நாங்கள்
புத்தகங்களைப்
புரட்டுவதற்கு முன்பே
வாழ்க்கை எங்களைப்
புரட்டிப் போட்டு விட்டது!
எங்கள்
தலையில் -
எழுத்து ஏற விடாமல்
தடங்கல் செய்வது
எங்கள் தலை எழுத்தா?
இல்லை வறுமை என்ற
அந்த மூன்றெழுத்தா?
அகரம் அறிமுகமாகி
அதிக நாள் ஆகுமுன்பே
தகரம் அறிமுகமானது -எங்கள்
தலை விதியா?
வாய்ப்பாடு சொல்லி
வெகு நாள் ஆகவில்லை
வயிற்றுப் பாடு எங்களை
வதைப்பது முறையா?
நாங்கள்
சேமித்து வைத்த
கனவுப் பூக்களை
யார் கசக்கி எறிந்தது?
அகரங்களை யார்
எங்களுக்கு
எட்ட முடியாத
சிகரங்களில்
வைத்தது?
எங்கள் உடல்களில் இருந்த
சீருடையைக் கிழித்து எறிந்து விட்டு
யார் எங்கள் கண்களுக்கு
நீருடையை அணிவித்தது?
வீட்டுச் செல்வம்
வறண்டு விட்டதால்
ஏட்டுச் செல்வமும்
எங்களுக்கு
எட்டாமல் போனது
பேனாவைப் பிடிக்கும்
கைகளால் உங்கள்
ஸ்பேனர்களைப்
பிடிக்கும்படி ஆனது
உங்கள் மேசைகளைத்
துடைக்கும் போதெல்லாம்
எங்கள் வாழ்க்கை அசுத்தமானது
நாங்கள் விற்கும்
சுண்டல் சூடாக இருந்தாலும்
வாழ்வின் வெப்பம்
ஆறிப் போய் விட்டது
கடவுள்
கருணையின் வடிவம் என்று
யார் கூறியது
எங்களுக்கு மட்டும் ஏன்
கலைமகள்
கைவீணை
கோடரியாய் மாறியது?
அறிவியல் எங்களுக்கு
அந்நியமாய் ஆனது
தமிழ் எங்களுக்கு
தொலைதூரம் போனது
கணிதம் எங்களுக்கு
கனவென்று ஆனது
எங்களுக்கு-
விண்ணை அளக்க
ஆசை இருந்தும் -கடைகளில்
எண்ணெய் அளக்கவே
அதிர்ஷ்டம் உள்ளது
வெற்றிக்
கனிகளை அடுக்க
ஆசை இருந்தும்
கடைகளில்
துணிகளை அடுக்கவே
அதிர்ஷ்டம் உள்ளது
இறைவா
எங்கள்
பிஞ்சுக் கரங்களுக்கு ஏன்
பாரங்கள் கொடுத்தாய்?
குழந்தைப் பருவத்தின்
குதூகலங்களை
எங்களுக்கு ஏன்
கொடுக்காது விடுத்தாய்?
பாடங்களை சுமக்கும் மூளைக்கு
பாரங்களை சுமக்கப் பணித்தாய்!
நாங்கள்
பெரிதாக ஏதேனும் கேட்டோமா?
நண்பர்களுடன்
சேர்ந்து உண்ணும் மதிய உணவு
இடை வேளைகளில்
இணைந்து சாப்பிடும் இனிப்பு மிட்டாய்
பள்ளியின் இறுதி மணி
அடித்ததும்
கால்களில் தானாக வரும் வேகம்!
இவை கூட எங்களுக்கு
எட்டாக் கனி தானா?
மலர்களின் தலையில்
மலைகளை வைப்பது தான்
மனித தர்மமா?
உங்களுக்கத் தெரியுமா?
வருங்கால பாரதத்தின் தூண்கள்
இன்று
கட்டிடங்களுக்காய் செங்கல் சுமக்கின்றன...
நாடு என்ற
தோட்டத்தில் நாளை மலரும் முல்லைகள்
இன்று
நகரத் தெருக்களில் முல்லை மல்லி என்று கூவுகின்றன!
நாளைய பாரதத்தை
செதுக்கப் போகும் கரங்கள்
இன்று கல் உடைக்கின்றன...
என்ன செய்வது
படிப்பு இன்று பணமாகி விட்டது
எங்களைப் பெற்றவர்கள்
ஏட்டுச் சுரைக்காயை
எத்தனை நாள் சமைக்க முடியும்?
மோட்டாரின் பாகங்களைப் படித்தால்
மட்டும்
வயிற்று மோட்டார் ஓடுமா?
கை வண்டி இழுத்தால் தான்
வாழ்கை வண்டி ஓடுகிறது
தீக்குச்சிகளை
பெட்டிக்குள் அடுக்கினால்தான்
எங்கள் அடுப்புகளில்
தீ வந்து அமர்கிறது!
அய்யா மனிதர்களே
எங்கள் கண்களைப் பாருங்கள்
உங்கள் எந்திரங்கள்
கக்கும் தீப்பொறிகள் அவைகளுக்குப்
பழக்கப்படவில்லை..
எங்கள் பிஞ்சுக் கைகள்
பாறைகளை
சுமக்கப்
படைக்கப்படவில்லை...
குழந்தைகளின்
கனவுகளை எரித்து அதில்
குளிர் காய்வது நியாயமா?
உங்கள் வீட்டு நாயையும்
குளு குளு அறையில் வைத்தீர்களே
எங்கள் கால்களின்
வெப்ப வெடிப்புகளைக் கவனித்தீர்களா?
மரங்களை
வேர்கள் தாங்கலாம்
நேற்றுதான் பூத்த
மலர்கள் தாங்க முடியுமா?
நாங்கள் கண்ணன் போல
தெய்வக் குழந்தை அல்ல
உயர்ந்த மலையை
ஒற்றை விரலில் தாங்க!
தளிர்களின் உழைப்பில் தான்
உங்கள் தரங்கள் உயர வேண்டுமா?
பிஞ்சுகளின் வியர்வையில் தான்
நீங்கள்
பசியாற வேண்டுமா?
இந்த சமூகம்
எங்களைப் பெற்றவர்களுக்கு
இரண்டு வேளை
நெல்லைக் கொடுத்திருந்தால்
இன்று நாங்கள்
கல்லை உடைப்போமா?
பாரதம் வளர்கிறது என்று
மார் தட்டும் மனிதர்களே
நீங்கள் என்ன தான்
முன்னேறினாலும்
இந்தியாவில்
குழந்தைகள் உழைக்கும் வரை
உங்கள் முன்னேற்றம்
உள்ளே
அசிங்கத்தைத் தின்று விட்டு
வெளியே
அத்தரைப் பூசிக் கொள்வது போல் தான்
இனி மேலாவது
விழித்துக் கொள்ளுங்கள்
வேர்கள்
மரத்தைத் தாங்கட்டும்
மலர்களை
மகிழ்ச்சியோடு
மழையில் நனைய விடுங்கள்!
சமுத்ரா
3 comments:
நிறைய வலிகளை உணருகிறேன் வார்த்தைகளில்...
எல்லாம் உண்மை....உடன்படுகிறேன்...
என்ன சொல்றது? உண்மை வலிக்கிறது!
Post a Comment