இந்த வலையில் தேடவும்

Monday, January 16, 2012

கரப்பான்பூச்சி(சிறுகதை)

ஹலோ, ஒரு நிமிடம்..நான் தான் கரப்பான்பூச்சி பேசுகிறேன்.கரப்பான்பூச்சி எங்காவது பேசுமா என்று கேட்காதீர்கள். இந்த கரப்பான்பூச்சி பேசும்.ஏனென்றால் நானும் உங்களைப் போல ஒரு மனிதன் தான். நான் செய்த ஒரு சிறு தவறுக்கு தண்டைனையாக என் பாஸ் என்னை கரப்பான்பூச்சி ஆக்கி விட்டார்.மனிதனை எப்படி க.பூச்சியாக மாற்ற முடியும் என்று கேட்காதீர்கள். அதெல்லாம் எனக்குத் தெரியாது. அவர் ஏதோ உயிரியல் ஆராய்ச்சி செய்பவர். அவரால் முடியும்.என் வேலையெல்லாம் அவரது வேதியியல் துறை ஆய்வகத்தில் அவருக்கு அசிஸ்டன்ட்-அதாவது எடுபிடி. அவர் கேட்கும் திரவங்களை வாங்கி வருவது,அமிலங்களை டைல்யூட் செய்வது, டெஸ்ட்-டியூப்களை ரின்ஸ் செய்வது, ரீடிங்க்ஸ் எடுப்பது போன்ற சின்னச் சின்ன வேலை. அவர் என்ன ஆராய்ச்சி செய்கிறார் என்று சத்தியமாகத் தெரியாது. தெரிந்திருந்தால் சொல்வதற்கு என்ன? அப்புறம் ஒரு விஷயம். நிரந்தரமாக என்னை கரப்பான்பூச்சியாக மாற்றிவிடவில்லை. ஏதோ ஒரு ஆத்திரத்தில் நைட்ரிக் அமிலத்துக்கு பதில் சல்ப்யூரிக் அமிலம் போட்டு விட்டேன் என்று லேபில் ஓடிய க.பூச்சியை பார்த்து விட்டு ஒரு மாதம் நாம் அதாக மாறக்கடவது என்று வேதியியல் ரீதியாக சபித்து விட்டார்.I have been chemically cursed ! ஒரு மாதம் ஆனதும் மீண்டும் என்னை எடுபிடி வேலைக்கு மனிதனாக மாற்றம் செய்து விடுவார் போலும்!

சரி.

கரப்பான் பூச்சியாக மாறியதும் முதலில் எனக்கு உலகமே தலைகீழாக மாறி விட்டது போலத் தோன்றியது. மனிதர்கள் கிங் காங் குரங்கு சைசுக்கு அநியாமாக பெரிய சைசில் தெரிந்தார்கள். மேஜை நாற்காலிகள் எல்லாம் மலைகள் போல நின்றிருந்தன.நாம் அடிக்கடி கேவலமாகப் பேசும் தலைமயிர் ஒன்று பெரிய கயிறு போல இருந்தது.உலகமே ஒரு இருபது எக்ஸ்
லெவலுக்கு பெரிதுபடுத்தப்பட்டது போல இருந்தது. கரப்பான்பூச்சிகளுக்கு இது பெரிய விஷயம் இல்லை. நான் மனிதனாக இருந்து Step -down செய்யப்பட்டதால் எனக்கு இந்த வினோதமான அளவீடுகள் குழப்பமாக இருக்கின்றன.மேலும் மனிதனாக இருக்கும் போது பளபளப்பாக இருந்த தரை இப்போது மிகவும் கரடுமுரடாகத் தெரிகிறது. நாம் படுசுத்தம் என்று நினைத்த
உணவில் கூட ஆயிரக்கணக்கில் சின்னச் சின்ன கிருமிகள் இருப்பது இப்போது தான் தெரிந்தது. எறும்பு ஒன்று முயல் சைசுக்குத் தெரிகிறது.என்னை சுற்றிலும் கணக்கிலடங்காத விதம்விதமான வாசனைகள் சூழ்ந்துள்ளன.

ஒரு மணிநேரம் இப்படியே குழப்பத்தில் கழிந்தது. எனக்கு ஆறுகாலில் நடக்கத்தெரியாததால் அப்படியே நின்றிருந்தேன்.எனக்கு லேசாகப் பசித்தது. கரப்பான்பூச்சி என்ன சாப்பிடும் என்று எனக்கு சத்தியமாகத் தெரியாது. அதையெல்லாம் யோசிப்பதற்கு என்
கெமிஸ்ட்ரி படிப்பும் , மிடில் கிளாஸ் நகர வாழ்க்கையும் எப்போதும் இடம்கொடுக்கவே இல்லை. சரி நாயின் அவஸ்தை நாயாக மாறினால் தானே தெரியும்? இப்போது நான் சாப்பிட வேண்டும். எதை சாப்பிடுவது? முதலில் இந்த பாழாய்ப்போன கரப்பான் சைவமா அசைவமா? ஏதாவது எறும்பை அட்டாக் பண்ணி சாப்பிடலாமா?எறும்பு எப்போதும் படைபடையாக தான் வரும் என்று கேட்டிருக்கிறேன்.நான் பாட்டுக்கு ஒரு எறும்பை நசுக்கி சாப்பிட்டுவிட்டு பின்னர் ஓராயிரம் எறும்புகள் அணிவகுத்து வந்து விட்டால்?எதற்கு வம்பு? எறும்பு ப்ளான் கேன்சல்..மனுஷப்பயல் எதையாவது கொறித்துவிட்டு கீழே சிந்தி இருப்பானே? அதைப் போய் ஒரு வெட்டு வெட்டலாமா? ஆனால் பாருங்கள் மனுஷன் கண்ட விஷயங்களை எல்லாம் அறிவில்லாமல் சாப்பிடுகிறான்.பிளாஸ்டிக், பூச்சிக் கொல்லி, ரப்பர்,அஜினமோட்டோ எல்லாவற்றையும்! அந்த சமாச்சாரங்கள் க.பூச்சியை ஒன்றும் பண்ணாதா? யாருக்குத் தெரியும்?

ஆ. என்ன அங்கே? ஓ இன்னொரு கரப்பான்பூச்சி வருகிறது.முதன்முதலில் ஒரு பூச்சியாக இருந்துகொண்டு இன்னொரு பூச்சியைப் பார்க்கிறேன். மிகுந்த கவனமாக எங்கே மனுஷப்பயன் வந்துவிடுவானோ என்று பயந்து பம்மியபடியே அது வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து ஹலோ என்றேன். ஆனால் வார்த்தை ஹலோ என்று வரவில்லை. இதுவரை நான் கேட்டிராத வினோதமான ஓசை என் தொண்டையில் இருந்து எழுந்தது. என்னைப் பார்த்து ஏனோ அந்த கரப்பான் பயந்து வந்த வழியே ஓடிவிட்டது. வந்தது ஆணா பெண்ணா என்று எனக்குத் தெரியவில்லை.மனிதர்களில் முடியை வைத்தோ,அணிந்துள்ள உடைகளை வைத்தோ ,மீசையை வைத்தோ சொல்லிவிடலாம்.இங்கே எல்லாமே அம்மணமாகத் தான் இருக்கின்றன. பெண்களுக்கும் மீசை இருக்கும் போலத்தோன்றுகிறது.உம்ம்ம்ம்..முதன்முதலில் ஆடை இல்லாமல் அலைவது கொஞ்சம் சுகமாகத்தான் இருக்கிறது. மனிதனுக்கு ஆடை அணியாமல் பொது இடங்களில் நடக்கும் ஒரு மறைமுக ஆசை இருக்கிறது என்று உளவியல் சொல்கிறது.இதுமாதிரி நமக்கு கனவுகள் கூட வருமே? பொது இடங்களில் ஆடை இன்றி நிற்பது போல! பாழாய்ப் போன இந்த உடைகளால் தான் இன்று இன்டர்நெட்டில் ஃ போர்னோகிராபி சக்கைபோடு போடுகிறது.பூச்சிகள் பறவைகள் மிருகங்கள் ஆடை அணியாமல் தான் திரிகின்றன. ஆனால் 24 x 7 அதே நினைவில் அலைவதில்லை. ஆடை அணிந்த மனிதன் தான் அப்படி. உடை அவனை ஒரு செக்ஸ் maniac ஆக மாற்றி விட்டது.

உளவியல் பேசும் முதல் கரப்பான்பூச்சி நானாகத்தான் இருப்பேன். சரி முதலில் எனக்கு சாப்பிட
ஏதாவது வேண்டும். அல்ல.ஏதாவது சாப்பிட வேண்டும். அதற்கு முதலில் ஒரு கரப்பான்பூச்சியை பார்த்து அவை என்ன என்ன சாப்பிடும் என்று கேட்க வேண்டும். எனவே இப்போது தென்பட்ட அந்த பூச்சியை பின் தொடர்ந்து ஓடினேன். எனக்கு இந்த தட்டையான உடம்பையும் ஆறு சன்னமான மயிர் நிறைந்த கால்களையும் முன்னே நீட்டிக் கொண்டிருக்கும் இந்த ஆண்டெனாவையும் வைத்துக் கொண்டு ஓடுவது கஷ்டமாக இருக்கிறது.இருந்தும் ஓடினேன். பசி யாரை விட்டது? எப்படியோ அதை நான் பிடித்து விட்டேன். முதலில் பயந்த அது பின்னர் என்னிடம் நன்றாகப் பேச (?) ஆரம்பித்து விட்டது. வள வள என்று இடைவெளி விடாமல் பேசியதால் அது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். நான் என்ன பாஷை பேசுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனாலும் பேசினேன். அது பேசுவதும் புரிந்தது.

நீ ஆணா ? பெண்ணா?

பெண் (என்னை விட பெரியதாக இருந்தது!)

சரி.எனக்கு சாப்பாடு வேண்டும்.

ஏன் இப்படி அலைகிறாய்?கரப்பான்களால் ஒருமாதம் வரை உணவு இல்லாமல் இருக்க முடியும்.சரி நீ ஏன் வேறுமாதிரி இருக்கிறாய்? உன்னைப்பார்க்கும் போது எங்கள் இனம் என்று தோன்றவில்லை.

(நான் அனுபவித்த பசி உடலின் பசி அல்ல. மனம் உருவாக்கிய பசி என்று அப்போது தான் புரிந்தது. மனிதன் சும்மா தின்று கொண்டே இருப்பதால் அவன் மனமே ஒரு பொய்யான பசியை உண்டுபண்ணி விடுகிறது)

சரி,நாம் என்ன சாப்பிடுவோம்?
அது என்னை ஒரு மாதிரி பார்த்தது.

எல்லாமே தான். மனிதர்கள் ஸ்டாம்ப்பின் பின்னால் ஓட்டும் பசையைக் கூட.

நீ சாப்பிட்டாயா?

ஆயிற்று. கர்ப்பமாக இருப்பதால் இப்போது வேளாவேளைக்கு ஏதாவது சாப்பிட்டு விடுகிறேன்.

ஓ அப்படியா?உங்கள் தாம்பத்திய வாழ்வைப் பற்றி சொல்லேன். சாரி. எனக்கு ஒரு விபத்தில் நினைவெல்லாம் இழந்து விட்டது.
அது மீண்டும் என்னை ஒரு மாதிரி பார்த்தது.

என்ன பெருசா? மூடு வந்தா வாசனையை எடுத்து உடுவோம். அந்த ஆளு ஜொள்ளு விட்டுக்கிட்டே வருவான். மேட்டர் முடிந்ததும் அவ்ளோ தான். பிறகு வாழ்நாள் முழுவதும் நோ செக்ஸ்.அப்பாவோட விந்தை பத்திரமா எங்களுக்குள்ளேயே கெடாம சேமிச்சு வச்சுக்குவோம். அவரு குடுக்கறப்பவே ப்ரோடீன் உறை எல்லாம் போட்டு கிப்ட் பேக் பண்ணி தான் தருவார்.தேவையான போது ஒவ்வொண்ணா எடுத்து நாங்களே டெலிவரி பண்ணுவோம். இது எனக்கு இந்த வருசத்தில் நூத்தி முப்பதாவது டெலிவரி.

'பாவி மகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா' என்ற சிவாஜி கணேசன் பாடல் நினைவுக்கு வந்தது.

'ஆபரேஷன் எதுவும் பண்ணிக்க மாட்டியா?'

'அப்படீன்னா'?

சரிதான் போ என்று நினைத்துக் கொண்டேன்.

கரப்பான் மூச்சை நிறுத்தி தம் கட்டுவதில் வல்லது என்றும் , எந்த விதமான Extreme வெப்பநிலையிலும் வாழும் என்றும் திருப்பிப்போட்டால் தானே திரும்ப முடியாமல் அப்படியே செத்துப்போகும் என்றும் அதனிடமிருந்து மேலும் அறிந்து கொண்டேன். நாம் உபயோகிக்கும் ட்யூப் லைட் அதற்கு அலர்ஜியாம். இருட்டு தான் பெரும்பாலும் பிடிக்கிறது. பகலில் பெரும்பாலும் எல்லாம் தூங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. மேலும் கரப்பான்பூச்சிகளின் எலும்புக்கூடு உடலுக்கு வெளியே தான் இருக்கிறதாம். இறைவன் இவைகளுக்கு சாரி எங்களுக்கு நரம்பு மண்டலத்தின் ஹெட் கோர்டர்ஸ் ஆக மூளையை வைக்காமல் கட்டுப்பாட்டு கேந்திரியங்களை உடல் முழுதும் ஆங்காங்கே பிரித்து வைத்திருக்கிறான்.எனவே தலை துண்டுபட்டாலும் ராகுகேது போல சிலநாள் உயிர்வாழ்கின்றன. இந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு முன்பு தெரிந்திருக்கவில்லை.உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நான் படித்ததெல்லாம் கரப்பான்களின் ரத்தம் வெள்ளைக்கலர் என்றும்
அவை டைனோசர் காலத்தில் இருந்தே பூமியில் இருக்கின்றன என்றும் மனிதன் அழிந்து போனாலும் பல்லாயிரம் ஆண்டுகள் பூமியை ஆளும் என்றும் இதுமாதிரி விஷயங்கள் தான். பூமியில் மனுஷப்பயல் அணுகுண்டு வீசினால் கரப்பான்களையும் தேள்களையும் தவிர வேறு எல்லா உயிரினங்களும் பூண்டோடு அழிந்து விடுமாம்.

காலில் எதற்கு உறுத்தலாக இத்தனை முடிகள் என்று அதனிடம் கேட்டேன்.

அப்போது அது கூலாக அங்கே உன்னை யாரோ துரத்துகிறார்கள் பார். தப்பித்து ஓடு என்றது. ஏதோ ஒரு ஜந்து என்னை நெருங்கிக் கொண்டிருந்தது. எலி போல தோன்றியது. எலி கரப்பான் பூச்சியைத் துரத்துமா? என்ன கருமமோ யார் கண்டது? இப்போது துரத்துகிறது நான் தப்பிக்க வேண்டும். நான் ஓடத் தொடங்கினேன். எப்படி அவ்வளவு அழகாக ஓடுகிறேன் என்பது புரியவில்லை. வழியில் உள்ள தடைகளை மிக வேகமாக அறிந்து கொண்டு தமிழ் சினிமா கிளைமாக்ஸ் போல சந்து பொந்துகளில் அனாயாசமாகப் புகுந்து ஓடினேன். எப்படியோ ஒருவழியாக தப்பித்து ஒரு மறைவிடத்தில் போய் ஒளிந்து கொண்டேன்.அப்போது அந்த கரப்பான்பூச்சி மீண்டும் வந்து எனக்கு ஹாய் சொன்னது. அப்போதுதான் என் காலில் உள்ள குட்டிக்குட்டி முடிகள் ஆபத்து காலத்தில் சூழ்நிலையை உணர உதவும் சென்சார்கள் என்று அறிந்து கொண்டேன்.

அந்த பெண் கரப்பான்பூச்சி 'டொங்கு' வருகிறான். அவனுக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்றது. கரப்பான் பூச்சிகளும் பெயர் வைத்துக்கொள்ளும் போலிருக்கிறது.இந்த அழகியின் பெயர் க்ளாராவாம்.

எப்படி பார்க்காமலேயே டொங்கு வருகிறான் என்று சொன்னாய் என்றேன். எல்லாம் வாசத்தை வைத்துதான் என்றது. மனிதன் தான் தன் இயல்பான உயிரியல் வாசத்தை பெர்ப்யூம்-களைப் போட்டு லூசுத்தனமாக மறைத்துக் கொள்கிறான்!

எனக்கு டொங்கு அறிமுகமானான். மீசையில் நிறைய பாக்டீரியா சேர்ந்து விட்டது என்றும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொன்னான்.
டொங்குவைத் தொடர்ந்து லேபில் வசிக்கும் கரப்பான்பூச்சி படையே அறிமுகம் ஆகியது.எல்லாம் நல்ல பூச்சிகள். சமுதாய பிராணிகள்! அவைகளுக்கு தனியாக ஒரு உலகம் இருக்கிறது என்று அப்போதுதான் அறிந்து கொண்டேன். மனிதர்களைப் போல அவைகளும் பொதுக்கூட்டம் தேர்தல் எல்லாம் நடத்துகின்றன.சேமிப்புக் கிடங்குகளை வைத்துக் கொள்கின்றன.கேர்ள் பிரண்டை டேட்டிங் கூட்டிச் செல்கின்றன. சண்டை போடுகின்றன. டான்ஸ் ஆடுகின்றன.இரங்கல் கூட்டம் நடத்துகின்றன. பண்டிகை கொண்டாடுகின்றன என்றெல்லாம்.அங்குள்ள எல்லாப் பூச்சிகளுக்கும் என்னை மிகவும் பிடித்துப் போய் விட்டது. க.பூ.தலைவன் தேர்தலில் என்னை வேட்பாளராக நிற்கும் படி சில க.பூ கேட்டுக் கொண்டன என்றால் பாருங்களேன். எனக்கு பாலோ என்று பெயர் வேறு வைத்து விட்டன. அதற்கு என்ன அர்த்தமோ? கடவுளுக்கே வெளிச்சம்.

இப்படியே ஒரு வாரம் கழிந்தது. எனக்கு க.பூ உலகின் ரகசியங்கள், நடைமுறைகள் மெல்ல மெல்ல பிடிபட ஆரம்பித்தன.நான் ஒரு கரப்பானாக இருப்பதை விரும்ப ஆரம்பித்தேன். பிறகு எனக்கு டான்சியின் அறிமுகம் கிடைத்தது.ஒருநாள் தயங்கித்தயங்கி வெட்கத்துடன் என்னிடம் வந்து 'நீங்க தான் புதுசா வந்தவரா'? என்று கேட்டாள். அப்போதே எனக்கு கண்டதும் காதல் வந்துவிட்டது. இந்த காதல் கன்றாவி எல்லாம் மனிதர்களுக்கு தான் என்று நினைத்திருந்தேன். பிராணிகளுக்கும் இருக்கிறது போலும். அடுத்தநாளே பொறுக்கமுடியாமல் ஐ லவ் யூ சொல்லிவிட்டேன். அவளும் ஒரு சிறிய தயக்கத்துக்குப் பிறகு ஒத்துக் கொண்டாள். இருவரும் ஊர் சுற்றினோம். சாரி வீடு சுற்றினோம். டேட்டிங் சென்றோம். நான் தினமும் எங்கிருந்தோ ரொட்டி, பிஸ்கட்,முறுக்கு துகள்களை சேகரித்துக் கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்தேன்.என்ன, முத்தம் தான் கொடுக்க முடியவில்லை. மீசை இடித்தது. உன் Ultimate gift ஐ எப்போது கொடுக்கப்போகிறாய்? என்று கேட்டாள் டான்சி. கள்ளி!

இப்படிப்பட்ட ஒரு மன்மத மயக்கத்தில் எனக்கு கரப்பான்பூச்சியாக இருக்க ஒருமாதம் தான் அனுமதி என்ற கெடு சுத்தமாக மறந்தே விட்டிருந்தது. ஒருநாள் பட்டப்பகல் வேளையில், கண்ணயர்ந்து தூங்கும் போது திடீரென ஞாபகம் வந்தது. உடனே டான்சியை போய்ப் பார்த்து அவளை எழுப்பி 'என்னை மறந்து விடு' நான் என் சொந்த உலகிற்குப் போகவேண்டும். என்றேன். அவள் அழுதாள். என்னையும் கூட்டிப் போ என்றாள். தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கத்தினாள்.எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சொல்வதை சொல்லி விட்டேன். அப்புறம் உன் இஷ்டம் என்று சொல்லி விட்டு வந்தேன். மறுநாள் டான்சி எதையோ விழுங்கி விட்டு தலைகீழாக விழுந்து கிடந்ததைப் பார்க்கும் போது என் குட்டிக் கண்களில் நீர் துளிர்த்தது. ப்ரிட்ஜில் இருந்த கோகோ-கோலாவைப் போய்க் குடித்திருக்கிறாள் பாவம்.

நான் வந்து சேர்ந்த ஒரு வருடத்தை (நமக்கு ஒரு மாதம்) கொண்டாடும் முயற்சியில் என் சக கரப்பான்கள் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்தன.பெரிய டின்னருக்கு ஏற்பாடு செய்தன. எறும்புப் புற்றுக்கு படையெடுத்துப் போய் பண்டங்களைத் திருடலாம் என்றெல்லாம் பிளான் போட்டன. நான் கொஞ்சம் ஜாஸ்தி பேசுவேன் என்பதால் நான் தான் தலைவர் பதவிக்கு நிற்கவேண்டும் என்று முடிவே செய்து விட்டன.

இதோ அந்த நாள் நெருங்கி விட்டது. ஆனால் எனக்கு மீண்டும் மனிதனாக மாற விருப்பமே இல்லை சார். மனிதன் ஒரு கேவலமான மிருகம். இங்கே கரப்பான்பூச்சிகளின் உலகில் போட்டி இருக்கிறது.ஆனால் பொறாமை இல்லை.பகை இருக்கிறது ஆனால் துரோகம் இல்லை.கோபம் இருக்கிறது ஆனால் வன்மம் இல்லை. இங்கே ஒரு பூச்சி இன்னொன்றை அடிமை செய்வதில்லை. ஏமாற்றுவதில்லை. முதுகில் குத்துவதில்லை. உலகில் என் இனம் மட்டுமே வாழவேண்டும் என்று பேராசைப்படுவதில்லை. மனிதன் கல்நெஞ்சக்காரன் சார். சுயநலம் பிடித்தவன். இங்கே எந்த ஒரு பூச்சியும் உழைக்காமல் அடுத்தவன் சொத்தை தன் வீட்டில் குவித்து வைப்பதில்லை. ஸ்ப்ரே அடித்தால் சாவதற்கு முன் எல்லா கரப்பான்களுக்கும் ஆண்டெனா மூலம் ஆபத்து இங்கே வராதே என்று தகவல் சொல்லிவிட்டுதான் ஒரு கரப்பான் சாகிறது.மனுஷப்பயலோ தான் வாழ்வதற்கு ஆயிரம் பேரை வேண்டுமானாலும் கொலை செய்வான். இந்த பூச்சிகளின் வரலாற்றில் ஹிட்லர் ,முசோலினி,இடி அமீன் கள் இருந்ததில்லை பாருங்கள்.முதலில் நான் கரப்பான்பூச்சியாக மாறியதும் நான் மிகவும் வேதனைப்பட்டேன். மனிதபிறவியை இழந்து விட்டோமே என்று. ஆனால் இப்போது பணத்துக்காக பொய்வேஷம் போடும், பதவிக்காக பல்லை இளிக்கும் , புகழுக்காக பாசத்தை விற்கும் மனிதப்பிறவிக்கு கரப்பான் ஜென்மம் நூறுமடங்கு மேல் என்று தோன்றுகிறது. மேலும் ஆபத்துக்கு நடுவில் எங்கே எப்போது என்ன நடந்து விடுமோ என்ற நிலையில் நிச்சயமின்றி கணத்துக்கு கணம்உயிர்வாழ்வதில் ஒரு திரில் இருக்கிறது பாருங்கள்.அதை இந்த ஒருமாதம் முழுவதுமாக அனுபவித்தேன் சார்.

அய்யோ, அங்கே யார் வருவது? என் பாஸ் போல இருக்கிறது. மீண்டும் மனிதப் பிறவியா? மீண்டும் சிட்டி பஸ்சின் கூட்டத்தில் நசுங்கி சாகும் பயணமா?மீண்டும் பட்ஜெட் இடிக்கும் மாதக் கடைசிகளா?மீண்டும் கந்தக அமிலமா? மீண்டும் அந்த ராஜாராமனிடம் பணத்துக்காக இளிக்க வேண்டுமா? அய்யோ வேண்டாம் பாஸ் வேண்டாம். நான் இப்படியே இருக்கிறேன். நீங்கள் எனக்கு கொடுத்தது தண்டனை அல்ல .பரிசு. சாபம் அல்ல. வரம். ப்ளீஸ்.நான் இப்படியே இருக்கிறேன். கரப்பான்பூச்சியாக இன்னும் கொஞ்ச காலம் இருந்து விட்டு செத்துப்போகிறேன். என்னை மனிதனாக மாற்றாதீர்கள். ப்ளீஸ்...பாஸ்..டான்சி...டான்சி...ப்ளீஸ்...என் உயிர் டான்சி...






............................................................................






பஸ்சின் கொடூரமான ஹாரன் சத்தத்தில் விழித்துக் கொண்டேன். என்ன நடந்தது? ஏதோ ஒரு கனவு கண்டேனே? தலைவலி என்று லேபில் அரைநாள் லீவு சொல்லி விட்டு கடையில் சாமான் வாங்கி கொண்டு வந்திருக்கிறேன். மதியான பஸ்ஸில் கூட்டம் அவ்வளவாக் இல்லை.கண் அசந்து விட்டேன் போல இருக்கிறது. ஆனால் அது என்ன கனவு? கொஞ்சம் கூட ஞாபகம் இல்லையே?நல்ல கனவாகத்தான் இருக்க வேண்டும். மனம் லேசாக இருக்கிறதே. என்ன கொடுமை இது? கனவில் ஒரு துளி கூட ஞாபகம் இல்லை.ஏதோ மங்கலாக ஞாபகம் இருக்கிறது. பூச்சியா? சரி நிதானமாக யோசித்துப் பார்ப்போம்.

பஸ்ஸை விட்டு இறங்கி தெருவில் நடந்தேன். முதலிலேயே மனைவிக்கு போன் செய்து அரைநாள் லீவு என்று சொல்லிவிட்டேன். பையில் சாமான் எல்லாம் இருக்கிறதா என்று ஒருதரம் சரிபார்த்தேன். அந்த டப்பாவைப் பார்த்து என்னமோ செய்ய உடனே பக்கத்தில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசி விட்டேன். ஏன் அப்படி செய்தேன்?நான் இப்படியெல்லாம் செய்ய மாட்டேனே?

"இந்தாங்க காபி. சாமானை சரிபார்த்ததில் ஒண்ணு இடிக்குது. காக்ரோஜ் ஸ்ப்ரே பில்லுல இருக்கு. பையில இல்லையே? எம்பது ரூபாய் வெலையாச்சே!"

"பஸ்ஸில் தவறி விழுந்து விட்டது. இந்த மாதம் பட்ஜெட் ஓவர். அடுத்தமாசம் வாங்கிக்கலாம்" என்றேன்.மனைவி அர்ச்சனையை ஆரம்பிப்பதற்கு முன் பெட்ரூமுக்கு ஓடினேன்.

செல்லும் வழியில் ஒரு கரப்பான்பூச்சி குறுக்கே ஓடியது. ஏனோ இந்தமுறை 'இதுவேற சனியன்' என்று சொல்லவில்லை.

சமுத்ரா

Friday, January 13, 2012

அணு அண்டம் அறிவியல் -58

அணு அண்டம் அறிவியல் -58 உங்களை வரவேற்கிறது.

**********Even if Newton falls down, Gravity will hurt him*******************

I learned very early the difference between knowing the name of something and knowing something.-Richard Feynman

கீழே உள்ள படங்களை ஒரு நிமிடம் பாருங்கள்:





நன்றி.

Symmetry என்பது இயற்பியலில் மட்டும் இல்லாமல் மற்ற எல்லா துறைகளிலும் சுவாரஸ்யமான ஒரு கருத்து. மதங்களின் குறியீடுகள் symmetry எனப்படும் இந்த சமச்சீர்மையைக் கொண்டே பெரும்பாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மனித உடலை செங்குத்தாக இரண்டு பாகமாக வெட்டினால் ஒவ்வொரு பாகமும் இன்னொன்றுக்கு சமச்சீர்மையுடன் இருக்கிறது. அதாவது நம் வலது கண்ணுக்கும் இடது கண்ணுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. இசையில் பெரும்பாலும் இந்த symmetry இருக்கிறது. அதாவது ஸ்வரங்களின் இறங்கு வரிசை (அவரோகணம்) அவற்றின் ஏறு வரிசையோடு (ஆரோகணம்) சமச்சீர்மை கொண்டுள்ளது. மேலே உள்ள படங்கள் சிலவற்றில் இயற்கை தனது சமச் சீர்மையைக் காட்டி சிரிப்பதைப் பார்க்கலாம். மொழிகளில் சமச்சீர்மையை Palindrome என்று அழைக்கிறார்கள்.உதாரணம்: வானமானவா.

சரி.

பால் டைராக் என்பவர் பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள்கள் (அடிப்படைத் துகள்கள் என்றால் மேலும் பிளக்க முடியாத பிரபஞ்சத்தின் ஆதார கட்டுமான செங்கற்கள், உதாரணம் : எலக்ட்ரான் , குவார்க்.... இவை கூட மெல்லிய ஒரு நூலின் அதிர்வுகள் என்று இப்போது சொல்கிறார்கள். அதை இப்போது மறந்து விடுவோம்) அவற்றின் ஜோடியோடு வருகின்றன என்று கண்டுபிடித்தார். இது படைப்பின் அதிசயமானதொரு சமச்சீர்மையை காட்டுகிறது. கடைக்கு சென்றால் நம்மால்
சாக்ஸ்-சை தனியாக வாங்க முடியாது அல்லவா? ஜோடியாகத் தான் வாங்க வேண்டும். அது போல படைப்பின் அணிகளான ஆதாரத் துகள்கள் ஜோடி ஜோடியாகவே வருகின்றன.போட்டான் போன்ற சில ஆதாரத் துகள்களுக்கு மட்டும் ஜோடி கிடையாது .கடைக்கு சென்று பெல்ட்டைத் தனியாக வாங்குகிறோம் அல்லவா?அது போல! IOW, போட்டானின் எதிர்த்துகள் போட்டானே தான்! அலி என்றும் சொல்லலாம்.ஆண் பெண் இருமையைக் கடந்த கடவுள் என்றும் சொல்லலாம்!



கடவுளுக்கும் ஒளிக்கும் உள்ள ஆச்சரியமான ஒற்றுமைகளை அவ்வப்போது -- வில் சொல்லி வந்திருக்கிறோம்.அதில் ஒன்று :ஒளிக்கு எதிர் இருட்டு அல்ல! ஒளியே தான் :) அது போல கடவுளுக்கு எதிர் கடவுளே தான்! உலகில் உள்ள பெரும்பாலான மதங்கள் (கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற) கடவுளுக்கு எதிராக 'சாத்தான்' என்ற சக்தியை உருவகித்து வைத்துள்ளன.ஆனால் இப்படிப்பட்ட ஒரு (நிரந்தரமான) எதிர் சக்தியை உருவகம் செய்யாத ஒரே மதம் இந்து மதம் ( என்று நான் சொல்லவில்லை. 'ஓஷோ' சொல்கிறார்) (Ref:நான் விரும்பும் இந்தியா) கடவுளுக்கு எப்படி எதிர் சக்தி இருக்க முடியும்? அப்படியே இருந்தாலும் அதுவும் கடவுளாகத் தானே இருக்க முடியும்? [இந்து மதத்தில் அவ்வப்போது 'ராவணன்' போன்ற தற்காலிக வில்லன்கள் வருவார்களே தவிர கடவுளுக்கு எதிராக நிரந்தர வில்ல சக்தி கிடையாது]

பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டது என்பதை இயற்பியல் ஒத்துக்கொள்கிறதோ இல்லையோ பிரபஞ்சம் ஒளியால் படைக்கப்பட்டது என்பதை (ஓரளவு) ஒத்துக் கொள்கிறது.பிரபஞ்சம் வெடித்த போது (BIG BANG)அதில் அவ்வளவாக பொருள் (matter ) இல்லை. ஆனால் அதீதமான ஆற்றல் இருந்தது. ஆற்றல் துகள்கள் (போட்டான்கள்) ஒன்றுடன் ஒன்று
மோதிக்கொள்ளும் போது பொருளும் அதன் எதிர்ப்பொருளும் பிறக்கின்றன. இந்தப் பொருளும் எதிர்பொருளும் மீண்டும் சந்தித்து மறைந்து மீண்டும் தூய ஆற்றலை வெளியிடுகின்றன.பிரபஞ்சம் தோன்றிய போது அது மிகச் சிறியதாக இருந்ததால் இந்த ஆற்றல்-பொருள் குழப்பம் அதிகமாக இருந்தது. ஒரு நொடியில் ஆற்றலாக இருந்தது மறுநொடியில் பொருளாகவும்
ஒரு நொடியில் பொருளாக இருந்தது மறுநொடியில் ஆற்றலாகவும் மாறிக் குழம்பியது.இந்தக் குழப்பம் பிரபஞ்சம் தோன்றி சுமார் மூன்று லட்சம் வருடங்களுக்கு நீடித்தது என்கிறார்கள்.பிறகு பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட அளவு விரிவடைந்து விட்டதால் போட்டான்களின் ஆற்றல் பெருமளவு குறைந்து அவை மேலும் அதிக துகள்களை உருவாக்க இயலாது போயிற்று. இந்த சமயத்தில் ஆற்றல்(போட்டான்கள்) பொருளிடம் (ஹைட்ரஜன்) (தன் எதிர் இணையுடன் சேர்ந்து அழிந்து போகாத சில எலெக்ட்ரான்களும் ப்ரோடான்களும் இணைந்து சைக்கிள் கேப்பில் ஹைட்ரஜன் அணுக்களை அதாவது நாமெல்லாம் வருவதற்குத் தேவையான ஆதி உயிர் சூப்பை உருவாக்கி விட்டிருந்தன!) இருந்து பிரிந்து தன் போக்கில் விரியும் பிரபஞ்சத்துடன் பயணிக்க ஆரம்பித்தது. இந்த முக்கியமான நிகழ்வை PHOTON DECOUPLING என்கிறார்கள். இப்படி புறப்பட்ட ஆற்றல் கதிர் பிரபஞ்சம் விரிவடைய விரிவடைய ஆற்றல் குறைந்து இன்று நாம் காணும் (உணரும்) சொற்ப ஆற்றல் காஸ்மிக் மைக்ரோவேவ் பின்புலமாக (CMBR)மாறி உள்ளது.அதாவது நாமெல்லாம் வருவதற்குத் தேவையான மூலப்பொருட்களை உருவாக்கித் தந்த மூலகர்த்தாவான ஒளி இன்னும் நம்மிடையே மெளனமாக இருந்து கொண்டிருக்கிறது. நம் கொள்ளு கொள்ளு கொள்ளு ஆதித் தாத்தா சாகாமல் ஹீனமாக இன்னும் படுக்கையில் படுத்துக் கொண்டிருப்பது போல!

சரி

பிரபஞ்சம் பெரும்பாலும் பொருளால் ஆக்கப்பட்டிருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் சற்றே வியப்படைகிறார்கள். சல்லடை போட்டுத் தேடினாலும் பிரபஞ்சத்தில் எதிர்பொருள் கிடைப்பதில்லை.[பமீலா என்ற செயற்கைக்கோள் இன்று வரை பிரபஞ்சத்தில் எதிர்பொருளைத் தேடி வருகிறது] செயற்கையாக , துகள் முடுக்கிகளில் அதிவேக மோதல்களின் போது எதிர்பொருள் மருந்தளவு கிடைக்கிறது. [எதிர்பொருளை செய்வது தான் இப்போதைக்கு உலகிலேயே காஸ்ட்லியான விஷயம் என்று சொல்லியிருந்தோம்] எதிர்பொருளை ஏன் இவ்வளவு மெனக்கெட்டு தேட வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்றால் அது நம் விண்மீன்களுக்கு இடையேயான பயணங்களுக்கு (Inter stellar travel)இனி வரும் காலங்களில் ஒரு சிறந்த எரிபொருளாக இருக்கும் என்கிறார்கள். எதிர்பொருள்(உதாரணம் :பாசிட்ரான்) என்ற ராஜ குமாரியை தனியாக ராக்கெட்டின் ஒரு கொள்கலனில் அடைத்து வைத்து விட்டு பொருள் என்ற வீரர்களை கட்டுப்படுத்தி (பெண்ணின் உடலில் நடக்கும் கருமுட்டை -விந்து அணுக்கள் ஓட்டப்பந்தயம் போல) சீராக உள்ளே அனுப்ப வேண்டியது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு அபாரமான ஆற்றல் வெளியீடு கிடைக்கும்.அதை வைத்து ராக்கெட்டை செலுத்தலாம்.இந்த எதிர்ப்பொருளை சேமித்து வைப்பது கதிரியக்கத் தனிமங்களை சேமித்து வைப்பதை விட ஆபத்தானது.(அக்கினிக் குஞ்சு!) இதற்கு பிரத்யேகமான Penning trap என்ற கொள்கலன் வேண்டும். (ராஜகுமாரிக்கு என்ன ஒரு பாதுகாப்பு!) இந்த கொள்கலன் ஒரு வலுவான காந்தப்புலத்தின் உதவியால் எதிர்ப்பொருள் பொருளுடன் (கொள்கலனின் சுவருடன்) சேராமல் தற்காலிகமாகத் தடுக்கும்.

இப்போது நாம் பயன்படுத்தும் ராக்கெட்டுகள் , தீபாவளி டைப்! வேதியியல் எரிபொருட்கள்! இதை ஒரு விறகு அடுப்புடன் ஒப்பிடலாம். அடுத்து அணுகுண்டை வெடித்து விண்கலங்களை இயக்குவது. இதை நம் காஸ் அடுப்புடன் ஒப்பிடலாம். இதில் பொருளின் ஒரு மிகச் சிறிய பகுதி மட்டுமே ஆற்றலாக மாறுகிறது. இந்த எதிர்ப்பொருள் ராக்கெட் என்பது மைக்ரோவேவ் ஓவன் போல மிகவும் ஆற்றல் வாய்ந்தது. முழுப் பொருளும் அழிந்து ஆற்றலாக மாறுவதால் நாலே நாலு மில்லி கிராம் பாசிட்ரானை வைத்துக் கொண்டு நம்மால் ஒரு சில தினங்களில் செவ்வாயை அடைந்து விட முடியுமாம்.ஆனால் இந்த அளவு கணிசமான எதிர்பொருள்கள் நம் துகள் முடுக்கிகளில் (PARTICLE ACCELERATOR)கிடைக்காது.(துகள் முடுக்கிகள் ஆராய்ச்சிக்காக மட்டும் தான்). எனவே பிரபஞ்சத்தில் இந்த அபூர்வ எ.பொ ராஜகுமாரி எங்கெல்லாம் இயற்கையாக கிடைக்கிறாள் என்று தேட வேண்டி இருக்கிறது. அவள் கிடைத்து விட்டால் போதும். வீரர்களுக்கா பஞ்சம்?

சரி

பிரபஞ்சம் படைப்பில் ஒரு சமச் சீர்மையை (symmetry ) கொண்டிருந்தது என்று பார்த்தோம். அப்படியென்றால் உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதன் எதிர்பொருளுடன் சேர்ந்தே படைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியென்றால் ஏன் பிரபஞ்சத்தில் எதிர்பொருள் சுலபமாக தட்டுப்படுவதில்லை? Sex -ratio மிக மிக அதிகமாக இருக்கிறதே? ஒரு மின்சாரம் பாயும் ஒயரை எடுத்துக் கொண்டால் சாதாரணமாக அதில் கோடி கோடி கோடி எலக்ட்ரான்கள் இருக்கும். ஆனால் ஒரு நாலு மில்லிக்ராம் பாசிட்ரானை (எலக்ட்ரானின் எதிர்) கண்ணால் பார்க்க நாம் நாலு தலைமுறைக்கான சொத்தை எழுதி வைக்க வேண்டும்!

வாழைப்பழ ஜோக் நினைவுக்கு வருகிறது.

ஒண்ணு இங்க இருக்கு? அப்ப இன்னொண்ணு எங்க? -அதான் இது என்று செந்தில் லெவலுக்கு பதில் சொல்ல முடியாது. 'அதான் இது' என்பது ஒரு வேதாந்தமான பதிலாக இருக்கலாம்.தத்வமஸி! இயற்பியலில் கூட இது இருக்கிறது. இயற்பியல் எந்த ஒரு சாத்தியக்கூறையும் விட்டு வைக்கவில்லை. அதாவது One electron Universe ! ஒற்றை எலக்ட்ரான் பிரபஞ்சம்.
பிரபஞ்சத்தில் ஒரே ஒரு எலக்ட்ரான் தான் இருக்கிறதாம்
( ரொம்ப போர் அடிக்காதா அதற்கு?).அது தான் நானாக நீயாக நாயாக நரியாக ஹைட்ரஜனாக நைட்ரஜனாக ஹீரோவாக வில்லனாக ஆணாக பெண்ணாக மாறி மாறி திருக்காட்சி அளிக்கிறதாம். அத்வைதத்தின் உச்ச நிலை!!

இதை விளக்க நாம் மீண்டும் குவாண்டம் இயற்பியலிலும் ஃபெயின்மென்னின் வரைபடங்களுக்குள்ளும் நுழைய வேண்டி இருக்கிறது. அதற்கு முன்பு ஒரு சின்ன தகவல்: 'வேறுபாடு' என்பது பெரிய பொருட்களில் அதிகமாக இருக்கிறது. கார் பாக்டரியில் இருந்து வெளிவரும் இரண்டு கார்கள் என்னதான் ஒரேமாதிரி உரித்துவைத்தது போல இருந்தாலும் இரண்டுக்கும் இடையே ஆறு வித்தியாசம் என்ன ஆயிரம் வித்தியாசம் கண்டுபிடிக்கலாம், இந்த வித்தியாசங்கள் உள்ளே செல்லச் செல்ல குறைகின்றன. கடைசியாக எலக்ட்ரான் லெவலுக்கு வரும்போது ஒரு எலெக்ட்ரான் இன்னொன்றை அப்படியே 3D ஜெராக்ஸ் எடுத்தது போல இருக்கிறது. இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று தான் என்று தாராளமாக சொல்லலாம்.

மேலும் பாசிட்ரான் என்பது கடந்த காலத்துக்குள் நுழையும் ஒரு எலெக்ட்ரான் என்று நம்பப்படுகிறது .அதாவது பொருள் ஒன்று கடந்த காலப்பயணம் செய்யும் போது அதன் எதிர்பொருள் தோன்றுகிறது.



ஃபெயின்மேனின் நோபல் பரிசு ஏற்புரையில் இருந்து:

"அன்று எனக்கு ஜான் வீலர் டெலிபோன் செய்திருந்தார். அப்போது தான் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னை உறுத்திக் கொண்டிருந்தது. டைராக்கின் சமன்பாடுகளில் துகளின் மின்சுமையையும் (charge ) காலத்தையும் (time ) ஒருசேர திருப்பிய போது சமன்பாடுகள் மாறாமல் அப்படியே இருந்தன.அதாவது இரண்டு மைனஸ்களும் கான்சல் செய்து கொண்டன. காலத்தில் முன்னோக்கிப் பயணிக்கும் பாசிட்ரானும் காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கும் எலக்ட்ரானும் ஒன்று தான் என்று தோன்றியது.வீலர் போனில் '
பெயின்மன் , எல்லா எலக்ட்ரான்களும் ஏன் ஒரே மாதிரி இருக்கின்றன என்று நான் கண்டுபிடித்துவிட்டேன்" என்றார். 'ஏன்?' என்று கேட்டதற்கு 'ஏன் என்றால் அவை எல்லாம் ஒரே எலக்ட்ரான் தான் (?!)' என்றார்"


அது எப்படி ஒரே எலக்ட்ரான் என்று பார்க்கலாம் காத்திருங்கள். அதற்கு முன்னர் ஃபெயின்மனின் மேற்கோள்கள் இயற்பியலில் மிகவும் பிரசித்தி பெற்றவை. அவற்றைப் பற்றி கொஞ்சம் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போமா?

சமுத்ரா.


Tuesday, January 10, 2012

கலைடாஸ்கோப் -50

எப்படியோ லைடாஸ்கோப் -50 வரை என்னை (யும்) எழுத வைத்த (ஒரு சில) வாசக உள்ளங்களுக்கு (மிக்க) நன்றிகள்.

ஒன்று
======

கு.கா...பூ
------------

சாலையில் நடந்து செல்லும் போது
ஒரு கம்பளிப்பூச்சி தென்பட்டது
பெரும்பாலும் அது
குளிர்காலத்தின் கடைசி கம்பளிப்பூச்சியாக இருக்கலாம்!

மீண்டும் ஒன்று
==============
தமிழில் பெரும்பாலும் உணர்ச்சிப் பூர்வமான சொற்கள் உயிர் எழுத்துகளில் தான் ஆரம்பிக்கின்றன. அன்பு, இதயம், உணர்ச்சி, ஆனந்தம், உள்ளம்,இன்பம், ஆத்திரம்,அழகு, அனுஷ்கா ...சரி.. உயிர் எழுத்துக்கள் இல்லாமல் ஒரு கவிதையை எழுதுவது கொஞ்சம் கஷ்டம் தான்.அதுவும் காதல் கவிதை.நீங்களும் முயற்சிக்கலாம். உதாரணத்துக்கு ஒன்று:

குடித்து விட்டு வருபவன்
முயற்சிக்குக் கட்டுப்படாமல் வாசனை
வெளிவருவதைப் போல
காதலும் வெளிப்பட்டு விடுகிறது
தூக்கத்திலோ
பேசும்போதோ
நடக்கும் போதோ
சிரிக்கும் போதோ-காதல்
வெளிப்பட்டே விடுகிறது.
காதல் விதையை
விழுங்கியவன் நான்
கஸ்தூரி விருட்சம் வளர்ந்துள்ளது.
வாசனை வராமல் வேறென்ன செய்யும்?
நான் செய்யும் செயல்களில்
தெரியாமலேயே தோன்றிவிடுகிறது
நின் கையெழுத்து!
நான் பேசும் போது
குரலில் ஸ்ருதிபேதம் செய்து
வந்துவிடுகிறது நின் குரல்!
கண்ணாடி சில சமயங்களில்
பௌதீக விதிகளுக்கு மாறாக
பிம்பங்களைத் திரித்துக் காட்டுகிறது.
நான் நடந்தால் வானம் தலையைத் தொடுகிறது.
படுத்தால் விண்மீன்கள் வந்து கிச்சுகிச்சு மூட்டுகின்றன.
காதலை நான் விரைவில் சொல்லப்போவதில்லை
கொஞ்ச காலம் போகட்டும்.
பகல்கள் பரவசத்தில் தொடங்கட்டும்
காலடியில் கனவுநதி நகரட்டும்
திசை மாறி பூமி சுழலட்டும்
கண்கள்
காணும் பொருட்களுக்கெல்லாம்
காதல் வண்ணம் பூசட்டும்!


இரண்டு
========

இரண்டு.ஒன்று

சமீபத்தில் எழுத்தாளர் சாரு.நிவேதிதாவின் 'எக்சைல்' நாவலை (ஒரு வழியாக) படித்து முடித்தேன். (இப்போதெல்லாம் 'Flipkart ' இருப்பதால் நிறைய புத்தகங்களை அனாயாசமாக வாங்க முடிகிறது) மேலோட்டமாகப் பார்க்கும் போது அந்த நாவல் ஒரு குடிகாரன் நன்றாகக் குடித்து விட்டு உச்சகட்ட போதையில் உளறுவது போல இருக்கிறது. இருந்தாலும் அதில் ஏதோ ஒரு சரக்கு இருக்கிறது என்று தோன்றுகிறது! அது என்ன என்று தான் தெரியவில்லை. சாரு நிவேதிதாவே சொல்வது போலநாம் அப்படிப்பட்ட 'நான் லீனியர்' எழுத்துகளுக்குப் பழக்கப்படவில்லை.நாமெல்லாம் ராஜேஸ்குமார் மர்ம நாவல் படிப்பதற்கும் ,வாரப் பத்திரிக்கைகளில் சினிமா விமர்சனம் படிப்பதற்கும் தான் லாயக்கு போலிருக்கிறது.

இரண்டு.இரண்டு

நான் பார்த்து (கேட்டு) பொறாமைப்படுபவர்கள் லிஸ்டில் பெங்களூர் ஆட்டோக் காரர்களும் உண்டு. முன்னால் போய் நின்றால் ,கன்னடா, தமிழ், தெலுகு, ஹிந்தி?' என்று டூரிஸ்ட் கைடு ரேஞ்சுக்கு கேட்டு ஆச்சரியப்பட வைக்கிறார்கள். இந்த லிஸ்டில் ஒரு ஆ.டிரைவர் இங்கிலீஷ்-ஐயும் சேர்த்தது தான் ஹைலைட். [தமிழ் நாட்டு ஆட்டோ டிரைவர்கள் தமிழை தவிர வேறு பாஷை பேசமாட்டார்கள்!] சரி.அது இருக்கட்டும்

இரண்டு.மூன்று

தாய் மொழிக்கும் நகைச்சுவை உணர்வுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது போலத் தோன்றுகிறது. எனக்கு பொதுவாகவே இங்கிலீஷில் காமெடி பிடிக்காது. மிகவும் செயற்கையாக இருப்பது போலத் தோன்றும்.(Mr . Bean மிகக் குறைவாகவே ஆங்கிலம் பேசுவார் என்பதை கவனிக்கவும்)கன்னடத்திலும் காமெடி பார்க்கும் போது ஏனோ அத்தனை சுவாரஸ்யமாக இருப்பதில்லை. தமிழில் பார்த்தால் தான் காமெடி பார்த்த திருப்தி ஏற்படுகிறது.ஒவ்வொரு மொழிக்கும் அதற்கே உரிய சில காமெடி Phrase கள் இருக்கின்றன போலும்.அவற்றை மொழி பெயர்த்தால் அவற்றின் சுவாரஸ்யம் வடிகட்டப்பட்டு விடுகிறது. 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்''ஏன் இந்த கொலை வெறி' 'வந்துட்டான்யா வந்துட்டான்' 'நீங்க வெறும் தாஸா லாடு லபக்கு தாஸா?' 'மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு' -இவையெல்லாம் தமிழுக்கே உரிய வெளிப்படுத்தல்கள். அப்படியே மொழிபெயர்த்தால் நன்றாக இருக்காது. "Son in law fixed the Wedge " என்றா சொல்ல முடியும்? ;)

மூன்று
=======

தமிழின் 'அணி'களைப் பற்றி அவ்வப்போது சொல்லி வருகிறோம். இன்று அந்த வரிசையில் 'இல்பொருள் உவமை அணி'...

உலகத்தில் இல்லாத ஒரு பொருளை, அல்லது இயற்கையாக நடக்காத ஒரு நிகழ்ச்சியை செய்யுளில் புகுத்தி எழுதுவது இ.பொ.உ.அணி என்று சொல்லப்படும்.

உதாரணமாக ஆண்டாளின்

'திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்' என்ற வரிகள். கம்பரின் 'இருக்கை வேழத்து யானை!'

'சந்திரனும் சூரியனும் பக்கத்து பக்கத்தில் உதித்தது போன்ற உன் (அழகிய) கண்களை ' ...இது நடக்காத ஒன்று

சினிமா உதாரணம் வேண்டும் என்றால் நிறைய இருக்கிறது. 'ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் கண்ணே' அப்புறம்

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
'

பாய்ஸ் படத்தின் 'அலை அலை ' பாட்டில் இந்த அணி நிறைய வரும்.

பாதங்கள் இரண்டும் பறவையானது!
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது!
புருவங்கள் இறங்கி மீசை ஆனது

சரி. லஞ்சம் வாங்காத அரசாங்க அதிகாரி, நேர்மையான அரசியல் வாதி, தானம் செய்யும் பணக்காரர், பேரனும் தாத்தாவும் ஒரே வீட்டில் இருத்தல், ரேஷன் கடையில் சுத்தமான அரிசி, காலையில் கூட்டம் இல்லாத நகர பஸ் , சுத்தமான (தமிழ்நாட்டில்) பஸ் நிலையம், பிச்சைக்காரர்கள் இல்லாத கோயில் இவை எல்லாம் கூடிய சீக்கிரம் இல்பொருள் உவமையில் வந்து விடும் போலிருக்கிறது.

நான்கு

======

இதுவும்
இலக்கியம் தான். பிடிக்கவில்லை என்றால் ஓஷோ ஜோக் (ஏழு) படித்து விட்டு ப்ளாக்கை மூடி விடவும். திருப்பாவை இன்று தமிழ்ப்பதிவுலகில் பெரிதும் விவாதிக்கப்படுகிறது, திருவெம்பாவை (திருப்பள்ளி எழுச்சி) அந்த அளவுக்குப் பிரபலமாக இல்லை. திருப்பாவை ,ஒரு பெண் பாடியது என்பதால் கொஞ்சம் 'ஸ்பெஷல்' போலும்!ஆண்டாள் மழை பொழிவதை விவரிக்கும் 'ஆழி மழைக்கண்ணா' பாடலைப் போன்று மாணிக்கவாசகரும் 'முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்' என்று ஒரு பாட்டுப் பாடுகிறார்: அதன் பொருள்: "இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல ,மழையே நீ விடாமல் பொழிவாயாக"

நான்கு.ஒன்று
=============
எனக்குப் பிடித்த பொன் மொழி

There are as many reasons to be happy as there are to be sad.

தமிழிலும் :

சோகமாக இருப்பதற்கு உங்களுக்கு எத்தனை காரணங்கள் இருக்கின்றனவோ அதே அளவு காரணங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் இருக்கின்றன.


ஐந்து
=====
இன்னிசை
வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு
தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர்
அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை
சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

' அடுத்தவர் பார்ப்பாரோ , நம்மைப் பற்றி அடுத்தவர் என்ன நினைப்பார்? '- கேசுகளில் நானும் அடக்கம். எனவே கோயிலுக்குப் போகும் போது ஓவராக பக்திப் பரவசத்தைக் காட்டாமல் நார்மலாக சாமி கும்பிடுவது தான் என் பாலிசி. ஆனால் எல்லாரும் நம்மைப் போல இருப்பார்களா என்ன? கோயிலில் சில பேர் சாமி வந்து ஆடுவார்கள். சில பேர் சாஸ்டாங்கமாக விழுந்து சேவிப்பார்கள். சில பேர் சற்று உரக்கமாகவே ஏதோ முணுமுணுப்பார்கள். சில பேர் (பெரும்பாலும் அபஸ்வரமாக) பாடுவார்கள்.(சரி பக்தி தானே முக்கியம்) .சிலர் தலை மேல் கை வைத்து கும்பிடுவார்கள்.சில பேர் பிரகாரத்தில் உருளுவார்கள்.சில பேர் அழுவார்கள்! சரி இப்படி ஏதாவது Extra -ordinary யாக செய்தால் தான் உள்ளே இருக்கும் இறைவன் There's something crazy out there என்று நம் பக்கம் பார்ப்பான்? சரி இந்த ஆள் ஏதோ செய்கிறானே பார்க்கலாம் என்று கடைக்கண் பார்வையை வீசுவான்? இவர்களுக்கு மத்தியில் நான் எதுவுமே செய்யாமல் மன் மோகன் சிங் போல சிவனே என்று நிற்கிறேனே? இந்த களேபரங்களுக்கு இடையில் என்னையும் நீ ஒரு சில கணங்கள் பார்க்கக்கூடாதா? என்று இறைஞ்சும் பாடல்.எனக்கு மிகவும் பிடித்த பாடல். எந்தக் கோயிலுக்கு சென்றாலும் அந்தந்த சாமிக்கு ஏற்ற மாதிரி ஆறாவது வரியை மட்டும் மாற்றிப் பாடி விடலாம்.
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! அல்லது திருப்பாற்கடலுறை எம்பெருமானே!


ஆறு
=====
http://graphjam.memebase.com/ இல் இருந்து இப்போது ஒரு படம் ....




ஏழு
===

ஓஷோ ஜோக்.

கல்யாணத்தில் ஒருத்தன் நடுங்கிக் கொண்டிருந்தான் (வேறு யார் மாப்பிள்ளை தான்!)

பக்கத்தில் இருந்த ஒரு நண்பன் 'ஏன் நடுங்குகிறாய்?' என்று கேட்டான்.

அவன் " திருமணம் , திருமண வாழ்க்கை இதைப் பற்றி எல்லாம் எதுவுமே எனக்குத் தெரியாது. இது தான் முதல்முறை அல்லவா? அதான் நடுங்குகிறேன்" என்றான்

அதற்கு நண்பன் "சரி தான். தெரியாத வரை நல்லது. தெரிந்திருந்தால் இதை விட இன்னும் பயங்கரமாக நடுங்கிக் கொண்டிருப்பாய்"

சமுத்ரா

Thursday, January 5, 2012

கலைடாஸ்கோப்-49

****************************250- ஆவது பதிவு! ************************************

லைடாஸ்கோப்
-49 உங்களை வரவேற்கிறது

ஒன்று
======



'குரு' என்ற ஸ்தானத்துக்கு மிகவும் முக்கியத்துவம் தரக்கூடியது சீக்கிய மதம். என்ன தான் அம்மாவும் அப்பாவும் அன்பைப் பொழிந்து ஒரு குழந்தையை வளர்த்தாலும் அவனுக்கு கல்வி கற்றுத் தந்து வெளியுலகுக்கு அறிமுகம் செய்வது குருதான். குரு வெளி உலகை மட்டும் அறிமுகம் செய்பவர் அல்ல. (Teacher ) உள் உலகையும் நமக்கு அறிமுகம் செய்பவர் (master )


சீக்கிய மதம் குருநானக் (1469 – 1539 ) என்பவரால் நிறுவப்பட்டது என்று நமக்கெல்லாம் தெரியும்.மற்ற மதங்களுடன் ஒப்பிடும் போது இது கொஞ்சம் இளமையான ,இக்காலத்திய மதம்! சீக்கிய மதம் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களின் கலப்பு என்றும் சொல்வார்கள்.முதலில் அது ஒரு மதமாக (Religion ) கருதப்படாமல் கடவுளை அடையும் ஒரு மார்க்கமாக ( way ) கருதப்பட்டது. குருநானக் ஏற்படுத்திய சீக்கிய மார்க்கத்தில் தலைப்பாகை, தாடி, கத்தி எல்லாம் இல்லை. அவை எல்லாம் பின்னால் வந்தவை. சரி. ஓஷோ குருநானக் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

"ஒரு மழைக்கால இரவு. எங்கும் இருட்டு. நடுசாமத்தை தாண்டிவிட்டது நேரம். நானக் இன்னும் தூங்காமல் பக்திப்பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்.பக்கத்து அறையில் இருந்த அவரது தாய், 'நானக், நேரம் ஆகி விட்டது, பாட்டை முடித்து விட்டு தூங்கு' என்கிறார். கொஞ்ச நேரம் பாட்டை நிறுத்திய நானக், எங்கோ தொலைவில் ஒரு குருவி 'குவிக் குவிக்' என்று கூவுவதைக் கேட்டு விட்டு மீண்டும் பாடத் தொடங்கினார். தன் தாயாரைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார், "அம்மா, அந்தக் குருவி இந்த நேரத்திலும் தன் துணையை அழைக்கிறது;நானும் என் துணையை (கடவுளை)அழைக்க வேண்டும். குருவியின் துணை அருகிலேயே, பக்கத்து மரத்திலேயே இருக்கலாம். ஆனால் என் துணையோ மிக தூரத்தில் இருக்கிறது. பிறவி பிறவிகளாக அவனை அழைத்தாலும் அது போதாது.எனவே நான் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை"- நானக் மனமுருகிப் பாடுவதன் மூலமாகவே இறைவனை அடைந்தவர். தியானம், யோகம்,சடங்குகள் இவை நானக்கின் வழிமுறைகள் அல்ல"

சீக்கிய மதத்தை ஒரு வீர மதமாக, சீக்கியர்களை குருவின் (கடவுளின்) படை வீரர்களாக சித்தரித்தவர் குரு கோவிந்த் சிங். 'தெய்வீக வீரர்கள்'! தன்னை கடவுளின் நம்பிக்கைக்கு உரிய ஒரு வீரனாக பாவித்துக் கொள்ளும் தன்மை இந்து மதத்திலும் உண்டு. 'ராமா, காமக் குரோதங்களை நிலைகுலைய வைக்கும் வீரனாக, இராமபக்தியின் அனுபவத்தைக் கேடயமாகவும், ராம பக்தியை முத்திரையாகவும், ராம நாமத்தை வாளாகவும் ஏந்திய வீரனாக என்னை மாற்று' என்று கேட்பவர் யார் தெரியுமா ? இசை மூவரில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகள் (பண்டு ரீதி கொலு ஈயவய்ய ராமா)

சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் சீக்கிய மதத்தைப் பற்றியும், பொற்கோயிலில் தினமும் நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றியும் விரிவாகக் காட்டினார்கள்.அதில் சொன்ன ஒரு விஷயம் என்னை மிகவும் கவர்ந்தது. மற்ற கோயில்களில் கடவுளின் சந்நிதி கொஞ்சம் மேடாக , படிகளில் ஏறிச் செல்வதாக உயரமான இடத்தில் இருக்கும். ஆனால் சீக்கிய குருத்துவாராக்களில் கொஞ்சம் கீழாக படிகளில் இறங்கிச் சென்று தான் மூலஸ்தானத்திற்கு செல்ல வேண்டும். மனிதன் எத்தனை பெரியவனாக இருந்தாலும் கடவுளை நோக்கி செல்லும் போது ஒரு சாதாரணனாக கீழே இறங்கி வரவேண்டும் என்பதை இது காட்டுகிறதாம்.

இரண்டு
=======

* இன்று ,ஜனவரி ஐந்து,நம் அப்பாவும் அம்மாவும் மிக அருகில் நெருங்கி வரும் நாளாகும்.yes , பூமி சூரியனுக்கு (வருடத்தில்)மிக அருகில் வரும் நாள். (
perihelion ) கிட்டத்தட்ட முப்பது லட்சம் மைல்கள் கிட்ட வருகிறது.அப்படி வந்தாலும் ஏன் இன்னும் குளிர்காலமாக இருக்கிறது என்று உங்கள் சயின்ஸ் டீச்சரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். ஜூன் மாதம் மீண்டும் இருவரும் போபித்துக் கொண்டு தூரப் போய் விடுகிறார்கள்.

** பாம்புகள் பால் குடிக்காது, மாணிக்கத்தைக் கக்காது, இணையைக் கொன்றவனை டான்ஸ் ஆடி விட்டு வந்து பலி(ழி)வாங்காது என்பவை இப்போது நிரூபிக்கப்பட்ட உண்மைகள். என்ன தான் சொன்னாலும் நாகங்கள் பற்றிய கதைகளும் , சினிமாக்களும் இன்னும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன. சன். டி.வியில் வந்து கொண்டிருந்த 'நாகம்மா' தொடரை ஏன் பாதியில் நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை.நாகவனம், மாணிக்கம், தங்கச் சிலை, நாககன்னி, சித்தர்கள் என்ற ரேஞ்சில் செல்லும் இந்திரா சௌந்தர ராஜன் கதை. நன்றாகத் தான் இருந்தது.

*** நாகம்மாவில் ஒரு சித்தமருத்துவர் சொல்லுவார் ,பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் கிட்டத்தட்ட விஷம் மாதிரி என்று. பயணங்களின் போது எவ்வளவு சுலபமாக நாம் தண்ணீர் பாட்டில்களை வாங்கி மடக் மடக் என்று குடித்து விடுகிறோம்! ஆனால் நமக்கும் வேறு வழி இல்லை. இன்றைய அவசர நகரங்களில் பயணங்களின் போது நதிகள், அருவிகள் இவற்றைத் தேடிக்கொண்டு போகவா முடியும்?

மூன்று
======

ஹெவியாக மத்தியான சாப்பாடு சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் கூட தூங்காதவர்கள் (கண் அசராதவர்கள்) மனிதர்களே அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு! ஆபீசில் என்ன தான் தலைபோகிற வேலை இருந்தாலும் தலை கவிழ்ந்து ஒரு பதினைந்து நிமிடம் 'குட்டித் தூக்கம்' போடுவது வழக்கம் ஆகி விட்டது. நிஜமான தூக்கத்தை விட இந்த மாதிரியான 'குட்டித் தூக்கங்கள் ' உடலுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். குட்டித் தூக்கங்கள் உடலையும் உணர்வையும் Refresh செய்து புத்துணர்வைத் தருமாம்.ஆபீசில் நண்பர் ஒருவரை நீங்கள் குட்டித் தூக்கம் போடமாட்டீர்களா என்று கேட்டதற்கு 'போடலாம் தான்..ஆனால் குட்டி தான் கிடைக்க மாட்டேன் என்கிறது' என்றார்.PLAYBOY !

நான்கு
======

* ஆபீசில் அடுத்த வாரம் 'கொடகு' டூர் கூட்டிப் போகிறேன் என்றார்கள். வெள்ளிக்கிழமை பதிமூன்றாம் தேதியாம் ! (Friday the 13th ). ட்ரெக்கிங் சென்று நடுக்காட்டில் கூடாரம் போட்டு தங்குகிறார்கள் போலிருக்கிறது. நான் கண்டிப்பாக வர மாட்டேன் என்று சொல்லி விட்டேன். எதற்கு வம்பு? கூடாரம் போட்டு குஜால் செய்து கொண்டிருக்கும் போது காட்டில் வாழும்
ஏதோ ஒரு சைக்கோவோ, கன்னிபாலோ கையில் கோடாரியுடன் வந்து விட்டால்? நீங்களும் எதற்கும் ஒரு Safety க்கு அடுத்த வெள்ளிக்கிழமை ஆபீசுக்கு லீவ் போட்டு விட்டு டி.வி.சீரியல்களை ஒன்று விடாமல் பார்க்கவும். [சும்மா சொன்னேன்..பயம் கியம் எல்லாம் இல்லை. அடுத்த வெள்ளிக்கிழமை தியாகராஜர் ஆராதனை. நேரில் தான் போக முடிவதில்லை. டி.வி.யிலாவது ப.ர.கிருதிகளைக் கேட்டு மகிழலாம் என்று]

** டி.வி யில் வரும் 'சொல்வதெல்லாம் உண்மை' 'கதையல்ல நிஜம்' போன்ற நிகழ்ச்சிகள் பார்க்க எரிச்சலாக இருக்கின்றன. நாலு சுவர்களுக்குள் நடக்கும் விஷயங்களை ஊர் அறிய உலகம் அறிய தண்டோரா போடுகிறார்கள். குடுமியைப் பிடிக்காத குறையாக சண்டை போட்டுக் கொள்கிறார்கள். பெரும்பாலானவை கணவன் மனைவி பிரச்சினை கேசுகளாக வருகின்றன. சின்னவீடு, பெரியவீடு பிரச்சினைகள்! கொடுமை என்ன என்றால் பிஞ்சுக் குழந்தைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டே 'நீ உருப்பட மாட்டே' 'நாசமாப் போ' என்றெல்லாம் குழாயடிச் சண்டை போடுகிறார்கள். அந்தக் குழந்தைகள் பாவம் சுற்றிலும் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. இது உண்மையான சண்டையா, இது மாதிரி டி.வி.யில் ஒளிபரப்புவதால் பிரச்சினை சுலபமாகத் தீர்ந்து விடுமா என்று தெரியவில்லை. அல்லது சேனலின் டி.ஆர்.பி யோ ஏதோ ஒரு ரேட்டிங் சொல்கிறார்களே, அது உயர்வதற்கு அவர்களே செய்யும் பொய் நாடகமா தெரியவில்லை.

ஐந்து
=====

இவருக்கு தான் இந்த மாதத்தின் Employee of the month அவார்ட் -டாம்!






ஆறு
====
ஓஷோ ஜோக்.

நோயாளி ஒருவரைப் பார்த்து டாக்டர்: " சாரி , நீங்கள் இன்னும் ஆறுமாசம் தான் உயிரோடு இருப்பீர்கள்".

நோயாளி 'ஆயுளை நீட்டிக்க வழியே இல்லையா டாக்டர்?'

டாக்டர்: 'இந்த ஆறு மாதம் சிகரெட் வேண்டாம், குடிக்க வேண்டாம், உடல் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம், போதை, பாஸ்ட் புட் எதுவும் வேண்டாம்.எல்லாவற்றையும் ஒரேயடியாக விட்டு விடுங்கள்'

'இப்படி செய்தால் நீண்டநாள் வாழும் சாத்தியம் அதிகரிக்குமா டாக்டர்' ?

டாக்டர் 'அது எனக்குத் தெரியாது ஆனால் இந்த ஆறு மாசமே உங்களுக்கு ரொம்ப நீண்டதா தெரியும்'.

சமுத்ரா



Wednesday, January 4, 2012

அணு அண்டம் அறிவியல் -57

அணு அண்டம் அறிவியல் -57 உங்களை வரவேற்கிறது

என் இனிய இயந்திரா!


மனிதன் ரோபோட்டுகளை இதுவரை தொழிற்சாலைகளில் தான் பயன்படுத்தி வந்திருக்கிறான். பொருட்களை எடுத்து நகரும் பெல்ட்டில் வைக்க, பெல்டில் இருந்து எடுத்து அவற்றை சீராக Pack செய்ய, உலோகங்களை கனகச்சிதமாக வெட்ட, ஹோட்டல்களில் மெஷின் வாய்சில் ஹலோ சொல்லி இட்லிவடை பரிமாற என்று.ஒரே வேலையை சலிப்பில்லாமல் திரும்ப திரும்ப செய்ய, அதே சமயம் தவறுகள் நேராமல் துல்லியமாக செய்ய மனிதன் Manufacturing process களில்
ரோபோட்டுகளை உபயோகிக்கிறான். ரோபோ அறுவை சிகிச்சை கூட செய்கிறதாம்!

ஆனால் இந்த 'சிந்திக்கும் ரோபோ'வை மனிதன் ஏன் செய்ய நினைக்க வேண்டும்? இருக்கும் கவிர்கள் போதாதா? ரோபோவின் கவிதையை வேறு சினிமாக்களில் கேட்க வேண்டுமா? என்று கேட்டால் மனிதன் சிந்திக்கும் ரோபோவை செய்ய நினைப்பது அவன் உள்மனதின் சாசுவதமாய் வாழும் ஆசையின் வெளிப்பாடு எனலாம். ஒரு மனிதன் தன் பிள்ளைகள், தன் சந்ததிகள் மூலமாக அழிவில்லாமல் வாழ நினைப்பது போல தன் படைப்பான ரோபோவின் மூலம் தன் பெயர் பிரபஞ்சம்
உள்ளவரை நிலைத்து நிற்காதா என்று ஏங்குகிறான். பிரபஞ்சத்தின் கால அளவோடு ஒப்பிடும் போது மனிதனின் , மனித இனத்தின் கால அளவு அற்பமானது.

நளினி தல கத ஜலம் அதி தரலம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம்.

-தாமரை இலை மேல் விழுந்த நீர்த்துளி போல வாழ்க்கை அநித்தியமானது - பஜகோவிந்தம்.

பிரபஞ்சம் ஒரு கடல் என்றால் அதன் சூரியன்கள் குளங்கள். குளத்தில் இருக்கும் தாமரை தான் சூரியனின் கோள்கள். தாமரை இதழ் நீர் போல இன்னும் அற்பமானது அதில் மனித வாழ்வு.

பூமியின் வெப்பநிலை கொஞ்சம் மாறினாலோ , காந்தத் துருவங்கள் கொஞ்சம் இடம் மாறினாலோ, ஓசோன் படலம் கொஞ்சம் கிழிந்து போனாலோ ஒரு பிரம்மாண்ட எரிகல் தாக்கினாலோ (இது எல்லாம் இந்த 2012 ஆம் வருடம் நடக்கும் என்கிறார்கள்!) மனிதன் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய் விடுவான். மனிதனின் உடல் மிகவும் Sensitive ! பருவநிலை கொஞ்சம்
மாறினாலே 'லொக் லொக்' என்று இரும ஆரம்பித்து விடுகிறான். இப்போது தான் தட்டுத் தடுமாறி நிலாவுக்கு சென்று வந்துள்ளான். ஆகவே, அதீதமான தட்பவெப்பத்தையும் தாக்குப்பிடிக்கக்கூடிய, உணவு நீர் காற்று போன்ற உயிரியல் தேவைகளை நம்பியிராத ஒரு சிந்திக்கும் இயந்திரம் ஒன்றை செய்ய முடியாதா என்று மனிதன் மெனக்கெடுகிறான். அப்படிப்பட்ட மெஷின் ஒன்று செய்யப்பட்டால் அது ஆத்மா போல நெருப்பில் வேகாமல் நீரில் நனையாமல் மனிதனின் காலம் முடிந்த பின்னும் பூமியில் வாழும். காற்றே இல்லாத கிரகங்களில் அனாயாசமாகப் பயணித்து ஆராய்சிகள் செய்யும். (ஏன் மனிதனின் விதையை எடுத்துக் கொண்டு போய் வாழ்க்கை சாத்தியமாகும் சில பல கிரகங்களில் விதைக்கும்!)

ஹீரோ இருந்தால் வில்லனும் இருப்பது போல இந்த 'சிந்திக்கும்' இயந்திரங்களால் ஆபத்து வராதா என்றால் ரோபோடிக்ஸ் நிபுணர்கள் " வரும், கண்டிப்பாக வரும், ஆனால் இருக்கவே இருக்கிறது ரோபோவின் PLUG ..அதைப் பிடுங்கி விட்டால் போகிறது " என்கிறார்கள். வேற்று கிரகங்களில் மனிதனைப் போன்ற அறிவாளி உயிர்களைத் தேடும் ஆர்வலர்கள்(SETI) ஒரு விஷயத்தால் மிகவும் DISCOURAGE ஆகிறார்கள். அதாவது அப்படி ஒரு இனம் இருந்தால் அது விரைவிலேயே சண்டை போட்டுக்கொண்டு (அணுகுண்டு வீசி) தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் அல்லது அந்த இனம் கண்டுபிடித்த 'சிந்திக்கும்' இயந்திரங்கள் அவர்களை அடியோடு அழித்து விடும் என்று எடக்குமடக்காக யோசிக்கும் ஒரு கொள்கை!

வரம் தந்தவன் தலையிலேயே கைவைக்கும் பகாசுரன் போல!




எது எப்படியோ மெஷின்களை சிந்திக்க வைப்பது எப்படி என்ற இயற்பியலை மட்டும் இங்கு (சுருக்கமாக)ஆராய்வோம். AI என்பது ஒரு பெரிய சமுத்திரம்,.கம்பெனி லைப்ரரியில் இருந்து AI என்ற பெயர் கொண்ட ஒரு குண்டு புக்கை ஆர்வக்கோளாறில் எடுத்து வந்தேன்.(இதை வைத்தே ௮-௮-௮ வில் இன்னும் நாலு அத்தியாயங்கள் தேற்றி விடலாம் என்று)முதல் வரி ஒன்று தான் (ஓரளவு) புரிந்தது. அப்படியே மூடி வைத்து விட்டு இந்த வார விகடனைப் படிக்க ஆரம்பித்தேன்.

ஓகே. ரோபோ செய்ய இரண்டு அணுகுமுறைகள் இருக்கின்றன என்று சொன்னோம்.

மேலிருந்து கீழ் அணுகுமுறை (TOP DOWN APPROACH )

ஒரு வீட்டை முதலில் மேலோட்டமாக முழுவதும் கட்டி முடித்து விடுவது. பின்னர் நிறுத்தி நிதானமாக வீட்டின் பகுதிகளை திருத்துவது. அலங்கரிப்பது!

ரோபோவிற்கான அத்தனை விஷயங்களையும் ஒரு சி.டி யில் ப்ரோக்ராம் செய்து விட்டு அதை அதன் உடலில் நுழைத்தால் அது உடனே 'உன் உதடுகள் படுத்திருக்கும் வரிக்குதிரை;கண்கள் காண்பவர்கள் காணாமல் போகும் பெர்முடா முக்கோணம் ;நெற்றி நறுக்கி வைத்த நிலாத்துண்டு என்று கவிதை பாடும் என்று நம்பும் Over confidence !ஒரு கணினியின் Operating System -தை ஒரு சி.டி யில் தருவது போல! முதலில் ஒன்றுமே செய்யாமல் இருக்கும் கணினி OS ஐ நுழைத்ததும் அட்டகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கிறதே அது போல்.


ரோபோட்டுகளில் ஒரு கஷ்டம் என்ன என்றால் அவற்றின் Pattern recognition ரொம்பவே மோசம். வீடு முழுவதும் சாமான் நிரம்பி இருந்தாலும் ஒரு பூனை, பூனையை விடுங்கள் ஒரு எலி,எலியை விடுங்கள் ஒரு கரப்பான்பூச்சி எவ்வளவு அழகாக அவற்றினூடே Navigate செய்து கொண்டு போகிறது!அதன் மூளை ஒரு மிளகு சைஸ் இருக்குமா? ஆனால் இந்த ரோபோட்டுகள் தங்கள் பாதையில் வைக்கப்படும் பொருட்களை உணர்ந்து கொள்ள கறுப்பு பூனையை இருட்டில் தேடும் குருடன் போல மிகவும் சிரமப்படுகின்றன. மனிதன் ஒரு (புதிய) அறை அல்லது வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் செய்யும் காரியம் கண்களால் அந்த அறை முழுவதையும் 3D ஸ்கேன் செய்வது.(லோக்கல் பாஷையில் 'நோட்டம் விடுவது')இது மேஜை ,இது நாற்காலி, இது சுவர், இது ஃபிகர் என்று. ஆனால் இந்த விஷயத்தில் ரோபோட்டுகள் மிகவும் மந்தம். அதிக நேரம் எடுத்துக் கொண்டு கடைசியில் ஒரு குத்துமதிப்பான 2D ஸ்கேன் மட்டுமே செய்கிறது.அதுவும் வட்டம் சதுரம் போன்ற ஒழுங்கான வடிவங்களை
மட்டுமே. ஒழுங்கற்ற வடிவம் கொண்ட பொருட்களை அதனால் ஸ்கேன் செய்ய முடிவதில்லை. ஒரு பொருளின் 2D இமேஜை ரோபோட் புள்ளிகள் மட்டும் கோடுகளாக வரைந்து அறிந்து கொல்வதற்கு மிக அதிக அளவில் CPU power என்று சொல்லப்படும் கணினி ஆற்றல் செலவாகிறது. நாம் ஒரு அறைக்குள் நுழைந்ததும் அதன் கட்டமைப்பை கண்ணிமைக்கும் நேரத்தில் அறிந்து கொள்கிறோம். இதற்கு நம் மூளையில் கோடிக்கணக்கான நியூரான்கள் பின்னணியில் இயங்குகின்றன.இது ஏன் நமக்குத் தெரிவதில்லை என்றால் பரிணாமத்தை காரணம் காட்டுகிறார்கள். மனிதனின் ஆரம்ப நாட்களில் அவனுக்கு நிறைய ஆபத்துகள் இருந்தது.ஒரு காட்டில் கரடி துரத்தும் போது எதிரே தடை எந்த தூரத்தில் இருக்கிறது, எப்படி Navigate செய்வது ,சைன் தீட்டா காஸ் தீட்டா என்றெல்லாம் விழிப்புணர்வுடன் கணக்குப் போட்டுக் கொண்டிருக்க முடியாது.Unconscious ஆக அந்த கணக்கிடுதல் நடக்க வேண்டும்.

இன்னொரு சிக்கல் பொருட்களைக் கையாளுவது. எந்தப் பொருளுக்கு எத்தனை அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது. இன்னும் எளிதாக சொன்னால் ரோபோட்களால் கடையில் தக்காளி பொறுக்கி வாங்க முடியாது.பெரும்பாலான தக்காளிகளை கையால் நசுக்கியே நாசம் செய்து விடும்!

ஒரு பக்கத்தில் மனிதனின் 'அனிச்சைச் செயல்' என்று சொல்லப்படும் , மனிதனின் unconscious தளத்தில் இயங்கும் அறிவு. சூடு பட்டால் உடனே கையை எடுத்துக் கொள்வது, எதிரே வருபவர் மீது மோதிக்கொள்ளாமல் நடப்பது போன்ற அறிவை ரோபோக்களுக்கு தர வேண்டி இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் பகுத்தறிவு என்று சொல்லப்படும் யோசித்து அறியும் விஷயங்களையும் தரவேண்டி இருக்கிறது.

அடுத்த தலைவலி Common sense ! தர்க்க ரீதியான அறிவு. இதை நம்மால் கணித சமன்பாடுகளாக மாற்றி ஒரு இயந்திரத்துக்கு அளிக்க முடியாது.இரண்டும் இரண்டும் நாலு என்பதை ஒரு ரோபோவுக்கு சுலபமாக சொல்லிக் கொடுத்து விடலாம். ஆனால் இன்றைக்கு அப்புறம் தான் நாளை வரும் என்று சொல்லிக் கொடுக்க முடியாது. குழந்தைகள் முதலில் நான் நாளைக்கு வந்தேன் என்று தாறுமாறாகப் பேசும். பின்னர் அனுபவத்தில் காலங்களை அறிந்து கொண்டு சரியாகப் பேசும். அதே போல ஒரு ரோபோ செய்யாது.தொட்டி நிரம்பி விட்டால் நீரை நிறுத்தி விட வேண்டும் என்று எந்த 'சென்சர்' களும் இல்லாமல் ரோபோக்களுக்குத் தெரியாது.

TOP DOWN அணுகுமுறை இந்தக் காரணங்களுக்காக இப்போது ai யில் கிட்டத்தட்ட கைவிடப்பட்டு விட்டது. ஏனென்றால் ஒரு ரோபோட்டுக்கு உள்ளிடுவதற்கு முடிவில்லாத தகவல்கள் கொடுக்க வேண்டி இருக்கிறது.தக்காளியைப் பொறுக்கி எடுக்க மட்டுமே அதற்கு கோடிக்கணக்கில் வரிகள் உடைய நிரல்களை (program ) எழுத வேண்டுமாம்.அடுத்த முறை மார்க்கெட்டில் தக்காளி பொறுக்கி எடுக்கும் போது சலித்துக் கொள்ளாமல் நம் மூளையை எண்ணி ஒரு நிமிடம் வியக்கவும்.


அடுத்து கீழிருந்து மேல் அணுகுமுறை (BOTTOM UP APPROACH )

ஒரு வீட்டை அஸ்திவாரம், சுவர் , கூரை என்று மெல்ல மெல்ல எழுப்புவது. பாடகர் ஒருவர் ராக ஆலாபனையின் போது உடனே முதலிலேயே அதன் ஸ்வரூபத்தைக் காட்டாமல் அதை மெல்ல மெல்ல வளர்ப்பது போல.சில பாடகர்கள் ஆர்.டி.பி பாடும்போது முதல் அரைமணி நேரத்துக்கு அது என்ன ராகம் என்றே கேட்பவர்களுக்கு விளங்காது!(சில பேர் பாடி முடித்ததும் கூட என்ன ராகம் என்று விளங்காது என்பது வேறு விஷயம்)

குழந்தைகள் இந்த உலகத்துக்கு வரும் போது எல்லாம் தெரிந்த எல்லப்ப செட்டிகளாக வருவதில்லை. ஒரு அஸ்திவாரத்தை மட்டுமே தங்களுடன் கொண்டு வருகிறார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களிடம் இருந்தும் சூழ்நிலைகளில் இருந்தும் கற்றுக் கொள்கிறார்கள்.அதே போல ரோபோட்டுகளுக்கும் செய்யலாம் என்கின்றனர் சிலர். எடுத்ததுமே பி.ஹெச்.டி. கொடுத்து விடாமல் நிதானமாக ப்ரி கே.ஜி.யில் இருந்து வரட்டும் ABCD சரியாக சொல்லத் தெரியாமல் டீச்சரிடம் உதை வாங்கட்டும் என்று விட்டுவிடுவது.

குழந்தைகள் நடக்கும் போது எதன் மேலாவது இடித்துக் கொள்ளும்.நூறு முறை கீழே விழும். பின்பு ஸ்டெடியாக நடப்பது எப்படி என்று கற்றுக் கொள்ளும். அதே போல ரோபோக்கள் போய் மோதிக்கொள்ளட்டும் என்கிறார்கள். பின்னர் தட்டுத் தடுமாறி எழுந்து ஏன் மோதிக்கொண்டோம் என்று அலசி தன் நிரல்களை தானே மாற்றிக் கொள்ளட்டும்.TRIAL AND ERROR முறைப்படி
முன்னேறி நடக்கட்டும் என்கிறார்கள். ஆனால் இப்படி கற்றுக் கொள்ளும் படி வடிவமைக்கப்பட்ட COG என்ற ஒரு bottom up ரோபோ, ரொம்பவே படுத்தியது. திரும்பத் திரும்ப அதே தவறுகளையே மக்கு மாதிரி செய்தது.ஒரு இரண்டு வயதுக் குழந்தை பத்து நிமிடத்தில் கற்றுக் கொள்ளும் விஷயத்தை இது பத்து நாள் ஆன போதும் கற்றுக் கொள்ளாமல் தடுமாறியது. அதாவது ஒரு ரோபோட்டுக்கு மனிதனால் அதிகபட்சம் நூறு செயற்கை நியூரான்களை இந்த அணுகுமுறை மூலம் முதலில் வெற்றிகரமாக பொருத்த முடியும். மனித மூளையில் இருக்கும் நியூரான்கள் எத்தனை தெரியுமா?100 பில்லியன் நியூரான்கள்!

சரி. அதிக நேரம் எடுக்காமல் இந்த டாப்பிக்கை முடிவுக்கு கொண்டு வருவோம்.



செயற்கை அறிவு சாத்தியமே இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. ஒரு தேனீயின் அறிவு உள்ள ரோபோவை உருவாக்கவே இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும் என்கிறார்கள். இதற்கு ஓரளவு பக்கத்தில் வரமுடியும் அவ்வளவு தான் . இதற்கு நாம் அறிவு என்பதை Electronic ரீதியாக ஆக சிந்திக்காமல் biological ஆக சிந்திக்கப்பழக வேண்டும். கம்யூட்டர் ஒரு தகவலை சேமித்து வைப்பதற்கும் மூளை அதே தகவலை சேமித்து வைப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நம் மூளையில் டையோடுகளோ, லாஜிக் கேட்டுகளோ, Capacitor களோ இல்லை. மேலும் இந்த A .I என்பதை வெறும் இயற்பியல் துறையாகப் பார்க்காமல் இதை ஆன்மிகம், மனோவியல், தத்துவம், மருத்துவம், இவற்றின் துணையோடு அணுக வேண்டும். இன்னும் ஏகப்பட்ட ஆராய்சிகள் இந்தத் துறையில் தேவையாய் இருக்கிறது.

இரும்பிலே இருதயம் முளைப்பது இருக்கட்டும்.முதலில் மூளை முளைக்கட்டும்.

சமுத்ரா