இந்த வலையில் தேடவும்
Wednesday, February 2, 2011
வலை, கடல், மீன், மரணம்!
மீன் புடிக்கப் போன
மனுசப் பயலையெல்லாம்
தான் புடிச்சுத் தின்னுச்சாம்
தறி கெட்ட சுறா ஒண்ணு..
மீனவன் வேஷமிட்டு
சாமி வந்து நின்னுச்சாம்
ஆணவத்தில் ஆடி நின்ன
சுறாமீனைக் கொன்னுச்சாம்..
மீனு கொல்லுதேன்னு
முந்தி வந்த சாமி கூட
மனுஷன் கொன்னாக்கா
மவுனமா நிக்குதுங்க
புயலடிச்சு செத்திருந்தா
புலம்பி மறந்திருப்போம்- மனுஷப்
பயலடிச்சு சாவதைத் தான்
பொறுத்துக்க முடியலைங்க
வலை தவறிப் போனாக்க
வேறொன்னு வாங்கிரலாம்
தலை தவறிப் போகுதுங்க
தாளாத துயரமுங்க!
அப்பா எங்கேன்னு
அழுத புள்ள கேட்டாக்க
துப்பாக்கி சுட்டதுன்னு
துக்கத்தைச் சொல்லணுமா?
மகனைக் கண்டியான்னு
முனியாத்தா கேட்டாக்க
யமன் தூக்கிப் போனான்னு
என் வாயால் சொல்லணுமா?
பொழுதாகிப் புருஷனைத்தான்
பொண்டாட்டி தேடுறப்ப
'அழுகாதே'ன்னு ஆரம்பிச்சு
அவ மொகத்தப் பாக்கணுமா?
படகொன்னு இருக்குதுங்க
பாமெல்லாம் இல்லைங்க
துடுப்பொன்னு வைச்சிருக்கோம்
துப்பாக்கி இல்லீங்க...
வலை நெறஞ்சு மீன் கெடச்சா
மனம் நெறஞ்சு திரும்பிடுவோம்
அலை கடந்து அங்கே வர
ஆசையெல்லாம் இல்லைங்க
வலை மாட்டி நடிகரெல்லாம்
வசனம் தான் பேசுவாங்க
தலைமாட்டில் குந்தி அழ
தயாரான்னு தெரியலையே
பாட்டெழுதி எங்க மேல
பரிதாபப் படுறவங்க
கூட்டிக்கிட்டுப் போனாக்க
கூட வந்தாத் தேவலையே
அலை கொஞ்சம் பொங்கினாக்க
அடுத்த நாள் போயிக்கலாம்
கொலைகாரன் காத்திருந்தா
கதியென்ன சொல்லுங்க
கொட்டுற மழையிலையும்
கலங்காத எங்க நெஞ்சு
பட்டாளம் வந்தாக்க
பதறித் துடிக்குதுங்க
படகுக்கு வாழ்க்கைப்பட
பாவம் என்ன செஞ்சோங்க?
கடவுளுக்கும் கண்ணில்லை
கண்ணீரில் இருக்கோங்க
கடல்தாயி இழுத்துக்கிட்டா
கவலை ஒண்ணும் இல்லைங்க
மடப்பசங்க குண்டுக்கு
மரிக்கவா பொறந்தோங்க?
சொழலு கொண்டுச்சுன்னா
சொகம்தாங்க எங்களுக்கு-துப்பாக்கிக்
கொழலு கொல்லுகின்ற
கொடுமைஎன்ன சொல்வோங்க?
ஆள் புடிக்கும் பூதமெல்லாம்
ஆட்சி பண்ணுறப்ப
மீன் புடிக்கும் மீனவனை
மடக்கிக் கொல்லுறாங்க
கொலைகாரன் திருடனெல்லாம்
கூத்தடிக்க விட்டுவிட்டு
வலைக்காரன் வந்தாக்க
வன்முறையைக் காட்டுறாங்க
உயிர் வலி எங்களுக்கு
உங்களுக்கோ வெளையாட்டு
வயிறெரிஞ்சு சொல்லுகிறோம்
வார்த்தை பொய்க்காது!
கடலின் புள்ளைகளைக்
கண்ணீரில் விட்டாக்கா
கடலுக்குப் பொறுக்காது
கடவுளுக்கும் பொறுக்காது
அப்பாவி மக்களைத்தான்
அடிச்சுப் பொழச்சாக்க
தப்பாம கடல்தாயி
தண்டனையைக் கொடுத்துவிடும்
பொங்கு கடல்தாயி
பொறப்பட்டு நீ பொங்கு
எங்களை வதைச்சவங்க
எழுந்தோட நீ பொங்கு
துப்பாக்கி புடிச்சவங்க
தலை தெறிக்க நீ பொங்கு
அப்பாவியை அடிச்சவங்க
அழியட்டும் நீ பொங்கு!
சமுத்ரா
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
அருமையா எழுதி இருக்கீங்க...
உணர்வுகளை கவிதையில் வடித்து இருக்கிறீர்கள்.
இளங்கோ said...
உணர்வுகளை கவிதையில் வடித்து இருக்கிறீர்கள்.
... true.
touching samudra.
மிகவும் "வலி"மையாக இருக்கிறது உங்களது கவிதை.
புயலடிச்சு செத்திருந்தா
புலம்பி மறந்திருப்போம்- மனுஷப்
பயலடிச்சு சாவதைத் தான்
பொறுத்துக்க முடியலைங்க...
உணர்வுகளை கவிதையில் வடித்து இருக்கிறீர்கள்.
என் மன உணர்வுகள் அப்படியே உங்கள் கவிதையிலும்.
நான் எழுதியதை விட இன்னும் உருக்கமாய்.
நீங்களும் நானும் புலம்பியென்ன ?
அவர்கள் காதுக்கு எட்ட வேண்டுமே .
நல்ல எழுதி இருக்கீங்க! எதை எழுதி என்ன..
கேட்கட்டும் இந்த கவிதைகள்...கலைஞரின் காதுகளுக்கும்.. இருந்தா..கடவுளின் காதுகளுக்கும்...
மீனவன் தன் வலியை நாட்டுப்புற பாடலில் பாடி சொல்வது போல் உள்ளது, நல்லா எழுதி இருக்கீங்க
Post a Comment