இந்த வலையில் தேடவும்

Monday, November 17, 2014

Interstellar -II

திரும்பிப் பார்க்கையில் காலம் ஒரு இடமாக காட்சியளிக்கிறது -நகுலன்



Interstellar இல் சில காட்சிகள் புரியவில்லை என்று சில பேர் சொல்கிறார்கள்.
புரியாது. புரிந்தால் நீங்கள் மனிதப்பிறவி அல்ல என்று அர்த்தம் :) ஏனென்றால் மனித மூளை மூன்று பரிமாணங்களை (3D) மட்டும் உணர்ந்து கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது அல்லது evolve ஆகியுள்ளது. நீளம், அகலம், உயரம் இவை தாண்டிய ஒரு ஐந்தாவது பரிமாணத்தை (காலம் நான்காவது)  கற்பனை செய்வது மனித மூளைக்கு இயலாத காரியம். மிகப்பெரிய விஞ்ஞானிகளே higher dimensional space ஐ எப்படி கற்பனை செய்வது என்று முடியாமல் திணறுகிறார்கள். குருடன் ஒருவனுக்கு நிறம் என்பதை எவ்வாறு விளக்க முடியும்? அப்படி!

Higher dimension இல் உலகம் எப்படி இருக்கும் என்று அறிய ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது, 2 D உலகம் ஒன்றை கற்பனை செய்து கொண்டு நம் 3D உலகம் அதைக் காட்டிலும் எப்படி இருக்கிறது என்று ஒப்பீடு செய்வது. நம்மை விடப் பணக்காரன் எப்படி உணர்வான் என்று நம்மை விட ஏழையுடன் நம்மை ஒப்பிட்டுத் தெரிந்து கொள்வது! உதாரணமாக நம் பிரபஞ்சம் 2 D யாக இருந்தால் எப்படி இருக்கும்? முடிவே இல்லாத ஒரு டிராயிங் பேப்பர் போல இருக்கும். வெறும் நீளம் அகலம் மட்டுமே இருக்கும். மனிதர்கள், மரங்கள், விலங்குகள், கோள்கள் இவை எல்லாம் வெறும் கோடுகள், வட்டங்கள், சதுரங்கள், செவ்வகங்களாக இருக்கும். முடிவில்லாத ட்ராயிங் ஷீட் ஒன்றில் வட்டங்கள், கோடுகள் சதுரங்கள் நகர்ந்து கொண்டிருப்பதை கற்பனை செய்து கொள்க. அதுதான் இரண்டு பரிமாண பிரபஞ்சம்.நம் பிரபஞ்சம் இப்படி இருந்திருக்கலாம். உயரம், ஆழம் இவை இல்லாமல்,,,!  ஆனால் எப்படியோ 3டி யாக உள்ளது. இருபரிமாண உயிரிகள் மற்ற பொருட்களை முழுவதுமாகப் பார்க்க இயலாது. அவை தாம் பார்க்கும் எல்லாவற்றையும் கோடுகளாகவும், புள்ளிகளாகவும் மட்டுமே பார்க்கும். ஒரு பொருளை முழுவதுமாக சுற்றி வந்தால் மட்டுமே அது வட்டமா, சதுரமா, கோடா என்று தெரியும். நமக்கு முப்பரிமாணத்தில் ஒரு கோளத்தை  ( கோளம் என்பது 3D வட்டம்) முழுவதுமாகப் பார்க்க முடிவதில்லை என்பதை நினைவுகூர்க.3D உலகில் இருந்து கொண்டு டிராயிங் ஷீட்டைப் பார்த்தால் வட்டமோ சதுரமோ எல்லாம் முழுமையாகத் தெரியும். அதே போல ஐந்து பரிமாண உயிரி ஒன்று மேலிருந்து (?) நம் 3D உலகத்தைப் பார்த்தால் அது ஒரு கோளத்தை முழுமையாகப் பார்க்க முடியும். முன்பக்கம், பின்பக்கம், மேலே கீழே வலது இடது எல்லாம் ஒரே சமயத்தில் தெரியும். அதுமட்டும் அல்ல, உள்ளே இருப்பதும் தெரியும். கீழே உள்ள 2 டி உலகத்தைப் பார்க்கவும்.




இங்கே மனிதர்கள் ஒருவரை ஒருவர் கடந்து செல்ல ஒருவர் மீது ஒருவர் ஜம்ப் செய்து செல்ல வேண்டும். மேலும் 2 d உலகத்தில் ஒருவரது வடிவத்தை வைத்து அவரை மதிப்பிடுதல் அதிகமாக இருக்கும். கோடு ,முக்கோணம் இவை தீண்டத் தகாததாக அடிமட்டத்தில் இருக்கும். ஏனென்றால் அவற்றின் பக்கங்களின் கூர்மை. பக்கத்தில் வந்தால் அடுத்தவர் உடலைக் குத்தி விடும்.

கூர்மை இல்லாத வட்டங்களே அந்த உலகின் ராஜாக்களாக இருக்கும்.
நாம் இந்த படத்தை முழுமையாகப் பார்க்கிறோம். ஆனால் படத்தில் இருக்கும் உயிரிகளால் அப்படிப் பார்க்க இயலாது. படத்தில் வலது கீழ்மூலையில் இருக்கும் வட்டத்தை நாம் முழுமையாகப் பார்க்கிறோம். அது மட்டும் அல்ல அதன் உள்ளே உள்ள உறுப்புகளையும் பார்க்கிறோம். அதே போல ஒரு உயர் பரிமாண உயிரி நம்மைப் பார்க்கும்போது முழுமையாகப் பார்க்கும். நம் தலை, கால், கீழ்ப்பாதம், முதுகு, இவை அனைத்தையும் கூடவே நம் உள் உறுப்புகளையும் ஒருசேரப் பார்க்கும். நம் உடையெல்லாம் அதற்கு அர்த்தமற்றது:))

இன்டெர்ஸ்டெல்லார் படத்தில் ஐந்தாம் பரிமாணத்தில் இருந்து மூன்று பரிமாண உலகைப் பார்க்க எப்படித் தெரியும் என்று காட்ட நோலன் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.உண்மையில் அதை நாம் காட்டவே முடியாது. கூப்பரின் மகள் , அவள் அறை இவையெல்லாம் பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் தெரிகின்றன. தலைகீழாகத் தெரிகின்றன. அப்படி இல்லை; ஒரு காட்சி பல இடங்களில் தெரியாது. ஒரே காட்சி முழுமையாகத் தெரியும்.In its wholeness! ஒரு மனிதரை அப்படிப் பார்க்க முடிந்தால்??? மயக்கம் வந்து விடும்!இப்போது நாம் ஒருவரைப் பார்க்கும் போது அவரில் 10% மட்டுமே பார்க்கிறோம்.

படத்தில் சதுரம் ஒன்றில் ஒரு வட்டம் சிறைப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். (ராஜாவை யாரோ சிறை வைத்து விட்டார்கள்) வட்டம் வெளியேவர ஒரேவழி சிறைக் கதவை உடைப்பது தான்.ஆனால் நம்மால் , மூன்றாம் பரிமாணத்தில் இருந்து அப்படியே அந்த வட்டத்த்தை அலேக்காகத் தூக்கி வேறிடத்தில் வைக்க இயலும்.2டி உலகில் அந்த வட்டம் ஏதோ மாய மந்திரம் செய்து வெளியேறி விட்டது போல் தோன்றும். தம் உலகில் இருந்து திடீரென்று மறைந்து விட்டது போல! மேலும், வட்டத்தின் உள் உறுப்புகளை நாம் அதன் உடலில் துளை போடாமலேயே சரி பார்க்க முடியும்.அதே போல ஒரு 5D உயிரி நம் உடலில் துளை போடாமலேயே ஐந்தாம் பரிமாணத்தில் இருந்து நமக்கு ஆபரேஷன் செய்ய இயலும். (வாய், மூக்கு போன்ற இயற்கைத் துளைகளையும் உபயோகிக்காமல்.) எனவே நமக்கு அதிசயமாக, அமானுஷ்யமாக தோன்றுவது எல்லாம் ஐந்தாம் பரிமாணத்தில் மிகச் சாதாரணமான விஷயங்களாக இருக்கும். உதாரணம் பாட்டிலுள் போடப்பட்ட நாணயத்தை பாட்டிலை உடைக்காமல் எடுப்பது, வலம்புரிச் சங்கை இடம்புரிச் சங்காக மாற்றுவது இப்படி,  கடவுள், பேய், இறந்த உடலில் இருந்து வெளியும் ஆத்மா இவை ஐந்தாம் பரிமாணத்தில் இருந்தாலும் இருக்கலாம்.அதனால்தான் கூப்பரை அவர் மகள் பேய் என்று நினைக்கிறாள். நாம் 2டி உலகில் நுழைந்தால் நம்மை முழுவதுமாக அதில் வெளிக்காட்ட முடியாது. நம் அசைவுகள் நிழல் சுவர்கள் போல அந்த 2டி உயிர்களுக்குத் தெரியும். உயிருள்ள நிழல்கள்... அந்த நிழலைத் தாண்டி நாம் செல்ல இயலாது. அதே போல 5D உயிரினம் நம் உலகுக்கு வந்தால் அதன் அசைவுகளை நம்மால்  சொற்பமாக உணர முடியும். அதைக் கண்டிப்பாக பேய் என்றே நினைப்போம்.


இன்னொரு முக்கியமான விஷயம். நாம்,  5D வெளிக்கு செல்ல நேர்ந்தால் collapse ஆகி செத்துப் போவோம். இதை நோலன் வேண்டுமென்றே மறைத்து விட்டார். நம் உடல்கள்  5D பிரபஞ்சத்துக்கு ஏற்ப தகவமைப்பு பெறவில்லை. உதாரணமாக, படத்தில் உள்ள வட்டம்  3D உலகுக்கு வந்து விடுவதாகக் கொள்வோம். அதன் உள்  உறுப்புகள் அப்படியே பொலபொலவென உதிர்ந்து விடும். குறைந்தபட்சம் அவை பிடிப்பு இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும்.

கூப்பர், முதன் முதலில் விண்வெளிக்கு செல்கிறேன் ; போய் வருகிறேன் என்று மகளிடம் சொல்கிறான்; அப்போது அவள் இல்லை; போகாதே ; என் பேய் உன்னை  STAY என்று மோர்ஸ் கோடில் செய்தி அனுப்பி உள்ளது என்கிறான். பேய் என்பது சுத்தப் பேத்தல் எதையும் அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும் என்று கூறும் கூப்பர் அதை அலட்சியம் செய்து விட்டு வெளியேறுகிறான். ஆனால் மகளுக்கு STAY என்று செய்தி அனுப்புவது அவனே தான்.  A message from the future! விண்வெளிப் பயணம் மேற்கொண்டு மகளைப் பிரிந்து ரொம்பவே வருத்தப்படும் கூப்பர், பின்னால் நான் அங்கே போகாமலேயே இருந்திருக்கலாம் என்று வருந்தி மகளுக்கு செய்தி அனுப்புகிறான். மகள் தன் பயணத்தை நிறுத்தக் கூடும் என்ற நம்பிக்கையில். கூப்பர் ஐந்து பரிமாண உலகில் நின்று கொண்டிருக்கிறான் என்பதை அறிக. எனவே அவர்களுக்கு காலம் ஒரு பரிமாணம். மலையில் ஏறுவது போல, பள்ளத்தில் இறங்குவது போல, அவர்களால் கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் அனாயாசமாக சென்று வர இயலும். கூப்பருக்கு கடந்த காலம், எதிர் காலம் இவைகள் ஒரு வெளி (space ) போலத் தெரியும். எனவே அவனால் தனது கடந்த காலத்துக்கு சுலபமாக செய்தி அனுப்ப முடியும். ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். கூப்பர் stay என்று செய்தி வந்ததை அறிந்து பயணம் போகாமலேயே இருந்திருந்தால் அவன் stay என்ற செய்தியையே after all அனுப்பி இருக்க முடியாது. இந்த இடத்தில் ஒரு loop வருகிறது.  இதை causality violation என்கிறார்கள். நான் இப்போது கடந்த காலப் பயணம் மேற்கொண்டு ஐன்ஸ்டீனுக்கு அவர் ரிலேடிவிட்டி  கண்டுபிடிக்கும் முன்னரே அதைப் பற்றி சொல்லித்தருவது. என்னதான் ஐந்தாம் பரிமாணத்தில் இருந்தாலும் கடந்த காலத்தைப் பார்க்க முடியுமே தவிர மாற்ற முடியாது. மேலும் அந்த நிகழ்வுக்கு வலு சேர்க்க வேண்டுமானால் முடியும். உதாரணாமாக நாம் கடந்த காலத்து சென்று இரண்டாம் உலகப் போரை நிறுத்த முடியாது. போரில் பங்கு கொள்ள வேண்டுமானால் முடியும்.


டேனியல் 2 :22

அவன் (நமக்கு) இருட்டான மறைக்கப்பட்ட இடங்களை அறிவான்.
அவனுக்குள் ஒளி உண்டு. அவன் பார்வையில் இருந்து மறைந்தது எதுவும்
கிடையாது.


Hebrews 4:13 Nothing in all creation is hidden from God's sight. Everything is uncovered and laid bare before the eyes of him to whom we must give account.


கடவுள் ஐந்தாம் பரிமாணத்தை சேர்ந்தவரோ??



அர்ஜுனா, உனக்கு உன் கடந்த காலத்தைப் பற்றி ஏதும் தெரியாது, அனால் எனக்கு உன்னுடையது , என்னுடையது, கடந்த காலம் எதிர்காலம் எல்லாம் கண்முன் தெரிகின்றன என்கிறான் கிருஷ்ணன் கீதையில்! perfect 5D view!

வேதாஹம் சமத்திதானி வர்த்தமாநானி ச அர்ஜுன
பவிஸ்யானி ச பூதானி மாம் து வேதா ந கஸ் ச ன   (7-26)

இதற்கு மத்வரின் உரையைப் பார்ப்போம்.
(non duality )

இறைவனுக்கு மாயை என்பதே கிடையாது; ஜீவன் கடந்த காலம் , எதிர் காலம் என்ற மாயையில் சிக்கிக் கொண்டுள்ளது.  அவன் கண் முன்னே எல்லாம் காலம் உட்பட எல்லாம் சத்தியமாக விரிகின்றன.

கிருஷ்ணன் தற்காலிகமாக அர்ஜுனனை 5D ஸ்பேஸ்-இற்கு teleport செய்கிறான் போலிருக்கிறது. என் விஸ்வரூபத்தைப் பார் என்கிறான். அர்ஜுனன் தன் கண்களுக்கு எல்லாம் அப்பட்டமாகத் தெரிகிறது என்கிறான். undivided view ! நடந்தது, நடப்பது, நடக்கப் போவது எல்லாம் தெரிகிறது என்கிறான்;மலைகள், சமுத்திரங்கள், விண்மீன்கள், எல்லாம் அவனுக்குள் அடங்கி இருப்பதை அர்ஜுனன் பார்க்கிறான். எப்படி கிருஷ்ணனுக்குள் சூரியன் இருக்கும் என்று நாம் கேலி செய்கிறோம், அது நமது limited vision !  சரி..

பிரபஞ்சத்தில் நான்கு ஆதாரமான விசைகள் இருப்பது தெரியும். ஒன்று ஈர்ப்பு , இன்னொன்று மின்காந்த விசை, இன்னும் இரண்டு அணுக்கருவினுள் செயல்படும் விசைகள். பொதுவாக நாம் gravity யை பெரிய ஆளு என்கிறோம். இல்லை, மற்ற  விசைகளுடன் ஒப்பிடும் போது gravity சின்னப் பையன். static charge மூலம் சீப்பில் பேப்பர் துண்டு ஒட்டிக் கொள்ளும் போது சீப்பின் மின்காந்த விசை ஒட்டு மொத்த பூமியின் ஈர்ப்பை எதிர்த்து நிற்கப் போதுமானதாக உள்ளது. மேலும், அணுக்கரு விசைகளுடன் ஒப்பிடும் போது ஈர்ப்பு மிக மிக மிக வலிமை குறைந்தது. சுமோ வீரரின் முன் எலிக்குட்டி போல! இது ஏன் என்று யோசித்த சில விஞ்ஞானிகள் , ஈர்ப்பு விசை மட்டும் எல்லா பரிமாணங்களிலும் புகுந்து பயணிக்கிறது என்று அனுமானித்தனர் . பெரிய தண்ணீர்க் குழாய் ஒன்றை கருதவும். அதில் அதிக அழுத்தத்துடன் வேகமாகத் தண்ணீர் வருகிறது. வெளிவரும் தண்ணீர் வலிமை மிக்கதாக இருக்கும் அல்லவா? அனால் அந்தக் குழாயில் வழிநெடுக சிறிதும் பெரிதுமாக ஓட்டை போட்டு விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தண்ணீர் பல துளைகளின் வழியே லீக் ஆவதால் மறுமுனையில் வெளிவரும் தண்ணீருக்கு அத்தனை force இருக்காது . இப்படித் தான் gravity எல்லாப் பரிமாணங்களிலும் புகுந்து leak ஆகிறது; எனவே வலிமை குறைவாக உள்ளது. லீக் ஆகி வந்தே நம்மை என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள். கீழே தள்ளி முட்டியைப் பேர்த்து விடுகிறது!

கூப்பர் சாமார்த்தியமாக தன் மகளுடன் communicate செய்ய gravity யைப் பயன்படுத்துகிறான். சாதாரணமான ரேடியோ அலைகளை உபயோகிக்க முடியாது. அவை மின்காந்த அலைகள் என்பதால் அவை 5ஆம் பரிமாணத்தில் கசிவதில்லை. சாதாரணமாக மின்காந்த அலைகள் அல்லது ஒளி மூலம் communicate செய்தால் சனியில் இருந்து பூமிக்கு தகவல் வர மாதக் கணக்கில் ஆகும். இது shortcut ! ஐந்தாம் பரிமாணத்தில் gravity ஒளியை விட வேகமாகப் பயணிக்கக் கூடியது. almost instantaneous!!! நாம் எப்படி மின்காந்த அலைகளை 1, 0 என்று gate களை வைத்து control செய்கிறோமோ அதே போல ஈர்ப்பை கண்ட்ரோல் செய்து மோர்ஸ் கோட் முறையில் செய்தி அனுப்புகிறான். Other than Gravity only LOVE can transcend all dimensions என்கிறான் . உண்மையான அன்பு பரிமாணங்கள் கடந்து உரியவரை அணுகும். வெளிநாட்டில் உள்ள மகனுக்கு ஏதோ ஆபத்து என்றால் இங்கே அம்மாவின் வயிற்றில் என்னவோ செய்வது இப்படித்தான்!

சரி. perfect 2டி பொருட்கள் இந்த பிரபஞ்சத்தில் கிடையாது. பேப்பருக்கும் மிகச் சிறிய அளவு 'உயரம்' இருக்கிறது.நம்  நிழலை வேண்டுமானால் 2டி என்று சொல்லலாம். நமது நிழல் 2 D என்றால் உயர் பரிமாண உயிர்களின் நிழல் முப்பரிமாணத்தில் இருக்கும்.  முப்பரிமாணத்தில் கறுப்பாக நகர்வது போலிருக்கும். கண்டிப்பாக பேய் என்றே நினைத்துக் கொள்வோம்.

யாருடைய
நடமாடும் நிழல்கள் நாம்

என்ற ஆத்மாநாமின் கவிதை நினைவுக்கு வருகிறது.


சரி, இந்த ஐந்து பரிமாண கான்செப்ட் எப்படி வந்தது? ஐன்ஸ்டீனுக்குப் பிறகு இயற்பியல் கொஞ்சம் மந்தமாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது . பிரபஞ்சத்தின் நான்கு விசைகளையும் ஒன்றிணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த கொள்கை அவரது கனவாக இருந்தது. அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை. மிகப் பெரிய தொலைவுகளில் செயல்படும் gravity யையும் மிகச் சிறிய தூரங்களில் நிலவும் குவாண்டம் விசைகளையும் எப்படி ஒருங்கிணைப்பது என்று போராடுகிறார்கள். சமீபத்திய ஸ்ட்ரிங் தியரி எல்லாமே ஒரு பரிமாண வயிலின் கம்பி போலத் தான் என்று சொல்கிறது. ஆனால் இது வேலை செய்ய நமக்கு 11 பரிமாணங்கள் (காலம் உட்பட)தேவைப்படுகின்றன. மூன்று தான் தெரிகிறது...இன்னும் 7 எங்கே ஒளிந்து கொண்டுள்ளதோ என்று தெரியவில்லை. சின்னச் சின்ன முடிச்சுகளாக சுருட்டி வைக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். உதாரணம் ஸ்ட்ரா! தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஸ்ட்ரா  ஒரு இருபரிமாண செவ்வகம் போல் தோன்றுகிறது. ஆனால் அதனுள் ஒரு மிகச் சிறிய மூன்றாம் பரிமாணம் சுருட்டி வைக்கப் பட்டுள்ளது.நம் பிரபஞ்சம் ஒரு நான்கு பரிமாண ஸ்ட்ரா! பெருவெடிப்பின் (big bang ) இன் போது மூன்று பரிமாணங்கள் மட்டும் விரிந்து பெருக, மற்ற ஏழும் அப்படியே முடிச்சுகளாக நின்று விட்டன. சுருட்டி வைக்கப் பட்டிருக்கும் drawing sheet ஐ unfold செய்வது போல...


சரி, நீங்கள் விஞ்ஞானியாக இருந்தால் எந்தப் plan ஐ தேர்ந்தெடுப்பீர்கள்?

Plan A : ஒட்டுமொத்த மனித இனத்தையும் வேறொரு கிரகத்துக்கு மாற்றுவது

Plan B : எல்லாரும் இங்கே செத்துப் போங்கடா என்று விட்டு விட்டு சில சாம்பிள்களை மட்டும் எடுத்துச் சென்று புது கிரகத்தில் புதிதாக மனித இனத்தை ஆரம்பிப்பது!




சமுத்ரா






9 comments:

Dr.Dolittle said...

வேறு உலகில் அல்லது ஸ்பேசில் மதக்கோட்பாடுகள் எப்படி செல்லுபடியாகும் ?

உதாரணத்திற்கு பிறை நோக்குதல் , ஜோசியம் , வடக்கே தலை வைத்தல் (ஸ்பேசில் திசைகள் இல்லை தானே) :)

சமுத்ரா said...

ஒரு ஒப்பீட்டுக்கு சொன்னேன்..
மதம் என்றல்ல...ஆன்மீகம் என்ற ரீதியில்

தனியனின் தேடல் பகிர்வுகள் said...

ப்ப்ப்பா... இதுக்கு முன்னாடி இவ்ளோ தெளிவா பரிமாணத்தைப்பத்தி படிச்சதே இல்ல... செம்ம...

5D-னா இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் பயணிக்கலாம்னு படிச்சிருக்கேன். but முதல் முறையா 5D-க்கு புதுசா ஒரு விளக்கம் படிக்கிறேன்.

அதெப்படி உயர் பரிமாண உயிரி நம்மைப் பார்க்கும்போது முழுசா பாக்கமுடியும்னு யோசிச்சுட்டு இருக்கேன்.


நம்மளோட(3D) நிழல் 2D-ல தெரியும்போது, 4D-யோட நிழலாகூட நாம(3D) இருக்கலாமுனு நினைத்ததுண்டு.

அதேபோல, மண்டைய போட்டுட்டா அடுத்த பரிமாணத்துக்குள்ள போயடலாமுனு நினைத்ததுண்டு. :)

கிராவிட்டி பத்தின விளக்கம் ஆசாம்.


நான் விஞ்ஞானியாக இருந்தால் கண்டிப்பாக Plan B-தான். =P

Anonymous said...

good one samudra

Anonymous said...

Really superb sir.

Unknown said...

1. ஏன் நம்மால் 5- diamention இல் survive பண்ண முடியாது.
2. பூமயில் எத்தனை diamention இருக்கிறது. நமக்கு தெரிந்தது 3-D, மற்றவை
இங்கு இருக்க வாய்ப்பு இருக்கா.
3. அப்படி இருக்கும் பட்சத்தில் இங்கு உள்ள gravity மற்றும் Basic laws அதன் மீது எவ்வாறு ஆதிகம் செலுத்தும்.
4. Incase நாம் நிலவில் வாழ்வதாக வைத்து கொண்டால் பூமிக்கும் நிலவிற்கும் time dilation எப்படி இருக்கும். அங்கு நம் வாழ் நாள் குறைந்துவிடுமா.
5. கூப்பர் தன் மகளுடன் communicate செய்வதற்கு gravity ய் பயன்படுத்துகிறான் என்கிறிர்கள் அப்படியென்றால் gravity force- க்னு ஒரு limitation கிடையாதா. நம் பூமியிலுள்ள gravity force- இன் limitation எவ்வளவு எப்படி வேறு ஒரு galaxy -ல் இருந்து gravity மூலம் message அனுப்பமுடியும். இது சாத்தியமா ஏனெனில் galaxy to galaxy நாம் நினைத்து பார்க்க முடியாத தூரம் அப்படியே message அனுப்பினால் அதை பெறுவதற்கு நாம் இருக்க மாட்டோம் இல்லையா. அதற்குள் நாம் இறந்து போய்விடுவோம் இல்லையா.

ரெண்டு said...

// மற்ற விசைகளுடன் ஒப்பிடும் போது gravity சின்னப் பையன். static charge மூலம் சீப்பில் பேப்பர் துண்டு ஒட்டிக் கொள்ளும் போது சீப்பின் மின்காந்த விசை ஒட்டு மொத்த பூமியின் ஈர்ப்பை எதிர்த்து நிற்கப் போதுமானதாக உள்ளது.//

Excellent example

Unknown said...

அய்யோ பயமாருக்கு பயமாருக்கு..............(சத்தியமா)

Raman Kutty said...

My choice willbe option b