இந்த வலையில் தேடவும்

Thursday, December 22, 2011

கலைடாஸ்கோப்-47

லைடாஸ்கோப்-47 உங்களை வரவேற்கிறது

இந்த லைடாஸ்கோப்-பை ஒரு கவிதையுடன் ஆரம்பிப்போம்

1
==
இவர்களும் தெய்வம்
----------------------

இவர்களும் தெய்வம்

காலை நேர கூட்ட நெரிசல்
நகரப் பேருந்தில்
ஐநூறு ரூபாய் நீட்டுகையில்
புன்னைகை மாறாமல் மீதி
சில்லரை எண்ணித்தரும் கண்டக்டர்...

நண்பர்களுடன் கூத்தடித்துவிட்டு
நள்ளிரவு தாண்டி வீடு திரும்பி
கதவு தட்டுகையில்
உடனே திறந்து
'சாப்பிட்டீங்களா' என்று கேட்கும் மனைவி

பயத்துடனும்
பதட்டத்துடனும்
ஆஸ்பத்திரி செல்கையில்
புன்னகை முகத்துடன்
'ரிலாக்ஸ்' என்று ஆறுதல் தரும் டாக்டர்

தனியான ரோட்டில்
தவித்து நின்று 'லிப்ட்' கேட்கையில்
உடனே நிறுத்தி
ஏற்றிக் கொள்ளும் இளை
ர்

எதிர்பாராமல் விடுமுறை
எடுத்துத் திரும்பிய போதும்
எரிந்து விழாமல்
HOW WAS THE VACATION என்று கேட்கும்
மேனேஜர்

1 .1
====

ஹலோ! என்னது? சாரி இவர்களையெல்லாம் இந்த லிஸ்டில் சேர்க்க முடியாது.

- வீட்டுக்கு வந்த உடனேயே கிளம்பி விடும் விருந்தாளி
- வார இறுதியில் ஊருக்கு கிளம்பி விடும் மனைவி
- Progress Report டில் கேள்வி கேட்காமல் கையெழுத்துப் போடும் அப்பா
- பேங்க்கில் நம் முகத்தைப் பார்த்து பதில் சொல்லும் வங்கி ஊழியர்


2
==

இன்று தான் பண்டிகை. உங்களிடம் இருக்கும் சிறந்த ஆடைகளை இன்றே அணியுங்கள் -யாரோ

மனிதர்களைப் பொதுவாக இரண்டு பிரிவுகளில் கொண்டுவரலாம்.(1 ) எதிர்காலத்தைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்பவர்கள்.(2 ) அப்படி அலட்டிக்கொள்ளாமல் நிகழ்காலத்தை அனுபவிப்பவர்கள்.

இன்று பெருகி வரும் ஜோசியக்காரர்களாலும் , ஷேர் மார்க்கெட், இன்சூரன்ஸ் ஆசாமிகளாலும் டைப்-2 மக்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள் என்று தோன்றுகிறது.

ஒரு ஜென் ஞானியைப் பார்த்து நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதன் காரணம் என்ன? என்று கேட்க அவர் இப்படி சொல்கிறார்."என் எதிர்காலத்தைப் பற்றி இரண்டு சாத்தியக்கூறுகள் தான் இருக்கின்றன. ஒன்று: அது மிக மோசமாக , துன்பங்கள் நிறைந்ததாக இருப்பது.அப்படி இருந்தால் அதைப் பற்றி நான் இப்போதே ஏன் கவலைப்பட வேண்டும்? எதிர்காலம் தான் நன்றாக இல்லை. அதனால் இந்தக் கணத்தை முழுவதுமாக அனுபவித்து நிகழ்காலத்திலாவது மகிழ்ச்சியாக இருக்கலாமே என்று நினைப்பேன். இரண்டாவது , நம் எதிர்காலம் மிகவும் ஆனந்தமாக , துன்பங்கள் இன்றி இருப்பது.
சரி, அப்படி இருந்தால் சந்தோஷம் தானே, நிகழ்காலத்திலும் மகிழ்ச்சியாக இருப்பேன்"

ஆனால் இப்படிப்பட்ட பக்குவம் நம்மில் பலபேருக்கு இருப்பது இல்லை.எதிர்காலத்தைப் பற்றிய கவலை எல்லாருக்கும் இருக்கவே செய்கிறது . எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள். (திட்டமிடுங்கள்) ஆனால் கவலைப்படாதீர்கள் என்று சொல்வார்கள். அதாவது நாளை காலை என்ன டிபன் செய்யலாம் என்று சிந்தித்து உப்புமாவா அப்படியென்றால் ரவை, ப.மிளகாய், கருவேப்பிலை,கொத்தமல்லி, இஞ்சி இதையெல்லாம் இன்றே வாங்கி வைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.ஆனால் 'உப்புமா நன்றாக வருமா? அவருக்கு பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது? அடியில் தீய்ந்து போய் விடுமா?உப்பு ஜாஸ்தியாகப் போட்டு விடுவோமா? என்றெல்லாம் ராத்திரியே ஓவராகக் கவலைப்படுவது வேண்டாம்.

நாம் பள்ளியில் படித்த காலத்தில் நமக்கு இந்த இரண்டு வகை நண்பர்களும் இருந்திருப்பார்கள்.அடுத்த மாதம் பரீட்சை என்றால் இன்றைக்கே அவர்களுக்கு கைகால் உதற ஆரம்பித்து விடும்.'The dates in the Calendar are closer than they appear' என்று நினைப்பவர்கள் அவர்கள் . அடுத்து, நாளை பரீட்சை என்ற போதும் இன்று கூலாக இருப்பவர்கள்.[அரைகுறையாகப் படித்தவனுக்கு தான் பயம் இருக்கும். முழுதாகப் படித்தவனுக்கும் எதுவுமே படிக்காதவனுக்கும் பரீட்சை பயம் நஹி]

இவர்கள்,
நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பணும்
நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்
நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதனுக்கு என்று ஜாலியாகப் பாடும் ஐஸ்வர்யாராய் டைப்.

இரண்டு வகைகளிலும் Extreme ஆகப் போகாமல் இருப்பது நல்லது. நாளைய கவலையில் இன்றின் இனிமைகளை இழந்து விட்டு பைத்தியம் ஆகவும் வேண்டாம். Tomorrow doesn't exist என்று ஹிப்பி போல திரியவும் வேண்டாம். நாளைக்கு என்று சாக்ஸை இன்றைக்கே துவைத்து உலர்த்தி விடுங்கள். உங்களுக்காக இல்லாவிட்டாலும் பக்கத்தில் உட்காருபவருக்காகவாவது சாக்ஸைத் துவைத்து அணியவும்.

4
==

சன் டி.வியில் வெள்ளிக்கிழமை தோறும் காலை எட்டுமணிக்கு 'இனி அச்சம் இல்லை' நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். 'கோபுடோ' கிருஷ்ணமூர்த்தி என்பவர் கராத்தே எனப்படும் தற்காப்பு கலையின் நுணுக்கங்களை பொறுமையாக , 'பாருங்கல், இதை நன்றாகப் பயிற்சி செய்யுங்கல், ஆனால் உங்கலுக்கு ஒரு சரியான கராத்தே பல்லியில் பயிற்சி அவசியம் (?) என்பதை மறந்து விடாதீர்க
ல் என்று அலகு தமிழில் மன்னிக்கவும் அழகு தமிழில் உரையாற்றுவார். வேலைக்குப் போகும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்( + ஆண்கள்) இந்த தற்காப்பு உத்திகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது தான். btw, எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்:-

தமிழ் சினிமாக்களில் (அல்லது இந்திய சினிமாக்களில்) ஏன் ஹீரோயின்கள் சண்டை போடுவதே இல்லை? So called பெண்ணியவாதிகள் கவனிக்க. உதாரணமாக , கொழுக் மொழுக் என்று அமுல் பேபி போல இருக்கும் ஹீரோயின்கள் வில்லன் க்ரூப்பிடம் சிக்கி அலறுவார்கள்; கதறுவார்கள்; கண்ணீர் விடுவார்கள். 'என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா' என்று அபலையாக டயலாக் பேசுவார்கள். ஏம்மா? ஆப்பிள் ஜூஸ், கேரட் ஜூஸ் எல்லாம் குடித்து உடம்பை நன்றாக வளர்த்து வைத்திருக்கிறாயே , குறைந்த பட்சம் காலால் ஒரு ரவுடியை எட்டி உதைக்கக் கூடவா முடியாது? இல்லை. ஹீரோயின்கள் உதைக்க மாட்டார்கள். கொத்தவரங்காய் உடம்பு வைத்திருக்கும் ஒல்லிப்பிச்சி ஹீரோ வரும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். அந்த ஒ.பி ஹீரோ அந்த உடம்பை வைத்துக் கொண்டு பறந்து பறந்து இயற்பியல் விதிகளை மீறி ஒரு ஐம்பது பேரை அசால்ட்டாக அடித்துப் போட்டு விட்டு , நெற்றியில் ஒரு சிறிய தக்காளி சாஸ் மார்க்குடன் ஹீரோயினை மீட்பார்.ஒல்லியாக இருந்தாலும் ஹீரோ தான் சண்டை போட வேண்டும்.அது நமீதாவாக இருந்தாலும்,ஹீரோயின் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிர்கதியாக நிற்க வேண்டும் என்ற ஆணாதிக்கமா இது?

3
==
[ நாலுக்கு அப்புறம் மூணு. நாங்களும் நான்-லீனியர் ஆக எழுதுவோம் இல்ல?சாரு நிவேதிதா மன்னிக்கவும் ]

எதற்கு சொல்கிறேன் என்றால் பெண்கள் தற்காப்பு உத்திகளை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. எப்போதாவது ஆபத்தில் மாட்டிக் கொண்டால் 'நாம் அழுது கொண்டே நிற்போம். எங்கிருந்தாவது கொத்தவரங்காய் ஹீரோ வந்து காப்பாற்றுவார் 'என்று காத்திருப்பது முட்டாள்தனம். அந்த கொத்தவரங்காய் ஹீரோ அந்த சமயத்தில் வீட்டில் மனைவிக்காய் சின்சியராய் வெண்டைக்காய் நறுக்கிக் கொண்டிருக்கக்கூடும்.எனவே தன் கையே தனக்கு உதவி.

ஆனால் இப்படி வாராவாரம் டி.வியில் வந்து புதிய புதிய 'உத்திகளை' சொல்லித் தருவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. Jack of all fruits ; but master of none என்ற கதை ஆகி விடக்கூடாது.பலமரம் கண்ட தச்சன் ஒருமரமும் வெட்டான்! ரவுடி வந்து தாக்கும் போது ஃபிரன்ட் கிக் கொடுக்கலாமா எல்போ ப்ளாக் செய்யலாமா ,ஹைப்பர் ட்விஸ்ட் பண்ணலாமா என்று யோசிப்பதற்குள் மேட்டர் முடிந்து விடும். தற்காப்பு உத்திகள் தெரிந்திருப்பதை விட முக்கியமானது 'Presence of Mind ' எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்ற சுய அறிவு. நாம் எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும் சமூகத்தில் நம்மை எடுத்துக் காட்டுவது இந்த Presence of mind தான் என்றால் மிகையாகாது.உதாரணமாக நாம் ஒரு கூட்டத்திலோ கான்ஃபரன்சிலோ பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட வார்த்தை நமக்குக் கிடைக்காமல் திண்டாடுவோம்.அது எளிமையான, நமக்கு மிகவும் பரிச்சயமான வார்த்தையாகத் தான் இருக்கும். ஆனால் அது எப்போது வரவேண்டுமோ அப்போது வரவில்லையே ! பின்னர் நாம் அந்த கவலையிலேயே மீதியை சொதப்பி விடுவோம்.கடுகு சிறய பொருள் தான். ஆனால் அது தேவையான போது , எண்ணெய் காய்ந்து வாணலியில் ரெடியாக இருக்கும் போது, பக்கத்தில் கைக்கு எட்டும்படி இருக்க வேண்டுமே?It's not the availability, it's availability when needed!

எதையுமே எண்ணிக்கையில் அளவுக்கு அதிகமாகக் கற்றுக் கொள்வதில் சிக்கல் தான். மாமி ஒருவர் இருக்கிறார். நவராத்திரிக்கு பாடச் சொன்னால் தயங்கித் தயங்கி யோசித்து யோசித்தே கடைசிவரை பாடாமல் விட்டு விடுவார். ஏன் என்று கேட்டால் 'அது என்னன்னா ஒரே ஒரு பாட்டை கத்துண்டா பிரச்சினை இல்லை.எங்க போனாலும் 'மனசுலோனி' என்றோ 'ப்ரோசேவாரெவருரா' என்றோ தைரியமாக (அபஸ்வரமாக) ஆரம்பிச்சுரலாம். ஆயிரம் பாட்டு தெரிண்டுண்டதால தான் சிக்கலே' என்று சொல்வார்!


5
==

'நான் ரொம்ப சின்ன ஆள்' 'சராசரிக்கும் குறைவான உயரம்' 'நான் ஒரு பூச்சி' -இப்படியெல்லாம் புலம்புவதை இனிமேல் நிறுத்திக் கொள்ளவும், Intelligence எனப்படும் புத்திக்கூர்மையை ஆய்வு செய்யும் வி
ஞ்ஞானிகள் பெரிய உருவத்துக்கு புத்திக் கூர்மை குறைவு என்கிறார்கள்.(Bigger Not Necessarily Better, When It Comes to Brains ) டைனோசர்கள் அழிந்து போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். டைனோசர்கள் உருவத்தில் பெரியவை என்றாலும் அவை அடிமுட்டாள்கள். யானைகளைப் பொதுவாக புத்திசாலி விலங்குகள் என்று சொன்னாலும் எது ஏன் லூசு மாதிரி மனிதனுக்கு அடங்கி நடக்கிறது என்று கேள்வி கேட்கிறார்கள் சிலர்.சில மரங்கள் எத்தனையோ அடி உயரம் வளர்ந்து ஓங்கி உயர்ந்து நிற்கின்றன.ஆனால் மரங்களுக்கு ஒரே ஒரு அறிவு தான் என்று நமக்குத் தெரியும்.உருவத்தில் தக்கனூண்டு இருக்கும் சில பூச்சிகள் (உ.தா: தேனீ) மனிதனை விட பலமடங்கு புத்திசாலித்தனம் மிக்கவை என்கிறார்கள். ஏனென்றால் நமக்கு ஒரு சிங்கிள் ரூமைக் கட்டுவது என்றாலும் கூட அதற்கு வரைபடம், சர்வே, அது இது என்று எத்தனையோ Paperwork தேவைப்படுகிறது.ஆனால், தேனீ இஞ்சினியரிங் டிராயிங், Span -length ratio ,slenderness ratio , critical load இதையெல்லாம் படிக்காமலேயே ஏர் கண்டிஷன் வசதியுடன் அருமையான கூடு கட்டுகிறது. தேனியை விட எறும்பு இன்னும் புத்திசாலித்தனமானது.

மனிதன் சில(பல) சமயம் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறான்.இது ஏன் என்றால் மனித உடலின் சைசுடன் ஒப்பிடும் போது அவன் மூளை தேவையில்லாமல் பெரிய சைஸுடன் இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மனித உடலின் அளவுக்கு அவன் மூளை ஒரு நெல்லிக்காய் சைசுக்கு இருந்தால் போதுமாம்! மனித மூளையை ஆராய்ச்சி செய்யும்
விஞ்ஞானிகள், அதில் தேவையில்லாமல் ஒரே விதமான சர்க்யூட்டுகள் மீண்டும் மீண்டும் வருவதாக சொல்கின்றார்கள். தேவையில்லாமல் இயற்கை ஏன் மனிதனுக்கு ஒரு மெகா சைஸ் மூளையைத் தேர்ந்தெடுத்தது என்று இன்னும் தெரியவில்லை.ஒரு வேளை சின்ன மூளையுடன் மனிதன் இன்னும் புத்திசாலியாக இருந்து எங்கே தனது ரகசியங்களை அறிந்து கொண்டு விடுவானோ என்று இயற்கை நினைத்திருக்கலாம். மனிதன் கொஞ்சம் அல்பமாக 'ச்சே நேத்து திருமதி செல்வம் பார்க்கவில்லையே, அர்ச்சனாவுக்கும் செல்வத்துக்கும் சண்டை வந்ததா தெரியலையே, கண்டக்டர் இன்னும் மூணு ரூபாய் பாக்கி கொடுக்கலையே, நேத்து வாங்கின சட்டை சரியா ஃபிட் ஆகுமா' போன்ற கவலைகளில் ஈடுபட்டு கலங்கும் வண்ணம் இயற்கை படைத்திருக்கிறது.

மேலும் சொல்வதென்றால் அந்தக் காலத்தில் கம்ப்யூட்டர்கள் மெகா சைசில் இருந்தன. இரண்டும் இரண்டும் நாலு என்று சொல்லும் கணக்கைப் போடும்
கம்ப்யூட்டர்கள் ஒரு பெரிய ஹால் சைசுக்கு இருந்தன.மேலும் இரண்டும் இரண்டும் நாலு என்று சொல்ல பதினைந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டு ஏதோ பெரிய வேலையை செய்து விட்டது போல வேகமாக சூடு வேறு அடைந்தன. ஆனால் இன்று VLSI தொழில்நுட்பத்தில் ஒரு குட்டியூண்டு பிராசசர் எமகாதகக் கணக்குகளைக் கூட அனாயாசமாக மைக்ரோ செகண்டுகளில் செய்து முடிக்கிறது. நேனோ தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் இன்னும் உள்ளே போய் ஒவ்வொரு எலக்ட்ரானையும் ஒவ்வொரு டிரான்சிஸ்டராக செய்யமுடியுமா என்று யோசிக்கிறார்கள்.

சரி உங்கள் மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுக்கலாம். அத்தனை பெரிய மூளை சும்மா தானே இருக்கிறது?

கீழே உள்ள வாக்கியங்களைப் படியுங்கள். அப்படியே படிக்காமல் அவை எந்த வண்ணத்தில் உள்ளனவோ அதைப் படியுங்கள். உதாரணம் பச்சை என்று படிக்காமல் நீலம் என்று படிக்கவும்.

சிவப்பு

நீலம்

கிளிப்பச்சை

கறுப்பு

ஆரஞ்சு

மஞ்சள்

கருநீலம்

வெள்ளை

பிங்க்


வயலட்

6
===

இது ஒரு ஸ்பெஷல் கவிதை. என்ன ஸ்பெஷல் என்று யாராவது கண்டுபிடிக்கிறீர்களா பார்க்கலாம்.கவிதையிலேயே க்ளூவும் இருக்கிறது.

அறுவை ! சே! கணிதம் !
ஒ! வடிவத்தை
வீசியெ
றிந்துவிட்டு
நீர்
வாழ்க்கையினை
போதிப்பீர்
இங்கே!
சூத்திரம்
தேற்றங்கலெலாம்
சலிப்பாயிருக்குது
வெளியுலகிற்கு
கூட்டிச்செல்லுவீர்
எம்மை!

7
===

ஒரு ஓஷோ ஜோக்.

ஒரு பெண்மணி டாக்டரிடம் சென்று "டாக்டர் கண்ணாடில பார்த்தேன்,.என் முகம் பூராவும் சுருக்கங்கள். தலைல நிறைய வெள்ளை முடிகள். தாடைக்குக் கீழே சதை கூட கொஞ்சம் தொங்குகிறது.உதடு கருத்துப் போச்சு. எனக்கு வயதாகிக் கொண்டே வருகிறது போல இருக்கு. இதை மாற்ற முடியுமா? எனக்கு நல்ல செய்தியே இல்லையா? என்றாள் கவலையாக.

டாக்டர் 'ஏன் இல்லை? இப்போதே உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன்' என்றார்....

பெண்மணி : ' என்ன டாக்டர் அது'?

டாக்டர்: 'வாழ்த்துக்கள்..உங்கள் கண்பார்வை நன்றாக இருக்கிறது'



முத்ரா


Thursday, December 15, 2011

அணு அண்டம் அறிவியல் -55

அணு அண்டம் அறிவியல் -55 உங்களை வரவேற்கிறது

அங்கே தெரியும் நிலாவைப் பாருங்கள். நாம் பார்ப்பதால் தான் அந்த நிலா இருக்கிறதா? -ஐன்ஸ்டீன்

[பிக் பாங்,பிரபஞ்சம், அதன் விசைகள் இவற்றைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள நாம் Particle Physics -இன் அடிப்படைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது]

வி
ஞ்ஞானிகள் சிலர் தங்கள் கண்டுபிடிப்புகளால் உலகப் புகழ் பெற்று இருந்தாலும் கூட அவர்களின் சொந்த வாழ்க்கை (Personal life )அத்தனை வெற்றிகரமாக அமைந்ததில்லை என்று நாம் ஏற்கனவே ௮-௮-௮ வில் பார்த்திருக்கிறோம். நிறைய விஞ்ஞானிகள் 'எதற்கு வம்பு' என்று கல்யாணமே செய்து கொண்டதில்லை. செய்து கொண்ட போதிலும் நிறைய பேர் 'டைவர்ஸ்' கேசுகளாகவே இருந்திருக்கிறார்கள்.சில பேர் தீராத மன மற்றும் உடல் வியாதிகளால் தொடர்ந்து வேதனைப்பட்டு வந்திருக்கிறார்கள். 'சைக்கோ' என்ற பட்டப்பெயரைக் கூட சிலருக்கு சமூகம் கொடுத்திருக்கிறது.விஞ்ஞானிகள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மனைவி, குழந்தை, குடும்பம் என்று வெற்றிகரமாக வலம்வருவது அறிவியலின் வரலாற்றில் கொஞ்சம் அரிதாகவே இருக்கிறது.



இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப் போகும்
விஞ்ஞானி கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. அவர் குவாண்டம் இயற்பியலின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவரான பால் டைராக் (1902–84 ).முதலில் நாம் இவர் என்ன சாதனைகளை செய்தார் என்று பார்ப்பதற்கு முன், அவருக்கு இருந்த சில பிரச்சனைகளைப் பார்க்கலாம்.(என்ன ஒரு சந்தோஷம்?!) டைராக், அழகான ஆள் தான் என்ற போதிலும் (பார்க்க படம்) அவருக்கு மற்றவர்களிடத்தில் இயல்பாகப் பேசுவதில் தயக்கம் இருந்தது.முடிந்த வரை அவர் கூட்டத்தைத் தவிர்த்து தனியாக இருக்கவே விரும்பினார். கண்டிப்பாகப் பேச வேண்டும் என்ற நிலை வந்தாலும் மிகக் குறைவாகவே பேசுவார். அதுவும் பொதுவாக 'Yes ' 'No ' 'I don't know ' இது போல தான் இருக்கும்.ஒரு வாக்கியத்தை பெரும்பாலும் முழுதும் முடிக்க முடியாமல் தடுமாறுவார்.பின்னாளில் இயற்பியலுக்கான நோபல் பரிசு தன்னைத் தேடி வந்த போது கூட , அந்த புகழ் வெளிச்சத்தை விரும்பாத டைராக் அதை முதலில் நிராகரித்தார்.ஆனால் நோபல் பரிசை நிராகரிப்பது என்பது அதைப் பெற்றுக் கொள்வதை விட அதிக Publicity யைக் கொண்டு வரும் என்று அவரது ஆலோசகர்கள் சொன்னதால் கடைசியில் அதை வாங்கிக் கொண்டார்.

டைராக்,
Asperger syndrome என்ற ஒருவிதமான வினோத மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று சொல்கிறார்கள்.இந்த நோய் இருப்பவர்களால் சமூகத்தில் இயல்பாகப் பழக முடியாது.சுலபமான ,சாதாரணமான விஷயங்களைக் கூட அதிக நேரம் எடுத்துக் கொண்டு செய்வார்கள்.ஆனால் அவர்களுக்கு விதிவிலக்கான சில திறமைகள் இருக்கலாம். கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற ஏதோ ஒரு துறையில் அவர்கள் சாதாரண மனிதர்களை விட நூறு மடங்கு அதிக ஆர்வம் உள்ளவர்களாக இருக்கலாம். டைராக், அதே போல மிக அபூர்வமான கணக்கிடுதல் திறமையுடன் (calculation ability)இருந்தார்.

இயற்பியலில் இரண்டு விதமான அணுகுமுறைகள் உள்ளன.

ஒன்று:- முதலில் தர்கரீதியாக சிந்தித்து பிறகு சூத்திரங்களை உருவாக்குதல் (உதா: ஐன்ஸ்டீன்) : ஐன்ஸ்டீன் கணக்கில் மிகவும் வீக். ஏன், கணக்கு என்றாலே அலர்ஜி .ஆனால் அவர் கண்டுபிடித்த பொது சார்பியல் கொள்கை தான் இன்றைக்கு மிக அதிக சவாலான கணக்கீடுகளை உள்ளடக்கியுள்ளது.
ஆனால் அவர் முதலில் இந்த சமன்பாடுகள் ரீதியாக சிந்திக்கவில்லை. தன் கற்பனைத் திறன் மூலம் இயற்பியலின் புதிர்களை OUT OF BOX thinking முறைப்படி சிந்தனை செய்தார் அவ்வளவு தான்.

இயற்பியல் விதிகள் யார்க்கும் மாறாது என்பது ஒரு ஏற்றுக் கொள்ளத்தக்க எளிமையான சிந்தனை. அதாவது இயற்பியலின் அத்தனை விதிகளும் நின்று கொண்டிருப்பவருக்கும் அதிக வேகத்தில் சென்று கொண்டு இருப்பவருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். நிற்பவரின் கால்குலேட்டரும் நகர்பவரின் கால்குலேட்டரும் 2 + 2 = 4 என்று தான் சொல்லும். கால்குலேட்டர் இரண்டும் இரண்டும் நாலு என்று சொல்வது நமக்கு ஜுஜுபி என்று தோன்றினாலும் அதற்குப் பின்னணியில் நிறைய விதிகள் ஒருசேர இயங்குகின்றன. கால்குலேட்டரின் மின் சுற்று சரியாக ஓம் மற்றும் தெவேன்னியன் விதிகளைப் பின்பற்ற வேண்டும். கால்குலேட்டரின் டிரான்சிஸ்டர்கள் குவாண்டம் விதிகளுக்கு உட்பட வேண்டும்.எனவே விமானத்தில் அதிவேகத்தில் விரைந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு
2 +2 = 4 என்று கால்குலேட்டர் காட்டினால் நாம் இயற்கையின் விதிகள் எந்த ஒரு சட்டத்திலும் (Frame of reference ) மாறாது என்று உறுதியாகச் சொல்ல முடியும். சரி அப்படியானால் அதிவேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு மாக்ஸ்வெல்லின் மின்காந்த விதிகள் கூட மாறாது.மாக்ஸ்வெல்லின் மின்காந்த விதிகள் சொல்வது என்ன என்றால் ஒளி உட்பட எல்லா மின்காந்த அலைகளும் அவற்றின் மின் பகுதி (electrical component ) காந்தப் பகுதியை (magnetic component ) முந்திக் கொண்டு ஓட, ஒரு சீரான வேகத்தில் நகரும் என்பது

கொஞ்சம் கணித ரீதியாக சொல்வது என்றால்:





இந்த சமன்பாடு பிரபஞ்சத்தின் எந்த மூலையிலும், எந்த கவனிப்பவருக்கும் (observer ) பொருந்தும்.ஆனால், சுவாரஸ்யமாக இந்த சமன்பாட்டில் ஒரு 'திசைவேகம்' மாறிலியாக வருகிறது. நம் தினப்படி அனுபவங்கள் திசைவேகம் என்பது பார்ப்பவரைப் பொறுத்து மாறக் கூடிய ஒரு எண் என்று சொல்கின்றன.அதாவது நமக்கு முன் 40 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய ஒரு காரை நாம் எட்டிப் பிடிக்கும் போது அதன் வேகம் நம் வேகத்துக்கு ஏற்ப படிப்படியாகக் குறைந்து 40 ,30 ,20 ,10 என்று வந்து பின்னர் நமக்கு அந்த கார் நிலையானதாகத் தெரியும்(v =0 ). இதே லாஜிக்கை நாம் ஒளிக்கும் பயன்படுத்தலாம்.தனக்கு முன் விரையும் ஒளியைப் பிடிக்க முனையும் ஒருவருக்கு ஒளியின் வேகம் படிப்படியாகக் குறைந்து பயணிப்பவர் ஒளியின் வேகத்தை எட்டும் போது ஒளி அவருக்கு நிலையானதாகத் தோன்றி 'ஹலோ' சொல்ல வேண்டும்.



ஆனால் அப்படி மின் மற்றும் காந்தப் பகுதிகள் நகராமல் 'உறைந்து போய் விட்ட ஒளி' (Frozen light wave )யை மாக்ஸ்வெல் விதிகள் அனுமதிப்பதில்லை.அதாவது,மேலே உள்ள சமன்பாட்டில் c =0 (ஒளி நிலையாக நின்று விடுவதால்) என்று போட்டால் மின் மற்றும் காந்த மாறிலிகளின் மதிப்புகள் முடிவிலியை (infinity )அடைகின்றன. ஆனால் அந்த மாறிலிகளின் மதிப்புகள் முடிவிலி அல்ல.இயற்பியல் மாறிலிகள் ∞ ஆக இருக்க முடியாது

...எனவே கவனிப்பவர் எத்தனை வேகத்தில் சென்றாலும் அவருக்கு முன்னே விரையும் ஒளியின் வேகம் அவரைப் பொறுத்து மாறாமல்(குறையாமல்) 'C ' என்றே இருக்கும். ஆனால் எப்படி ஒளியானது தனக்குப் பின்னால் பல்வேறு வேகங்களில் துரத்திக் கொண்டு வரும் யாருக்கும் சிக்காமல் ஒரே வேகத்தை Maintain செய்கிறது என்று ஐன்ஸ்டீன் யோசிக்கிறார். அவருக்கு அப்போது புரட்சிகரமான ஒரு ஐடியா பளிச்சிடுகிறது. வெளியும் காலமும் மாறாத Absolute விஷயங்கள் என்ற கருத்து உடைபடுகிறது. வேகமாக நகர்பவருக்கு (நிலையாக இருப்பவரைப் பொறுத்து) வெளி சுருங்கியும் காலம் மட்டுப்பட்டும் அவர் ஒளியின் வேகத்தை மாறாமல் அளவிடும் படி செய்கின்றன.[அதாவது வேகம் =வெளி/காலம் .வெளியை அளக்க அவர் எடுத்துச் செல்லும் அளவுகோல் சுருங்கியும் காலத்தை அளக்க அவர் எடுத்துச் செல்லும் கடிகாரம் மெதுவாக ஓடியும் அவர் அளவிடும் ஒளிவேகத்தை Balance செய்கின்றன] இப்படி வந்தது தான் ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கொள்கை!

இன்னொரு விதமான அணுகுமுறை என்ன என்றால் முதலில் பேப்பர் பேனா வைத்துக் கொண்டு பக்காவாக கணக்குப் போட்டு விடுவது. பின்னர் அந்த கணக்கீடுகள் என்ன சொல்கின்றன என்று அதை உலகத்துக்குப் பொருத்திப் பார்ப்பது! இந்த முறையை கையில் எடுத்துக் கொண்டார் டைராக். உதாரணமாக ஒரு பொருளின் ஆற்றலையும் அதன் நிறையையும் தொடர்பு படுத்தும் பிரபலமான சமன்பாடு:



எளிமை கருதி பொருள் நிலையாக இருப்பதாகக் கொள்வோம். எனவே அதன் உந்தம் = 0

எனவே E2 =m2 C4 என்று வரும். இதற்கு இரண்டு பக்கமும் வர்கமூலம் எடுத்தால் (square root )

E = mc2 என்று வருகிறது. சரி..ஸ்கூலில் பத்தாவது வரை படித்த எல்லாருக்கும் வர்க்க மூலம் எடுக்கும் போது

± குறி போடவேண்டும் என்று தெரியும். அதாவது, ஒரு இருபடி சமன்பாட்டுக்கு (Quadratic equation)எப்போதும் இரண்டு மூலங்கள் இருக்கும்.
x2 =4 என்று சொன்னால் x என்பது 2 அல்லது -2 ஆக இருக்கலாம்.
எனவே , ± E = ± mC2 என்று வருகிறது. எனவே E = -mC2 என்றும் சொல்ல முடியும். இந்த சமன்பாடு, ஆற்றல் (அல்லது பொருள்) என்பது எதிர்மறை மதிப்பைக் (Negative value ) கொண்டிருக்கலாம் என்று சொல்கிறது.எனவே டைராக், உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கு சமமான நிறை உள்ள ஒரு எதிர்ப்பொருள் இருக்கலாம் என்று ஊகித்தார். உதாரணமாக அடிப்படைத் துகள் எலக்ட்ரானுக்கு அதே அளவு நிறை உள்ள பாசிட்ரான் என்ற நேர் மின்சுமை உள்ள எதிர்ப்பொருள் இருக்கலாம் என்று ஊகித்தார்.

நிற்க.தாவோ அல்லது தந்த்ரா பற்றி ஏற்கனவே நாம் பேசி இருக்கிறோம்.இவை இரண்டும் முறையே சீனா மற்றும் இந்தியாவின் நெறிகள். ஒரு விஷயம் என்பது அதற்கு எதிர் விஷயத்தால் பூர்த்தி செய்யப்படுகிறது என்று சொல்லும் தாவோவின் பாகுவா குறியீட்டை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.உள்ளே இருக்கும் கருப்பு பற்றும் வெள்ளை (மீன் போன்ற) குறியீடுகள் ஒன்றுக்கு ஒன்று எதிராக இருந்தாலும் ஒன்றை ஒன்று செவ்வனே பூர்த்தி செய்கின்றன. இதே போல தந்த்ரா ஆண் மற்றும் பெண் என்ற ஒன்றுக்கொன்று எதிரிடையான சக்திகள் ஒன்று சேரும் போது தெய்வத்தின் சங்கமம் நிகழ்கிறது என்று சொல்கிறது. அதாவது ஆண் , அல்லது பெண் அல்லது எலக்ட்ரான் என்பவை உண்மையின் பாதிகள்..அவை தங்கள் இன்னொரு எதிர்ப்பாதியுடன் சேரும் போது முழுமை அடைகின்றன.
யிங்-யாங்


எனவே அண்டத்தில் உள்ள ஒவ்வொரு துகளுக்கும் அதன் (எதிர்) ஜோடி இருக்கும். 'இயற்கை ஜோடிகளையே படைக்கிறது' [பிரம்மச்சாரி யாரும் இங்கே கிடையாது!] என்ற புரட்சிகரமான கருத்தை டைராக் முன்வைத்தார்.பிறகு சில ஆண்டுகள் கழித்து டேவிட் ஆண்டர்சன் எலக்ட்ரானின் எதிர்த்துகளான பாசிட்ரானைக் கண்டுபிடித்தார். இது 1933 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசை டைராகிற்கு பெற்றுத் தந்தது.

சரி.

டைராக் கடல்


எதிர்மறை ஆற்றல் (-E)என்பது ஒரு ஏடாகூடமான விஷயம். பொருட்கள் குறைந்த ஆற்றல் நிலையை நோக்கியே நகர விரும்பும் என்பதால் டைராக்கின் இந்த கண்டுபிடிப்பு ஒரு பிரச்சனையை எழுப்பியது. அதாவது எலக்ட்ரான்கள் அணுவை சுற்றாமல் நிரந்தரமாக எதிர்மறை ஆற்றல் நிலையில் போய் விழுந்து விடும். எனவே நமக்கு நிலையான அணுக்கள் கிடைக்காது.இதை சரிகட்ட டைராக் 'டைராக் கடல்' (Dirac Sea ) என்ற ஒரு மாடலை முன்வைத்தார்.அதாவது எதிர்மறை ஆற்றல் நிலை ஏற்கனவே முழுவதுமாக துகள்களால் நிரப்பப்பட்டு விட்டது .(ஹவுஸ் ஃபுல்).எனவே எலக்ட்ரான் அங்கே போய் விழுந்து விடுவதை Pauli 's Exclusion principle தடை செய்கிறது.எதிர்மறை ஆற்றல் நிலையில் சிறைப்பட்டிருக்கும் ஒரு எலக்ட்ரான் சில சமயங்களில் ஆற்றல் மிகுந்த காமாக் கதிர்களால் தாக்கப்படலாம்.அப்போது அது கடலில் இருந்து விடுபட்டு வெளியே வரலாம். அது இருந்த இடத்தில் இப்போது அதன் அளவே (நிறை) உள்ள ஒரு குழி உருவாகி இருக்கும். அந்த குழி தான் நமக்கு எலக்ட்ரானின் எதிர்த் துகளான பாசிட்ரான்-ஆகத் தோற்றம் அளிக்கிறது என்று டைராக் விளக்கம் அளித்தார். அதாவது ஆற்றல் அதிகம் உள்ள ஒரு காமா அலை தன்னிச்சையாக ஓர் எலக்ட்ரானையும் அதன் எதிர்த் துகளான பாசிட்ரானையும் தோற்றுவிப்பதாகத் தோன்றும். ஒரு காகிதத்தில் கத்திரியைப் பயன்படுத்தி ஒரு வடிவத்தை வெட்டி எடுங்கள். இப்போது அந்தக் காகிதத்தில் ஒரு பகுதியும் அதை வெட்டியதால் காகிதத்தில் ஏற்ப்பட்ட குழியும் நமக்குக் கிடைக்கும்.ஆனால் இதை செய்வதற்கு நாம் ஆற்றலை (கத்திரிக்கோலின் இயக்க ஆற்றல்) செலுத்த வேண்டும். எனவே அதிக ஆற்றல் உள்ள காமாக் கதிர்களால் (கத்திரி) பொருளையும் (காகிதத் துண்டு) அதன் அளவே உள்ள எதிர்ப் பொருளையும் (காகிதக் குழி) உருவாக்க முடியும், காகிதத்தில் தோன்றும் குழி அதை வெட்டி எடுத்த பகுதியைப் போலவே அச்சு அசலாக இருக்கும் அல்லவா?எனவே தான் எலக்ட்ரானும் அதன் எதிர்த்துகள் பாசிட்ரானும் எல்லா விதத்திலும் ஒரே மாதிரி இருக்கும்.(மின்சுமையைத் தவிர)


சமுத்ரா

Monday, December 12, 2011

கலைடாஸ்கோப்-46

லைடாஸ்கோப்-46 உங்களை வரவேற்கிறது


==

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

- ஹலோ, எங்கே ஓடுகிறீர்கள்? பாரதியாரைப் பற்றி எல்லாம் பேசப் போவது இல்லை. ஏற்கனவே நிறைய பேர் காது புளிக்கும் அளவு பேசி விட்டார்கள்.

நெருப்பின் ஒரு சிறிய பொறியை 'இது என்ன செய்து விடப் போகிறது' என்ற அலட்சியத்துடன் (அவர்) காட்டில் வைத்து விட்டுப் போனாராம். திரும்பி வந்து பார்த்த போது காடே எரிந்து வெந்து தணிந்து இருந்ததாம். நெருப்பின் தன்மை அத்தகையது. பொறியாக இருந்தாலும் நெருப்பு நெருப்புதான். தன்னை தீண்டும் எதையும் நெருப்பாகவே மாற்றும் சக்தி நெருப்புக்கே உண்டு. 'நெருப்பு, பகை இந்த இரண்டையும் மிச்சம் வைக்காமல் முடிச்சிரணும்'-இப்படி தமிழ் சினிமா வில்லன்கள் சில சமயங்களில் புத்திசாலித்தனமாக வசனம் பேசுவதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும்.

இப்போதெல்லாம் கோரமான தீ விபத்துகள் பற்றிய செய்திகளை அடிக்கடி கேட்கிறோம். சமீபத்தில் கூட கொல்கொத்தாவில் ஒரு பிரபலமான ஆஸ்பத்திரியில் நடந்த ஒரு தீவிபத்தில் எழுந்து நடக்கக் கூட திராணி இல்லாமல் படுத்துக் கிடந்த நோயாளிகளை நெருப்பு காவு வாங்கி இருக்கிறது.

ஐ.டி. கம்பெனிகளில் சேருபவர்களுக்கு முதலில் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கிறார்களோ இல்லையோ FIRE SAFETY training என்று ஒருநாளை முழுவதும் ஒதுக்கி விரிவான ட்ரைனிங் கொடுப்பார்கள்.'தீ எப்படிப் பரவுகிறது, எப்படி தீயை மேலும் பரவாமல் தடுப்பது, எப்படி பாதுகாப்பாக (பதட்டப்படாமல்) வெளியேறுவது, நடக்க முடியாதவர்களை எப்படி சுமந்து கொண்டு வெளியே வருவது, தீயணைப்பான்-களை எப்படி உபயோகிப்பது ' என்றெல்லாம். ஆனால் நம் நகரங்களில் குருவிக் கூடு போல கட்டப்பட்டிருக்கும் பலமாடி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இது போன்ற முறையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றனவா என்று தெரியவில்லை. மருத்துவமனை ஊழியர்களும் பள்ளி ஆசிரியர்களும் திடீரென்று நெருப்பு பற்றிக் கொண்டால் அந்த சூழ்நிலையை பதட்டமில்லாமல் கையாளும் அளவுக்கு பயிற்சி பெற்றிருக்கிறார்களா என்பது சந்தேகம் தான்.
நிறைய பேருக்கு தீயணைப்புக் கருவியை எப்படி உபயோகிப்பது எந்தப் பக்கம் திறப்பது என்று கூடத் தெரிந்திருப்பதில்லை. 'எல்லாம் தீப்பிடிக்கும் போது பார்த்துக் கொள்ளலாம்' என்ற அலட்சியத்துடனே இருக்கிறார்கள். தீப்பிடிக்கும் போது எதைப் பார்த்துக் கொள்வது? மள மள என்று பரவும் தீயைத்தான் பெப்பெப்பே என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்!

'தேவகிக்கும் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தை தன்னை சாகடிக்கும் என்று தெரிந்திருந்தும் கூட கம்சன் ஏன் இரண்டு பேரையும் ஒன்றாக ஒரே சிறையில் அடைக்கிறான்?' என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. அது போல தீ பரவுவதற்கு மூன்று விஷயங்கள் கண்டிப்பாக ஒன்று சேர வேண்டும். இதை FIRE TRIANGLE என்பார்கள். எரிபொருள், வெப்பம், ஆக்சிஜன் இவை மூன்றும் அந்த முக்கோணத்தின் பக்கங்களாக இருக்கின்றன.இந்த மூன்றில் ஒன்று ஒத்துழைக்கா விட்டாலும் நெருப்பு பெரும்பான்மை இல்லாத அரசியல்வாதி போல வலுவிழந்து விடும்.

நெருப்பின் மீது தண்ணீர் ஊற்றுவது வெப்பத்தை அகற்றி இடத்தை குளிர்விக்கிறது. எனவே முக்கோணம் உடைபட்டு நெருப்பு நின்று விடுகிறது. ஆனால் எல்லாவகை நெருப்புக்கும் தண்ணீர் ஊற்றக் கூடாது என்கிறார்கள்.நெருப்பு மின்சாரம் மூலம் பரவி இருந்தால் அதன் மீது தண்ணீர் ஊற்றுவது ஆபத்தை நாமே விலைக்கு வாங்குவது போல.அடுத்து எரிபொருளை நெருப்புக்கு இரையாகாமல் அகற்றுவது. எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம் என்பதற்கு இது தான் அர்த்தம்.மூன்றாவதாக நெருப்புக்குக் கிடைக்கும் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்துவது, எரியும் மெழுகுவர்த்தியை நாம் வாயால் ஊதி அணைக்கும்போது இதை தான் செய்கிறோம். பெரும்பாலான தீயணைப்புக் கருவிகள் இதைத்தான் செய்கின்றன.

மேலும்,ஒருவரை நெருப்பு சாகடிப்பதை விட புகை தான் சாகடிக்கிறது என்று சொல்வார்கள்.அதாவது இருக்கும் ஆக்சிஜனை எல்லாம் நெருப்பு பேராசையுடன் எடுத்துக் கொள்ள ஆள் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறி செத்துப் போகிறான். எனவே நெருப்பு நம் பக்கத்தில் வரவில்லையே , இந்த சிறிய வேலையை முடித்துக் கொண்டு அப்புறம் போய்க் கொள்ளலாம் என்று தேவையில்லாத ஹீரோயிசம் எல்லாம் வேண்டாம். ஃபயர் அலாரம் அடித்ததும் தண்ணீர் லாரி சத்தத்தைக் கேட்டு விரைந்தோடும் நகரப் பெண்கள் போல தலை தெறிக்க ஓடி வெளியேறவும்!

தீயை அணைக்க இன்னொரு வழி இருக்கிறது.'நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா' என்று தமிழ் சினிமாவில் பாடுவார்களே அது தான் அது. காட்டுத்தீ பரவும் போது அதற்கு எதிர்பக்கத்தில் இருந்து இன்னொரு தீயை பரவ விட்டு (இரண்டையும்) அணைப்பார்கள். ஆனால் இது கொஞ்சம் ஆபத்தான தீயணைப்பு! உங்கள் வீட்டில் தீ பிடித்துக் கொண்டால் அதை அறிவியல் ரீதியாக அணைக்கிறேன் பேர்வழி என்று இந்த மாதிரி ஏதாவது செய்து எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றி விடாதீர்கள்.முதலில் நெருப்பு முக்கோணத்தை உடையுங்கள் ..அது போதும்..


==

நெருப்பு, பகை இந்த இரண்டைப் போல இன்னொன்றையும் மிச்சம் வைக்கக் கூடாது.அது என்ன? Any guess ? என்னது சாப்பாடா? அட ராமா,,24 x 7 இதே நினைப்பு தானா உங்களுக்கு ? கடன் தான் அது.

அதனால் ஒருவரிடம் கடன் வாங்கி இருந்தால் முழுவதையும் திருப்பிக் கொடுத்து விடவும். நூறு ரூபாய் கடன் வாங்கி விட்டு மாதம் பத்து ரூபாய் கொடுக்கும் தவணை முறைக் கடன் என்றாலும் தொண்ணூறு ரூபாய் கொடுத்தாயிற்றே, இன்னும் பத்து ரூபாய் கொடுக்காவிட்டால் என்ன என்று அல்பத்தனமாக யோசிக்காமல் முழுவதையும் செட்டில் செய்து விடவும்.


==

இன்னும் ' கொலவெறி ' பாடல் கேட்கவில்லையா? என்று ஏதோ உலக மகாக்குற்றம் செய்து விட்டதைப் போல கேவலமாகப் பேசினார்கள் ஆபீசில். தமிழில் ஆ என்றால் ஊ என்று சொல்லவராத ஒரிசாக் காரர்கள், குஜராத்திகள், மராட்டிக் காரர்கள் எல்லாம் அந்தப் பாட்டுக்கு மகுடிப் பாம்பாக மயங்கிக் கிடக்கிறார்கள்.சரி அந்தப் பாட்டில் அப்படி என்ன தான் இருக்கிறது
எட்டாவது ஸ்வரம் எதையாவது உபயோகித்திருக்கிறார்களா என்று யூ-டியூபில் கேட்டுப் பார்த்தேன்.எனக்கு என்னவோ அந்தப் பாடல் மிகவும் சுமாராகத் தான் இருந்தது. இதனுடன் ஒப்பிடும் போது தனுஷின் இன்னொரு பாடலான 'நான் சொன்னதும் மழை வந்துச்சா' பாடல் எவ்வளவோ பரவாயில்லை.

நம் மக்களுக்கு சில விஷயங்கள் ஏன் பிடித்துப் போகின்றன என்பது புதிராகவே உள்ளது. உதாரணமாக மிகவும் யோசித்து, நிறைய கஷ்டப்பட்டு, புத்தகங்களை Refer செய்து ஒரு விஷயத்தை மெனக்கெட்டு எழுதுவோம்.அது அவ்வளவாக பிரபலம் ஆகாது.ஏனோ தானோ என்று நமக்கே இஷ்டம் இல்லாமல் எதையோ கிறுக்கி வைப்போம். அது எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும். ஆனால் இந்த மாதிரி INSTANT PUBLICITY பெற்று விடும் விஷயங்களில் நாம் படைப்பாளரின் முயற்சி, உழைப்பு, வலி, வேதனை, முதிர்ச்சி இதையெல்லாம் பார்க்க முடியாது என்பது உண்மை தான்.

மேலும் , ஒரு விஷயம் பிரபலம் அடைவது என்பது ஒருவிதமான CHAIN REACTION என்று தோன்றுகிறது. 'இவ்வளவு பேர் விரும்பிக் கேட்கிறார்கள்; அப்படியென்றால் இதில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும்' என்ற ஒரு மாயை.உதாரணமாக, நீங்கள் ஒரு ப்ளாக்கின் உள்ளே போகிறீர்கள். அதன் சமீபத்திய பதிவுக்கு 87 comments என்றோ 98 comments என்றோ இருந்தால் அப்படி என்ன தான் எழுதியிருக்கிறார் என்ற ஆர்வத்தில் (அல்லது பொறாமையில்) அதைப் படிப்பீர்கள்.அதே 0 கமெண்ட்ஸ் என்றோ 1 கமெண்ட் என்றோ இருந்தால், சரி தான் உள்ளே எதுவும் மசாலா இல்லை
போலிருக்கிறது என்று படிக்காமலேயே வெளியேறி விடுவீர்கள்.(உண்மை என்ன என்றால் 87 கமெண்டில் பாதிக்கும் மேல் ப்ளாக் ஓனரே போட்டிருப்பார்) 'கொலைவெறி' அந்த ரகம். உண்மையில் விரும்பிக் கேட்டவர்களை விட அப்படி என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் கேட்டவர்கள் (கேட்டு ஏமாந்தவர்கள்) தான் அதிகம் என்று தோன்றுகிறது.

சினிமாப் பாடல்கள் ஓவராகக் கொண்டாடப்படுவதற்குக் காரணம் அதன் சாசுவதம் அற்ற தன்மையும் தான்.(Enjoy it before it 's gone !)காலப் போக்கில் கரைந்து போய் விடக் கூடிய விஷயங்களாக அவை இருக்கின்றன.சினிமாப் பாடல்களை கர்நாடக இசைப் பாடல்களிடம் இருந்து வேறுபடுத்துவதும் இந்த அம்சம் தான்.

ஒரு காலத்தில் மன்மத லீலையை
ஒரு காலத்தில் தென்றல் வந்து என்னைத் தொடும்
ஒரு காலத்தில் முக்காபுலா
ஒரு காலத்தில் வாளமீனுக்கும்
ஒரு காலத்தில் என்னமோ ஏதோ

ஆனால் ஒரு 'எந்தரோ மகானு பாவுலு' வோ 'என்ன தவம் செய்தனை' யோ காலம் என்ற பூச்சி அரிக்காத இசைப் பொக்கிஷங்கள்!


==

சில விம்ங்ள் பயங்கர எரிச்சல் தரும்.எந்திரன் ரஜினி செய்வது போல டி.வி யை அப்படியே போட்டு உடைத்து விடலாமா என்ற அளவுக்கு. பாட்டி பேத்தியுடன் சேர்ந்து FAIRNESS கிரீம் பூசிக் கொண்டு லூட்டி அடிப்பதும்,டியோடரண்ட் போட்டுக் கொண்டு போகும் இளைரை பெண்கள் தொடர்வதும், சோப்பை பூசிக் கொண்ட மாத்திரத்தில் உலக அழகி ஆகி விடுவதும்..

ஆனால் Everything has exceptions !சில விளம்பரங்கள் உண்மையிலியே கற்பனைத் திறன் மிக்கவையாக இருக்கின்றன. பார்ப்பவர் முகத்தில் சிறு புன்னகையை வரவழைக்கின்றன.

உதாரணம்:

*காரில் சைக்கிள் மோதி அதன் ஒரு பகுதி உடைந்து விடுகிறது. காரின் ஓனர் கோபத்துடன் 'அஞ்சு ரூபா எடு ' என்று கத்துவது. (FEVI QUICK )

*காரில் கீறல் செய்தபடி ஒரு சின்னப்பையன் ஓடுவது.'வயிற்றெரிச்சலா' என்று கேட்டு ஒரு மிட்டாயை விளம்பரப்படுத்துவது.

*வீட்டையே அலங்கோலப்படுத்தி ஒரு சிறுவன் வாஷிங் மெஷினுக்கு கைவைப்பது.

*நாக்கை கண்டபடி சுழற்றி பாடகர் போட்டியில் வெற்றி பெறுவது (சென்டர் பிரெஷ்)

*தாத்தா படி ஏறி வரட்டும் என்று சின்னப்பெண் வேண்டுமென்றே OUT OF ORDER போர்டை லிப்டில் வைப்பது ( இன்சூரன்ஸ் )

*கயிற்றின் மேல் நடந்து கொண்டிருப்பவருக்கு ஒருத்தர் அங்கேயே வந்து கொரியர் டெலிவர் செய்வது

சரி. கீழே உள்ள படங்களையும் பார்க்கவும்.







==

நேற்று சன் டி.வியில் 'ஆனந்தபுரத்து வீடு' பார்த்தேன். ஹ்ம்ம்..படத்தில் வருவது மாதிரி நிஜ வாழ்க்கையில் நம் வீட்டிலும் ஒரு (நல்ல) ஆவி இருந்து காலையில் காபி போடுவது , கேரட் நறுக்குவது, சட்னி அரைப்பது, முகத்தில் சோப்பு பூசிக்கொண்டு மக்3கைத் தேடும் போது நகர்த்தி விடுவது என்று இது மாதிரி சின்னச் சின்ன எடுபிடி வேலைகள் செய்தால் தேவலாம் என்று தோன்றுகிறது. இதெல்லாம் கூட வேண்டாம். பாத்திரம் கழுவ மட்டும் ஏதாவது நல்ல ஆவி இருந்தால் சொல்லுங்கள்.
வீட்டு வேலைகளிலேயே அலுப்பானது இந்த பாத்திரம் கழுவுவது தான்!



==
ஹி ஹி..

==
ஓஷோ ஜோக்.

சிரிப்பைத் தவிர புனிதமான மதம் வேறொன்று இல்லை- ஓஷோ..

இரண்டு வயதான தாத்தாக்கள் ஒரு பார்க் பெஞ்சில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

தாத்தா 1 : ஜான், எனக்கு இப்போ 83 வயசு.. வாழ்க்கை இப்போ ஒரே வலியாகவும், வேதனையாகவும் இருக்கு,,,உனக்கும் இதே வயசு தானே?நீ எப்படி ஃபீல் பண்றே?

தாத்தா 2 : நானா? எனக்கென்ன, இப்ப தான் பிறந்த குழந்தை போல உணர்றேன்..

தாத்தா 1 : அப்படியா? அதிசயம் தான்? உண்மையாகவா?

தாத்தா 2 : ஆமா. முடி இல்லை ...பல் இல்லை.. அப்புறம் இப்ப பாரு நான் என் பேன்ட்-டை ஈரம் செய்து விட்டேன்..


என்னது சிரிப்பு வரவில்லையா? அப்படியானால் இன்னொன்று.

ஒருநாள் ஒரு சின்னப்பெண் ஸ்கூல் முடிந்து வந்து தன் பாட்டியிடம் 'பாட்டி , பாட்டி கள்ளக்காதல் அப்படீன்னா என்ன? என்றாள்

பாட்டி , 'இரு சொல்றேன்...என்ன சொன்ன? கள்ளக்காதல் , கள்ள ...காதல் ...அய்யய்யோ கடவுளே ஒரு நிமிஷம் இரு' என்று பதறிக் கொண்டு உள்ளே ஓடினாள்..

தன் பெட்-ரூமுக்கு சென்று பீரோவை மெதுவாக நகர்த்தி சுவரில் இருந்த இன்னொரு ரகசிய அலமாரியை கஷ்டப்பட்டு திறந்தாள்.

ஒரு எலும்புக் கூடு புழுதி பறக்க வெளியே வந்து விழுந்தது.


முத்ரா

Thursday, December 8, 2011

அணு அண்டம் அறிவியல்- 54

அணு அண்டம் அறிவியல்- 54 உங்களை வரவேற்கிறது

ஆய்வகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் வி
ஞ்ஞானி வெறுமனே விஞ்ஞானி மட்டும் அல்ல; இயற்கையின் ரகசியங்களைக் கண்டு தேவதைக் கதைகளை ஆர்வத்துடன் கேட்பதைப்போலப் பரவசமடையும் ஒரு குழந்தையும் தான் -மேரி கியூரி

நம் பிரபஞ்சத்தில் பெரும்பகுதி இருட்டாக (காலக்சிகளுக்கு இடையே உள்ள வெளி, நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள வெளி)இருக்கிறது;ஒன்றுமே இல்லாத வெற்றிடமாக இருக்கிறது என்று நினைத்தால் அது தவறு.இரண்டு விதங்களில் இது தவறு. ஒன்று: குவாண்டம் இயற்பியலின் படி 'இது எதுவுமே இல்லாத சூனியம்' என்று ஒரு இடத்தை சொல்ல முடியாது.இது ஏன் என்றால் நிச்சயமில்லாத் தத்துவத்தின் (UNCERTAINTY PRINCIPLE)படி ஒரு பொருளின் உந்தம் மற்றும் நிலை இரண்டையும் ஒரே சமயத்தில் துல்லியமாக அளவிட முடியாது.சூனியம் என்று சொன்னால் பொருளின் உந்தம் மற்றும் இடம் இரண்டும் பூஜ்ஜியம் (0,0) என்று உறுதியாக சொன்னது போல ஆகி விடும். எனவே இந்த தத்துவத்தை மெய்ப்பிக்க இயற்கை சில புதிரான நடவடிக்கைகளைக் காட்டுகிறது :-

* ஒன்றுமே இல்லாத சூனியத்தில் இருந்து பொருள் (+எதிர்ப் பொருள் )தோன்றுவது (Virtual particle ) . ஒன்றும் இல்லை என்று நாம் சாதாரணமாக சொல்லும் வெற்றிடத்தில் கூட கோடிக்கணக்கான virtual particles - தோன்றி மறைந்து தோன்றி மறைந்து ஆனந்தத் திருநடனம் புரிகின்றன.இது ஏன் என்றால் மறுபடியும் ஆற்றல்-நேர நிச்சயமின்மை (energy time uncertainty ) ஒரு நிகழ்வின் ஆற்றலையும் அதன் கால அளவையும் மிகத் துல்லியமாக ஒரே நேரத்தில் அளவிட முடியாது என்கிறது அது .வகுப்பில் வாத்தியார் திரும்பி போர்டில் எழுதும் போது உடனே எழுந்து நின்று அவரை பழிப்புக் காட்டி விட்டு (அவர் திரும்புவதற்குள்)உட்கார்ந்து கொள்ளும் மாணவனின் செயல் போல இது இருக்கிறது. சூனியத்தில் இருந்து தோன்றும் பொருள்-எதிர்ப்பொருள் ஜோடி மிகக் குறைந்த கால அளவே நிலைத்து இருக்கும்.இந்த மிகக் குறைந்த கால அளவு அந்த நிகழ்வின் ஆற்றலை பெருமளவு நிச்சயம் இல்லாததாக ஆக்குகிறது.இதை சாதகமாக்கிக் கொண்டு பிறக்கும் பொருள் எதிர்ப்பொருள் ஜோடி எங்கே வாத்தியார் திரும்பி விடுவாரோ என்று பயந்து உடனே அடங்கி அழிந்து போய் விடுகிறது.(இங்க எதுவுமே நடக்கலை!) நாம் பார்க்கும் போது எப்போதும் சூனியமே தெரிகிறது.

* முழுவதும் வெற்றிடத்தில் (vacuum)
மிக அருகில் வைக்கப்பட்ட , மின்னேற்றம் இல்லாத (uncharged) இரண்டு தகடுகள் தங்களுக்கு இடைய ஒரு மிக மெல்லிய விசையை உணரும் (Casimir Effect )

* பூஜ்ஜிய ஆற்றல் வெப்ப நிலை: ஒரு பொருளை மிகச் சரியாக -273 டிகிரி செல்சியஸ் (0 டிகிரி கெல்வின்)வெப்ப நிலைக்கு குளிர்வித்தால் அது தன் ஆற்றல் அத்தனையையும் இழந்து விடும்.ஆனால் இயற்கை இதை அனுமதிப்பதில்லை.ஆற்றல் ஆடை அணிந்துள்ள இயற்கையை மனிதன் முழு நிர்வாணமாகப் பார்க்கவே முடியாது. குறைந்த பட்சம் அது 1 /2 hv என்ற ஆற்றல் உள்ளாடையை அணிந்திருக்கும்!

சரி இதெல்லாம் Particle physics ! இதில் ஆழமாகப் போக வேண்டாம். காலக்சிகள் , நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள வெளி நமக்கு ஒன்றும் அற்ற வெளியாகத் தோன்றினாலும் அதில் ஒரு மெல்லிய
குளிர்ந்த சீரான வெளிச்சம் பரவி இருக்கிறது. ஒரு கைதேர்ந்த பெயிண்டர் பிரபஞ்சம் முழுவதையும் மிக நேர்த்தியாக பெயின்ட் செய்தது போல! இந்த பெயிண்டை டெக்னிகலாக
"Cosmic Microwave Background Radiation" (CMBR) தமிழில் பிரபஞ்ச நுண்ணலைபின்புல கதிர்வீச்சு என்கிறார்கள்.

கடவுளுக்கு அடுத்தபடியாக (அப்படி ஒருவர் இருந்தால்) 'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தபூர்த்தியாகி ' என்ற தாயுமானவர் பாடல் இந்த CMBR ருக்கு பொருந்தும்.ஆனால் இந்த பிரகாசத்தை நாம் பார்க்க முடியாது. அதிகபட்சம் சிலசமயங்களில் டி.வியில் சானல் மாற்றும் போதும் மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கும் போதும்இந்தப் பிரபஞ்ச கதிர்வீச்சு இடையூறு செய்கிறது என்கிறார்கள்.இதை ஏன் பார்க்க முடியாது என்றால் கட்புலனாகும் அலைகளை விட இதன் அதிர்வெண் மிக மிகக் குறைவு.(அதிக அலைநீளம்,1 செ.மீ )அதிர்வெண் குறைவு என்றால் அந்த அலையின் ஆற்றலும் குறைவாக இருக்கும். ஆற்றல் குறைவு என்றால் வெப்ப நிலையும் குறைவு,எனவே இந்த பின்புலக் கதிர்வீச்சு பூஜ்ஜிய ஆற்றல் வெப்ப நிலைக்கு ஒரு
மூன்று டிகிரிகள் அதிகமாக 3K வெப்ப நிலையில் இருக்கிறது.இதை தற்செயலாகக் கண்டு பிடித்த அர்னோ பென்சியாஸ் மற்றும் ராபர்ட் வில்சன் இருவருக்கும் 1978 ஆம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டது.போன அத்தியாயத்தில் பார்த்தபடி இந்த 3k மைக்ரோவேவ் கதிர்வீச்சை ஒரு தேவையில்லாத Noise சிக்னல்-லாகத்தான் அந்த இருவரும் முதலில் கருதினார்கள். தங்கள் ஆன்டனாவில் ஏதாவது புறா எச்சம் இருந்து அதன் மூலம் இது ஏற்படலாம் என்று ஆண்டனாவை சோதனை செய்தார்கள். ஆனால் அது புறாவின் எச்சம் அல்ல. நம் பிரபஞ்சம் ஒரு காலத்தில் வெடித்துச் சிதறிய வெப்பத்தின் எச்சம் என்று அறிந்து கொள்ள அவர்களுக்கு சிறிது காலம் ஆனது.

ஒரு இடத்தில் சாம்பல் கொட்டிக் கிடக்கிறது. அதைத் தொட்டுப் பார்க்கிறீர்கள்.கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கிறது. அப்படியானால் அந்த இடம் சிறிது நேரத்துக்கு முன்னர் மிக அதிக வெப்ப நிலையில் எரிந்து கொண்டு இருந்திருக்கலாம் என்று ஊகிக்கிறீர்கள்.இதே ஊகம் இங்கேயும் பொருந்தும். இப்போது ஆற்றல் குறைந்து வெப்பநிலை குறைந்து காணப்படும் இந்த நுண்ணலைக் கதிர்வீச்சு ஒரு காலத்தில் அதிக ஆற்றலுடன் அதிக வெப்பநிலையுடன் துடிதுடித்துக் கொண்டிருந்த காமா அலைகளாக இருந்திருக்கலாம் என்று ஊகிக்க முடியும். ஒரு வாயுவை எந்த அளவு அமுக்குகிறோமோ அந்த அளவு அதன் வெப்பநிலை அதிகரிக்கும் என்று நமக்குத் தெரியும்.அதே போல பிரபஞ்சத்தில் ஆரம்ப நாட்களில் இந்த காமா அலைகள் மிகக் குறைந்த கன அளவில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.எனவே அவற்றின் வெப்ப நிலை ,ஆற்றல் ,அதிர்வெண் எல்லாம் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.பின்னர் பிரபஞ்சம் விரியத் தொடங்கியதும் இந்த அலைகள் வெளியுடன் சேர்ந்து நீட்டிக்கப்பட்டு ,அதிக கன அளவில் (volume ) அவற்றின் வெப்பம் படிப்படியாகக் குறைந்திருக்க வேண்டும்.(கொதிக்கும் நீரை ஒரு டம்ப்ளரில் ஊற்றினால் சூடு அதிகமாக இருக்கும். அதே அளவு நீரை ஒரு பெரிய அண்டாவில் ஊற்றினால் சூடு மிகப் பெரிய பரப்பில் பரவி வெப்ப நிலை குறைந்து விடும் இல்லையா? அது மாதிரி)

அதாவது ஒருகாலத்தில் ஆற்றல் அதிகமாக இருந்து சக்தியுடன் கோலோச்சிய காமா அலைகள் தான் இப்போது சக்தி வெகுவாகக் குறைந்து கிட்டத்தட்ட செத்துவிட்ட ஒரு சிங்கம் போல படுத்து விட்டன (எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்).இன்னொரு விதமாக சொல்வதென்றால் ஒருகாலத்தில் நம் பிரபஞ்சத்தாய் படைத்த சூடான பணியாரம் இன்று ஆறிய அவலாக நமக்குக் கிடைக்கிறது.

சரி பிரபஞ்சத்தின் வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் இந்த அலைகள் பெருமளவு ஆற்றல் குறைந்து அவற்றின் அதிர்வெண் கட்புலனாகும் ஒளிக்குப் பொருந்துவதாக இருந்திருக்கலாம்.அந்தக் காலகட்டத்தில் நம் சூரியனும் அதில் பூமியும் அதில் மனிதனும் தோன்றி இருந்தால் அவனுக்கு இரவு என்பதே இருந்திருக்காது. விளக்குகளும் தேவைப்பட்டிருக்காது. இந்த பிரபஞ்சப் பின்புல ஒளி இரவும் பகலும் நம்மை சதா நனைத்தபடி இருந்திருக்கும்.(தூங்கவே முடியாது!) 'இருட்டு' என்பது நம் உடலில் சில செல்கள் வேலை செய்வதற்கு மிக அவசியம் என்கிறார்கள்.(சில பேர் நைட்-லாம்ப் கூட இல்லாமல் முழு இருட்டில் படுக்க வேண்டும் ;அதுதான் நல்லது என்று சொல்வார்கள்) அதாவது மனிதனைப் போன்ற புத்திசாலித் தனமான உயிர்கள் தோன்றுவதற்கு இருட்டு கூட அவசியம் என்று ஆகிறது. பிரபஞ்சப் பின்புலக் கதிரியக்கம் UV அலைகளாகவோ கட்புலனாகும் ஒளியாகவோ இருந்திருந்தால் அது உயிர்களின் தோற்றத்துக்கு அவ்வளவாக உதவி செய்யாது.எனவே இயற்கை நம்மைப் படைப்பதற்கு பின்புலக்கதிரியக்கம் நுண்ணலையாக மங்கி மாறும் வரை காத்திருக்க வேண்டி இருந்திருக்கலாம். எனவே தான் நாம் வாழும் இந்த காலத்தை சில
விஞ்ஞானிகள் பொற்காலம் (Golden Age ) என்கிறார்கள். அதாவது பிரபஞ்சம் ரொம்ப இளமையாகவும் இல்லாமல் ரொம்ப வயசாகியும் இல்லாமல்....மிகவும் இளமையாக இருந்தால் விண்மீன்கள் தோன்றி இருக்காது. கார்பன், நைட்ரஜன் ,தங்கம் போன்ற கனமான தனிமங்கள் சூப்பர் நோவாவில் தோன்றி இருக்காது. மிகவும் வயதாகி இருந்தால் எல்லா விண்மீன்களும் கிட்டத்தட்ட எரிந்து முடித்து விட்டிருக்கும். நடுத்தர வயதில் தான் வாழ்க்கை சுகமாக இருக்கும் என்று சொல்வார்கள். அது போல நம் பிரபஞ்சம் இப்போது குழந்தையும் அல்ல; தாத்தாவும் அல்ல. ஆரோக்யமான ஒரு நடுத்தர நாற்பது வயது மனிதன்!

இப்போதைக்கு உள்ள BIGBANG தத்துவப்படி , ஒரு காலத்தில் (கிட்டத்தட்ட பதிமூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) பிரபஞ்சம் சூனியத்தில் இருந்து திடீரென்று வெடித்து விரிவடைய ஆரம்பித்தது என்று சொல்கிறார்கள்.எப்படி பிரபஞ்சத்தின் வயதை Birth Certificate எல்லாம் இல்லாமல் சொல்கிறார்கள் என்றால் நம்மால் அதிக பட்சம் பதிமூன்று பில்லியன் ஒளிஆண்டுகள் தொலையில் உள்ள விண்மீன்களில் இருந்து வரும் ஒளியைப் பார்க்க முடிகிறது.அதாவது வெளியில் (SPACE )நாம் எவ்வளவு தூரம் பார்க்கிறோமோ அவ்வளவு பின்னோக்கிய இறந்த காலத்தில் பார்க்கிறோம்.ஒளி நம்மை வந்து அடைய அத்தனை காலம் எடுத்துக் கொண்டது என்று அர்த்தம். எனவே நம்மால் பார்க்கக் கூடிய இந்தப் பிரபஞ்சத்தின் வயது (AGE OF OBSERVABLE UNIVERSE ) 13 பில்லியன் ஆண்டுகள் என்று அர்த்தம்.குழந்தையின் வயது என்பதை அது வெளியே வந்து நாம் பார்க்க ஆரம்பித்த அந்த நொடியில் இருந்து தான் சொல்கிறோம் அல்லவா? அது அம்மா கர்ப்பப்பையில் எப்போது உருவானது என்றெல்லாம் கணக்கிடுவதில்லை.அதே மாதிரி நம் கண்ணுக்குத் தெரியும் இந்த பிரபஞ்சத்தின் வயது இத்தனை அவ்வளவு தான். நம்மால் கவனிக்கத் தகுந்த பிரபஞ்சத்தை ஒருவழியாக கம்ப்யூட்டரில் எல்லாம் கொடுத்து படம் வரைந்திருக்கிறார்கள் பாருங்கள்.


பிரபஞ்சம் வெடித்துச் சிதறிய அந்த நிகழ்வை யாராலும் பார்த்திருக்க முடியாது (அதை படைத்தவரால் கூட) இன்று CMBR ஆகப் படர்ந்திருக்கும் ஃ போட்டான்கள் பிரபஞ்சம் உருவாகி சுமார் மூன்று லட்சம் வருடங்கள் கழிந்து தான் தங்கள் பயணத்தைத் தொடங்கின என்கிறார்கள். (இது ஏன் என்று பிறகு பார்க்கலாம்)அப்படியானால் பிரபஞ்சம் தொடங்கி மூன்று லட்சம் வருடங்கள் அது யார் கண்ணுக்கும் தெரிந்திருக்காது. சரி இப்படியே காலத்தில் பின்னோக்கி சென்று பிரபஞ்ச சினிமாவை பின்னோக்கி ஓட்டி பிரபஞ்சம் தொடங்கி 10 ^-43 செகண்டுகள் வரை
விஞ்ஞானிகள் TRACE BACK செய்திருக்கிறார்கள். அதற்கு முன் என்ன நடந்தது , பிரபஞ்சம் ஏன் வெடித்தது யாரால் வெடித்தது என்பதெல்லாம் தெரியவில்லை.ஆனால் பிரபஞ்சம் வெடித்த போது அது பயங்கரக் குழப்பத்தில் கற்பனைக்கு எட்டாத அடர்த்தியுடன் அதிபயங்கர வெப்பநிலையில் இருந்தது என்கிறார்கள். சரி பிரபஞ்சம் வெடித்த அந்த நிகழ்வின் ஒரு கமென்டரி இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

PLANK ERA (less than 10 ^-43 sec ) -பிளான்க் சகாப்தம் (?!)

பிரபஞ்சம் தோன்றிய அந்த EXACT கணம் இது.இதில் என்ன நடந்தது என்று இயற்பியல் சொல்ல முடியாமல் திணறுவதற்கு காரணம் பிரபஞ்சம் வெடித்து ஒரு சில கண நேரத்திற்கு அது பிளான்க் நீளத்தின் (PLANCK LENGTH ) அளவை விட சிறியதாக இருந்தது என்கிறார்கள்.பிளான்க் நீளம் என்றால் மிக மிகச் சிறிய வெளி எல்லை. அங்கே அறிவியலின் அத்தனை விதிகளும் தோற்றுப் போகும்.விதிகள் தோற்றுப் போகும் இந்தப் புள்ளியை SINGULARITY என்று சொல்கிறார்கள்.பிரபஞ்சம் யாரால் படைக்கப்பட்டது ஏன் படைக்கப்பட்டது என்ற கேள்விகளுக்கு இயற்பியலில் (இதுவரை)விடை இல்லை. Oscillating universe என்ற ஒரு கொள்கைப்படி பிரபஞ்சம் விரிந்து சுருங்கி பின்னர் தன்னைத் தானே படைத்துக் கொள்ளும் என்கிறார்கள்.அதாவது படைத்தவனும் படைப்பும் என்ற தான் என்ற தத்துவம்.நாம் முதலிலேயே சொன்னபடி இந்த SINGULARITY என்ற வார்த்தை கூட மிகவும் அர்த்தம் பொதிந்தது. ஒரு மகா ஒருமை நிலை. நான் நீ அது இது நேர் எதிர் இடம் வலம் போன்ற எந்த பேதங்களும் இன்றி எல்லாம் ஒருமித்து ஒன்றுடன் ஒன்று சங்கமித்து இருந்த நிலை. (வேதாந்தம் இந்த நிலையை பொதுவாக அத்வைதம் என்று சொல்கிறது. ஒன்று என்று சொல்ல வேண்டியது தானே? அது ஏன் 'இரண்டு இல்லை' என்று நெகடிவ் ஆக சொல்ல வேண்டும்? யோசியுங்கள்.).பிரபஞ்சம் என்பதை ஏகாந்த நிலையில் இருந்து விலகிய DISTURBANCE என்று இயற்பியல் சொல்கிறது. இந்த DISTURBANCE அல்லது ஒழுங்கின்மை பிரபஞ்சம் விரியத் தொடங்கிய நாளில் இருந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. [மீண்டும் அந்த குழப்பங்கள் அற்ற ஏகாந்த நிலையை பிரபஞ்சம் அடையும்; ஒருநாள் மீண்டும் சுருங்கத் தொடங்கும் என்கிறார்கள்]

பிளான்க் சகாப்தத்தின் போது இன்று பிரபஞ்சத்தை ஆளும் நான்கு விசைகளும் ஒன்றாக ஒருமித்து இருந்தன. பிளான்க் காலகட்டத்தின் முடிவில் ஈர்ப்பு விசை மட்டும் முந்திரிக் கொட்டைத் தனமாக மற்ற மூன்று விசைகளில் இருந்து சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்து சுயேட்சையாக நின்றது .இன்று வரை ஈர்ப்பு வேறெந்த விசையுடனும் கூட்டணி சேராமல்
சுயேட்சையாகவே இருக்கிறது. அதை எப்படியாவது மனம் மாற்றி கூட்டணிக்குள் கொண்டு வந்தால் உங்களுக்கு நோபல் பரிசு நிச்சயம்.
நாஸதீய சூக்தம்


ஏகோ அஹம் பவிஷ்யாமி - அது ஒன்று தான். அது பலவாய் ஆக விரும்பியது என்பது இந்துமதம் படைப்புக்கு கூறும் விளக்கம்.இது BIG BANG உடன் ஓரளவு ஒத்து வருகிறது. ஆனால் ஓம் என்பதே பிரபஞ்சப் பெருவெடிப்பைக் குறிக்கிறது. நடராஜரின் வடிவம் BIG BANG ஐக் குறிக்கிறது பிரம்மம் என்றாலே விரிவடைவது என்று பொருள் போன்ற அதீதமான விளக்கங்களை நிராகரித்து விடுவோம்.

இருந்தாலும் ரிக் வேதத்தின் 'நாஸதீய சூக்தம்' பிக் பாங் -ஐக் குறிக்கலாம் என்கிறார்கள். (தத்துவ ஞானிகளால் மிக அதிகமாக அலசப்பட்ட பகுதி இது)
சூக்தத்தின் சுருக்கப்பட்ட ஒரு தமிழாக்கம் கீழே:

ஆதியில் இருத்தலும் இல்லை இல்லாமையும் இல்லை-அது
எல்லா இருமைகளும் மறையும் ஓர் எல்லை
இருட்டு எங்கும் ஒரே இருட்டு
இருட்டில் ஒளிந்திருந்த அது உதித்தது
வெப்பத்தை உண்டு கொதித்தது;வளர்ந்தது !
இதன் ரகசியத்தை யார் தான் அறிவார்
எப்போது இது வந்தது? எதனால் வந்தது? யாரும் அறியார்
அவனுக்கு மட்டும் இது தெரிந்து இருக்கலாம்
இல்லை அவனும் கூட இதை அறியாது இருக்கலாம்


சமுத்ரா

Tuesday, November 29, 2011

கலைடாஸ்கோப் -45

லைடாஸ்கோப் -45 உங்களை வரவேற்கிறது.

ஒன்று
======


Good project management is not so much knowing what to do and when, as knowing what excuses to give and when.

ஒரு மீட்டிங்-கின் போது எங்கள் மேனேஜர் 'I have been managing this project for...' என்று சொல்வதற்குப் பதிலாக 'I have been damaging this project' என்று சொல்லி விட்டார்.உண்மையை சொல்ல வேண்டும் என்று சொன்னாரா இல்லை நாக்கு குழறி விட்டதா தெரியவில்லை.மேனேஜர் -களுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே உள்ள உறவு மாமியார்-மருமகள் உறவு போல எப்போதும் உராய்வுகள் நிறைந்ததாகவே இருக்கிறது. அவன் தான் சரியில்லை என்று இவனும் இவன் தான் சரியில்லை என்று அவனும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வது!

உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒன்று: இன்னொருவரைப் பற்றிக் கவலைப்படாமல் மாங்கு மாங்கு என்று தன் வேலையை (மட்டும்)பார்க்க வேண்டும் என்ற மனோபாவம் கொண்டவர்கள். இன்னொன்று, தான் வேலை செய்யாமல் பிறரை நிர்வாகம் மட்டும் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள். இந்த இரண்டு வேலைகளில் எது சுலபம் எது கடினம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்லுவார்கள். மேனேஜரைக் கேட்டால் பத்து பேரை கட்டி மேய்க்கும் வேலை தான் சவாலானது என்று சொல்வார். தொழிலாளியைக் கேட்டால்
'அவரை ஒருநாள் நாங்கள் செய்யும் வேலையை செய்து பார்க்கச் சொல்லுங்க; அப்ப தான் எங்க கஷ்டம் புரியும்' என்று சொல்வார்கள்.

மேனேஜரைப் பற்றி கேலியாக இப்படி சொல்வார்கள் 'ஒரு பெண் ஒன்பது மாதத்தில் ஒரு குழந்தையைப் பெற்றால் ஒன்பது பெண்கள் சேர்ந்து ஒரு மாதத்தில் ஒரு குழந்தையைப் பெற முடியும் என்று நினைப்பவர்' ...மேலும், you can relax and take your own time..but make sure that the work is completed before this Friday!?! போன்ற அருமையான அர்த்தம் பொதிந்த வாசகங்களை உதிர்ப்பது மேனேஜர்களுக்கு மட்டுமே கைவந்த கலை.

ஆனால் நிர்வாகம் செய்வது என்பது ஆடுகளை மேய்ப்பது போல சுலபமான வேலை அல்ல. ஏனென்றால் ஆடுகள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். ஒன்றுக்குப் பின் ஒன்று வசியம் செய்து விட்டது போல சமர்த்தாக நடக்கும்.ஆனால் மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம், ஒவ்வொருவருக்கும் ஒரு குணம்!மேலும் இப்போதெல்லாம் தினம் பதினாறு மணிநேரம் வேலை வாங்கும் அடிமைமுறை நடைமுறையில் இல்லை. கொஞ்சம் ஏதாவது மாறுதலாக சொல்லிவிட்டாலே மோப்பக் குழையும் அனிச்சம் போல H .R இடம் போட்டுக் கொடுத்து விடுவார்களோ SKIP LEVEL MEETING வைத்து விடுவார்களோ என்று மேனேஜர்களும் இன்று பயப்பட வேண்டி இருக்கிறது.மேனேஜருக்கு கஸ்டமரிடம் பதில் சொல்ல வேண்டும்;திடீரென்று வந்து நாலுநாள் லீவ் கேட்கும் ஆளை Handle செய்ய வேண்டும். அடுத்த ரிலீசுக்கு Resource Management செய்யவேண்டும்;எதிர்பார்க்காமல் வந்து ரிசைன் செய்யும் ஆளுக்கு back -up பிளான் இருக்க வேண்டும்.இப்படி எத்தனையோ!

கடைசியாக : Good project managers know when not to manage a project.


இரண்டு
=========

தனியாக இருக்கும் போது பயமாக இருந்தால் உடனே லாப்-டாப்பை ஆன் செய்து ஏதாவது ஒரு பேய்ப்படம் பார்ப்பது வழக்கம்(?) . it works ! Law of Reverse Effects என்பார்கள். திகில் படம் என்பதற்கான வரையறை காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறி வருகிறது.மிகப் பழைய படங்களில் மண்டை ஓடு, எலும்புக் கூடு இதையெல்லாம் காட்டினால் போதுமானதாக இருந்தது. பிறகு வெள்ளைப்புடவை கட்டிக் கொண்டு வந்தால் போதும் அது தான் பேய் என்று நம்பி எடுக்கப்பட்ட படங்களும் இருந்தன. ஆனால் உண்மையிலியே ஜகன் மோகினியில் வரும் சிவப்புத் தலை வெள்ளை உடல் பேய்கள் கொஞ்சம் திகிலாகத் தான் இருக்கும்.

'வா அருகில் வா' பொம்மையைப் பார்த்து விட்டு அடுத்த மூன்று மாதம் ராத்திரியில் உச்சா போக அம்மாவை எழுப்பியது நினைவில் வருகிறது.இப்போதெல்லாம் (பெரும்பாலான) திரைப்படங்களில் ஆவி, பேய், போன்றவை Out -dated concepts ஆகி விட்டன. மக்கள் கற்பனைத் திறன் மிக்க திகில் கதைகளை எதிர்பார்க்கிறார்கள். சமீபத்தில் பார்த்த ஒரு படம்
WRONG TURN ! ஆங்கிலத் திகில் திரைப்படங்களில் பெரும்பாலும் ஒரு ஏழெட்டு பேர் (கல்லூரி மாணவர்கள் குறிப்பாக) ஒரு தனிமையான காடு, மலைப் பிரதேசங்களுக்கு விடுமுறையைக் கழிக்கப் புறப்படுவார்கள். முதல் பதினைந்து நிமிடங்களுக்கு அந்தப் பருவத்துக்கே உரிய குறும்புகளை செய்து கொண்டு குதூகலமாக இருப்பார்கள். அப்புறம் அங்கே வாழும் ஒரு முகமூடி சைக்கோ கொலைகாரனோ இல்லை மனித மாமிசம் தின்னும் விகாரமான மனிதர்களோ இருப்பார்கள். ஒவ்வொருவராக விதம் விதமாகக் கொலை செய்வார்கள். சில பேரை அப்படியே கத்தி ஒரே துண்டாக தலையை வெட்டி விடும். சில பேர் பாவம். பக்கத்தில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருக்க கைகால் கட்டி படுக்க வைத்து ஒவ்வொரு சதையாக அறுத்து வறுத்து ருசித்து சாப்பிடுவார்கள்.பக்கத்தில் பசியில் அழும் குழந்தைக்கு வாயில் கட்டைவிரலை வெட்டி சப்ப வைப்பார்கள்.சரி இதற்கு மேல் வேண்டாம். கடைசியில் ஒருத்தரோ இரண்டு பேரோ எப்படியோ அந்த ஆபத்தில் இருந்து தப்பி வெளியே வருவார்கள்.SAW போன்ற திகில் படங்களில் ஒருவரை எத்தனை விதமாக Creative ஆக சாகடிக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்திருப்பார்கள்.

உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒரு விதத்தில் Cannibal தான் என்று உளவியல் சொல்கிறது .அதாவது மனிதன் உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் தன் இனத்தின் மாமிசத்தை ஒருமுறையாவது சாப்பிட்டு ருசி பார்க்கவேண்டும் என்ற ஆழ்மன ஆசை இருக்கிறதாம். காதலில் ஈடுபடும் இருவர் LOVE BITE செய்வதும், partner இன் உடம்பை ஈரமாக்குவதும் இந்த ஆழ்மன ஆசையின் வெளிப்பாடுகள் தானாம்.சரி இந்த டாபிக் எனக்கு ஒருமாதிரி இருக்கிறது. முழுதாக முடிக்கக் கூடத் தோன்

மூன்று
=======

விஜய் டி.வி. யின் ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி பார்த்திருக்கிறீர்களா? போட்டியாளர்களில் ஒருவருக்கு ஒரு வார்த்தை கொடுக்கப்படும். அவர் தன்னுடைய பார்ட்னருக்கு தொடர்புடைய ஒற்றை வார்த்தை க்ளூ-க்களைக் கொடுத்து அவரை சரியான விடையை ஊகிக்க வைக்க வேண்டும். கண்டிப்பாக தமிழ் வார்த்தைகளைத் தான் உபயோகிக்க வேண்டும். அவ்வப்போது அந்த நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட காமெடிகள் நடக்கும்.

ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தை 'வகுப்பு'. இதற்குத் தொடர்புடைய ஒருசொல் வார்த்தைகளை சொல்லி பதிலை ஊகிக்க வைக்க வேண்டும். அதிக பட்சம் மூன்று க்ளூ!

பெண் 1 : பல்லி (அவர் சொல்ல நினைத்தது பள்ளி!)
பெண் 2 : பூரான் ?
பெண் 1: நடப்பது (பள்ளியில் நடப்பது வகுப்பு)
பெண் 2 : கரப்பான்பூச்சி?
பெண் 1 : புத்தகம்
பெண் 2: புழு (புத்தகப் புழுவாம்!)

நிகழ்ச்சி நடத்துபவர்: இதுக்கு தான் தமிழ்ல ல, ள எல்லாம் சரியா படிச்சுட்டு வரணும்கறது.

சில வார்த்தைகள் நமக்கு இயந்திரத்தனமாக வேறு ஒரு வார்த்தையுடன் இணைப்பைத் தருகின்றன. கடல் என்றால் நம்மில் நிறைய பேர் அடுத்த வார்த்தை அலை என்று தான் சொல்வோம்.இதே போல எதிரெதிரான விஷயங்கள் எப்போதும் ஒட்டிக் கொண்டே இருக்கின்றன. (வார்த்தைகளில்) நண்பன்-எதிரி , இரவு-பகல், வானம்-பூமி, இன்பம்-துன்பம்.

வார்த்தை இணைப்பு என்பதை மூளை பல வழிகளில் செய்கிறது. சில உதாரணங்கள்:

எதுகை : மயில் -குயில்,பட்டி-தொட்டி
மோனை : ஆடி- அமாவாசை,சூடு-சொரணை
உறவு : அம்மா- அப்பா, சித்தி-சித்தப்பா
பாகம் : கடல் - அலை, மரம்-இலை
எதிர்: சிரிப்பு -அழுகை, ஆண்-பெண் ,குண்டு-ஒல்லி
பட்டப்பெயர் : நிழல்கள் -ரவி, வால்டர்- வெற்றிவேல்,வெண்ணிற ஆடை- நிர்மலா
பணி : கடிகாரம்- நேரம், உழவன் -விவசாயம்
உணர்ச்சி : பேய் -பயம், நாய் -நன்றி
உணவு : இட்லி -சாம்பார் , பூரி-கிழங்கு , சரக்கு-ஊறுகாய் (?)

(இன்னும் உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்)

இந்த Association பெரும்பாலும் எல்லாருக்கும் இப்படி தான் இருக்கும். ஒருவர் எந்த அளவு நார்மல் என்று இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். உதாரணமாக,டாக்டர் என்று சொன்னால் மருந்து, ஊசி, நர்ஸ்,ஸ்டெதஸ்கோப் இப்படி எதையாவது சொல்ல வேண்டும். சாமியார் என்று சொன்னால் ஆசிரமம், காவி, அருள்வாக்கு, ரஞ்சிதா என்று எதையாவது சொல்ல வேண்டும். டாக்டர் என்றால் கேரம்போர்ட் என்றோ சாமியார் என்றால் டைனோசர் என்றோ சம்பந்தம் இல்லாமல் உளறினால் ஒன்று அவர் ஜோக் செய்ய வேண்டும்.இல்லை Something Wrong !

ஒருவர் ஒரு வார்த்தையை எதனுடன் இணைக்கிறார் என்பதை வைத்துக் கொண்டு அவரை எடை போடமுடியும். உதாரணமாக பொங்கல் என்று சொன்னதும் தை என்றோ தீபாவளி என்றோ சொன்னால் அவர் விழாக்களை விரும்புபவர் என்று ஊகிக்கலாம். அனால் முந்திரிப்பருப்பு என்றோ அன்னபூர்ணா என்றோ சொன்னால் அவர் சரியான தீனிப்பண்டாரம் என்று அர்த்தம்.
சரி அம்மா என்றால் பெரும்பாலும் எல்லாரும் அப்பா என்றோ அன்பு என்றோ பாசம் என்றோ குழந்தை என்றோ சொல்வார்கள். சரிதானே?

என்னது? உங்களுக்கு அம்மா என்றதும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஞாபகம் வருகிறதா? கைகொடுங்கள்..உங்களுக்கு அரசியலில் சேர நேரம் வந்துவிட்டது.

நான்கு
======

சில பேருக்கு சாப்பாடு சூடாக இருந்தால் தான் உள்ளே இறங்கும். எங்கள் சொந்தக்காரர் ஒருத்தர் இருக்கிறார். காபி சுடச்சுட இருக்க வேண்டும் அவருக்கு.நாமெல்லாம் அப்படிக் குடித்தால் நாக்கு வெந்து விடும்! கொஞ்சம் சூடு குறைந்து இருந்தாலும் தயவு பார்க்காமல் தரையில் வீசி விடுவார். சாப்பாடு சூடாக இல்லை என்று ஹோட்டலில் சர்வருடன் சண்டை போடும் சிலரை நாம் பார்த்திருப்போம்.சூடு என்பதை ஏழாவது ருசி என்பார்கள் சிலர்.என்னைப் போன்ற சில பேருக்கு அப்படியே Opposite ! சூடு என்பது உணவின் ருசியை மறைத்து விடுகிறது என்று நம்பும் ரகம்.

மீன்குழம்பு கொதிக்கக் கொதிக்க சாப்பிடுவதை விட நேத்து வைத்த மீன்குழம்பு தான் ருசியாமே? வெஜிடேரியன் என்பதால் இதை சரிபார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.ஆனால் இங்கே பிசிபேளே பாத் என்ற ஒரு சமாச்சாரம் இருக்கிறது.பிசி என்றால் சூடு என்று அர்த்தம். ஆனால் எனக்கு என்னவோ அது ஆறி இருந்தால் தான் மிகவும் ருசிக்கிறது.

ஒரு பெண் தன் கணவனுக்கு தினமும் கீரைக்கறி செய்து போட்டாளாம்.(வறுமை பாவம்!) ஒரு நாள் அவன் கோவித்துக் கொண்டு 'என்னடி தினமும் இந்த கருமம் தானா' என்று அதை அப்படியே சுவரில் தூக்கி எறிந்து விட்டானாம். கோவித்துக் கொண்டு வெளியே போனவன் சாயங்காலம் வயிறு காய்ந்து திரும்பி வந்து 'செவுத்துக் கீரையை வழிச்சுக் கொட்டடி செவுட்டு வெள்ளாட்டி' என்றானாம். ஆம். இந்த அனுபவம் நமக்கும் ஏற்பட்டிருக்கும். காலையில் என்ன இன்னிக்கும் உப்புமா தானா என்று சலித்துக் கொண்டு சாப்பிடாமல் போய் விட்டு சாயம்காலம் திரும்பி வந்து 'அந்த உப்புமா இருந்தா போடேன்' என்று அசடு வழிந்த தருணங்கள் நமக்கு இருந்திருக்கும். சாயங்காலம் உப்புமா ஆறிப்போய் இன்னும் சுவையாக இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஐந்து
======

சில பேர் 'நான் கடைசி வரையில் ஒரு மாணவனாக கற்றுக் கொண்டே இருக்க விரும்புகிறேன்' என்று சொல்வார்கள். இது எப்போதும் உண்மை இல்லை. சில பேர் உண்மையிலேயே வயதை மறந்து எதையாவது புதிதாகக் கற்றுக் கொண்டே இருப்பார்கள். எங்கள் அத்தை ஒருவருக்கு 75 + வயது ஆகிறது. தினமும் ஒரு கீர்த்தனையாவது மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற உறுதியில் இருக்கிறார் இன்னும். 'பாவயாமி' ல முகாரி பல்லவி மறந்துருச்சு , ஆரபிக்கு நிஷாதம் வருமா என்று எதையாவது ஆர்வக்கோளாறில் கேட்டுக் கொண்டே இருப்பார்.

வயது ஏற ஏற கற்றுக் கொள்ளும் ஆர்வம் குறைவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.ஒன்று உடல் சார்ந்தது. புத்தகத்தை விரித்தால் கண் சொக்கும். கால் மரத்துப் போய் விடும். முதுகு வலிக்கும் இப்படி. மன ரீதியான காரணம் இதையெல்லாம் படித்து என்ன ஆகப் போகிறது என்ற விரக்தி.என்னோடு படித்த கடைசி ரேங்க் வாங்கியவன் ,எல்லாப் பாடத்திலும் ஃபெயில் ஆனவன் எல்லாம் ஃபாரினில் செட்டில் ஆகி இருக்கும் போது நான் தேவையில்லாமல் Godel's incompleteness theorem , Space time curvature , சங்க இலக்கிய வரலாறு என்றெல்லாம் ஏன் படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற விரக்தி. சரி ஒரு கட்டத்துக்கு மேல் எக்ஸாம் ஹாலில் உட்காரவும் முடிவதில்லை.இஞ்சினியரிங்-இல் சுமார் ஐம்பது பேப்பர்களை மூன்று மணிநேரம் உட்கார்ந்து எழுதிய உடம்புக்கு இப்போது பேங்க் எக்ஸாம் -இரண்டு மணிநேரம் உட்கார முடிவதில்லை. ஒருவரை , அவரது திறமைகளை மூன்று மணிநேரம் அவர் உட்கார்ந்து எழுதும் விடைகளை வைத்து எடை போடும் அமைப்பு எனக்குப் பிடிப்பதில்லை.மேலும் இப்படி எல்லாம் கேள்விகள் வந்தால் அதைப் பொறுமையாகப் பிரித்து விடை கண்டுபிடிக்கும் பொறுமையும் இல்லை :-(
எனவே முதல் கேள்விக்கு A எழுதினோமா இதற்கு C எழுதலாம் என்ற ரேஞ்சில் தான் எழுதி விட்டு வந்தேன்.இதையும் மீறி எனக்கு பேங்கில் வேலை கிடைத்தால் அது போன ஜென்மப் புண்ணியமாகத்தான் இருக்கும்.

ஆறு
=====

ஒரு கவிதை :-

தான் இருக்கும் பாத்திரத்தின்
வடிவத்தை எடுத்துக் கொள்ளுமாம் தண்ணீர்- சரிதான்
கீழே ஊற்றியதும்
பிரபஞ்சத்தின் வடிவத்தை எடுத்துக் கொள்ளும்
ஆசையில் விரைந்து ஓடுகிறது!

ஏழு
====

|அவசரத்துக்கு வேறு ஜோக் கிடைக்கவில்லை.மன்னிக்கவும்|

ஒருநாள் ஹெல்த் அதிகாரி ஒருவர் விவசாயி ஒருவருக்கு உள்ளாடை அணிவதன் நன்மைகளை விளக்கினார்.

'பாருப்பா , ரெண்டு நன்மை இருக்கு, ஒண்ணு, இது ரொம்ப சுத்தமானது, இன்னொன்னு இது வெதுவெதுப்பா இருக்கும்"

அதிக வற்புறுத்தலுக்குப் பிறகு விவசாயி அதை அணிந்து கொண்டான். சிறிது நேரம் கழித்து அவனுக்கு இயற்கையின் அழைப்பு வந்தது. புதர்ப்பக்கம் ஒதுங்கினான்.ஆனால் பழக்கதோஷத்தில் உள்ளாடையைக் கழற்ற மறந்து போய் விட்டான்.

மேட்டர் முடிந்ததும் திரும்பிப் பார்த்தான். 'அட அவரு சொன்னது நெசம் தான் இது உண்மையிலேயே சுத்தமானது' என்று நினைத்துக் கொண்டான்.அப்புறம் தன் ட்ராக்டரில் போய் உட்கார்ந்தான் .இப்போது 'அட அவரு சொன்னது இன்னொன்னும் நெசம் தான்..எவ்வளவு கதகதப்பா இருக்கு' என்றான்.


முத்ரா