இந்த வலையில் தேடவும்

Monday, October 17, 2011

தேநீர்ப்பேச்சு- 2


தேநீர்ப் பேச்சு- 2 உங்களை வரவேற்கிறது.இந்த டீடைமின் கற்பனை கதாபாத்திரங்கள் சாரதா மாமி மற்றும் கோவிந்தன் மாமா.

சாரதா மாமி: வாங்க, மாமா, என்ன ரொம்ப நாளா ஆத்துப்பக்கம் காணோம்?

கோவிந்தன் மாமா: என்ன மாமி சௌக்யமா? வயசு ஆறதில்லையா? அதான் பழைய படி ஓடியாட முடியறதில்லை.
வர்ற வாரம் என் பேத்திக்கு காது குத்து இருக்கு. அவசியம் வரணும்.

சா. மாமி: பேத்தியா? ரொம்ப சந்தோஷம்.ஆஸ்திக்கு ஒரு ஆண் இப்ப ஆசைக்கு ஒரு பெண் ஆச்சு. என்ன தான்
சொன்னாலும் பெண் பிள்ளைகள் இல்லாத வீடு அத்தனை ஷோபிக்கறது இல்லை பாருங்கோ.என்ன பேரு கொழந்தைக்கு?

கோ.மாமா: எனக்கு ராகத்தோட பேரு தான் வைக்கனும்னு. 'கல்யாணி' ன்னு சொன்னா ரொம்ப காமன் பேரா இருக்குங்கறா.
'பைரவி' ரொம்ப ஹெவியான பேராம்.ரஞ்சனி ன்னு வைக்கலாம்னா நம்ம ராகவன் பொண்ணு ரஞ்சனி அல்பாயிசுலையே போயிட்டது. தேனுகான்னு வைச்சா குழந்தை பிறக்காதாம்.'சஹானா' நல்ல பேர் ஆச்சேன்னா ஏதோ முஸ்லிம் பேரு மாறி இருக்குங்கறா. எப்படியோ கடைசில 'பிந்து மாலினி' ன்னு வச்சிருக்கோம். நீங்க வந்திருந்து ஆசீர்வாதம் பண்ணனும்.

சா.மாமி: பிந்து மாலினி? தியாகராஜரோட 'எந்த முத்தோ' ஞாபகம் வர்றது.

கோ.மாமா: ராமனை எல்லாக் கோணங்களிலும் அனுபவிச்சு பாடினவர் அவர் ஒருத்தர் தானே மாமி?

சா.மாமி: சரியா சொன்னேள்..என்னோட பேசமாட்டாயான்னு கேட்கறார் 'ஆட மோடி கலதே' ல்ல. சீதா, லக்ஷ்மணன், அனுமார் இவர்களெல்லாம் இருக்காங்கன்னு என்னை மறந்துட்டயா ன்னு கேட்கறார் 'உபசாரமு' கீர்தனைல. அவன் சாதிச்சுட்டான் என்னை காப்பாற்றக் கூடாதுங்கற கொள்கைல உறுதியா நின்னு
சாதிச்சுட்டான் அப்படீங்கறார் இன்னொண்ணுல .ராமன் அருளைப் பெற நான் கொடுத்து வைக்கவில்லை அப்படிங்கறார் கலிகி உண்டேகதா வுல. ராமனைப் பார்த்து 'எச்சரிக்கையாய் பாத்து வா ராமா, ஏழை என் வீடு குண்டும் குழியுமா இருக்கும்கறார் 'ஹெச்சரிககா ரா ரா ' வுல.'மனசே என் பேச்சைக் கேட்கமாட்டாயா' என்று அலுத்துக்கறார் 'மனசா எடுலோ' வுல. இதுக்கெல்லாம் மேல, ஒரு கீர்த்தனையில 'நீ ஒரு ஆம்பிளையா' ன்னு ராமனைக் கேட்கறார் பாருங்கள்.

கோ.மாமா: ஐயோ, அது எதுல மாமி? நீங்களே ராமனுக்கும் தியாக ராஜருக்கும் சண்டை மூட்டி விட்டுடுவேள் போலருக்கே?

சா.மாமி: அதான் 'ரமா ரமண பாரமா' -வசந்த பைரவி ராகத்துல.

கோ.மாமா: அது மட்டும் இல்லை. அபூர்வமான ராகங்கள்ல கூட அவர் கீர்த்தனைகள் பண்ணி இருக்காரே மாமி!

சா.மாமி:ஆமா. கிரணாவளி, அப்புறம் பிரதாப வராளி, வெஸ்டர்ன் மாதிரி வருமே அதான் சுபோஷினி, அப்புறம் ஜிங்களா ன்னு ஒண்ணு.

கோ.மாமா: ஜிங்க்லா வா? இது என்ன ஜிங்குசா மாதிரி?

சா.மாமி: அனாதுடனு கானு..அவர் சொல்றார்: 'ராமா, நான் அனாதை இல்லை..அப்பா அம்மா இல்லாத நீ தான் அனாதை' அப்படீன்னு..இதுக்கு பேர் நிந்தாஸ்துதி ..இகழ்வது போலப் புகழ்வது.

கோ.மாமா: 'தந்தை தாய் இருந்தால் உனக்கிந்தத் தாழ்வெல்லாம் வருமோ அய்யா' அது மாதிரியா?

சா.மாமி: அதே தான். சிவன் தான் பரம்பொருள் அப்படின்னு சொல்லாமல் சொல்றார். இன்னொன்னு கல்யாணி ல எத்தைக் கண்டு நீ இச்சை கொண்டாய் மகளே? ன்னு வருமே.


சுத்தப் பைத்தியக்காரன் கங்காதரன் தோகையை முன்னவன் பேயுடன் ஆடிய
தொந்திக்கோ ஏறும் நந்திக்கோ செய்யும் விந்தைக்கோ நீ


இன்னிக்கு சினிமாவுல பரதேசிகளையும் ரவுடிகளையும் காதலிக்கிற ஹீரோயின்களைப் பார்த்து எத்தைக் கண்டு நீ இச்சை கொண்டாய் மகளேன்னு பாடுனா சரியா இருக்கும்.

கோ.மாமா: எல்லாம் மறந்துட்டது மாமி. எங்கே ? Practice பண்ணிண்டே இருந்தாதானே ஞாபகம் இருக்கும். ஏதோ உங்க கூட
பேசறப்ப சங்கீதத்தைப் பற்றி கொஞ்சம் மனம் விட்டு பேசறேன். மத்தபடி எல்லாரும் ரொம்ப De-motivate பண்றா.இப்போ பசங்களுக்கு இதில் எல்லாம் எங்கே Interest இருக்கு? எல்லாம் சினிமா சினிமான்னு அலையறதுகள். கர்நாடக சங்கீதம் -
ன்னாலே காத தூரம் ஒடரதுகள்.என் மக வயித்து பேரன் சொல்றான்.தியாகராஜர் ,தீக்சிதர் எல்லாம் 'ஓல்டு பீஸாம்' அவங்களை இன்னும் ஏன் புடிச்சு தொங்கிண்டு இருக்கேள் னு கேட்கறான்.

சா.மாமி: உண்மை தான். ஆனால் முழுக்க முழுக்க அவங்களையும் குறை சொல்ல முடியாது. கர்நாடக சங்கீதம்கறது மலை ஏறுவதைப் போல கசப்பாகவும் கஷ்டமாகவும் இருக்கும். ஆனால் ஒருதரம் ஏறிட்டா மலை உச்சியின் கிரணங்கள், சுகந்த தென்றல்,மேகங்களின் அழகு எல்லாம் அமர்களமா இருக்கும். இந்த பாப், ராக், ஜாக்குன்னு என்னென்னவோ சொல்றாளே , அந்த மேற்கத்திய சங்கீதம் எல்லாம் கிராபிக்ஸ்ல மேகத்தையும் தென்றலையும் இன்ஸ்டன்ட்டா கொண்டு வர்ற மாதிரி.கொஞ்ச நேரம் இனித்து விட்டு அப்புறம் விண்ணு விண்ணுன்னு தலைவலிக்க ஆரம்பித்து விடும்.

கோ.மாமா: சரியா சொன்னேள்.. அப்புறம் சாதிஞ்சனே பத்தி சொன்னேள். அதுல மட்டும் ஏன் விதிவிலக்கா ஸ்வர சாஹித்யத்துக்கு அப்புறம் பல்லவியை எடுக்காம 'சமயானிகி தகு' ன்னு பாடறா?

சா.மாமி: சரிதான் மாமா. உண்மையில் மற்ற பஞ்சரத்ன கிருதிகளைப் போல, ரி சாதிஞ்சனே ன்னு தான் எடுக்கணும். இன்னும் சில பேர் அப்படி எடுத்துப் பாடுறா.ஆனால் 'சமயத்துக்குத் தகுந்த படி பேசிவிட்டான்' என்ற வரி கொஞ்சம் கவர்ச்சியா இருக்கறதாலே அதை ஹைலைட் பண்றா. அவ்ளோ தான்.சரி எந்தரோ மகானு பாவுலு அதுல ரெண்டாவது சரணம் பாடுங்கோளேன்.

கோ.மாமா: ரீ க ரி ரி க ரி ரி ஸ நி ..

சா.மாமி:சாஹித்யம் மட்டும் பாடுங்கோளேன்.

கோ.மாமா: மானஸ வனசர வர சஞ்சாரமு நிலிபி மூர்த்தி..

சா.மாமி: அது நிலிபி இல்லை சலிபி..

கோ.மாமா: 'மனமென்னும் குரங்கின் ஆட்டத்தை நிறுத்தி ' இதுதானே அர்த்தம்?

சா.மாமி: குரங்கின் ஆட்டத்தை யாரவது 'வர சஞ்சாரம்' அதாவது நல்ல 'திருநடனம்' அப்படின்னு சொல்வாளா?

கோ.மாமா: என்னவோ மாமி இத்தனை நுணுக்கமா யார் கவனிக்கிறா? பாடறவாளும் ஏதோ கடனேன்னு பாடறா. கேட்கறவாளுக்கும் அவ என்ன புடவை உடுத்தி இருக்கா ? வைரத்தோடு என்ன விலை இருக்கும்? காண்டீனில் கீரை வடை போட்டிருப்பாளா , ரிட்டர்ன் பஸ் கிடைக்குமா, யாராவது எழுந்து போறாளா நாமளும் போலாம் இத்தனை கவலைகள். இதுல அந்த வார்த்தை நிலிபியா சலிபியான்னு யாருக்குக் கவலை மாமி? ஏதோ ஒரு ..ஒ மன்னிச்சுக்கங்க மாமி.

சா.மாமி: சரி அந்த எழுத்தை சொல்லலையில்ல விடுங்கோ. போன வாரம் விகடன்ல ஒரு கவிதை படித்தேன்.அது நான் எத்தனை சத்தியம்!

கோ.மாமா: என்ன மாமி அது? எங்க வீட்டுல எல்லாம் இங்கிலீஷ் பத்திரிகை தான் வாங்கறா. கிழம் ஒண்ணு விகடன் கேட்டதே வாங்கிட்டு வரலாம்கற எண்ணம் யாருக்காவது இருக்கா? பெங்களூர்ல இருக்கற ரகு வாங்கிண்டு வந்தா தான் உண்டு.அவன் ஒருத்தனுக்கு தான் இன்னும் பழைய விஷயங்களில் அபிமானம் இருக்கு.

சா.மாமி: வாஸ்தவம் தான் மாமா.
ஆனால் இப்போ விகடன் பழையபடி இல்லை .முக்கால் வாசி சினிமா வாடை தான் வீசறது .அப்புறம் சொல்லறனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. ரிட்டையர் ஆயிட்டாலே மனுஷன் பாதி பிணம் தான்.

கோ.மாமா: சரியா சொன்னேள்..இதுல
தப்பா எடுத்துக்க என்ன இருக்கு? சரி கவிதையை சொல்லுங்கோ.

சா.மாமி: படிச்சே காட்டிடுறேன்.

நின்னே பஜன
=============
இந்த வருடம் கலைமாமணி கிடைக்குமா?
சபாவில் கூட்டமே இல்லையே?
ஏனோ இந்த வருடமும்
மத்தியான ஸ்லாட் தான் கிடைக்கிறது
மைக் சரியாக வேலை செய்யுமா?
புடவைக்கு மேட்சாக எடுத்து வைத்த
நெக்லஸ் மறந்து விட்டதே!
.
..
...
....
'ராமா, உன்னை அல்லால் ஒரு நினைவே இல்லை'
என்ற பொருள் கொண்ட கீர்த்தனையை
பாடகி ஆரம்பித்தார்...

கோ.மாமா: ஆமாம் மாமி. நல்ல கவிதை. இப்போ சாஹித்யத்தைப் பற்றி ரொம்ப சில பேர் தான் அக்கறை எடுத்துக்கறா. த்யாகய்யர் சொல்றாப்புல சங்கீதம்ங்கறது நாபியில் இருந்து இருதயம் தொண்டை வழியா மேலே ஏறி வரணும்.இப்ப நிறைய பேருக்கு உதட்டில் இருந்து தான் வர்றது. சமீபத்துல பின்னணிப்பாடகி ஒருத்தர் பாவயாமி ரகுராமம் பாடினார்.ராகம் எல்லாம் சரியாதான் இருந்துச்சு. ஆனா சாஹித்யம் தான் கேட்க முடியலை.சிலபேர் Paaவயாமி ன்னு பாடறா! பாவம்!

சா.மாமி: ஆமாம். எந்த பாஷையா இருந்தாலும் அர்த்தம் புரிஞ்சு பாடணும். நிறைய பேருக்கு ராக சுத்தம், ஸ்வர சுத்தம் வந்தாலும் சாஹித்ய சுத்தம் வர மாட்டேன்றது.

கோ.மாமா: சரி மாமி. சுஹாசினி சொல்றாப்டி தமிழ்ல இருந்தா சுலபமா புரிஞ்சிண்டு பாடிடலாம். 'மெப்புலகை கன்னதாவு நப்பு படக விர்ர வீகி' -ஏதாவது ஒண்ணு புரியறதா?

சா.மாமி: 'பணத்துக்காகவும் புகழுக்காகவும் பிறர் வீட்டு வாசலில் தவம் கிடந்து' ன்னு அர்த்தம்.

கோ.மாமா: இதை தான் புரந்தர தாசரும் 'தனதாசெகாகி நானு தணிகர மனேகள' ன்னு பாடறார்.

சா.மாமி: அதே தான். சரியாவே பாடினாலும் பாடகர்கள் செய்யும் இன்னொரு தப்பு நிரவல் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் சாஹித்யம். ராமா நன்னு ப்ரோவராவுல 'மெப்புலகை கன்னதாவு' அப்படீன்னு திரும்பத் திரும்ப நிரவல் பண்றா. எம்.எஸ்.ஸே கூட அதை தான் நிரவல் பண்றா.அது த்யாகராஜர் தன்னைப் பற்றி நொந்துகொண்டு பாடிய ஒரு வரி. அதைத் திரும்பத் திரும்ப பாடறது நிறைஞ்ச சபையில் அவ்ளோ நல்லா இருக்காது இல்லையா? பஞ்சமத்துல எடுப்புங்கரதால நி மெப்புலகை அப்படின்னு அழகா ஸ்வரம் போடலாம். ஆனா எடுப்பு சரியா வருதுன்னு எந்த வரியையும் நிரவல் செய்ய எடுத்துக்கக் கூடாது. ரி ராமா நன்னு ப்ரோவரா ன்னு பாடினாலும் அழகா இருக்குமோ இல்லையோ?

கோ.மாமா: அப்ப இறைவனைப் பெருமையா பேசும் வரிகள்ல நிரவல் செய்யணும் இல்லையா?

சா.மாமி: சரிதான். ஆனா அதுலயும் கவனமா இருக்கணும். சமஸ்கிருதத்துல பொதுவா ஒரு வார்த்தைக்கு முன்னாடி '௮' சேர்த்தா அதோட எதிர்மறை அர்த்தம் வந்துரும்.இப்ப ஒரு பாட்டுல ராகவேந்திர சுவாமிகளைப் பத்தி 'த்வைத மதாம்புதி சந்த்ர' அப்படின்னு பாடறான்னு வச்சிக்குவோம்.
த்வைத மதம் என்னும் சமுத்திரத்தில் எழும் சந்திரனேன்னு அர்த்தம். அதை நிரவல் செய்ய எடுத்துக்கக் கூடாது.நிரவல் பண்றப்ப நம்மை அறியாம அகாரம் சேர்ந்து 'அத்வைத மதாம்புதி சந்த்ர' அப்படின்னு பாடி ராகவேந்திரர் அத்வைதத்தை வளர்த்தார் ன்னு அர்த்தமே எசகு பிசகா மாறிடும்.

கோ.மாமா: கலக்கறேள் மாமி.சரி இன்னும் நிறைய பேரை அழைக்க வேண்டி இருக்கு,நான் இப்போ கிளம்பறேன்.. இன்னும் சங்கீதத்தைப் பற்றி நிறைய பேசலாம்.குட்டிப் பொண்ணு பிந்துவுக்கு மூணு வயசிலேயே சரளி வரிசை ஆரம்பிச்சுர வேண்டியது தான்.

சா.மாமி: ரொம்ப சரி. உங்க பேர் சொல்ல ஒரு பேத்தியாவது இருக்கட்டும். நம்ம சங்கீதம் நம்மோடவே முடிஞ்சுர வேண்டாம்.ஏம்மா சந்திரா, மாமாக்கு ஸ்ட்ராங்கா ஒரு பில்டர் காபி கொடும்மா...


கோ.மாமா: மாமி இது காபி சாப்பிடற டயமா? வேண்டாம் விடுங்கோ

சா.மாமி: வள்ளுவர் சொல்றதைப் போல செவிக்கு உணவு இல்லாதப்பவே பில்டர் காபி குடுச்சுக்கங்கோ.
இன்னிக்கு சாயந்திரம்
ஏதாவது ஆர்.டி.பி கேட்டு அப்புறம் சாப்பிடறதைக் கூட மறந்துடப் போறேள்.


சமுத்ரா



12 comments:

சமுத்ரா said...

UNMAIKAL said...

இந்த மாதிரி சண்டைகளுக்கெல்லாம் நான் வரவில்லை..
I 'm removing your comment

சிவகுமாரன் said...

தங்கள் இசைஞானம் வியப்பையும் , பொறாமையையும் ஒருசேரத் தருகிறது. நீங்கள் நன்றாகப் பாடுவீர்களா சமுத்ரா?

சமுத்ரா said...

நீங்கள் நன்றாகப் பாடுவீர்களா சமுத்ரா?
//ஏதோ ஓரளவு பாடுவேன்..

சார்வாகன் said...

nice keep it up!

பத்மநாபன் said...

இது தேநீர் பேச்சா.... ஃபுல் கட்டு மீல்ஸ் பேச்சு... உங்க இசை ஞானத்தை படித்து... போங்க ...சிவா முதல்லே எழுதிட்டார்...

adhvaithan said...

arumayaana pathivu... poora tyagarajarae taana...

i wish to sing neraval in "cheemalo bhramalo siva kesavaathulalo" in rama nannu brovaraa...

நெல்லி. மூர்த்தி said...

உண்மையைச் சொல்லவேண்டுமெனில், சங்கீதம் குறித்து அதிகம் தெரியாததினால் எப்படி விமர்சிப்பது என தெரியவில்லை. தங்கள் எழுத்துபிரவாகம் பிரமாதம். தங்களிடம் நான் எப்போதும் வலியுறுத்துவது போல் ’வலைப்பூ எனும் வட்டத்திற்குள் மட்டும் விட்டமிடாது எல்லையை பெருக்க’ முயற்சிக்கவும். இது பரந்து பட்ட உலகத் தமிழ் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சமுத்ரா said...

தண்டப்பயல்,சீமலோ பிரம்மலோ வுல நிரவல் செய்வீங்களா? அட..
முதல்ல பேரை மாத்துங்க..நன்றி மூர்த்தி சார்

adhvaithan said...

thandapayal thandapayal thaanga madhu.. actually ethukkum ubayogam illatha thandapayal..

adhvaithan said...

oru thadavai paadittu irukarapo ungalukku vantha athe ennam vanthathu.. ramarai erumbilum brahmathilum, sivan, kesavanilum anbudan kalanthu irukkiraan nu varnikkara idathai en niraval panna kudathunu.. athunaal muyarchi seithen.. sahithyamum azhagagavae irunthathu..

சமுத்ரா said...

தண்டப்பயல் What's ur email id?

அப்பாதுரை said...

enjoyable!