இந்த வலையில் தேடவும்

Tuesday, September 3, 2013

அணு அண்டம் அறிவியல் -73

அணு அண்டம் அறிவியல் -73 உங்களை வரவேற்கிறது.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணு அண்டம் அறிவியல் -73 உங்களை வரவேற்கிறது.

உங்களை (என்னையும்) ஒரு form -இற்கு கொண்டு வர, மீண்டும் ஓட்டத்தில் இணைய சில விஷயங்களை இந்தப்  பதிவில் பேசலாம்.

விஸ்வரூபம்! 
=============

“Nature and Nature's laws lay hid in night:
God said, Let Newton be! and all was light.”
― Alexander Pope

அறிவியல், குறிப்பாக இயற்பியல் ,பொதுவாக , ஒரு bottom -up அணுகு முறையை கடைபிடித்து வந்துள்ளது என்று சொல்லலாம்.   குறிப்பாக 'இயற்பியல்' என்று ஏன் சொல்கிறேன் என்றால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் இயற்பியல் ஒரு hot subject ஆக இருந்தது. மாணவர்கள் எல்லாரும் இயற்பியல் படிக்கவே விரும்பினார்கள். எர்னெஸ்ட் ரூதர்போர்ட், "All science is either physics or stamp collecting" என்று சொன்னார். இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு கொஞ்சம் இதனால் தலைக்கனம் கூட வந்து விட்டிருந்தது. தொலைதூர காலக்ஸிகள் , பிரபஞ்சம், சூரிய மண்டலம், அணுவின் உள்ளே உள்ள விசித்திர உலகம் குவார்க்குகள் என்று 'கடவுளின் ஏரியாவில்' அவர்கள் ஆராயத் தலைப் பட்டதால்  வெறும் டெஸ்ட் ட்யூப்களை வைத்துக் கொண்டு திரியும் chemist -களையும் மண்ணை வைத்து நோண்டிக் கொண்டிருக்கும் geologist -களையும் அவர்கள் துச்சமாக மதித்தார்கள் என்று சொல்லலாம். யூனிவர்சிடிகளில் வேதியியல், நிலவியல் பிரிவுகளில் ஈ ஓட்ட ஆள் இல்லை. ஒன்றிரண்டு பிடிவாத ப்ரொபசர்கள் மட்டுமே டிபார்ட்மெண்டில் காலம் தள்ளிக் கொண்டிருந்தார்கள். ஆர்தர் ஹோம்ஸ் என்ற ஜியாலஜிஸ்ட் ரேடியோ ஐசோடோப்-முறையில் பாறைகளை ஆராய்ந்து பூமியின் வயதைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு தேவையான உபகரணங்களை கொடுக்க அவரது யூனிவர்சிடி மறுத்து விட்டது. ஒரு கால்குலேட்டர் இயந்திரத்தைப் பெற அவர் ஓரிரு வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அந்தக் காலத்தில் (1920) கால்குலேட்டர் ஒரு ரூம் சைஸுக்கு இருக்கும்!

சரி.

இயற்பியல் ஒரு bottom -up அணுகுமுறையில் வளர்ந்தது என்று சொன்னோம். அப்படி என்றால் ,பல்வேறு விஞ்ஞானிகள் பல்வேறு காலகட்டங்களில் தனித் தனியாக கண்டுபிடித்த விஷயங்களை , மேலே செல்லச் செல்ல ஒரு கோபுரம் போல ஒன்று சேர்க்கும் முயற்சி.  இந்த முயற்சி இப்போது கர்வத்தில் திளைத்திருந்த (இயற்பியல்) விஞ்ஞானிககளை 'கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ' என்று சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒவ்வொரு கொள்கையும் (theory ) தனித்தனியாக நன்றாக வேலை செய்கிறது. ஆனால் ஒன்று சேர்த்தால் சொதப்பி விடுகிறது. நியூட்டன் ஈர்ப்பு விதியைக் கண்டுபிடித்த போது அவருக்கு அணுக்களைப் பற்றித் தெரியாது. மாக்ஸ்வெல் -லுக்கு எலக்ட்ரான் என்றால் என்ன என்று தெரியாது.  ஐன்ஸ்டீனுக்கு  குவாண்டம் உலகில் வெகுவாக செறிந்து கிடக்கும் துகள்கள் (sub atomic particle ) பற்றித் தெரியாது. இன்று, Particle Zoo  என்று சொல்லும் அளவு நூற்றுகணக்கான துகள்கள் உள்ளன. பையான், ஆன்டி பையான் , மியூயான் , நியூட்ரினோ ,ஆன்டி நியூட்ரினோ ...இப்படி வாய்க்கு வந்த பெயர்களில்..இவைகள் உண்மையிலேயே தேவை தானா? இவைகளின் அர்த்தம் என்ன என்று இதுவரை யாருக்கும் தெரியாது. கடவுள் இத்தனை சிக்கலாகவா பிரபஞ்சத்தைப் படைப்பார்? அறிவியல் என்பது பொதுவாக எளிமைப்படுத்துதல். ஆனால் இப்போது அது அதற்கு எதிர்திசையில் , சிக்கலாகப் போய்க் கொண்டிருக்கிறது. இத்தனை அடிப்படைத் துகள்கள் எதற்காக? அதாவது பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்த கதை.

இந்தத் துகள்களில் பெரும்பாலானவை ,இருப்பது போல் இருந்து இல்லாமல் போய் விடுகின்றன. மியூயான் என்ற துகளின் ஆயுள் காலமே 3x 10^-8 வினாடிகள் தான். வினாடியில் கோடியில் ஒரு பங்கு. இன்னொரு விதத்தில் சொல்வதென்றால் மூன்று  வினாடியில் அது கோடி முறை பிறந்து இறந்து விடுகிறது. well , இங்கே காலம் என்பது relative என்பதால் இது பெரிய மேட்டர் அல்ல. அத்தனை சிறிய காலத்தில் அது காலேஜுக்கு சென்று படித்து, காதலில் விழுந்து, குழந்தை குட்டி பெற்றுக் கொண்டு, போதுமடா சாமி இந்த நீண்ட(?) வாழ்க்கை என்று மரணப் படுக்கையில் வீழ்ந்து சுற்றம் சூழ  கல்யாண சாவாக செத்துப் போகலாம். அதே போல ஒரு மேலான தளத்தில் (dimension ) இருந்து பார்க்கும் யாரோ ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு நாமெல்லாம் 3x 10^-8 lifetime கொண்ட அற்பமாக செத்து செத்து மடியும் மியூயான்கள் போலத் தெரியலாம். 

[காலம் ஒரு பெரிய விஷயம் இல்லை என்று ஏன் சொன்னேன் என்றால் நீங்கள் மாகி நூடுல்ஸ் செய்கிறீர்களே! அந்த 2 நிமிடத்தில் நம் ஒட்டு மொத்த பிரபஞ்சமே தோன்றி விட்டது என்கிறார்கள் ! சும்மா ஒரு ரயில் பிடிக்கும் அவசரம். கடவுள் பிளான் போட்டு தன் இன்ஜினியர்களை ஆலோசித்து வருடக்கணக்கில் திட்டமிட்டு இது உருவாகவில்லை போலும்!அதன் 99% பருப் பொருட்களுடன் 2 நிமிடத்தில் ! (ஏன் இத்தனை அவசரம் என்று தெரியவில்லை). பிறகு அது கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக(?)வளர்ந்து ஏனோ 10^ -35 வினாடிகள் கழித்து பயங்கரமாக கட்டுக்கடங்காமல் வளர்ந்தது. அதன் விரிவடைதல் linear ஆக இல்லாமல் அத்தனை சிறிய காலத்தில் அது தன் கன அளவில் 10^ 78 மடங்கு பெருத்து விட்டது என்கிறார்கள். (பார்க்க: inflation theory ) அதாவது, ஒரு எலுமிச்சம் பழ அளவு இருந்தது வினாடியில் ஐந்து கோடி பகுதி நேரத்தில் பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்துக்கு பெருத்து வளர்ந்து விட்டது. இதுதான் உண்மையான விஸ்வரூபம்! சினிமா ஹீரோக்கள் எடுக்கும் விஸ்வரூபம் சும்மா கமர்ஷியல் குப்பை! இந்த அபார விரிவடைதல் ஒரு விதத்தில் நல்லது ..linear ஆக slow motion இல் விரிந்திருந்தால் அதன் பாரம் தாங்காமல் ஒரு கட்டத்தில் தனக்குள் தானே ஒடுங்கி இருக்கும். ஏனென்றால் ஈர்ப்பு விசை முந்திரிக் கொட்டை போல பிரபஞ்சத்துடன் கிட்டத்தட்ட ஒரு இரட்டைப் பிறவி போலவே  பிறந்து விட்டது. அந்த நொடியில் இருந்து இன்று வரை அது தன் கடமை மாறாமல் கண்ணாடி குடுவைகளை கீழே போட்டு unromantic ஆக உடைத்துக் கொண்டிருக்கிறது!]


 சரி. (நம்மைப் பொறுத்த அளவில் )இத்தனை குறுகிய ஆயுள் கொண்ட இந்த துகள்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்றால் இவை அதிர்ஷ்ட வசமாக trace எனப்படும் பாதைகளை விட்டுச் செல்கின்றன. ஜெட் விமானம் பறந்து சென்றதும் ஏற்படும் புகைப் பாதை போல! 
ஹீலியம் அணுக்கருவினுள் க்ளூவான்கள்


ஏராளமான இந்த அடிப்படைத் துகள்கள்  விஞ்ஞானிகளைக் குழப்புகின்றன. 
கடவுள் இவற்றை நோக்கமே இல்லாமல் சும்மானாச்சும் மனிதனை கடுப்படிக்க என்று படைத்தாரா? சும்மா விளையாட்டுக்காகவா? இது, கடவுள் அல்லது இயற்கை அவ்வளவு effective ஆன சிவில் இஞ்சினியர் இல்லை என்று காட்டுகிறது. இஞ்சினியரை விட்டு வீடு கட்டச் சொன்னால் அவர் பொதுவாக ஒரே மாதிரி இருக்கும் செங்கல்லோ ஹாலோ ப்ளாக்கோ வைத்து சிமெண்டையும் பயன்படுத்தி வீடு கட்டினால்தான் அவருக்கும் லாபம். வீடு கட்டுபவருக்கும் லாபம். அனால் நம்மிடம் இருக்கும் ஏராளமான அடிப்படைத் துகள்களை வைத்துப் பார்க்கும் போது , அந்த இஞ்சினியர் crazy ஆக கலர் கலராக , விதம் விதமான வெவ்வேறு சைஸ்களில் பெரியதும் சிறியதுமான தொடர்பே இல்லாத கற்களை வைத்து கட்டி இருக்கிறார் (no simplicity )என்று தோன்றுகிறது. இருந்து விட்டுப் போகட்டுமே , அதனால் என்ன என்கிறார்கள் சிலர்..பிரபஞ்சம் is not a business ..ஆன்டி பையான் (anti -pion )அதுபாட்டுக்கு ஒரு ஓரத்தில் சிவனே என்று இருந்து விட்டுப் போகட்டுமே? அது என்ன நம்மை தொந்தரவு செய்கிறதா என்ன? நியூட்ரினோ என்று ஒன்று பாவம் இருக்கும் இடமே தெரியாது. மில்லயன் கணக்கில் நியூட்ரினோக்கள் நம்மை அனாயாசமாக கடந்து சென்று விடும். ஏன் , பூமியின் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் சரேல் என்று நானோ செகண்டில் கடந்து போய் விடும், ஏதோ பூமி என்ற ஒன்றே அதன் பாதையில் இல்லை  என்பது போல...! (ஆம்... நியூட்ரினோக்கள் பார்வையில் பூமியே இல்லை! நாமெல்லாம் இல்லை! மாயை! பழனி சாமியா? யாரது ? நான் வழியில் பார்க்கவே இல்லையே என்று சொல்லும்! )  அது இருக்கட்டுமே...என்ன வந்தது ? சும்மா fun -னுக்காக அதை கடவுள் படைத்தார் என்று வைத்துக் கொள்வோம். ஒரு விதமான காஸ்மிக் ராமபாணம் நியூட்ரினோ. சும்மா கடவுளின் குழந்தைகளுக்கு விளையாட்டு அம்பு  என்று வைத்துக் கொள்ளலாமே?kind of 

"ஏழு மா மரம் உருவி, கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடு புக்கு உருவி, பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது,"

ஏழு உலகங்களுக்கு அப்புறம் துளைக்க எதுவும் இல்லை என்று திரும்பி வந்து விட்டதாம் ராம பாணம் . நியூட்ரினோ அப்படி வராது!

 இப்போது பூமியில் மக்கள் பசியால் செத்துக் கொண்டிருக்க , சில பேர் மண்ணுக்கடியில் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆம்..இந்த slippery நியூட்ரினோக்களை வழியில் தடுத்து நிறுத்தி பிடித்து 'இன்னாப்பா ,இன்னாத்துக்கு இப்டி எகிறுனுகீற? குந்திகினு ரெஸ்ட் எடு' என்று சொல்லி சிறைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று மண்ணுக்கடியில் ஆழ சுரங்கங்களில் ராட்சஸ தொட்டிகளில் கன நீரை (heavy water )(டியூடிரியம்)  நிரப்பி தேடிக் கொண்டிருக்கிறார்கள்.   எப்போதாவது பில்லியன் நியூட்ரினோ-க்களில் ஒன்று மட்டும் மனிதன் மேல் மட்டற்ற கருணை வைத்து பிழைத்துப் போகட்டும் மனிதப்பயல் .. நாம் அவன் கனநீர் தவத்துக்கு கணநேர தரிசனம் அருள்வோம் என்று நீரின் அணுக்கருவைத் தாக்கி ஆல்பா துகளை (ஆற்றலை) வெளித் தள்ளுகின்றன. (அதுவும் மறைமுக தரிசனம் தான் !!) தொட்டிகள் மற்ற ஆற்றல் மூலங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஆழத்தில் கும்மிருட்டில் இருப்பதால் அதில் மற்ற காஸ்மிக் கதிர்கள் தாக்க முடியாது. எனவே தொட்டிகளில் எப்போதாவது வெளிப்படும் ஆல்பா output (அதை வெளியே ஒரு கம்ப்யூட்டர் கண்கொத்திப் பாம்பு போல கண்காணித்துக் கொண்டிருக்கும்) நியூட்ரினோ இருப்பை உறுதி செய்யும். இதுவரை விழலுக்கு இறைத்த (கன) நீர் தான்!தமிழ்நாட்டில் கூட நியூட்ரினோ ஆய்வு மையம் ஒன்று வருவதாகக் கேள்விப்பட்டேன்.(தேனி )

குட்டிக் குட்டித்  துகள்களை கண்டுபிடிக்க இத்தனை செலவு அவசியமா? என்று ஒரு கோஷ்டி கேட்டுக் கொண்டிருந்தாலும் இன்னொன்று, கடவுள் அல்லது இயற்கை எதையும் காரணம் இன்றி படைக்காது என்று சொல்கிறது. ஏதோ ஒரு உள்ளார்ந்த அர்த்தம் இந்த அடிப்படைத் துகள்களில் இருக்க வேண்டும் என்கிறது. அது இன்னும் நம் ஸ்லோ மூளைக்கு எட்டவில்லை. அல்லது எப்போதும் எட்டாது! சும்மா விளையாட்டுக்காக இயற்கை இந்த துகள்களைப் படைக்காது ! ஒரு கை தேர்ந்த தையல்காரர் நம் சட்டையை எப்படி கச்சிதமாக செய்கிறார்? ஏதேனும் ஒரு extra fitting இருக்கிறதா? அது போல பிரபஞ்சமும் கச்சிதமாக படைக்கப் பட்டிருக்கிறது !God has Occum 's razor என்கிறார்கள்.

Standard Model எனப்படும் இந்த  அமைப்பு, இந்த துகள்கள் யாவற்றையும் ஒரு zoo போல காட்சிக்கு வைக்கிறது. இந்தத் துகள்களுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன? இதுவரை ஒருத்தருக்கும் தெரியாது.விஞ்ஞானி ஒருவர்  We have all the numbers now. but we don't know what they mean' என்கிறார். ஒவ்வொரு துகளுக்கும் சமர்த்தாக நிறை, சார்ஜ், ஸ்பின் (சுழற்சி) எல்லாம் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவை என்ன என்று புரியவில்லை. அணுக்கருவை அல்லது குறைந்த பட்சம் ப்ரோடான் , நியூட்ரான் துகள்களை நோண்டிப் பார்க்காமல் இருந்திருக்கலாமோ என்று அங்கலாய்கிறார்கள். There is a deep feeling that the picture is not beautiful என்கிறார் லெடர் மேன் ..இன்னொருவர் எனக்கு இந்தத் துகள்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்ளும் சக்தி இருந்திருந்தால் நான் ஒரு பாடனிஸ்ட் ஆகி இருப்பேன் போங்கடா என்றார்!அதாவது, புதிய துகள் ஒன்றின் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு இப்போது மகிழ்ச்சி அளிப்பதில்லை. மாறாக 'இதை எங்கே கொண்டு போய் பொருத்துவது' என்று தலைவலியையே கொடுக்கிறது.!



bottom -up approach இன் தலைவலி இது. ஏழெட்டு மாணவர்களை எங்கெங்கோ வெவ்வேறு பல்கலைக் கழகங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு சப்ஜெக்ட்-களில் படிக்க அனுப்பி விட்டு அவர்களுக்குள் எந்த தொடர்பையும் அனுமதிக்காமல் ஆண்டுகள் கழித்து அவர்களை ஒன்று சேர்ந்து ஒரு phD செய்யுங்கள் என்று சொல்வதைப் போன்றது.

 இதற்கு எதிரான Top-down அணுகுமுறையை கையாண்டிருந்தால் விஷயங்கள் எளிமையாக இருந்திருக்கும். ஆனால் அது சாத்தியம் அற்றது. உதாரணமாக இந்தியாவில் சங்கீதம் ,குறிப்பாக கர்நாடக இசை இந்த top town அணுகு முறைப்படி வளர்க்கப்பட்டது. இஷ்டத்துக்கு ஒருவர் உள்ளே  நுழைந்து பைரவிக்கு இனிமேல் சதுஸ்ருதி தைவதம் வேண்டாம் என்று இலக்கணங்களை மாற்றும் அனுமதி அதில் இல்லை. வெங்கட மகி என்பவரால் வகுக்கப்பட்ட 72 மேள கர்த்தா ராகங்கள் , பகுப்புகள், தொகுப்புகள் இன்றும் பின்பற்றப் படுகின்றன. இன்றும் ஒருவர் புதிய ராகத்தை கண்டுபிடித்தாலும் அது இந்த scheme -இல் பொருந்தும். ஆனால் இந்த அப்ரோச் அறிவியலுக்கு சரி வராது. மாண்டலோவின் தனிம வரிசை அட்டவணை ஓரளவு top -down என்று சொல்லலாம்.


தனித்தனியாக விஞ்ஞானிகள் செயல்பட்டு வந்தாலும் ,தங்கள் ஆராய்ச்சிகளில் முழுமையாக இருந்திருக்கிறார்கள். ஆராய்ச்சிகளுக்காக முழு வாழ்வையே அர்பணித் திருக்கிறார்கள். சில உதாரணங்கள் தருகிறேன்.



சூப்பர் நோவா:

 சூப்பர் நோவா என்பது ஒரு அரிதான பிரபஞ்ச நிகழ்வு. ஏன், 'மிக' அரிதான என்று சொல்லலாம். ஒரு நட்சத்திரம் (குறிப்பிட்ட நிறை கொண்ட நட்சத்திரம்) தன் வாழ்நாள் முடிந்ததும் தாறுமாறாக வெடித்துச் சிதறுவது!(இதைப் பற்றி விரிவாக பிறகு பார்க்கலாம்) வெகு நாட்களாக ஒரு விஷயம் புதிராக இருந்து வந்தது. big bang எனப்படும் பெருவெடிப்பின் போது இருந்த வெப்பம் (ஆற்றல்) கனமான தனிமங்கள் உருவாக போதுமானதாக இல்லை. மேலும், விண்மீன்களில் ஏற்படும் அணுக்கரு இணைவு (fusion ) மூலம் இரும்பை விட கனமான தனிமங்கள் உருவாவதில்லை. ஆனால் நாமெல்லாம் (உயிர்கள், intelligent civilization ) உருவாக கனமான தனிமங்கள் தேவை...(நிக்கல், காப்பர்..) இவை சூப்பர் நோவா விளைவு மூலம் வந்திருக்கலாம் என்று ஒருவழியாக கண்டுபிடித்தார்கள். (நாம் விரும்பி அணிந்து கொள்ளும், கல்யாண்  ஜுவல்லரி மூலம் புரட்சி செய்யும் தங்கம் உண்மையில் பூமியில் பிறந்தது அல்ல. அது சூப்பர் நோவா தந்த வரம். வைரம் தான் பூமியின் சொந்தம்! )இது neutron capture எனப்படும் விளைவு (இப்போது வேண்டாம்) . ஒரு நட்சத்திரம் தன் வாழ்நாள் முழுவதும் வெயிடும் ஆற்றலை சூப்பர் நோவா ஒரு வாரத்தில் வெளியிட்டு முடித்து விடுகிறது! பிரபஞ்சத்தில் உயிர்கள் தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகளில் ஒன்றாக அவைகளிடம் இருந்து சுமார் 500 ஒளி ஆண்டுகள் தொலைவுக்கு எந்த சூப்பர் நோவாவும் நிகழக் கூடாது என்று சொல்கிறார்கள். ஒரு பேச்சக்கு நம் அருகில் 100 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பெரிய நட்சத்திரம் ஒன்று இப்போது இந்தக் கணம் வெடித்து விட்டதாக நினைத்துக் கொள்ளலாம்.  2113 செப்டம்பர் 4 அன்று  நமக்கு அழிவு காலம் தான். [விளைவு நமக்கு வர குறைந்தது  100 வருடம் ஆகும்]அன்றில் இருந்து பூமியில் இரவு என்பதே இருக்காது. நம் இரவு (பகல்) ஆயிரம் மடங்கு அதிக வெளிச்சத்துடன் இருக்கும். பார்க்கலாமே நல்லா இருக்கு என்று வெளியே போனால் சூப்பர் நோவா நம் தோலை உருக்கி deep fry செய்து விடும். ஒரு வாரத்தில் பூமி சுடுகாடு! 

 வானத்தில் இவைகளை கண்டுபிடிப்பது எளிதான காரியம் அல்ல. உங்களிடம் கோடிக்கணக்கான புள்ளிகளைக் கொண்ட ஒரு பெரிய ராட்சத பலூன் கொடுக்கப்படுகிறது . ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அந்த பலூனில்  இப்போது புதிதாக ஏதேனும் புள்ளிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றனவா என்று உங்களிடம் கேட்டால் பதில் சொல்வது கஷ்டம் தானே? இப்படித் தான் சூப்பர் நோவாக்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன. வானத்தில் வெற்றிடம் ஒன்றில் ஒளிப்புள்ளிகள் புதிதாக ஏதேனும் தோன்றி உள்ளனவா என்று கண்டுபிடிப்பது. இதை ஆரம்பித்து வைத்தவர் ஆஸ்திரேலிய விஞ்ஞானி இவான்ஸ் ! தன்னுடைய ஸ்கேல் சைஸ் டெலஸ்கோப்பை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 50 சூப்பர் நோவாக்களை ரெக்கார்ட் செய்திருந்தார். இவான்ஸ் சூப்பர் நோவாக்களுக்காக தன் வாழ்நாளையே அர்பணித்தார் . தினமும் நைட் ஷிப்ட் தான் ! காலையில் தான் தூங்குவது !1987 இல் சால் பெர்ல்மட்டர் என்பவர் சூப்பர் நோவாக்களை கண்டறிய கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் ஒன்றை கண்டுபிடித்தார். கேமரா , தினமும் இரவு நூற்றுகணக்கான படங்கள் எடுத்து கம்ப்யூட்டருக்கு அனுப்ப, அது புதிதாக முளைத்துள்ள வெளிச்சப்புள்ளிகளை automated program மூலம் தேடும்...! இந்த புதிய முறை பற்றி அறிந்த இவான்ஸ் , it took all the romance out of it! என்று சொல்லிவிட்டு கடைசி வரை தன் 10 இன்ச் டெலஸ்கோப் -உடனேயே ரொமான்ஸ் செய்தார். ரொமான்ஸ் என்பது இங்கே சரியான வார்த்தை என்று தோன்றுகிறது.வானவியல் விஞ்ஞானிகள்  வின்மீன்களுடனும் , நெபுல்லாக்களுடனும் , காலக்சிகளுடனும் அளவு கடந்த காதலில் திளைத்தார்கள்!

இன்று நமக்கு எல்லாமே விரல் நுனியில் கிடைக்கிறது. இவான்ஸ்-க்கு கம்ப்யூட்டர் தெரியாது. அவர் தன் குறிப்புகளை கையால்தான் எழுதினார். 
இன்று நமக்கு  பிரபஞ்சம் மிகப்பெரியது என்று தெரியும். (well , சில பேர் , பிரபஞ்சம் நாம் நினைப்பது போல அவ்வளவு பெரியது அல்ல..என்கிறார்கள். தொலைநோக்கியில் தெரியும் தூரத்து காலக்ஸிகள் உண்மையில் நம் பக்கத்து காலக்ஸிகளின் பிம்பம் தான். ஒளி பிரபஞ்சத்தின் எல்லை வரை பயணித்து வளைவதால் நாம் பார்த்த காலக்ஸிகளை மீண்டும் மீண்டும் பார்க்கிறோம் என்கிறார்கள். குழந்தை கண்ணாடியில் பார்த்து விட்டு உள்ளே இன்னொரு பாப்பா இருப்பதாக நினைத்துக் கொள்வது போல! சில பேர், extreme ஆக சென்று இருப்பது நம் பால்வெளி காலக்ஸி ஒன்று மட்டுமே தான் என்கிறார்கள். சரி இந்த mirror -effect பற்றி பிறகு பேசலாம்) ஒண்ணரை நூற்றாண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலமே ரொம்பப் பெரியது. ஏன் பூமியே கூட! பூமியின் நிறை, பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம், பூமியின் சுற்றளவு , வயது இவைகளை கண்டறியவே மண்டையை உடைத்துக் கொண்டார்கள். பூமியின் சுற்றளவை ஒரு பெரிய கயிறை பூமியின் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் வரை ஓட்டை போட்டு உள்ளே விட்டு அதை அளந்து அந்த மதிப்பை Pi யால் பெருக்கி கண்டறிந்தார்கள். lol , சும்மா சொன்னேன். இந்த மதிப்புகளை அந்தக் காலத்திலேயே கம்ப்யூட்டர், கால்குலேட்டர், லேசர் இவைகள் இன்றி எப்படி துல்லியமாக கண்டறிந்தார்கள் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.
Physics is interesting! 



சமுத்ரா .

 



16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ராம பாணம் அப்படியா...?

G.M Balasubramaniam said...


HOW I wish i can follow and understand this.!

Anonymous said...

Physics is interesting!

Amanga.. neenga sollum pothu innum nallave suvarasyamaga irukinrathu

Suresh

சந்துரு said...

எல்லா ஆராய்ச்சிகளுக்கும் மூலம் இயற்பியலாக இருப்பது போல் தோன்றினாலும் அதற்கும் மூலம் வானியல்தான். ஆனால் அந்த வானியலில் இந்தியர்கள்தான் முன்னோடி என்பதை உலகம் ஏனோ மறைத்து விட்டது.

Vijayan Durai said...

//Physics is interesting! //
சர்வ நிச்சயமாக !
அறிவியல் உலகின் அரசி என்றல்லவா அதற்கு பட்டம் சூட்டியுள்ளார்கள்.,queen of science.

Vijayan Durai said...

//இந்தத் துகள்களுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன? இதுவரை ஒருத்தருக்கும் தெரியாது.விஞ்ஞானி ஒருவர் We have all the numbers now. but we don't know what they mean' என்கிறார். ஒவ்வொரு துகளுக்கும் சமர்த்தாக நிறை, சார்ஜ், ஸ்பின் (சுழற்சி) எல்லாம் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவை என்ன என்று புரியவில்லை. அணுக்கருவை அல்லது குறைந்த பட்சம் ப்ரோடான் , நியூட்ரான் துகள்களை நோண்டிப் பார்க்காமல் இருந்திருக்கலாமோ என்று அங்கலாய்கிறார்கள். //
அடக்கடவுளே !! இதெல்லாம் என்னாத்துக்கு!!

Aba said...

@விஜயன்,

Queen of sciences என பொதுவாக அழைக்கப்படுவது கணிதம்.

//.இன்னொருவர் எனக்கு இந்தத் துகள்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்ளும் சக்தி இருந்திருந்தால் நான் ஒரு பாடனிஸ்ட் ஆகி இருப்பேன் போங்கடா என்றார்!//

ஸ்டீபன் ஹாக்கிங்கும் particle physics ஐ பாட்டனி போல என்று கிண்டல் செய்திருக்கிறாராம்.

Inflation theory எனக்கு சரியாக புரியவில்லை. முடிந்தால் விரிவாக எழுதுங்கள்...

அகல்விளக்கு said...

அற்புதம்... :)

Unknown said...

Athu enna kadaisiyil oru twist, oru serial nadagam mathiri. But very good and interesting. Thanks for u once again staring the AAA.

Uma said...

samudra,

நீங்க சாப்ட்வேர் engineer ஆனது எப்படி? உங்க physiscs அறிவை பாத்தா ஒரு நல்ல physicist-ai miss செய்து விட்டோம் போல தெரியுது.

Uma

Unknown said...

hai samudra
really nice as always., thank u for again continuining aaa. kindly visit my page on asbalaji92.blogspot.com.,

Anonymous said...

நீண்ட நாட்களின் பின் உங்களை அ.அ.அ வில் சந்தித்ததில் மகிழ்ச்சி..
தொடர்ந்து எழுதுங்கள்..
வாசிக்க ஆவலாயுள்ளேன்..

ரசிகன்

Anonymous said...

நீண்ட நாட்களின் பின் உங்களை அ.அ.அ வில் சந்தித்ததில் மகிழ்ச்சி..
தொடர்ந்து எழுதுங்கள்..
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

Unknown said...
This comment has been removed by the author.
Rasikan-ரசிகன் said...

நீண்ட நாட்களின் பின் உங்களை அ.அ.அ வில் சந்தித்ததில் மகிழ்ச்சி..
தொடர்ந்து எழுதுங்கள்..
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

BASU said...

//ஏனென்றால் ஈர்ப்பு விசை முந்திரிக் கொட்டை போல பிரபஞ்சத்துடன் கிட்டத்தட்ட ஒரு இரட்டைப் பிறவி போலவே பிறந்து விட்டது.//

மீண்டும் சுஜாதா! :)