இந்த வலையில் தேடவும்

Friday, February 26, 2016

கலியன் -3

முதலில் இங்கே தான் எங்கோ பக்கத்தில் போய் இருப்பான் என்று நினைத்தோம்.

'பிரபா !'

'பிரபா !'

'பிரபா !'

 பதில் இல்லை. 

சிக்னல் கிடைக்காது என்று தெரிந்தும் விடாமல் அவனுக்கு போன் செய்தோம்.

'நோ யூஸ்!" என்றான் ஸ்டீபன். "ஹி லெஃப்ட் ஹிஸ் மொபைல் இன் தி டென்ட் "

எங்கள் சக்திக்கு உட்பட்ட வரை தேடினோம். ஊஹும்...

எங்களுக்கு காலை 10 மணி வரை பிரபா  கிடைக்கவில்லை. எங்கள் சந்தோஷம் எங்கள் உற்சாகம் எல்லாமே ஒரிரவில் பாழானது .நிலைமையின் விபரீதம் புரிந்ததும் கேர்ள் பிரண்டுகள் அப்பா கூப்பிடுவதாக கழன்று கொண்டார்கள். பத்து மணிக்கு சிக் மகளூர் போலீஸ் ஸ்டேஷனில் கம்பிளயன்ட் செய்தோம்.

இன்ஸ்பெக்டர் பெரிய மீசை வைத்திருந்தார். சிவப்பாக இருந்தார்.அவரது பேட்ச் அவர் பெயர் மஞ்சுநாதப்பா என்றது.

"திங்களு திங்களு இதே தொந்தரெ ..ஹுடுகரு ட்ரெக்கிங் பந்து நம் ப்ராணா திந்தாரே "

நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

"தமிளா ?" என்று கேட்டு விட்டு உடைந்து போன தமிழில் பேசத் தொடங்கினார்.

"இதைப் பாருங்கோ.. 8 மிஸ்ஸிங் கேஸு இன்னும் முடிக்காம இருக்கு. இப்போ இது ஒண்ணு . பசங்க சும்மா இருக்காம ஆர்வத்துல காட்டுக்குள போறாங்கள்.. கரடி இருக்கு. சிறுத்தை இருக்கு. எலும்பு கூட மிஞ்சாது. ஆழமான வேலீஸ் இருக்கு. நான்வெஜ் சாப்பிடற மரம் கூட இருக்கு! மலைப்பாம்பு இருக்கு! ட்ரெக்கிங் போறீங்களே, இதெல்லாம் கேள்விப் பட்டது இல்லையா!? முதல்ல எங்களுக்கு தகவல் சொல்லணும். யார் சொல்றா? சொன்னா ஒரு கைடை அனுப்பி வைப்போம்! பாரஸ்ட் டிப்பார்ட்மெண்ட் பர்மிஷன் இருக்கா? இருந்தா தான் கேஸை எடுத்துக்க முடியும் "

நாங்கள் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தோம்.

"அப்படி உட்காருங்கோ!"

ரகு கெஞ்சினான். "சார், எப்படியாச்சும் கண்டுபிடிச்சு...!"

"பர்மிஷன் காபி வேணும்!"

நாங்கள் அதையெல்லாம் வாங்கி இருக்கவில்லை.

ஸ்டீபன் உடனே  பர்சில் இருந்து ஒரு ஐந்தாயிரம் ரூபாயை எடுத்து நீட்டி "சார், பணத்தைப் பற்றி கவலை வேண்டாம்..ப்ளீஸ். அட் எனி காஸ்ட்..."

அவர் முறைத்தார். "யாருக்கு லஞ்சம் கொடுக்கப் பார்க்கிறீர்கள்" என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார் -என்று சொல்ல ஆசை தான். ஆனால் அலுங்காமல் வாங்கி பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.

இப்போது 5000 ரூபாய் பேசத் தொடங்கியது.

டீ கொண்டு வந்து வைத்த பையனிடம் "சாயபரிகே கூல் ட்ரிங்க்ஸ் தொகண்டு பா ஹோகு " என்றார்.

"மதிவே ஆய்தா, அவரிகே ?"

"..."

போட்டோ கேட்டார். அடையாளம் கேட்டார். ட்ரெஸ் கலர் கேட்டார்.

"போன் கொண்டு போயிருந்தாரா?"

"இல்லை சார், அதான் பிரச்சினை!"

"ஓகே..இப்பவே நான் செர்ச் ஆபரேஷன் ஸ்டார்ட் பண்றேன். ஒரு க்ரூப் காட்டுக்குள்ள தேடுவாங்க. இன்னொரு டீம் சிடி-ல. எல்லா ஸ்டேஷன்களுக்கும் டோல் கேட்டுக்கும் தகவல் அனுப்பறோம்...தட்ஸ் ஆல் வி கேன் டூ "

"ப்ளீஸ்,,!"

போலீஸுடன் நாங்களும் இரவு முழுக்கத் தேடினோம். காடுகளில், மலைகளில், குகைகளில், நீர் வீழ்ச்சிகளில்,குட்டைகளில் ...எங்கள் பிரபா கிடைக்கவே இல்லை.

ஆயாசமாக இருந்தது. அச்சமாக இருந்தது. அவன் பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்?


மறுநாள் காலை கொஞ்சமே கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் தேடினோம்.

காட்டுக்குள் ஒரு இடத்தில் புதர் ஒன்றின் அருகே சில உடைகள் கிடந்தன.

ஒரு டீ ஷர்ட், பேன்ட் , வாட்ச், உள்ளாடைகள், ஷூ, பெல்ட்...

"இதெல்லாம் உங்க பிரெண்ட் டுது தானா?"

அவனுடைய ஹாமில்டன் வாட்ச், யூ .ஸி .பி ஷூக்கள் இது பிரபாவுடையது தான் என்றன.

"ஆமாம்!" என்றோம்.

உடைகள் தான் கிடைத்தன . ஆள் கிடைக்கவில்லை. எங்கே போனான்? விலங்கு அடித்திருந்தால் அது வாட்ச் உட்பட எல்லாவற்றையும் கழற்றி விட்டா சாப்பிட்டிருக்கும்?இல்லை ஹாரர் படங்களில் வருவது போல யாரோ ஒரு சைக்கோ?...

பிரபா மர்மமான முறையில் எங்களை விட்டு மறைந்து போனான்.

மஞ்சுநாதப்பா இன்னும் ஒரு வாரத்தில் நல்ல தகவல் வரும் ஊருக்கு போங்கோ என்று நம்பிக்கை சொல்லி அனுப்பினார். ஒரு மாதத்திலும் வரவில்லை. போலீஸ் நாய்கள் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.

பிரபாவின் அப்பா அம்மா வந்து ஒரு பட்டம் அழுதார்கள். விதியை நொந்து கொண்டார்கள். எங்களை சபித்தார்கள். நாங்களே தேடிக் கொள்கிறோம் என்றார்கள்.

பிரபா கிடைக்கவே இல்லை.

ஒருநாள் ஆபீஸில் ரகு என்னை அழைத்தான்.

"எல்லாமே அந்த கலியனால் தான்" என்றான்.

"நீயே யோசி, நமக்கு இது நாள் வரை ஏதாவது பிரச்சினை வந்திருக்கா? காலேஜ் டைம்ல இருந்து எல்லாரும் ஜாலியா தானே இருந்தோம்? அந்த ஆள் வந்ததில் இருந்து எதுவுமே சரியில்லை. பணம் தான் கிடைச்சது. மத்தபடி எதுவுமே நல்லா இல்லை. வருணோட அப்பா போயிட்டார். சந்துருவோட அக்கா டைவர்ஸ் வாங்கினாங்க..இப்ப பிரபா மிஸ்ஸிங் ! அவரை முதல்ல வீட்டை விட்டு அனுப்பனும்!"

எனக்கும் அவன் சொன்னது சரியென்றே பட்டது.

அன்றிரவு கலியனிடம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் உங்களை எங்களுடன் வைத்துக் கொள்ள முடியாது என்றோம்.

மனிதர் அழுதார். "எங்கே போவேன்?" என்றார்.

"சரி, விதி விட்ட வழியே போகிறேன், நான் கொணர்ந்த பொன் மொத்தத்தையும் கொடுத்து விடுங்கள்!" என்றார். ஆள் கொஞ்சம் பேசக் கற்றுக் கொண்டு விட்டார்.

அதற்குப் பின் அவரை வீட்டை விட்டுப் போக ஸ்டீபன் அனுமதித்து இருப்பான் என்றா நினைக்கிறீர்கள்? 

ஆறு மாதங்கள் உருண்டோடி விட்டன. பிரபா கிடைக்கவில்லை. போலீஸிடம் இருந்து அதே புளித்துப் போன பதில்.எங்கள் பணபலத்தால்  அமைச்சர் வரை சென்று பார்த்தோம். யார் தேடினால் என்ன? ஆள் கிடைத்தால் தானே!?பணம் லட்சங்களில் வீணானது தான் மிச்சம்.

ஒருநாள் கலியன் என்னை அழைத்தார். சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

"உங்களிடம் சற்று உரையாட வேண்டும்!"

"சொல்லுங்க!"

ஏனோ தடுமாறினார். "இல்லை, நாளை சொல்கிறேன், ஏனோ பாதத்தில் நிரம்ப வலிக்கிறது!"

கலியனுக்கு மறுநாள்  கால் வீங்கிக் கொண்டது. நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.

அதே சரியானது.

அடிக்கடி சோர்வாக படுத்துக் கொண்டார்.

அடுத்த வாரம் முகம் முழுவதும் வீங்கிக் கொண்டது. நம்பர் ஒன் வரவே இல்லை என்றும் வந்தாலும் பயங்கரமாக எரிகிறது என்றும் சொன்னார். டாக்டரிடம் காட்டினோம். ப்ளட் டெஸ்ட் எல்லாம் எடுத்தார்கள்.

வீக்கம் அடிக்கடி தொடர்ந்தது.

ரிசல்ட் வந்த பிறகு டாக்டர்கள் அவருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதாயும், மாற்று சிறுநீரகம் பொருத்தினாலும் உயிர் வாழ 5% வாய்ப்பு தான் இருப்பதாயும் சொன்னார்கள்.

ஒரு கெட்ட நாளில் அல்லது நல்ல நாளில் கலியனும் எங்களை விட்டுப் போய் விட்டார். எங்களுக்கு அவர் மரணம் ஒருவித திருப்தியையே தந்தது என்று தான் சொல்ல வேண்டும்  .

இறப்பதற்கு முன் கலியன்  எங்களை அழைத்தார். வேலைப்பாடுகள் உள்ள ஒரு சிறிய மரப் பெட்டியைக் கையில் கொடுத்தார்.

"??!!!?"

"வைத்துக் கொள்ளுங்கள், பயன்படும்!"
 
அழுதார்!கண்களில் நீர் விடாமல் வழிந்து கொண்டிருந்தது. "கோதை! கோதை! "என்றார்.

எங்களிடம் என்னவோ சொல்ல வந்தார். நாக்கு குழறியது. "முடிச்சு, முடிச்சு "என்றார். எங்களை ஓடிப்போகும்படி செய்கை செய்தார்.

இந்த மர்ம மனிதர் யார்? காலப் பயணியா ? வேற்றுக் கிரக வாசியா? ஏன் எங்கள் வாழ்வில் வந்து குழப்பத்தை ஏற்படுத்தி இப்போது செத்துப் போயிருக்கிறார்?ஒன்றுமே புரியவில்லை.

இதெல்லாம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் உருண்டோடி விட்டிருந்தது. பிரபா கிட்டத்தட்ட இறந்தவர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டான். 

ஒருநாள் தலை வலிக்கிறது என்று ஆபீசில் அரை நாள் லீவு போட்டு விட்டு வீட்டுக்கு வந்தேன். வீட்டில் யாரும் இல்லை.

என் படுக்கைக்கு சென்றேன். அதன் மேல் கலியன் கொடுத்த பெட்டி இருந்தது.

இதை யார் இங்கே கொண்டு வந்து வைத்தார்கள்?

ஏதோ ஒரு உத்வேகத்தில் அதைத் திறந்தேன்.

பிரபாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது...



தொடரும்.....

Wednesday, February 24, 2016

கலியன்- 2

[ இது காலப்பயணம் பற்றிய கதை என்று நிறைய பேர் Guess செய்து இருந்தீர்கள். ரைட். guess செய்ய வேண்டும் என்பது தான் என் விருப்பம் :) கிளிஷே என்று தோன்றினால் படிக்காதீர்கள்.]



அந்த வினோத மனிதர் எதுவும் புரியாமல் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்....

ஸ்டீபன் எங்களைத் தனியாக அழைத்தான்.

"வெல் , ஹி லுக்ஸ் ஃபிஷ்ஷி. முடிந்த வரைக்கும் தங்கத்தை எடுத்துக்கிட்டு போலீஸ்ல சொல்லிடலாம். தெரியவா போகுது? லேட்டர் ,சம் ஒன் மைட் டர்ன் அப் லுக்கிங் ஃபார் ஹிம்!"

"கொஞ்சம் பொறு ஸ்டீபன் " என்றேன் நான். பிரபாவிடம் திரும்பி "அவரிடம் கொஞ்சம் தகவல் கறக்க முடியுமா பார்" என்றேன்.

அவர் சொன்ன தமிழில் சொன்னால் உங்களுக்குப் புரியாது. எனவே என் நடையில் சொல்கிறேன்.

"இவர் பெயர் கலியன். 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சார்ந்தவர். காயகல்ப மூலிகை எல்லாம் இல்லை. அந்தக் காலத்தை சேர்ந்த அமெச்சூர் விஞ்ஞானி ஒருவர் இவரை கால மெஷினில் ஏற்றி இங்கே சாரி, இப்போது அனுப்பி வைத்திருக்கிறார். எதிர்காலத்துக்கு ஒரு ஜாலி டூர்!

இதைக் கேள்விப்பட்டதும் ரகு துள்ளிக் குதித்து ஓடி வந்து விட்டான்.

"இதெல்லாம் சாத்தியம் தானா ரகு?" என்றேன்.

"கண்டிப்பா. இறந்த காலத்துக்குப் போவது சாத்தியம் இல்லை. குறைந்த பட்சம் கஷ்டம். எதிர் காலத்துக்கு போவது சாத்தியம் தான். ஆனால் 2000 வருடங்களுக்கு முன்பு அந்த டெக்னாலஜி இருந்திருக்கிறது ன்னு நினைக்கவே முடியலை!அமேஸிங் !"

சந்துரு குறுக்கிட்டான்.

"இதெல்லாம் சுத்த புல்ஷிட். ஆள் ஏதோ ஒரு சைக்காலாஜிகல் வியாதியால பாதிக்கப் பட்டிருக்கிறார். அவ்ளோ தான்!"

மொத்தத்தில் மிஸ்டர். கலியன் எங்கள் எல்லாருடைய ஆராய்ச்சி விருப்பத்தையும் பூர்த்தி செய்தார் . எனக்கு வரலாறு, ரகுவுக்கு பிசிக்ஸ், சந்துருவுக்கு சைக்காலஜி, ஸ்டீபனுக்கு பணம், பிரபாவுக்கு தமிழ், அவரின் கலப்படமில்லாத தங்கத் தமிழ்!"

"ரகு, இதைப் பற்றி கொஞ்சம் விரிவா சொல்லேன்!" என்றேன்.

ரகு என்ன சொல்லப்போகிறான் என்று கேட்கத் தயார் ஆனோம்.

"நம்ம பொதுவா காலம், இறந்த காலத்தில் இருந்து எதிர் காலம் நோக்கி மெல்ல மெல்ல நகருவதாக நினைக்கறோம்.ஆனால் அது உண்மை அல்ல. காலம் நகருவதே இல்லை. இயற்பியல் காலம் மற்றும் வெளியை இணைத்து ஸ்பேஸ் -டைம் என்கிறது. இது எல்லா இடத்துலயும் பிரபஞ்சம் பூராவும் தொடர்ச்சியா ஒரு வலை மாதிரி பரவிக் கிடக்கு. இறந்த காலத்தில் இருந்து எதிர் காலத்துக்குப் போவது இங்கே ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளிக்கு நகர்வது மாதிரி. இந்த ஸ்பேஸ்டைம் கண்டின்யூயம் -இதுல இறந்த காலத்துல நடந்தது எல்லாம் அப்படியே ஸ்பேஷி யல் பாயண்ட்ஸ் -ஆ அப்படியே இருக்கு. ஒரு விதத்துல நம்முடைய இறந்த காலம், எதிர்காலம் எல்லாம் ஏதோ ஒரு ஒருங்கிணைந்த ஸ்பேஸ்டைம்ல இப்ப நடந்துட்டு இருக்கு. உதாரணமா, இயேசு பிறந்தது, இந்தியாவுக்கு கஜினி படையெடுத்து வந்தது, பாபர் ஆண்டது, தாஜ்மஹால் கட்டப்பட்டது, காந்தி தண்டி யாத்திரை போனது, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது  இதெல்லாம் இன்னும் ஒரு நுட்பமான தளத்துல இன்னும் நடந்துட்டு இருக்கு!"

"இண்டரெஸ்டிங் " என்றான் ஸ்டீபன்.

ரகு மேலும் தொடர்ந்தான்.

"டிரெயின்ல போயிட்டு இருக்கோம். அப்ப ஒரு மரமோ மலையோ நம்மை விட்டு நகர்ந்து போவது மாதிரி தோணுது.

உண்மையில் அது அங்கே தான் இருக்கு. நகர்வது இல்லை. வேறொரு வியூ பாயிண்டில் அந்த மரம் நிலையா இருக்கு. அது மாதிரி நம்முடைய பிரேம் ஆப் ரிபெரன்ஸ் ல காலம் நகர்வது மாதிரி இருக்கு. இன்னொருத்தருக்கு காலம் என்பது நிலையான இன்னொரு பரிமாணம் தட்ஸ் ஆல்."

"இதெல்லாம் தத்துவம் மாதிரி இருக்கு. உண்மையில் இதை எப்படி டெக்னாலஜி வாயிலா அச்சீவ் பண்ண முடியும்?" என்றேன்.

"வெல் .இதற்கு நாம நம்முடைய இந்த யூஷுவல் வியூ பாயண்ட் ல இருந்து வெளியேறனும் . இதை அவங்க எப்படி அச்சீவ் பண்ணாங்களோ தெரியலை. இவர் கிட்ட கொஞ்சம் பேசி இவருக்கு டெக்னிகலா எதாச்சும் தெரியுதா-ன்னு பாக்கணும்"

பிரபா அவரிடம் திரும்பி "அய்யா, எப்படி இந்தக் காலத்துக்கு வந்தீர்?" என்றான்.

"என்னால் பூடகமாகவே சொல்ல இயலும்!"

" நேரடியா சொன்னாலும் விளங்கிறவா போகுது!" என்றான் சந்துரு.

"மூன்றிலாது நான்கில் ஐந்தில் ஆறில் 
 முடிச்செனக் காலம் தனக்குள் சுருண்டதே
தோன்றுமோ உனக்கது திறவுகோல் இன்றியே
திணித்ததை கிழித்தெறி திறந்திடலாமே!"

"சுத்தம் "என்றான் ஸ்டீபன்.

"இது என்ன ஏதோ சித்தர் பாட்டு மாதிரி இருக்கு!" என்றான் ரகு.

"என்னை அனுப்பியவர் எழுதியது!"

பிரபா அதன் லிடெரல் மீனிங்கை சொன்னதும் ரகு கண்கள் விரித்தான்.

"வாவ், 5,6,7 இதெல்லாம் ஸ்ட்ரிங் தியரியின் எக்ஸ்ட்ரா ஸ்பேஷியல் டைமென்ஷன்ஸ் . திணித்தது ன்னா ப்ளாக்-ஹோல் மோஸ்ட்லி இவர் குவாண்டம் teleportation மூலம் இப்ப வந்திருக்கணும் "

"எப்படியோ இங்கே வந்திட்டார்,  விடுங்களேன்!" என்றான் ஸ்டீபன்.

"நான் இவரை ஹிப்னடைஸ் பண்ணி விஷயத்தை கறக்க முடியுமா பார்க்கறேன். டைம் டிராவல் எல்லாம் புல் ஷிட் " என்றான் சந்துரு.

எங்களுக்குள் மெதுவாக ஒரு conflict உருவாக ஆரம்பித்திருந்தது.

ரகு அவரை ஒரு இயற்பியல் விஞ்ஞானியிடம் ஒப்படைத்து விடலாம் என்றான்.

சந்துரு தடுத்தான்.

"ரகு, ஆள் பார்க்கவே அப்பிராணியா இருக்கார். இவரை உலகம் மியூசியத்தில் வைத்து காட்சிப் பொருளாக்க உனக்கு விருப்பமா?"

கடைசியாக நாங்கள் அவரை ஒருமனதாக எங்களுடன் வைத்துக் கொள்ளத் தீர்மானித்தோம். அவர் சமையல் நன்றாக செய்வார் என்று அறிந்தோம். கொஞ்ச காலம் சங்ககால சமையலை சாப்பிட்டு உடம்பைத் தேற்றலாமே. வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு ஆர்கானிக் ஸ்டோர் இருந்தது!

சில மாதங்கள் கடந்து விட்டிருந்தன.

கலியன் எங்களுடன் நன்றாகவே கலந்து விட்டிருந்தார். வேட்டி சட்டை அணியக் கற்றுக் கொண்டார். டி .வி. பிரிட்ஜ் போன்றவைகளை இயக்கக் கற்றுக் கொண்டார்.தற்கால தமிழை சீக்கிரம் கற்றுக் கொண்டு விட்டார். எங்களுக்குத் தான் அவர் தமிழ் வரவில்லை. ருசியாக சமைத்தார். சுறுசுறுப்பாக இருந்தார். வீட்டை சுத்தமாக வைத்திருந்தார். 


லேப்டாப்-பை இயக்கக் கூடக் கற்றுக் கொண்டார். திருக்குறள் முழுவதும் அதில் வருவதைக் கண்டு வியந்தார்.

"அய்யன் வள்ளுவர் பனை ஓலைகளை வைத்துக் கொண்டு இடர்ப்பட்டார்!" என்றார்."இது கண்டால் எத்துனை மகிழ்வார்?"
 
சுருக்கமாக சொன்னால் கலியன் சம்பளம் வாங்காத தங்கம் கொட்டிக் கொடுத்த வேலைக்காரர்!"

"எங்கிருந்தோ வந்தான்; என் பெயர் கலியன் என்றான்!

இங்கிவனை யான் பெறவே ...."

ஸ்டீபனின் சாமார்த்தியத்தால் தங்கம் சந்தேகம் வராதபடி கொஞ்சம் கொஞ்சமாகப் பணமாக மாறி வந்தது. சங்க காலத்து சொக்கத் தங்கம் என்றால் சும்மாவா!

எங்கள் லைப் ஸ்டைல் உயர்ந்தது. கார் வாங்கி விட்டோம். நிறையக் குடித்தோம். கேர்ள் பிரண்டுகள் கிடைத்தார்கள். நிறைய ஊர் சுற்றினோம். வாழ்க கலியன்..

ஒருநாள் 5 பேரும் வீக்-எண்டுக்கு கர்நாடகா சிக் மகளூரு அருகே ட்ரெக் செய்யலாம் என்று தீர்மானித்தோம்.

கலியனையும் எங்களுடன் அழைத்துச் சென்றோம், காரில்...சமைக்க ஆள் வேண்டுமே..ஸ்டீபனும் சந்துருவும் அவர்கள் கேர்ள் பிரண்டுகளை கூட அழைத்து வந்தார்கள்.

காரில் உற்சாகமாகப் பயணித்தோம்.  கலியன்,அந்த குதிரை இல்லாத அதிவேக வண்டியை அவர் மிகவும் ரசித்தார். மனிதர்களை, நகரங்களை விநோதமாகப் பார்த்துக் கொண்டு வந்தார்.

காரை கீழே ஒரு ஹோட்டலில் விட்டு விட்டு ,சனிக்கிழமை அதிகாலையில் காலை முள்ளானகிரி மலை ஏறத் தொடங்கினோம். மாலையில் மேலே இருந்தோம். அங்கே இருந்த சிற்றோடையில் உற்சாகமாகக் குளியல் போட்டோம்.

"பரவாயில்லையே..இன்னும் இந்த மாதிரி இடங்களை விட்டு வைத்திருக்கிறீர்கள்!" என்றார் கலியன்.

இரவு கலியனின் அருமையான வரகரிசி சாதம், கீரைக் கூட்டு  கிழங்குக் கறி , மிளகு ரசம், பானகம்,..

தீமூட்டி குளிர் காய்ந்தோம். போலீஸ் கண்ணில் படாமல் கொண்டு வந்த உ .பா அருந்தினோம். டேன்ஸ் ஆடினோம்.

டெண்டில் படுத்து உறங்கினோம்.

மறுநாள் காலைப்பொழுது ரம்மியமாக விடிந்தது. அப்போதுதான் அந்த விஷயத்தை கவனித்தோம்.











எங்களுடன் உறங்கிக் கொண்டிருந்த பிரபாவைக் காணவில்லை!



தொடரும்..

Thursday, February 18, 2016

கலியன் -1



தூங்கி விட்டேன் போலிருக்கிறது. அதுவும் டெஸ்க் -கிலேயே. மத்தியானம் சாப்பிட்ட ஆந்திரா மீல்ஸின் மயக்கம். கண்களைக் கசக்கிக் கொண்டு அருகில் இருந்த ஸ்மிதா-வைப் பார்த்து 'சாரி' என்றேன். "இட்ஸ் ஓகே டியூட்..கேரி ஆன் "என்று புன்னகைத்தாள் .இது என்ன வேறு ஏதோ ஒரு உலகத்தில் வாழ்ந்தது போல! கொஞ்சம் மங்கலாக ஏதேதோ நினைவில் இருக்கிறது. இதெல்லாம் உண்மையா? ஆம். பிரபாவுக்கு என்ன ஆயிற்று? ஈஸ் ஹி ஓகே !உடனே பிரபாவுக்கு போன் செய்து "உனக்கு ஒண்ணும் இல்லையே!?" என்றேன். அவன் குழம்பிப் போய் "என்னடா, இப்பவே சரக்கு போட்டுட்டியா? திடீர்-ன்னு கால் பண்ணி "உனக்கு ஒண்ணும் இல்லையே? ன்னு கேட்கிறே?என்றான்.
"ஒண்ணும் இல்லை!" என்றேன். "சரி, ஈவ்னிங் பார்க்கலாம், சீக்கிரம் வந்திரு!"

அன்று வெள்ளிக்கிழமை. சீக்கிரமே வீட்டுக்குப் போகலாம்  என்று பார்த்தோம். முடியவில்லை. சொட்டைத்தலை மானேஜர் வேண்டுமென்றே 6:45 மணிக்கு ஸ்டேடஸ் மீட்டிங் வைத்திருந்தார். தேவையே இல்லாத மீட்டிங். அந்த வாரம் முழுவதும் எத்தனை ஆணிகளைப் பிடுங்கினோம்.வரும் வாரம் எத்தனை ஆணிகளைப் பிடுங்கப் போகிறோம் என்றெல்லாம் சொல்லும் மீட்டிங். 

மீட்டிங் முடித்து விட்டு நானும் ரகுவும் கிளம்பினோம். வெள்ளிக்கிழமை இரவு என்றால் சரக்கு கண்டிப்பாக இருக்கும். மொட்டை மாடிக்கு சென்று விடிய விடிய கதை பேசியபடியே சரக்கு அடிப்போம். போகிற வழியில் நானும் ரகுவும்  சரக்கு வாங்கிக் கொண்டோம். பீர், வோட்கா, வைன் , விஸ்கி என்று எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாய்ஸ். Well எங்கள் பிளாட்டில் 6 பேர் தங்கி இருக்கிறோம். 3 பி.ஹெச் .கே. 25000 ரூபாய் வாடகை அழுகிறோம் .சோளிங்கநல்லூரில் ஆபீசுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில்.சகல வசதிகளுடன் பிளாட். எங்களுக்கு ஏரியா பிடித்திருந்தது. பக்கத்தில் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் வேறு. ஹிஹி..  நான், ரகு, பிரபாகர், சந்துரு, ஸ்டீபன், மற்றும் வருண். . நாங்கள் ஐவரும் பள்ளியில் இருந்தே நண்பர்கள். வருண் மட்டும் பின்னால் வந்தவன்.  எல்லாரும் ஐ.டி .யில் இருந்தாலும் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட ஆர்வம்..எனக்கு வரலாறில் ஆர்வம்.மேலும் சிறுகதைகள் எழுதுவேன். ரகு, ஃபிசிக்ஸ் ஜீனியஸ். பிரபாகர் தமிழ் ஆர்வம் கொண்டவன். சந்துரு சைக்காலஜியில் ஆர்வம் கொண்டவன். ஸ்டீபன் எப்போதும் ஃபினான்ஸ்., எகனாமிக்ஸ் என்று பேசிக் கொண்டிருப்பான். கொஞ்சம் பணப் பைத்தியம். Well , எங்களுக்கு வருண் ஒரு விளங்காத புதிராக இருந்தான். ஸ்டீபனின் நண்பனின் நண்பன் என்று எங்களுக்கு வந்து அறிமுகம் ஆனான். எங்களுக்கு ரூம் மேட் தேவையாய் இருந்ததால் அவனை சேர்த்துக் கொண்டோம். ஒருநாள் எல்லோரும் குடிபோதையில் இருக்கும் போது நான் ஓர் உண்மையை சொல்லப் போகிறேன்; நான் "கே" என்றான். எங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. இப்போது பழகி விட்டது.எங்களிடம் எல்லை மீறாத வரை சரி! தனக்கு  பாய் பிரண்ட் ஒருவனை முழு மூச்சில் தேடி வருவதாக சொன்னான். கலிகாலம்!!!


ஒன்பது மணி சுமாருக்கு நண்பர்கள் ஐந்து பேரும் கூடினோம். வருண் வரவில்லை. பொதுவாக அவன் அளவாக ஒயின் மட்டுமே அருந்துவான். அதுவும் ஒவ்வொரு சமயம் மட்டுமே. புட் பாண்டாவில் டின்னர் ஆர்டர் செய்தோம். 20 நிமிடத்தில் வந்தது. சரக்கை மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்று அடிக்கத் தொடங்கினோம். ஊர்க்கதை , உலகக்கதை எல்லாம் பேசியபடியே. லேடீஸ் ஹாஸ்டல் பிகர்கள் சில அவர்கள் மொட்டை மாடியில் உலாவிக் கொண்டிருந்தன. எங்களுக்கு அது ஒரு டானிக் மாதிரி! ஹிஹி! மணி 11:30. ஒரு பெக் உள்ளே போனதும் சிகரெட் தீர்ந்து விட்டதை உணர்ந்தோம். தெருக்கோடியில் இருக்கும் பெட்டிக்கடை ஒன்று சில சமயங்களில் திறந்திருக்கும். அங்கே போய் வாங்கி வரலாம் என்று நானும் பிரபாகரும் சென்றோம்.பேட் லக். கடை மூடி விட்டிருந்தது. சரி எதிர் பிளாட் பேச்சுலர்களிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று திரும்பி வந்தோம்.

பெட்டிக்கடை சந்தில் அவர் நின்றிருந்தார்.

ஏதோ நாடகத்தில் நடித்து விட்டு அப்படியே வந்திருக்க வேண்டும். பளபளக்கும் சங்க கால உடைகளை அணிந்திருந்தார். உடலெங்கும் நகைகள். முழுக்க வியர்த்திருந்தார். பேந்தப் பேந்த முழித்தார்.வயது ஒரு நாற்பது இருக்கலாம்.

"சார், ஏதாவது வேணுமா?" என்றான் பிரபா.

அவர் பயந்தார். பதில் சொல்லாமல் விழித்தார். பார்வையில் ஒரு இன்னசன்ஸ் தெரிந்தது.

நாங்கள் அவர் அருகில் இன்னும் நெருங்கி "சார், எனி ப்ராப்ளம்?" என்றோம்.

அவர் இன்னும் பயந்தார்.

"என்னடா இது பேயைப் பார்த்த மாதிரி பயப்படறார்!" என்றான் பிரபா.

"தலைக்கு எண்ணெய் வை, எண்ணெய் வைன்னு எத்தனை தபா சொன்னேன்!" நான் ஒரு மொக்கை ஜோக்கை அடிக்கத் தவறவில்லை.

சாலை ஜன நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது. தெரு விளக்குகள் கடமை உணர்ச்சியுடன் போட்டான்களை உமிழ்ந்து கொண்டிருந்தன. நல்லவேளை தெருநாய்கள் கண்ணில் அவர் விழவில்லை. குதறி இருக்கும்!

"சார், டோன்ட் பி ஸ்கேர்ட் , வி ஆர் ஹியர் டு ஹெல்ப் யூ" என்றேன் நான் வாஞ்சையாக.

அவர் இப்போது தயங்கித் தயங்கிப் பேசத் தொடங்கினார். நடுங்கும் குரலில்.

"தாங்கள் யார், எனது பொறியைக் கண்டீரோ? அய்யன்மீர்!"

"சரிதான்" - இது கீழ்ப்பாக்கம் கேஸ். நம்ம சந்துருவைக் கூப்பிடுவோம்" என்றான் பிரபா.

"சும்மா இருடா " என்றேன்.  ஏனோ அவரது பெர்சனாலிடி பைத்தியம் என்று சொல்லவில்லை. கண்களில் ஒரு தெளிவு இருந்தது.

அவர் பொறி பொறி என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

"பேல் பூரி கேட்கறார் போல டா!" என்றான் பிரபா. " பையா, பேல் பூரி அப் நஹி, கல் மில்தா !"

அவர் கிட்டத்தட்ட அழுது கொண்டிருந்தார்.

"சார் உங்க பேரு?"

அவருக்குப் புரியவில்லை.

"அய்ய , நும் நாமம் யாதோ?" என்றான் பிரபா.

அவர் உற்சாகமாகி "கலியன்" என்றார் .

இப்போது படபடவென்று பேசினார்.

"எப்பிறப்பின் நல்வினையோ யான் உம்மைக் கண்ணுற்றேன். இதுகாறும் இம்மக்களின் மொழியை அறிவிலேற்ற அளவுறா இடருற்றேன்! இந்நாடு யாது? இம்மக்கள் யாவர்? இக்காலம் எது? "

கண்டிப்பாக அவர் தமிழ் ஆசிரியராக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.எனக்கு அவர் சொன்னதில் முக்கால்வாசி புரியவில்லை. பிரபா தமிழ் படித்தவன் என்பதால் தலையாட்டினான். ஏதோ தமிழில் சொன்னான்.

இதற்குள் எங்களைத் தேடிக்கொண்டு மற்ற நண்பர்கள் வந்து விட்டிருந்தார்கள்.

"என்னடா பண்றீங்க இங்க, மச்சான்?!"

ஸ்டீபன் அவரைப் பார்த்து விட்டான்.

"வாவ், ஈஸ் திஸ் ஆல் கோல்ட்?"

நாங்கள் அவர் அணிந்திருந்த குண்டு குண்டு நகைகளை முதன் முறையாகக் கவனித்தோம். மஞ்சள் மஞ்சளாக மின்னிக் கொண்டிருந்தது. கண்டிப்பாக கவரிங் தான். இந்தக் காலத்தில் நட்ட நடு ராத்திரியில் நானெல்லாம் ஒரு குட்டி தங்க  மோதிரம் கூட அணிந்து வெளியே போக மாட்டேன். ஒருவேளை மரை கழன்ற கேஸ் என்று நினைக்கத் தோன்றியது.

"லுக்ஸ் கோல்ட்!, ஹூ ஈஸ் திஸ் ஃபன்னி ஃபெலோ?"

பிரபா அதுவரை நடந்ததை விவரித்தான்.

"ஹி டாக்ஸ் ஒன்லி டமில் ? ஆஸ்க் ஹிம் ஈஃப் தட் ஈஸ் கோல்ட்!"

பிரபா அவரிடம் திரும்பி , "அய்யா, இவை எல்லாம் தங்கமா?" என்றான்.

விழித்தார்.

அதை சுட்டிக் காட்டி "பொன்னோ?" என்றான்.

"அதிலென்ன ஐயம் ? " என்றார். "நும் ஆடைகள் ஏன் இவ்வாறு உள்ளன? நும் அணிகலன்கள் எங்கே? பட்டாடைகள் எங்கே!? பொன்னைக் கண்டதும் ஏன் இவ்வாறு விழிகள் வியப்பெய்துவீர் ? எம் நாட்டில் வண்ணானும் அணிவானே இவற்றை!"

நாங்கள் ஒருமனதாக  அவரை எங்கள் பிளாட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தோம்.

முதலில் மறுத்தார். பின்னர் பிரபாவின் தமிழின் மேல் நம்பிக்கை கொண்டவராக எங்களைப் பின் தொடர்ந்தார்.

தெரு விளக்குகளை, பிளாட்டுகளை , ஏதோ வினோத ஜந்துகள் போலப் பார்த்தார்.

"இது எந்த சதகம் ?" என்றார். எங்களில் யாருக்கும் கேள்வியே புரியவில்லை. பிரபா  உட்பட.

வீட்டுக்கு வந்தார். ஒவ்வொரு அடியையும் பிரயத்தனப்பட்டு எடுத்து வைத்தார். லிப்டில் ஏற மறுத்தார்.

"என்ன உண்கிறீர்கள்?" என்றான் பிரபா  .புரியட்டுமே என்று சைகையும் காட்டினான்.  ஸ்டீபன் , "கிவ் ஹிம் சம் பீட்சா" என்றான். சந்துருவும் ரகுவும் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"கேழ்வரகுக் களி , நெற்சோறு "

"சரி தான், இதெல்லாம்  புட் பாண்டவில் கிடைக்காதே!"

"லீவ் ஹிம் அலோன் பார் சம் டைம், காலைல தெளிஞ்சுரும், மஸ்ட் பி ஸ்டோன்ட் , ஹை ஆன் வீட் " என்றான் ஸ்டீபன்.

எனக்கு அப்படித் தோன்றவில்லை. அவரிடம் ஏதோ genuineness தெரிந்தது.

அவருக்கு உபசாரம் நடந்தது. அவரது அணிகலன்கள் கழற்றி வைக்கப்பட்டன. தண்ணீர் கொடுத்தோம். தயங்கியபடியே குடித்தார். வாந்தி எடுத்தார். வைகை நீரா இப்படியானது என்றார். ஆப்பிள் கொடுத்தோம். இது என்ன பழம் என்று கேட்டார். கடைசியில் ஆச்சரியமாக பீட்சாவை கொஞ்சம் ருசித்து சாப்பிட்டார். எல்லாவற்றையும் ஒரு குழந்தை போல விநோதமாகப் பார்த்தார். ஃபேனை, மைக்ரோவேவ் அவனை, டேபிளை, கடிகாரத்தை, லேப்டாப்பை, டி .வியை!

"இது போல உண்டிலேன்!" என்றார்.  

பீரைக் காட்டி "அஃதென்ன வண்ண நீர்?" என்றார். 

"சரிதான், போதை மருந்து போதாதுன்னு இப்ப இது வேறயா?" என்றான் ரகு.

"ஐயா , அது ஒரு வித சோமபானம், கள் !" என்றார்.

"அருந்திலேன் , நேற்று தான் வள்ளுவப் பெருந்தகையை சந்தித்தேன். கள்ளுண்ணாமை எழுதிக் கொண்டிருந்தார்!"

நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

"இது பாண்டிய நாடோ?" என்றார்.

"பல்லவ நாடு" என்றான் பிரபா.

சந்துரு அலுத்துக் கொண்டான். "மச்சான், ஜாலியா சரக்கு அடிக்கலாம்னா ஏதோ ஒரு பைத்தியத்தைக் கூட்டி வந்து கதை பேசிட்டு இருக்கீங்களே, அயிட்டம் எதாச்சும் ரெடி பண்ணுவியா ...." உளறினான்.

"என்ன கூறுகிறார்?"

"கணிகையர் வேண்டுமாம் அவருக்கு" என்றான் பிரபா.

"அய்யகோ, அய்யா பிறன்மனை நோக்காமை வேண்டும். தங்கள் மனையாள் எங்கோ?"

"அய்யா, அவருக்கு மணம் ஆகவில்லை!"

"அகவை?"

"முப்பது!"

"என்ன கூறுகிறீர், எனக்கு அகவை நாற்பது , என் மருமகள் கர்ப்பவதியாகி இருக்கிறாள்!"

"..."

ரகுவும் சந்துருவும் மேலே போய் விட்டார்கள். நானும் ஸ்டீபனும் பிரபாவும் அவரை என்ன செய்வது என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

"போலீஸ் ல சொல்லிடுவோம்!" என்றான் பிரபா.

"ஃபூல். அத்தனையும் தங்கம்,,, கோடிக்கணக்கில் போகும்,,,ஈஃப் ரியல்..லெட்ஸ் ராப் ஹிம் ஆஃப் ஹிஸ் கோல்ட் ஃபர்ஸ்ட் ....ஹி வுட்ன்ட் ரியாக்ட்  " என்றான் ஸ்டீபன்.

அந்த வினோத மனிதர் எதுவும் புரியாமல் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்....


தொடரும்...