என் கருப்பையில் ஒரு
மகவு வந்து அமரும் என்று
என் மனப்பையில் ஒரு
கனவு வந்து அமர்ந்தது...
அது
இன்று நேற்றல்ல
சிறுமி என்ற
சிற்றுடை நீக்கி நான்
பெண்ணான நாளில்-
என் கருமுட்டைகள்
காலம் கனிந்து
எமக்கு உயிர் தா உயிர் தா என்று
உரக்கக் கதறி
உயிர் விட்டு வெடித்த ஒரு
பொன்னான நாளில்...
ஆனால் ஏனோ
என்
மார்பை உரச ஒரு
தாலி வந்து அமர்ந்த பின்னும்-என்
வயிறை உரச ஒரு
வாரிசு வந்து அமரவில்லை...
முத்தம் விளக்க ஒரு
மணாளன் இருந்த போதும்
என்
மூன்று நாள்
ரத்தம் விலக்க
ஒரு
ரத்தினம் வாய்க்கவில்லை....
யாராவது சொல்லுங்கள்,
உள்ளுக்குள் ஓர்
உயிரை சுமக்கும் சுகம் எவ்வாறு இருக்கும்?
ஆயிரம் தேவதைகளால்
ஆசிர்வதிக்கப் பட்டது போன்றா?
மலை மேல் மலர்ந்த மூலிகைப் பூக்கள்
ஒரு சேர நம்
தலை மேல் விழுந்தது போன்றா?
சொர்கத்தின் நதி ஒன்று
பக்கத்தில் பாய்வது போன்றா?
அமுதக் கலசம் ஒன்று நம்
அடிவயிற்றில் அமர்ந்திருப்பது போன்றா?
மலரைப் படைத்த
மகேசன் ஏனோ அதற்கு
மகரந்தம் மறுத்தான்...
கருவை சுமக்கும் வயிறை ஏனோ
கவலையை சுமக்க
சபித்தான்....
போட்ட விதை
பூமி துளைக்கவில்லை என்று-
உழவன் அழுதால்-அவன்
உள்ளம் தேற்ற
உறவுகள் உண்டு
தான் ஒரு மலடி என்று
மண் அழுதால் அதன்
கண் துடைக்க ஒரு
கரம் தான் எங்குண்டு??
மடி கனக்காததால்
இன்று என்
மனம் கனக்கிறது
இணைந்த மறு நாளே
இன்பச் செய்தி கேட்கும்
அவசர உறவுகளுக்கிடையே
என்
அடிமனம் அழுகிறது
என்ற ஒரே காரணத்தால்
இந்த
தேனுகா
பாடப்படாது நிராகரிக்கப்பட்டது...
என் குழந்தை படுத்து ஏற்படும்
மடி ஈரம்...
மார்பை முட்டிப்
பாலுண்ணும் போது
மெலிதாய்க் கேட்கும் மோகன ராகம்...
பிஞ்சுக் கரங்களின்
தொடுதலில் விளையும்
தாய்மையின் இன்பம்...
இவையெல்லாம் ஏழை எனக்கு
எட்டாத கனியா?
மாரைப் படைத்து
பாலை மறுத்த இறைவா
இது என்
மாயப் பிறவியின் வினையா?
அய்யா இறைவா
காற்று தூங்கவா என்
கருப்பையை வைத்தாய்
அதற்குள்
உயிர் நுழையாமல் எந்த
ஊசி கொண்டு தைத்தாய்??
பேறு வலி என்னைப்
புறக்கணித்து விட்டதால்
வேறு வலிகள் என்னை
வாடகைக்கு எடுத்தன...
பேறு வலியாவது -பிள்ளை ஒன்று
பிறக்கும் மட்டும்
எந்தன் இதயத்தின் வலிகளோ
இனி நான் இறக்கும் மட்டும்!
என் குழந்தைக்காய் நான்
எழுதிய
தாலாட்டு வரிகள்- எனக்கு
ஒப்பாரியாய் மாறி என்
உயிரைக் குடித்தன...
என்
உறவுகளே!
உடன் பிறவா சகோதரியரே!
பத்து மாதம் மூச்சடக்கி
பனிக்குடத்தில் முத்தொன்று எடுத்த
தாய்க்குலங்களே ! இறுதியாக ஒன்று மட்டும்!
திங்கள் நிகர்த்த சிசுவொன்று
என்னைத் தீண்டாததால் நான்
தீண்டத்தகாதவள் அல்ல..
பாவை மகவொன்று என்னைப்
புறக்கணித்ததால் நான் ஒரு
பாவி மகள் அல்ல..
தொப்புள் -
கொடி ஏந்தாத மகவை என்
மடியாவது ஏந்தட்டும் தாருங்கள்!
மார்பில் சீரம் சுரக்கா விடினும்
நெஞ்சில்
ஈரம் சுரக்கும் என்று இனி மேல் அறியுங்கள்..
கரு அமரும்
அறை காலி என்பதால்
என்னை அரைப்பெண் என்று
நாவில் அரைப்பதை விடுங்கள்!
உங்கள் மகவு
கண்ணனாக இருக்கலாம்-ஆனால்
நான் ஒன்றும்
பூதனி அல்ல! தயங்காமல் கொடுங்கள்!
ஆம்
பெற்றவளுக்கு ஒரு பிள்ளை..
பெறாதவளுக்கு பல பிள்ளை..
உங்கள் மகவை இனிமேல்
உரிமையாய்த் தாருங்கள்!
ஏனென்றால்
என் வயிறு ஒரு குழந்தையை
பிரசவிக்காவிடிலும்-
நான் கொஞ்சும்
ஒவ்வொரு குழந்தைக்கும்
என் இதயம்
ஒரு தாயைப் பிரசவிக்கிறது....
சமுத்ரா
No comments:
Post a Comment