இந்த வலையில் தேடவும்

Tuesday, July 30, 2013

கலைடாஸ்கோப்-97

கலைடாஸ்கோப்-97 உங்களை வரவேற்கிறது.

உங்கள் அப்பா எல்லாரிடமும் கை நீட்டுபவர். யாரைப் பார்த்தாலும் அஞ்சு இருக்கா பத்து இருக்கா? கைமாத்தா கொடுங்களேன் என்று வாய்கூசாமல் கேட்பவர். அம்மாவோ ஊட்டி கொடைக்கானல் என்று மலை மலையாகப் பார்த்து அவ்வப்போது டூர் போய் ஹாயாக உட்கார்ந்து கொள்கிறவள்; அம்மாவுடன் பிறந்த தாய்மாமன் ஒரு திருடன். வெட்கமே இல்லாமல் பெண்களிடமெல்லாம் திருடுபவன்.சரி.கூடப் பிறந்த அண்ணன் எப்படி என்றால் அவனுக்கு கால்சப்பை. இங்கேயும் அங்கேயும் நகராமல் இருந்த இடத்திலேயே உட்கார்ந்து நன்றாகத் தின்று தொப்பையை வளர்த்து வைத்திருக்கிறான்.


வெயிட்.....இதை முதலிலேயே கலைடாஸ்கோப் -58 இல் எழுதி விட்டோம் இல்லையா...

ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கும் போது இதே மாதிரி முதலிலேயே நடந்திருக்கிறது பாஸ் என்று மனம் சொல்வதை 'திஜாவு' என்கிறார்கள். நாம் இதை வாழ்க்கையில் ஒரு முறையேனும் அனுபவித்திருப்போம். எல்லாமே டிட்டோ டிட்டோவாக முதலில் எப்போதோ நடந்ததாக தோன்றுவது.well, செய்ததையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கும் இந்த நகர வாழ்க்கையில் திஜாவு அதிசயம் இல்லைதான் என்றாலும் இன்ச் இஞ்சாக அப்படியே முதலில் என்றாவது நடந்திருக்க வாய்ப்பு இல்லை. திஜாவு ஒரு மனோதத்துவம் சம்பந்தப்பட்ட விஷயமா என்பது சரியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. நம் புலன்களுக்கு என்று தனியாக memory யை இயற்கை அளிக்கவில்லை. எல்லா processing-கும் மூளையில்தான் நடக்கிறது. மூக்குக்கோ கண்ணுக்கோ நாவுக்கோ தனியாக அனுபவங்களை store செய்யும் ஒரு flash memory கிடையாது. 

நெட்வொர்க்-களில் இந்த முறை பற்றி ஆராய்ச்சி நடந்து வருகிறது. அதாவது network களின் edge device (நுனி எந்திரங்கள்!) களை , routerகள் switchகள் போன்றவற்றை டம்மியாக விட்டுவிட்டு எல்லா intelligence ஐயும் ஒரு மையமான சக்திவாய்ந்த கேந்திர கம்ப்யூட்டரிடம் விட்டு விடுவது!இப்படி
செய்வதால் processing time குறையும் என்கிறார்கள். 

நம் புலன்கள் ஒரு விதத்தில் instant என சொல்லலாம். 

" இக்கணத்தில் வாழ்ந்திருந்து இன்புறுவ தெக்காலம்?" என்று புலம்பும் சித்தர் பாடல்கள் புலன்களுக்கு கச்சிதமாக  பொருந்தும். அவை கணத்துக்கு கணம் நடப்பதை அப்படியே பிரதிபளிக்கின்றன.காட்சிகளை, சத்தத்தை, பதிந்து வைத்து பின்னர் 'அவளைப் பார்த்த அந்த நிமிஷம் ஒறஞ்சு போச்சு நகரவே இல்லை' என்று தனுஷை பாட வைப்பதெல்லாம் திருவாளர் மூளையின் வேளை.

ஆனாலும் சில நேரங்களில், மிக  அபூர்வமாக மூளை என்ன நடக்கிறது என்பதன் ஒரு முழு frameworkஐ அமைப்பதன் முன்பே புலன்களால் (அல்லது மூளையின் ஒரு தற்காலிக short-term memory யால்)ஒரு பிம்பம் வடிவமைக்கப்படுவதை திஜாவு என்கிறார்கள். தர்க்கரீதியாக கணக்கு போட , அதாவது இன்று வேறு நாள் வேறு வருஷம் வேறு இடம் , வேறு அனுபவம் , வேறு சூழ்நிலை என்று கணக்கு போட மூளை இன்னும் உள்ளே வராததால் புலன்கள் அதானே இது முன்னமே நடந்திருக்கிறது என்று நாவலின் ஏதோ இரண்டு random பக்கங்களைப் படித்து விட்டு என்ன எழுதியதையே மீண்டும் எழுதியிருக்கிறது என்று தப்புக் கணக்கு போடுவது.

இதற்கு எதிர் விளைவை ஜாமிஸ்வு என்கிறார்கள். ஒரு விஷயத்தை, நபரை , வார்த்தையை, காட்சியை, ஒலியை ஏற்கனவே சிலபல முறை கேட்டுப் பழகி இருந்தாலும்  அது என்ன என்று உடனே முடிவு செய்ய முடியாமல் மூளை குழம்புவது. கிட்டத்தட்ட தமிழ்த் திரைப்பட கதா நாயகர்களுக்கு வரும் short-term memory loss!

நுனி நாக்கில் ஒருவருடைய பெயர் இருக்கும். ஆனால் வெளியே வராது. எவ்வளவு பரிச்சயமான ராகம் என்றாலும் சில சமயம் அதை கண்டு பிடிக்க முடியாது. ச்சே, இது கானடாவாச்சே இது எப்படி நமக்கு மறந்து போச்சு என்று நமக்கே ஆச்சிரியமாக இருக்கும்.

தனியாகப் படித்தால் பயம் தரக் கூடிய சில விஷயங்கள்:

சில பேர் , இதுவரை போயிருக்காத சில நகரங்களுக்கு முதன் முறையாக செல்லும்போது அதன் தெருக்கள் தங்களுக்கு மிக மிக பரிச்சயமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இங்கே திருப்பம், இங்கே முட்டுச் சந்து, இங்கே சிக்னல் என்று அச்சு அசலாக. சில பேர் , இது எல்லாம் அப்படியே அச்சு அசலாக முன்பே நடந்திருக்கிறது என்று சொல்லி விட்டு அடுத்தது என்ன நடக்கும் என்றும் தங்களுக்கு தெரிவதாக சொல்லி யிருக்கிறார்கள். 'அடுத்து நடப்பது உனக்கு எப்படிப்பா தெரியும்? என்றால் அதான் இதெல்லாம் முன்பே ஒன்று விடாமல் நடந்திருக்கிறதே' என்பார்கள். திஜாவு, மன வியாதியா முன் ஜென்ம ஞாபகங்களா டெலிபதியா தெரியவில்லை. 

திரைப்படம் ஒன்றில் வேன் ஒன்று தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டு விபத்துக்கு உள்ளாவதாக ஹீரோவுக்கு தெரிய வரும். உடனே தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதிகளின் படி ஹீரோ எப்படியோ ட்ராபிக்-கை சமாளித்து காடுமலை மேடு தாண்டி வந்து வேனில் இருப்பவர்களை காப்பாற்றி விடுவார்.

சில பேர் இதற்கு இயற்பியல் ரீதியான ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள். குவாண்டம் அறிவியலின் அறிமுகத்துக்குப் பிறகு நவீன இயற்பியல் parallel universe எனப்படும் இணை உலகங்களை நம்புகிறது. ஏற்கனவே பல முறை நாம் சொல்லியிருப்பது போல பொருட்களின் உள்ளே செல்லச் செல்ல சத்தியம் என்பது குறைந்து  சாத்தியம் என்பது அதிகமாகிறது. this or that! இதுவும் இருக்கலாம்; அதுவும் இருக்கலாம். இப்படி! நமக்கு ஒரு துகள் இப்படி நகர்ந்தது, அல்லது இப்படி வினை புரிந்தது என்று ஒரு history நமக்குக் கிடைத்தால் அது எண்ணிலடங்காத possibilities-சாத்தியக் கூறுகளில் ஒன்று தான். மற்ற சாத்தியக் கூறுகள் இணை உலகங்களில் நடந்து கொண்டு இருக்கலாம்.எலக்ட்ரான் ஒன்று சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஏ.ஸி வோல்வோ பஸ்ஸில் வந்ததாக தோன்றினால் அது ஒரு சாத்தியம் மட்டுமே. வேறொரு உலகில் அதே எலக்ட்ரான் சென்னையில் இருந்து ஹைதராபாத் போய்விட்டு அங்கே பிரியாணி சாப்பிட்டு விட்டு பெங்களூர் வந்திருக்கலாம். அதே மாதிரி, வேறொரு இணை பிரபஞ்சம் ஒன்றில் அந்த ரயில் விபத்து ஏற்கனவே நிகழ்ந்து எல்லாரும் செத்துப் போயிருக்கலாம். அது எப்படியோ ஒரு cross-talk ஏற்பட்டு ஹீரோவுக்கு  பிளாஷ் ஆகி இருக்கலாம். [அலைபாயுதே கண்ணா என் மனம் என்கிறார்கள். மனம் தான் அலைபாயும். உடல் இருந்த இடத்தில் இருக்கும் என்று நினைத்தால் தப்பு. உடலும் அலைபாயும் , திடப்பொருள்கள் எல்லாம் அலைபாயும்.டி -ப்ராக்லி என்னும் விஞ்ஞானி நாமெல்லாம் அலைகள் என்கிறார்.


 ஆன்மீகத்தில் இதை vision (காட்சி) என்கிறார்கள். இது dream அல்ல. கனவு தூக்கத்தில் மட்டுமே நிகழ்வது.  காட்சி நாம் விழித்திருக்கும் போதும் நிகழ்வது! 


இன்னொரு விளைவு Cagras delusion! அதாவது நம் அம்மாவோ, தம்பியோ, மகனோ, நெருங்கிய நண்பரோ அவரைப் போன்றே தோற்றமளிக்கும் வேறு யாரோ ஒருவரால் மாற்றப்படிருக்கிறார்கள் என்று நினைக்கும் மன நோய். மன நோய் என்பதை விட மன விளைவு. இதை வைத்து திரைப்படம் ஏதேனும் வந்திருக்கிறதா அறியேன். யாருக்கேனும் தெரிந்தால் சொல்லலாம். well, நமக்கு ரொம்ப நெருக்கமான சிலர் சில சமயம் நடந்து கொள்வதைப் பார்த்தால் இப்படித்தான் தோன்றுகிறது. 

'சொன்னது நீ தானா?
சொல் சொல் சொல் என்னுயிரே' 



வேற்றுக்கிரக மனிதர்கள் சிலர் நம் உறவினர்களை அப்படியே கடத்திக் கொண்டு போய், அவர்கள் உடலில் நம்மிடையே உலவுகிறார்கள் என்றும் இதற்கு காரணம் சொல்லப்படுகிறது. எதற்கும் தினம் படுக்கப் போகும் முன்னர் மனைவியை 'நீ சாந்தி தானே?' என்று கேட்டு விடவும்.


எனக்கு இந்த வினோத அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. அம்மா பெங்களூருக்கு வந்து ஒரு மாதம் தங்கி இருந்தார்கள். அப்போது, ஊரில், இன்னும் இதே அம்மா இருப்பதாக மிகத் தீவிரமாகத் தோன்றியது. அதாவது இங்கே வந்திருப்பது நிஜ அம்மா அல்ல என்று. 


மனம் என்பது ஒரு புதிரான சமுத்திரம். அதில் நுழைய நுழைய அபத்தங்கள், ஆச்சரியங்கள் , அச்சங்கள், அதிசயங்கள், அருவறுப்புகள், அதிர்ச்சிகள் நிறைந்திருக்கின்றன. சினிமாக்கள் இப்படிப் பட்ட விஷயங்கள் பெரும்பாலானவற்றை சொல்லி விட்டன. ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.சமீபத்தில் கே. டி.வியில் கலாபக் காதலன் என்ற படம் வந்தது.காதலில் நல்ல காதல் , கள்ளக் காதல் என்பது ஏது? என்ற caption உடன். அக்கா புருஷனான ஆர்யாவை மச்சினி மருகி மருகி காதல் செய்கிறார். கடைசியில் அவர் கிடைக்கமாட்டார் என்று தெரிந்ததும் 
தற்கொலை செய்து கொண்டு விடுகிறார்.



well, உயிரியல் ரீதியாக இந்த கற்பு, ஒழுக்கம், ஒருவனுக்கு ஒருத்தி, பிறன் மனை நோக்காமை, பிறனில் விழையாமை எக்ஸ்செட்ரா ஆமைகள் அர்த்தம் அற்றவை. கற்பு என்பது ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி  குடும்பம்,  நாகரிகம் இவையெல்லாம் வந்த பின் வந்த ஒரு பின் விளைவு கற்பு is not so ancient! மனிதன், அன்றில் பறவைகள் கழுகுகள் , போல மோனோகேமஸ் அல்ல. he is a polygamous animal! உயிரியலாளர்களின் ஆராய்ச்சிப்படி பொதுவாக பாலூட்டிகள் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பதில்லை. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவைகள் மட்டுமே 

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் 
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

என்று கட்டுக்கோப்பாக வாழ்கின்றன. 

மனிதனை ஒரு விலங்காக மட்டும் பாவித்தால் , பெண்ணை விட ஆணுக்கு இருக்கும் உடல் வலிமை, ஆணின் விரைகளின் அளவு  (yes, it is extra large) இவைகளை வைத்து உயிரியல் ரீதியாக மனிதன் பல பெண்களை  (பல ஆண்களை) நாடும் இனம் என்று சொல்கிறார்கள். ராமன் உயிரியல் விளைவு அல்ல. மனவியல் விளைவு! குழந்தையை வயிற்றில் சுமப்பது இயற்கைக்கு  கொஞ்சம் சவாலான, கஷ்டமான சாமாச்சாரம். முட்டை போட்டால் அதில் உள்ள complication குறைவு. ஒரு ஆண், ஒரு பெண்  கற்பு கத்திரிக்காய் என்று சொல்வது பற்றி இயற்கைக்கு கவலை இல்லை. குழந்தை ஆரோக்கியமாக பிறக்க, அல்லது வெறுமனே 'பிறக்க' பாலூட்டிகளில் ஒரு ஆண் பல பெண்களை , ஒரு பெண் பல ஆண்களை நாட வேண்டும் என்றே இயற்கை விரும்பி வந்திருக்கிறது.இப்படி சொல்வதால்  என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். நான் உயிரியல் பார்வையில் மட்டுமே சொல்கிறேன். மனிதன் உயிரியல் மட்டுமே அல்ல. அதற்கு மேலும் மனம், இதயம், சிந்தனை, பகுத்தறிவு, மதம் என்றெல்லாம் வரும்போது 'அவனுக்கென்று இருக்கும் முலைகளை வேறொருவன் தொட்டால் செத்து விடுவேன்' என்ற ஆண்டாள் -டைப்புகள் உருவாகிறார்கள்.


மாடர்ன் உலகில் இந்த அக்காள் புருஷனை விரும்புதல் மச்சினியை நோட்டம் விடுதல் ஆண்டியை கரெட் செய்தல் போன்றவைகளுக்கு பயாலாஜிகலாக அர்த்தம் இழந்து விட்டாலும் (மருத்துவம் வளர்ந்து விட்டதால் குழந்தை பிறக்கும் சாத்தியங்கள் அதிகமாகி விட்டன.)மனவியல் ரீதியாக அதில் ஒரு திரில் கிடைக்கிறது. சீக்கிரமே சலிப்படைந்து விடும் பொருள்களில் மனித மனமும் ஒன்று. எனவே நேராக, traditionalஆக சீக்கிரமே கேட்டதும் கிடைத்து விடும் விஷயங்களில் அதற்கு ஆர்வம் இருப்பதில்லை. அக்கா புருஷனை அடைவதில் திர்ல்லர், ஹாரர், சஸ்பென்ஸ், எல்லாமே வந்து விடுகிறது. வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் ஒரு சைக்காலஜிகல் திரில்லர் போல நகர்கிறது. இப்படிப்பட்ட பொருந்தாக் காதல் மூலம் தன்னுடைய identity மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் படுகிறது. ஈகோ பூர்த்தியாகிறது.

சங்க இலக்கியங்களில் காதல், காமம் பெரும்பாலும் straight- ஆகவே இருக்கிறது. பொருந்தாக் காதல்/ காமத்தை தொடவே இல்லை. அதிக பட்சம் ஒரு தலைக் காமமாக கைக்கிளைத் திணை மேலும் கொஞ்சம் பெருந்திணை மட்டுமே வருகிறது. தலைவன் பரத்தையரை நாடிச் சென்றான் என்று 

'நுதலும், தோளும், திதலை அல்குலும்,
வண்ணமும், வனப்பும், வரியும் வாட

வருந்துவள், இவள்'  -

தலைவி வருந்துவது வருகிறது....தலைவன் , தம்பி பெண்டாட்டியை துரத்தி நிலவைக் கொண்டுவா மெத்தை கட்டி வை என்றெல்லாம் வருவதில்லை.

அந்தக் காலத்தில் மச்சினி இல்லையா தெரியவில்லை. மேலும், பொருந்தாக்  காதல் என்பதைக் கூட  தலைவனைப் பற்றிக் கோள் சொல்லுதல், (பிறகு அவன் வந்ததும் அவனைக் காதலித்தல்) பெண், வெட்கம் விட்டு இரவில் தலைவனை நாடிச் செல்லல், மடலேறுதல்  இப்படித் தான் உள்ளன. பெண் பெண்ணை விரும்புதல் , ஆண் ஆணை விரும்புதல் போன்றவற்றின் சுவடே இல்லை. அந்தக் காலத்தில் மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் சலிப்படைந்து விடவில்லை போலும்!


மனதின் இன்னொரு விவகாரம் : Fregoli delusion  எனப்படும் ஒன்று. இது என்ன என்றால் நம்மை சுற்றியுள்ள எல்லாரும் வெவ்வேறு முகமூடி அணிந்த ஒரே நபர் தான் என்று திடமாக நம்புவது! மேனேஜர், மனைவி, நண்பன், காதலி இந்த முகமூடிகளின் பின்னே ஒரே நபர் தான் ஒளிந்திருக்கிறார் என்று நம்புவது. மீண்டும், இதை நாம் மன நோய் என்றோ மனப் பிறழ்வு என்றோ சொல்ல முடியாது.இன்றைய மாடர்ன் உலகில் மனிதர்களின் uniqueness குறைந்துகொண்டே வருகிறது என்பதை 
கவனித்திருக்கிறீர்களா? மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் ஒவ்வொருவரும் எத்தனை தனித்தன்மையோடு இருந்தார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? மனிதர்கள் இப்போது ஒரு ஆட்டுமந்தை போலத்தான் வாழ்கிறார்கள். குழந்தைகளிடம் நிறையவே தனித்தன்மை இருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமாய் இருக்கிறது. ஆனால் வளர வளர , சிறிது சிறிதுதாக அது மந்தையில் தானும் ஒரு ஆடாய் சேர்ந்து கொள்கிறது. நகரத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள் குறிப்பாக இளைஞர்கள் 90% க்கும் மேல் ஒரே மாதிரி இருக்கிறார்கள். ஒருவர் இன்னொருவரின் டிட்டோ போல. facebook , வாட்ஸ் -அப் ,பார்ட்டி , டேட்  என்று பேசிக் கொண்டு , வேலைக்கு சேர்ந்ததும் இ .எம் .ஐ, ஜாவா, 3 bhk , 2 bhk , கார் என்று பேசிக் கொண்டு. தனித்தன்மையை கண்டுபிடிப்பது மிக மிக அரிது! பெரும்பாலான மன பிறழ்வுகள் மாடர்ன் நாகரீகம் தந்த பரிசுதான் என்றால் மிகையில்லை.





சரி, இத்தனை சிக்கலான, விகாரம் நிறைந்த இந்த மனதை என்னதான் செய்வது என்றால் நமக்கு இரண்டு விஷயங்கள் உதவ முடியும்.


1. ஞானிகள் , மனம் ஒரு சாக்கடை எனவே அதனுள் ஆழ்ந்து போகாதே; மனதை கடந்து போ ( beyond   mind ) மனதைப் பற்றி  அவ்வளவாக
 அலட்டிக் கொள்ளாதே, அதைக் கடந்து விடு என்கிறார்கள்.

2. Behaviorism :  சைக்காலஜியின் ஒரு பிரிவுதான் என்ற போதும் இது , வீட்டின் வரவேற்பறையை மட்டும்  கவனத்தோடு அலங்கரித்தால் மட்டும்
  போதும் என்று சொல்கிறது. அதாவது மனதின் இருண்ட மூலைகள்  பற்றி அலட்டிக் கொள்ள  வேண்டாம். sub conscious ,  super conscious   என்றெல்லாம் பிலிம் காட்டவேண்டாம் என்கிறது. மனிதனுடைய நடத்தை பற்றி மட்டுமே கவனம் வைக்கிறது. மிக சுருக்கமாக சொல்வது என்றால் அவன் மனதளவில் சைக்கோவாக இருந்தால் என்ன அவன் சோஷியலாக
  நார்மலாக இருக்கிறானா; அவனால் யாருக்கும் தொந்தரவு இல்லையா. அதுவரை சரிதான், அவன் கனவுகளை கிளற வேண்டாம் நடத்தைகளை மட்டுமே அறிவியல் ரீதியாக ஆராய்வோம் என்கிறது. மேலும், சைக்காலஜியை அறிவியலின் /உடலியலின் ஒரு பிரிவாக மாற்றிவிட வேண்டும் என்கிறது. சில பிஹேவியரிஸ்ட்-கள்  தம்பதிகள் டைவர்ஸ் செய்வதற்கு RS 3-334 என்ற டி.என்.ஏ  காரணமாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். புதியவர்களிடம் நமக்கு இருக்கும் பயத்துக்கும் நெருக்கத்துக்கும் ஆக்சிடாக்சின் என்ற ஹார்மோன் சுரப்பது காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

சுருக்கமாக, ஆன்மீகமும் சரி அறிவியலும் சரி 'மனம்' என்பதை தேவையில்லாத ஒன்றாகவே பார்க்கின்றன.
@#$%$%$

சரி... கொஞ்சம் heavy யாகப் பேசி விட்டோம். இப்போது கொஞ்சம் வார்த்தை விளையாட்டு விளையாடலாம்.

இங்கிலீஷில் Mesostic என்று ஒன்று இருக்கிறது. இது என்ன என்றால் :

CAT  என்பதைப் பற்றி கவிதை எழுது என்றால்,

Cute 
bAby 
CAT  என்று எழுதுவது..

love  என்பதற்கு முயற்சித்து பார்க்கலாம்.

Lucky 
fO
haVing you -
AngEl !

சரி.. தமிழில் முயற்சி செய்து பார்க்கலாம்.

காதல் 

காதல் 
கால் 
காதல் 

என்று எழுதினால் அடி விழும்!

காதல் 
சீம் தரும் 
அனல்! 

காதல் என்ற வார்த்தை வராமல் இருந்தால் இன்னும் perfect ஆக இருக்கும்.

அம்மா-

ன்பில் 
ம்மா போல் 
வருமா?

முருகன்-

முகுந்தனின் 
ருகன் -
அழன் 
குமரன் 


கொஞ்சம் பெரிதாக 

பட்டினத்தார் 

ணம் பொருள் துறந்து 
காட்டிலே கிடந்து 
மகடினை மறந்து 
இருமம் விடுத்து 
இறையை ஏத்திய 
ஞானக்கனிதான் 
பட்டினத்தார் 



கீழ்க்கண்ட வார்த்தைகளுக்கு மெசோஸ்டிக் கவிதைகளை எழுதவும் :-

அம்மா, காதல்,  திருமால் , வானவில், கவிதை, ஓவியம், சங்கீதம், ஊர்வசி 

கொஞ்சம் கடினமானவை:

பாரதமாதா, பெரியாழ்வார், வந்தேமாதரம், திருக்குறள் 


*

சன் .டி .வியில் சென்னையில் உள்ள உப்பிலியப்பர் திருக்கோயிலைக் காட்டினார்கள்.

அதில் பக்தர்கள் சிலர் பேசினார்கள்.


பக்தர் 1:  இந்தக் கோயிலுக்கு வந்தப்புறம் தான் என் பையனுக்கு நல்ல வேலை கிடைச்சுது. இப்ப வெளிநாட்டுல செட்டில் ஆயிட்டான். இனிமேல் வாராவாரம் இங்க வருவேன்.

பக்தர் 2:  என் ஆத்துக்காரர் ரொம்ப நாளா முதுகுவலில அவதிப் பட்டுண்டிருந்தார். இங்க வந்து பெருமாள தரிசிச்சதும் சரியாப் போயிட்டது.

பக்தர் 3: இந்தக் கோயிலுக்கு வந்தப்புறம் தான் என் பெண்ணுக்கு நல்ல வரன் அமைஞ்சது.

பக்தர் 4: இந்தக் கோயிலுக்கு வந்தப்புறம் தான் எனக்கு பிசினஸ் பிக்கப் ஆச்சு. பெருமாளுக்கு எப்படி நன்றி சொல்லறது-ன்னே தெரியலை.


ஒரு பக்தராவது ' எதையும் எதிர்பார்த்து இங்கே வரலை. பெருமாள் ஒருத்தனுக்காக தான் வரேன்.அவன் பக்தியே போதும் எனக்கு; அதை விட வேறென்ன பாக்கியம் கிடச்சுற முடியும்?" என்று சொல்லவில்லை.

உள்ளமோ ஒன்றில் நில்லாது
 ஓசையி னெரிநின் றுண்ணும்
கொள்ளிமே லெறும்பு போலக்
 குழையுமா லென்ற னுள்ளம்,
தெள்ளியீர். தேவர்க் கெல்லாம்
 தேவரா யுலகம் கொண்ட
ஒள்ளியீர், உம்மை யல்லால்
 எழுமையும் துணையி லோமே

இப்படிச் சொல்வது திருமங்கையாழ்வார்.



My  tastes are simple ...I'm easily  satisfied with the best என்று வின்ஸ்டன்ட் சர்ச்சில் சொல்வது போல , பகவானே இருக்கும் போது கல்யாணம், பாரின் ஜாப் இவற்றை ஏன் அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார் தி.ம. ஆழ்வார் . அதனால்தான் அவர்கள் ஆழ்வார்கள்!

ஓஷோ ஜோக் 

ஒருநாள் முல்லா நசுருதீனின் மகள் அழுது கொண்டே வீட்டுக் கதவைத் தட்டினாள் .

கதவைத் திறந்து பார்த்த முல்லா, " என்ன சமாச்சாரம் ?" என்றார்.

"என் வீட்டுக்காரர் என்னை போட்டு அடித்து விட்டார்" என்றாள் அழுதுகொண்டே.

முல்லா மகளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.

உடனே , மருமகனுக்கு போன் செய்து, கோபமாக, "பார், நான் உன்னைப் பழிக்குப் பழி வாங்கி விட்டேன்; நீ என் மகளை அடித்தாய், பதிலுக்கு நானும் உன் மனைவியை அடித்து விட்டேன்' என்றார்.



சமுத்ரா 

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மெசோஸ்டிக் கவிதைகள் சூப்பர்...

பக்தி அப்படி என்றால்...?!

முடிவிலும் நல்ல ஜோக்...!

ராஜி said...

உடனே , மருமகனுக்கு போன் செய்து, கோபமாக, "பார், நான் உன்னைப் பழிக்குப் பழி வாங்கி விட்டேன்; நீ என் மகளை அடித்தாய், பதிலுக்கு நானும் உன் மனைவியை அடித்து விட்டேன்' என்றார்.
>>
நிஜமாவே இப்படித்தான் பல பெற்றோர் இருக்குறாங்க மருமகனை(ளை) பழிவாங்குறதா நினைச்சு தன் மகள்(ன்) வாழ்வை வீணாக்குறாங்க.

Unknown said...

Arumai ! nalla padaipu.

”தளிர் சுரேஷ்” said...

திஜாவு,மொஸோஸ்டிக் கவிதைகள், முல்லா ஜோக் அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

Vijayan Durai said...

சூப்பர் ங்க Fant ! , இப்பொழுது தான் உங்கள் எழுத்தை முதன் முறை வாசிக்கிறேன், சகலமும் கலந்த சமாச்சாரத்தை சாராம்சம் குறையாமல் சுவாரசியமாக சொல்லும் கலை உங்களுக்கு கை வந்திருக்கிறது.

கலைடாஸ்கோப் பல வடிவங்களை காட்டும் போல, அத்தனை பகுதிகளையும் படிக்க வேண்டும் ,ஆர்வம் வருகிறது !

//ஆண் ஆணை விரும்புதல் போன்றவற்றின் சுவடே இல்லை. அந்தக் காலத்தில் மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் சலிப்படைந்து விடவில்லை போலும்!
//

இந்த கருத்திற்கு நான் முரண்படுகிறேன், ஆண்-ஆண் காதல் பெண்-பெண் காதல் என்பதெல்லாம் இயற்கையானது அல்ல, எதிர்களில் உள்ள ஈர்ப்பு நேர்களின் பால் இருப்பதில்லை,மற்றபடி சலிப்பு வந்தால் ஆள் மாறலாம் ,பால் மாறலாமோ??? :)

Vijayan Durai said...

Fantastic என்பது ! Fant ! என பிழையாய் பதியப்பட்டுவிட்டது !

இராஜராஜேஸ்வரி said...

மனம் என்பது ஒரு புதிரான சமுத்திரம். அதில் நுழைய நுழைய அபத்தங்கள், ஆச்சரியங்கள் , அச்சங்கள், அதிசயங்கள், அருவறுப்புகள், அதிர்ச்சிகள் நிறைந்திருக்கின்றன.

கலைடாஸ்கோப் வண்ணங்கள் ரசிக்கவைத்தன..!

arul said...

mesostic in english really nice new thing

G.M Balasubramaniam said...


இவற்றை எல்லாம் எப்போதோ படித்துக் கருத்துரை எழுதியதாகத் தோன்றுகிறது. கொஞ்சம் பதிவின் ஹெவிநெஸ் குறைத்து , நீளத்தையும் குறைத்தால் இந்தமாதிரி எல்லாம் தோன்றாது என்று எண்ணுகிறேன்.

ஜீவன் சுப்பு said...

சுஜாதா போல சமகால விசயங்கள் மூலமாக சயின்ஸ் பிக்சன்ஸ், உளவியல் , இயற்பியல் , சங்கீதம் , இலக்கியம்னு எல்லாவற்றை பற்றியும் ரெம்ப சூப்பரா எழுதறீங்க பிரதர் ....!

ஒட்டு மொத்த கலைடாஸ் கோப்பையும் தொகுத்து புத்தகமாக போடலாம் போல ..!