இந்த வலையில் தேடவும்
Sunday, December 26, 2010
இரண்டு கவிதைகள்..
நன்றி
என்னிடம் ஒரு செருப்பு இருந்தது...
அது என்னுடன்
எங்கெல்லாமோ வந்தது..
விமானப் பயணங்களில்,
ரயில் பயணங்களில்,
தூரத்து நகரங்களுக்கு,
கடைத் தெருவுக்கு,
வாக்கிங் செல்கையில்,
கல்யாணங்களுக்கு,
சாவு வீடுகளுக்கு,
அலுவலகத்திற்கு,
பகலின் வெய்யிலில்
இரவின் குளிரில்
காடுகளில் மலைகளில் என்று எங்கெல்லாமோ..
ஒரு நாள் ஓர் ஆள் அரவமற்ற தெருவில்
நடந்து கொண்டிருந்த போது அது அறுந்து விட்டது
அப்படியே ஒரு ஓரமாக அதை
வீசி விட்டு
திரும்பிப் பார்க்காமல் நடந்தேன்!
மறுபிறப்பு
எங்கள் வீட்டில் ஒரு
குழந்தை பிறந்தது..
அதற்குப் பெயர் வைத்த கையோடு
எங்கள் பெயர்களும் மாற்றப்பட்டன,,,
ஊசித் தாத்தா
நானிப் பாட்டி
குட்டி அண்ணா
கண்ணாடி மாமா
பஞ்சு அத்தை
சைக்கிள் பெரியப்பா என்று..
ஒருவேளை
குழந்தை ஒன்று
பிறந்ததும்
நாங்களும் மறுபடியும் பிறந்திருப்போம் போலும்..
சமுத்ரா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment