இந்த வலையில் தேடவும்

Friday, June 28, 2013

கலைடாஸ்கோப்-93

லைடாஸ்கோப்-93 உங்களை வரவேற்கிறது.

@@#%)@$#%

Danger is real; fear is optional - After earth




வில் ஸ்மித் நடித்திருக்கும் AFTER EARTH சயின்ஸ் பிக்ஸன் திரைப்படம் அவ்வளவாக ஓடவில்லை என்று தெரிகிறது. படத்தில் நகைச்சுவையோ,
சஸ்பென்ஸோ , திரில்லரோ இல்லை. ஆனாலும் எனக்குப் பிடித்திருந்தது.
பூமியில் இருந்து நோவா எர்த் எனப்படும் கிரகத்துக்கு பயணம் போகும்
வில் ஸ்மித் குழு எதிர்பாராத விதமாக ஒரு கனமான கிரகத்தின் ஆஸ்டிராய்ட்
பெல்டுக்குள் மாட்டிக் கொள்கிறது. கிரகத்துக்குள் இழுக்கப்பட்டு விண்கலம் கீழே விழுந்து நொறுங்குகிறது.விண்கலத்தில் ஹீரோ, மற்றும் அவரது மகன் தவிர எல்லாரும் இறந்து விடுகிறார்கள். (?!) ஹீரோவுக்கு தொடை எலும்பு பயங்கரமாக முறிந்து விடுகிறது. அவரால் எழுந்து நிற்கக் கூட இயலவில்லை. இந்நிலையில் தகவல் மையத்துக்கு செய்தி அனுப்பும் கருவி எங்கோ விழுந்து விடுகிறது. அதைத் தேடி எடுத்து தகவல் அனுப்பினால் மட்டுமே இரண்டு பேரும் உயிர் பிழைக்க முடியும். இந்நிலையில் அவர் தனது 13 வயது மகனை புத்தம் புதிய கிரகத்தில் கருவியைத் தேடி வருமாறு வெளியே அனுப்புகிறார். அந்தப் பையன் கருவியை தேடி எடுத்தானா, தனக்கு வரும் ஆபத்துகளை சமாளித்து தன் குறிக்கோளில் வெற்றி அடைந்தானா என்பது தான் படம்.

புதிய கிரகத்தை காட்டுவதற்கு இயக்குனர் (சியாமளன்) செட்டெல்லாம் போட்டு மெனக்கெடவில்லை என்று தெரிகிறது. ஆப்பிரிக்காவிலோ எங்கோ போய் எடுத்து விட்டார். ஒரு  கிரகம் 100% பூமி மாதிரியே இருக்குமா என்று தெரியவில்லை. கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று மெகா சைஸ்
மரங்களையும் ,குரங்குகளையும், கழுகுகளையும் காட்டி இருக்கிறார்கள்.
அந்த ராட்சஸ கழுகு சிந்துபாத் கதைகளில் வருவது போல பையனை அலேக்காக  தூக்கிச் சென்று தன்  மெகா சைஸ் கூட்டில் குஞ்சுகளுக்கு உணவாக வைக்கிறது!

 கனமான கிரகங்களில் மெகா சைஸ் உயிரினங்கள் தோன்ற முடியாது என்று ஒரு விதி இருக்கிறது. ஏற்கனவே கிரகத்தின் gravitational pull அதிகமாக இருக்கும் போது டைனோசர் போன்ற மெகா சைஸ் விலங்குகள் evolve ஆனால் அதன் அதீத எடை காரணமாக அந்த விலங்கு நடக்கக் கூட முடியாது.

பூமியைப் போன்ற இன்னொரு கிரகத்துக்கு குடி பெயர்ந்து விட வேண்டும் என்ற ஆசை மனிதனை நெடுநாளாய் ஆட்டிப் படைத்து வருகிறது. இப்போது
பூமி overload ஆகி ஒரு பழைய , பாழடைந்த  மெகா சைஸ்  குப்பைத் தொட்டி ஆகி விட்டது. பச்சைப் பசேலென்ற இன்னொரு வீட்டைக் கண்டுபிடித்து கொஞ்சம் கொஞ்சமாக அதை ஆக்கிரமித்து மரங்களை வெட்டி, அங்கேயும் பிளாட்டு போட்டு சீரியல் நடிகர்களை வைத்து கூவிக் கூவி  வியாபாரம் செய்யலாம் என்று ஆசைப் படுகிறான்.இதுவரை  பூமியைப் போல நிறைய நூற்றுக் கணக்கான கிரகங்களை கண்டு பிடித்திருக்கிறார்கள். தன் தாய் நட்சத்திரத்திடம் இருந்து habitable zone எனப்படும் பாதுகாப்பான அதே சமயம் வெதுவெதுப்பான தூரத்தில் சுற்றும் பாறைக் கிரகங்களில் தண்ணீர் இருக்கும் என்று வைத்துக் கொண்டால் அங்கே உயிர்கள் இருக்க 80% சாத்தியம் இருக்கும் என்று சத்தியம் செய்கிறார்கள். ஏனென்றால் தண்ணீர் ப்ரோடீன்களை கரைப்பதற்கும் சுமந்து செல்வதற்கும் தோதானது.

ஆனால் பிரச்சினை என்ன என்றால் அந்த கிரகங்கள் மிகவும் தூரத்தில் உள்ளன. அதை சென்று அடைய ஒளிக்கே சில நூறு ஆண்டுகள் பிடிக்கும். உயிரியல் மனிதனின் வயதை ஆயிரம் ஆண்டுகளாக அதிகரிக்கும் வித்தையை கண்டுபிடிக்க வேண்டும். இயற்பியல், ஒளி வேகத்தில் 80% செல்லும் விண்கல தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும். அப்போது வேண்டுமானால் இது சாத்தியம். ஒரு நாள், நாம் இந்த சலித்துப் போன பழைய வீட்டை விட்டு விட்டு புது வீட்டில் கிரகப் பிரவேசம் செய்யலாம்.

உண்மையிலேயே புதிய வானம் புதிய பூமி!

புதிய சூரியன், புதிய நட்சத்திரங்கள், புதிய காற்று...wow !

சரி...புதிய கிரகத்துக்கு போய் மனிதன் என்ன செய்யப் போகிறான்..அங்கேயும்
இதே அபத்தங்களை தான் செய்வான். 'நீ அடிச்சா அடி..நான் அடிச்சா இடி ' என்று வசனம் பேசும் ஹீரோக்களை வைத்து படம் எடுப்பான்; சக மனிதனிடம் கடன் கொடுத்து விட்டு சண்டை போடுவான் என்று pessimistic ஆக யோசிக்க வேண்டாம். புதிய வீட்டில் எப்படியோ சில நூற்றாண்டுகளுக்கு வாழ்க்கை சுவாரஸ்யமாகவே இருக்கும்.

FEAR IS OPTIONAL
என்ற வரி என்னை மிகவும் கவர்ந்தது.

சின்னக் குழந்தையாக இருந்ததில் இருந்து நாம் ஏதோ ஒன்றுக்கு பயப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். ஒரு குழந்தை கிட்டத்தட்ட எல்லாவற்றுக்கும் பயப்படுகிறது. கேட்டைத் தாண்டி வெளியில் போகவே தயங்குகிறது. நாம் வேறு தனியா போகாதே பூச்சாண்டி இருக்கும் பூதம் இருக்கும் என்று சொல்லி வளர்க்கிறோம். வளர வளர பயங்கள் குறைகின்றனவே தவிர மறைவதில்லை.

We fear things in proportion to our ignorance of them.
Christian Nestell Bovee 

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்று பாட்டெலாம்
தெரியும் என்றாலும் நம் பயங்கள் மறைவதே இல்லை. தெனாலி கமல் தன் பயங்களை வெளியே சொல்கிறார். நாம் சொல்வதில்லை.அவ்வளவு தான்.  என் 'பய' லிஸ்டில் பூனைக்குட்டி, கார் ஒட்டுதல், உயரமான மாடியில் இருந்து கீழே பார்த்தல், மிகக் குளிர்ந்த பானங்களைக் குடித்தல், பெங்களூருவில் ரோட்டை க்ராஸ் செய்தல் போன்றவை அடக்கம்.

பயங்களில் மிகவும் அபாயமான பயம் எது என்றால் தன்னைப் பற்றிய பயம் என்கிறார் ஓஷோ. (fear of oneself ) . நமக்குள்ளே செல்ல பயம்.. நாம் நாமாகவே இருக்க பயம். கணவன், அதிகாரி, டாக்டர், மகன், நண்பன், அண்ணன், போன்ற அத்தனை முகமூடிகளையும் வீசி விட்டு நம்மை நாமே நிர்வாணமாகப் பார்க்கும் பயம்.நம் உண்மை முகத்தை நேருக்கு நேர் தரிசிக்கும் பயம். இது தான் உண்மையான பயம் என்கிறார் ஓஷோ. நம் எல்லாருக்கும் இந்த பயம் இருக்கிறது.

+++*+++++

*புத்தகங்களில் அதிகம் விற்பது இந்த you can win , நீங்களும் சாதிக்கலாம்,
போன்ற தன்னம்பிக்கை டைப் புத்தகங்கள் தானாம். இதிலிருந்து நம் மக்களுக்கு தன்னம்மிக்கை ரொம்பவே குறைவு என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். in fact , அது கொஞ்சம் அதிகம்.Dunning–Kruger effect , மனிதர்கள் தங்கள் திறமைகளை இயல்புக்கு அதிகமாகவே மதிப்பிடுகிறார்கள் என்று சொல்கிறது. interview விற்கு செல்லும் போது நீங்கள் எடுத்துச் செல்லும் resume -ஐ உற்றுப் பாருங்கள் புரியும்.

இந்த slightly over -confidence அல்லது over estimation  நம்மில் நிறைய பேரிடம் இருக்கிறது. திறமையை மட்டும் அல்ல தங்கள் உணர்வுகளை, IQ வை, ஞாபக சக்தியை , தன் செயல்பாட்டை, பிரபல்யத்தை, ஆரோக்கியத்தை இப்படி எல்லாவற்றையும் மனிதர்கள் ஒரு படி மேலேயே மதிப்பிடுகிறார்கள்.


உதாரணத்துக்கு

-நானா? எனக்கென்ன நல்லா தான் இருக்கேன் fit like a fiddle என்பார்கள். 'எனக்கு இதெல்லாம் வராது' என்ற ஒரு அலட்சியம் அல்லது அதீத நம்பிக்கை. ஆனால் இந்த அலட்சியமே அவர்கள் உயிருக்கு ஒருநாள்  உலை வைத்து விடும். உடல், அவ்வப்போது அறிகுறிகள் காட்டினால், மாடி ஏறும் போது கொஞ்சம் சுருக்கென்று இதயத்தில் வலித்தால், ச்சே, ச்சே நான் என்ன குடிக்கிறேனா, நான் வெஜ் சாப்பிடுகிறேனா , யோகா எல்லாம் பண்றேன் எனக்கு 50 வயசு தானே?  எனக்கெல்லாம் ஒன்னும் வராது என்ற அலட்சியம். நம் ஆரோக்கியத்தைப் பற்றிய over estimation .

- நாம் நம் ஞாபக சக்தியை அதிகமாகவே மதிப்பிடுகிறோம். இதெல்லாம் நான் ஞாபகம் வைத்துக் கொள்வேன். நாலு டிஜிட் நம்பர் தானே,,,ஜுஜுபி என்று நினைத்துக் கொண்டு அப்புறம் ஏ .டி .எம் ம்முக்குப் போய் கார்டை நுழைத்து விட்டு பின் நம்பர் ஞாபகம் வராமல் திண்டாடுவோம்.

The palest ink is better than the strongest memory என்பதை மறந்து விடுகிறோம்.

-நம் popularity யைக்கூட ...நம்மை நிறைய பேருக்குத் தெரியும் என்ற over estimation .'எனக்கு அவரை (அவருக்கு என்னை) நன்றாகவே தெரியுமே' என்று over confidence உடன் ஒரு ஆளை பார்க்கச் செல்கிறோம்.. அன்னிக்கு ட்ரைன்ல பார்த்தனே...ரொம்ப நல்லா பேசினார். சென்னை வந்தா கண்டிப்பா வீட்டுக்கு வரணும்னார். போன் நம்பர் கொடுத்தார்.

கடைசியில் அவரைத் தேடிக் கொண்டு போனால் யார் நீங்க ?? என்பார்.

- last but not least , நம் திறமைகளை...


SQL server எனக்கு தூசு மாதிரி... query எல்லாம் சூப்பரா எழுதுவேன் என்று சொல்கிறோம். SQL0900 - Application process not in a connected state என்று error வந்தால் முழிப்போம். எல்லா ராகமும் அத்துப்படி, சூப்பரா பாடுவேன் என்று நினைத்துக் கொண்டிருப்போம். கடைசியில் பாடிக் காட்டினால் கர்ண கடூரமாக இருக்கும். ஹிந்தி தானே !தெரியுமே!கபீர் கே தோஹே எல்லாம் படித்திருக்கிறோமே என்று மிதப்பில், மும்பை போய் விட்டு  ஆட்டோக் -காரரிடம் பேசுவதற்கு தயங்குவோம்.

skills என்பது வேறு exhibition skills என்பது வேறு.


ச.ப.பு:


"நான் வீட்டுக்குப் போக வேண்டும் "

-தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியச் சிறுகதைகள்

தமிழில்: மதியழகன் சுப்பையா

இதில் ஒரு கதையை மட்டும் சுருக்கிக் கொடுத்துள்ளேன்.

"சைக்கிளை திருட்டு கொடுத்ததன் சுகம் " -அசோக் சுக்லா





முதலில் நானும் சைக்கிளை திருட்டு கொடுத்து நிற்கும் ஒரு மாறுபட்ட சுகத்துக்கு பரிச்சயமற்றிருந்தேன். என் சைக்கிளைத் திருடி எனக்கிந்த தேவ சுகத்தை அளித்த அந்த மகா புருஷனை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
பற்றுகளை விட்டு சிந்திக்கையில் எனது சைக்கிள் திருட்டுப் போனதாகக் கருதவில்லை. அது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது எனலாம். மேதைகளும் புரட்சியாளர்களும் நாடு கடத்தப்பட்டதற்கு வருத்தப்படாத நாம், சைக்கிள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு ஏன் கவலைப்பட வேண்டும்?

நான் வீடு திரும்புவதற்குள் சைக்கிள் திருட்டுப் போன செய்தி அப்பகுதி முழுவதும் பரவி விட்டிருந்தது. வீட்டை வந்தடைவதற்குள் வழியில் ஒரு நூறு பேருக்காவது பதில் சொல்லி இருப்பேன். அன்றுதான் நான் இவ்வளவு பிரபலமானவன் என்பதையே அறிந்தேன்.

என் மனைவி குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள் . அவள் மற்ற பெண்களோடு சேர்ந்து ஒப்பாரி வைப்பதில் அலாதி விருப்பமுள்ளவள் . அற்பமான விஷயங்களுக்குக் கூட மணிக்கணக்கில் அழும் ஆற்றல் கொண்டவள்.

என் மகன் சைக்கிள் திருடு போன செய்தியை கர்வத்துடன் மற்ற சிறுவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்கு முதன் முதலாக கர்வப்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் அவர்கள் தந்தையர்களின் சைக்கிள்கள் திருட்டுப் போகாதது குறித்து அவர்கள் வருத்தப்பட்டிருக்கலாம்.

நமது நாட்டில் துக்கம் விசாரிப்பது மிகப் பெரிய கலை. செருப்பு பிய்ந்து போனதை அப்பா செத்துப் போனதற்கான சம கம்பீரத்தோடு துக்கம் விசாரிப்பவர்களையும் காண முடியும்.விசாரிக்க வந்தவர்களின் பேச்சுக்கள் சற்று விபரீதமானவையே.ம்ம்...எது நடக்கணுமோ அது நடந்து தானே ஆகணும்...கவலைப்பட்டா எப்படி? எழுந்து குளி போ! அல்லது "கழுத, போவணுமுன்னு இருந்துச்சு, போச்சு...இப்ப என்ன வாழ்க்கையா போச்சு! - புதியதாய் யாரேனும் வந்தால், நிச்சயம் என் மனைவி ஓடிப் போனதாய்த்தான் நினைப்பார்கள்.

ஓரிரு நாட்கள் சுற்றுப்புறத்தில் சைக்கிள் திருட்டுப் போன சோகம் அப்பியிருந்தது . நான் எங்கே போனாலும் தொடர்ந்திருக்கும் அரட்டைகள் அப்படியே நின்றுவிடும். எல்லாரும் என்னை அனுதாபத்துடன் பார்த்துப் பேச ஆரம்பித்து விடுவார்கள். இப்படியாய் சாகாமல் செத்துப் போனவனின் நிலையை அனுபவிப்பேன்.

இறந்த பின் நான் என்னைப் பற்றிய பேச்சுகளை கேட்க இயலாது தான். ஆனால் சைக்கிளை இழந்ததன் காரணமாய் நான் அதை அனுபவித்து விட்டேன்.

என் சைக்கிளைத் திருடி எனக்கு இந்த அற்புத சுகத்தின் அனுபவத்தைத் தந்த அந்த மகராசனை மீண்டும் வணங்கி மண்டியிடுகிறேன்.

*

Management இல் 80-20 விதி என்று ஒன்று இருக்கிறது. Law of  Vital few என்று சொல்லப்படும் ....ஒரு கம்பெனியின் லாபத்தில் 80 சதவிகிதம் அதன் 20 சதவிகித வாடிக்கையாளர்களிடம் இருந்து வருகிறது என்று சொல்கிறது இந்த விதி.மேலும் உங்களின் 80% உழைப்பு நீங்கள் வேலை செய்யும் 20% நேரத்தில் இருந்து கிடைக்கிறது என்கிறது. மேலும், கம்பெனியின் 80% உற்பத்தி அதன் 20% தொழிலாளர்களிடம் இருந்து கிடைக்கிறதாம்.

இந்த விதி நம் தினசரி வாழ்க்கைக்கும் பொருந்தும் போல இருக்கிறது. சமையலின் 80% ருசி அதில் போடப்பட்டுள்ள 20% பொருட்களிடம் இருந்து வருகிறது. ஒரு திரைப்படத்தின் 80% அதன் 20% சீன்களில் இருக்கிறது.  நம்முடைய பிரச்சனைகளில் 80% சில முக்கியமான 20% காரணங்களால் வருகிறது. இப்படி.....அந்த 20%  VITAL FEW , முக்கியமான ஆனால் குறைவான அந்த சமாசாரங்களை கண்டுபிடித்து விட்டால் போதும். 80% விஷயங்கள் தெளிவாகி விடும்.

நம் வாழ்க்கைக்கும் இந்த 80-20 விதி பொருந்தும் போலத் தெரிகிறது. நாம் நம் 80% வாழ்க்கையை அதன் 20% காலத்தில் வாழ்ந்து முடித்து விடுகிறோம். அந்த இருபது சதவிகிதம் ஆளுக்கு ஆள் வேறுபடலாம்.அந்த 80% வாழ்க்கை  20-40 வயது ஆகவோ அல்லது 40-60 வயது ஆகவோ இருக்கலாம்.

படித்ததில் பிடித்தது:


Don’t judge each day by the harvest you reap; but by the seeds you plant




ஓஷோ ஜோக்

சிறைக்கு வந்த ஒரு புதிய கைதி அங்கே ஏற்கனவே இருந்த பழைய வயதான
கைதியைப் பார்த்து ஹலோ என்றான்.

ப. கைதி புதியவனைப் பார்த்து 'என்ன தப்பு செய்தாய்?' என்றான்.

பு. கைதி " ஷாப்பிங் மாலில் திருடி விட்டேன்" என்று சொல்லி விட்டு "நீங்கள்?" என்றான்.

நானா...நான் இங்கே இருக்கணுமுன்னு தலைவிதி...எப்படி வாழ்ந்தேன் தெரியுமா? அனில் அம்பானியின் வாழ்க்கை போ!...வருஷக்கணக்கா..கப்பல் மாதிரி நாலைஞ்சு காரு. பெரிய பங்களா,,,நீச்சல் குளம்; பெண்கள்.. உலகத் தரமான ரெஸ்டாரன்ட்-களில் டின்னர்..ஹ்ம்ம்...

"ஓ ..அப்படியா" என்று ஆதங்கப்பட்ட பு.கைதி "அப்புறம் என்ன ஆச்சு,,இப்படி?" என்றான்.

"அதுவா, ஒரு நாள் அம்பானி அவர் கிரெடிட் கார்ட் காணம் -முன்னு போலீஸில் கம்பிளயன்ட் செய்து விட்டார்"

சமுத்ரா ..

12 comments:

அனைவருக்கும் அன்பு  said...

உங்கள் எழுத்து நடை சலிக்காமல் பயணிக்க வைக்கிறது ஒவ்வொரு விசயமும் திரும்பி வைக்கிறது ஓசோவின் தேர்ந்த வார்த்தைகள் ,சைக்கிள் சைக்கிள் கதை என்று அனனைதும் அற்புதம்

திண்டுக்கல் தனபாலன் said...

கதை, ஜோக் உட்பட மற்றனைத்தும் அலசியதிலும் ஒப்பிட்டதும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...

ஜீவன் சுப்பு said...

கலைடாஸ்கோப் சூப்பர் . சிறுகதை ரெம்ப பிரமாதம் .

அப்புறம் பய லிஸ்ட் உங்களுக்காச்சும் பரவால்ல சின்னதா இருக்கு , நமக்கு மளிகைக்கட லிஸ்ட் மாதிரி ரெம்பெப்ப் பெரிசு ...!

சமுத்ரா said...

நன்றி கோவை சரளா, திண்டுக்கல் தனபாலன், ஜீவன் சுப்பு...
சுப்பு, உங்க 'பய' லிஸ்ட் பெ
ருசா? அப்ப நானே பரவாயில்லையா? :):)

ஜீவன் சுப்பு said...

எஸ் பாஸ் ..! நீங்க ரெம்ப ரெம்ப பரவால்ல

http://jeevansubbu.blogspot.com/2013/04/blog-post_8.html

சமுத்ரா said...

Saw your list..very funny..

G.M Balasubramaniam said...


எல்லாமே அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.FEAR IS OPTIONAL என்பதைப் படித்தபோது எனக்கு நான் எழுதி இருந்த “கடவுளோடு ஒரு உரையாடல் “ என்ற பதிவு நினைவுக்கு வந்தது.
gmbat1649.blogspot.in/2011/11/blog-post_16.html
அதில் PAIN IS INEVITABLE BUT SUFFERING IS OPTIONAL என்று ஒரு இடத்தில் எழுதி இருக்கிறேன். வாழ்த்துக்கள். அண்மையில் ஐடி கம்பெனி வேலை பற்றி எழுதி இருக்கிறேன். உங்கள் கருத்து அறிய ஆவல்.

இராஜராஜேஸ்வரி said...

, முக்கியமான ஆனால் குறைவான அந்த சமாசாரங்களை கண்டுபிடித்து விட்டால் போதும். 80% விஷயங்கள் தெளிவாகி விடும்.


கலைடாஸ்கோப் வண்ணங்கள் ரசிக்கவைத்தன.பாராட்டுக்கள்.!

arul said...

good story at the end

arul said...

good story at the end

பால கணேஷ் said...

சைக்கிள் சிறுகதை வெகு அபாரம்! ரசித்துப் படிக்க வைத்தது. பயம் என்கிற லிஸ்ட்டைப் பொறுத்தவரை நானும் ஜீவன் சுப்பு போல பெரிய பட்டியல் வைத்திருக்கிற ஆசாமிதான். ஓஷோவின் துணுக்கும் ஜோர்!

Vijayan.Durairaj said...

பய " டேட்டா " அருமை, ஓஷோ சொல்லும் அந்த பயம் தான் Ancient fear ,ரோடு கிராஸ் செய்வதற்கு எனக்கு பயம்,யாருமே இல்லாத ரோட்டை கூட இருபுறம் பார்த்த பின்பே மறுபுறம் போகத்துணிவேன் !!
//
skills என்பது வேறு exhibition skills என்பது வேறு.
//

Nice fact !