தூங்கி விட்டேன் போலிருக்கிறது. அதுவும் டெஸ்க் -கிலேயே. மத்தியானம் சாப்பிட்ட ஆந்திரா மீல்ஸின் மயக்கம். கண்களைக் கசக்கிக் கொண்டு அருகில் இருந்த ஸ்மிதா-வைப் பார்த்து 'சாரி' என்றேன். "இட்ஸ் ஓகே டியூட்..கேரி ஆன் "என்று புன்னகைத்தாள் .இது என்ன வேறு ஏதோ ஒரு உலகத்தில் வாழ்ந்தது போல! கொஞ்சம் மங்கலாக ஏதேதோ நினைவில் இருக்கிறது. இதெல்லாம் உண்மையா? ஆம். பிரபாவுக்கு என்ன ஆயிற்று? ஈஸ் ஹி ஓகே !உடனே பிரபாவுக்கு போன் செய்து "உனக்கு ஒண்ணும் இல்லையே!?" என்றேன். அவன் குழம்பிப் போய் "என்னடா, இப்பவே சரக்கு போட்டுட்டியா? திடீர்-ன்னு கால் பண்ணி "உனக்கு ஒண்ணும் இல்லையே? ன்னு கேட்கிறே?என்றான்.
"ஒண்ணும் இல்லை!" என்றேன். "சரி, ஈவ்னிங் பார்க்கலாம், சீக்கிரம் வந்திரு!"
அன்று வெள்ளிக்கிழமை. சீக்கிரமே வீட்டுக்குப் போகலாம் என்று பார்த்தோம். முடியவில்லை. சொட்டைத்தலை மானேஜர் வேண்டுமென்றே 6:45 மணிக்கு ஸ்டேடஸ் மீட்டிங் வைத்திருந்தார். தேவையே இல்லாத மீட்டிங். அந்த வாரம் முழுவதும் எத்தனை ஆணிகளைப் பிடுங்கினோம்.வரும் வாரம் எத்தனை ஆணிகளைப் பிடுங்கப் போகிறோம் என்றெல்லாம் சொல்லும் மீட்டிங்.
மீட்டிங் முடித்து விட்டு நானும் ரகுவும் கிளம்பினோம். வெள்ளிக்கிழமை இரவு என்றால் சரக்கு கண்டிப்பாக இருக்கும். மொட்டை மாடிக்கு சென்று விடிய விடிய கதை பேசியபடியே சரக்கு அடிப்போம். போகிற வழியில் நானும் ரகுவும் சரக்கு வாங்கிக் கொண்டோம். பீர், வோட்கா, வைன் , விஸ்கி என்று எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாய்ஸ். Well எங்கள் பிளாட்டில் 6 பேர் தங்கி இருக்கிறோம். 3 பி.ஹெச் .கே. 25000 ரூபாய் வாடகை அழுகிறோம் .சோளிங்கநல்லூரில் ஆபீசுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில்.சகல வசதிகளுடன் பிளாட். எங்களுக்கு ஏரியா பிடித்திருந்தது. பக்கத்தில் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் வேறு. ஹிஹி.. நான், ரகு, பிரபாகர், சந்துரு, ஸ்டீபன், மற்றும் வருண். . நாங்கள் ஐவரும் பள்ளியில் இருந்தே நண்பர்கள். வருண் மட்டும் பின்னால் வந்தவன். எல்லாரும் ஐ.டி .யில் இருந்தாலும் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட ஆர்வம்..எனக்கு வரலாறில் ஆர்வம்.மேலும் சிறுகதைகள் எழுதுவேன். ரகு, ஃபிசிக்ஸ் ஜீனியஸ். பிரபாகர் தமிழ் ஆர்வம் கொண்டவன். சந்துரு சைக்காலஜியில் ஆர்வம் கொண்டவன். ஸ்டீபன் எப்போதும் ஃபினான்ஸ்., எகனாமிக்ஸ் என்று பேசிக் கொண்டிருப்பான். கொஞ்சம் பணப் பைத்தியம். Well , எங்களுக்கு வருண் ஒரு விளங்காத புதிராக இருந்தான். ஸ்டீபனின் நண்பனின் நண்பன் என்று எங்களுக்கு வந்து அறிமுகம் ஆனான். எங்களுக்கு ரூம் மேட் தேவையாய் இருந்ததால் அவனை சேர்த்துக் கொண்டோம். ஒருநாள் எல்லோரும் குடிபோதையில் இருக்கும் போது நான் ஓர் உண்மையை சொல்லப் போகிறேன்; நான் "கே" என்றான். எங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. இப்போது பழகி விட்டது.எங்களிடம் எல்லை மீறாத வரை சரி! தனக்கு பாய் பிரண்ட் ஒருவனை முழு மூச்சில் தேடி வருவதாக சொன்னான். கலிகாலம்!!!
ஒன்பது மணி சுமாருக்கு நண்பர்கள் ஐந்து பேரும் கூடினோம். வருண் வரவில்லை. பொதுவாக அவன் அளவாக ஒயின் மட்டுமே அருந்துவான். அதுவும் ஒவ்வொரு சமயம் மட்டுமே. புட் பாண்டாவில் டின்னர் ஆர்டர் செய்தோம். 20 நிமிடத்தில் வந்தது. சரக்கை மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்று அடிக்கத் தொடங்கினோம். ஊர்க்கதை , உலகக்கதை எல்லாம் பேசியபடியே. லேடீஸ் ஹாஸ்டல் பிகர்கள் சில அவர்கள் மொட்டை மாடியில் உலாவிக் கொண்டிருந்தன. எங்களுக்கு அது ஒரு டானிக் மாதிரி! ஹிஹி! மணி 11:30. ஒரு பெக் உள்ளே போனதும் சிகரெட் தீர்ந்து விட்டதை உணர்ந்தோம். தெருக்கோடியில் இருக்கும் பெட்டிக்கடை ஒன்று சில சமயங்களில் திறந்திருக்கும். அங்கே போய் வாங்கி வரலாம் என்று நானும் பிரபாகரும் சென்றோம்.பேட் லக். கடை மூடி விட்டிருந்தது. சரி எதிர் பிளாட் பேச்சுலர்களிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று திரும்பி வந்தோம்.
பெட்டிக்கடை சந்தில் அவர் நின்றிருந்தார்.
ஏதோ நாடகத்தில் நடித்து விட்டு அப்படியே வந்திருக்க வேண்டும். பளபளக்கும் சங்க கால உடைகளை அணிந்திருந்தார். உடலெங்கும் நகைகள். முழுக்க வியர்த்திருந்தார். பேந்தப் பேந்த முழித்தார்.வயது ஒரு நாற்பது இருக்கலாம்.
"சார், ஏதாவது வேணுமா?" என்றான் பிரபா.
அவர் பயந்தார். பதில் சொல்லாமல் விழித்தார். பார்வையில் ஒரு இன்னசன்ஸ் தெரிந்தது.
நாங்கள் அவர் அருகில் இன்னும் நெருங்கி "சார், எனி ப்ராப்ளம்?" என்றோம்.
அவர் இன்னும் பயந்தார்.
"என்னடா இது பேயைப் பார்த்த மாதிரி பயப்படறார்!" என்றான் பிரபா.
"தலைக்கு எண்ணெய் வை, எண்ணெய் வைன்னு எத்தனை தபா சொன்னேன்!" நான் ஒரு மொக்கை ஜோக்கை அடிக்கத் தவறவில்லை.
சாலை ஜன நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது. தெரு விளக்குகள் கடமை உணர்ச்சியுடன் போட்டான்களை உமிழ்ந்து கொண்டிருந்தன. நல்லவேளை தெருநாய்கள் கண்ணில் அவர் விழவில்லை. குதறி இருக்கும்!
"சார், டோன்ட் பி ஸ்கேர்ட் , வி ஆர் ஹியர் டு ஹெல்ப் யூ" என்றேன் நான் வாஞ்சையாக.
அவர் இப்போது தயங்கித் தயங்கிப் பேசத் தொடங்கினார். நடுங்கும் குரலில்.
"தாங்கள் யார், எனது பொறியைக் கண்டீரோ? அய்யன்மீர்!"
"சரிதான்" - இது கீழ்ப்பாக்கம் கேஸ். நம்ம சந்துருவைக் கூப்பிடுவோம்" என்றான் பிரபா.
"சும்மா இருடா " என்றேன். ஏனோ அவரது பெர்சனாலிடி பைத்தியம் என்று சொல்லவில்லை. கண்களில் ஒரு தெளிவு இருந்தது.
அவர் பொறி பொறி என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
"பேல் பூரி கேட்கறார் போல டா!" என்றான் பிரபா. " பையா, பேல் பூரி அப் நஹி, கல் மில்தா !"
அவர் கிட்டத்தட்ட அழுது கொண்டிருந்தார்.
"சார் உங்க பேரு?"
அவருக்குப் புரியவில்லை.
"அய்ய , நும் நாமம் யாதோ?" என்றான் பிரபா.
அவர் உற்சாகமாகி "கலியன்" என்றார் .
இப்போது படபடவென்று பேசினார்.
"எப்பிறப்பின் நல்வினையோ யான் உம்மைக் கண்ணுற்றேன். இதுகாறும் இம்மக்களின் மொழியை அறிவிலேற்ற அளவுறா இடருற்றேன்! இந்நாடு யாது? இம்மக்கள் யாவர்? இக்காலம் எது? "
கண்டிப்பாக அவர் தமிழ் ஆசிரியராக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.எனக்கு அவர் சொன்னதில் முக்கால்வாசி புரியவில்லை. பிரபா தமிழ் படித்தவன் என்பதால் தலையாட்டினான். ஏதோ தமிழில் சொன்னான்.
இதற்குள் எங்களைத் தேடிக்கொண்டு மற்ற நண்பர்கள் வந்து விட்டிருந்தார்கள்.
"என்னடா பண்றீங்க இங்க, மச்சான்?!"
ஸ்டீபன் அவரைப் பார்த்து விட்டான்.
"வாவ், ஈஸ் திஸ் ஆல் கோல்ட்?"
நாங்கள் அவர் அணிந்திருந்த குண்டு குண்டு நகைகளை முதன் முறையாகக் கவனித்தோம். மஞ்சள் மஞ்சளாக மின்னிக் கொண்டிருந்தது. கண்டிப்பாக கவரிங் தான். இந்தக் காலத்தில் நட்ட நடு ராத்திரியில் நானெல்லாம் ஒரு குட்டி தங்க மோதிரம் கூட அணிந்து வெளியே போக மாட்டேன். ஒருவேளை மரை கழன்ற கேஸ் என்று நினைக்கத் தோன்றியது.
"லுக்ஸ் கோல்ட்!, ஹூ ஈஸ் திஸ் ஃபன்னி ஃபெலோ?"
பிரபா அதுவரை நடந்ததை விவரித்தான்.
"ஹி டாக்ஸ் ஒன்லி டமில் ? ஆஸ்க் ஹிம் ஈஃப் தட் ஈஸ் கோல்ட்!"
பிரபா அவரிடம் திரும்பி , "அய்யா, இவை எல்லாம் தங்கமா?" என்றான்.
விழித்தார்.
அதை சுட்டிக் காட்டி "பொன்னோ?" என்றான்.
"அதிலென்ன ஐயம் ? " என்றார். "நும் ஆடைகள் ஏன் இவ்வாறு உள்ளன? நும் அணிகலன்கள் எங்கே? பட்டாடைகள் எங்கே!? பொன்னைக் கண்டதும் ஏன் இவ்வாறு விழிகள் வியப்பெய்துவீர் ? எம் நாட்டில் வண்ணானும் அணிவானே இவற்றை!"
நாங்கள் ஒருமனதாக அவரை எங்கள் பிளாட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தோம்.
முதலில் மறுத்தார். பின்னர் பிரபாவின் தமிழின் மேல் நம்பிக்கை கொண்டவராக எங்களைப் பின் தொடர்ந்தார்.
தெரு விளக்குகளை, பிளாட்டுகளை , ஏதோ வினோத ஜந்துகள் போலப் பார்த்தார்.
"இது எந்த சதகம் ?" என்றார். எங்களில் யாருக்கும் கேள்வியே புரியவில்லை. பிரபா உட்பட.
வீட்டுக்கு வந்தார். ஒவ்வொரு அடியையும் பிரயத்தனப்பட்டு எடுத்து வைத்தார். லிப்டில் ஏற மறுத்தார்.
"என்ன உண்கிறீர்கள்?" என்றான் பிரபா .புரியட்டுமே என்று சைகையும் காட்டினான். ஸ்டீபன் , "கிவ் ஹிம் சம் பீட்சா" என்றான். சந்துருவும் ரகுவும் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"கேழ்வரகுக் களி , நெற்சோறு "
"சரி தான், இதெல்லாம் புட் பாண்டவில் கிடைக்காதே!"
"லீவ் ஹிம் அலோன் பார் சம் டைம், காலைல தெளிஞ்சுரும், மஸ்ட் பி ஸ்டோன்ட் , ஹை ஆன் வீட் " என்றான் ஸ்டீபன்.
எனக்கு அப்படித் தோன்றவில்லை. அவரிடம் ஏதோ genuineness தெரிந்தது.
அவருக்கு உபசாரம் நடந்தது. அவரது அணிகலன்கள் கழற்றி வைக்கப்பட்டன. தண்ணீர் கொடுத்தோம். தயங்கியபடியே குடித்தார். வாந்தி எடுத்தார். வைகை நீரா இப்படியானது என்றார். ஆப்பிள் கொடுத்தோம். இது என்ன பழம் என்று கேட்டார். கடைசியில் ஆச்சரியமாக பீட்சாவை கொஞ்சம் ருசித்து சாப்பிட்டார். எல்லாவற்றையும் ஒரு குழந்தை போல விநோதமாகப் பார்த்தார். ஃபேனை, மைக்ரோவேவ் அவனை, டேபிளை, கடிகாரத்தை, லேப்டாப்பை, டி .வியை!
"இது போல உண்டிலேன்!" என்றார்.
பீரைக் காட்டி "அஃதென்ன வண்ண நீர்?" என்றார்.
"சரிதான், போதை மருந்து போதாதுன்னு இப்ப இது வேறயா?" என்றான் ரகு.
"ஐயா , அது ஒரு வித சோமபானம், கள் !" என்றார்.
"அருந்திலேன் , நேற்று தான் வள்ளுவப் பெருந்தகையை சந்தித்தேன். கள்ளுண்ணாமை எழுதிக் கொண்டிருந்தார்!"
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
"இது பாண்டிய நாடோ?" என்றார்.
"பல்லவ நாடு" என்றான் பிரபா.
சந்துரு அலுத்துக் கொண்டான். "மச்சான், ஜாலியா சரக்கு அடிக்கலாம்னா ஏதோ ஒரு பைத்தியத்தைக் கூட்டி வந்து கதை பேசிட்டு இருக்கீங்களே, அயிட்டம் எதாச்சும் ரெடி பண்ணுவியா ...." உளறினான்.
"என்ன கூறுகிறார்?"
"கணிகையர் வேண்டுமாம் அவருக்கு" என்றான் பிரபா.
"அய்யகோ, அய்யா பிறன்மனை நோக்காமை வேண்டும். தங்கள் மனையாள் எங்கோ?"
"அய்யா, அவருக்கு மணம் ஆகவில்லை!"
"அகவை?"
"முப்பது!"
"என்ன கூறுகிறீர், எனக்கு அகவை நாற்பது , என் மருமகள் கர்ப்பவதியாகி இருக்கிறாள்!"
"..."
ரகுவும் சந்துருவும் மேலே போய் விட்டார்கள். நானும் ஸ்டீபனும் பிரபாவும் அவரை என்ன செய்வது என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.
"போலீஸ் ல சொல்லிடுவோம்!" என்றான் பிரபா.
"ஃபூல். அத்தனையும் தங்கம்,,, கோடிக்கணக்கில் போகும்,,,ஈஃப் ரியல்..லெட்ஸ் ராப் ஹிம் ஆஃப் ஹிஸ் கோல்ட் ஃபர்ஸ்ட் ....ஹி வுட்ன்ட் ரியாக்ட் " என்றான் ஸ்டீபன்.
அந்த வினோத மனிதர் எதுவும் புரியாமல் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்....
தொடரும்...
4 comments:
still waiting for part2
Read it now..
IT's Good To Have You Back .....!!
anonymous I am active on FB
Post a Comment