இந்த வலையில் தேடவும்

Sunday, January 17, 2016

ஜோதிடம்


ஜோதிடம் கொஞ்சம் நெருடலான விஷயம். ஜோ. அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்டது என்கிறார் ஓஷோ. இந்தப்பக்கம் அறிவியல் அந்தப்பக்கம் ஆன்மிகம். முற்றிலும் உண்மை என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாத முற்றிலும் பொய் என்று ஒதுக்கி விட முடியாத ஒன்று ஜோதிடம். முதலில் ஜோதிடமும் வானவியலும் ஒன்றாகவே இருந்திருக்கின்றன. வானியல் என்றால் ஒன்பது கிரகங்கள், சில நட்சத்திரங்கள் அவ்வளவே. இப்போது தான் காஸ்மாலஜியில் காலக்ஸிகள் , நெபுலாக்கள் , சூப்பர் நோவாக்கள் என்று போய் விட்டோம். பின்னர் சில சாமார்த்திய  ஆசாமிகள் ராஜாவை தாஜா செய்து எதிர்காலம் கணித்தல், போருக்கு செல்ல நல்ல நாள் குறித்துக் கொடுத்தல் போன்றவற்றை ஆரம்பித்து வைத்து இருக்கிறார்கள். அது இன்று வரை 'பெண் ஜாதகத்தில் 9 ம் அதிபதி அஸ்தமனமாக இருப்பதால் கணவனிடம் சுகம் பெறுவதில்லை'  என்ற ரேஞ்சுக்கு படுக்கை அறை வரை டாப் கியரில் போய்க் கொண்டிருக்கிறது.

ஜோதிடம் ஆன்மிகம், அறிவியல் என்ற தன் இரண்டு துருவங்களில் இருந்தும் விமர்சனத்துக்கு ஆளாகி வந்துள்ளது. அறிவியல், கிரகங்கள் உயிரற்ற வெறும் பாறைகள். சூரியனுடைய பந்தத்தால் பிணைக்கப்பட்டு சுற்றி வருபவை உனக்கு திருமணம் எப்போது ஆகும் என்று அவை எப்படி நிர்ணயிக்கும் என்று கேட்கிறது. அடுத்த துருவத்தில் பக்தர்கள் , எனக்கு இறைவன் ஒருவன் போதும், நாள் நட்சத்திரம் எல்லாம் வேண்டாம். சந்திரனே அபிராமிக்கு குண்டலம் தானே!

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த        

கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு    
 தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்          
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

எல்லாமே கோள்கள் தான் என்றால் கடவுளுக்கு என்ன வேலை?

சரி...

நம்மைச் சுற்றிக் கவிழ்ந்திருக்கும் வானத்தில் அரைக் கோளத்தில் இந்த ஒன்பது கோள்கள் சுற்றுகின்றன. அந்தக் காலத்தில் இதை ஒரு வான கடிகாரமாகப் பயன்படுத்தினார்கள். அவ்வளவே. கடிகாரம், காலண்டர் எல்லாம் மிகவும் பின்னால் வந்த சமாச்சாரங்கள். அந்தக் காலங்களில் அறுவடைக்கு காலம்  தெரிய வேண்டி இருந்தது. விதைப்பதற்கு காலம் அறிய வேண்டி இருந்தது. திசை அறிய வேண்டி இருந்தது. ஒருவரின் வயது தெரிய வேண்டி இருந்தது. இஸ்லாமியர்கள் மெக்காவின் திசை நோக்கித் தொழ வேண்டி இருந்தது. இப்படி.. இதற்கெல்லாம் வானத்தைத் தான் பார்த்தார்கள். perfect clock !! உதாரணமாக திருவாதிரை நட்சத்திரம் எழும் போது மழை பொழியும். விதை விதைக்க ஏற்ற நேரம். ஆடிப்பட்டம் தேடி விதை. பன்னெடும்காலமாக Polaris எனப்படும் துருவ நட்சத்திரத்தை வைத்தே வட திசையை அறிந்து வந்துள்ளார்கள் பயணிகள். துருவ நட்சத்திரம் வானத்தில் கண்டபடி அலைந்து திரியாமல் வடக்குத் தொடுவானில் அப்படியே நிற்கும். எனவே காம்பாஸ் வரும்வரை அது ஒரு சிறந்த திசைகாட்டி.


சந்திரன் நம் பூமியை சுற்ற கிட்டத்தட்ட 27 நாட்கள் ஆகின்றன.இந்த 27 நாட்களும் சந்திரன் தன் பின்னணியில் இருக்கும் 27 நட்சத்திரக் கூட்டங்களைக் கடந்து செல்கிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை கற்பனையாக கோடு இணைத்து வரைந்து குதிரைத்தலை (அஸ்வினி) , கை (ஹஸ்தம்) என்றெல்லாம் பெயர் இட்டார்கள். சில தனி விண்மீன்கள். (மகம், சித்தரை...) பல, பெரும்பாலும் விண்மீன் கூட்டங்கள். குழந்தை பிறக்கும் நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் பின்னணியில் இருக்கிறதோ அதுவே அந்தக் குழந்தையின் பர்த் ஸ்டார். சில நட்சத்திரங்கள் நல்ல நட்சத்திரங்கள் என்று சொல்வது நாம் முதலிலேயே கூறிய பருவ நிலைகளை வைத்துத் தான். சூரியன் தன் பின்னணியில் இந்த 27 நட்சத்திரங்களையும் கடந்து செல்ல ஓர் ஆண்டு ஆகிறது. உதாரணமாக இன்று சூரியன் மக நட்சத்திரத்தில் உள்ளது என்றால் சூரியன் இன்று எழும் போது கூடவே மகம் எழுந்தது என்று அர்த்தம். தோராயமாக இரண்டு வாரங்கள் சூரியன் மகத்தில் இருக்கும். சில நட்சத்திரங்கள் தோன்றும் போது நல்ல மழை பொழிந்து சுபிட்சம் ஏற்பட்டதால் அவை சுப நட்சத்திரங்கள் எனப்பட்டன. சில நட்சத்திரங்கள் தோன்றும் போது பஞ்சம் வந்தது. இவை ஐந்தாறு முறை ரிபீட் ஆனதும் அந்த நட்சத்திரம் கெட்டது ஆகி விட்டது. உண்மையில் எல்லா நட்சத்திரங்களும் எரியும் ஹைட்ரஜன் பந்துகள் அவ்வளவே. நல்லதாவது கெட்டதாவது !


பூமி சூரியனை சுற்றி வருவதால் ஒவ்வொரு மாதமும் சூரியனின் பின்னணியில் உள்ள விண்மீன்கள் மாறுகின்றன. இந்த சுற்றுவட்டப் பாதையை 12 பகுதிகளாகப் பிரித்து அதில் கற்பனை உருவங்களை வரைந்து அதை ராசி என்றார்கள். சில நட்சத்திரக் கூட்டங்கள் கற்பனையாக ஆட்டை உருவாக்கின. ( மேஷம்) சில ஒரு  குடத்தை. (கும்பம்) இப்படி.


இப்படி மாதம் ஒரு ராசி வீதம் சூரியன் ஒரு வருடத்தில் 12 ராசிகளையும் கடக்கிறது. (அல்லது கடப்பது போல தோன்றுகிறது)  ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சூரியன் செல்வது சூரியப் பெயர்ச்சி அல்லது சங்கராந்தி எனப்படுகிறது. நாம் பொங்கல் என்று அழைப்பது பொதுவாக சூரியன் மகர ராசியில் நுழைவது. எனவே பொங்கல் புத்தாண்டு கிடையாது. ராசி சக்கரத்தை முடித்து சூரியன் மீண்டும் மேஷத்தில் பிரவேசிக்கும் சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டு. இதே போல மற்ற கிரகங்களும் இந்த ராசிக் கட்டங்களின் பின்னணியில் பயணம் மேற்கொள்கின்றன. ஒவ்வொரு ராசியையும் சந்திரன் சீக்கிரமாக 2 1/4 நாட்களில் கடந்து விடுகிறது. வியாழன் ஒரு ராசியைக் கடக்க 1 வருடம் ஆகிறது. சனி கடந்து செல்ல 2 1/2 ஆண்டுகள். சனி ரொம்ப ஸ்லோ. இதனால் தான் சனியின் காலை கொஞ்சம் ஊனமாக்கி வைத்தார்கள். சனியை வாரத்தின் கடைசி கிழமையாகவும் வைத்தார்கள். வருடம் ஒருமுறை நமக்குத் தவறாமல் ஜோதிட சிகாமணிகள் கணித்துத் தரும் குரு  பெயர்ச்சி பலனும் 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சிப் பலனும் கிடைத்து விடுகிறது. 2 நாட்களுக்கு ஒருமுறை 'சந்திரப் பெயர்ச்சிப் பலன்' என்று புத்தகம் போட்டால் அடிக்க வந்து விடுவார்கள். வாரத்தின் ஏழு நாட்களைத் தவிர இந்த ராகு மற்றும் கேது என்ற சாயா கிரகங்கள். சூரியன் பூமியை சுற்றும் நீள் வட்டமும் சந்திரன் சுற்றும் நீள்வட்டமும் எதிர் எதிர் புறங்களில் ஒன்றை ஒன்று வெட்டும் புள்ளிகள். உண்மையில் சந்திரன் சுற்றும் வழி இங்கிருந்து 384000 கி .மீ தூரத்திலும் சூரிய சுற்று வழி இங்கிருந்து 15 கோடி கி .மீ தூரத்திலும் உள்ளதால் அறிவியல் படி தேர் ஈஸ் நோ ராகு-கேது ஸ்நேக்ஸ்.

ஒரு குழந்தை பிறக்கும் போது வானத்தில் கோள்கள் எந்த
நிலையில் உள்ளன என்பது ஜோதிடத்தில் மிகவும் முக்கியம். 9  கோள்களும் எந்தெந்த  ராசியின் பின்னணியில் இருக்கின்றன என்று பார்த்துக் குறித்து வைப்பார்கள். சந்திரன் எந்த ராசியில் உள்ளதோ அதுவே அந்தக் குழந்தையின் ராசி. நம் ஜாதகக் கட்டம் என்பது 12 கட்டங்களைக் கொண்டது. இவை உண்மையில் வானத்தை கிழக்கில் இருந்து மேற்காக 12 பிரிவுகளாகப் பிரித்த கற்பனைப் பிரிவுகள். வானத்தில் மீனோ, ஆடோ, கன்னிப்பெண்ணோ எதுவும் இல்லை. நாம் பிறந்த கணத்தில் சில கோள்கள் மட்டுமே வானத்தில் பார்வைக்குக் கிடைக்கும். சில மேற்கு வானில் மறைந்து கொண்டிருக்கும். சில வானத்தில் தென்படாது.  நம் ராசிக் கட்டத்தில் சில கட்டங்கள் காலியாக இருக்கும். நாம் பிறந்த போது வானில் அந்த ராசிகள் தென்படவில்லை(அந்த ராசியின் பின்னணியில் எந்த கிரகமும் இல்லை) என்பது பொருள். பிறந்த நேரத்தில் கிழக்கில் எழும் ராசி தான் அந்தக் குழந்தையின் லக்னம் அல்லது முதல் வீடு. அதற்கு அடுத்தது இரண்டாம் வீடு. சிம்ம லக்னம் என்றால் குழந்தை பிறந்த சமயத்தில் கிழக்கு வானில் சிம்ம ராசி இருந்ததாக அர்த்தம். லக்னத்தில் இருந்தே clockwise ஆக வீடுகளை எண்ணுகிறார்கள்.



கீழே உள்ளது ராசிக்கட்டம். இதில் மேஷம் முதல் மீனம் வரை ராசிகள் கடிகாரமுள் திசையில் காட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு அதிபதி. மேஷத்துக்கு செவ்வாய் . குழந்தை பிறந்த போது செவ்வாய்  மேஷத்தில் இருந்தால் அந்த மேஷத்துக்கு உரிய முதல் கட்டத்தில் "செ" என்று குறிப்பார்கள். இது ஆட்சி வீடு எனப்படும். கிரகங்கள் அவற்றின் ஆட்சி வீட்டில் இருப்பது நல்ல பலன்களைக் கொடுக்குமாம்.




ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் உச்சம் பெறுகிறது. உதாரணமாக சூரியன் மேஷத்திலும் செவ்வாய் மகரத்திலும் . may be , இந்த ராசியில் இருந்தால் அந்தக் கிரகம் ஒளி மிகுந்து இருக்கும் என்பதாக இருக்கலாம். சூரியன் மேஷத்தில் இருக்கும் சித்திரையில் தானே பலமாக தகிக்கிறது? சில கிரகங்கள் சில ராசிகளில் நீசம் அடைகின்றன. உதாரணமாக சூரியன் துலாம் ராசியில் நீசம் அடைகிறது. may be , இந்த ராசியில் இருந்தால் அந்தக் கிரகம் ஒளி குறைவாக  இருக்கும் என்பதாக இருக்கலாம். பிறந்த போது கிரகங்கள் அவற்றுக்கு உரிய உச்ச ராசிகளில் இருந்து விட்டால் அதிர்ஷ்டமாம். வானவியல் ரீதியாக குழந்தை பிறந்த போது ஒன்பது கிரகங்களும் பிரகாசமாக இருந்திருக்க வேண்டும். இப்படி யாருக்கும் நடக்காது. ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன் என்று அடிக்கடி கேட்பீர்கள். அவன் தொட்டதெல்லாம் தங்கம் தானாம். உண்மையில் 2, 3 கிரகங்கள் உச்சத்தில் இருந்து
விட்டாலே பயங்கர அதிர்ஷ்டம் தானாம். என் ஜாதகத்தில் ஒரு கிரகம் கூட உச்சம் இல்லை.ஹிஹி ..


இது அம்மாவின் ஜாதகம். மகத்தில் பிறந்ததால் ஜகம் ஆகிறார். சுக்கிரன் மீனத்தில் உச்சம். அவருக்கு சுக்கிரன் உச்சத்தில் உள்ளதைக் கவனிக்க.
 
. கிரகம் வக்கிரம் ஆவது என்று ஒரு கான்செப்ட் உள்ளது. உண்மையில் கிரகங்கள் பூமியை சுற்றாமல் சூரியனை சுற்றுவதால் அவைகளின் வேக மாறுபாடு காரணமாக கிரகங்கள் u turn அடிப்பது போலத் தோன்றுவது. 



ஒரு கிரகம் பின் நோக்கிச் செல்வது வக்கிரம் எனப்படும்.“அவன் வக்கிரம் பிடிச்ச ஆளு, அவனிடம் எதுவும் வைத்துக்கொள்ளாதே” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீகள் அல்லவா? 


அடுத்து இந்த செவ்வாய் தோஷம். ஜாதகரின் லக்னக் கட்டத்தில் இருந்து எண்ணும் போது அல்லது சந்திரனில் இருந்து எண்ணும் போது  2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் ஏற்ப்படும் என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.இப்படி இருந்தால் வாழ்க்கைத் துணை மரணம், மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு இவைகள் அமையுமாம். :)  கீழே செவ்வாய் தோஷம் உள்ள ஒரு ஜாதகம் காட்டப்பட்டுள்ளது. சந்திரனில்  இருந்து 7 ஆம் வீட்டில் செவ்வாய் உள்ளது.

சரி. கடைசியாக இவை எல்லாம் எந்த அளவு உண்மை என்று விவாதிக்கலாம். முதலில் அறிவியல் ரீதியாக கோள்கள் நம்மை ஈர்ப்பு மற்றும் காஸ்மிக் கதிர்களால் மட்டுமே பாதிக்க முடியும். ஜோதிடம் பூமியை நிலையானது என்று கருத்தில் கொண்டு உருவான ஒன்று. ஆனால் பூமி அண்ட வெளியில் சுற்றும் ஒரு சின்னப்பையன் அவ்வளவே. மேலும் சூரியன் தவிர மற்ற கிரகங்களின் ஒளி சூரிய ஒளியே. இந்த லட்சணத்தில் குரு லாப ஸ்தானத்தைப் பார்க்கிறார் என்றால் என்ன அர்த்தம்? ஆனால் அந்த பாதிப்புகள் பூமியில் உள்ள எல்லாருக்கும் பொதுவாகவே இருக்கும். மேலும் ஏன் ஒரு ஜாதகருக்கு ராஜ வாழ்க்கை? இன்னொருவருக்கு நாய்ப்பாடு? இதற்கு போன ஜென்மத்தைக் காரணம் காட்டுகிறார்கள். சரி, போன ஜென்மத்தின் கணக்குப்படி நான் இந்த ஜென்மத்தை வாழ்ந்து முடிக்கிறேன். அப்படியென்றால் இந்த ஜென்மம் எப்படி அடுத்த ஜென்மத்தை பாதிக்கும்? போன ஜென்மத்தில் இந்த குழந்தை இந்தப் பாவம் செய்தது, எனவே இது பிறக்கும் போது நாம் 7ஆம் இடத்தில் போய் நின்று கொள்வோம் என்று செவ்வாய் நினைக்குமா? மேலும் ஜோதிடத்திலேயே ஏகப்பட்ட குளறுபடிகள், குழப்பங்கள், விதிகள், விதி விலக்குகள், பரிகாரங்கள்.. செவ்வாய் தோஷத்துக்கே 1008 விதி விலக்குகள் உள்ளன. எது உண்மை?எல்லாமே கிரகங்கள் என்றால் மனித முயற்சிக்கு என்ன மதிப்பு?

ஜோதிடம் statistics படி வேலை செய்கிறது. 10 பேரில் 6 பேருக்கு கணிப்பு சரியாக அமைந்து விட்டால் ஆகா ! ஜோதிட சிரோன்மணி சொன்னது பலித்து விட்டது!  தப்பாக அமைந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். 
எனிவே, எதுவும் கெட்டது நடந்து விடவில்லை. மே பி , கடவுளின் கருணை! ஒரு நிகழ்ச்சி. 1186 ஆம் ஆண்டில் ஏழு கோள்கள் ஒரே ராசியில் கூடும் எனவும் அப்போது பெரும் சூறாவளி வரும் எனவும் இங்கிலாந்தில் ஜோதிடர்கள் பயமுறுத்தினார்கள். ஐரோப்பாவில் பல இடங்களில் தரைக்கடியில் பதுங்கு அறைகள் அமைக்கப்பட்டன. மக்கள் உண்ணாநோன்பு இருக்கப் பணிக்கப் படுகிறார்கள். ஆனால் அஞ்சியது போல எதுவும் நடக்கவில்லை, அன்றைய நாளில். இதைக் கிண்டலடித்து யோர்க் க்ரோனிகள் என்னும் பத்திரிகையில் ஒரு பாதிரியார் இவ்வாறு எழுதுகிறார்: "மேடையில் இருந்து பேராயர் விட்ட குசுவைத் தவிர வேறெந்த காற்றும் அடிக்கவில்லை".. :)

10 க்கு 8 குசுக்கள் வந்தாலும் கோ -இன்சிடன்ஸ் ஆக வரும் 2 சூறாவளிகளால் ஜோதிடம் இன்னும் பிழைத்துக் கொண்டுள்ளது. ஜோதிடர்களின் பணப்பையையும் நிரப்பி வருகிறது. அடியேன் எப்போதும் நாள் என் செயும் கட்சி மட்டுமே.

சமுத்ரா ..







Thursday, January 7, 2016

பாண்டிச்சேரி - பயணக் கட்டுரை

நீண்ட நாட்களுக்குப் பிறகு ப்ளாக்-இல் சந்திக்கிறோம். :)

If traveling was free, you will never see me again என்பது எனக்குப் பொருந்தும். :) புதிய இடங்களை, புதிய மனிதர்களை, புதிய கலாச்சாரங்களை எக்ஸ்ப்ளோர் செய்வது மிகவும் பிடிக்கும். பொதுவாக, தனியாகவே கிளம்பி விடுவேன். தனியாகச் செல்வதில் சில சங்கடங்கள் இருக்கின்றன. பேச்சுத் துணைக்கு ஆள் இல்லை. செலவுகளை ஒருவரே ஏற்க வேண்டும். உடம்புக்கு ஏதாவது என்றால் ரிஸ்க். ஆனாலும் அதில் கொஞ்சம் சவுகரியங்கள் இருக்கவே செய்கின்றன. நானே ராஜா நானே மந்திரி. யாருக்காகவும் காத்திருக்கத் தேவை இல்லை. நினைத்த இடங்களுக்குச் செல்லலாம். பாண்டிச்சேரிக்கு ஒரு சோலோ ட்ரிப் கிளம்பி விட்டேன். பெங்களூரு கிருஷ்ண ராஜ புறத்தில் இருந்து புதுச்சேரி எக்ஸ்பிரஸ் .11005 பெங்களூருவில் பயங்கரக் குளிர். இரண்டு ஜாக்கெட்டுகள் போட்டுக் கொண்டிருந்தாலும் குளிர் ஊடுருவிக் கொண்டு உள்ளே பாய்கிறது. அந்தக் குளிரிலும் பிளாட் பாரத்தில் ஒருவர் லேசான சட்டை மட்டுமே அணிந்து படுத்திருந்தார். "சுர மந்திர தரு மூல நிவாஸ :" என்று ஆதி சங்கரர் சொல்வது போல. வானமே கூரையாய் ...நமக்குத் தான் ஜாக்கெட், ஸ்வட்டர், ஷூ என்று ஆயிரம் சுமைகள். எனிவே, டிரெயின் சரியாக 10:30 க்கு குறித்த நேரத்தில் பந்து சேரி விட்டது. மும்பையில் இருந்து வந்தாலும். குர்லா குர்லா என்று பெங்களூருவில் இருந்து ஒரு எக்ஸ்பிரஸ் உண்டு. மறுநாள் கோயமுத்தூரில் ஏதேனும் அவசர வேலை என்றால் அதை தயவு செய்து புக்கி விடாதீர்கள். ஸ்கெட்யூல் டைம் 22:15 தான். அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒருநாள் SBC க்கு அதிகாலை 3:30 மணிக்கு சாவகாசமாக வந்து சேர்ந்தது. ஆற அமற கோவைக்கு காலை 11:30 க்குப் போய்ச் சேர்ந்தது.

ம்ம்ம்..

கூட்டம் அதிகம் இல்லை. வீக் டே என்பதால். லோயர் பர்த் . எதிர் சைடு லோயரில் ஆர். ஏ  .ஸி என்று 3 பெண்கள் ஒன்றாக அமர்ந்திருந்து அரட்டை அடித்துக் கொண்டே வந்தார்கள். அடுத்ததில் நண்பர்கள் குழாம் ஒன்று சிரத்தையாக சீட் ஆடிக் கொண்டிருந்தார்கள். லைட்டை அணைக்கவில்லை. ட்ரையின் பயணத்தின் போது எனக்கு இந்த அரட்டை ஆசாமிகள் அலர்ஜி. கிளம்பிய ஐந்து நிமிடத்தில் பர்த்தை மேலே மாட்டி லைட்டை அணைத்து தூங்கி விட வேண்டும் எனக்கு. நல்ல வேளையாக அரட்டை ஆசாமிகள் காட்பாடியில் இறங்கி விட்டார்கள்.

சரியாக ஏழு மணிக்கு புதுச்சேரியை அடைந்து நின்றது வண்டி.

ஆட்டோ வாலாக்கள் லிட்டெரல் ஆக பகல் கொள்ளை அடிக்கிறார்கள். பாண்டியில் முழுவதும் ஆட்டோ ராஜ்ஜியம் தான் போலும். சிடி பஸ்கள் மருந்துக்கும் கண்ணில் தென்படவில்லை. பிளாட்பாரத்துக்கே வந்து ஆட்டோ வாலாக்கள் பையைப் பிடுங்குகிறார்கள். ஸ்டேஷனுக்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் unofficial ஆக நின்று கொண்டு வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்கள். ஈ .ஸி .ஆர் போவதற்கு வாய் கூசாமல் 200-250 கேட்கிறார்கள். ஸ்பெஷலாக அங்கே நிற்பதற்கு அவர்கள் பணம் கட்ட வேண்டும் என்று சொல்வது நம்ப முடியவில்லை. மீட்டர் என்ற ஜந்துவை எதற்கு வம்பு என்று நன்றாக பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி வைத்து விட்டார்கள். மீட்டர் என்றால் ஏதோ கெட்ட வார்த்தையை செவி மடுத்தது போல முகம் சுளிக்கிறார்கள் .சரி. நமக்கு முதல் ட்ரிப் என்பதால் வேறு வழி இன்றி ஏறினேன். தெரியாமல் லாஸ்பெட்டில் ஹோட்டல் புக் செய்து விட்டேன். 

முதலில் மங்கலகரமான மீன் வாசனையுடன் உங்களை வரவேற்கிறது புதுச்சேரி.
சாலைகள் சுத்தமாக இருக்கின்றன. காலைக் குளிர் கொஞ்சம் காற்றில் கலந்திருந்தது. எம்.ஜி.ஆர் ரீகென்சி என்ற விதோனப் பெயர் கொண்ட ஹோட்டல். ஹோட்டலில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு மதியம் 12 மணி வாக்கில் ஆரவில் கடற்கரைக்கு சென்றேன்.
வாவ். கடற்கரை மனித நடமாட்டம் இல்லாமல் அழகாக  இருந்தது. சென்னை கடற்கரையைப் பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு பாண்டிச்சேரியின் சுத்தமான கடற்கரைகள் ஆச்சரியத்தைத் தரும். வெயில் அதிகம் என்பதால் திரும்பி வந்து விட்டேன். வழியில் வெளிநாட்டுப் பெண்கள் ஜோராக பைக்குகளில் பறக்கிறார்கள். ஒரு நல்ல வெஜ் ஹோட்டலுக்குச் செல்லுமாறு ஆட்டோவைப் பணித்தேன். அவர் சர்குரு என்ற ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். உள்ளே நுழையத் தயக்கமாக இருந்தது. ஏனெனில் உள்ளே முழுவதும் வெளிநாட்டுக் காரர்கள். நம் நாடுதான் என்றாலும் அவர்கள் உளவியல் ரீதியாக நமக்குள் ஒரு inferiority யை ஏற்படுத்தி விடுகிறார்கள். சர்வர்களும் வெளி நாட்டவர்களை கொஞ்சம் எக்ஸ்டிரா கவனத்துடன் கவனித்தார்கள். இருப்பினும் அவர்கள் நம் சவுத் இன்டியன் மீலை வெறும் கைகளில் பிசைந்து சாப்பிடுவது பார்க்க அழகாக இருக்கிறது. யுவதி ஒருவர் பெரிய அப்பளத்தைக் கையில் வைத்துக் கொண்டு இந்த வஸ்துவை கடிப்பதா, உடைப்பதா, என்று தெரியாமல் நோக்கிக் கொண்டிருந்தார். பாண்டியில் எல்லா இடங்களும் ஒருவித exotic (தமிழில் என்னவோ) இருக்கின்றன. இந்த உணவகமும் அப்படியே. பில் 180 
ரூபாய் வந்தது. உணவு நன்றாகவே இருக்கிறது.ஐரனி என்ன என்றால் நம் நாட்டுக் காரர்கள் ஒன் நூடுல்ஸ் ப்ளீஸ் என்று ஆர்டர் செய்து கொண்டிருக்க அவர்கள் நம்மூர் பூண்டு ரசத்தை இன்னும் கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உணவகத்தின் வெளியே லோக்கல் பெண்கள் சுருக்குப் பைகளை பரப்பி வைத்து விற்கிறார்கள். வெளிநாட்டுப் பெண்கள் அதை ஆர்வமுடன் வாங்குகிறார்கள். 



ஆட்டோ எம். ஜி. ரோடு வழியே செல்கிறது. எம்.ஜி ரோடு பழமையும் புதுமையும் கலந்து அழகாக இருக்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத சிறிய பொதுக்கூட்டம் ஒன்றில் ஒருவர் கர்ம சிரத்தையுடன் ஜெயலலிதாவை திட்டிக் கொண்டிருக்கிறார். பழங்காலக் கட்டிடங்கள் காணக் கிடைக்கின்றன. சைக்கிள் ரிக்ஷாக்கள் இருக்கின்றன. அதில் யாரும் பயணிப்பதாகத் தெரியவில்லை. வழியெங்கிலும் ஏழை மாரியம்மன், ரட்சக மாரியம்மன் என்று வினோதப் பெயர்கள் கொண்ட கோயில்கள் காணக் கிடைக்கின்றன. அம்மாவைப் புகழும் போஸ்டர்கள் ஒன்றிரண்டு அங்கேயும் விதிவிலக்கு இல்லை போலும். ஆட்டோக்காரர் இப்போது காந்தி சிலை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்.

இன்னோர் அழகிய கடற்கரை. இங்கே மணல் இல்லை. நுரை ததும்பும் பெரிய அலைகள் மெகா சைஸ் கருங்கற்களை மோதி மோதி பாலிஷ் செய்கின்றன. கடலில் இறங்க இந்த அபாயகரமான கற்களைக் கடந்து செல்ல வேண்டும். தைரிய இளைஞர்கள் சிலர் பாறைகளின் மீது ஏறி செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்கள். காந்தி சிலைக்கு எதிரே பாண்டிச்சேரி அரசின் சார்பில் சர்வதேச யோகா பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கே ஈயாடியது. ஏழெட்டு தலைகள் அங்கே வெயிலுக்கு ஒதுங்கி விருந்தன. மைக்கில் ஒரு பெண்மணி கடமை உணர்ச்சியுடன் கிட்டத்தட்ட தமிழ் போல் இருந்த ஆங்கிலத்தில் கத்திக் கொண்டிருந்தார். concentrate  anagatha chakra; concentrate  moolaadhar chakra என்றெல்லாம். எனக்கு உண்மையில் சக்ரா கோல்ட் டீ தான் சாப்பிட வேண்டும் போலிருந்தது. குண்டலினி எழும்புகிறதா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். மட்ட மட்ட மத்தியான வேளையில். வெல் எனக்கு ஏப்பம் தான் எழும்பியது.



நிற்க. இப்படி பல்க் ஆக யோகாவை கற்பிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது குரு சீடன் இருவருக்கு இடையேயான one -to -one relationship . மருத்துவர் ஒருவர் ஆயிரம் பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு மாஸ் வைத்தியம் பார்த்தால் எப்படி இருக்கும்? அது போலத்தான் இது. ஒவ்வொருவரின் உடல் மன சித்தங்கள் வேறு பட்டவை. எனிவே மாஸ் யோகாவில் ஒரு அரை மணிநேரம் பொழுது போனது. கடற்கரை ஓரம் அமைந்துள்ள சில கபே க்கள் நம்மை அரை நூற்றாண்டு பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன. ஹிலாரியஸ்! 



மீண்டும் ஹோட்டல் அறைக்குத் திரும்பி லோக்கல் சானல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
தூக்கம் வரவில்லை. மாலை 5:15 மணிக்கு மீண்டும் ஊர் சுற்றக் கிளம்பி விட்டேன். கொண்டுவந்த பணத்தில் பெரும்பாலான பகுதி ஆட்டோவுக்கே கரைந்து கொண்டிருந்தது. ஆசிரமம் மற்றும் கணேஷா டெம்பிளுக்கு மீண்டும் ஒரு 150/-


அரவிந்தரின் ஆசிரமம் நகருக்கு நடுவே அமைதியான இடத்தில் சுத்தமான சுற்றுப் புறத்தில் வீற்றிருக்கிறது. சாலைகள் அதி சுத்தம். ஆசிரமத்தின் 10% பகுதி மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப் படுகிறது. அதுவும் மாலை ஆறு மணிவரை மட்டுமே. நான் போகும் போது  5:40 ஆகி விட்டிருந்தது. ஆசிரமத்தின் உள்ளே ஒரு பெரியவர் நின்று கொண்டு பேஷாதீர்கள் என்று உதட்டின் மேல் விரல் வைத்து செல்லமாக அதட்டிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஈஷா யோக மைய தியான லிங்க மண்டபம் போல் இருக்கிறது. அரவிந்தர் மற்றும் அன்னையின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. அதைச் சுற்றிலும் மக்கள் மண்டியிட்டு அமர்ந்து வணங்குகிறார்கள். சுற்றிலும் அமர்ந்து தியானம் செய்கிறார்கள். பறவைகளின் ஒலி அந்த சூழ்நிலைக்கு அழகு சேர்க்கிறது. வாசனை ஊதுபத்தி எரிகிறது. சமாதி மேல் இலைதழைகள் விழாமல் இருக்க வலைகளைக் கட்டி உள்ளார்கள். கூன் விழுந்த பாட்டிகள் தரையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். 75% வெளிநாட்டவர்கள் தான். பெரும்பாலான இடங்கள் No Access !
 ஆசிரமத்தில் ஒருவித பாசிடிவ் அதிர்வுகள் நம்மைத் தொற்றிக் கொள்வது உண்மை. மாலையில் கொஞ்சம் மூட் அவுட் ஆகி இருந்தேன். what am I doing with my life என்று. ஆசிரம விசிட்-டிற்குப் பிறகு அப்படி ஒரு உற்சாகம். 



அடுத்து ஆசிரமத்தை ஒட்டி உள்ள, புகழ் பெற்ற மணக்குள விநாயகர் திருக்கோயில். கோயிலின் முன்னே லக்ஷ்மி என்ற பெயர் தாங்கிய கம்பீர யானை ஒன்று நிற்கிறது. அதை மக்கள் போட்டோ எடுத்தும், ஆசீர்வாதம் வாங்கியும் இம்சித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு இந்தக் கோயில்களில் யானைகளை இம்சிப்பது பிடிக்கவே பிடிக்காது. உள்ளே விநாயகரை வணங்கி விட்டு வெளியே யானையை வேடிக்கைப் பொருளாக வைத்திருப்பது மிகப்பெரிய ஐவரி சாரி ஐரனி . வெளிநாட்டுப் பெண்கள் flash களுடன் போட்டோ எடுக்கிறார்கள். பாவம் யானை! அவர்களுக்கு யானை அபூர்வம் போல. ஒருவித மினி டைனோசர் !

கோயில் ஒரு மிகப்பெரிய திருமண மண்டபம் போல இருக்கிறது. சுவர்களில் விதம் விதமான விநாயகர் உருவங்கள். முருகனுடன் பில்லியனில் அமர்ந்து செல்லும் விநாயகர், தாய்லாந்து விநாயகர், இந்தோனேஷியா விநாயகர், அன்ன வாகனம் கொண்ட பிரம்ம விநாயகர், மயூர விநாயகர், லக்ஷ்மி விநாயகர், ஹேரம்ப விநாயகர், டுண்டி விநாயகர், வாதாபி விநாயகர், சிங்கமுகம் கொண்ட விநாயகர்(இது கொஞ்சம் ஓவர்) , இரண்டுமுக, மூன்றுமுக , ஆறுமுக விநாயகர் இப்படியெல்லாம். கடவுள்களிலேயே இப்படிப்பட்ட ஒரு பாலிமார்பிசம் விநாயகருக்கு மட்டுமே வாய்த்துள்ளது. மேற்கூரையில் திருமால் விநாயகரிடம் பாஞ்சஜன்யம் வாங்குதல் கஜமுகாசுர வாதம் ஞானக்கனி பெறுதல் போன்ற ஓவியங்கள். விநாயகர் கோலாகலமான கடவுள். கருவறையில் மணக்குள விநாயகர் சப்பணமிட்டு அருள் பாலிக்கிறார். சுற்றிலும் முருகன், மற்றும் உற்சவர் சந்நிதிகள். சிறிய கோயில் தான். சிறிய கோயில் என்றாலும் அங்கே சைடில் ஒரு சிறப்பு தரிசனக் க்யூ நகர்ந்து கொண்டிருக்கிறது. கான்ட் ஹெல்ப்.

ஆசிரமத்தை சுற்றியுள்ள வீதிகளில் பெரும்பாலும் வெளிநாட்டு முகங்கள். புத்தகம் மற்றும் துணிக் கடைகள். இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். எல்லாமே வெளிநாட்டவர் வருகையால் கொள்ளை விலை. எத்தனை சொன்னாலும் அவர்கள் புன் முறுவலுடன் பேரம் பேசாமல் வாங்கி விடுகிறார்கள். அருகில் அடையாறு ஆனந்த பவன். அங்கே பிரபலமான கொழுக்கட்டை சாப்பிட்டேன். மீண்டும் கடற்கரை விசிட். இரவில் கடற்கரை அழகாக ஜொலிக்கிறது. வெண்ணிற நுரைகளுடன் இத்தனை பெரிய அலைகளை பாண்டியில் தான் பார்க்கிறேன். கடலைப் பார்க்கப் பார்க்க பரவசம். அது எல்லைகள் இல்லாமல் விரிந்து இருப்பதாலோ என்னவோ. நாம் எல்லைகளுடன் உள்ளவைகளையே பார்த்துப் பழகி விட்டோம். கடல் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. என்னதான் இருந்தாலும் அது நமது பிறந்த வீடு அல்லவா? 
கடற்கரை உணவகம் ஒன்றில் பிரைடு ரைஸ் சாப்பிட்டு பாண்டியில் ஒருநாள் இனிதே முடிந்தது. ஆட்டோக் காரர் சைக்கிள் கேப்பில் "சார், மசாஜ் சார், கேர்ள்ஸ் , சூப்பரா இருக்கும், போலாமா " என்றார். பெங்களூரில் இல்லாததா அய்யா என்று கேட்டவுடன் அமைதியாகி விட்டார். என் பர்ஸ் மட்டும் தலைவனை எண்ணி வாடும் தலைவியின் இடை போல சிறுத்துக் கொண்டே வந்தது. 

ஹோட்டலின் மெத்து மெத்தென்ற படுக்கையில் நன்றாகத் தூங்கிப் போனேன். மசாஜ் பார்லர் செல்வது போல கனவு வந்தது.

கடைசியாக ஆரோவில். மறுநாள். ஈ .ஸி .ஆர். இல் இருந்து ஆரோவில் செல்ல ரூ.550/- ஆட்டோ கட்டணம்.! :)



உலகம் முழுவதையும் ஒரே சமுதாயமாக அமைத்துப் பார்க்கும் ஒரு பரிசோதனை முயற்சி ஆரோவில். ஓஷோ கூட இதை கம்யூன் என்ற பெயரில் முயற்சித்து இருக்கிறார். அரசியல், குடும்பம், பணம், மூடப் பழக்கங்கள் இவைகள் இல்லாத ஒரு அட்வான்ஸ்ட் கான்செப்ட் இவை. இங்கே யாவரும் சமம். பிரிவினை பேதங்கள் இல்லை. வாசுதேவ குடும்பகம். ஆனால் இவையெல்லாம் நடைமுறைக்கு வர இன்னும் 500 வருடங்கள் ஆகலாம். பறந்து விரிந்த நிலப்பரப்பு ஆரோவில். நடப்பவர்கள் நடக்கலாம். சில பேர் சைக்கிள்களில் செல்கிறார்கள். சிலர் ஆசிரம வண்டிகளில். ஏரியா முழுவதும் சுத்தம் அமைதி, ஏகாந்தம், சௌந்தர்யம், பசுமை... இங்கேயும் பெரும்பாலும் வெளிநாட்டு முகங்கள். வழி நெடுகிலும் கிளை பரப்பிய ஆல மரங்கள். தோட்டங்கள். இதன் மெயின் மேட்டர் க்ளோப் வடிவில் அமைக்கப்பட்ட ஒரு ஜொலிக்கும் தியான மண்டபம். போகும் வழியெங்கும் சாதகனுக்கு இருக்க வேண்டிய 12 அவசிய குணங்களைக் தாங்கிய போர்டுகள். Sincerity , humility , courage இப்படியெல்லாம். பார்வையாளர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்து பார்க்க மட்டுமே அனுமதி. வரும் வழியில் கடைகள், உணவகங்கள், காபி ஷாப்கள்...as usual கொள்ளை விலை. 






 கோளத்தைப் பார்த்து மூன்று பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.


"உள்ளே என்னடி இருக்கு?"

"பெரிய புதையல் இருக்காம்"

"உள்ளே சாமி இருக்காம்"

மூன்றாம் பெண்:

"உள்ளே ஒண்ணுமே இல்லை!"

-ஒரு ஜென் கதைக்கான தகுதி இந்த சம்பவத்துக்கு இருக்கிறது.




இத்துடன் என் பாண்டிச்சேரி பயணம் இனிதே நிறைவேறியது. மீண்டும் பெங்களூருவுக்கு 
தாதர் எக்ஸ்பிரஸ். ரயில் முழுவதும் சிறுவர் சிறுமியர்களால் நிரம்பி இருந்தது. கையில் யோகா மேட் . கேட்டால் யோகா காம்பெடிஷன் என்றார்கள். யோகாவிலும் போட்டியை நுழைத்து விட்டார்கள் நம் ஆட்கள்.

மொத்தத்தில் தன்னை நாடி வருபவர்களை ஏமாற்றாத ஓர் அழகிய அமைதியான கடற்கரை நகரம் பாண்டிச்சேரி.


~சமுத்ரா 

















Wednesday, October 21, 2015

புதிய பதிவுகள்

தொடர்ந்து என் புதிய பதிவுகள் பேஸ்புக்கில் கிடைக்கும்.

https://www.facebook.com/madhu.sridharan.14


சமுத்ரா 

Saturday, November 29, 2014

நாவல் அறிவிப்பு :)

Write the  book that you want to read என்பார்கள். நல்ல புத்தகம் ஒன்றை நாம் படிக்க விரும்பினால் அது இன்னும் எழுதப்படவில்லை என்றால் அதை நாம் தான் எழுத வேண்டும்.:)

FB , ட்விட்டர் மற்றும் ப்ளாக் நண்பர்கள் சில பேர் சாட்டில் வந்து சமுத்ரா நீங்கள் கண்டிப்பாக ஒரு fiction நாவல் அட்டெம்ப்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். சரி, எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இப்போதைக்கு ப்ளாக்கில் எழுதலாம் என்று; அப்புறம் response ஐப் பொறுத்து புத்தகமாகப் போடுவதை யோசித்துக் கொள்ளலாம்.
சில நண்பர்கள் கலைடாஸ்கோப் ஐ முதலில் புத்தகமாகப் போடுங்கள்; நாங்கள் உதவி செய்கிறோம் என்கிறார்கள். பார்க்கலாம்.

சில விஷயங்களை கட்டுரையாக எழுதுவதை விட fiction நாவலில் சொல்வது சுலபம். கேரக்டர்களை வைத்து ஒரு கருத்தையும் அதன் மாற்றுக் கருத்தையும் சுலபமாக சொல்லி விடலாம். அந்த கேரக்டர் அப்படித்தான் என்று அந்த கற்பனைக் கதாபாத்திரத்தின் மேல் பழியைப் போட்டு விடலாம்.:) கட்டுரை ஒன்றில் ஒரு சினிமா நடிகரைத் திட்டியோ , ஒரு பெண்ணையோ காதலியையோ அழகுணர்ச்சியுடன் வர்ணித்தோ எழுதுவது நெருடலாய் இருக்கும். நாவலில் அவற்றை சுலபமாக கேரக்டர்கள் மூலம் செய்து விடலாம். Indirect Fulfillment!

ஆனால், கட்டுரையுடன் ஒப்பிடும் போது நாவலுக்கு அதற்கே உரித்தான சிக்கல்கள் இருக்கின்றன. கட்டுரை போல லீனியர்-ஆக எழுத முடியாது.
திருப்பங்கள் இருக்க வேண்டும். suspense முக்கியம்.க்ளைமாக்ஸ் சரியாகப் பொருந்தி வர வேண்டும். ஆரம்பத்தில் போட்ட முடிச்சுகளை அழகாக அவசரப்படாமல் ஒவ்வொன்றாய் அவிழ்த்து கிளைமாக்ஸில் எல்லாம் தெளிவாக வேண்டும். கிளைமாக்ஸ் 100% புரிந்து விடும்படி இருந்தால் இப்போது அது out of fashion ! வாசகர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு குழம்ப வேண்டும். There should be some room for reader's imagination! :P

so , ஒரு சைக்காலஜிகல் திரில்லர் எழுதலாம் என்று எண்ணம். கொஞ்சம்

சைக்காலஜி, கொஞ்சம் ஹிஸ்டரி, கொஞ்சம் திரில்லர், கொஞ்சம் சஸ்பென்ஸ் என்று ஒரு கமெர்சியல்  சினிமா போல. முழுக்க முழுக்க 
வாசகர்களின் மகிழ்ச்சிக்காக மட்டும். No String Attached

நாவலின் தலைப்பு : 
"நியூரான் நதி"

:)

சமுத்ரா

Monday, November 24, 2014

லைட் ரீடிங் கேள்வி

லைட் ரீடிங் -கேள்வி



“Most of the successful people I’ve known are the ones who do more listening than talking.” 
― Bernard M. Baruch

இறைவனை எப்படி அடையலாம் என்ற கேள்விக்கு ஏகப்பட்ட பதில்கள் கிடைக்கும்.இப்போது நிறைய ஆன்மீக க்ரூப்புகள் மலிந்து விட்டன. உங்களைப் பிடித்து அப்படியே அமுக்கி உள்ளே போட ரெடியாக இருக்கிறார்கள்.இறைவனை அடைய ஒரு எஸ்.எம்.எஸ். ஐ பத்து பேருக்கு forward செய்தால் போதும் என்ற நிலைக்கு கீழிறங்கி வந்து விட்டார்கள்! அமிர்தமே என்றாலும் வலுக் கட்டாயமாக ஊட்டினால் இனிக்குமா?

நீ 
இலவசமாகத் தரும் 
சொர்க்கம் 
எனக்கு வேண்டாம் என்கிறான் ஒரு கவிஞன் .

BTW ,இந்த 'ஒன்பது வித பக்தி' என்ற கான்செப்ட் என்னைக் கவர்ந்தது.
எல்லாவற்றையும் சொன்னால் ஹரிகதை ஆகி விடும்.( நான் ஓர் 
agnostic என்பதால் இந்த கடவுள், பக்தி, மோட்சம், இத்யாதிகளை ஒரு நெருடலுடனேயே எழுதுகிறேன்.)
 
ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
 
இறைவனைப் பற்றிக் கேட்பது கூட ஒருவகை பக்தி என்கிறார்கள்.
in fact அதுதான் முதலில் வருகிறது. இப்போது நாம் கேட்கும் (listen ) கலையை மறந்து விட்டோம். வள வளா என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறோம்.அடுத்தவரை listen செய்வது போல் நடிக்கிறோம். அவர் பேசும்போது அடுத்து நாம் என்ன பேசலாம் என்று திட்டம்தான்  போட்டுக் கொண்டு இருக்கிறோம். நன்றாகக் கேட்பவரே நன்றாகப் பேச முடியும்; நன்றாகப் படிப்பவரே நன்றாக எழுத முடியும் என்று சொல்வார்கள்.மிகத் தேர்ந்த சங்கீத வித்வான்கள் சொல்லும் சூத்திரம் 'ஒரு பாட்டு பாடனும்னா ஆயிரம் பாட்டு கேட்கணும்'...!

நீ ஒண்ணுமே செய்ய வேண்டாம். முதலில் கேளு என்கிறார்கள். முத்துக் கடலு மூடியா கெடக்கு என்பது போல காது சதா திறந்தே இருக்கிறது. hear ! காதைத் திறந்து வை.. அட, இது என்னமோ நல்லாருக்கே என்று நீ listen செய்தாலும் செய்யலாம் ;நம்மை சுற்றி சதா கேட்டுக் கொண்டிருக்கும் ஒலிகள் unconscious ஆக நம்முள் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அந்தக் காலத்தில்  அவளை நல்ல சத்விஷயங்கள், சங்கீதங்கள் கேட்க வைத்தார்கள்.  இந்தக் காலத்தில் எந்த சேனலைத் திருப்பினாலும் சீரியல்கள் என்ற பெயரில் கீழ்க்கண்ட சுமங்கல ஒலிகள் கேட்கக் கிடைக்கின்றன 


அவ குடும்பத்த அடியோட நாசமாக்கிருவேன் 

அவனை நடுத்தெருவுல பிச்சை எடுக்க வைக்கலன்னா நான் பிரபா கிடையாது.

கோபி ஒண்ணுமில்லாம மண்ணோடு மண்ணா போயிரனும் 

அவ இதை நெனச்சு உருகி உருகி அணு அணுவா சாகணும் 

இப்படிப் பட்ட ஒலிகளை கர்பிணிகள் கேட்டால் பிரகலாதனா பிறப்பான்? 

பிரகலாதன் கர்ப்பத்தில் இருந்த போது  நல்ல விஷயங்களை நாரதர் தினமும் சொல்கிறார்

சர்ப்பத்தில் படுத்தவன் சீர்த்தியை 
லீலாவதி 
கர்ப்பத்தில் படுத்தவன் காதுகளில் 
ஓதியவன் என்று நாரதரை வர்ணிக்கிறார் வாலி.



கற்றிலன் ஆயினும் கேட்க என்கிறார் வள்ளுவர்.  புத்தகம் படிக்க வேண்டும் என்றால் உனக்கு படிப்பறிவு வேண்டும். அனால் கேட்பதற்கு நீ educated ஆக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.மேலும் படிப்பது நேரம் பிடிக்கும். கேட்பது quick . பரீட்சித்து ஏழு நாளில் இறந்து விடுவான் என்று தெரிந்ததும் அவன் சாமார்த்தியமாக ஸ்ரவண பக்தியைத்  தேர்ந்தெடுக்கிறான். கொண்டு வா கீதையை நான் படிக்கிறேன் என்று சொல்லவில்லை. கொண்டு வா தம்பூரா நான் இறைவனைப் பாடுகிறேன் என்று குதிக்கவில்லை . தியானம் செய்கிறேன் என்று பிலிம் காட்டவில்லை . போடு பாயை நான் உட்கார்ந்து கேட்கிறேன் என்கிறான். கேட்பது தான் எளிது. குறைந்த நேரத்தில் நிறையக் கேட்கலாம். எல்லாம் சரி..நாம் கேட்பதற்கு யாராவது ஒருவர் சொல்ல வேண்டுமே என்கிறீர்களா? அதுவும் சரி.
 
நீங்கள் கேட்கத் தயார் என்றால் சொல்பவர் கிடைத்து விடுவார். ஏனெனில் இப்போது கேட்பவர்கள்தான் குறைவு:) நீங்கள் கேட்கத் தயார் என்றால் ஒட்டு மொத்த பிரபஞ்சமே உங்களுக்கு பாடம் நடத்தும்.
 
ஜென் குரு ஒருவரை உங்கள் குருமார்கள் யார் யார் என்று கேட்டதற்கு அவர் 
நாய் ,காகம்,மாடு இவர்கள் என்கிறார்.
 
நாய் தான் படுத்திருந்த இடத்தை திரும்பிப் பார்க்காமல்  எழுந்து போகிறது. பற்றற்ற தன்மையை அதனிடம் கற்றேன் 
 
காகம் பகிர்ந்து கொள்ளாமல் தனக்கென சேர்த்து வைப்பதில்லை. பகிர்தலை அதனிடம் கற்றேன் 
 
மாடு தான் தின்றதை மீண்டும் அசை போடுகிறது. என்னை நானே மீண்டும் திரும்பிப் பார்த்து மேம்படுத்துவதை அதனிடம் கற்றேன்.
 
என்கிறார்.
 
நல்ல சீடனுக்கு சிலை கூட ஆசானாகிறது.

 
 
கண்களை நேர்க்கோட்டில் வைத்த இயற்கை காதுகளை பக்கவாட்டில் வைத்துள்ளது. 360 டிகிரியில் எல்லாப் பக்கங்களில் இருந்தும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

~சமுத்ரா


Sunday, November 23, 2014

லைட் ரீடிங் திருவாசகம்

லைட் ரீடிங் 
திருவாசகம் 

The lesser the baggage, the merrier the journey என்பதில் நம்பிக்கை உள்ளவரா நீங்கள்? நீங்கள் என் கட்சி :) இரண்டு பைகளுக்கு மேல் கொண்டு போனால் கண்டிப்பாக நான் ஒன்றை மறந்து வைத்து விடுவேன். மேலும், லக்கேஜ் ஜாஸ்தி என்றால் எனக்கு இறங்கும் ஸ்டாப்/ ஸ்டேஷனுக்கு அரை மணிக்கு முன்பே தேவையில்லாத டென்ஷன் வந்து விடும். இப்போதெல்லாம் யாரும் நம் பையை லபக்கிக் கொண்டு போவதில்லை தான். ஏனென்றால் அவர்களுக்கே 27 பைகள் இருக்கும் போது நம் பையை வேறு யார் விரும்புவார்?:) மேலும் வெடிகுண்டு, போதைப் பொருள் இத்யாதிகள் மலிந்து விட்டதால் நாம் மறந்து விட்டாலும் நம் பேக்கேஜ் பொட்டாட்டம் அங்கேயே அமர்ந்திருக்கும்.

மேலும் லக்கேஜ் களை எங்கே வைப்பது என்பது எனக்கு ஒரு நைட் மேர் .
flight ஆக  இருந்தால் முட்டாய் கொடுக்கும் அம்மணிகளிடம் ஹெல்ப் கேட்கலாம். பஸ்ஸில், 2S ட்ரெயினில் மேலே வைத்துவிட்டு எடுப்பது கூட எனக்கு சிரமம் தான்.ஒருமுறை பஸ்ஸில் மேலே வைத்த பையை எடுக்க முடியவில்லை. ஸ்டாப் வேறு வந்துவிட்டது. யுவதியாக இருந்தால் எல்லாரும் முன்வந்து எடுத்துத் தந்திருப்பார்கள். பசங்களை யார் கண்டுகொள்கிறார்கள். என்னடா இது நம் ஆண்மைக்கு வந்த சோதனை என்று எப்படியோ திக்கித் திணறி எடுத்துக் கொண்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி வீடுபேறு அடைந்தேன்.

பஸ்ஸில் நடைபாதையில் பையை வைக்க முடியாது. கண்டக்டர் மிரட்டுவார்.காலடியில் வைத்தால் உட்காரவே முடியாது. கைக்குழந்தை போல கையில் வைத்துக் கொண்டு வரவேண்டும். மேலும், உட்கார்ந்திருப்பவர்களை மீறி இந்த லக்கேஜை எடுப்பது. அதற்கு ஒரு உத்தித்த பர்ஸ்வ கோனாசனம் செய்ய வேண்டும். நமது பஸ், ட்ரெயினில் இருக்கும் த்ரீ சீட்டர்கள் உண்மையில் இரண்டு பேர்களுக்கானவை . இந்தியாவில் ஒல்லியாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அந்த த்ரீ சீட்டரில் மூன்று பேரை உட்கார வைப்பது டார்ச்சர்.

சரி, என்னதான் இருந்தாலும் நம்மால் ஒரு சின்ன தோள்ப்பை கூட இல்லாமல் பயணிக்க முடிவதில்லை.ஏதோ ஒன்றை நாம் எப்போதும் சுமந்து கொண்டே இருக்கிறோம். காயமென்னும் சுமையிறக்கக் கண்டிலனே என்று உடலைக் கூட சுமை என்று எண்ணிய சித்தர்கள் கூட ஏதோ ஒன்றை சுமந்து கொண்டே திரிந்தார்கள். பட்டினத்தார் கையில் கரும்பை சுமந்து கொண்டே திரிந்தாராம். ஏதோ ஒன்றை சிம்பாலிக்காக சொல்ல வருகிறார் போலும் . அவ்வை கையில் ஒரு மூட்டையை எப்போதும் சுமந்தாள் .ஒருநாள் அவளை வழியில் சந்தித்த பாரி, அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான். இல்லையைப்பா நான் போக வேண்டும் என்று அவ்வை மறுத்து விட்டு நடக்கிறாள்.சற்று  நேரத்தில் கள்வன் ஒருவன் வந்து அவளது கைப்பையை வழிப்பறி செய்து விட்டு ஓடி விடுகிறான்.'பாரியின் நாட்டில் வழிப்பறியா ' என்று புலம்பி, முறையிட அரண்மனை வருகிறாள் அவ்வை. அப்போது பாரி 'மன்னித்து விடுங்கள்; உங்களை அரண்மனைக்கு வரவழைக்க வேறு வழி தெரியவில்லை. கள்வன் உருவில் வந்தவன் நான்தான் 'என்கிறான்.


சில சமயம் தெய்வங்கள் சுமந்து கொண்டிருக்கும் ஆயுதங்களைப் பார்க்க பகீர் என்றிருக்கும். அன்பே சிவம் என்று சொல்லும் நாம்தான் தெய்வங்கள் கையில் இப்படிப் பட்ட கொலை ஆயுதங்களைக் கொடுத்து வைத்திருக்கிறோம்.கத்தி, வாள் , கோடாலி, கேடயம், பாசம், அங்குசம், ஈட்டி, திரிசூலம், கதை, வில், அம்பு, சாட்டை, சக்கரம்....இன்னொரு funny யான விஷயம் சுதர்சனர்.அவரே ஒரு சக்கரம். அவர் கையில் எதற்கு இன்னொரு சக்கராயுதம்? இப்படி recursion இல் போய்க் கொண்டே இருக்குமா?சரி..தெய்வங்கள் சாதாரணமாக casual ஆக , home dress இல் இருக்கலாகாதா ? எப்போது பார்த்தாலும் equipped ஆக இந்த காயலான் கடை அயிட்டங்களை சுமந்து கொண்டேதான் வேண்டுமா?போர், அசுரன், கிசுரன் ஏதேனும் வந்தால் அந்த சமயத்தில் இதையெல்லாம் சுருட்டிக் கொண்டு புறப்பட்டால் போதுமே! முதன்முதலில் நாம் குழந்தைகளுக்கு இப்படி வன்முறையான தெய்வங்களை அறிமுகம் செய்ய வேண்டுமா? 'உம்மாச்சி' ஏம்மா கத்தி வச்சிருக்கு  என்றால் கெட்டவங்களை சதக் -குன்னு குத்திரும் என்று அமெச்சூர் தனமாக சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோமா? who is கெட்டவன் ??

நாம் ஏதோ ஒன்றை சுமந்து கொண்டே இருக்கிறோம். உடலளவில் இல்லை என்றாலும் மனதளவில். extra unwanted luggage . தேவையில்லாத எண்ணங்கள், பொறாமை, கவலை, பயம், சந்தேகம், குற்ற உணர்ச்சி, பழி எண்ணம்,அவன் அன்னிக்கு அப்படி சொல்லிட்டானே, ஆம்பிளையா ன்னு கேட்டானே என்றெல்லாம். இவற்றை விட சுமைகள் வேறில்லை.

மனசு உடுத்தின கவலைத் துணி 
எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி!
இருக்கும் கண்ணீரையும் ஏத்தம் நீ போட்டெடு 
அழவா இங்கே வந்தோம் 
ஆடு பாடு ஆனந்தமா ஓய்  என்று நம் 'தல' பாடுகிறார்.

சரி. இப்போது பக்தி மோடுக்கு மாறுவோம். திருவாசகம். பக்தி, அர்ப்பணிப்பு ,lyrical beauty எல்லாம் இங்கே காணக்கிடைக்கிறது.. தமிழில் இத்தனை அழகுகள்  இருக்க நாம் சினிமாக்களில் "lets do doggy style கண்ணே" என்று பாடிக் கொண்டு மெய் மறந்திருக்கிறோம். cant help 


பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். 182 


எத்தனை சுமக்கிறார் பாருங்கள் அந்த மனுஷன் .

காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே என்று ஒரு கீர்த்தனை.

செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி 
அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி 
கங்கையைத் திங்களை கருத்த சடையில் தூக்கி 
இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத 

காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே!


எத்தனை தான் தூக்குவார் ஈசன்.

சின்னவயதில் பாட்டி பாட்டு சொல்லித் தருவாள்.
எழுதிக்கோ யதுகுல காம்போதி ஆரோகணம்:ச ரி ம ப த ஸா 

பாட்டி இந்த பாட்ல ஒரு சந்தேகம். 

என்னது? 

இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத காலை 

ஒருவர் கண்டறியாத ன்னு தான் வரணும்.

ஏன்னா விஷ்ணு தான் காலைத் தேடித் போறார். பிரம்மா தலையைத் தேடித் போறார்.

பாடலின் பொருளைப் பார்ப்போம்.


பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் 
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் 


சிம்பிள் தமிழ் தான். பாடல் பண்ணை சுமக்க வேண்டும். பண் என்றால் ராகம். ராகத்தோடு பாடினால் நலம். அப்படிப் பாடினால் பரிசு தருவான்.

பெண் சுமந்த பாகத்தான்.
பார்வதியை இடது பக்கத்தில் சுமப்பவன்.

ஒரு குட்டிக் கதை. ராவணன் பெண்ணால் அழிந்தான். அதற்குக் காரணம் பார்வதி சாபம். ஒருநாள் ராவணன் சிவனை வணங்க வருகிறான். பத்து தலைகளுடன்! கீழே விழுந்து வணங்குகிறான். அப்போது தன் வலது பக்கத்து ஐந்து தலைகளை தரையில் படாமல் மேலே தூக்கிக் கொள்கிறான். இடது பக்கத் தலைகள் மட்டும் தரையில் படிகின்றன. ஈசனுக்கு இடது பக்கம் உமை இருப்பதால் ஒரு பெண்ணை நான் போய் வணங்குவதா என்று.
பார்வதி 'கர்வம் பிடித்தவனே, ஒரு ஒரு பெண்ணாலேயே நீ அழிவாய் ' என்று சபிக்கிறாள்.

விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன் 
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை 


கண்ணை சுமக்கும் நெற்றியை உடையவன். சிவன் நெற்றிக்கு இது extra சுமை போலும். நெற்றியில் ஒரு கண். நெற்றிக் கண்ணை மூடினால் vertical view ..திறந்தால் horizontal view போலும்! பொதுவாக நெற்றிக் கண் கடவுள் என்று தான் சொல்வார்கள். இங்கே கவிதை அழகுக்காக கண் நெற்றிக் கடவுள் என்று சொல்கிறார் ஆசிரியர்.

மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு 
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்


சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட கதை தெரிந்திருக்கும். பிட்டை தின்னாலும் பிரியாணி தின்னாலும் உழைத்து சாப்பிடு என்று வலியுறுத்துகிறார். மொத்துண்டு -மொத்து என்பது தூய தமிழ்ச்சொல் என்று இப்போதுதான் எனக்கும் தெரிந்தது:)

சிவனுக்கு எத்தனை கஷ்டம் பாருங்கள்? ஒரு அப்பா அம்மா இருந்தால் இத்தனை கஷ்டம் வருமா என்று கேட்கிறார் இன்னொருவர்.

கல்லால் ஒருவன் அடிக்க -உடல் சிலிர்க்க 
காலின் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க 
வில்லால் ஒருவன் அடிக்க- காண்டீபம் எனும் 
வில்லால் ஒருவன் அடிக்க 
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட 
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட 
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க 


தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ அய்யா!

தமிழில் இதை வஞ்சப்புகழ்ச்சி என்பார்கள். சிவனை ஓர் அனாதை என்று இகழ்வது போல சொல்லி அவன் ஆதி அந்தம் அற்ற பரம்பொருள் என்று புகழ்வது.


சமுத்ரா ..

Wednesday, November 19, 2014

நான் கவிஞன்...

மலைச்சாரலில் சிலிர்த்துக் கொண்டு 
கீழிறங்கும் அனுபவம் வேண்டுமா உங்களுக்கு?
நிலவொளியின் கீழ் 
ஆரவாரமின்றி வந்துபோகும் 
கடலலைகளின் தரிசனம் வேண்டுமா உங்களுக்கு?
மாலைவானில் 
வெண்ணிறப் பறவைகளுடன் 
வீடுதிரும்பும் ஆனந்தம் வேண்டுமா உங்களுக்கு?
பின்னிரவின் நிசப்தத்தில் 
தலை நனைக்கும் பனியில் 
விண்மீன்களுடன் பேசும் வித்தை வேண்டுமா உங்களுக்கு?
அதிகாலைப் பொழுதொன்றில் 
கம்பளி உடையணிந்து 
சாலையோரக் கடையொன்றில் 
தேநீர் ருசிக்கும் அனுபவம் வேண்டுமா உங்களுக்கு?
யாருமற்ற அடர்ந்த 
கானகத்தில் 
கொஞ்சம் பயத்துடன் காலில் இலை சரசரக்க 
நடக்கும் தைரியம் வேண்டுமா உங்களுக்கு?
மனம் வாடிப் படுத்திருக்கையில் 
காதலி அருகில் வந்து 
தலைகோதும் இதம் வேண்டுமா உங்களுக்கு?
பாலைவனத்தில் பகலெல்லாம் நடந்து 
பின் 
நிழலில் இளைப்பாறி 
நீர் அருந்தும் ஆசுவாசம் வேண்டுமா உங்களுக்கு?
மழைச் சாரலில் குடையை உதறிவிட்டு 
மனதுக்குப் பிடித்தவருடன் 
நடந்து போகும் அதிர்ஷ்டம் வேண்டுமா உங்களுக்கு?


நான் கவிஞன் ...
என் கவிதை மூலம் 
இவை அத்தனையும் தருவேன்..

நான் கவிஞன் ...
என் எழுத்து மூலம் 
இவை யாவையும் தருவேன்.

நான் கவிஞன் ...
.

..

...

....


நீங்கள் கீழ்க்கண்ட என் 
வங்கிக் கணக்கு எண்ணுக்கு பணம் டெபாசிட் செய்தால் போதும் 

IFSC Code :HDFC0001866

Account no: 500000072890

சமுத்ரா