கலைடாஸ்கோப் - 95 உங்களை வரவேற்கிறது.
லைட் பல்பு ஜோக்கு என்று கேட்டிருப்பீர்கள்.
உதாரணத்துக்கு சில:
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை மனோதத்துவ நிபுணர்கள் வேண்டும்?
வி: ஒன்று. ஆனால் அந்த பல்பு மாற்றத்துக்கு தயாராக இருக்க வேண்டும்.
கே:ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை கணித இயலாளர்கள் வேண்டும்?
வி: 0.99999999999999999999999999999999999999999999999999
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை வக்கீல்கள் வேண்டும்?
வி: எத்தனை பேருக்கு உங்களால் கூலி கொடுக்க முடியுமோ அத்தனை பேர்
நானே யோசித்தது சில:
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை இந்திய அரசியல்வாதிகள் வேண்டும்?
வி: மூன்று . ஒருவர் லைட் பல்பை மாற்ற.. இன்னொருவர் லைட் பல்பை மாற்றுவதற்கான திட்டம் எங்கள் ஆட்சிக் காலத்தில் தான் போடப்பட்டது என்று சொல்ல. இன்னொருவர் . பல்பு ப்யூஸ் ஆனால் இரண்டு கட்சிகளையும் திட்ட
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை புத்தர்கள் வேண்டும்?
வி: பூஜ்ஜியம். புத்தர்கள் தங்களுக்குத் தாங்களே ஒளியாக இருக்கிறார்கள்.
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை நம்பிக்கை வாதிகள் தேவை
(optimist )?
விடை: ஒன்று. அவர் பல்பை அப்படியே பிடித்துக் கொண்டு ஒட்டு மொத்த அறையே சுற்றட்டும் என்று காத்திருப்பார்.
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை அவநம்பிக்கைவாதிகள் தேவை
(pessimist )?
வி: குறைந்தபட்சம் இரண்டு. ஒருவர் பல்பை மாற்ற. இன்னொருவர் பல்பு கீழே விழுந்து விட்டால் பிடித்துக் கொள்ள.
கே: ஒரு லைட்பல்பை மாற்ற எத்தனை சினிமா நடிகர்கள் தேவை?
வி: பூஜ்ஜியம். அது டூப்புகளின் வேலை.
கே: ஒரு லைட்பல்பை மாற்ற எத்தனை சினிமா நடிகைகள் தேவை?
வி: ஒன்று. ஆனால் அவர் மாற்றும் போது கீழே இருந்து ஒருவர் அவர் தொப்புளை படம் பிடிக்க வேண்டும்.
கே: ஒரு லைட்பல்பை மாற்ற எத்தனை சீரியல் நடிகர்கள் தேவை?
வி: குறைந்தது இரண்டு. பல்பு கீழே விழுந்து விட்டால் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து அழ வேண்டும்.
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை முட்டாள்கள் தேவை?
வி : இரண்டு. ஒருவர் லைட் பல்பை மாற்ற. இன்னொருவர் அவருக்கு ஷாக் அடிக்கும் போது உதவி செய்ய.
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை face-book பயனாளிகள் தேவை?
வி: இரண்டு. ஒருவர் பல்பை மாற்ற இன்னொருவர் அதை லைக் செய்ய.
கே: ஒரு லைட்பல்பை மாற்ற எத்தனை ட்வீட்டர்கள் தேவை?
வி: மூன்று. பல்பை மாற்ற ஒருவர். அதை tweet செய்ய ஒருவர். அதை re -tweet செய்ய இன்னொருவர்.
கே: ஒரு லைட்பல்பை மாற்ற எத்தனை பயந்தாங் கொள்ளிகள் தேவை?
வி: ஒருவர். ஆனால் இன்னொருவர் ஸ்டூலை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை சோம்பேறிகள் தேவை?
வி: பூஜ்ஜியம். அதை ஏன் மாற்றிக் கொண்டு?!
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை ரஜினிகள் தேவை?
வி: ஒன்று. ஆனால் யாரேனும் ஒருவர் பல்பு மாற்றும் போது background music கொடுக்க வேண்டும்.
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை கமல்கள் தேவை?
வி: ஒன்று. ஆனால் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் ஆமாம்.
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை கருணாநிதிகள் தேவை.
வி: ஒன்று. ஆனால் மாற்றிய பிறகு 'வெளிச்சக் குமிழை மாற்றிய வீர வேந்தனே' என்று ஒரு பாராட்டு விழா கண்டிப்பாக வேண்டும்.
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை ஜெயலலிதா தேவை?
வி: முதலில் அவர் ஒரு மலிவு விலை பல்பு கடை ஆரம்பிக்கட்டும் என்று மாண்புமிகு அம்மாவிடம் கைகட்டி வாய் பொத்தி விண்ணப்பிக்கிறோம் .
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை டி . ராஜேந்தர் தேவை?
வி: பல்பு என்பதற்கு இங்கிலீஷில் ரைமிங் இல்லை. எனவே அவர் வரமாட்டார்.
கே: ஒரு பல்பை மாற்ற எத்தனை அத்வைதிகள் தேவை?
வி: பூஜ்ஜியம். பல்பு என்பதே மாயை...
கே: ஒரு பல்பை மாற்ற எத்தனை மாடர்ன் குரு மார்கள் தேவை?
வி: ஒன்று. ஆனால் பத்து பேர் அவரை சுற்றி நடனமாட வேண்டும்.
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை முன் ஜாக்கிரதைக் காரர்கள் தேவை?
வி: இரண்டு. ஒருவர் பல்பை மாற்ற. இன்னொருவர் ஸ்விட்ச் ஆப் ஆனதை உறுதி செய்ய. தமிழ் நாட்டில் ஒருவர் போதும்.
கே: ஒரு பல்பை மாற்ற எத்தனை காமெடியன்கள் தேவை?
வி: இரண்டு. ஒருவர் ஸ்டூலை ஆட்ட. இன்னொருவர் வேண்டுமென்றே பல்பை கீழே போட்டு உடைக்க.
எனக்கு மிகவும் பிடித்த விடை:
கே: ஒரு லைட் பல்பை மாற்ற எத்தனை software இஞ்சினியர்கள் தேவை?
வி: பூஜ்ஜியம். ஏனென்றால் அது ஹார்ட்வேர் பிராப்ளம் .
:)
சாப்ட்வேர் ஆசாமிகள் product வேலை செய்யாத போது சொல்லும் பொதுவான சால்ஜாப்புகளுக்கும் ஒரு லிஸ்ட் இருக்கிறது . அவை:
* இது என் மாட்யூல் அல்ல.
* அப்போது இது வேலை செய்தது.
* இது equipment / hardware ப்ராப்ளம்.
* இதை தவறான environment -இல் கஸ்டமர் உபயோகித்திருக்கலாம்.
* requirement சரியாக இல்லை.
* இதை அடுத்த release -இல் பார்த்துக் கொள்ளலாம்.
* இதை நான் கோட் செய்யவில்லை.
* நூறு சதவிகிதம் டெஸ்டிங் சாத்தியம் இல்லாதது.
* இது என் மெஷினில் வேலை செய்தது!
- நம்மிடம் வரும் பந்தை நாம் எவ்வளவு சுலபமாக அடுத்தவர் மீது தூக்கி
எறிகிறோம்?
சாப்ட்வேர் கண்ணுக்குத் தெரியாதது ஒரு பெரிய advantage ...சுலபமாக வேறொன்றைக் கைகாட்டி விடலாம். ஆனால், வீட்டில் பிரிட்ஜ் வேலை செய்யவில்லை என்று டெக்னீஷியனைக் கூப்பிட்டால் அவர் இப்படியெல்லாம் சால்ஜாப்பு சொல்ல இயலாது.! :)
சன் .டி .வி யில் CJ -7 என்ற திரைப்படம் வந்து கொண்டிருந்தது. அதில் வரும் டிக்கி என்ற சீனா குட்டிப் பையன் ரொம்பவே சுட்டி. அப்பா ஒரு ஏழை கட்டிட வேலைக்காரர். இருவரும் ஒரு பாதி இடிந்த வீட்டில் தங்கி இருக்கிறார்கள். டிக்கி, ஒருநாள், அப்பாவை பொம்மை வாங்கித் தருமாறு அடம் பிடிக்கிறான். அப்பாவிடம் காசு இல்லை. பொம்மை இல்லை என்று சொல்லி பையனை அடித்து விடுகிறார்
அன்று இரவு குப்பைத் தொட்டியில் ஒரு வினோத பந்தைக் கண்டு பிடித்து அதை தன் பையனிடம் விளையாடத் தருகிறார் அப்பா . அது பார்ப்பதற்கு ரப்பர் பந்து போல இருந்தாலும் ஒரு வேற்றுக் கிரக உயிரினம் அது.
பந்து பொம்மைக்கு மெல்ல மெல்ல குட்டி கால் ,கை, தலையில் ஒரு குட்டி ஆண்டனா எல்லாம் முளைத்து விடுகிறது. படம் முழுவதும் பையனுடன் சேர்ந்து ஒரே லூட்டி செய்கிறது.
சரி. போபோ பொம்மை ஆய்வு (bobo doll experiment ) என்று ஒரு மனவியல் ஆய்வு ஒன்று உள்ளது. குழந்தைகள் மேல் நடத்தப்பட்ட ஆய்வு அது. மனவியல் நிபுணர் ஆல்பர்ட் பன்துரா( Albert Bandura) நடத்தியது.
3-6 வயது உடைய குழந்தைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வெவ்வேறு விதமான காட்சிகள் நடித்துக் காட்டப்பட்டன.
அடல்ட் ஒருவர் போபோ பொம்மையை அடிப்பது போலவும், துன்புறுத்துவது போலவும் , குத்துவது போலவும் வன்முறைக் காட்சிகள் சில குழந்தைகளுக்கு (குரூப்-1) காட்டப்பட்டன.
சாதாரணமான, வன்முறை இல்லாத காட்சிகள் சில குழந்தைகளுக்குக் காட்டப்பட்டன. (குரூப்-2)
சில குழந்தைகளுக்கு காட்சிகள் எதுவும் காட்டப்படவில்லை.
பின்னர் ஒரு பெரிய அறையில் இந்தக் குழந்தைகள் தனித்தனியாக ஏராளமான விளையாட்டுப் பொருட்களுடன் விளையாட அனுமதிக்கப்பட்டனர். வன்முறை இல்லாத காட்சிக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த நாலடி உயர போபோ பொம்மையைக் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் குரூப் -1 குழந்தைகள் அந்த பொம்மை அறையின் முலையில் வைக்கப் பட்டிருந்தாலும் அதைத் தேடிச் சென்று அதனுடன் வன்முறையாக சண்டை போட்டன. ஆண் குழந்தை ஆனாலும் சரி பெண் குழந்தை ஆனாலும் சரி..
கீழே உள்ள காணொளியில் இதைக் காணுங்கள்.
குழந்தைகள் தங்கள் ரோல் மாடல்களிடம் இருந்து எப்படி கற்றுக் கொள்கிறார்கள் என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது. மேலும், குழந்தைகள் வன்முறையை செய்ய வேண்டும் என்று செய்யவில்லை. அவர்கள் வெறுமனே தங்கள் ரோல் மாடலை இமிடேட் செய்தனர்.
எனவே, குழந்தைகள் டி .வி. சினிமா பார்க்கும் போது கவனமாக இருங்கள். டி .வி தானே சார், நிஜமாவா நடக்குது, எனவே சூர்யா அங்கிள் நடிக்கும் சிங்கம்-II பார்க்கட்டும் விடுங்கள் ...எதிரிகளை ஷூட் செய்யும் வீடியோ கேம் விளையாடட்டும் விடுங்கள் என்ற மனப்பான்மையை மாற்றிக் கொள்ளுங்கள்.
creative -ஆன வீடியோ கேம்களை, டாகுமெண்ட் படங்களை அவர்களுக்குக் காண்பியுங்கள். ஹீரோ பறந்து பறந்து ஐம்பது பேரை வெறி கொண்டு மிதிக்கும் படங்களை அல்ல. மண் பொம்மை செய்வது, ப்ளாக்-களை (block ) வைத்து கட்டிடம் கட்டுவது, பேப்பர் வொர்க் செய்வது, சின்னச் சின்ன அறிவியல் கருவிகள் செய்வது இப்படி.வீட்டிலும்.
நம் குழந்தைகள் உருவாக்குபவர்களாக வளரட்டும். அழிப்பவர்களாக அல்ல,
இப்படிப்பட்ட சில குட்டிக் குட்டி விளையாட்டுகளை அவ்வப்போது டி .வி யை அணைத்து விட்டு குழந்தைகளிடம் விளையாடலாம். கணிதத்தில் look -and -say sequence என்று சொல்வார்கள்.
1, 11, 21, 1211, 111221, 312211, 13112221, 1113213211..
இந்த சங்கிலியில் அடுத்த எண் என்ன என்பதை முதலில் உள்ள எண்களைப் பார்த்தே சொல்லி விடலாம்.
1- ஒரு ஒன்று (11)
11- இரண்டு ஒன்று (21)
21- ஒரு இரண்டு ஒரு ஒன்று ( 1211)
1211 - ஒரு ஒன்று ஒரு இரண்டு இரண்டு ஒன்று (111221)
111221 - மூன்று ஒன்று இரண்டு இரண்டு ஒரு ஒன்று ( 312211)
இப்படி..... :)
காகிதத்தை எட்டாக மடித்து சில ஓட்டைகள் போட்டு காகிதத்தை விரித்து என்ன pattern வருகிறது என்று பார்க்கலாம்.
சின்ன சின்ன பாடல்களை எழுதும்படி குழந்தைகளை ஊக்குவிக்கலாம். உதா:
சின்ன சின்ன பொம்மை...
எங்கே அடுத்த லைன் சொல்லு பார்க்கலாம்.
குழந்தை: பெரிய பெரிய பொம்மை...
நாம்: இல்லம்மா. 'சி' சொன்னமில்ல...அடுத்த வரியிலையும் 'சி' வரணும் சரியா...இப்ப சொல்லு.
சின்ன சின்ன பொம்மை
சிரித்து பேசும் பொம்மை....
இப்ப சொல்லு... 'வண்ண வண்ண பொம்மை' எங்கே. அடுத்த லைன் சொல்லு.
குழந்தை:
வண்ண வண்ண பொம்மை
வாத்துக் குட்டி பொம்மை.
டி .வி. இல்லாமலும் சுவாரஸ்யமாக பொழுது போகும்.
சரி.. முழுப் பாடலையும் சொல்லி விடுகிறேன். உங்களுக்கு பாப்பாவுடன் விளையாட உபயோகமாக இருக்கும்.
சின்னச் சின்ன பொம்மை
சிரித்துப் பேசும் பொம்மை
வண்ண வண்ண பொம்மை
வாழ்த்துச் சொல்லும் பொம்மை
கண்ணை உருட்டிப் பார்க்குமே
காதைத் தீட்டிக் கேட்குமே
என்னை அதற்குப் பிடிக்குமே
எனக்கும் அதைப் பிடிக்குமே
அதற்காக ஆங்கில இலக்கணத்தில் உள்ள cohesion , ellipsis போன்ற விஷயங்களை குழந்தைகளுடன் பேச வேண்டாம் :)
நாம் இப்போது பேசுவோம்.
ellipsis என்பது என்றும் பெரிய மேட்டர் அல்ல.
கேள்வி: நீ எங்கே போகிறாய்?
விடை: ஊருக்கு.
இங்கே ஊருக்கு என்று சொன்னால் போதும். நான் ஊருக்கு போகிறேன் என்ற விடையில் நான் மற்றும் போகிறேன் என்பவை கத்தரிக்கப்படுள்ளது எலிப்சிஸ் எனப்படும்.
ஆங்கிலத்தில் இந்த எலிப்சிஸ் மிக பரவலாகவே உபயோகிக்கப்படுகிறது.
உதாரணம்.
My first son is very much interested in politics while the second, is not.
முழு வாக்கியம்:
My first son is very much interested in politics while the second (son), is not (interested)
தமிழில் கூட எலிப்சிஸ் உபயோகிக்கிறோம்.
என் முதல் மகனுக்கு அரசியலில் ஆர்வம். இரண்டாவதுக்கு இல்லை.
ஒரே விதமான pattern -கள் திரும்பத் திரும்ப உபயோகப்படுவதைத் தவிர்க்கிறது இது.
ட்விட்டர் வந்த பிறகு நமக்கு எல்லா மொழிகளிலும் எலிப்சிஸ் தேவைப்படுகிறது.
'அம்மா கடைக்குப் போனாள் ; அக்காவும்'
ராத்திரி ரொம்ப வெம்மையாக இருந்தது; பகலும்.
இன்னொன்று.
He saw her ; she as well ..
'அண்ணலும் நோக்கினான்; அவளும்' - that's it
again , தமிழ் இலக்கியங்களில் இது அரிது. சோம்பேறித்தனப்படாமல் முழுவதும் எழுதி விட்டார்கள் என்று தான் தெரிகிறது.
அகர முதல எழுத்தெல்லாம் அதி
பகவன் முதற்றே உலகு.
- இங்கு பகவன் உலகு என்று எழுதி இருந்தால் அது ellipsis ஆக இருந்திருக்கும். தளை தட்டும் என்றால் முதற்றே - நிரை நேர் புளிமா வருகிறது. அதற்கு சமமாக வேறு வார்த்தை போடலாம்.
வள்ளுவர் மன்னிப்பாராக
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் திரைசூழ் உலகு - என்றால் அது ellipsis !
-எவன்டா அவன் முதல் குறளையே முதுகில் ஆபரேஷன் செய்யறவன் என்று யாரேனும் கிளம்பும் முன்னரே சுருட்டிக் கொண்டு விடுவோம்.
திருக்குறளில் எலிப்சிஸ் வருகிறது. sorry !
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற! - 495]
ஷேக்ஸ்பியரின் இந்த வரிகளில் எங்கே எலிப்சிஸ் வருகிறது என்று சொல்லுங்கள்.
All the world's a stage,
And all the men and women merely players;
ஒரு எலிப்சிஸ் கவிதை :)
அவள் என்னுடன் நடந்தாள்
நானும் அவளுடன்
அவள் என்னருகில் அமர்ந்தாள்
நானும் அவளருகில்.
அவள் என்னை முத்தமிட்டாள்
நானும் அவளை
அவள் என்னை அணைத்துக் கொண்டாள்
நானும் அவளை
-அவள் இடையே மறைந்து போனாள் .
ஆனால் நான் இன்னும் இருந்தேன்
கனவு போலும்!
ஓஷோ ஜோக்.
முல்லா நசுருதீன் டாக்ஸியில் சென்று கொண்டு இருந்தார்.
வழியில் வண்டியின் ப்ரேக் செயலிழந்து விட்டது.
"அய்யோ , உதவி, உதவி, பிரேக் பெயில் ஆயிருச்சு "என்று கத்தினார் டாக்ஸி டிரைவர்.வண்டி தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தது.
"இந்தப்பா..சும்மா கூவிகினு இருக்காதே. ஓடிக் கொண்டிருக்கிறதே அந்த டாக்ஸி மீட்டர், அதைக் கொஞ்சம் நிறுத்தி விடு" என்றார் முல்லா..
சமுத்ரா
6 comments:
டெலஸ்கோப் பல தகவல்கள்..
லைட் பல்பை மாற்ற எத்தனை ரஜினிகள் தேவை?
பூஜ்ஜியம். ரஜினி பார்த்தால் பியூஸ் ஆன பல்பு அதுவே சரியாகி விடும்
என் குழந்தையுடன் பாடல் எழுத முயற்சிக்க வேண்டும். அனைத்து தகவல்களும் பயனுள்ளதாய் இருந்தது!
பல்பை பற்றி ரொம்ப டீடெயில்டா போட்டு எங்களுக்கு பல்பு கொடுத்திட்டீங்க... Bandura experiment பற்றி விளக்கியது அருமை...சமுதாயம் முக்கியமாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடலாக இருக்க வேண்டும்..
சமுத்ரா ,
பல்ப் ரொம்ப ஓவர் டோஸ் ஆயிருச்சுப்பா.
சங்கரசிவம்
முதன் முறை தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன். அருமை தொடர்வேன்.
Post a Comment