இந்த வலையில் தேடவும்

Tuesday, November 16, 2010

இருபத்து ஒன்று, பன்னிரண்டு -2


மதுரை சோமு பாடிய ஒரு பாடலை இ-ஸ்நிப்சில் கேட்க நேர்ந்தது...அது "நாளை என்றின்னொரு நாள் வருமா?" (சிந்து பைரவி). மூடனே , நாளை என்பது வராமலே போகலாம்...இன்றே முருகனை சரணம் செய்" என்ற அர்த்தத்தில். ...நாமெல்லாம் நாளை என்றொரு நாள் வரும் என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது..

நாளைக்கு ஆகும் என்று கருவேப்பிலையை ஃப்ரிஜ்ஜில் எடுத்து வைப்பதிலிருந்து,நாளைக்கு ஆபீசுக்கு போட்டுப் போவதற்கு சாக்ஸை துவைப்பதிலிருந்து நாளைக்கு உதவும் என்று கோடி கோடியாக இன்வெஸ்ட்மென்ட் செய்வது வரை...ஆனால் நம் எல்லாருக்கும் ஒட்டு மொத்தமாக ஒருநாள் நாளை என்றொரு நாள் வராமல் போகலாம்..என் சொல்கிறேன் என்றால் உலகம் அழியப் போகிறது என்று நம்புவது எவ்வாறு மூட நம்பிக்கையோ அதே மாதிரி உலகம் அழியாது என்று நம்புவதும் கூட மூட நம்பிக்கை தான்...It is only a matter of time ...பிரபஞ்சம் எப்போதும் மாறாமல் இருக்கிறது என்ற static theory அறிவியலில் எப்போதோ அடிபட்டு விட்டது...பிரபஞ்சம் மாறிக் கொண்டிருக்கிறது...ஒரு நிதானமான பேரழிவை நோக்கி...பிரபஞ்சமே அழியும் என்றால் நம் அல்ப பூமியின் ஆயுளை என்ன சொல்வது?

மனிதன் தான் மட்டுமே பெரியவன் என்று நிமிர்ந்து நடக்கிறான்...ஒரு நெம்புகோல் கொடு, பூமியையே தூக்கிக் காட்டுகிறேன் என்று சவால் விடுகிறான்...பக்கத்து நட்சத்திர மண்டலத்திற்கு பயணம் செய்ய நாள் குறிக்கிறான்...சரிதான்...இவற்றைப் பார்த்து பூமி சிரிக்கக் கூடும்...பாவம் சின்னப் பயல்..ஆடும் வரை அவன் ஆடட்டும் என்று நினைக்கும் ..பூமியின் சாய்வுகோணம் ஒரு கால் டிகிரி மாறினாலும் மனிதன் வெப்பத்தில் வெந்தோ, குளிரில் நடுங்கியோ இருந்த இடம் தெரியாமல் போய் விடுவான்..சாய்வு இருக்கட்டும்..அது பெரிய விஷயம்...கடல் கொஞ்சம் பொங்கினாலும் லட்சக் கணக்கான பேர் மாயா பஜார் கடோத்கஜன் வாயில் போகும் லட்டு மாதிரி உள்ளே போய் விடுவார்கள்...சரி உலகம் அழிந்து விடும் என்று சில பேர் தீர்க்கமாக நம்புவதற்குக் ஒரு முக்கிய காரணம் மாயன் (மயன்) காலண்டர்...பூமி காலண்டரெல்லாம் பார்க்குமா என்று கேட்க வேண்டாம்... ஆனாலும் இயற்கைக்கும் எண்களுக்கும் ஏதோ ஒரு கண்காணாத தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது... உதாரணமாக பதிமூன்றாம் தேதியும் வெள்ளிக் கிழமையும் ஒன்றாக வந்தால் (Friday the 13th ) அது ஒரு கருப்பு நாள்...(நீங்கள் Friday the 13th என்ற திகில் படத்தை பார்த்திருக்கிறீர்களா ?) அன்று வழக்கத்துக்கு மாறாக நிறைய சாலை விபத்துகள் நடக்கின்றனவாம்...கிட்டத்தட்ட உலகின் எல்லா நாகரீகங்களிலும் 13 என்பது ஒரு ராசியில்லாத சாத்தானின் நம்பராகவே கருதப்பட்டு வந்துள்ளது..வீடுகளுக்கு,குதிரைகளுக்கு 13 என்ற நம்பரைக் கொடுக்காமல் 12A என்று கொடுக்கிறார்கள்...பெரும்பாலான கட்டிடங்கள் பதிமூன்று தளங்களுடன் கட்டப்படுவது இல்லை..(இந்தியாவில் கூட) ஹோட்டல்களில் பதிமூன்றாம் நம்பர் ரூம்கள் இருப்பதில்லை...விமான நிலையங்களில் 13 ஆம் நம்பர் கேட்டுகள் இருப்பதில்லை...

அப்போலோ -13 விண்கலத்தின் ஆக்சிஜன் tank வெடித்து அதன் நோக்கம் நிறைவேறாமல் போனது நினைவிருக்கலாம்

இதற்கு மாறாக 12 என்ற எண் மிக மிக முக்கிய எண்ணாக எல்லா நாகரிகங்களிலும், மதங்களிலும் கருதப்பட்டு வந்துள்ளது...ஆதி மனிதன் எண்களை எண்ணுவதற்கு தன் கை விரல்கள் பத்தையும் பாதங்கள் இரண்டையும் பயன்படுத்திய போது 12 என்று எண்ணினானாம் ...சந்திரன் தேய்ந்து மீண்டும் வளர்ந்து முழு நிலவாக கிட்டத்தட்ட ஒரு மாதம் பிடிக்கிறது...அதை 12 ஆல் பெருக்கினால் அது பூமி சூரியனை சுற்றும் காலத்தை தருகிறது (ஒரு வருடம்) பூமி தன்னைத் தானே ஒரு சுற்று சுற்ற 24 மணி நேரம் ஆகிறது..பூமியின் நிலநடுக்கோட்டை எடுத்துக் கொண்டால் அங்கு 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவாக இருக்கிறது..இதை வைத்து கடிகாரங்கள் 12 எண்களுடன் வடிவமைக்கப் பட்டன...நிலைத்த 27 நட்சத்திரங்களின் பின்னணியில் 9 கிரகங்கள் ஓடும்போது 12 வெவ்வேறு உருவங்கள் தென்படுகின்றன...அவை 12 ராசிகள் என்று கருதப்படுகின்றன...

ஒரு பெரிய முக்கியமான பண்டிகை நாளின் அடுத்த நாள் மந்தமாகவும் , உற்சாகம் இன்றியும் இருப்பது போல பன்னிரண்டுக்கு பின்னால் வரும் ஒரே காரணத்திற்காக 13 விலக்கப்பட்டது... இயேசுவின் கடைசி விருந்தின் போது 13 பேர் இருந்ததால் மேல் நாடுகளில் விருந்து வைக்கும் போது 13 பேராக இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள் ,இந்துக்கள் மூன்று தலை வாழை இலைகளை (மட்டும்) வரிசையாக போடமாட்டார்களே அது போல (அப்படியிருந்தால் 13 பேரில் ஒருவருக்கு கூடிய சீக்கிரம் சங்கு தானாம்) இந்த 13 என்ற பேய் நம்பருடன் ஆதாமும் ஏவாளும் அறிவுக் கனியை சாப்பிட்டு தப்பு பண்ணியதும், இயேசுவை சிலுவையில் அறைந்ததும் ஆன நாளான வெள்ளிக் கிழமையும் சேர்ந்து விட்டால் அவ்வளவு தான்...கேட்கவே வேண்டாம்...இன்னும் அமெரிக்காவில் 13 ஆம் தேதி வெள்ளிக் கிழமையாக வந்தால் ஆபீசுக்கு லீவு சொல்லி விட்டு வீட்டில் ஹாயாக உட்கார்ந்து கொண்டு ,பாப் கார்ன் கொறித்துக் கொண்டு 'மகள்' தொடங்கி 'இதயம்' வரை சன் டிவி சீரியல்களை ஒன்று விடாமல் பார்ப்பார்கள்...இந்த ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் பிசினஸ் ஆயிரம் மில்லியன் டாலர்கள் வரை நஷ்டத்தை சந்திக்கிறதாம்...

13 என்ற எண் ஒடுக்கப்பட்டதற்குஇன்னொரு காரணம் ஆணாதிக்க சமூகம் என்று சொல்கிறார்கள்..அதாவது ஒருவருடத்தில் ஒவ்வொரு பெண்ணும் கிட்டத்தட்ட 13 முறை வீட்டுக்குவிலக்காகிறாளாம் ...(13 x 28 =364 ) எனவே 13 என்பதை 'பொம்பளை' நம்பர்என்று கருதிய ஆண்கள் அதை ராசியில்லை என்று விலக்கி வைத்துவிட்டார்களாம்..

நோர்ஸ் புராணத்தின் படி, கடவுள்கள் 12 பேர் ஒரு நாள் ராத்திரி ,விருந்துவைத்து கொண்டாட்டத்தில் திளைத்துக்கொண்டு இருந்தார்களாம்...அப்போது பதிமூன்றாவதாக அழையா விருந்தாளியாக வந்த தீமைகளின் கடவுள் லோகி, தன்னை அழைக்காத கோபத்தில் அங்கிருந்த ஒளியின் கடவுள் பால்டரைஅம்பை எய்தி கொன்று விட்டானாம்...அன்று முதல் உலகமே ஒளியிழந்துபோய் விட்டதாம்..அன்றிலிருந்து 13 பாவம் ஒரு பழியை தன் மீது சுமந்துகொண்டு விட்டது

உலகில் அதிகம் பேர் அக்டோபர் மாதத்தில் பிறப்பதாகவும் , பிப்ரவரியில்மிகக் குறைந்த குழந்தைகளே பிறப்பதாகவும் ஒரு சுவாரஸ்யமான தகவல்சொல்கிறார்கள் (ஹி ஹி... டிசம்பர் மிகக் குளிராகவும் ஏப்ரல் உஷ்ணமாகவும்இருப்பதால் கூட இருக்கலாம்)

இதிலிருந்து காலண்டர்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடக்கூடாதுஎன்பது தெரிகிறது...இந்த மாயன் இனத்தவர்கள் இப்போதைய அமெரிக்காவில்ஐரோப்பியர்கள் சென்று குடியேறுவதற்கு முன் வாழ்ந்தவர்கள்...வானவியல், கட்டிடக்கலை, ஜோதிடம் போன்றவற்றில் விற்பன்னர்களாகஇருந்தவர்கள்...அவர்கள் உபயோகித்த காலண்டர் தான் "மெசோ அமெரிக்கன்லாங் கவுன்ட் காலண்டர்" இந்த காலண்டர் ஒரு பூஜ்ஜிய நாளைக்கொண்டுள்ளது (0 .0 .0 .0 .0 ) அந்த நாளில் இருந்து எவ்வளவு நாட்கள் கழிந்துவிட்டது என்ற கணக்கில் காலண்டரை அமைக்கிறார்கள்..சரி இதற்கும் 2012 இல் உலகம் அழிவதற்கும் என்ன சம்பந்தம்? மீண்டும் அந்த பேய் நம்பர் 13 தான்...இது பற்றி அடுத்த பதிவில்....

சமுத்ரா

இருபத்து ஒன்று, பன்னிரண்டு -1

கொஞ்சம் பழைய டாபிக் தான் ...ஆனாலும் எழுதவதற்கு எதுவுமே கிடைக்காததால் இதை எடுத்து விடுகிறேன்...

2012 படம் உங்களில் பெரும்பாலானவர்கள் பார்த்திருக்கக் கூடும்...படத்தில் நிறைய அறிவியல் விஷயங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது...படத்தில் as usual ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டம் மட்டுமே இருக்கிறது...கட்டிடங்கள் பின்னால் இடிந்து விழுந்து கொண்டிருக்க ஹீரோயின் கார் மட்டும் சாகா வரம் வாங்கியது போல சிறிய கீறல் கூட இல்லாமல் தப்பித்து முன்னேறுகிறது...எரிமலை வெடிக்கும் பொது ஹீரோவுக்கோ அவர் குடும்பத்திற்கோ நகம் கூட வெந்து போவதில்லை..ஓகே தமிழ் படங்களுக்கு நாம் வழக்கமாக செய்வது போல் 'லாஜிக்கை' மறந்து விட்டால் அந்த பிரம்மாண்டத்திற்காக வேண்டுமானால் படத்தை கண்கொட்டாமல் பார்க்கலாம்...


இப்போது என்னவோ யாரும் அவ்வளவாக 2012 உலக அழிவு பற்றி பேசுவதில்லை...எனக்கு தெரிந்து பெரும்பாலானோர் (நான் உட்பட) அப்பாடா அப்படியாவது செத்துத் தொலையலாம் என்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள்..இயந்திர வாழ்கையில் எல்லாம் உப்பு சப்பு இல்லாமல் போய் விட்டது...ஒரு சுனாமியோ பூகம்பமோ வந்தால் ஒரு மாதத்திற்கு பரபரப்பிற்கு குறையிருக்காது...லோக்கல் நியூஸ் சானல்களுக்கு நல்ல தீனி கிடைத்து விடுகிறது...பிளாஷ் நியூஸ் எல்லாம் திரும்பத் திரும்பப் போட்டு பேனை பெருமாளாக்கி விடுகின்றன..நேற்று பிறந்த குழந்தை முதல் நாளை சாக இருக்கும்கிழவி வரை எல்லாரையும் பேட்டி எடுப்பார்கள்...எங்கிருந்தோ முளைத்த சில சமூக ஆர்வலர்கள் துணிகளையும் பொட்டலங்களையும் அனுப்பி வைப்பார்கள்...(ஒரு கேள்வி: சுனாமி வந்த பிறகு தான் அவர்கள் உங்கள் கண்களுக்குத்தெரிகிறார்களா? அது வருவதற்கு முன்பும் கிட்டத் தட்ட அவர்கள் அதே நிலைமையில் தான் இருக்கிறார்கள்) முதல்வர்கள் ஹெலிகாப்டர்களில் பறந்து பார்வை இடுவார்கள்...பிறகு வழக்கம் போல எல்லாம் அடங்கி விடுகிறது...நியூஸ் பேபர்கள் பழையபடி பார்லிமெண்டில் அமளி, பிரபல நடிகையின் காதல் ,பெண்கள் சாலை மறியல், சாராயம் விற்றவர் கைது, போன்ற அதி முக்கியமான விஷயங்களை வெளியிட்டு இடத்தை நிரப்பிக் கொள்கின்றன ...(இந்த மட்டரகமான செய்திகளைவெளியிட மரங்களை வெட்டுவது நியாயம் தானா என்று தெரியவில்லை)

சரி இன்னும் ரெண்டு வருடங்களில் உலகம் அழிந்து விடுமா? அற்பப் பதர்களான நமக்கு என்ன தெரியும்?நான் இதை எழுதி முடித்து விட்டு ஒரு மசாலா தோசை சாப்பிட்டு விட்டு வீட்டுக்குப் போய் திருமதி.செல்வம் பார்த்து விட்டு பாயில் படுத்த உடனே ஹார்ட் அட்டாக் வந்து அப்படியே ஆவியுலகம் போய் சேர்ந்து விடலாம்...நம் விதியையே கணிக்க முடியாத நாம் உலகத்தின் விதி பற்றி பக்கம் பக்கமாக எழுதுகிறோம்!

இன்னும் இரண்டு வருடங்களில் உலகம் அழிந்து விடும் என்று சூடம் அணைத்து சத்தியம் செய்கிறது ஒரு வெப்சைட்

கொஞ்சம் ஓவராகப் போய் உலகம் அழிய இன்னும் 765 நாட்கள் 16 மணிநேரம் 46 நிமிடங்கள் 15 செகண்டுகள் மட்டுமே இருக்கின்றது என்று கவுன்ட்-டவுன் எல்லாம் காட்டுகிறது..இதை வைத்துக் கொண்டு பிசினஸ் எல்லாம் நடக்கிறது...(நாம் பணம் கட்டினால் நம் குடும்பத்தை அந்த ஆபத்தில் இருந்து எப்படியேனும் காப்பாற்றி விடுவார்களாம்...வேறு கிரகத்திற்கு அழைத்துச் செல்வார்களோ என்னவோ..)
இது பைபிளிலேயே சொல்லியிருக்கிறது என்றும் கல்கி பகவான் சீக்கிரம் குதிரையேறி வரப்போகிறார் என்றும் சில கோஷ்டிகள் தங்கள் கற்பனைக் குதிரையை டாப் கியரில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றன...

நம் பூமி இன்று இருக்கும் இந்த நிலையை அடைய அசாத்தியமான பொறுமையுடன் கோடிக்கணக்கான வருடங்கள் காத்திருந்தது...இன்று தன் தாயான பூமியையே அழிக்கும் அளவு ஆயுதங்களை செய்து வைத்திருக்கும் இந்த அரை வேக்காடு மனித இனத்தின் வாழ்வுக்குத் தேவையான வெப்பம், காலநிலை, நீர், காற்று , கார்பன் போன்ற பொருட்கள் சரியான அளவில் வரும் வரை கோடிக்கணக்கான ஆண்டுகள் பொறுத்திருந்து,இனி எதனாலும் பாதிப்பில்லை என்று உறுதி செய்து கொண்ட பின்னரே உலகின் முதல் மனிதக் குரங்கை ஈன்றாள் பூமித்தாய்...

இப்படி யாரோ பார்த்துப் பார்த்து செய்தது போல உருவான இந்த அழகிய பூமி திடீரென்று,எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி ஒரு நன்னாளில் (அதாவது 21 , டிசம்பர் 2012 )அழிந்து போய் விடுமா? விடாது என்று தான் தோன்றுகிறது...நம் சூரியன் இன்னும் ஐந்து பில்லியன் (ஐந்தாயிரம் கோடி) ஆண்டுகள் சமர்த்தாக ஒளி வீசிக் கொண்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்...அந்த அளவெல்லாம் நம் பூமி தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது...(பூமி என்றொரு கோள் தன்னை சிவனே என்று சுற்றிக் கொண்டிருப்பது கூட சூரியனுக்குத் தெரியாது..) மனிதன் ஏதாவது கிறுக்குத் தனமாக செய்யாமல் இருந்தால் நம் பூமி இன்னும் நூறு கோடி வருடங்களாவது தன் நீலத் துகிலுடன் வானில் உலா வரும்...

இன்னொன்று , இங்கே உலகம் அழிவது என்பது மனித குலத்தின் அழிவையும் குறிக்கலாம்..இவர்கள் கூறுவது போல் ஏதாவது ஒரு சிறிய கோள் வந்து பூமி மீது மோதினால் அந்த அதிர்ச்சியில் பூமியின் உயிரினங்கள் அழிந்து போய் விடலாம்...ஆனால் ஒரு பெரிய பள்ளத்துடன் பூமி தன் பயணத்தை தொடரும் ..

சரி இவ்வளவு பேர் திரும்பத் திரும்ப சொல்வதால் இதை முற்றிலும் அறிவியலுக்கு புறம்பான மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடவும் முடியவில்லை...எதை, எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு பூமி அழியும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்? அடுத்த அத்தியாயத்தில்...

சமுத்ரா

Friday, November 12, 2010

அடையாளம் இழந்த நகர வாழ்க்கை......


ஆபீசில் இருந்து ஒரு பத்து நிமிடம் நடந்தால் நம்ம வீடு...ஆபீசுக்கு பக்கத்தில் 'சிகாரிபால்யா' என்ற திருநாமம் கொண்ட, முஸ்லிம்கள் வசிக்கும் ஒரு ஏரியா...ரொம்ப மோசம் எல்லாம் இல்லை...என்ன மழை வந்தால் ஒரு ரெண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னே சென்று விட்ட ஒரு ஃபீலிங் வரும்...செம்மண் ரோட்டில் தண்ணீர் தேங்கி பாண்டவர்களின் மாயா மாளிகையில் நடந்து செல்லும் துரியோதனன் போல நடக்க வேண்டியிருக்கும்...அப்புறம் சில கோழிக் கடைகள், ஆங்காங்கே அலைந்து திரியும் நாய்கள்..அவ்வளவு தான்...

ஆபீசில் கூட வேலை செய்பவர்கள் , "உனக்கு தங்கறதுக்கு வேற இடமே கிடைக்கலையா?" என்று கேட்கிறார்கள்... ஏன் அங்கே இருக்கிறேன் என்றால் இந்த சிட்டி பஸ்சுகள், ட்ராபிக் ,புழுதி, கூட்டம் இவற்றையெல்லாம் விட தற்காலிகமான சகதி ரோடு ஆயிரம் மடங்கு பரவாயில்லை என்று தோன்றுகிறது....

கம்பெனி பஸ்ஸில் போகலாம் என்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறை பெட்ரோலைக் காரணம் காட்டி நூறு , இருநூறு என்று கட்டணம் ஏற்றி விடுகிறார்கள் ( அதே பெட்ரோலைக் காரணம் காட்டி நம் சம்பளத்தை ஏனோ ஏற்றுவதில்லை) பெங்களூரில் 'வோல்வோ' என்று அழைக்கப்படும் ஏ.சி. சொகுசு பஸ்களில் கூட காலை நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது ...சாதாரண பி.எம்.டி.சி. பஸ்களில் கேட்கவே வேண்டாம்...அப்புறம் இந்த 'சில்லறை ' மேட்டர்..பாக் நிறைய சில்லறை குலுங்கினாலும் இந்த கண்டக்டர்கள் "ஒந்து ரூபாய் கொடி" "எரடு ரூபாய் கொடி" என்று உயிர் எடுப்பார்கள்....அதை எடுக்க பாக்கெட்டுக்குள் கை விட்டால், விசிடிங் கார்டு, போன வாரம் பயணித்த டிக்கெட், ஏ .டி.எம் கார்டு,ஒரு சேப்டி பின் எல்லாம் வருமே தவிர அந்த பாழாய்ப் போன ஒரு ரூபாய் வராது...தப்பித் தவறி வந்தாலும் அது தவறாமல் கீழே விழுந்து தொலைக்கும்...சில கண்டக்டர்கள் சின்சியராக டிக்கெட்டுக்கு பின்னால் 1 ,2 ,3 என்று எழுதிக் கொடுக்கிறார்கள்....இறங்கும் போது, கூட்டத்தில் பிதுங்கி சாமி எப்படா இறங்கலாம் என்று இருக்கும் மன நிலையில் அந்த இரண்டு ரூபாயை ஞாபகம் வைத்துக் கொண்டு திருப்பிக் கேட்கவும் முடியாது..."ரெண்டு ரூபாய் வாபஸ் வரணும்" என்றால் கண்டக்டர் நம்மை மேலும் கீழும் பார்பார்...(அல்பம் சாப்ட்வேர்ல வேலை பார்த்தாலும் ரெண்டு ரூபாய் கேட்குதுங்க என்பது போல)

பெரு நகரம் ஒன்றின் பரந்த வீதிகளில் தனியாக நடந்து சென்றிருக்கிறீர்களா? சுய முகவரி தொலைத்த, அடையாளம் இழந்த சூனியமாய் உணர்வீர்கள்....ஒரு சிற்றெறும்பு போல....சாரை சாரையாய் ஊர்ந்து போகும் ஆயிரம் ஆயிரம் சிற்றெரும்புகளுக்கு மத்தியில் நீங்களும் ஒரு எறும்பு...அநேகமாக நீங்கள் மயங்கி விழுந்தாலும் யாரும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்....ஒவ்வொருவரும் அவர்கள் சொந்த உலகங்களில் ஆழமாக ஆழ்ந்து விட்டிருக்கிறார்கள்...கார்களின் கண்ணாடிகளை அடைத்துக் கொண்டு விர் விர் என்று பறக்கிறார்கள்...ட்ராபிக்கில் பச்சை விழுந்து முன்னால் உள்ள வாகனம் சில மில்லி செகண்டுகள் தாமதித்தாலும் பொறுமை இழந்து பாங் பாங் என்று ஹாரன் அடிக்கிறார்கள்...(எனக்கு புரியவே இல்லை, எதற்கு இவ்வளவு அவசரம்?( முதுகுக்குப் பின்னால் இமய மலை ஒன்று இடிந்து விழுந்து கொண்டிருப்பதைப் போல) )

இதே உங்கள் சொந்த கிராமம் அல்லது சிற்றூரின் சொந்த வீதியில் நடந்து போகும் போது உங்கள் அடையாளம் திரும்ப வந்து உங்களிடம் ஒட்டிக் கொண்டது போலிருக்கும்...காரணம் கீழ்க்கண்ட விசாரிப்புகள்
"என்னப்பா இப்ப தான் வர்றா"
"என்ன குமாரு தீபாவளிக்கு வந்திருக்கயா ?"
"பெங்களூரு எல்லாம் எப்படி இருக்கு , மழையா" etc etc

சாப்ட்வேர் ஆசாமிகள் பஸ்களில் ஏறி உட்கார்ந்ததும் காதில் இயர் ஃபோனை மாட்டிக் கொண்டு தனக்கும் இந்த உலகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் பயணிக்கிறார்கள்... (நேற்று அப்படிதான் ஒரு நவ நாகரிக மங்கை பஸ்ஸில் வந்து அமர்ந்தார்...காதில் இயர் போனுடனும் கண்களில் கறுப்புக் கண்ணாடியுடனும்..பஸ்ஸிலிருந்து இறங்கும் வரை ஒரு மில்லி மீட்டர் அசைவையும் காட்டாமல் இறுக்கமாக அமர்ந்திருந்தார்...ஒரு சமயத்தில் ஏதாவது எந்திரன் படம் போல ரோபாவாக இருக்குமோ என்று கூட சந்தேகம் வந்தது) மேலும் எறும்பு எழுத்துக்களால் எழுதப்பட்ட குண்டு குண்டு ஆங்கில நாவல்களைப் படித்துக் கொண்டு வருகிறார்கள்...ஜன்னலோரம் அமர்ந்து வெளியே தெரியும் பச்சை மரங்களையும், மேகங்களையும், பறவைகளையும் பார்த்து " சௌக்கியமா' என்று கேட்டுக் கொண்டே பயணிக்கும் பயணங்கள் அரிதாகி வருகின்றன....

பெற்றோர்கள் தயவு செய்து இனிமேல் தங்கள் பிள்ளைகளுக்கு ஐ.டி. வேலை கிடைத்து விட்டது என்று அட்டத்துக்கும் விட்டத்துக்கும் குதிப்பதை குறைத்துக் கொள்ளவும்...Information Technology என்று இதை அழைக்கிறார்கள்...என்ன information ? information ஐ வைத்துக் கொண்டு என்ன செய்வது? உதாரணமாக நான் வேலை செய்யும் சாப்ட்வேர் டெஸ்டிங்....இதில் ஒரு அப்ளிகேஷனில் உள்ள எல்லா பட்டன்களும் வேலை செய்கின்றனவா என்று அழுத்தி அழுத்தி பார்ப்பது , ஒரே செய்முறையை ஐம்பது தடவை repeat செய்வது போன்ற வேலைகள் அடங்கும்...இதற்காகவா இருபத்தி ஒரு வருடம் கஷ்டப்பட்டு படித்தோம் ? (கிண்டர் கார்டனுக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்து பாத் ரூமில் ஒளிந்து கொண்டதில் இருந்து கடைசி செமஸ்டருக்கு இரவு ரெண்டு மணி வரை கண் முழித்துப் படித்தது வரை)

பணம் நிறையைக் கிடைக்கிறது என்பது வேறு விஷயம்...அதிலும் பெரும்பாலானவர்களுக்கு சம்பளம் வந்த உடனேயே தாய்ப் பூனை கொண்டு வரும் எலியை சண்டை போட்டு பிடுங்கிக் கொள்ளும் பூனைக் குட்டிகள் போல E .M .I என்ற பெயரில் வீட்டுக்கடன், கார் கடன் என்று பேங்குகள் பேராசையுடன் பிடுங்கிக் கொள்கின்றன...இருபது வருடங்களுக்கு இதே கதை தான்...என்னையும் வீட்டில் வீடு வாங்கச் சொன்னார்கள்...இருபது வருட வாடகையை ஒரே சமயத்தில் கொடுக்கும் அந்த பிழைப்பு மாத்திரம் வேண்டாம்...ஓட்டு வீடோ ,ஒடிசல் வீடோ இருப்பதே போதும் என்று கூறி விட்டேன்...

இன்னும் சிலர் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார்கள்...ஒரு கர்சீபுக்கு ஆனை விலை குதிரை விலை சொல்லும் அழகு மால்களுக்கு சென்று பணத்தை அழுது விட்டு வருகிறார்கள்...(பெங்களூருவின் PVR இல் ஒரு சாதாரண ஒரு லிட்டர் பிஸ்லரி வாட்டர் பாட்டில் முப்பைத்தைந்து ரூபாயாம்...என் அப்படி என்று யாரும் கேட்க மாட்டார்கள்...ஸ்டேடஸ் ப்ராப்ளம் இல்லையா?....

கூடிய சீக்கிரம் இந்த அலர்ஜியான விஷயங்களை எல்லாம் விட்டு விட்டு சொந்த ஊருக்குப் பக்கத்தில் ஏதாவது வாத்தியார் வேலை கிடைத்தாலும் பொய் சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்...யாராவது உதவி பண்ணுங்கள்....

சமுத்ரா


Monday, November 8, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-16


மாறுகண் போலிஸ்காரர் ஒருவர் மூன்று குடிகாரர்களை அரஸ்ட் செய்தார்...

போலீஸ்காரர் முதல் ஆளைப் பார்த்து "உன் பேர் என்னடா ?" என்றார்...

இரண்டாவதாக நின்றிருந்தவன் "என் பேர் மைகேலுங்க" என்றான்



போலீஸ்காரர் கடுப்பாகி அவனைப் பார்த்து "உன்னைக் கேக்கலை" என்றார்..

மூன்றாவதாக நின்றிருந்தவன் " சார் நான் எதுவுமே சொல்லலைங்களே" என்றான்...


*****

வேலைக்காரி முனியம்மா ஒரு மத்தியான நேரம் வீட்டைத் துடைத்துக் கொண்டிருந்தாள்..

ஹாலில் ஃபோன் அடித்தது...

வெகு நேரம் ஆகியும் யாரும் எடுக்காததால் போய் எடுத்து "ஹலோ யாருங்க?" என்றாள்..

"என்னது யாரா, நான் தான் இந்த வீட்டு முதலாளி, நீ யார்?"

"வேலைக்காரி முனியம்மாளுங்க"

"சரி..போய் உடனே வீட்டுக்காரம்மாவை கூட்டி வா..அவசரம்"

"சரிங்க"

சில வினாடிகள் கழித்து
"அய்யா,, எப்படி சொல்றதுன்னு தெரியலைங்க....அம்மா பெட் ரூம்ல வேற யாரோ கூட இருக்காங்க"

"என்னது,,,? துரோகி, சரி நீ என்ன பண்ற...அவங்களுக்குத் தெரியாம பெட் ரூமுக்கு போ...அங்க என் ட்ராயர்ல
துப்பாக்கி இருக்கும்...அதை எடுத்து ரெண்டு பேரையும் சுட்டுடு"

"அய்யா இது என்னால முடியாதுங்க"

"இதப் பார்...சொல்ற மாதிரி செய்...இல்லன்னா வேலை போயிரும்"

"சரிங்கய்யா"

டுமீல்...டுமீல்...


சில நிமிடங்கள் கழித்து
"ஐயா...நீங்க சொன்ன மாதிரியே செஞ்சுட்டேன்"

"ரொம்ப நல்லது...துரோகி ஒழிஞ்சா...சரி நீ இப்ப என்ன பண்ற ரெண்டு பேரையும் காலைப் பிடித்து இழுத்துட்டு போய் நீச்சல் குளத்துல போட்டுடு..."

"ஐயா..நீச்சல் குளங்களா...அது எங்க இருக்கு"

போனில் சில வினாடிகள் மௌனம் நிலவியது...

"சாரி, ராங் நம்பர்"



~சமுத்ரா

குருவியும் குழந்தையும் ...









பாட்டி பாத்ரூமில் கீழே விழுந்து விட்டாளாம்..
அப்பா போட்டிருந்த லோன் இன்னும் தாமதம் ஆகுமாம்...
தம்பி இந்த முறையும் அரியர் வைத்திருந்தான்...
தங்கைக்கு அவசரமாக இருபதாயிரம் வேண்டுமாம்...
வீட்டின் பின் சுவர் மழையில் இடிந்து விழுந்து விட்டதாம் ...
இவ்வளவு இருந்தும்
ஏதோ ஒரு இனம் புரியாத சுகம்
சொந்த ஊருக்குச் செல்லும் போது....

*****
என் குழந்தையுடன்
ஒரு மழைக் கால மாலையில் நடந்து கொண்டிருந்தேன்...
நாளை ஆபீசில் ஆடிட்டிங் ...
எல்.ஐ.சி ப்ரீமியம் இன்னும் கட்டவில்லை...
நண்பனின் கல்யாணத்திற்கு பரிசு வாங்க வேண்டும் ...
போன் ரிப்பேருக்கு மனைவி லைன் மேனைக் கூட்டி வரச் சொன்னாள்...
ஒரு கணத்தில் என்
குழந்தை "அப்பா அங்க பார் குருவி, அங்க பார் குருவி" என்றது
மரம் ஒன்றைக் காட்டி....

~சமுத்ரா

தீபாவளி நிதர்சனங்கள்

தீபாவளி முடிந்த அடுத்த நாள் எதற்கோ கடை வீதிக்கு சென்றிருந்தேன்...கடைகள் வெறிச்சோடிக் கிடந்தன...ஏதோ கலிங்கப் போர் நடந்து ஓய்ந்த மாதிரி இருந்தது....வீதிகளில் பட்டாசுகள் உடல்கள் சிதறி உயிர்த் தியாகம் செய்திருந்தன ....அந்த ஒரு நாளைக்கு தான் என்ன ஒரு ஆர்பாட்டம்? அதுவும் குறிப்பாக டெக்ஸ்டைல் நகரங்களான கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில்...பிரம்மாண்டமான பலமாடித் துணிக்கடைகளில் தொடங்கி தெருவோரம் கட்டில் போட்டு அதன் மேல் 'நூறு ரூபாய்க்கு இரண்டு சேலை' என்று விற்கும் கடைகள் (?) வரை கூட்டம் அலைமோதுகிறது...

.முன்பெல்லாம் இந்துக்களின் பண்டிகைகள் பெரும்பாலும் 'பிராமணர்கள்' வாழட்டும் என்பதற்காக ஏற்பட்டவை என்று சொல்வார்கள்... அதாவது பிராமணர்கள் தங்களுக்கென்று தொழில் செய்யவோ , வியாபாரம் செய்யவோ, பயிர் பச்சை விளைவிக்கவோ கூடாது....எனவே பண்டிகைகளை காரணம் சொல்லி அவர்கள் நாலைந்து வீடுகளுக்குச் சென்று ஹோமம், பூஜை என்று செய்து நாலு காசு பார்க்கட்டுமே என்று பண்டிகைகள் உருவாக்கப் பட்டிருக்கலாம்.... (நரகாசுரன் எல்லாம் உண்மையிலேயே இருந்தானா தெரியாது)

ஆனால் இன்றோ இந்துக்களின் பண்டிகைகள் ஆடி அமாவாசை தொடங்கி கார்த்திகை தீபம் வரை 'வைசியர்'களின் (வியாபாரிகள்) கல்லாப்பெட்டிகளை மட்டுமே நன்றாக கொழிக்க வைக்கின்றன...ஒரு முழம் பூ முப்பது ரூபாய் , நாற்பது ரூபாய் என்று வாய்கூசாமல் சொல்கிறார்கள்...சில துணிக்கடைகள் ஆடைகளுக்கு 500 ரூபாக்கு மேல் ஏதோ ஒரு ராண்டம் நம்பரை எழுதி ஒட்டி வைக்கிறார்கள்....இனிப்புப் பலகாரக் கடைகள் கேட்கவே வேண்டாம்....இது தான் எங்கள் விலை...வாங்கறதுன்னா வாங்கு, இல்லைன்னா நெக்ஸ்ட் யாருப்பா? என்கிறார்கள்....சில பட்டாசுக் கடைகளைப் பார்த்தால் என்ன , தவறாக டாஸ்-மாக்குக்கு வந்து விட்டோமா என்று சில நொடிகள் தடுமாறும் அளவு கூட்டம் நிரம்பி வழிகிறது...பட்டாசு பாக்கெட்டுகளின் மேலே 120 , 150 , 180 என்று இஷ்டத்திற்கு கருப்பு ஸ்கெட்சால் எழுதி வைத்திருக்கிறார்கள்...இன்று வரும் பட்டாசுகளில் பெரும்பாலானவை வெடிப்பதே இல்லை....அதற்காக திராட்சையை வாயில் போட்டு ருசி பார்த்து விட்டு வாங்குவது போல, கொஞ்சம் இருப்பா, ஒண்ணு சாம்பிளுக்கு வெடிச்சுப் பார்த்திட்டு வாங்கிக்கறேன், என்றா சொல்ல முடியும்? அந்த முழி பிதுங்கும் கூட்டத்தில் ஏதாவது ஒரு ஆம்னி(?)-பாக்ஸ் கொடுங்க என்று கேட்டு வாங்க வேண்டியிருக்கிறது....அந்த பாக்ஸ் ஐநூறு அறுநூறு என்கிறார்கள்...

உள்ளே பாம்பு மிட்டாயில் இருந்து ராக்கெட் வரை ஒவ்வொன்றையும் சாஸ்திரத்திற்காக வைத்துள்ளார்கள்....(இந்த முறை ஒரு மினி துப்பாக்கியும் ,ஒரு கேப் பாக்கெட்டும் கூட இருந்தது...உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?) பெரும்பாலான வெடிகள் ஹைட்ரஜன் குண்டு லெவலுக்கு பூச்சாண்டி காட்டி விட்டு, வீதியில் போவோரை ஒதுங்க வைத்து விட்டு, டூ வீலர் பார்டிகளை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விட்டு, கடைசியில் அயோத்தி தீர்ப்பு மாதிரி 'புஸ்' என்று படுத்து விடுகின்றன... அப்புறம் சில பூவானங்கள், பென்சில்கள் தங்கள் கடமை மறந்து, ஆல் ரௌன்டர்கள் போல டம் என்று வெடித்துத் தொலைக்கின்றன...[ பக்கத்து வீட்டு தரைசக்கரம் மட்டும் நிறைய நேரம் சுற்றுவது போன்று தோன்றுவது எதனால் என்று எனக்குத் தெரியாது]

அடுத்து 'போனஸ்' சமாசாரம்...நல்ல வேளை இந்த IT கம்பனிகளில் இந்த தீபாவளி போனஸ் , பொங்கல் போனஸ், எல்லாம் இல்லை...ஆனால் நாம் நம்முடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் எல்லாருக்கும் போ. கொடுக்க வேண்டியிருக்கிறது....

"யாருப்பா"
"இந்த வீதி கூர்காங்க...தீபாவளி போனஸ்" (உண்மை என்ன என்றால் அவரை அன்று தான் முதல் முறையாக தரிசிக்கிறோம்)
"யாருப்பா"
"உப்புத் தண்ணி உடற கருப்புசாமிங்க....நோம்பி காசு குடுங்க"
இப்படி ஏகப்பட்ட சாமிகள் நம் வாசலை அலங்கரிக்கும்....

பத்திரிக்கைகள் சில பாதிப்பக்கங்களில் கலர் கலராக விளம்பரங்களைப் போட்டு விட்டு , தீபாவளி மலர் என்று பெயர் வைத்து (அமெச்சூர் எழுத்தாளர்களின் கதைகளை எல்லாம் போட்டு மீதி இடத்தை நிரப்பி) கொள்ளை விலைக்கு விற்கின்றன...

இந்த லிஸ்டில் தீபாவளிக்கு வெளியிடப்படும் the so called திரைப்படங்களை நான் இப்போதைக்கு சேர்க்கவில்லை...இதைப்பற்றி எழுத இன்னொரு பதிவு வேண்டும்..

.ஓகே..எதற்காக இவ்வளவு அலப்பறைகள்? கார் பார்க்கிங் கிடைக்காமல் நேரும் தவிப்புகள்? யாரோ ஒரு மூன்றாவது மனிதனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் ஒன்றிரண்டு வசைமொழிகள் (உ.தா: என்ன வேணும்னு சொல்லுங்க, சும்மா கலைச்சுப் போடாதீங்க) ? கொடுக்கல் வாங்கல்கள்? ஒன்றிரண்டு செருப்பு மிதிகள்? சில ரூபாய் நோட்டு தவற விடுதல்கள்? தீபாவளி அன்றைக்கு என்ன தான் அப்படி இருக்கிறது? நாமெல்லாம் ரதம் பூட்டி மனையாளுடன் நால்வகைப் படைகள் சூழ நரகாசுரனை வதைக்கப் போகிறோமா என்ன? அன்று கூட 24 மணி நேரம் கொண்ட ஒரு சாதாரண தினம் தான்,,,,என்ன கொஞ்சம் சீக்கிரமாகவே ஆறு மணிக்கெல்லாம் (?) எழுந்து விடுவதால் கொஞ்சம் அதிக நேரம் கிடைப்பதாகத் தோன்றலாம்...அந்த நேரமும் நம் தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்லித் தரும் "மூனை மூனால் பெருக்கினா எவ்வளவு?" போன்ற உபயோகமான தகவல்களால் கழிந்து விடுகிறது...இப்படி காலை முதல் மாலை வரை தொலைக்காட்சியில் ஐக்கியம் ஆகிக் கிடப்பதற்கும், தியேட்டருக்குச் சென்று விசில் அடித்து விட்டு வருவதற்குமா நாம் ஒரு மாதமாக பிளான் செய்து காசை கரியாக்குகிறோம்? I have no answer ...

கிருஷ்ணா பரமாத்மா ஒரு அபலைப் பெண்ணுக்கு ஆடை அளித்ததை (அட்சய திருதியை) எப்படி நகைக் கடைகள் தங்கள் பக்கம் சாமார்த்தியமாக திருப்பிக் கொண்டு விட்டனவோ (ஏன் அன்றைக்கு நகை தான் வளர வேண்டுமா? அனாதை இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள், மருத்துவ மனைகள் , உங்கள் அப்பா அம்மா(அட இவங்களை மறந்தே போயிட்டமே) என்று நீங்கள் அன்று ஒரு நாள் அன்பு காட்டினால் அந்த அன்பு அட்சயமாக வளரக் கூடாதா ) அதே மாதிரி இந்த 'நரகாசுரன்' சமாசாரத்தை துணிக் கடை , பட்டாசுக் கடை பண முதலைகள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு விட்டார்கள்...சில துணிக்கடை விளம்பரங்கள் "எங்க கடைல வாங்கலைன்னா மவனே கொலை பண்ணிருவோம் " என்று மிரட்டும் ரேஞ்சுக்கு இருக்கின்றன...

முன்பெல்லாம் தீபாவளி என்றால் சொந்த பந்தங்கள் வீடுகளுக்கு சிறுசுகள் சென்று பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி , அவர்களுக்கு இனிப்பு கொடுத்து , etc என்றெல்லாம் இருக்கும்... இப்போது எத்தனை வீடுகளில் இது இன்னும் கடைபிடிக்கப்படுகிறது என்று தெரியவில்லை? (இதற்கு நேர் மாறாக ஏய் கெழவி, அஞ்சரை மணிக்கே எழுந்திருச்சு எங்க உயிரை வாங்காட்டி என்ன? எப்பவும் போல பத்து மணி வரை படுத்திருக்க வேண்டியது தானே போன்ற அர்ச்சனைகள் கேட்கலாம்)


சில சேனல்கள் எல்லாரும் எழுந்திரிக்கும் முன் பக்திப் பாடல்களை அவசர அவசரமாகப் போட்டு முடித்து விட்டு பின் தங்கள் 'உலகத்' தொலைக்காட்சிகளில் முதல் முறையாகக்களை ஆரம்பித்து விடுகின்றன....நடிகைகள் புன் சிரிப்பு மாறாமல் தனக்கு என்ன என்ன பிடிக்கும், என்று பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்... பட்டி மன்றங்களில் பேசியவர்களே வந்து பேசி சில சமயம் கழுத்தறுக்கிறார்கள் (உ.தா: சன் டிவிக்கு பாப்பையாவையும் ராஜாவையும் விட்டால் யாரும் கிடைக்கவில்லா? மற்றவர்களுக்கு எப்போது தான் சான்ஸ் தருவது?) சரி ஒரு படமாவது உருப்படியாகப் பார்க்கலாம் என்று உட்கார்ந்தால் கொலைவெறியுடன் அணிவகுக்கும் விளம்பரங்கள்...சிவாஜி sponsered by என்று ஆரம்பித்து திரௌபதி சேலை போல் மூச்சு விடாமல் ஒப்பிக்கிறார்கள்...(இடைவேளையில் என்ன படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே மறந்து விடுகிறது..'ஹமாரா பஜாஜ்' என்று ஒரு விளம்பரத்துடன் முடித்துக் கொண்ட தூர்தர்சன் காலங்களை நினைத்துப் பெருமூச்சு விட வேண்டியுள்ளது ) விளம்பரங்களில் மேக்-அப் கலையாமல் மங்கைகள் காரில் இருந்து இறங்கி வந்து பட்டுப் புடவை அணிந்து பங்களாவுக்கு வெளியே கம்பி மத்தாப்பு வெடிக்கிறார்கள்... குழந்தைகள் வண்ண வண்ண உடை அணிந்து சிரிக்கிறார்கள்....உண்மையான சந்தோஷத்தை விளம்பர உலகத்தில் மட்டுமே காண முடியும் போல் உள்ளது....ஆனால் நிஜ வாழ்கையில் கறைகள் அவ்வளவு சுலபமாக ஒரு நிமிடத்தில் போய் விடுவதில்லை...

.சரி இதன் மூலம் என்ன சொல்ல வருகிறேன் என்றால் : பண்டிகையே வேண்டாம் என்று சொல்ல வரவில்லை... சந்தைக் கடைகளில் தீபாவளியை எதிர்பார்த்து லட்டு ,ஜிலேபி கடை விரித்திருக்கும் வள்ளியம்மாளுக்கும், கண்ணாடி, சீப்பு, ஜிமிக்கி கடை விரித்திருக்கும் பொன்னம்மாளுக்கும் இந்தப் பண்டிகைகள் சில சமயம் ஒரு வாரம் வீட்டில் அடுப்பெரிய பேருதவி செய்கின்றன....ஆனால் பண்டிகைகளின் பேரில் கண்டிப்பாக Monopoly தமிழ்நாட்டில் நடக்கிறது....(சில்க்ஸ்களில் இருந்து சானல்கள் வரை) இந்த மாயையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும்...பகட்டான கடைகளில் துணி வாங்கி விட்டு, பளபளப்பான ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு, முன் பதிவு செய்து சில நல்ல(?) திரைப்படங்களைப் பார்த்து விட்டு வீடு திரும்பி, சானல்களின் கத்தல்களைக் கேட்டு விட்டு ஆயாசத்துடன் படுப்பது தான் பண்டிகை என்ற மனோபாவம் மாற வேண்டும் என்று தான் எதிர்பார்கிறேன்....

~சமுத்ரா

Wednesday, November 3, 2010

டவுட்டு தனசேகர்-3

டி.வில ஒரே நகைக் கடை விளம்பரமா வருதே,
ஒரு வேளை இந்தியா நிஜமாவே பணக்கார நாடாயிருச்சா?









~சமுத்ரா