும் காதல் மலர்ந்தது, தலைவனின் நாடு எப்படி இருந்தது,(மானுண்டெஞ்சிய கழலி நீர்) இப்போது தலைவன் இல்லாததால் எப்படி தவிக்கிறேன் என்பதையெல்லாம் விலாவாரியாக கவிதைகளில் சொன்னாள்.
இடைக்காலத்தில் எப்படியோ இந்த காதல் கவிதைகளை பெண்களிடம் இருந்து ஆண்கள் பிடுங்கிக் கொண்டார்கள். போர்கள் மறைந்தன. அறிவியல் வளர்ந்தது.Work from home எல்லாம் வந்து விட்டது.எனவே ஆண்கள் பொழுது போகாமல் காதல் கவிதை எழுத ஆரம்பித்தார்கள். ஆண்களின் இந்த கவிதை எழுதும் வெறி,இப்போது யொய் திஸ் கொலவெறி என்ற அளவில் வந்து விட்டிருக்கிறது. என்னதான் இருந்தாலும் பெண்களின் காதல் கவிதைகள் போன்று ஆண்களுடையது அவ்வளவு ஆழமாக இருப்பதில்லை. பெண்களின் உணர்வுகள் மென்மையானவை. ஒரு பெண் தன் உணர்வுகளை,தன் காதல் தவிப்புகளை, ஆதங்கங்களை, வெளிப்படையாக சொல்லிவிட முடியாது. சொல்லக் கூடாது என்று இல்லை. அவளது biology அப்படி இருக்கிறது. ஆண் ஒருவன் ஒரு பெண்ணை கலவிக்கு நேரடியாக அழைக்கலாம். ஆனால் பெண் அது தன் கணவனாகவே இருந்தாலும் அதை பூடகமாகத் தான் உணர்த்த வேண்டும். மல்லிகைப்பூ , அவனுக்கு பிடித்த பெர்பியூம், அவனருகில் சென்று நின்று கொண்டு ஒரு அசட்டுப்புன்னகை இப்படி...அப்படி சொன்னால்தான் அழகு. இப்போது சில பெண்கள் புரட்சி, முன்னவீனத்துவம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு முலை, புணர்ச்சி, குறி என்றெல்லாம் எழுதத் தலைப்பட்டுள்ளார்கள். கவிதைகளில் எப்போதாவது ஸ்ட்ரெஸ் செய்ய இவைகளை உபயோகிக்கலாம். (ஆண்டாள் மாதிரி) இவைகள் தான் கவிதை என்று இருந்துவிடக் கூடாது.அப்படிப்பட்ட கவிதைகள் படிக்க அருவருப்பை மட்டுமே தருகின்றன.
இப்போது எமிலி டிகின்சனின் சில காதல் கவிதைகளைப் பார்க்கலாம். என்னால் இயன்ற அளவு மொழிபெயர்த்துள்ளேன். எமிலியின் கவிதைகள் குறிப்பாக காதல் கவிதைகள் புரிந்து கொள்ள கடினமானவை. காதல் கவிதைகளை எல்லாருக்கும் புரியும்படி எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அது நம்முடைய சொந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அதனால் என்ன வெளிப்படுத்துகிறோம் என்று அந்த உணர்வு நமக்கு மட்டும் புரிந்தால் போதுமானது. எமிலியின் கவிதைகளைப் படிக்கும் போது நம்மால் அவளுடைய ஒரிஜினல் உணர்வுகளை கொண்டுவரவே முடியாது. மேலும் அதை மொழி பெயர்க்கும் போது அது இன்னும் நீர்த்துப் போகிறது. I held a jewel in my fingers என்பதை 'விரல்களில் ஏந்தினேன் வைரம் ஒன்றை' என்று ஓரளவு தமிழில் கவிதை form -க்கு பெயர்க்கலாம். ஆனால் அவள் எதை நினைத்து இதை எழுதினாள் என்பதை நம்மால் மீண்டும் கொண்டுவரவே இயலாது.
சரி, பிறகு எதற்கு வேலை மெனக்கெட்டு மொழி பெயர்க்கிறாய், show off ?என்று நீங்கள் கேட்கலாம் அல்லது நினைக்கலாம். I dont know . 'ரெண்டுல தான் ஒன்னைத் தொட வரவா' 'டாடி மம்மி வீட்டில் இல்லை' 'மஞ்சக்காட்டு மைனா' 'வச்சுக்கவா வச்சுக்கவா 'போன்ற இலக்கியத் தரம் மிக்க தமிழ் கவிதைகளை கேட்டுக் கேட்டு ஒன்பதாவது மேகத்தில் இருக்கும் உங்கள் காதுகளை சற்றே பூமிக்கு இறக்கும் முயற்சி அந்தே.
**********
HEART, we will forget him!
மனமே, அவனை மறப்போம்
HEART, we will forget him!
You and I, to-night!
You may forget the warmth he gave,
I will forget the light.
When you have done, pray tell me,
That I my thoughts may dim;
Haste! lest while you’re lagging,
I may remember him!
மனமே, அவனை மறப்போம்
நீயும் நானும் இன்றிரவே!
நீ அவன் வெம்மையை மற
நான் அவன் ஒளியை மறப்பேன்
நீ முடித்ததும் எனக்கு சொல்
எனவே என் எண்ணங்கள் மங்கும்
சீக்கிரம் ! நீ தாமதம் செய்தால்
அதுவரை மனதில் அவன் நினைவுகள் தங்கும்!
**********
“GOING to him! Happy letter!
அவனை அடைகையில் கடிதமே சொல்வாய்
“GOING to him! Happy letter! Tell him—
Tell him the page I didn’t write;
அவனை அடைகையில் கடிதமே சொல்வாய்
இதை நான் எழுதவே இல்லை
“Tell him night finished before we finished,
And the old clock kept neighing ‘day!’
And you got sleepy and begged to be ended—
What could it hinder so, to say?
Tell him just how she sealed you, cautious,
But if he ask where you are hid
Until to-morrow,—happy letter!
Gesture, coquette, and shake your head!”
நாம் முடிக்கும் முன்பே இரவு முடிந்தது
காலை வந்ததென கடிகாரம் கடிந்தது
தூக்கம் மேலிட சீக்கிரம் முடிப்பாய் -என
தடையாய் நீதானே இடையில் மொழிந்தது ?
உன்னை கவனமாய் உரையிட்டேன் என்றுரை
ஒளிந்து கொண்டாய் எங்கே? என்பான்
நாளை வரும்வரை என் நல்ல கடிதமே
நடி, பசப்பு, உன் தலையினை குலுக்கு !
*************
THE MOON is distant from the sea,
நிலவு கடலுக்கு நீண்ட நெடு தூரம்
THE MOON is distant from the sea,
And yet with amber hands
She leads him, docile as a boy,
Along appointed sands.
Oh, Signor, thine the amber hand,
And mine the distant sea,—
Obedient to the least command
Thine eyes impose on me.
நிலவு கடலுக்கு நீண்ட நெடு தூரம்
ஆயினும் அதன் கரமோ மின்சாரம்
அவன் அவளை வழிநடத்திடுவான்
அகன்றதொரு மணல்வெளியோரம்
மன்னா, உமதோ மின்சாரக் கைகள்
மங்கை யானோ தொலைவின் ஆழி!
அசைவிற்கெல்லாம் நான் ஆட்படுவேன்
ஆட்கொண்டதென்னை அய்யா நின் விழி!
************
MY river runs to thee:
நின்னிடமே ஓடுகிறது என் நதி
MY river runs to thee:
Blue sea, wilt welcome me?
My river waits reply.
Oh sea, look graciously!
I ’ll fetch thee brooks
From spotted nooks,—
Say, sea,
Take me!
நின்னிடமே ஓடுகிறது என் நதி
நீலக்கடலே என்னை வரவேற்பாயா?
பதிலுக்காய்
பொறுத்திருக்கிறது நதி
கடலே, ஒரு பார்வை பார்ப்பாயா?
ஒவ்வொரு மூலையினின்றும் உனக்காய்
ஓடைகள் கொண்டு வந்தேன்
கடலே பேசு
என்னிடம் பேசு!
**********
I HIDE myself within my flower,
நான் என் மலருக்குள் ஒளிகிறேன்
I HIDE myself within my flower,
That wearing on your breast,
You, unsuspecting, wear me too—
And angels know the rest.
I hide myself within my flower,
That, fading from your vase,
You, unsuspecting, feel for me
Almost a loneliness.
நான் என் மலருக்குள் ஒளிகிறேன்
உன் மார்பில் மலர் சூடுகையில்
இயல்பாய் என்னையும் அணிவாய் நீ
எல்லாம் அந்த தெய்வங்கள் அறியும்
நான் என் மலருக்குள் ஒளிகிறேன்
உன் பூந்தொட்டியில் இருந்து விழுகிறேன்
நான் விழுவதை நீ உணர்வாயா
ஆக்கிரமிக்கும் மௌனத்தினை?
************
I ENVY seas whereon he rides,
அவன் உலவும் கடலினைக் கண்டு
I ENVY seas whereon he rides,
I envy spokes of wheels
Of chariots that him convey,
I envy speechless hills
அவன் உலவும் கடலினைக் கண்டு -நான்
அசூயைப்படுகிறேன்
அவனை சுமந்து செல்லும் தேரின்
ஆழியின் ஆரங்களைக் கண்டும்!
அமைதியான மலைகளைக் கண்டும்!
That gaze upon his journey;
How easy all can see
What is forbidden utterly
As heaven, unto me!
அவன் வலம்வரும் அழகின் காட்சி
அனைவருக்கும் தான் எத்தனை சுலபம்?
எனக்கு ஏன் அது கிட்டுவதில்லை
எட்டாத் தொலைவின் சொர்க்கம் போல?
I envy nests of sparrows
That dot his distant eaves,
The wealthy fly upon his pane,
The happy, happy leaves
அவன் கூரையினை அழகுசெய்யும்
கூடுகள் மீதும் எனக்கசூயை
அவன் ஜன்னல்கள் கடந்து செல்லும்
ஆனந்த இலைகள் மேல் பொறாமை!
That just abroad his window
Have summer’s leave to be,
The earrings of Pizarro
Could not obtain for me.
அவன் ஜன்னலுக்கு வெளியே
அழகாய் நகரும் கோடை
அது ஜொலித்திடும் அரசனின் குண்டலம் போலே
அது ஏன் எனக்கு வசப்படவில்லை?
I envy light that wakes him,
And bells that boldly ring
To tell him it is noon abroad,—
Myself his noon could bring,
அவனை எழுப்பும் ஒளியின் மீதும்
பகல் வந்ததென அவனிடம் புகலும்
மணிகளின் மீதும் எனக்கசூயை
ஏன் எனை அவனிடம் எடுத்துச் செல்லவில்லை?
Yet interdict my blossom
And abrogate my bee,
Lest noon in everlasting night
Drop Gabriel and me.
என் பருவத்தை தண்டித்து விடு
என் சந்திப்பை தவிர்த்து விடு
இடையின்றித் தொடரும் இரவில்
விடியல் என்னை மறந்து போகட்டும்!
***************
I HELD a jewel in my fingers
விரல்களில் ஏந்தினேன் வைரம் ஒன்றை
And went to sleep.
The day was warm, and winds were prosy;
I said: “’T will keep.”
I woke and chid my honest fingers,—
The gem was gone;
And now an amethyst remembrance
Is all I own.
*************
LOVE is anterior to life,
வாழ்வுக்கு முன்பும் காதல்
LOVE is anterior to life,
Posterior to death,
Initial of creation, and
The exponent of breath.
வாழ்வுக்கு முன்பும் காதல்
இறப்புக்கு பின்பும் காதல்
உயிருக்கு ஆரம்பம் காதல்
உயிர்மையின் சின்னம் காதல்
*********
FATHER, I bring thee not myself-எந்தாய், என்னை நான் கொணரவில்லை.
FATHER, I bring thee not myself,—
That were the little load;
I bring thee the imperial heart
I had not strength to hold.
The heart I cherished in my own
Till mine too heavy grew,
Yet strangest, heavier since it went,
Is it too large for you?
எந்தாய், என்னை நான் கொணரவில்லை.
ஏனெனில் அது மிக மிக சொற்பம்
இறுதியே அற்றதோர் இதயம் கொணர்வேன்
இங்கே அதன் கனமோ அபாரம்
நன்றாய் வளர்ந்து பெருக்கும் வரையில்
நானே அன்பில் வளர்த்ததோர் இதயம்
புதியது உனக்கிந்தப் புதிரான இதயம்
பெரிதாய் ஆனதோ புகல்வாய் எந்தாய் !
**********
IN lands I never saw நான் பார்க்காத நிலத்தில்
IN lands I never saw, they say,
Immortal Alps look down,
Whose bonnets touch the firmament,
Whose sandals touch the town,—
Meek at whose everlasting feet
A myriad daisies play.
Which, sir, are you, and which am I,
Upon an August day?
நான் இதுவரை பார்க்காத நிலத்தில்
நெடிய மலைகள் கீழே நோக்குமாம்
அதன் தலைப்பாகை ஆகாயம் தொடுமாம்
அதன்பாதுகைகள் புவியை வருடுமாம்
அழிவற்ற நின்னடியில் அற்பம் நானே
'அங்கே மலர்களின் ஆனந்த நடனம்
அற்புதமானதோர் அழகிய நாளிது
யார் நான் அன்பரே யாவர் நீவிர்?
************
WE outgrow love like other things
அன்பை விட்டு நாம் வளர்கின்றோம்
And put it in the drawer,
Till it an antique fashion shows
Like costumes grandsires wore.
அன்பை விட்டு நாம் வளர்கின்றோம்
அதனை பரணில் அடைத்திடுகின்றோம்
பரணில் அகப்படும் பாட்டன் துணிபோல்
காதல் ஒருநாள் காணக் கிடைக்கும்!
*************
DOUBT me, my dim companion! என்னிடம் ஐயம் கொள்
DOUBT me, my dim companion!
Why, God would be content
With but a fraction of the love
Poured thee without a stint.
The whole of me, forever,
What more the woman can,—
Say quick, that I may dower thee
With last delight I own!
என்னிடம் ஐயம் கொள் என் துணையே
உன் அளவற்ற அன்பின்
சிறு பகுதியே போதும் என்று
சிந்தித்து விட்டான் அந்த இறைவன்
என் இருப்பு முழுதும் -ஆம்
எத்தனை தான் ஒருபெண் இயம்ப முடியும்?
விரைவாய் சொல், அந்த கடைசி மகிழ்வின்
பாத்யதையாவது எனக்குக் கிடைக்கும்.
**************
SaMuDrA
Wednesday, September 28, 2011
நவராத்திரி பாடல் (குழந்தைகளுக்கு)
மழை பொய்த்து விட்டமாநிலத்திலும் -
குழந்தைகள் பாடுகிறார்கள்
'RAIN RAIN GO AWAY '
இது தான் எத்தனை உண்மை? ஆங்கில ரைம்ஸ்களில் பல, அந்த நாட்டு கலாச்சாரத்துக்கும் சூழ்நிலைக்கும் பருவநிலைக்கும் பொருந்துபவை, அவற்றை இங்கே நாம் நம் குழந்தைகளுக்கு பெருமையாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சரி ஆங்கில அறிவு வளர அர்த்தம் எல்லாம் பார்க்க வேண்டாம் என்று வைத்துக் கொண்டாலும் நாம் குழந்தைகளுக்கு எளிய தமிழ்ப் பாடல்களையும் கற்றுத் தரலாமே? பின்னர் பேருந்துகளில் தமிழில் எழுதி இருக்கும் வழித் தடங்களைப் படிக்க முடியாத நிலைமையை நாம் நம் குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டிருக்காது. சரி குழந்தைகளுக்கு எளிமையான ஒரு நவராத்திரி பாடல். பிடித்திருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம்:
அழகழகாய் பொம்மை பாரு
அணிவகுத்து நிற்குது
கலகலப்பாய் கண் சிமிட்டி
கவலை மறக்க வைக்குது 1
குண்டு வயிறு செட்டியாரு
கடுகு சீரகம் விற்குது
அண்ட வந்த ஈயும் விரட்ட
ஆளில்லாமல் சுத்துது 2
பூங்காவிலே பொம்மையெல்லாம்
புதிய பாட்டு பாடுது
தூங்காமலே இரவும் பகலும்
தூளியிலே ஆடுது 3
மரப்பாச்சி பொம்மை பாரு
மணி மணியாய் நிற்குது
கருப்பாச்சி பொண்ணு அங்கே
கணவனை முறைக்குது 4
ராமர் பொம்மை வில்லை ஏந்தி
ரம்மியமாய் நிற்குது
சாமி முன்னே அனுமாரும்
சாந்தமாய்கை குவிக்குது 5
சின்னக் கண்ணன் கையினிலே
வண்ணப் பானை இருக்குது
உண்ண உண்ண வாய்வழியே
வெண்ணையும் தான் ஒழுகுது 6
தஞ்சாவூரு பொம்மையும்தான்
தலையை தலையை ஆட்டுது
கொஞ்சம் அங்கே திரும்பிப் பாரு
கொரங்கு பொம்மை அசத்துது 7
பாவை விளக்கு பொம்மை ஒண்ணு
பத்திரமாய் நிற்குது
சாவி கொடுத்த ரயிலு ஒண்ணு
சக்கரம் போல் சுத்துது 8
முருகன் பொம்மை மயிலு மேலே
முத்து முத்தாய் ஒளிருது
அருகில் வந்து பாரு இங்கே
ஆனை ரெண்டு பிளிருது 9
மூணாவது படியில் பாரு
முதலை ஒண்ணு சிரிக்குது
ஆனா கிட்டப் போயிடாதே
அடிவயிறு கலக்குது 10
கல்லியாண ஊர்வலத்தில்
குதிரை ஒண்ணு நடக்குது
ஒல்லியான மணப்பொண்ணு
ஒயிலாத்தான் சிரிக்குது 11
கொக்கு பாரு ஆமை பாரு
கோழி பாரு கத்துது
பக்கத்திலே வந்து பாரு
பூமி உருண்டை சுத்துது 12
பாவக்காய் கத்திரிக்காய்
பிளாஸ்டிக்கிலே சிரிக்குது
கோவக்கார பூனை ஒன்னு
கண் முழித்துப் பார்க்குது 13
பார்த்தாயா நாயி பொம்மை
படுத்து கனவு காணுது
வாத்து பொம்மை தண்ணி இன்றி
வருத்தமாக தோணுது 14
புள்ளையாரு பொம்மை ஒண்ணு
புதுவிதமாய் இருக்குது
குள்ளமான பொம்மை ஒண்ணு
குடைபிடித்து நிற்குது 15
காவி உடை சாமியாரு
கண்ணை மூடி இருக்குது
தாவி வரும் மானு பாரு
தலை நிமிர்த்திப் பார்க்குது 16
ஒன்பதுநாள் கொலுவும் இங்கே
ஒயிலாத்தான் இருக்குது
தின்பதற்கு தினம் தினமும்
தீனி கூட கிடைக்குது 17
பெரிய துன்பம் வந்த போதும்
பொம்மை போல இருக்கணும்
உறுதியாக இருந்து விட்டால்
உள்ளம் இன்னும் பலப்படும் 18
சமுத்ரா
Monday, June 20, 2011
ராமன் ஆண்டாலும்!
ராமன் ஆண்டாலும்
===================
பொற்கால ஆட்சி மலர்ந்தது என்கிறார்கள்
சத்தியம் ஜெயித்து விட்டதாம்
அரக்கர்கள் வீழ்ந்ததாக சொல்கிறார்கள்
ராமராஜ்ஜியம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டதாம்
தேனாறும் பாலாறும் இனிமேல் ஓடுமாம்
எங்களுக்கு வித்தியாசம்
பெரிதாய் ஏதுமில்லை..
அதே காலை நேர வியர்வை பேருந்துப் பயணங்கள்
ஓனரிடம் வீட்டு வாடகை சமாளிப்புகள்
பட்ஜெட் இடிப்புகள்
மாதக் கடைசியின் விசனங்கள்.
சீட்டுக்கு பணம் கட்டும் கவலைகள்
நகை அடகு வைத்து மீட்கும் அவலங்கள்
எங்களுக்கு பெரிதாய்
வித்தியாசம் ஏதுமில்லை..
ஆயத்த வார்த்தைகள்
=======================
என் கவிதையைப் படித்து விட்டு
'நன்று' என ஒற்றை வார்த்தையில் சொல்ல நீ யார்?
என் கவிதையைப் பிரசவிக்க
நான் பட்ட பேறு வலிகளை நீ அறிவாயா?
என் கவிதை வடிவம் பெறுவதற்கு முன்
என் உயிரை அது ஆயிரம் முட்களால்
உறுத்தியது உனக்குத் தெரியுமா?
வார்த்தைகளை யாசித்து நான்
நடைப்பிணம் போல நடந்ததைப் பற்றி
உனக்கு அறிவேதும் இருக்கிறதா?
கவி வரம் வேண்டி
புவி மீது நான் புரிந்த
தவங்கள் பற்றி உனக்குத் தெரியுமா?
உன் அவசர வாழ்க்கையில் -
ஏதோ மரபுக்காய்
ஆயத்த வார்த்தைகளை உதிர்க்காதே!
அந்த இடத்தில் வார்த்தை சரியில்லை
என்று சொல்லியிருந்தால் கூட
எனக்கு ஆறுதலாய் இருந்திருக்கும்!
ALL IS WELL
===========
அந்த பொம்மை தான் வேண்டும் என்று
அப்பாவை இரண்டு நாள் நச்சரிக்காது இருந்திருக்கலாம்
பத்தாம் வகுப்பு ஃபெயில் என்று
தேவையில்லாமல் மாத்திரையை முழுங்கி இருக்க வேண்டாம்..
அந்தப் பெண் மறுத்து விட்டாள் என்பதற்காய்
இரவுகளைக் கண்ணீரால் நனைத்திருக்க வேண்டாம்..
வேலையில் இருந்து நீக்கிய கம்பெனியை
வேளா வேளை மறக்காமல் திட்டியிருக்க வேண்டாம்..
பஸ் ஸ்டாண்டில் அன்று அவனை
ஒரு சிறு புன்னைகையால் மன்னித்திருக்கலாம்..
தூக்கம் தொலைத்த இரவுகளை தவிர்பதற்கேனும்
நான் செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டிருக்கலாம்
அமர்ந்து பேசலாமா
என்று பங்காளிகளை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்..
வாழ்க்கையின் முடிவில்
செய்ததைத் திரும்பிப் பார்க்கும் போது
குழந்தைத் தனமாக இருக்கிறது.
அழகு
=====
நகரத்தின் சாலையோர சுவர்களில்
இப்போதெல்லாம்
யானை, மான் ,புலி, மயில், கடல்
அறுவடை செய்யும் பெண்கள்,
பானை செய்யும் குயவன்
வாள் சண்டை போடும் வீரர்கள்
உருண்ட கண்களுடன் முறைக்கும் நரசிம்மர் சாமி,
குழந்தையைக் கொஞ்சும் தாய்
என்று விதம் விதமான ஓவியங்கள்..
ஊழல் செய்யும் தலைவர்களை
அர்த்தமில்லாமல் புகழ்ந்து எழுதிய
வாசகங்களை விட
அழகாகவே உள்ளன,,
மன்மத லீலையை
===================
கோயில்களில்
பஸ் நிலையங்களில்
ரயில் நிலையங்களில்
வேலைவாய்ப்பு அலுவலகங்களில்
வாக்-இன்-இன்டர்வியூக்களில்
மளிகைக் கடைகளில்
வங்கிகளில்
கடற்கரைகளில்
இப்படி எல்லா இடங்களிலும்
கழுத்தை நெரிக்கும் அளவு மனிதக் கூட்டம்!
குரங்கில் இருந்து மனிதனாய் மாறிய
நாளில் தொடங்கி
மனிதன்
ஒரு விஷயத்தை மட்டும்
கண்ணும் கருத்துமாய் செய்து
வந்திருக்கிறான் என்று தெரிகிறது..
சமுத்ரா
Tuesday, June 7, 2011
ஊழல் ஜுஜுபி(கவிதைகள்)
=============
இந்த மழை ரொம்ப மோசம்
இறங்கி நடக்கும் போது பலமாகவும்
ஒதுங்கி நிற்கும் போது
சன்னமாகவும் பெய்கிறது!
அவர்கள் போகட்டும்
=====================
அவர்கள் நிற்கமாட்டார்கள்
தங்கள் வாகனங்களை வேகம் குறைக்கவும் மாட்டார்கள்
சிவப்பு வண்ணக் காரைத் தொடர்ந்து
சாம்பல் வண்ணக் கார்
பின் வெள்ளை
வெளிர் நீலம் பின்
வெள்ளை ஜீப்புகள்
பேருந்துகள் பைக்குகள் என்று வந்து கொண்டே இருக்கும்!
அவர்கள் நிற்கமாட்டார்கள்
தங்கள் வாகனங்களை வேகம் குறைக்கவும் மாட்டார்கள்
வெட்டிப்பயல்களான
நாம்
சாலை கொஞ்சம் காலியாகக் காத்திருப்போம்!
அவர்களுக்கு
அழியும் உலகத்தைக் காப்பது
இறந்து கொண்டிருக்கும் உயிர் ஒன்றை காப்பாற்றுவது
ஐன்ஸ்டீன் தியரியை பொய் என்று நிரூபிப்பது
போன்ற அதி முக்கிய அலுவல்கள் இருக்கலாம்
வெட்டிப்பயல்களான
நாம்
சாலை கொஞ்சம் காலியாகக் காத்திருப்போம்!
Little girls are wiser than men
=========================
இது என்ன என்று
என் மகள் கேட்டாள்
"லிஃப்ட்' என்றேன் பெரிமிதமாக
கீழே இறங்கும் போதும்
"லிஃப்ட்' தானா என்றாள்
என்னிடம் பதில் ஏதும் இருக்கவில்லை..
'கொள்' எனக் கொடுத்தல்
========================
பெறுவதற்கு மட்டும் அல்ல
கொடுப்பதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் போலும்
சில்லறைகளை துழாவி எடுப்பதற்குள்
சாலையைக் கடக்கக் தொடங்கி விடுகிறாள்
குழந்தையுடன் கையேந்திக் கொண்டிருந்த பெண்
தேவை
=======
தாத்தாவுக்கு பெரிதாகத் தேவை எதுவும்
இருக்கவில்லை
காலையில் சுக்கு காபி, கோயில் பூஜை முடிந்து வந்ததும் மிளகு ரசம்
இரவில் பால்
வருடம் ஒருமுறை திருப்பதி!
அப்பாவுக்கும் தான்
காலையில் செய்தித்தாள்
மதியம் பள்ளிக்கு உணவு கொண்டு போக வேண்டும்
மாலையில் வீடு திரும்பும் போது சூடாக ஃபில்டர் காபி
சுஜாதா நாவல்கள்
குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு சில சமயம் டூர்
போஸ்ட் ஆபீசில் எங்கள் பெயரில் கணக்குகள்
அவ்வளவு தான்
நான் தான்
ஏனென்றே தெரியாமல் கார் ஒன்றையும்
முப்பது லட்சம் கொடுத்து வீடு ஒன்றையும்
வாங்கி விட்டு
முழு மாத சம்பளத்தையும் அவைகளுக்காய் அழுகிறேன்!
ஊழல் ஜுஜுபி
==============
ஊழல் ஊழல் என்று வேதனைப்பட்டு
தனிப்படை,வாரியம் எல்லாம் அமைத்து
கஷ்டப்படாதீர்கள்
ஒரு மேடை
கூட உட்கார்வதற்கு பத்து பேர்
நிறைய மீடியா
அப்புறம் கொஞ்சம் உண்ணாவிரதம்
இவையெல்லாம் இருந்தால்
ஊழல்
இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடப் போகிறது!
சுப்ரபாதம்
===========
ஞாயிற்றுக் கிழமைகளில்
சுப்ரபாதங்களைத் தடை செய்யுங்கள்
அதிகாலையில் எழுவது நல்லது தான்..ஆனால்
வாரம் முழுவதும்
உங்கள் வாடிய முகங்களைப் பார்த்து சலித்த கடவுள்
அந்த ஒரு நாளாவது
காலை பத்து மணிவரை
இழுத்துப் போர்த்தியவாறு படுக்கையில்
படுத்திருக்கும்
சுகத்தை அனுபவிக்கட்டும்!
சமுத்ரா
Thursday, April 28, 2011
கடவுளும் நானும்
கடவுளுக்கான இடம்
====================
கடவுளுக்கான இடம்
எல்லா வீடுகளிலும் இருக்கிறது
சில வீடுகளில்
பிரம்மாண்டமான பூஜை அறையில்
சில வீடுகளில்
புத்தக அலமாரிகளில்
சில வீடுகளில்
கடுகு, சீரக டப்பாக்களுக்கு மத்தியில்
பேச்சுலர்களின் அறைகளில்
ஒற்றை விநாயகர் பொம்மையாய்
கடவுளுக்கான இடம்
எல்லா வீடுகளிலும் இருக்கிறது
கடவுளும் நானும்
=================
போதும்
கடவுளைப் பார்த்து நான் பரவசப்பட்டது
பேருந்தின் வேகத்தில்
பின்னால் மறையும் கோவில்களைப் பார்த்து
கன்னத்தில் போட்டுக் கொண்டது
ஊர்வலத்தில் வந்த
பிள்ளையார்களை வணங்கி
ஓடிப் போய் விபூதி பூசிக் கொண்டது
கடவுள் படம் காலில் பட்டு விட்டால்
பதறிப் போய் கண்களில் ஒற்றியது
மணிக்கணக்கில் கால்கடுக்க வரிசையில் நின்று
கருவறையின் தெளிவில்லாத பிம்பத்தைப் பார்த்து மெய்மறந்தது
போதும்
கடவுளைப் பார்த்து நான் பரவசப்பட்டது
இனிமேல்
என்னைப் பார்ப்பதற்காய்
கடவுள் பரவசப்படட்டும்!
கடவுள் version -2
==================
தட்டினால்தான் திறக்கிறார்
கேட்டால்தான் கொடுக்கிறார்
கெட்டவர்களை 'நின்று' தான் கொல்கிறார்
நாம் ஒன்று நினைக்க அவர் ஒன்று நினைக்கிறார்
பிரளயம் நிகழ்ந்த பின்
அடுத்த யுகத்திலேனும்
கொஞ்சம்
மேம்படுத்தப்பட்ட கடவுள் கிடைத்தால் பரவாயில்லை!
நிதர்சனம்
===========
நாட்கள் தொடங்குவதென்னவோ
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தான்
இன்று எனக்கான
பிரமோஷன் கடிதம் வரக்கூடும்
இன்று நான் அனுப்பிய
கவிதை பத்திரிகையில் வந்திருக்கக்கூடும்
பாட்டிக்கு உடம்பு பரவாயில்லை என்று
அம்மா போன் செய்யக் கூடும்
பேருந்தில் அந்தப் பெண் இன்று
என்னைப் பார்த்து புன்னகைக்கக் கூடும்
வங்கியில் விண்ணப்பித்த கடன்
ஓ.கே என்று கடிதம் வரக்கூடும்..
என்றெல்லாம்
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்..
அனால்
நாட்கள் முடிவதென்னவோ
அதே
18 -பி பேருந்தின்
வியர்வைப் பயணத்துடனும்
அதே
ராகவன் மெஸ்ஸின்
பரோட்டாக்களுடனும் தான்...
~சமுத்ரா
Friday, April 15, 2011
குறையொன்றும் இல்லை!
அது செய்தேன்
இது செய்தேன்
என்கிறார்கள்
ஏழைகளே இல்லாமல் செய்தேன்
என்று யாருமே சொல்வதில்லை!
நீங்கள்
பரமபத நாற்காலியில் போயமர்ந்ததும்
உங்களை ஏணியில் ஏற்றி விட்ட
இந்த-
பகடைக் காய்களை எறிந்து விடுவீர்கள்!
எங்கள் வாழ்வை
வண்ணமயமாய் ஆக்குவோம் என்றீர்கள்
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
வழங்குவீர்கள் என்று தெரிந்திருக்கவில்லை..
அலைவரிசைத் தொடர்களை நாங்கள்
அழுதுகொண்டு பார்த்திருக்க
அலைக்கற்றை ஊழல் ஒன்றை
அரங்கேற்றி விட்டீர்கள்
நாங்கள் விளைத்த அரிசியை
எங்களுக்கே
ஒரு ரூபாய்க்கு விற்கிறீர்கள்!
நோய்களை நீங்களே
நடவு செய்து விட்டு
'இலவச ஆம்புலன்ஸ்' என்று
இருமுகம் காட்டுவீர்கள்!
குளிரில் நடுங்கிய மயிலுக்கு
தன் மேலாடை தந்தவன் தமிழன்
நீங்களோ
கடைத்தேங்காயை எடுத்து
வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறீர்கள்
ஆம்-
இலவசங்களை
கொடுத்து விட்டு -எங்கள்
இறையாண்மையைப்
பிடுங்கிக் கொண்டீர்கள்
நீங்கள் தின்று
எறிந்த மிச்சத்தை
நாவைக் காட்டிக் கொண்டு
நக்குவதற்கு
நாங்கள் நாய்கள் இல்லை!
வாக்குக்காக
கை கூப்பும் போது
வாயு மைந்தன் போல்
வால் சுருட்டி நிற்கிறீர்கள்
ராஜ்ஜியம் கிடைத்ததும் -ஏன்
ராவணனாய் மாறுகிறீர்கள்?
வீரனாய் விவேகியாய்
வெள்ளித் திரையில் தோன்றி விட்டு
வீதிக்கு வந்ததும்
வேட்பாளரை அடிப்பீர்கள்!
கையில் இட்ட
மை கூட
காலத்தால் அழிந்து விடும்-எங்கள்
நெற்றியில் போட்ட நாமம் தான்
நித்தியத்துவம் பெற்று விட்டது
உண்மையிலேயே எங்களுக்காய்
ஓடாய் உழைத்திருந்தால்
இன்று ஏன்
ஓடி ஓடி பிரச்சாரம் செய்கிறீர்கள்?
சொன்னதை செய்வது
உங்கள் தர்மம்-ஆனால்
செய்ததை சொல்வது
சிறுபிள்ளைத்தனம்
பெரியார் விதைத்த கொள்கையை
அண்ணா வளர்த்த திராவிடத்தை -இன்று
காமெடி பீசுகளிடம்
கடன்கொடுத்து விட்டீர்கள்..
வேடிக்கை பார்ப்பதில்
வல்லவன் தமிழன்
குஷ்புவைப் பார்க்க வந்த கூட்டத்தை
'குலவிளக்குகளே' என்று கூசாமல் சொல்கிறீர்கள்
குறளுக்கு விளக்கம் எழுதுபவர்களே
"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் "
என்று தமிழ்க்குரவன் செப்பியது
'டாஸ்மாக்' கை அல்ல!
மீனவர்களுக்காய் நீங்கள் கடிதம்
எழுதிக்கொண்டிருக்க
அவர்கள் இறப்புச்செய்தியை
எமன்
'பேக்ஸ்'இல் அனுப்புகிறான்
ஆம்
உங்கள் வசையாடல்களை
வேடிக்கை பார்ப்பதை விட்டு-எங்களுக்கு
வழியொன்றும் இல்லை
கொடநாடுகள் இருக்கும் வரை
ஆள்பவர்களுக்கும்
குறையொன்றும் இல்லை!
சமுத்ரா
Wednesday, March 2, 2011
கண்ணப்பன் கதை!
சிவராத்திரி ஸ்பெஷல்..
இலை அமரும்
கிளை ஒன்று
மழை அமரும்
முகிலை முட்டும்
மரங்கள் அடர்ந்த காடு
அந்தக் காடு தான் -நம்
கதாநாயகன் வீடு
அவன் பெயர் கண்ணப்பன்
கண்ணப்பனுக்கு அப்பன்
அந்த விண்ணப்பன்
தென்னப்பன் என்று
தேவாரம் புகழும்
மண்ணப்பன்!
இவன்
அடவி விலங்கை
அம்பால் அடிப்பவன்
இருந்தாலும் அடியவர்
பிறவி விளங்கைப்
பிய்க்கும் பரமனின்
அன்பால் துடிப்பவன்
புலி உலவும் காட்டில் வாழ்ந்தாலும்-இவன்
அம்புலி உலவும் ஐயனை மறவான்
கரி உலவும் காட்டில் அலைந்தாலும் -இவன்
சங்கரி உலவும் மெய்யனை மறவான்
இவன்
மானை அடித்தாலும்
மானைப்
பிடித்தவன்
மகிமையை மறக்கவில்லை
முயலைப் பிடித்தாலும்
முயலை மிதித்தவன்
மேன்மையை மறக்கவில்லை
ஒரு நாள் கண்ணப்பன்
தன் சாகாக்களுடன்
பன்றி ஒன்றை துரத்திப் போனான்
பன்றியோ
அகப்படாமல் போக்குக் காட்டியது
அவன் நாக்கு
எனக்கு நீர் தர மாட்டாயா
என்று
மேலண்ணத்தில் போய்
தூக்கு மாட்டியது
ஒரு கட்டத்தில்
பன்னி வேண்டாம்
தண்ணி போதும் என்று
நீர் தேட மூவரும் விளைந்தனர்.
தண்ணீர் தேடி தாள் நோக
அலைந்தனர்...
தூரத்தில் ஒரு குன்று
தென்பட்டது
அங்கே 'பொன் முகலி' ஆறு
இருப்பதாக நாணன் சொன்னதும்
அவர்கள் தாகம்
பாதி போய் விட்டது
தாகம் தீர்ந்து திரும்பும் வழியில்
திருக்காளத்தி மலை வந்தது
அதை நோக்கிச் செல்கையில்
கண்ணப்பன் மனதில்
இனம் புரியாத உணர்வொன்று தோன்றி
மனம் நிறைந்து
மகிழ்வைத் தந்தது
குன்றின் உச்சியில் -சிவன்
கோவிலொன்று இருந்தது
கோவிலின் உள்ளே
சிவலிங்கம் ஒன்று தனிமையில்
தவம் பூண்டிருந்தது
அதைக் கண்டதும்
அடியவனுக்கு அன்பு பொங்கியது
அய்யா
உம்மைக் கவனிப்பார் இல்லையா?
ஆனை உலாவும் மலையில்
உம்மை
அம்போ என்று விட்டுவிட்டு
அம்பிகை
அப்பன் வீடு போனாளா?
உலகின்
உறுபசி தீர்க்கும் உந்தன்
சிறுபசி தீர்க்க இங்கோர்
சீவனும் இல்லையா?
காலாடை அணிந்த
காசினி காக்கும் நீர்
மேலாடை இன்றி
மேனி நடுங்கவா ?
குளிர் அடித்தால்
சாம்பலைப் பூசிக் கொள்ளட்டும் என்றார்களா?
கங்கை சுமந்த தலைமேல்
மழை பொழிந்தால் என்ன என்று
மேற்கூரை கட்டாது விட்டார்களா?
உன் மைத்துனன் அங்கே
பாற்கடலில்
பாம்பின் மேல் படுத்திருக்க
நீர் இங்கு
பாம்புகளுடன் படுத்திருப்பதா?
பிரம்மன்
தாமரை மலர் மேல் வாசம் செய்ய
நீர் இங்கு
முட்களின் மீது மவுனித்திருப்பதா?
உடனே
கண்ணப்பன் செயலில் இறங்கினான்
மகேசனுக்குப் பசிக்கும்
முதலில் நல்ல
மாமிசம் சமைக்கலாம் என்று மனத்தில் இயம்பினான்
பன்றி ஒன்றை
வேட்டையாடி
அதன் சதையைக்
கரத்தில் நிரப்பினான்
'பொன் முகலி' நதிக்குச்
சென்று அதன்
நீரை உறிஞ்சி
வாயில் நிரப்பினான்
காட்டு மலர்களைக் கொய்து
தன் முரட்டு மண்டையில்
முடிந்து கொண்டான்
கோவில் திரும்பி
சிவன் தலையில் இருந்த
பழைய மலர்களை-செருப்புக்
காலால் தள்ளினான்
தன் சாமிக்குச்
சேவை செய்யும் பேறை
எண்ணி
சந்தோஷத்தில் துள்ளினான்
தன் வாய்நீரை
லிங்கத்தின் மேல் துப்பினான்
கையில் வழிந்த ரத்தத்தை
திலகம் போல் அதன்
நுதலில் அப்பினான்
தான் முடிந்து வந்த மலர்களைத்
தன்
தலைவனுக்கு முடிந்தான்
பன்றி இறைச்சியை-கொஞ்சம்
தின்று பார்த்து விட்டு
பரமனுக்கு நிவேதனம் செய்தான்
நெடுச்சாண் கிடையாக
நீல கண்டன் முன் விழுந்தான்
'தேவா நீயே கதி' என்றுரைத்து
தூசி தட்டாது எழுந்தான் !
அவன் சகாக்கள்
அவனுக்கு சித்தம் கலங்கி விட்டது
என்று எண்ணினர்!
ஆனால் அன்று தான்
அவன் சித்தம் தெளிந்திருந்தது
ஆம்
ஆண்டவன்
அன்புக்கன்றோ மயங்குவான்!
ஆடம்பரம் காட்டி
ஆண்டவா என்றால்
நம்மை நோக்கி ஓர்
அடிவைக்கவும் அவன் தயங்குவான்
கொடிய மிருகங்கள்
கடவுளைத் தாக்கலாம் என்பதால்
இரவு முழுதும்
வில்லேந்தி
காவலுக்கு நிற்பதாய்க்
கண்ணப்பன் முனைந்தான்
காவலுக்கே காவலா என்று
கைலாச நாதன்
தன் இதழ்க் கடையோரம்
ஒரு புன்னைகையை உதிர்த்தான்!
ஆம்
அவன் விளையாட்டை
ஆறறிவு இருந்தாலும்
ஆர் தான் அறிவார்?
அடுத்த நாள்
அதிகாலையில்
வேட்டையாடிவிட்டு விரைவில் வருவேன் என்று
கண்ணப்பன் நகர்ந்தான்
அப்போது-
அந்தக் கோயிலின்
அர்ச்சகர்
ஒன்றும் அறியாதவராய்
உள்ளே நுழைந்தார்
அங்கு கிடைத்த
காட்சியைக் கண்டு
உள்ளம் நடுங்கி
நிலை குலைந்தார்
அபச்சாரம்
நிகழ்ந்து விட்டதாய்
அழுதார்
மன்னிக்க வேண்டும் என்று
மகேசனை
மருகித் தொழுதார்
பஞ்சாமிர்தம்
படைக்க வேண்டிய உனக்கு
பன்றி இறைச்சியா?
வில்வப் பூக்களுக்கு பதில்
வனப் பூக்களா?
இந்தப்
பாவச் செயலைச் செய்யும்
புல்லன் யார் என்று
மறைந்திருந்து பார்ப்பதாய்
முடிவு பண்ணினார்
அவனை அங்கேயே
அடித்துப் போடவேண்டும் என்று
ஆவேசமாய் எண்ணினார்
வழக்கம் போல
கண்ணப்பன் வந்தான்
தான் கொண்டு வந்திருந்த
இறைச்சியை
நீலகண்டனுக்கு
நிவேதனமாய்த் தந்தான்
பாவம் அந்தணர்
வேடனின் வில்லையும்
வேலையும் கண்டு
மனதிற்குள் அஞ்சினார்
இந்த அவசெயலைப்
பொறுக்கும் படி
அரனிடம் கெஞ்சினார்
அன்றிரவு
அய்யன்
அந்தணர் கனவில் தோன்றினான்
கண்ணப்பன் பக்தி
கடலினும் பெரியது
என்பதை அவர் கருத்தில் ஊன்றினான்
நாளை நடக்க இருப்பதை
மறைந்திருந்து பார்க்கும் படி
திருவாய் மலர்ந்தான்
பின்
அருவாய் மறைந்தான்!
ஆம் அடுத்தநாள்
கண்ணப்பன்
பக்திக்கு ஒரு சோதனை!
வழக்கம் போல
வாயில் நீர் நிரப்பிக்
கையில் ஊண் நிரப்பி
தலையில் மலர் நிரப்பி
பூசை செய்ய
ஆசை கொண்டு
கண்ணப்பன் வந்தான்
நொடிக்கு நொடி
நமசிவாயா ! எந்தாய்! என்றான்
வழக்கம் போல்
இறைச்சியை சுவைத்துப் பார்த்து
'சாப்பிடு சாமி' என்றான் !
கயிலை நாதன்
கனக மேனியைக் கண்டு
காயம் மறந்து நின்றான்
சிவ லிங்கத்தில்
அதுவரையில்
கருணையைச் சுரந்து கொண்டிருந்த
கண்களில் ஒன்று
குருதியைச் சுரந்தது!
ஆம்
லிங்கத்தின் கண்களில்
குருதி வெளிப்பட்டு விரைந்தது!
இதைப் பார்த்த
கண்ணப்பன் இதயத்தில்
குருதி திடுக்கிட்டு உறைந்தது
ஐயோ சாமி
உன் கண்ணில் கண்ணீர் வடிந்தாலே
எனக்கது கலவரம்
செந்நீர் வடிகிறதே
சொல்லாயோ நிலவரம்
அய்யா
இறைச்சி நன்றாய் இல்லையா?
என் சதையைக் கீறித்
தரவா?
நான்
உமிழ்ந்த தண்ணீர் உனக்கு
உபத்திரம் தந்ததா?
என் குருதியால்
உன்னைக் குளிப்பாட்டி விடவா?
ஐயா ஏழை நான்
என்ன பாவம் செய்தேன்
ஏன் உன் விழி சிவந்தது?
கண்ணப்பன் செய்வதறியாது
அரற்றினான்!
தரையில் விழுந்து
புரண்டான்!
உடனே ஓடிப் போய்
காட்டுப் பச்சிலைகளைப்
பறித்துக் கைகளில் ரொப்பினான்
கல்லில் அரைத்துக்
கடவுளின் கண்ணில் அப்பினான்
ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது
தன் ஆடை கிழித்து
ஆண்டவன்
கண்களில் கட்டினான்
முரட்டுக் கைகளால்
மகேசன்
முகவிழி ஒற்றினான்..
ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது
ஏதோ ஒரு
முடிவெடுத்தவனாக
வேடன் தன் கூரிய
அம்பை எடுத்தான்
தன் விழியைத் தோண்டி
வலியை மறந்து
அதை
வில்வப் பிரியனுக்குக் கொடுத்தான்
கண்ணப்பன்
விழி இருந்த குழியில்
ரத்தம் வடிந்து கொண்டிருக்க
இப்போது
தென்னப்பன் விழியில்
ரத்தம் நின்று விட்டிருந்தது
கண்ணப்பன்
வலி மறந்து கூவினான்
மூன்று கண்ணன் முன்
ஒற்றைக் கண்ணன்
உவகை பொங்கக் கூத்தாடினான்
ஈசனுக்கு
இரக்கமில்லை போலும்!
அவன் இன்னொரு
கண்ணிலிருந்து இப்போது
குருதி வடிந்தது!
கண்ணப்பன் இதயம் இடிந்தது
அய்யா இது என்ன
சோதனை?
அடியவனுக்கு ஏன்
வேதனை மேல் வேதனை
கண்ணில் குருதி வடியும்
அளவு நான்
குரூரக் காரனா?
வேல் பிடித்த நான் உன்
தாள் பிடித்தல் பாவமா?
புலம்பினால் ஆகாது என்று
எழுந்து நின்றான் வேடன்
தன் இதழில் இருந்து
ஒரு புன்னகைப் பூவை உதிர்த்தான்
கைலாய நாடன்!
தன் செருப்பணிந்த காலால்
நெருப்பணிந்த கையன்
நீளக்கண்களில் அடையாளம் வைத்தான்...
அம்பு கொண்டு-தன்
அடுத்த கண்ணைப் பிய்த்தான்
அப்போது
'நில் கண்ணப்பா நில்' என்று
ஓர்
அசரீரி ஒலித்தது!
அதைக் கேட்டு
காற்றுக்கே காது வலித்தது!
ஆம்
காம்போதிப் பிரியன்
கண்ணப்பனை ஆட்கொண்டான்
கண்ணப்ப நாயனாரும்
கைலாய நாடேகி
கணங்களில் ஒன்றாகக் கலந்தான்...
கண்ணப்பன் புகழ் பாடுவோம்
கண்ணப்பனைத் தடுத்தாட்கொண்ட
தென்னப்பன்
காளை ஏறும் சம்புவை நம்
கருத்தில் ஏற்றி
அர அர மகாதேவா என்று
அகம் மகிழ்ந்து ஆடுவோம்!
இந்த இரவு
இந்துவை தரித்தவன் இரவு !
இன்பனை எரித்தவன் இரவு!
காலனை உதைத்தவன் இரவு!
ஆலம் வேண்டி உண்ட
அரனின் இரவு!
இந்த இரவில்
ஈசனைப் பாடுவோருக்கு வருமோ
மறுபடி
இந்த
மண்ணுலகின்
உறவு?
சமுத்ரா
Tuesday, March 1, 2011
பிறப்பின் கவிதைகள்
வேறொன்றும் பெரிதாக நடக்கவில்லை..சரி சில கவிதைகளையாவது எழுதலாம் என்று..
mutation
==========
தவறு செய்து விட்டாய் என்று
பேசும்
மானேஜரிடம்
சொல்லத் தோன்றுகிறது
செல்கள் படியெடுப்பதில் செய்த தவறுகளில் தான்
மனித இனமே பிறந்தது என்று ...
பத்தாம் கிரகம் தாய்
================
பிறந்த நாள் அன்று
கிரகங்கள் நாம் பிறந்த தேதியில் இருந்தது
போலவே இருக்குமாம்..
அம்மா கூட
நான் பிறந்த தேதியில் இருந்த மாதிரியே
இன்றும் இருக்கிறாள்!
க்ளோனிங்
===========
ஆண்களே இல்லாமல்
குழந்தை பிறப்பதைத் தவறு என்னாதீர்கள்!
காலம் காலமாக ஜன்ய ராகங்கள்
தாய் ராகம் ஒன்றில் இருந்து மட்டும்
பிறந்து வருகின்றன..
பிறவா வரம் தாரும்
==================
பிறவா வரம் தாரும் என்று
ஒரு சமயம் பாடுகிறான்
புல்லாய்ப் பிறவி தர வேண்டும்
என்று
ஒரு சமயம் புலம்புகிறான்
இப்படிப்பட்ட பக்தனை வைத்துக் கொண்டு
என்ன செய்வான் பரமன்?
பிறப்பொக்கும்
============
பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்...
பள்ளியில் சேர்க்கும்
வரை..
மன்மத லீலையை..
=================
முயலகன் வந்தான்
காலில் மிதிபட்டு மறைந்து போனான்...
அனலாசுரன்
பொசுக்கப்பட்டான்..
அவன் கதை அதோடு முடிந்தது..
சாம்பலான முப்புரங்கள்
உயிர்ப்பித்தது வந்ததாய் செய்தி ஒன்றும் இல்லை..
கஜமுகாசுரன் கூட
ஆடையாகி அழிந்து போய் விட்டான்
ஆனால்
காமன் மட்டும்
எரிந்து போனாலும் கூட
இன்னும் பிறப்பித்துக் கொண்டிருக்கிறான்..
ரிஷிமூலம்
==========
ரிஷி மூலம் பார்ப்பது
எவ்வளவு அபத்தமானதோ
நதி எங்கே பிறந்தது
என்று தேடுவது
எத்தனை முட்டாள்தனமானதோ
இசை எப்படிப் பிறக்கிறது
என்று யோசிப்பது
எத்தனை பொருளற்றதோ
அதே போல் தான்
ஒரு
கவிதையின் பிறப்பை ஆராய்வதும்.
இதயத்தை வருடும் ஒரு
கவிதையைப் படித்தால்
இனிமேல்
அதன் சொற்களால் ஆசிர்வதிக்கப்பட்டு
அதன் பொருளில் நீராடி
எழுத்துக்களில் மூழ்கி விடுங்கள்!
சமுத்ரா


