இந்த வலையில் தேடவும்

Tuesday, November 30, 2010

இருபத்து ஒன்று, பன்னிரண்டு -4

உலகம் அழியும் என்று குத்து மதிப்பாக மாயா சொல்லிப் போனார்களே தவிர எப்படி ,எதனால் அழியும் என்று நிகழ்ச்சி நிரல் எல்லாம் போடவில்லை...இதை வைத்துக் கொண்டு நிறைய பேர் தங்கள் கற்பனைக்கேற்ப புரளிகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்..இவற்றில் முக்கியமானது நான்சி லைடர் என்ற பெண்மணி கிளப்பி விட்டுள்ள புரளி..அதாவது' பிளானட் X ' (அல்லது நிபுரு) என்ற கிரகம்(பூமி மாதிரி நான்கு மடங்கு சைஸ்) பூமி மீது வந்து டொம் என்று மோதப் போகிறதாம்... நீங்கள் சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கும் பொது ஒரு சைக்கிள்காரர் உங்கள் மேல் வந்து மோதினால் "சாவு கிராக்கி" என்றெல்லாம் அவரை செந்தமிழில் வைது விட்டு போய்க் கொண்டே இருக்கலாம்...அனால் நம் பூமி மீதே ஒரு கோள் வந்து மோதினால் ???

இந்த நான்சி லைடர் என்ற அம்மணி ஒரு வெப்-சைட் வைத்திருக்கிறது...நேரம் இருந்தால் சென்று பாருங்கள்...தான் ஒரு 'அவதார புருஷி(?)' என்று சொல்லிக் கொள்ளும் அந்த பெண்மணி , Zeta என்னும் வேற்று கிரகத்துக்காரர்கள் தன்னை 'contact ' செய்து பூமிக்கு ஆபத்து வரவிருக்கிறது என்று சொன்னதாக சூடம் அணைக்காத குறையாக சத்தியம் செய்கிறார்...இந்த கோள் சரியாக டிசம்பர் 21 , 2012 அன்று மோதப் போகிறதாம்..அருகே உள்ள படங்களில் சூரியனுக்குப் பக்கத்தில் மங்கலாகத் தெரிகிறதே அது தான் நமக்கு எமன் 'பிளானட் x '



ஆனால் வானியல் அறிர்கள் இதை உண்மை இல்லை என்று நிரூபித்து விட்டார்கள்...அந்த போடோக்கள் எல்லாம் 'டுபாக்கூர்' என்று சொல்கிறார்கள்...இன்னும் இரண்டு ஆண்டுகளில் நம் மீது மோதப் போகும் கிரகம் வானத்தில் வெறும் கண்களுக்கே தெளிவாகத் தெரியும் என்கிறார்கள்...(கிட்டத் தட்ட நிலா சைசில்) அப்படி எதுவும் தெரிவதாகத் தெரியவில்லை...

சரி இதனால் பூமி மீது எந்தக் கோளும் வந்து மோதாது என்று நாம் தைரியமாக இருந்து விட முடியாது....அண்ட வெளியில் நம் பூமி மிதந்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்..கோள்கள், சிறு கற்கள், பாறைகள் ,துணைக் கோள்கள் என்று எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து மோதலாம்...சொல்லப் போனால் 'Asteroid ' எனப்படும் சிறு கற்கள் நம் பூமி மீது சதா விழுந்த வண்ணம் உள்ளன...அனால் அவை சிறியவை என்பதால் நம் வளி மண்டலத்தில் நுழைந்த உடனேயே உராய்வினால் எரிந்து சாம்பலாகி விடுகின்றன...பூமிக்கு வளி மண்டலம் மட்டும் இல்லை என்றால் நாம் வீட்டை விட்டுச் சென்று கடையில் ஒரு சக்தி மசாலா வாங்கி வருவதற்குள் நான்கைந்து கற்களாவது வந்து நம் தலை மீது விழும்..NEA என்று வானவியலில் அழைக்கப்படும் Near Earth Asteroid ,அதாவது பூமிக்கு மிக அருகில் இருக்கும் பாறைகள் குத்து மதிப்பாக ஒரு ஏழாயிரம் இருக்கலாம் என்கிறார்கள்..

1908 ஆம் ஆண்டு ரஷ்யாவின் 'துங்குஷ்கா ' என்ற இடத்தில் ஒரு மிகப் பெரிய விண் கல் ஒன்று வந்து விழுந்தது...அதிர்ஷ்ட வசமாக முழுவதுமாக வந்து மோதாமல் பூமிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திலேயே வெடித்து சிதறி விட்டது....அப்படியிருந்தும் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தி விட்டது...(அப்படியே வந்து மோதியிருந்தால் ரஷ்யாவே போயிருக்கும் என்கிறார்கள்) இதனால் விளைந்த ஆற்றலானது ஹிரோஷிமாவின் மீது வீசப்பட்ட குண்டைப் போல ஆயிரம் மடங்கு ஆற்றலுக்குச் சமம் என்கிறார்கள்..இந்த கல் எரிந்ததால் கோடிக்கணக்கான மரங்கள் எரிந்து அக்னி தேவனின் அகோரப்பசிக்கு இரையாகின...

இந்த நிகழ்ச்சியை பக்கத்தில் இருந்து பார்த்த செமியோனவ் என்று விவசாயி கூறுவதைக் கேளுங்கள்..."அன்று நான் காலை டிபனை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தேன்...வானத்தின் வடக்குப் பக்கம் ஏதோ ஒன்று இயல்புக்கு மாறாக நடப்பது போல் தோன்றவே திரும்பிப் பார்த்தேன்...வானம் இரண்டாகப் பிளந்து திடீரென்று ஒரு ஒளிக் கற்றை தோன்றியது...நான் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அந்த நெருப்பு பூதாகாரமாக வளர்ந்து அடிவானமெங்கும் பரவியது...மரங்கள் தீப்பற்றிக் கொண்டன...வடக்குப் பக்கத்தில் இருந்து தாங்க முடியாத வெப்பம் வந்து என்னைத் தாக்கியது... என் சட்டையை கழற்றக் கூட நேரம் இல்லாமல்
அப்படியே கிழித்து எறியும் அளவு வெப்பம் என்னை தாக்கியது ...உலகம் அழியப் போகிறது என்றே நான் நினைத்தேன்...வானத்தில் ஆயிரம் இடிகள் சேர்ந்து ஒலிப்பது போல சத்தம் கேட்டது ...பூமி நடுங்கத் தொடங்கியது..எங்கிருந்தோ பாறைகள் பறந்து வந்து விழுந்தன...நான் தூக்கி வீசப்பட்டேன்...நினைவு தவறி விட்டது...நினைவு திரும்பியதும் வயல்கள் எல்லாம் சுடுகாடுகள் போல காட்சியளித்தன...நான் உயிரோடு இருக்கிறேனா என்று எனக்கே சந்தேகமாக இருந்தது..."

இது போன்ற ஒரு சம்பவம் நமக்கும் நடக்கலாம்...எதற்கும் காலையில் எழுந்து ஒரு முறை வெளியே வந்து வானத்தின் வடக்குப் பக்கம் பார்த்து விடுங்கள்...

அறிவியலில் உள்ள முக்கியமான ஒரு கொள்கை
Anthropic principle என்று அழைக்கப் படும் ஒரு கொள்கை...(தமிழில் என்ன?) மனிதன் , அதாவது conscious observer வருவதற்காகத்தான் இந்த பிரபஞ்சமே தன்னை உருவாக்கிக் கொண்டது என்று சொல்லும் கொள்கை...அதாவது ரமேஷும் சுரேஷும் வருவதற்கு தான் இந்த பிரபஞ்சம் வெடித்தது, வாயுக்கள் திரண்டு நட்சத்திரமாக உருவானது, நட்சத்திரத்தை சுற்றி பூமி என்னும் கோள் வந்தது, அதன் தட்ப வெட்ப நிலை சாதகமாக அமைந்தது, ஆதி உயிர் எப்படியோ தோன்றியது என்ற எல்லா அதிசயங்களும்...ஆனால் ஹீரோக்களின் கட்-அவுட்களுக்கு பாலாபிசேகம் செய்கிற , தன் இனத்தை தானே அளிக்க அணு குண்டு தயாரிக்கிற இந்த முட்டாள் மனித இனத்தின் வருகைக்கு இயற்கை இத்தனை மெனக்கெட்டதா என்று நினைக்கும் போது நெருடுகிறது...

நம் பூமி ஒரு விதமான 'Safe Zone ' இல் இருப்பதாக சொல்கிறார்கள்...அதாவது உயிர்கள் வாழக் கச்சிதமான ஒரு சூழ்நிலையில்...பூமியின் வளிமண்டல அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்திருந்தாலும் உயிர்கள் வந்திருக்காது...பூமியின் ஈர்ப்பு விசை கொஞ்சம் குறைந்திருந்தால் கடல்கள் குழிகளில் தங்காது..ஓசோன் இல்லா விட்டால் நாமெல்லாம் மைக்ரோவேவ் ஓவனில் வெந்து போகும் கேரட் போல் எப்போதோ இறைவனடி சேர்ந்திருப்போம்...பூமியின் பகல் நேரம் கொஞ்சம் அதிகமாக இருந்திருந்தாலும் பயிர்கள் கருகிப் போயிருக்கும்...இதையெல்லாம் யாரோ ஒரு கை தேர்ந்த இஞ்சினியர் பார்த்துப் பார்த்து செய்தது போல் இருக்கிறது அல்லவா?

இந்த கொள்கையின் படி, அடிக்கடி விண்கல் மோதுகிற இடத்திலோ, அடிக்கடி Supernova என்னும் வெடிப்பு அடிக்கடி நிகழும் இடத்திலோ உயிர்கள் உருவாகாது...எனவே மற்ற குடும்பங்களை ஒப்பிடும் போது நம் சூரியக் குடும்பத்தில் விண் கல் மோதல்கள் மிக மிகக் குறைவு...பக்கத்தில் supernova எனப்படும் ஆபத்தான விண்மீன் வெடிப்புகள் எதுவும் இப்போதைக்கு இல்லை...மேலும் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்.நம் மீது மோத வரும் பெரும்பாலான விண் கற்களை நமக்கு அடுத்து உள்ள 'வியாழன்' பூதக் கிரகம் பெரும்பாலும் கிரகித்துக் கொள்கிறது..அல்லது திசை திருப்பி விட்டு விடுகிறது...வியாழன் இல்லாவிட்டால் பூமி என்றோ அழிந்திருக்கும்...எனவே ஏதோ ஒன்று, ஏதோ ஒரு சக்தி, ஏதோ ஒரு விதி மனிதகுலம், உயிரினம் நன்றாக வாழ வேண்டும் என்று விரும்புகிறது..(அது கடவுளா என்று தெரியாது..இல்லை என்றால் இவ்வளவு 'இறந்த' விண்மீன்களுக்கும் கிரகங்களுக்கும் இடையே ஒரே ஒரு நீல கிரகத்துக்கு உயிர் கொடுக்க எந்த அவசியமும் இல்லை)


இருந்தாலும் இந்த விண்கல் மோதல்கள் நமக்கு கிலியை கிளப்பிக் கொண்டு தான் உள்ளன...பல கோடி ஆண்டுகளுக்கு முன் இது மாதிரியான சக்தி வாய்ந்த ஒரு விண்கல் மோதலில் தான் டைனோசர்கள் கூண்டோடு அழிந்து போனதாக சொல்கிறார்கள்...LIC கட்டிடத்தின் அளவே உள்ள ஒரு கல் வந்து பூமி மீது விசையுடன் மோதினால் அந்த மோதல் மட்டும் இந்த உலகின் உயிரினங்களை கூண்டோடு அழித்து விடும்...பூமி தான் சுற்றுவதை சில நொடிகள் நிறுத்தும்... கடல் நீர் வானில் சிதறும்..யாருக்குத் தெரியும் மனிதன் ரொம்ப ஆடுகிறானே என்று அந்த சக்தி ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி சுத்தமாகத் துடைத்து விட்டு, மீண்டும் ஒரு செல் உயிரினத்தில் இருந்து சிருஷ்டியை ஆரம்பிக்கலாம்...ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்..அடுத்த முறை இயற்கை தப்பித் தவறி கூட மனிதன் என்ற பிராணியைப் படைக்காது..எதற்கு வம்பு என்று குரங்குக்கு முன்னாலேயே நிறுத்திக் கொண்டு விடும்...

சமுத்ரா


6 comments:

test said...

நல்லா இருக்கு வாழ்த்துக்கள்! :-)

test said...

எனக்கு முதல்ல தெரியாது..
நீங்க கமெண்ட் போட்டதாலதான் உங்க blogகு நான் வந்தேன்! follower ஆனேன்! இதுல ஏதாவது தப்பு இருக்குன்னு feel பண்றீங்களா?

mubarak kuwait said...

very nice, continue your work

Aba said...

இது கடவுளை நம்புபவர்களும் சொல்வது. ஆனால் நான் இதை நம்புவதில்லை. என்னைப் பொறுத்தவரை அனைத்தும் தற்செயலாக நடப்பவையே. பிரபஞ்சத்தில் பல்லாயிரம்கோடி பில்லியன் கோள்கள் இருக்கலாம். அவற்றில் பல disadvantageous features அதிஷ்டவசமாக (?!) தட்டுப்பட்ட காரணத்தினாலேயே பூமியில் நாம் பிறந்திருக்கிறோம். இல்லாவிடின் நிச்சயமாக இன்னொரு கேலக்ஸியில் நீங்கள் பதிவெழுத நான் கமெண்டிக் கொண்டிருப்பேன்.. இவ்வாறு பலநூறு கிரகங்களில் உயிர்கள் பிறந்திருக்கலாம். ஒருவேளை பூமி தாய்மையடைவதற்காக அது பெற்ற தற்செயல் அட்வான்டேஜ்களில் எத்தனை கிரகங்களின் தாய்மை பறிபோனதோ... இத்தனைக்கும் புவியில் உருவான உயிர்களில் 98% அழிந்துவிட்டனவாம். மீதி 2% தான் இப்போது ஆட்டம்போட்டுக் கொண்டிருக்கின்றன.

இராஜராஜேஸ்வரி said...

இது போன்ற ஒரு சம்பவம் நமக்கும் நடக்கலாம்...எதற்கும் காலையில் எழுந்து ஒரு முறை வெளியே வந்து வானத்தின் வடக்குப் பக்கம் பார்த்து விடுங்கள்...
பயத்துடன் பார்க்கிறோம்.

adhvaithan said...

very gud.. all these stuffs are humbug now.. aren't they?