இந்த வலையில் தேடவும்

Sunday, March 30, 2014

கலைடாஸ்கோப் -108

கலைடாஸ்கோப் -108 உங்களை வரவேற்கிறது.


போன கலைடாஸ்கோப்பில் பாதத்தைப் பற்றிப் பேசினோம். இன்று தலை!


"A good head and a good heart are always a formidable combination"
-Nelson Mandela

சிவாவின் 112 தியானப் பயிற்சிகள் பற்றி ஓஷோ விரிவாகப் பேசி இருக்கிறார். அதில் ஒரு தியானத்தை இப்போது பார்ப்போம்.

"உங்களைத் தலையற்றவராக உருவகித்துக் கொள்ளுங்கள்"

இந்த தியானம் மிகவும் உபயோகமானதாகும். ஏனென்றால் நாம் எப்போதும் நம் மையம் நம் தலையிலேயே இருப்பதாக (தவறாக) நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  மூளைக்கு மிக அதிக முக்கியத்துவம் தந்து விடுகிறோம். இந்த உணர்ச்சி நம்மை மேலும் மேலும் இறுக்கமானவர்களாகவும் பதட்டப்படுபவர்களாகவும் வைத்திருக்கிறது. ஒரு மாறுதலுக்காக சில நாட்கள் உங்கள் தலை மறைந்து போய் விட்டதாகவும் உங்கள் மையம் இதயத்துக்கு இறங்கி வந்து விட்டதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் பார்ப்பவை, கேட்பவை, நினைப்பவை இவையெல்லாம் இதயத்தில் இருந்தே செய்வதாக உருவகியுங்கள்.

இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினை தலையில் இருந்து இதயத்துக்கு வர முடியாதது தான்.24 x 7 நாம் தலையிலேயே வாழ்கிறோம். ஒரு வக்கீல் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பின்னும் வக்கீலாகவே இருக்கிறார். ஒரு ஆசிரியர் வீட்டுக்கு வந்த பின்னும் ஆசிரியராகவே இருக்கிறார். ஒரு மேனேஜர் ஆபீசில் இருந்து வீடு திரும்பினாலும் கூட மேனேஜராகவே வலம் வருகிறார். இதயத்துக்கு இறங்கி வர முடிவதில்லை. ஈகோ வை, இமேஜை விட்டுக் கொடுக்க முடிவதில்லை. ஹை கோர்ட் நீதிபதி, ஒரு ஜெனரல் மேனேஜர், வீட்டில் குழந்தைகளுடன் உப்பு மூட்டை விளையாடுவதா??? வெங்காயம் நறுக்குவதா? கடைக்கு சென்று கால் கிலோ உளுந்தம் பருப்பு வாங்குவதா?????

தலை இல்லாதவராக நம்மை உருவகித்துக் கொள்வதால் இந்த அடையாளம் அழிந்து விடுகிறது. தலை இல்லாவிட்டால் இஞ்சினியர் என்ன, டாக்டர் என்ன, கவிஞர் என்ன, எல்லா அடையாளங்களும் அறுந்து விடுகின்றன. இதயம் மையமாகி விடும் போது மட்டுமே உண்மையான அன்பு மலர்கிறது. ஏனென்றால் மூளையால் அன்பு செலுத்த முடியாது. மூளையால் ஒருவரை கவனித்துக் கொள்ள (care ) முடியமே தவிர அன்புக்கு இதயம் மட்டுமே மையமாக உள்ளது. நீங்கள் வீட்டுக்கு வந்த பின்னும் கூட டாக்டராகவோ, விஞ்ஞானிவாகவோ இருந்தால் உங்களால் அன்பு செலுத்த முடியாது.. இதயம் மையமாகி விடும் போது மட்டுமே இது சாத்தியமாகிறது. மேலும் எல்லையிலாத அமைதி உங்களுக்குள் நிறைகிறது.

ஓஷோ மேலும் சொல்கிறார்: தியானத்தில் மேலும் ஆழ்ந்து செல்லும் போது இதயம் கூட உங்கள் உண்மையான மையம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.அறிவு (intellect ) , உணர்வுகள் (emotions ) இவை இரண்டையும் கடந்த ஒரு மையம் உங்களுக்கு இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். தொப்புளுக்கு அருகே அது இருக்கிறது. இந்த மையத்தின் மீது தான் ஜப்பானில் தியானம் செய்கிறார்கள். இதயத்தின் மீது தியானம் செய்வது சிறந்தது என்றாலும் சில சமயம் அது உங்களை உணர்சிகளில் இருந்து மீள இயலாமல் செய்து விட வாய்ப்புள்ளது.

சரி.,,,,,, change topic ..

இப்போது சாப்பிடுவதைப் பற்றி ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

பொதுவாக நாம் சாப்பிடுவதை மிக வன்முறையுடன் செய்கிறோம். விலங்கின் உள்ளுணர்வு இன்னும் நமக்குள் இருக்கிறது. மிருகங்கள் எந்த ஆயுதங்களையும் உபயோகப்படுத்துவதில்லை.அவை தம் பற்களையும் நகங்களையும் பயன்படுத்தியே இரையைக் கொன்று தின்கின்றன. அதே போல நாம் உணவு உண்பதை ஒரு கொலை போலவே செய்கிறோம். அது சைவ உணவாகவே இருந்த போதிலும். மிருகங்கள் உணவை அவசர அவசரமாக உண்கின்றன. எதிரிகளிடம் இருந்து, போட்டி விலங்குகளிடம் இருந்து  ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தில். மனிதனும் காடுகளில் வாழ்ந்த போது இந்த அவசரத்துடனேயே சாப்பிட்டான்.அந்தப் பழக்கம் இன்னும் நமக்குள் unconscious ஆகத் தொடர்கிறது. இன்று நமக்கு எந்தத் தலை போகிற அவசரமும் இல்லை.ஆற அமரச் சாப்பிடுவதற்குள் எவனாவது வந்து மனைவியையோ மகளையோ கடத்திக் கொண்டு போய் விடுவான் என்ற பயமும் இல்லை. உணவை அனுபவித்து உண்பது எப்படி என்று நமக்குத் தெரிவதில்லை.இது நமக்குள் சென்று ரத்தமாகி, சதையாகி  நம்மை வாழ வைக்கிறது என்ற உணர்வுடன், மதித்து நாம் உண்பதில்லை.ஏதோ குப்பைத் தொட்டியில் குப்பையை வீசுவது போல உள்ளே தள்ளுகிறோம்.

ஆற அமர, பந்தியில் அமர்ந்து எல்லாருடனும் சேர்ந்து சாப்பிடுவதை நாம் தாழ்வாக நினைக்கிறோம். நின்று கொண்டு ஸ்டைலாக இரண்டு நிமிடங்களில் சாப்பிட்டு விட்டு டிஸ்யூ பேப்பரில் கை துடைத்துக் கொள்கிறோம். பந்தியில் அமர்ந்ததும் சாதம் வரை எல்லா அயிட்டங்களும் பரிமாறி முடிக்கும் வரை இலையில் கை வைக்கக் கூடாது என்பது புராதனமான பண்பாடு. சபை நாகரிகமும் கூட. மிருகங்கள் மட்டுமே போடப் போட அவசரத்துடன் பிடுங்கி சாப்பிடும்.


சத்குரு :

உங்கள் உடலை கவனித்தால் 40 லிருந்து 48 நாட்களுக்குள் ஒரு சுழற்சிக்கு உள்ளாவதை உங்களால் உணர முடியும். இந்த காலத்தை ஒரு 'மண்டலம்' என்கிறோம்.ஒவ்வொரு மண்டலத்திற்கும் உடலுக்கு 3 நாட்களுக்கு உணவு தேவைப்படுவதில்லை. சிரமமில்லாமல் அந்த நாட்களில் நீங்கள் உணவைத் தவிர்க்க முடியும்.வளர்ப்புப் பிராணிகள் கூட சில நாட்களில் உணவைத் தவிர்ப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். குழந்தைகளும் இதை செய்யும். ஆனால் இன்றோ பெற்றோர் தங்கள் குழந்தைகளை உணவு உண்ணச் சொல்லி திணிக்கின்றனர்.

விரதம் என்பது உங்கள் உடல் உங்களிடம் கேட்கும் இடைவேளை. இதனைப் புரிந்து கொள்ளும் சூட்சுமம் பலருக்கும் இல்லாததால் இந்தியாவில் ஏகாதசி என்னும்  ஒரு நாளைக் குறிப்பிட்டு வைத்தனர். இப்படிக் குறிப்பிட்டாலாவது மக்கள் இதைத் தவறாமல் கடைபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதைச் செய்தனர். ஆனால் உடலை வருத்தி, கட்டாயப்படுத்தி உணவில்லாமல் செய்வது சரியல்ல.


சரி. தியானம், யோகம் என்று போர் அடிக்க விரும்பவில்லை.


"மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா"


“What hath night to do with sleep?” 
― John MiltonParadise Lost

“Whoever thinks of going to bed before twelve o'clock is a scoundrel.” 
― Samuel Johnson

உங்களுக்கு பகல் பிடிக்குமா? இரவா?  எனக்கு இரவு தான் பிடிக்கும்.

இரவு பயம் தருவதாக, துன்பம் தருவதாக எப்போது இருக்கும்?

1. தீராத நோய் இரவில் அதிகமாகும் போது
2. காதலன்/ காதலியின் பிரிவுத் துயர் இரவில் அதிகமாமும் போது
(காதலும் நோய் தான் என்றால் பாயிண்ட் (2) அனாவசியம்!)

மற்றபடி இரவு ஒரு gift !


இரவு வருகிறதே, காதலன் அருகில் இல்லையே என்று ஏங்கும் டைப்பில் பாடல்கள் அக இலக்கியத்தில் ஏராளம். குறுந்தொகையை எடுத்துக் கொள்வோம். ஒன்றிரண்டு பாடல்கள்:

குறிஞ்சி

வரவேண்டிய நேரத்தில் வராமல் அதென்ன பொருள் சேர்க்கப் போவது? மார்கழி வாடை வீசுகிறது! மாலை வருகிறது. இப்போது அவர் கூட இல்லை.இளைமையும் தனிமையும் இருக்கும் போது அனுபவிக்காமல் எப்போது அனுபவிப்பது??

பெருந் தண் வாடையும் வாரார்;
தோ தோழி நம் காதலர் வரவே?


முல்லை 

இரவு தூக்கம் வரவில்லை. என்னடி செய்வேன்? எருமை தன் கொம்பை அசைக்கும் போதெல்லாம் அதன் கழுத்து மணியோசை அவர் வரும் தேர் மணியோசை போலக் கேட்கிறதே!

திரிமருப்பு எருமை நிற மை ஆன் 
வருமிடத்து யாத்த பகுவாய்த் தெண் மணி 


நெய்தல் 

நான் தான் இரவு தூங்காமல் புலம்புகின்றேன். நீயும் இரவு முழுவதும் ஒலிக்கிறாயே ! கடலே! யாரால் நீ துன்பமுற்றாய்?

யார் அணங்குற்றனை - கடலே ! பூழியர் 
..

வெள் வீத் தாழை திரை அலை
நள்ளென் கங்குலம் கேட்கும், நின் குரலே?

இன்னொரு பாடல்

எல்லை கழிய முல்லை மலர
கதிர் சினம் கழிந்த கையறு மாலை
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்
எவன்கொல் வாழி ?-தோழி!
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே 

இரவு வருகிறதே என்று அஞ்சும் தலைவியின் பாடல் . அகராதி இல்லாமலேயே எளிதாகப் புரியும் ...

வார்த்தைப் பிரயோகங்களைக் கவனிக்கவும்.

"கதிர் சினம் தணிந்த கையறு மாலை"!!

இரவு, வெள்ளம் போல நான்கு பக்கங்களில் இருந்தும் என்னை மெல்ல மெல்லச்  சூழ்கிறது என்கிறாள்.'கங்குல் வெள்ளம்'; இந்தத் தொடராலேயே இந்தப் பாடலை எழுதியவருக்கு கங்குல் வெள்ளத்தார் என்று பெயர் ஏற்பட்டு விட்டது! இரவை கொஞ்சம் unusual ஆக வெள்ளத்துடன் ஒப்பிட்டதால்!


கவிதை என்றால் சும்மா, மானே தேனே கண்ணே மணியே நீயில்லாமல் நானில்லை காபியில் சக்கரை இல்லை என்றெல்லாம் எழுதாமல்   இப்படிப்பட்ட catching lines ஒன்றிரண்டு இருக்க வேண்டும். படிப்பவர்கள்  'அட' என்று வியக்கும் படி!

சங்க இலக்கியங்களில் புலவர்கள் சிலர் அவர்கள் பாடிய catching lines மூலம் அறியப்படுகிறார்கள்.

*அணிலாடு முன்றிலார்
*கல்பொரு சிறு நுரையார்
*குப்பைக் கோழியார்
*மீன் ஏறி தூண்டிலார்

அணில் கொஞ்சம் பயந்த சுவாபம் கொண்ட பிராணி. கொஞ்சம் தனித்தே இருக்கும். அந்த அணில் சும்மா இறங்கி வந்து முற்றத்தில் ஜோராக பயமின்றி  விளையாடுகிறது என்றால் அங்கே பொதுவாக மனித நடமாட்டம் இல்லாத தனிமை நிலவுகிறது என்று நினைக்கத் தோன்றும். காதலனைப் பிரிந்து அப்படிப்பட்ட அமானுஷ்யத் தனிமையில் தவிக்கிறேன் என்கிறாள் தலைவி. மேலோட்டமாகப் பார்த்தால் அணிலாடு முன்றில் என்றால் ஏதோ சந்தோஷமாக  அணில்கள் விளையாடும் முன்றில் கொண்ட மகிழ்ச்சியான வீடு என்று தலைவி பாடுகிறாள் என்று நினைக்கத் தோன்றும். அப்படி இல்லை!

கல்பொரு சிறு நுரை என்றால் என்ன உவமை என்று குறுந்தொகையில் தேடிக் கொள்க!

அந்தக் காலத்தில் குறிஞ்சி, முல்லை போன்ற நிலங்களில் இயற்கை வளம் செறிந்திருந்தது . புலவர்கள் சுற்றுப் புறங்களில் தாங்கள் பார்த்த மான், மயில், குரங்கு, புன்னை மரம் இவற்றை தங்கள் பாடல்களில் பாடினார்கள். மானுண்டு எஞ்சிய நீர், குரங்கு உருட்டும் மயில் முட்டை என்றெல்லாம். இப்போதெல்லாம் முதலில் யாரும் காதல் கடிதம் எழுதுவதில்லை. எழுதினாலும் எதைக் குறிப்பிடுவது? எங்கே பார்த்தாலும் பிளாட்டுகள் , அபார்ட்மெண்ட் கள் , கார்கள், சூப்பர் மார்க்கெட்டுகள்..!! இதை வைத்து என்ன catching lines எழுத முடியும். உங்களுக்கு எழுத முடிந்தால் சொல்லுங்கள்.


சரி.

"இரவில்" ஏதோ ஒரு வசீகரம் இருப்பதாகத் தோன்றுகிறது. இரவு பற்றி ஒரு கவிதை

சூரியக் காதலன்
போனதும்
பூமிப் பெண் நாணம் கொண்டு
போர்த்தும்
கறுப்பு மேலாடை! ஹி ஹி நான் எழுதியது!


முன்பு சொன்ன அந்த catching lines மூலம் இரவு பற்றி ஒரு கவிதை எழுத முயற்சி செய்யுங்கள். catching lines என்பது எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.

சரி. கவிதை போதும்.

பூமியின் அதிசயங்களில் ஒன்று அதன் பகல் பொழுதும் இரவும் கிட்டத்தட்ட 12 மணி நேரமாக இருப்பது. மிகக் குறைவான பகல் பொழுது தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான ஒளியைத் தராமல் போகலாம். அதே சமயம் மிக அதிகமான பகல் அவைகளை கருகச் செய்து விடலாம்.

இருள் தான் பிரபஞ்சத்தின் இயற்கை என்பதை கவனித்திருக்கிறீர்களா? ஒளி செயற்கை! சராசரியாக பூமியில் இரவுப் பொழுதை ஒப்பிடும் போது பகல் சற்றே அதிகம் என்கிறார்கள்.Equinox எனப்படும் பகலும் இரவும் சமமாக இருக்கும் நாட்களிலும் கூட பகல் ஒருசில நிமிடங்கள் அதிகமாகவே உணரப்படுகிறது. இதற்குக் காரணம் வளிமண்டலத்தில் ஒளிவிலகல் காரணமாக சூரியன் தொடு வானத்தில் உதிக்கத் தொடங்கும் முன்னரேயே அதன் ஒளி நம்மை வந்தடைந்து விடுகிறது!


டெக்னிகலாக இரவு என்பது பூமியின் own நிழல் தான். பூமி சுழல்வதால் ஏற்படும் தற்காலிக ஒளி மறைப்பு! பிரபஞ்சத்தில் தன் அச்சை மையமாகக் கொண்டு சுழலாத (rotation ) கிரகங்கள் இருப்பது  மிக மிக அரிது  என்கிறார்கள். தூக்கி எறியப்படும் எந்த ஒரு பொருளும் சிறிது சுழலவே செய்கிறது. அது கோள (spherical) வடிவில் இருந்தால் சுழலும் சாத்தியக்கூறு இன்னும் அதிகரிக்கிறது. சூரியனிடம் இருந்து தூக்கி வீசப்பட்ட நெருப்புக் கோளமானது தன் முதல் angular momentum (சுழற்சி)ஐ இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. நாம் ஒரு பந்தை தரையில் சுழல வைத்தால் அது இரண்டு காரணங்களுக்காக நின்று விடுகிறது. ஒன்று காற்றின் தடை இன்னொன்று தரையுடன் உராய்வு. இந்த இரண்டும் இல்லாததால் பூமி தன் சுழற்சியை இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. (பூமியின் காற்று மண்டலம் அதனுடன் சேர்ந்தே சுழல்கிறது!)
நம் காலின் கீழே பூமி சுழல்வதால் நாம் குதிக்கும் போது வேறு ஒரு இடத்தில் ஏன் land ஆவதில்லை என்பதையும் இதுவே விளக்குகிறது. நாம் அனைவரும் பூமியுடன் சேர்ந்து ஒரே சுழற்சி வேகத்தில் இருக்கிறோம்.!!

பூமி சுழல்வதாலேயே இரவு வர வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
இரண்டு சாத்தியங்கள் பூமி சுழன்றாலும் இரவு ஏற்படாமல் வைக்க முடியும்.
ஒரு கிரகம் அதன் தாய் நட்சத்திரத்துடன் phase lock எனப்படும் நிலையில் இருந்தால். அதாவது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் (rotation ) காலமும் நட்சத்திரத்தை சுற்றும் காலமும் (revolution )ஒன்றாக அமைந்தால். (நம் நிலா போல!) இப்படி phase lock இல் இருந்தால் கிரகத்தின் ஒரு பகுதி எப்போதும் சூரியனை நோக்கிக் கொண்டிருக்க மற்ற பகுதி நிரந்தர இருளில் இருக்கும். ஒரு பேச்சுக்கு நாம் சூரியனுடன் லாக்கில் இருந்தால் (பூமி சூரியனை ஒரு நாளில் சுற்றினால் அல்லது தன்னை 365 நாட்களில் சுற்றினால்) சூரியனை நோக்கிக் கொண்டிருக்கும் சூடான பகுதியில் கடல்கள் எப்போதோ ஆவியாகி இருக்கும். சூரிய வெளிச்சம் தீண்டாத பகுதியில் -70 டிகிரி வெப்பம் நிலவலாம். அது நீரையும் ஏன், காற்றைக் கூட உறைய வைத்து விடும். பூமி கிட்டத்தட்ட வெள்ளியைப் போல ஆள் இல்லாமல் மின்னிக் கொண்டிருக்கும்!

இன்னொன்று Olber's paradox என்னும் ஒரு concept .

நாமாக இருந்தால் சனிக்கிழமை இரவு எந்த பார்ட்டிக்குப் போவது என்று யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால் ஆல்பெர்ஸ் இரவு ஏன் இத்தனை இருட்டாக இருக்கிறது என்று யோசித்தார். காலம் காலமாக பிரபஞ்சம் என்பது என்றுமே மாறாத , முடிவில்லாத(infinite ) ஒன்று என்று நம்பப்பட்டு வந்தது. (Static universe ). பிரபஞ்சம் அப்படி இருந்தால் காலம் காலமாக எரியும் நட்சத்திரங்களால் இரவு வானம் (வெளி) எப்போதோ ஒளியூட்டப்பட்டிருக்கும். இந்த ஒளியை இடையில் உள்ள ஹைட்ரஜன் வாயுத்திரள்கள் தடுக்கும் என்றாலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஆற்றலின் காரணமாக அவையும் கடைசியில் எரியத் தொடங்கி பிரபஞ்சத்தில் ஒளியை இன்னும் அதிகரிக்கும். ஆனால் பிரபஞ்சத்தில் பெரும்பாலும் குளிராகவும் கும்மிருட்டாகவும் இருக்கிறது.

பிரபஞ்சத்தின் இரண்டு பண்புகள்  இந்தப் புதிருக்கு விடையளிக்கின்றன.
ஒன்று ஒளியின் வேகம். ஒளி முடிவில்லாத வேகத்துடன் உடனே பரவுவதில்லை. எனவே சில நட்சத்திரங்களின் ஒளி இன்னும் நம்மை வந்தடையவில்லை. இன்னொன்று பிரபஞ்சம் விரிவது. பிரபஞ்சம் விரிய விரிய அது அதிக ஆற்றல் கொண்ட ஒளியை நீட்டித்து குறைந்த ஆற்றல் கொண்ட, கண்களுக்குப் புலனாகாத மைக்ரோ அலைகளாக மாற்றி விடுகிறது.

மேலும் எந்த ஒரு விண்மீனும் முடிவில்லாமல் எரிவதில்லை. குறிப்பிட்ட காலம் எரிந்து முடித்து ஓய்வெடுத்துக் கொள்கிறது!

எனவே இரவு நமக்கு எதுவும் நிரந்தரமல்ல, சாசுவதம் அல்ல, பிரபஞ்சம் உட்பட என்று நினைவுபடுத்துகிறது!!

உலகில் நீண்ட தூரப் பயணங்கள் பெரும்பாலும் இரவில்தான்  நடக்கின்றன.
நாம் தினமும் வெளியில் இடைவிடாமல்  பயணித்துக் கொண்டிருக்கிறோம். சூரியனை சுற்றிய பயணம். இந்தப் பயணத்தில் நாம் பகலில் அதிக தூரம் செல்கிறோமா இரவிலா என்று யோசித்துப் பார்த்தால், இயற்பியல் இரவில் என்று பதில் தருகிறது. இரவில் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் தூரமும் சூரியனை சுற்றும் தூரமும் கூடுகின்றன. பகலில் பூமி தன்னைத் தானே சுற்றும் தூரம் சூரியனை சுற்றும் தூரத்தில் இருந்து கழிக்கப்படுகிறது.
சுழலும் சக்கரம் ஒன்றின் மேற்பரப்பில் பொருத்தப்பட்ட காகிதத்தை கவனியுங்கள். காகிதம் சக்கரத்தின் முன் பக்கத்தில் இருக்கும் போது அது மிக விரைவாக கண்களில் இருந்து மறைந்து கீழே வந்து விடுகிறது. பின் பக்கம் கொஞ்சம் மெதுவாக மேலே ஏறுவது போலத் தோன்றுகிறது. இதே விளைவு தான் பூமிக்கும்!


இரவைப் பற்றிய ஒரு கவிதை.....மொழிபெயர்ப்புடன்!

Hymn to the night- Henry Wadsworth Longfellow

இரவுக்கு ஒரு பாடல்


I heard the trailing garments of the Night 
Sweep through her marble halls! 
I saw her sable skirts all fringed with light 
From the celestial walls! 


இரவுப் பெண்ணின் சரியும் ஆடை 
இசைக்கும் ஒலியைக் கேட்டேன் 
கறுத்த உடைகள் ககன ஒளியால் 
கதிரென மின்னுதல் கண்டேன்!


I felt her presence, by its spell of might, 
Stoop o'er me from above; 
The calm, majestic presence of the Night, 
As of the one I love.

நான் இரவினை உணர்ந்தேன் 
என்னை சுற்றிச் சூழ்ந்ததவள் கறுப்பு 
என் அன்பின் காதலி போல 
எத்தனை இதம் அவள் இருப்பு!

I heard the sounds of sorrow and delight, 
The manifold, soft chimes, 
That fill the haunted chambers of the Night, 
Like some old poet's rhymes.

சோகமும் சுகமும் கலந்து 
எத்தனை விதம் அவள் சத்தம் -அது 
தனித்த இடங்களை இனித்து நிறைக்கும் 
மூத்த கவிஞனின் சந்தம்!

O holy Night! from thee I learn to bear
 What man has borne before! 
Thou layest thy finger on the lips of Care 
And they complain no more.

புனித இரவே உன்னால் நான் 
பொறுமையின் இலக்கணம் அறிந்தேன் 
உதட்டின் மீது விரலை வைத்து -நீ 
உலகை அடக்குதல் வியந்தேன்!

Peace! Peace! Orestes-like I breathe this prayer! 
Descend with broad-winged flight, 
The welcome, the thrice-prayed for, the most fair, 
The best-beloved Night! 


விரிந்த சிறகுகள் கொண்டேன்மீது 

இறங்கு இரவே இறங்கு 
உன்னையே நான் ஆராதிப்பேன் -நீயே 
உயிர்மை தந்த இரவு!
**************




Creativity என்பதைப் பற்றிப் பேசி விட்டு முடித்துக் கொள்வோம்.




நம் எல்லோருக்குள்ளும் படைப்புத் திறன் இருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் நாம் அதை வெளிப்படுத்துவதில்லை. ஒவ்வொரு குழந்தையும் அதீதமான படைப்புத் திறனுடனேயே பிறக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்த நாம் வாய்ப்புகளை உருவாக்கித் தருவதில்லை. எனவேதான் அது சாமான்களைப் போட்டு உடைக்கிறது. destructive ஆக மாறுகிறது.

creativity என்பது மாஸ்லோவின் தேவைகளின் படிநிலைகளில் (hierarchy of needs ) மேலே உச்சியில் இருக்கிறது. அதாவது மற்ற கீழ்நிலைத் தேவைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்ட பின் , ஒரு relaxed மன நிலையில் நம் படைப்புத் திறன் வெளிவருகிறது. ஆதிமனிதன் உணவுக்கும் இருப்பிடத்துக்கும் அலைந்து கொண்டு இருந்த போது கவிதை எழுதி இருப்பான் என்று எதிர்பார்க்க முடியாது. creativity , மனிதனின் எல்லாத் தேவைகளும் நிறைவேற்றப்பட்ட பின் மேலும் மேலும் refinement ஐ விரும்புகிறான் என்று காட்டுகிறது. விலங்குகள் creative ஆக இல்லை. படைப்புத்திறன் மனிதனுக்கே உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று என்று தோன்றுகிறது. ஒரு விதத்தில் இந்த creativity மனிதனைக் கடவுளுக்கு அருகில் கொண்டு வருகிறது என்று கூட சொல்லலாம்.


நம் வேலை creative ஆக இல்லையே , செய்ததையே செய்கிறோமே , ஒரே script ஐயே எழுதுகிறோமே வாழ்க்கை ரோபோட்டிக் ஆக இருக்கிறதே என்ற ஆதங்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. வேலையில் தான் நம் படைப்புத் திறனைக் காட்டவேண்டும் என்பது இல்லை. சின்னச் சின்ன விஷயங்களில் கூட காட்டலாம்.

இன்று டெக்னாலஜியின் வளர்ச்சியால் நாம் creative ஆக இருப்பதன் வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. அதாவது ஏதோ ஒருவரின் அதீத creativity மற்ற பல பேர்களின் படைப்புத் திறனைக் குறைத்து விடுகிறது.

அந்தக் காலத்தில் பெண்கள் creative ஆக இருக்க நிறைய வாய்ப்புகள் இருந்தன.  இப்போது எல்லாமே ரெடிமேட் ஆகி விட்டது.  வீட்டில் தோட்டம் போட்டு காய்கறிகள் விளைவித்தார்கள். அதை வைத்து முற்றிலும் கையாலேயே சமையல் செய்தார்கள். மத்தியான வேளைகளில் பூ கட்டினார்கள். கோலம் போட்டார்கள். பாட்டு பாடினார்கள். ஏன் , காப்பிப்பொடி கூட வீட்டிலேயே செய்தார்கள்.இப்போது காய்கறிகள் கட் செய்யப்பட்டு பேக்கட்டுகளில் வந்து விட்டன. சாதம் மட்டும் செய்து வைத்தால் போதும் . லெமன் ரைஸ், வாங்கி பாத் என்று எல்லாப் பொடிகளும் கடைகளில் கிடைத்து விடுகிறது. கோலம்  போட்ட டைல்ஸ்கள் வந்து விட்டன. யாருக்கோ கட்டிய வீட்டில் குடியேருகிறோம் . யாருக்கோ தைத்த துணிகளை அணிந்து கொள்கிறோம். யாருக்கோ சமைத்த உணவை உண்ணுகிறோம். யாருக்கோ விளைவித்த காய்கறிகளை பழங்களை சாப்பிடுகிறோம்!

ஆனாலும், நாம் நம் creativity யை அவ்வப்போது வெளிப்படுத்தலாம்.

* மாதம் ஒருநாள் முற்றிலும் கையாலேயே சமையுங்கள். மிக்ஸி , கேஸ் இப்படி எதுவும் இல்லாமல். மசாலா வகையறாக்களை நீங்களே அரையுங்கள் ! இப்போது மால்களில் மினி சைஸ் அம்மிகள் கூடக் கிடைக்கின்றன. எப்போதும் இட்லி, உப்புமா, நூடுல்ஸ் என்று செய்யாமல் புதுப்புது அயிட்டங்களை முயற்சி செய்யுங்கள்.


* நேரம் கிடைக்கும் போது ஏதேனும் புதிதாகக் கற்றுக் கொள்ளுங்கள். புதிய பாஷை , ஸ்விம்மிங் , கேட்டரிங் , டைலரிங், சங்கீதம், நடனம் இப்படி 

* கவிதை எழுத முயற்சி செய்யுங்கள். ஏதேனும் ஓவியம் வரையுங்கள். தனியாக இருக்கும் போது பாடுங்கள்....(ஒரு safety க்கு தனியாக இருக்கும் போது என்று சொன்னேன்!) சேக்ஸ்பியர் தான் கவிதை எழுத வேண்டும் பிக்காஸோ தான் ஓவியம் வரைய வேண்டும், பிதோவான் தான் சிம்பனி செய்ய வேண்டும் என்றில்லை.  சுருக்கமாக, ஏதேனும் ஒன்றை படைக்க முயற்சி செய்யுங்கள்.

* குழந்தைகளுக்கு ரெடிமேட் பொம்மைகள் வாங்கித் தராமல் நீங்களே ஏதேனும் செய்து தர முடியுமா என்று யோசியுங்கள்.பேப்பரில் கூட எத்தனயோ art செய்யலாம். கரண்ட் போனால் உடனே யு.பி.எஸ். ஸுக்கு ஓடாமல் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து குழந்தைகளுடன் நிழல் உருவங்கள் உருவாக்கி விளையாடுங்கள்.பார்க்க 

https://www.youtube.com/user/arvindguptatoys



* புதுப்புது விளையாட்டுகளை யோசித்து குழந்தைகளுடன் விளையாடுங்கள்.
  சில creative விளம்பரங்கள் :-


பெர்மனெண்ட்  மார்க்கர்!






 
3D TV

ஆப்ரிக்கன் சபாரி

Electro recycling robot

ஓஷோ ஜோக்.

ஹென்றி தன் நண்பனுடன் சலிப்பாக சொல்லிக் கொண்டிருந்தான்.

"ஹ்ம்ம்..எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. கல்யாணம் ஆன புதிதில் என் மனைவி வாசலில் இருந்து நியூஸ் பேப்பர் கொண்டு வருவாள். என் நாய் இடைவிடாமல் குறைக்கும். இப்போது என் நாய் பேப்பர் கொண்டு வருகிறது, மனைவி குரைக்கிறாள் " ,,

நண்பன், " இதில் கவலைப்பட என்ன இருக்கிறது? எப்படி இருந்தாலும் இன்றும் உனக்கு அதே சேவைகள் கிடைக்கின்றனவே " என்றான்.

Wish you  a happy new year!!!



சமுத்ரா 




Monday, March 3, 2014

கலைடாஸ்கோப் -107

கலைடாஸ்கோப் -107 உங்களை வரவேற்கிறது.


ச.ப.பு :

மிஸ்டர் .போன்ஸ் - டாக்டர் .எம். பார்த்தசாரதி

இந்த நூலில் இடம்பெற்றுள்ள, எலும்புகள் பற்றிய சில சுவையான தகவல்கள்:


* ரத்த அணுக்கள் உருவாவது எலும்புகளில் தான். இதயம், மூளை, நுரையீரல் என அனைத்து உறுப்புகளுக்கும் Z பிரிவு பாதுகாப்பு அளிப்பதும் எலும்புகள் தான். எலும்புடன் ஒட்டியிருக்கும் தசைகள் மூளையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு எலும்புகளை இயக்குகின்றன. ஆனால் அந்த  தசைகளுக்கு பிடிமானமே எலும்புகள் தான்.

* 70 கிலோ எடை கொண்ட உடலை தரையில் நிலைநிறுத்தும் பாதத்தின் நீளம் ஒன்பது/பத்து அங்குலங்கள் மட்டுமே. ஒரு தலைசிறந்த கட்டடக் கலைஞரால் கூட சாதிக்க முடியாத விஷயம் இது. 28 எலும்புகளால் ஆன ஒரு ஆர்ச் வடிவ மேடையே நம் பாதம்.தட்டை வடிவ துடுப்பு போன்று நம் பாதம் இல்லை.

* குதிகால் தோலுக்கு மேல் ஒருவித ஸ்பெஷல் கொழுப்பு இருக்கிறது.இப்படிப்பட்ட ஸ்பெஷல் கொழுப்புடன் சேர்ந்த தோல் குதிகாலில் மட்டுமே உண்டு.உடம்பின் வேறு பகுதிகளில் தோலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தொடைப் பகுதியில் இருந்து சிறிது தொலை எடுத்து அந்த இடத்தில் பொருத்திவிட முடியும். ஆனால் குதிகால் தோலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினம்.

* ஆர்த்தோ டாக்டர் என்பவர் எலும்புக்கு மட்டும் அல்ல. எலும்பு அதைச் சார்ந்த தசைகள், நரம்புகள் ஆகியவையும் அவரது எல்லைக்குள் வருபவை தான். அதே சமயம் மண்டையோடு முழுவதும் எலும்புதான் என்றாலும் அதில் ஏற்படும் சிக்கல்களை நியூரோ சர்ஜன் தான் சரி செய்வார். தாடை எலும்புகள் சம்பந்தபப்ட்ட பிரச்சினைகளை சிறப்பு பல் டாக்டர் அல்லது பிளாஸ்டிக் சர்ஜன் சரி செய்வார்.

* மூட்டு மாற்று என்பது முழங்கால் மூட்டுப் பகுதி முழுவதையும் மாற்றுவது அல்ல. மூட்டின் மேல்தளத்தை மட்டுமே மாற்றுவது.

* சில எலும்பு முறிவுகளை ஒரு எக்ஸ் -ரே வில் கண்டுபிடிப்பது கஷ்டம். அதனால் ஒரு டாக்டர் ஒரு முறை ஒரு பொஷிஷனில் எக்ஸ்-ரே எடுத்து விட்டு எலும்பு முறிவு எதுவும் இல்லை என்று சொல்லலாம்.பிறகு வேறு ஒரு டாக்டர் வேறு ஒரு கோணத்தில் எக்ஸ்-ரே வோ சி.டி .ஸ்கேனோ எடுத்து எலும்பு முறிந்திருக்கிறது என்று சொல்லலாம்.எனவே மூன்று கோணங்களில் எக்ஸ்-ரே இரண்டு மூன்று முறை எடுத்துப் பார்த்து உறுதி செய்து கொள்வது நல்லது.

* ஆண்களுக்கு 18 வயது வரையும் பெண்களுக்கு 16 வரையும் எலும்புகள் வளர்கின்றன. இந்த வளர்ச்சி மில்லி மீட்டர் மில்லி மீட்டராக gradual ஆக இல்லாமல் திடீரென்று வளர்ந்து பின் நின்று விடுவது பின்னர் திடீரென்று வளர்வது என்று வளர்கிறது.இதனால் குழந்தைகள் திடீரென்று உயரமாகி விட்டதாக உணர்கிறோம்.


*************

இந்த தர்மம், தானம், அறம் , கொடை ,etc இவைகளைப் பற்றி கொஞ்சம் சிந்திக்கலாம்.இவைகளைப் பற்றி பேசாத தமிழ் நூல்களே கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லலாம்.



சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை  என்கிறது திருக்குறள்.


தமிழ் இலக்கியங்களில் உள்ள ஒரு irony என்ன என்றால் இரவு மற்றும் இரவச்சம் என்பன இரண்டுமே இடம் பெறுவது தான்.

இரவச்சம் என்றால் ஒருவரிடம் சென்று ஒன்று கொடு என்று கேட்பதற்கு நாணுவது.

மேலே அப்படிச் சொன்ன வள்ளுவர் இரவச்சத்தில் 

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து 
கெடுக உலகியற்றி யான்.

என்கிறார். 
(பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக)

ஐயமிட்டு உண் என்று சொல்லி விட்டு பின் ஏற்பது இகழ்ச்சி என்று சொல்வது!!!

லாஜிகலாகப் பார்த்தால் ஒருவருக்கு தானம் கொடுப்பது என்பது அவரது பெருந்தன்மையை இழிவுபடுத்துவதாகும். மேலும் அவரை இன்னும் சோம்பேறியாக்கும் முயற்சி! ஆனாலும் கோயிலுக்குப் போய் விட்டு வெளியே வரும்போது கிழிந்த உடைகளுடன் கையேந்தும் கிழவியைப் பார்த்து விட்டு இப்படியெல்லாம் யோசிக்கக் தோன்றுவதில்லை. உடனே சில்லறையைத் தேடுகிறோம். ஒருவருக்கு மீனை தானமாக அளிப்பதற்குப் பதில் மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்கிறது ஒரு பொன்மொழி. இந்த விதத்தில் பார்த்தால் எல்லா தானங்களையும் விட ஒருவர் கல்வி கற்பதற்கு நாம் உதவி செய்வதே பெரிய தானம் என்று தோன்றுகிறது. பின்னாளில் காலத்திற்கும் அவர் தன் சொந்தக் காலில் நிற்பதற்கு நாம் உதவுகிறோம்.

ஒருவர் ஏன் தானம் செய்கிறார்?

* புண்ணியம் வேண்டி. இப்போது தானம் செய்தால் சொர்க்கத்தில் ஊர்வசி டான்ஸ் பார்க்கலாம் என்ற நப்பாசை.

* நச்சரிப்பைத் தவிர்க்க. தர்ம சங்கடத்தைத் தவிர்க்க. இல்லை என்றால் அய்யா தர்மப்ரபு நாலு நாளா சாப்பிடலை என்று நச்சரித்தபடி பின்னால் வருவார்கள். 

* உண்மையான கழிவிரக்கத்தில். பார்த்தால் பாவமாக இருக்கிறதே என்ற கருணையில்.

* தானம் தர்மம் செய்யும் போது அது நம் ego வை ஒருவிதத்தில் பூர்த்தி செய்கிறது.

* மற்றவர்கள் பார்ப்பார்கள் பாராட்டுவார்கள் என்ற ஆசையில். 

* அன்றாடம் நாம் செய்யும் சின்னச் சின்னப் பாவங்களை தற்காலிகமாக புண்ணியமாக மாற்ற ஒரு  முயற்சி.

 

அவ்வையாரின் சுவையான பாடல் ஒன்று

காரைக்கால் ஆள்வான் என்பவன் மகாக் கருமி. அவனிடம் பொருள் நாடி வரும் புலவர்களை எல்லாம் நாளை வா நாளை வா என்று சொல்லியே காலம் கடத்துகிறான். அவனுக்கு பாடம் புகட்ட நினைத்த அவ்வை, அவன் மாளிகைக்கு செல்கிறாள். அவ்வையாரை நன்கு வரவேற்று ஆசனத்தில் அமரச் செய்த ஆள்வான்  இத்தகைய அரிய தமிழ் மூதாட்டிக்கு என்ன பரிசு கொடுத்தாலும் தகும். நாளை வாருங்கள் ஒரு யானையை தானம் தருகிறேன் என்கிறான். அவ்வையும் அடுத்த நாள் போகிறாள். அது பாருங்க இந்த வயசான காலத்தில் யானையை எப்படி சமாளிப்பீர்கள்? எனவே குதிரை ஒன்று தயாராய் இருக்கிறது. நாளை வந்ததும் வாங்கிக்கலாம் என்கிறான். அவ்வை மறுநாள் வருகிறாள் . அது வந்து, பாட்டி!குதிரை வேகமாப் போகும் அதில் ஏறி நீங்கள் விழுந்து கிழுந்து விட்டால் ? எனவே நல்ல கறவை எருமை ஒன்று ரெடி. நாளை வந்தால் கையோட இழுத்துட்டுப் போகலாம் என்கிறான். அவ்வை சலிக்காமல் மறுநாள் வருகிறாள்.இப்போது ஆள்வான், எருமையை நீங்க குனிஞ்சு நிமிர்ந்து எப்படி கறப்பீர்கள் ? அதனால் ஒரு முடிவு பண்ணி விட்டேன். நல்ல புடவை ஒன்று தந்து விடுகிறேன். உங்களுக்காக சிறப்பாக நெய்யச் சொல்லியிருக்கேன் நாளை வந்து விடுங்கள் என்கிறான். அவ்வை மறுநாள் போகிறாள். என்ன இது கிழவி புரிந்து கொண்டு போய் விடுவாள் என்று பார்த்தால் மீண்டும் மீண்டும் வருகிறாளே என்று ஆள்வான் தாங்க முடியாத வயிற்று வலி என்று வேண்டுமென்றே படுத்து விடுகிறான். வேலையாளை விட்டு அவ்வையிடம் எஜமானுக்கு வயித்து வலி, நாளை வாங்க! என்று சொல்லச் சொல்கிறான். அவ்வை பாடுகிறாள்:

கரியாகிப் பரியாகிக்  காரெருமை தானாகி
எருதாகிப் முழப் புடவையாகி - திரித் திரியாய்
தேரைக் கால் பெற்று மிகத் தேய்ந்து கால் நோய்ந்ததே
காரைக் கால் ஆள்வான் கொடை !

இதைப் பாடியதும் அவனுக்கு உண்மையிலேயே வயிற்று வலி வந்து விடுகிறது. 'கிழவி போய் விட்டாள் எஜமான்; நடித்தது போதும்'என்று வேலையாள் சொல்லியும் அவனுக்கு வலி நின்ற பாடில்லை. அப்படியே வீட்டைப் பூட்டாமலேயே ஓடிப் போய் அவ்வையின் காலில் விழுகிறான்; உன்னிடம் தானம் கேட்டு நடந்தவர்களின் கால் வலி தான் இன்று உனக்கு வயிற்று வலியாக வந்தது என்று சொல்கிறாள் அவ்வை.

"இன்று என்பாரிலும் நாளை என்பாரிலும்
இல்லை என்பார் மிக நல்லோரே"


 

************
All the World's a stage - Shakespeare

...
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்றை  நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா?  -பாரதிதாசன் 


தமிழை இயற்றமிழ் , இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்று பிரித்திருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உரைநடைத் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ்!

தமிழ் உரைநடைக்கு மிகவும் ஏற்ற மொழி என்று சொல்வார்கள். தெலுங்கு இசைக்கும், கன்னடம் நாடகத்துக்கும். தமிழ் உரைநடைக்கு ஏன் ஏற்றதாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்!

* தமிழ் எழுத்து நடைக்கு ஒரு standard form இருப்பது. பேச்சில் பல மாறுபாடுகள் இருந்தாலும் எழுதும் போது எல்லாரும் ஒரே மாதிரி எழுதுவது.

* சொற்றொடர்கள் உயிர்மெய் எழுத்துகளில் பெரும்பாலும் நிறைவு பெறுவது.

* சமஸ்கிருதம் போன்ற மொழிகளைப் போல ஒரு எழுத்துக்கு வெவ்வேறு அழுத்த உச்சரிப்புகள் இல்லாமல் இருப்பது.

* வல்லின எழுத்துகள் அதிகம் உபயோகப்படுவது

இதனால்தான் இயற்றமிழ் முதலில் வருகிறது போலும். தமிழ் இசைக்கு அவ்வளவாக ஏற்ற மொழி அல்ல என்று சொன்னால் சில பேர் அடிக்க வருவீர்கள்.

நாடகம் தமிழில் மட்டும் அல்ல. எல்லா மொழிகளிலும் பெரும்பாலும் மறைந்து போய்  விட்டது. பெங்களூருவில் சில அரங்கங்கள் 500, 1000 ரூபாய் டிக்கெட்டுகளுக்கு நாடகங்களை அரங்கேற்றுகின்றன. அப்பர் கிளாஸ் மட்டுமே அனுபவிக்க முடியும். தெருக்கூத்து எல்லாம் வரலாறு ஆகி விட்டது!

ஷேக்ஸ்பியர் சொல்வது போல உலகமே நாடக மேடை என்று எடுத்துக் கொண்டால் தினம் தினம் free யாகவே நாடகம் பார்க்க முடியும்! நானாடி பதுகு நாடகமு!!!


*******************

Do not take Silence as an insult - It's not!

ஆங்கிலத்தில் இந்த இரண்டு வார்த்தைகள் உள்ளன. Introvert மற்றும் Extrovert !

ஒருவரை நாம் வெகு சுலபமாக 'முசுடு, உம்மணா மூஞ்சி, மண்டைக்கனம், என்றெல்லாம் சொல்லி விடுகிறோம். ஒருவர் தன் energy யை எப்படி செலவிட விரும்புகிறார் என்பதைப் பொறுத்தே இந்த வரையறைகள் அமைகின்றன. ஒருவர் மற்றவர்களுடன் சகஜமாகப் பழகுவதன் மூலம் மகிழ்ச்சி அடைகிறார். இன்னொருவருக்கு தனியாக இருப்பதில் அதிக மகிழ்ச்சி. ஒருவர் introvert என்று எப்படித் தெரிந்து கொள்வது. மேலோட்டமாக

* பத்து பேர் சேர்ந்திருக்கும் இடத்தில் யார் மிகக் குறைவாக அல்லது கடைசியாகப் பேசுகிறாரோ அவர்.

* எப்போது escape ஆகலாம் என்ற சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பவர்.

* மற்றவர் சொல்வது தவறு என்று தெரிந்திருந்தும் எதற்கு வம்பு என்று அதை பெரும்பாலும் ஆமோதிப்பவர்.

* ம்ம்,,,ஆமாம்,,, சரி,,,அது தான்,,,யா யா (தனுஷ் ஏதோ ஒரு படத்தில் சொல்வாரே) , யெஸ் , என்று ஓரிரண்டு வார்த்தைகளில் பதிலை முடித்து விடுபவர். புதிதாக டாபிக் ஒன்றைத் தொடங்காதவர் .

* அதிக expressions காட்டாதவர். ( ரகுவரன் போல ). ஜோராகப் பேசாதவர்.

* ஏழெட்டு பேர் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தால் ஏதோ ஒன்றை படித்துக் கொண்டோ பார்த்துக் கொண்டோ நோண்டிக் கொண்டோ இருப்பவர்.



இவற்றை வைத்து ஒருவர் முசுடு என்றோ பழகத் தெரியாதவர் என்றோ socialize செய்யத் தெரியாதவர் என்றோ முடிவு கட்டி விடுவது முட்டாள் தனம்.

* அவரது topic of interest வேறாக இருக்கலாம்.

* தகுந்த சூழ்நிலையில், தகுந்த இடத்தில், காலத்தில் தேர்ந்தெடுத்த நண்பர்களுடன் அவர் பேச்சில் வெளுத்துக் கட்டுபவராக இருக்கலாம்.

* அவர் மிகச் சிறந்த listener ஆக இருக்கலாம். தேவையில்லாமல் வார்த்தைகளைப் பேச விரும்பாமல் இருக்கலாம்.

* ஒருவருடன் பேசிப் பழக நேரம் எடுத்துக் கொள்பவராக இருக்கலாம். முதன் முறை சந்தித்த உடனேயே ஓட்டை வாய் போல எல்லாவற்றையும் கொட்டி விடுவதில் இஷ்டம் இல்லாதவராக இருக்கலாம்.


மேலும், ஒவ்வொருவருக்கும் அவரது personal space ஒன்று உள்ளது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.







செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப் பொய்யார் பெறும் பேறத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா....

-திருவாசகம்

யதக்ரே த்றுஸ்யன்தே தஶஶரபலாஃ பாதயுகலீ
னகாக்ரச்சன்மானஃ ஸுர முகுட-ஶாணைக-னிஶிதாஃ

-ஐந்து அம்புகள் கொண்ட மன்மதன் சிவனை வெல்ல, உன் கால்களையே அம்புறாத் தூணியாய் செய்தான்;  உன் பாதத்தின் விரல்கள் பத்து அம்புகள்; அதன் விரல் நுனிகள் உன்னை வணங்கும் தேவர்களின் கிரீடங்களினால் கூராக்கப்பட்டனவோ - சௌந்தர்ய லஹரி

பிரம்ம கடிகின பாதமு 
பிரம்மமு தானெனி பாதமு - அன்னமையா 

உனது பாதம் அடடட இலவம் பஞ்சு 
-திரைப்படப் பாடல் 

முத்து சிறி புரந்தர விட்டல நின்னடி மேலே 
பித்து கொண்டிருவ எனகேகே பயவு  - புரந்தர தாசர் 

நம் உடம்பில் மிகக் குறைவாக கவனிக்கப்படும் உறுப்பு எது என்றால் பாதம் எனலாம். முதல் பகுதியில் சொன்னது போல பாதம் தான் நம்மை சதா தாங்குகிறது.அதுவும் நாம் ஓடும்போது உந்தத்தால் ஏற்படும் கூடுதல் எடையையும் (கிட்டத்தட்ட இரண்டு மடங்கு) தாங்குகிறது.

அதீத அழகுணர்ச்சி உள்ளவர்களால் அன்றி பாதம் பொதுவாக கவனிக்கப் படுவதில்லை!செருப்புக் கடையில் சென்று செருப்பு வாங்கும்போது மட்டுமே என்ன இவ்வளவு வெடிப்பா என்று பார்க்கிறோம்.

கடவுளுக்கு கண்களை விடவும், கைகளை விடவும், இந்தப் பாதமே அதிகம் புகழப்படுகிறது என்று தோன்றுகிறது.   பாதத்தைப் புகழாத பக்தி இலக்கியமே கிட்டத்தட்ட இல்லை எனலாம்.கடவுளின் பாதம் என்பது ஒரு metaphor போலும் !! கடவுளின் பாதத்தில் வீழ்வது சரணாகதியை உணர்த்துகிறது. எல்லா முயற்சிகளும் பொய்த்து விட்ட, எல்லா உதவிகளும் நின்று விட்ட, எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டு விட்ட இனி அவனைத் தவிர ஒரு புகல் இல்லை என்னும் நிலை.

ஒருவரது காலில் விழுவது நம்மைத்  தாழ்த்திக் கொள்வதைக் குறிக்கிறது. அது மறைமுகமாக, வார்த்தைகளால் சொல்லப் பட்டாலும் கூட! உன் கால்ல வேணா விழறேன் , கையை காலா நினைச்சிக்கோ போன்ற சீரியல் வசனங்களை அடிக்கடி கேட்டிருப்பீர்கள்.

காதலில் பாதத்தை வர்ணிப்பது கொஞ்சம் குறைவு தான் என்று தோன்றுகிறது. தாமரை போன்ற பாதம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். உடலில் மிகக் கீழான இரு இடத்தில் இருப்பதால் அதற்கு இயற்கையாகவே கடைசி இடம். பாதத்தில் முத்தமிடுவது சரி. I like you as a whole package என்று சொல்லாமல் சொல்வது. ஆனால் பாதத்தின் மீது ஏற்படும் அதீத விருப்பத்தை உளவியல் foot fetishism என்று சொல்லி தனிப்படுத்தி விடுகிறது.

எனது காலணிகளைப் பற்றிய உங்கள் பெருமை என்று ஒரு ad வருகிறது. ஒரு நடிகையின் காலணிகள் பற்றி நமக்கு என்ன பெருமை இருக்க முடியும்?stupid !

ஓஷோ ஜோக்

முல்லா நசுருதீனின் மனைவி ஒரு சமையல் புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு முதன் முறையாக சமைக்கத் தொடங்கினாள் .

முல்லா மாலையில் வீடு திரும்பியதும் அவரை கண்ணீருடன் வரவேற்றாள்.

'என்ன ஆச்சு?' என்றார் முல்லா.

'அன்பே, ரொம்ப வருத்தமா இருக்கு. உங்களுக்காக இன்று நான் ஆசை ஆசையாய் சமைத்த சிக்கன் பீஸை பூனை தின்று விட்டது. இப்படி ஆயிருச்சே' என்றாள் அழுது கொண்டே.

முல்லா, "சரி, சரி,வருத்தப்படாதே, நாளைக்கு வேற பூனை ஒண்ணு வாங்கிக்கிட்டா போச்சு" என்றார்.

சமுத்ரா 






Wednesday, February 5, 2014

கலைடாஸ்கோப் -106

வரவேற்கிறது உங்களை லைடாஸ்கோப் -106


' ராஜு ஜோக்ஸ்' புத்தகம் நம்மை 40 களுக்கும் 50 களுக்கும் அழைத்துச் செல்கிறது! புத்தகக் கண்காட்சியில் வாங்கியது. 

சில ஜோக்குகள் கீழே.!









Elephants and grandchildren never forget.
-Andy Rooney 

Women are like elephants. I like to look at 'em, but I wouldn't want to own one.-W. C. Fields 

இன்னொரு புத்தகத்தைப் பற்றி பேசலாம். 'அழியும் பேருயிர் யானைகள்' - முகமது அலி, யோகானந்த்



சற்றே பெரிய முன்னுரையுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். முன்னுரையில் இயற்கை பாதுகாப்பு என்ற பெயரில் நாம் செய்யும் அபத்தங்களை சுட்டிக் காட்டுகிறது.யானையை கடவுளாக வழிபடும் நாம் அதே கோயில் வாசலில் யானையை கட்டி வைத்து கொடுமைப் படுத்துகிறோம்.ஹைடெக் சாமியார்கள் மரம் நடுகிறோம் என்று கிளம்பி இருக்கிறார்கள். ஊருக்குள் மரம் நடுவது பெரிய விஷயம் அல்ல. மரம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். இயற்கை பாதுகாப்புக்கு ஊர்வலம் போவதால் என்ன பயன்??காடுகள் அழிந்து போவது பற்றி யாருக்கும் கவலை இருப்பதாகத் தோன்றவில்லை.

யானைகளைப் பற்றி பல சுவையான தகவல்களைத் தருகிறது இந்தப் புத்தகம். அவற்றில் ஒரு சில

* மனிதச் செவிக்குக் கேட்காத மீயொலி (ultra sound ) அலைகளைக் கொண்டு யானைகள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்றன.

* காட்டு யானைத் தாக்குதல் என்பது பொதுவாக அதன் விரட்டி விடுதல் ஆகும். மனிதன் மிகைப் படுத்துவது போல அது கொடூரமாகத் தாக்கி காலால் மிதிப்பதில்லை. 10, 20 அடிகள் காதுகளைப் புடைத்த படி வைத்துக் கொண்டு சத்தம் எழுப்பியபடியே புழுதி பறக்க துரத்தி வந்து விட்டு விடுகிறது. இதில் மனிதர்கள் பெரும்பாலும் மயக்கம் அடைந்து விழுந்து  காயமடைகின்றனர். இதுவும் தவறாக யானைத் தாக்குதல் என்றே அறியப்படுகிறது.

* நான்கு முழங்கால்களை உடைய ஒரே விலங்கு யானை.

* யானை தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்வது என்பது இழிவானதல்ல. தொல்லை தரும் பூச்சிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும், அவற்றை விரட்டவும், பூச்சிக்கடி அரிப்பைத் தடுக்கவும், உடல் வெப்பத்தை சீராக்கவும் , வெயிலால் தோல் பொசுங்குவதைத் தடுக்கவும் அப்படிச் செய்கின்றன.

* வயதான பெண் யானை ஒன்று பொதுவாக யானைக் கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறது.தாய் யானை இறந்து விட்டால் குட்டியானையை மற்ற பெண் யானைகள் 'தத்து' எடுத்துக் கொள்கின்றன.


************


நாங்கள் 500,600 sqft வீடு தேடுகையில்
நீயோ 2500 sqft வீடு கட்டினாய்.

நாங்கள் மதுரை சேலம் கோவை என்று பயணித்தால்
நீயோ கனடா கலிபோர்னியா என்று பயணித்தாய்.

நாங்கள் 10000,12000 சம்பளம் தேட
நீயோ 55000 கையில் பெற்றாய்.

நாங்கள் தலைவலி சளி இருமல் என்று திண்டாட
நீயோ ... ஐயோ ஐயோ

இதை எழுதியவர் விஸ்வநாத் . ஓவியங்கள், கவிதைகள் இவர் ப்ளாக்கில் கிடைக்கின்றன. சில சமஸ்கிருத ஸ்லோகங்களை தமிழில் மொழி பெயர்க்கவும் செய்திருக்கிறார்.

ஸ்லோகங்களை மொழிபெயர்க்கும் போது  சில விதிமுறைகள் :

1.முடிந்தவரை original ஸ்லோகத்தின்/பாட்டின் சந்தம் அல்லது தாளம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
2.முடிந்தவரை சம்ஸ்கிருத சொற்களைத் தவிர்க்கவும்.
3.ஒரிஜினலில் இல்லாத சொற்களை சேர்க்க வேண்டாம்!
4.எதுகை மோனை வருவதும் முக்கியம்.

சில உதாரணங்கள்:

"பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் 
கோவிந்தம் பஜ மூட மதே"

இதை.

" கோவிந்தனை வழிபடு ,கோவிந்தனை வழிபடு ,கோவிந்தனை வழிபடு அறிவில்லாதவனே " என்று மொழிபெயர்க்கலாம். (conditions 2,3)அல்லது ஒரிஜினல் சந்தம் மாறாமல்,

துதி கோவிந்தனை துதி கோவிந்தனை 
கோவிந்தனைத் துதி அறிவிலியே!
புறப்படும் காலம் வந்திடும் போதே
இலக்கணம் காக்குமோ கடைவழியே


   -என்றும் மொழி பெயர்க்கலாம்.

conditions 1,2,3 பூர்த்தி செய்யப்படுகிறது.

எது better ?

லிங்காஷ்டகம் 

ப்ரஹ்ம முராரி சுரார்ச்சித லிங்கம் 
நிர்மல பாஸித சோபித லிங்கம் 
ஜன்மஜ  துக்க வினாசக லிங்கம் 
தத் ப்ரணமாமி சதா சிவ லிங்கம் 

-பரமேஸ்வரா - உன்
பாதம் பணிகிறேன்.
தேவர்களின் தேவனே,
புனிதங்களின் புனிதனே,
பூமாலைகளால் அர்ச்சிக்கப்படுபவனே,
பிறப்பு இறப்புத் துயர் தீர்ப்பவனே,
உன்னை வணங்குகிறேன்.

சந்தம் மாறாமல் இருக்க வேண்டும். 
தா ன   த நா ன   த நா ந ந   நா ன ...
த ந ந....

அரி அயன் தேவர்கள் போற்றிடும் லிங்கம் 
அருளொடு புனிதமும் மேவிய லிங்கம் 
பிறவிகள் வேதனை போக்கிடும் லிங்கம் 
போற்றுவன் பரமனின் நிலைபெறு லிங்கம் 

தேவ முனிப் பிரவ ரார்சித லிங்கம் 
காம தஹன கருணாகர லிங்கம் 
ராவண தர்ப விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதா சிவ லிங்கம் 

தேவர்கள் முனிவர்கள் துதிதரும் லிங்கம் 
காமனை வென்றிடும் கருணையின் லிங்கம் 
ராவணன் கர்வம் அழித்தருள் லிங்கம் 
போற்றுவன் பரமனின் நிலைபெறு லிங்கம் 


ஜெயா டி .வியின் தமிழ் சுப்ரபாதம் தூய தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஒரு உதாரணம் 

"கௌசல்யா சுப்ரஜா ராமா , பூர்வ, சந்த்யா ப்ரவர்த்ததே!"

வந்துதித்தாய் ராமா நீ கோசலைதன் திருமகனாய் 
சிந்துமொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது!


ஆனால் சமஸ்கிருதம் ஒரு வரியில் சொல்வதை இரண்டு வரிகளில் சொல்கிறார்கள்.condition (3) நிறைவேற்றப்படவில்லை.

கோசலையின் திருமகனே கீழ்வானம் புலர்கிறது!
கடமைசெய எழுந்தருள்வாய் மனிதரிடை அரிமாவே!  என்று சொன்னால் நலம்.

சரி.



சங்கீதத்திற்கு சுருதி அம்மா , தாளம் அப்பா என்பார்கள். சங்கீதத்தின் குழந்தைகளான ஹிந்துஸ்தானி சங்கீதம், கர்நாடக சங்கீதம் இவற்றில் ஹிந்துஸ்தானி அம்மா செல்லம், கர்நாடக சங்கீதம் அப்பா செல்லம் போலும்! ஹிந்துஸ்தானியில் சுருதி ரொம்பவே முக்கியம். சாஹித்தியம், தாளம் அவ்வளவு முக்கியம் அல்ல.இரண்டாம் பட்சம் தான். அந்நிய ஸ்வரம் வந்தாலும் அபஸ்வரம் வரக்கூடாது என்பதில் குறியாக இருப்பார்கள்.

கர்நாடக இசையில் தாளம் பிரதானம். 


- தாளம் தான் பிரபஞ்சத்தின் உயிர் நாடி என்கிறார் தன் பிரசங்கம் ஒன்றில் விசாகா ஹரி.  இயற்கையில் எல்லாமே ஒரு தாளத்துடன் periodic ஆக நிகழ்கின்றன என்று சொல்லலாம்  .பூமி சூரியனை சுற்றுவது, மலர்கள் மலர்வது, பழங்கள் பழுப்பது , பருவங்கள் மாறுவது இப்படி periodic !இந்தத் தாளம் தப்புவதே இல்லை.

இப்போது ஒரு நொடி என்பதை சீசியம் அணுவிற்குள் நடக்கும் அதிர்வுகளை வைத்து அளவிடுகிறார்கள். இந்த அணுவின் தாளம் எப்போதும் மாறுவதே இல்லை. ஒரு நொடி என்பதை எப்படி வேண்டுமானாலும் நாம் அளவிடலாம். ஆனால் அதன் துல்லியம் முக்கியம். விரல் சொடுக்கும் நேரம் என்று சொல்லலாம். பெண்டுலம் அசையும் நேரம் என்று சொல்லலாம். ஆனால் இவை எல்லாம் எப்போதும் துல்லியமாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.பெண்டுலம் கடிகாரம் ஒரு வாரத்திற்கு ஒரு நொடி என்று தவற விடலாம். ஆனால் அணு கடிகாரம் 20 மில்லியன் வருடங்களுக்கு ஒரு நொடி பிழையை மட்டுமே பதிவு செய்யும்.  ஒரு நொடி என்பது சீசியம் -133 அணுவுக்குள் 9,192,631,770 சுழற்சிகள் நடக்கும் கால அளவு என்கிறார்கள்  .

சில பேர் 'one sec ' என்று சொல்லி விட்டு பாதி நாள் எடுத்துக் கொள்வார்கள். நாம் ஒரு நொடி என்று சாதாரணமாக சொல்வதற்குள் இயற்கையில் எத்தனை விஷயங்கள் நடந்து விடுகின்றன என்று பாருங்கள்!





நாம் ஒரு  சனிக்கிழமை மதியம் வயிறு முட்ட  சாப்பிட்டு விட்டு  வெட்டியாக உட்கார்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டு டி .வி. ரிமோட்டை அழுத்திக் கொண்டிருக்கும் போது நம் உடம்பின் செல்களும் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதில்லை. ஒரு பரபரப்பான தொழிற்சாலைக்கு சற்றும் குறைவில்லாமல் துரித கதியில் உள்ளே வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சத்தமில்லாமல்!!

மனித உடம்பின் ஒரு செல்லை செயற்கையாக உருவாக்க போயிங் 777 ஜெட் விமானத்தின் பாகங்களை எல்லாம் நாம் 5 மைக்ரான் விட்டத்துக்கு சுருக்க வேண்டி இருக்கும் என்கிறார்கள். (மைக்ரான் = ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பாகம்) அது மட்டும் அல்லாமல் தன்னை எப்படி படியெடுத்துக் கொள்வது என்ற தந்திரமும் அதற்குள் திணிக்கப் பட்டிருக்க வேண்டும். அடுத்து செல்களுக்கு இடையேயான communication . ஒரு செல் தான் செய்ய வேண்டிய பணிகளை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளாமல் மொத்த மனித உடம்பின் பணிகளை உள்ளே வைத்துக் கொண்டுள்ளது. ஒரு முழு மனிதனுக்கான code ஒரு செல்லில் உள்ளது! 


செல்கள் நமக்காக எல்லாவற்றையும் செய்கின்றன. நம் உணவை செரித்து அதில் இருந்து ஆற்றலை பிரிக்கின்றன. கழிவை வெளியேற்றுகின்றன. சில செல்கள் பார்க்கின்றன. சில சிந்திக்கின்றன. சில அந்நியப் பொருட்கள் ஊடுவுறும் போது சண்டை போடுகின்றன.மற்ற செல்களுக்கு தகவல் அனுப்புகின்றன. சில செல்கள் பராமரிப்பு வேலை செய்கின்றன. ஒழுங்காக organize செய்யப்பட ஒரு சாம்ராஜ்ஜியமே செல்களுக்குள் இருக்கிறது. இந்த செல்கள் சரியாக வேலை செய்ய மணி ஒன்றுக்கு சுமார் 300 லிட்டர் fresh  ரத்தம் அவைகளுக்கு போயாக வேண்டும்.இதை மறுபடியும் இதயத்தின் தசை செல்களே செய்கின்றன.


செல்களுக்குள் இருக்கும் மைடோ காண்ட்ரியம் செல்லின் ஆற்றல் மையம் என்று அழைக்கப் படுகிறது. உணவையும் ஆக்சிஜனையும் இது A T P எனப்படும் அடினோசின் ட்ரை பாஸ்பேட் ஆக மாற்றுகிறது.ATP நம் செல்களில் ஒரு பேட்டரி போல் செயல்பட்டு நமக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. ஒவ்வொரு செல்லினுள்ளும் ஒவ்வொரு நொடியும் ஒரு பில்லியன்  பேட்டரிகள் தோன்றி அழிகின்றன.

செல்கள் ஒருவித  வீர மரணத்தை தழுவுகின்றன. (programmed cell death)நீ தேவை இல்லை அழிந்து போ என்ற செய்தி வந்தவுடன் தாமதிக்காமல் ஒரு நம்பகம் வாய்ந்த வீரனைப் போல் ஆணையை சிரமேற்கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றன. in fact , மற்ற செல்களிடம் இருந்து குறிப்பிட்ட காலத்துக்கு செய்தி (keep alive ) வரவில்லை என்றால் செல்கள் ஏதோ என்னிடம் சரியில்லை என்று தன்னைத் தானே அழித்துக் கொள்கின்றன. இந்த செல்கள் அழிவது நம் நன்மைக்குத் தான். காலாவதியான மெஷின்களை வைத்துக் கொண்டு நடத்தப்படும் factory போல அல்லாமல் நிமிடத்துக்கு நிமிடம் ப்ரெஷ் மெஷின்களை வைத்து நடத்தப்படுகிறது நம் உடம்பெனும் factory !பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சொல்லாடல் செல்களுக்கு 100% பொருந்தும்.மேலும், வெள்ளை அணுக்கள் போர்த் தாக்குதல்களின் போது சந்தோஷமாக போரிட்டு வீர சுவர்க்கம் எய்துகின்றன. செல்கள் செத்துப் போனதும் அந்த குப்பைகளை கிளீன் செய்யும் துப்புரவுப் பணியையும் சில செல்களே செய்கின்றன. பெரும்பாலும் புது செல்கள் இந்த குப்பைகளில் இருந்தே ரீ சைக்கிள் செய்யப் படுகின்றன. ஒருவிதத்தில் பார்த்தால் நேற்று இருந்த நாம் இன்று இல்லை. மூளை மற்றும் கல்லீரலின் செல்கள் மட்டும் நீண்ட நாள் இருக்கும் என்கிறார்கள்.

நாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னெ என்று வளையாபதி  சொல்வது போல!


உடம்பை பிச்சைப் பாத்திரம், காற்றடைத்த பை, மலம், குப்பை etc  என்றெல்லாம்  சொல்லும் பாடல்களை இனிமேல் நம்பாதீர்கள்!!!


வெயிட்,,,,

சில சமயம் உடம்பை குப்பை என்று சொல்லுவது பொருந்தும். அழிந்து போகவேண்டிய செல்கள் சில சமயம் அழிந்து போகாமல் குழப்பமடைந்து தன்னைத் தானே படியெடுத்துக் கொண்டு பெருக ஆரம்பிக்கின்றன. எந்திரன் படத்தில் 'கெட்ட ' ரோபோட்டுகள் போல!இந்த குழம்பிய செல்களை நாம் கேன்சர் செல்கள் என்கிறோம்.பொதுவாக செல்கள் அரிதாகவே தவறு செய்கின்றன. Cancer is a bad luck!

செல்களின் communication மிகவும் அபாரம் என்று சொல்கிறார்கள். இன்று நாம் கண்டுபிடித்து வைத்திருக்கும் மைக்ரோ பிராசசர்கள் பக்கத்திலேயே வர முடியாது. செல்கள் பெரும்பாலும் updated ஆக இருக்கின்றன. தகவல்களை சதா அனுப்பிய வண்ணம் பெற்ற வண்ணம் இருக்கின்றன. சந்தேகம் இருந்தால் பக்கத்து செல்களுக்கு 'query ' செய்து confirm செய்து கொள்கின்றன.உதவி கோருகின்றன. தான் எப்போது செத்துப் போக வேண்டும் என்று உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா ரேஞ்சுக்கு கேட்டுக் கொள்கின்றன. இவற்றை செல்கள் பெரும்பாலும்  ஹார்மோன்கள் என்ற கொரியர் சர்வீஸ் மூலம் நிறைவேற்றிக் கொள்கின்றன.சில தகவல்கள் தைராய்ட் போன்ற சுரப்பிகளிடம் இருந்து செல்களுக்கு periodic ஆக வருகின்றன. மேட்டர் படத்தைப் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட உறுப்பின் செல்களுக்கு நீவிர்  சற்று  பரவசம் அடைக ; இன்புறுக என்று இந்த ஹார்மோன்களே கொரியர் சர்வீஸ் செய்கின்றன. காதலியைப் பார்க்கும் போதும் சம்பந்தப்பட்ட உறுப்பை (இதயம்) சற்று வேகமாக துடிக்க வைக்கின்றன.சில சமயம் நம் தலை மூளை சில செல்களுக்கு தானாகவே டெலிகிராம் ,தந்தி அனுப்புகிறது.(paracrine signaling) மேலும் செல்கள் பக்கத்து செல்களுடன் ஏம்பா அய்யா  எங்கோ விழுந்து அடிபட்டு ரத்த காயம் போல; என்டோதெலியம் அதிகம் சுரக்கச் சொல்லி எனக்கு வந்த கட்டளை சரிதானே? உனக்கும் வந்துச்சா என்றெல்லாம் பேசிக் கொள்கின்றன.

நம் அறிவுக்கு எட்டாமலேயே இத்தனை விஷயங்கள் கட்டுக்கோப்பாக நம்முள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.


உயிரியல் போதும், கொஞ்சம் மொழியியல் :)

தமிழ்  பொதுவாக ஒரு SOV மொழி. Subject - Object- Verb இந்த வரிசையிலேயே சொற்கள் அமைக்கப் பட்டிருக்கும்.

நான் (S ) பழம் (O ) சாப்பிட்டேன் (V )

நான் (S ) உன்னைக் (O ) காதலிக்கிறேன் (V )

ஆங்கிலம் ஒரு SVO மொழி Subject- Verb- Object

I (S) Love (V) You (O)

இங்கே ஒரு சின்ன விஷயத்தை கவனியுங்கள். தமிழில் SOV என்பதை SVO ஆக  மாற்றினால் பொருள்  மாறுவதில்லை.இலக்கணம் மாறுவதில்லை.

நான் (S ) சாப்பிட்டேன் (V ) பழம் (O )

காதலிக்கிறேன் (V ) நான் (S ) உன்னை (O )

ஆனால் ஆங்கிலத்தை SOV கட்டமைப்பில் மாற்றினால் பொருளற்ற வாக்கியமே வருகிறது.

I (S) Fruit (O) ate (V) - I fruit ate

ஆனால் ஒரு சில சிறப்பான தருணங்களில் கவிதைக்கு அழகு சேர்க்க (figure of speech) ஆங்கிலத்தில் இந்த வரிசை மீறப்படுகிறது. (Anastrophe )

He took his vorpal sword in hand:
Long time the manxome foe he sought—
So rested he by the Tumtum tree,
And stood awhile in thought.

-Lewis Carroll


"Long time the manxome foe he sought"   O -S -V 


நீண்ட நாட்களாக கொடிய பகைவனை அவன் தேடினான்.

O-S-V இது பொதுவாக ஆங்கிலம் பயன்படுத்தும் வரிசை அல்ல.

He sought his manxome foe long time என்பது பொதுவான SVO வரிசை.


சில மொழிகள் V -S -O  என்ற வரிசையில் சொல்லமைப்பு கொண்டுள்ளன.

அராபிக், உருது போன்றவை..பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் , வினைகளுக்கு முக்கியத்துவம் ...கவித்துவமான மொழிகள்!

VSO வரிசை நம் கம்ப ராமாயணத்தில் சில:

*'கண்டனென், (யான் )கற்பினுக்கு அணியை, கண்களால், 
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்


*கண்ணுற்றான் வாலி, நீலக் கார் முகில் கமலம் பூத்து,
மண் உற்று, வரி வில் ஏந்தி, வருவதே போலும் மாலை;

வாங்கினாள், தன் மலர்க்கையில்; மன்னனை முன்னா
ஏங்கினாள் அவ்வனுமனும் 

இப்படி வரும் திருக்குறள் ஏதேனும் ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம்!

உணர்ச்சிப் பூர்வமான வாக்கியங்களுக்கு வினைச் சொல்லே முதலாவதாக வரும் போலிருக்கிறது.


கொல்லுடா அவனை!


ஏமாத்திட்டா மச்சா!


சொல்லடி அபிராமி!


கட்றா வண்டியை!


எடுடா அருவாளை!

பெயர்ச்சொற்கள் இறந்து போனவை என்கிறார் ஓஷோ. Tree என்கிறோம். ஆனால் Tree என்பது ஒரு இறந்து போன ஒன்று அல்ல.நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருப்பது என்கிறார். Treeing என்று சொல்வதே சரி. உண்மையில் ஒரு பாறைக்குள்ளும் ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டுள்ளது. பாறைக்குள்ளும் ஏதோ ஒன்று உயிர்ப்புடன் உள்ளது. rocking என்று சொல்வதே சரி! 


சரி. ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தை தலைகீழாகப் படித்தால் பெரும்பாலும் அர்த்தம் இருக்காது. தலைகீழாகப் படித்தாலும் அர்த்தம் வரும் வாக்கியம் ஒன்று:


"Are you as bored as I am?"

ஓஷோ ஜோக்.

ஒரு சொட்டைத் தலைக்கு பத்து இருபது முடிகளே மிச்சம் இருந்தன. 

பார்பர் ஷாப்பிற்கு ஹேர் கட் சென்ற அவன் " இதப் பாருப்பா, எனக்கு நீ பாதி சார்ஜ்  தான் வாங்கணும் ; எனக்கு முடியே இல்லையே, ரொம்ப அநியாயம் " என்றான்.

பார்பர் " இல்ல சார், நான் உண்மையில் இரண்டு மடங்கு சார்ஜ் வாங்கணும்; முடி எங்கே இருக்குன்னு கஷ்டப்பட்டு தேடித் தேடி வெட்டறேனே " என்றான்.


சமுத்ரா