(நிறைய பேர் கேட்டுக் கொண்டதால் இந்த தொடரை மீண்டும் எழுதுகிறேன்..(ரெண்டு பேர் கூட நிறையப் பேர் தான் :D)
விக்கிபீடியா-வில் இருந்து 'yahoo answers ' வரைக்கும் 'refer ' செய்து இதை எழுதுகிறேன்...நீங்கள் ஒரு ரெண்டு வரி கமெண்ட் போட்டால் அது மிகுந்த உற்சாகமாக இருக்கும் ப்ளீஸ் ....)
ஒளி என்பது குட்டிக் குட்டித் துகள்களால் (ஃபோடான்கள்) ஆனது என்று ஐன்ஸ்டீன் கண்டு பிடித்தார் என்று பார்த்தோம்...ஆனால் யங் என்பவற்றின் 'இரட்டைப் பிளவு' (double slit experiment )
சோதனை ஒளி என்பது ஓர் அலை என்று காட்டியது...அது எப்படி ஒளி ஒரே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் 'துகள்' ஆகவும் எல்லா இடங்களிலும் பரவி இருக்கும் அலையாகவும் இருக்க முடியும்?
யங் ஒளி புகாத ஒரு திரையை எடுத்துக் கொண்டு அதில் மிக நெருக்கமாக இரண்டு துளைகளைப் போட்டார்...அவற்றின் மீது ஒரு ஒருமித்த ஒளியைப் (coherant) பாய்ச்சினார்... திரையின் அடுத்த பக்கத்தில் இன்னொரு வெள்ளைத் திரையை வைத்தார்...அந்த வெள்ளைத் திரையில் ஒளி கருப்பு வெள்ளைக் கோடுகளாக விழுந்தது...(பொருட்களின் விலையைப் படிக்க அவற்றின் மீது கோடுகள் போடப்பட்டிருக்குமே அது போல,இரண்டு அலைகளின் முகடுகள் ஒன்றோடு ஒன்று சேரும் இடங்களில் பிரகாசம்; இரண்டு ஒளி அலைகளில் ஒன்றின் முகடும் இன்னொன்றின் பள்ளமும் சேரும் இடங்களில் அவை கேன்சல் ஆகி இருட்டு ) ஒளியானது துகள்களாக இருந்தால் அந்தத் திரையில் இரண்டு கோடுகள் மட்டுமே விழுந்திருக்கும்...ஆனால் யங் திரையின் மீது நிறைய கருப்பு வெள்ளைக் கோடுகளைப் பார்த்தார்.. (பார்க்க படம்)
அதாவது ஒளி 'அலை' துளைகளின் விளிம்புகளில் 'விரிவடைந்து' இன்னும் பெரிதாகப் பரவுகிறது ஒளி துகள்களாக இருந்திருந்தால் துகள்கள் (நியூட்டன் விதிப்படி) நேர்கோட்டில் மட்டுமே போகும்..எனவே வெள்ளைத் திரையில் இரண்டே இரண்டு கோடுகள் மட்டுமே விழும்...
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த சோதனையில் ஒளிக்கு பதிலாக 'எலக்ட்ரான்' களைப் பயன்படுத்தினாலும் இதே முடிவுகள் தான் கிடைக்கின்றன..இன்னும் ஆச்சரியமாக ஒரே ஒரு எலெக்ட்ரானை பயன்படுத்தினாலும் வெள்ளைத் திரையில் பல கருப்பு வெள்ளைக் கோடுகள் கிடைக்கின்றன..அதாவது ஒரே எலெக்ட்ரான் ஒரே சமயத்தில் இரண்டு துளைகளின் ஊடாகவும் பயணிக்கிறது...(!) இது எப்படி சாத்தியம்? ஒரு 'துகளின்' வரையறை என்னவென்றால் ஒரே துகள் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது மற்றும் இரண்டு துகள்கள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் இருக்க முடியாது என்பதுதான்...ஆனால் ஒரே எலெக்ட்ரான் எப்படி ஒரே சமயத்தில் இரண்டு துளைகள் வழியாகவும் பயணிக்க முடியும்? (கிருஷ்ணா பரமாத்மாவால் தான் ஒரே சமயத்தில் ருக்மிணியின் வீட்டிலும் சத்ய-பாமாவின் வீட்டிலும் இருக்க முடியும்..ஒரு வேலை எலக்ட்ரானும் பரமாத்மாவோ? )எலக்ட்ரான் ஓர் அலையாக இருந்தால் இது சாத்தியம்..அலை என்பதன் வரையறையே ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகளில் பரவியிருப்பது என்பது தான்..எனவே எலக்ட்ரான் ஒரு அலையாக இருந்தால் மட்டுமே அது இரண்டு துளைகளின் வழியாகவும் பயணித்து மீண்டும் ஒரு துகளாக மாறி திரை மீது சென்று விழ முடியும்...
நாமெல்லாம் வீட்டில் குண்டு பல்பு எரிவதைப் பார்த்திருக்கிறோம்..எப்படி எரிகிறது என்று எப்போதாவது நினைத்துப் பார்க்கிறோமா? இல்லை...அதன் உள்ளே உள்ள ஃபிளமென்ட் மிக அதிக உருகுநிலை கொண்டது...அதாவது வெப்பத்தால் சாதாரணாமாக உருகி விடாது... ஃபிளமென்ட் சூடாவதால் அந்த தனிமத்தில் (டங்க்ஸ்டன்) உள்ள எலக்ட்ரான்கள் அதிர்கின்றன...எலெக்ட்ரான்களின் அதிர்வு மின் காந்த அலைகளாக வெளியே வரும் என்று நாம் முன்பே பார்த்தோம்..அந்த மின் காந்த அலைகளின் அதிர்வெண் நாம் கண்ணால் காணக் கூடிய எல்லையில் இருப்பதால் ஒளியாக நம் கண்களுக்குத் தெரிகிறது...
சரி அவ்வளவு பெரிய அலைகள் அவ்வளவு சிறிய எலக்ட்ரான்களிடம் இருந்து எவ்வாறு வெளிப்பட முடியும்? (இதனால் தான் ஐன்ஸ்டீன் ஒளி குட்டி குட்டி ஃபோடான்களாக தான் வெளியே வரும் என்று சொன்னார்) சில சமயம் எலக்ட்ரான்கள் ஒளியை கிரகித்துக் கொண்டு கொஞ்ச நேரம் 'excited ' ஸ்டேட் இல் இருந்து கொண்டு 'ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா' என்று பாட்டெல்லாம் பாடுகின்றன..அப்படியானால் தக்கனூண்டு எலக்ட்ரான்களுக்குள் அவ்வளவு பெரிய அலை எவ்வாறு ஒளிந்து கொள்ள முடியும்?எனவே ஒளி கண்டிப்பாக குட்டிக் குட்டி துகள்களாகவே இருக்க வேண்டும்..
கொஞ்சம் முன்னாடி தான் ஒளி ஒரு 'அலை' என்று சொன்னீர்களே என்றால் அது அப்படி தான்...அதுவும் தான் இதுவும் தான்..அதுவாக சில சமயம் இதுவாக சில சமயம்..அதுவாகவும் இதுவாகவும் சில சமயம்...அதுவுமின்றி இதுவுமின்றி சில சமயம் (இப்பவே கண்ணக் கட்டுதே!)
இயற்பியலாளர்கள் ஒளி இரண்டுமாகவும் இருக்கிறது என்கிறார்கள்..வேடிக்கையாக திங்கள், புதன், மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நாங்கள் துகள் கொள்கையையும் செவ்வாய், வியாழன், மற்றும் சனிக்கிழமைகளில் அலைக் கொள்கையையும் மாணவர்களுக்கு சொல்லித் தருகிறோம் என்கிறார்கள்..ஆனால் 'common sense ' படி ஒரே வஸ்து எப்படி ஒரே சமயத்தில் 'கட்டுப்பட்ட' துகளாகவும் 'வியாபித்த' அலையாகவும் இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா? சரி தான்...சாதாரண உலகத்தில் அது சாத்தியமில்லை..கந்த சாமி கந்த சாமி தான் குப்பு சாமி குப்பு சாமி தான்...ஆனால் இந்த மாதிரியான குழப்பங்கள் குவாண்டம் உலகில் சாத்தியம்..உண்மையில் சொல்லப் போனால் ஒளி, எலெக்ட்ரான், போன்ற சமாச்சாரங்கள் அலையும் அல்ல துகளும் அல்ல..அவை நம்மால் வார்த்தைகளில் அடக்க முடியாத சில 'மர்ம' விஷயங்கள்..
சரி வாருங்கள் 'ஆலிஸ்' 'wonderland ' இல் பயணிப்பது போல நாமும் இந்த அற்புத குவாண்டம் உலகத்தில் கொஞ்சம் பயணிக்கலாம்.......
சமுத்ரா
22 comments:
அறிவியல் சம்பந்தமான தொடரை வரவேற்கிறேன்
மீண்டும் எதிர்பார்க்கிறேன்
நல்ல பகிர்வு
சென்றிடுவீர் எட்டு திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர், மிக நல்ல முயற்சி நண்பரே தொடருங்கள் .
தொடர்வதக்கு நன்றி..
very very very useful. the simplicity attracts. I have recommended it to many people. please continue sir. very good work. thanks for it.
சுஜாதாவை இன்னும் கொஞ்சம் படித்தால் இந்தத் தொடர் மேலும் சிறப்பாகும் என்பது என் தாழ்மையான எண்ணம்!..
ரவி,நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நான் என்னவோ சுஜாதாவிடம் இருந்து 'காபி' அடிக்கிறேன் என்று சொல்வது போல் இருக்கிறது :)
மீண்டும் தொடங்கியதற்கு வாழ்த்துகள்.
நீங்கள் சுஜாதவை காப்பி அடிக்கவில்லை. உங்கள் பாணி
சுஜாதா கையாண்டது. அவ்வளவு தான்.அறிவியலை இவ்வளவு அழகாக
சொல்லிக் கொடுக்கும் உங்களுக்கு
கங்கிராட்ஸ்..... இந்த பதிவை சேமித்து வைக்கப் போகிறேன்
நன்றி..
( நண்பரே நலமா...? நான் இன்னும் கவிதை தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்
யார் சொல்லியும் கேட்காமல் ) .
நீங்கள் சுஜாதவை காப்பி அடிக்கவில்லை. உங்கள் பாணி
சுஜாதா கையாண்டது. அவ்வளவு தான்.அறிவியலை இவ்வளவு அழகாக
சொல்லிக் கொடுக்கும் உங்களுக்கு
கங்கிராட்ஸ்..... இந்த பதிவை சேமித்து வைக்கப் போகிறேன்
நன்றி..
( நண்பரே நலமா...? நான் இன்னும் கவிதை தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்
யார் சொல்லியும் கேட்காமல் ) .
நண்பரே,
எனக்கு ஒரு சந்தேகம் space-க்கு காலம் இல்லை என நான் நினைக்கிரேன் .
என்னை பொறுத்த வரை பொருள்களின் இயக்கம் மட்டும் காலம் ஆகும். அந்த இயக்கத்தை காலம் என சொல்வதை விட கணக்கீடு என்று சரியாக சொல்லலாம். இயக்கத்தின் அளவீடை தவிர காலம் என்ற ஓன்று இல்லை .பிறகு எப்படி கால பயணம் சாத்தியம் ஆகும். மேலும் பொருள்களின் இயக்கத்தை அளவீடு செய்யலாம் . space-இணை எவ்வாறு அளவீடு செய்ய முடியும்? அளவீடு செய்ய முடியாது என் என்றால் அதட்க்கு இயக்கம் இல்லை. ஏன்? அணுவில் கூட space இருக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது .எனவே காலம் இருந்தால் அதை தெளிவாக விவரிக்கவும் .
நான் கூறியது முட்டாள் தனமாக இருந்தால் மன்னிக்கவும்.
பதில் கிடைக்குமா? நண்பரே
@anonymous,
எனக்குத் தெரிந்தவரை ஸ்பேஸ் என்பது ஒன்றுமில்லாததல்ல (இருட்டு போல அல்ல).. மாறாக ஸ்பேஸ் என ஒரு வஸ்து இருக்கிறது. அதுதான் பொருளின் இருப்புக்கும் அசைவுக்கும் காரணமாகின்றது.
உதாரணத்துக்கு ஸ்பேஸ் (வெளி) என்பது நிலம் என வைத்துக்கொள்ளுங்கள். அது இல்லாவிடின் உங்களால் நிற்க முடியாது. நடக்க முடியாது முடியாது. நிலத்தின் வழியேதான் நடக்க முடியும். நிலம் வளைந்து நெளிந்து இருந்தால், நீங்களும் அப்படித்தான் நடக்க முடியும். வளைந்து நெளிந்த வெளியில் நீங்கள் பயணிக்கும் போது, நீங்கள் நேர்கோட்டில் நிம்மதியாகப் பயணிப்பதாக எண்ணிக்கொண்டாலும், உங்கள் பயணம் வெளியின் வளைவு சுளிவு மேடு பள்ளம சுருக்கம் விரிவுக்கேற்ப வளைந்து நெளிந்து ஏறி இறங்கி சுருங்கி விரிந்தே இருக்கிறது என்பது துரத்தில் இருந்து பார்க்கும் உங்கள் நண்பருக்கு தெரியும்.
இதில் எது சரி? இரண்டுமே சரி என்கிறார் ஐன்ஸ்டீன். உங்களுக்கு சார்பாக உங்கள் பயணம் நேர்கோட்டில் உள்ளது. உங்கள் நண்பர் சார்பாக உங்கள் பயணம் வளைந்து நெளிந்து உள்ளது.
எனக்கு தெரிந்து இரண்டு பிரச்சினைகளின் பதில்கள் வெளி என்ற ஒன்று இல்லை எனும் வாதத்தை தகர்க்கின்றன.
1. சூரிய கிரகணத்தின் போது சூரியனின் பின்னாலிருந்து வரும் நட்சத்திர ஒளி, வளைக்கப்பட்டே பூமியை வந்தடையும். (ஒளியை வளைக்க முடியாது. வெளி என ஒன்று தேவை இல்லாவிட்டால், ஒளி நேராக வந்து சேர்ந்து விடும்.)
பழைய இயற்பியல் விதிகளின்படி நிறையற்ற ஒளியை ஈர்ப்பு சக்தி ஈர்க்கமுடியாது. ஆனால் ஐன்ஸ்டீனின் படி, சூரியன் தனது நிறையால் தன்னைச் சுற்றியுள்ள வெளியை வளைக்கிறது. அந்த வளைவில் விழுந்து எழுந்து வருவதால்தான் ஒளி வளைவதுபோல தோன்றுகின்றது. (ஒளியின் சார்பாக அது பயணிப்பது நேர்ப்பாதை. பூமி சார்பாக ஒளி வளைந்து பயணிக்கிறது)
2. ஹப்பிள் விதியின்படி எம்மிடமிருந்து ஒரு (எம்முடன் ஈர்ப்பினால் கட்டுப்படாத) வான்பொருள் எவ்வளவு தூரத்திலிருக்கின்றதோ, அவ்வளவு வேகமாக அது எம்மை விட்டு விலகிச் செல்கின்றது. பல பில்லியன் தூரத்திலிருக்கும் அண்டங்கள் எம்மைவிட்டு ஒளியைவிட வேகமாக விலகிச் செல்கின்றன.
இதில், சார்புக்கொள்கைப்படி ஒளியைவிட வேகமாக நிறையுள்ள பொருளொன்று செல்ல முடியாது. வெளி என்ற ஒன்று இல்லாவிடின் இரண்டு கொள்கைக்கும் இடையில் லாஜிக் இடிக்கும்.
இதன் பதில், உதாரணமாக ஒரு வீதியில் நீங்களும் உங்கள் நண்பர்கள் எட்டு பேரும் 3x3 சதுர வடிவில் நிற்கும்போது உங்கள் ஒவ்வொருவருக்கும் இடையிலான வீதியின் மேற்பரப்பு தூரம் செக்கனுக்கு ஒரு மீட்டர் வேகத்தில் அதிகரிப்பதாக வைத்துக்கொள்வோம். வலது கீழ் மூலையில் நிற்கும் உங்களிடமிருந்து சதுரத்தின் நடுவில் நிற்கும் நண்பர்(x) வினாடிக்கு ஒரு மீட்டர் முடுக்கத்தில் விலகிச் செல்வார். ஆனால் இடது மேல் மூலையில் இருக்கும் நண்பர்(y) உங்களைவிட்டு வினாடிக்கு இரண்டு மீட்டர் முடுக்கத்தில் விலகிச் செல்வதுபோல உங்களுக்குத் தோன்றும். (உங்களிடமிருந்து x உம் x இடமிருந்து y உம் ஒரே நேரத்தில் விலகுவதால் உங்களிடமிருந்து y மிக வேகமாக விலகுவதாக நீங்கள் நினைப்பீர்கள்) இங்கு வெளிஎன்பது வீதி. அது விரிவடைவதால்தான் நீங்கள் அனைவரும் விலகிச்செல்கிறீர்கள். உங்கள் நண்பரைப் பொறுத்தவரை அவர் அசையவில்லை. ஆனால் உங்களைப் பொறுத்தவரை அவர் விலகிச்செல்கிறார்.
அடுத்து காலம்.
பொருட்களின் இயக்கம் காலமல்ல. மாறாக காலம் இருப்பதால்தான் பொருட்கள் இயங்குகின்றன. காலமும் வெளி மாதிரிதான். வளைந்து நெளிந்து சுருங்கி விரிந்து காணப்படும்.
உதாரணமாக, நீங்களும் உங்கள் நண்பரும் தனித்தனி சைக்கிளில் பயணிக்கிறீர்கள். திடீரென்று உங்கள் நண்பர் காலம் விரிவடைந்த இடத்தில் நுழைந்துவிடுகின்றார். உடனே அவரது நடத்தையில் உங்களுக்கும் வித்தியாசம் தெரியும். அவர் வழக்கத்தை விட மெதுவாகப் பயணிப்பார். அவரது பேச்சு மிக மெதுவாக இருக்கும். அவர் கையில் கட்டியிருக்கும் கடிகாரம் கூட மெதுவாக ஓடுவதைக் காண்பீர்கள்.
ஆனால் உங்கள் நண்பருக்கு இந்த வித்தியாசம் எதுவும் தெரியாது. அவரது வேகம் ஒரே மாதிரி இருக்கும். கடிகாரம் ஒழுங்காக ஓடும். அதேசமயம் நீங்கள் வேகமாக சைக்கிள் ஓட்டுவது போலத் தெரியும். உங்கள் கடிகாரம் வேகமாக ஓடுவதுபோல் தெரியும். இதற்கும் சார்புக்கொள்கை விளக்கம் அளிக்கிறது. உங்கள் சார்பாக நண்பருக்கு காலம் மெதுவாக ஓடுவதால் (As time runs slowly for him relative to you) உங்கள் சார்பாக அவர் மெதுவாக இயங்குகிறார். (He moves slowly relative to you) ஆனால், அவர் சார்பாக நீங்கள் வேகமாக இயங்குகிறீர்கள்.
இதைப் புரிந்துகொள்ள ரிலேட்டிவிட்டி தியரியை கொஞ்சம் பார்க்க வேண்டும்.
சார்புக் கொள்கை (தியரி ஆப் ரிலேட்டிவிட்டி)
இப்பிரபஞ்சத்தில் எப்பொருளின் வேகத்தையோ இன்ன பிற பண்புகளையோ யாராலும் சரியாக அளத்தல் இயலாத காரியம்.
உதாரணம்: நீங்கள் 100 km/h வேகத்தில் பயணிக்கும் ஒரு ரயிலின் புட் போர்டில் நிற்கிறீர்கள். ரயில் ஒரு வயல் வெளியை கடக்கும்போது உங்களை ஒரு விவசாயி பார்க்கிறார். இப்போது உங்களைப் பொறுத்தவரை நீங்கள் அசையவில்லை. நின்றுகொண்டிருக்கிறீர்கள் (velocity = 0) ஆனால் அந்த விவாசயிக்கு நீங்கள் மணிக்கு நூறு கிமீ வேகத்தில் நகர்வது தெரியும். (v = 100kmh-1) அதேசமயம், அந்த விவசாயியைப் பொறுத்தவரை அவர் நகரவில்லை (v = 0) ஆனால் உங்களுக்கு அவர் மணிக்கு நூறு கிமீயில் நகர்வது தெரியும். (v = 100kmh-1)
இதில் எது உண்மை? உங்களுடைய உண்மையான வேகம் எவ்வளவு? நூறா இல்லை பூச்சியமா? இரண்டும் சரி. விவசாயிக்கு சார்பாக உங்கள் வேகம் நூறு கிலோமீட்டர். (In relative to the farmer, ur velocity is 100kmh-1) உங்கள் சார்பாக உங்களுடைய வேகம் பூச்சியம். இதில் ஏதாவது பொய்யென நினைத்தால், அடுத்தமுறை ரயிலில் செல்லும் முன் நீங்கள் ஒரு radar gunஐயும் ஒரு விவசாயியிடம் ஒரு radar gun ஐயும் கொடுத்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
இதேபோல்தான், பூமியில் (பூமி சார்பாக) 50kmh-1 வேகத்தில் பயணிக்கும் ஒரு வாகனம் சூரியக் குடும்பத்தின் வெளியே இருந்து பார்க்கும் ஒரு வேற்றுக்கிரக வாசி சார்பாக 50 x 1669.8 x 108000 x 792 000 = 7.14140064 × 10^12 kmh-1 வேகத்தில் பயணிக்கின்றது. அதற்காக 60 kmh-1 speed limit இருக்கும் வீதிகளில் அந்த வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்க முடியாது.
இப்படி காலமும் வெளியும் ஒரே பண்புகளைக் கொண்டிருப்பதாலும் அவை இரண்டும் சேர்ந்தே காணப்படுவதாலும்தான் ஐன்ஸ்டீன் அவர்கள் இரண்டையும் இணைத்து காலவெளி அல்லது வெளிநேரம் (spacetime)எனப் பெயரிட்டார். காலவேளியின் வளைவு சுளிவு ஏற்ற இறக்கத்திற்கேற்பத்தான் ஒரு பொருளினால் இருக்கவோ அல்லது இயங்கவோ முடியும்.
இந்தக் காலவெளியை சில முறைகளில் மாற்றவோ வளைக்கவோ முடியும்.
1. பிரம்மாண்டமான அடர்த்தியும் நிறையும் கொண்ட பொருட்கள் தம்மைச் சுற்றியுள்ள பொருட்களை வளைக்கின்றன. (இது ஈர்ப்பு விசை எனப்படும்)
2. ஒரு நிறையுள்ள பொருள் ஓய்வில் இருக்கும்போது அது காலத்தில் சீராக, அதிகபட்ச வேகத்தில் நகர்கின்றது. அது வெளி (space)இல் நகரத்தொடங்கும்போது அது காலத்தில் பயணிக்கும் வேகம் குறைகின்றது, வெளியில் அதன் வேகம் கூடுகின்றது. வெளியில் அது உச்ச வேகத்தை (3x10^8 ms-1) எட்டும்போது அது காலத்தில் பயணிப்பதை நிறுத்திவிடுகின்றது. (அது காலத்தில் ஓய்வில் இருக்கின்றது)
இதேபோல் ஒரு பொருள் ஒளியின் உச்சபட்ச வேகத்தை தாண்டி பயணிக்க முடிந்தால், அதன் காலம் மைனஸ் ஆகிறது. (பொருள் கடந்தகாலத்திற்கு செல்கிறது) ஆனால் எந்தவொரு நிறையுள்ள பொருளும் ஒளிவேகத்திற்கோ அல்லது அதைவிட வேகமாகவோ செல்ல முடியாததால் கடந்த காலத்திற்கான பயணம் சாத்தியமில்லை. ஆனால் மிக வேகமாக செல்லும்போது எதிர் காலத்திற்கான மீளமுடியாத பயணம் சாத்தியம்.
@ Abarajithan
பெரு வெடிப்பு [Big Bang] நிகழ்ந்த பின்னர் சில மைக்ரோ செகண்டுகள் பொருட்கள் [matter] ஒளியின் வேகத்தைக் கட்டிலும் பலமடங்கு வேகமாக பயணித்தன என்று சொல்கிறார்களே? இது குறித்து தங்கள் விளக்க முடியுமா?
அறிவியல் சம்பந்தமான தொடரை வரவேற்கிறேன் மீண்டும் எதிர்பார்க்கிறேன் நல்ல பகிர்வு
அறிவியல் சம்பந்தமான உங்கள் தொடரை மீண்டும் ஆரம்பித்ததிற்கு நன்றி..
வேறு பிரபஞ்சங்களுக்குள் நுழைந்திருக்குமோ?
மீண்டும் தொடர்ந்ததற்கு நன்றி.
Post a Comment