இந்த வலையில் தேடவும்

Saturday, October 29, 2011

ஏழாம் அறிவு- போதிதர்மா இவர்களை மன்னியும்!

பொதுவாக நான் இங்கே சினிமா விமர்சனங்களை எழுதுவது இல்லை. சமுத்ராவின் பாலிசி என்ன என்றால் எவ்வளவோ பணம் செலவழித்து பலபேர் இரவு பகலாக உழைத்து வெளிவரும் சினிமா ஒன்றை நூறு ரூபாய் செலவு செய்து (ஐஸ் க்ரீமெல்லாம் சேர்த்து 150 ரூபாய்) பார்த்து விட்டு ஆபீசில் ஒசி இன்டர்நெட்டில் உட்கார்ந்து விமர்சனம் செய்வது கூடாது என்பதுதான் அது.

இருந்தாலும் இந்த விமர்சனத்தை எழுதுவது ஏன் என்றால் படம் வெளியாவதற்கு முன்னர் அவர்கள் கொடுத்த (கொஞ்சம் ஓவரான) பில்ட்-அப்.இந்தப் படத்தைப் பார்த்து விட்டு ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ் உணர்வு பொங்கி எழும்.தமிழனாகப் பிறந்ததற்கு பெருமைப்பட்டு நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை மேவி ரோட்டில் நடப்பார்கள் என்றெல்லாம் அதன் இயக்குனர் பேசிய வீர வசனங்கள். ஆனால் தியேட்டரில் படம் முடிந்து யாருக்கும் அப்படி அசம்பாவிதம் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.'டேய் மச்சான், அந்த ஃபிகரு என்னை திரும்பிப் பாத்திருச்சுடா' என்றும் 'என்ன லோடு இன்னும் வரவேயில்லை, நேத்தே சொன்னனே' என்றும் 'துணி காயப் போட்டிருந்தேன் எடுக்கவே இல்லை' என்றும் தான் படம் முடிந்து போதிதர்மர் அவதரித்த வீரமண்ணின் புதல்வர்கள் புதல்விகள் பேசிக் கொண்டு கலைந்து சென்றார்கள்.சினிமாக்களில் பிரச்சனை என்ன என்றால் என்னதான் மெனக்கெட்டாலும் ஒரு இரண்டரை மணிநேரத்தில் மக்கள் மனதில் அவ்வளவு எளிதாக
கருத்துகளைப் பதியவைத்து விட முடியாது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வராத தமிழ் உணர்வு வீரம் எல்லாம் ஒரு திரைப்படத்தைப் பார்த்தாலே வந்து விடும் என்று அதன் இயக்குனர் நினைப்பது அறியாமையா இல்லை வெறும் so -called வியாபார தந்திரமா தெரியவில்லை.

கடைசியில் மெசேஜ் சொல்லும் திரைப்படங்களை மக்கள் அவ்வளவாக வரவேற்பதில்லை.எதற்காக சினிமாவுக்கு வருகிறார்கள் என்றால் சில பேர் பொழுது போக்க, சில பேர் காதலியுடன் நெருக்கம் அதிகமாவதற்காக, சில பேர் ட்ரைலரை நம்பி ஏமாந்து போய், சில பேர் நண்பர்கள் அழைத்தார்கள் என்பதற்காக இப்படி ஒரு நாலைந்து வகைகளில் பிரித்து விடலாம். போதிதர்மரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சினிமா தேவையில்லை. இன்டர்நெட்டில் அவரைப் பற்றி ஏராளமான விஷயங்கள் காணக் கிடைக்கின்றன.சுருதி ஹாசன் சொல்வது போல ஓஷோ போதி தர்மரைப் பற்றி ஏராளமாகப் பேசியிருக்கிறார்.(Bodhidharma -
the greatest Zen master-Commentaries on the Teachings of the Messenger of Zen
from India to China
அதிலெல்லாம் போதியைப் பற்றி தெரிந்து கொண்டு புளகாங்கிதம் அடையாதவர்களுக்கு சினிமாவைப் பார்ப்பதால் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை.என்ன ஒரு ஆறுதல் என்றால் சூர்யா போதிதர்மராக நடித்ததால் இனிமேல் தமிழ்நாட்டில் போதிதர்மர் என்றால் பலபேருக்கு பரிச்சயம் இருக்கும். ஒரு மரியாதை இருக்கும். அவ்வளவு தான். அது அவர்கள் மூளையில் ஏறுமே தவிர அதன் இயக்குனர் எதிர்பார்ப்பது போல ரத்தத்தில் எல்லாம் கலக்காது.

மக்கள் திரைப்படங்களை விட ஒரு LIVELY EXAMPLE தேவை என்று நினைக்கிறார்கள்.நடிக்கும் போதிதர்மர் இல்லை ஒரு நடமாடும் போதிதர்மர்! பதினைந்து நிமிடம் சந்நியாசியாக நடித்து விட்டு பின்னர் ஹீரோயினுடன் ஈர உடையில் நடனமாடும் போதி தர்மர் அல்ல! படம் எடுத்து முடித்ததும் உண்மையான போதிதர்மர் செய்தது போல ஹீரோ எல்லாவற்றையும் துறந்து விட்டு துறவியாக போகத் தயாராக இருந்தால் மக்கள் உண்மையிலேயே ஏதோ விஷயம் இருக்கிறது என்று திரும்பிப் பார்ப்பார்கள். Otherwise it's just a film on the screen!

போதிதர்மரின் பெயரை வெறுமனே வியாபார ரீதியாக உபயோகித்திருக்கிறார்கள்.அவருக்கு ஒரு பெண் சந்நியாசி தீட்சை அளித்தது, அவர் ஒரு சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு வருடக்கணக்கில் தவம் செய்தது, தலையில் செருப்பை வைத்துக் கொண்டு நடந்தது இதையெல்லாம் இயக்குனர் ஏன் காட்டவில்லை என்று தெளிவாகவே நமக்குத் தெரியும்.தற்காப்புக் கலை, மருத்துவம், வசியம் இவையெல்லாம் போதிதர்மரின் இரண்டாம்பட்ச தொழில்கள். அவரின் கவனமெல்லாம் தன்னை அறியும் கலை தான். போதிதர்மரை ஏதோ கராத்தே மாஸ்டர் லெவலுக்கு காட்டியிருப்பது வேதனை.(ஒருவேளை படத்தில் வருவது மங்கி சங்கியோ?)

சரி விமர்சனம் என்று இறங்கியாகி விட்டது.முழுவதும் பார்த்து விடுவோம்.படத்தின் கதை இது தான்.கி.பி.ஆறாம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தின் இளவரசர் போதிதர்மர் சீனாவுக்குப் புறப்பட்டுப் போகிறார். அங்கே ஒரு கிராமத்தில் தங்கி அங்கே பரவி வரும் அம்மை போன்ற ஒரு வினோதமான மர்ம நோயில் இருந்து அந்த மக்களை மீட்கிறார். தான் கற்ற
தற்காப்புக் கலை மூலம் அவர்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கிறார்.தன் கலைகளை அங்கே வேரூன்றி விட்டு அங்கேயே இறந்தும் போகிறார்.

இனி நிகழ்காலம். சென்னை. சர்க்கஸ் ஒன்றில் வித்தைக்காரராக இருக்கிறார் ஹீரோ சூர்யா.ஹீரோயின் ஸ்ருதி (கமல)ஹாசன் டி.என்.ஏ எனப்படும் மரபணு பற்றி ஆராய்ச்சி செய்து வரும் மாணவி.எதைப் பற்றி ஆராய்ச்சி என்றால் Genetic memory எனப்படும் மரபணு நினைவுத் திறமை. உதாரணமாக நம் வம்சத்தில் யாரோ ஒரு முன்னோருக்கு ரசவாதம் செய்வது எப்படி என்று தெரிந்திருந்தால் அந்த ரகசியம் நம் ஜீன்களுக்குள்ளும் எங்கோ ஒளிந்திருக்கும் என்று நம்புவது.இது உயிரியில்
ரீதியாக எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.இது சாத்தியமானால் உலகில் நன்மையே நிகழும் என்று உறுதியாக சொல்ல முடியாது, ஹிட்லரின் வம்சத்தில் யாராவது ஒருவருக்கு ஹிட்லரின்
டி.என்.ஏ வைத் தூண்டி விட்டால் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை ஆகி விடும்)மேலும் ஒருவரது பண்புகள் மற்றும் திறமைகள் டி.என்.ஏ வால் மட்டுமே அவரின் சந்ததிக்குக் கடத்தப் படுகிறது என்று உறுதியாக சொல்லமுடியாது.Nature or nurture என்ற விவாதம் இது.சில திறமைகள் பிறப்பால்
வருகின்றன.சில வளர்ப்பால்! நம்முடைய தாத்தா ஒரு தேர்ந்த இசைமேதையாக இருக்கலாம். அதற்காக நாம் சங்கீதமே படிக்காமல் முந்தா நாள்
டி.என்.ஏ வைத் தூண்டி விட்டுக் கொண்டு மறுநாள் காம்போஜியில் ராகம் தானம் பல்லவி செய்யப் புறப்பட்ட கதை மாதிரி ஆகி விடும்.Anyway கதைக்காக இது சாத்தியம் என்று வைத்துக் கொள்ளலாம்.மருத்துவத்திலும்
தற்காப்புக் கலையிலும் சிறந்தவர்கள் பலர் இருக்கும் போது ஸ்ருதி ஹாசன் தேவையில்லாமல் ஞானம் பெற்று பிரபஞ்சத்தில் ஒன்றிக் கலந்து விட்ட போதிதர்மரை வம்புக்கு இழுக்கிறார்.படத்தில் போதிதர்மரைப் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்கள் இல்லை. இந்த
டி.என்.ஏ ஆராய்ச்சி பற்றியும் இல்லை. சூர்யாவுக்கு சில ஊசிகள் போடுகிறார்கள்.தண்ணீரில் ஒயர் எல்லாம் மாட்டி முங்கவைக்கிறார்கள்.இப்படியெல்லாம் செய்தால் கிட்டத்தட்ட பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த போதிதர்மர் சூர்யாவின் உடலில் (வில்லன் அடிக்கும் போது !) உயிர்பெற்று வந்து விடுவாரா என்றும் தெரியவில்லை.

இது இப்படி இருக்க சமகாலத்தில் சீனா ஒரு தந்திரம் செய்கிறது இந்தியாவுக்கு எதிராக. ஒருவித வைரஸை இங்கே பரப்பி விட்டு அம்மை போன்றதொரு தொற்று நோயைப் பரப்ப வேண்டியது.அதற்கு மருந்து போதிதர்மரின் சிஷ்ய பரம்பரைக்கு அதாவது சீனர்களுக்கு மட்டுமே அத்துப்படி. மருந்து கொடுக்கும் சாக்கில் இந்தியாவின் அரசியலில் தலையிட்டு மெல்ல மெல்ல அடிமைப் படுத்துவது அவர்கள் திட்டம்.வைரஸை பரப்பும் திருப்பணி டோங் லீ என்னும் நம் வில்லனிடம் கொடுக்கப்படுகிறது. இதற்கிடையில் நம் ஹீரோயின் போதிதர்மரை எழுப்புகிறேன் பேர்வழி என்று தன் பேப்பர்களை சைனாவுக்கு அனுப்ப, அவர்கள் அலர்ட் ஆகி, ஹீரோயினை போட்டுத் தள்ளும் திருப்பணியும் வில்லனுக்கு கொடுக்கப்படுகிறது.

ஸ்ருதி நீண்ட தேடல்களுக்குப் பிறகு சூர்யா போதிதர்மரின் வம்சம் என்று அறிந்து கொல்கிறார்.சூர்யாவை
டி.என்.ஏ ஆராய்ச்சி செய்யவேண்டும் என்பதற்காக அவரைக் காதலிப்பது போல நடித்து ஏமாற்றுகிறார். இது தெரிந்து சூர்யா 1980 களில் வந்திருக்க வேண்டிய யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாட்டைப் பாடி வருந்துகிறார்.நம்மையும் வருத்துகிறார்.எப்படியோ கடைசியில் சூர்யா ஆராய்ச்சிக்கு ஒத்துக் கொள்கிறார்.இந்தியா வரும் வில்லன் ஒரு நாய்க்கு வைரஸை ஏற்றி தன் திருப்பணியை வெற்றிகரமாக தொடங்கி வைக்கிறார். தடுக்க வந்த போலீஸ்காரர்களை கண்ணாலேயே வசியம் செய்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்ளும்படி செய்கிறார்.டோங் லீ ஸ்ருதியைக் கொலை செய்ய முயற்சிக்கும் போதெல்லாம் ஹீரோ அவரை எதிர்பார்த்தது போல காப்பாற்றுகிறார்.ஹீரோவும் ஹீரோயினும் தக்காளி சாஸ் பூசிக் கொண்ட முகத்துடன் (சிறிய காயங்களாம்!) ஒரு கண்டெயினர் லாரியே மேலே விழுந்தபோதும் தமிழ் சினிமாவின் இலக்கணப்படி தப்பிக்கிறார்கள். .வில்லனை ரகசியமாகப் பின் தொடரும் இருவரும் சுருதியின் காலேஜ் ப்ரொபசர் இந்த திட்டத்துக்கு உடந்தை என்று அறிந்து கொண்டு அவர் வீட்டை குடைந்து சோதனை போட்டு விவரங்களை அறிந்து கொள்கிறார்கள்.வில்லன் பரப்பிய வைரஸ் நாய் மூலம் மனிதர்களுக்கும் பரவி ஆஸ்பத்திரிகள் விசித்திர கேசுகளால் நிரம்புகின்றன.மருத்துவர்கள் மருந்து இன்றி திணறுகிறார்கள்.

வில்லன் சூர்யாவையும் ஸ்ருதியையும் கொலைவெறியோடு துரத்துகிறார்.ஸ்ருதியின் நண்பர்கள் சிலர் பரவி வரும் வியாதியை கட்டுக்குள் கொண்டுவர சூர்யாவின்
டி.என்.ஏ வைத் தூண்டியே ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள்.இதற்காக வில்லன் கண்டுபிடிக்க முடியாத ஒரு மறையான இடம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.(வெய்யில் படக்கூடாதாம்!) அவர்களுக்கு வெளியில் இருந்து உணவு மருந்து எல்லாம் கொண்டு வந்து உதவி செய்ய ஒரு ஆளை நியமிக்கிறார்கள்.முதலில் சொன்ன படி சூர்யாவின் உடம்பில் ஒயரை எல்லாம் இணைத்து போதிதர்மரை அழைக்கிறார்கள்.எல்லாரையும் கண்களாலேயே வசியம் செய்யும் வில்லனுக்கு அந்த இடத்தைக் கண்டுபிடிப்பது பெரியவிஷயமா என்ன? எப்படியோ அங்கேயும் வந்து விடுகிறான்.அவனிடமிருந்து தப்பிக்க எல்லாரும் ஒரு வேனில் ஏறி வெளியேறுகிறார்கள். வில்லன் ஒரு மரத்தைப் பிடுங்கி (?!) வழியில் போட வேன் கவிழ்ந்து அரைகுறை ஆராய்ச்சியில் இருந்க்கும் சூர்யா கீழே விழுகிறார்.டோங் லீ சூர்யாவை அடித்து துவைக்கிறான். இப்போது நாமெல்லாம் எதிர்பார்த்தபடி போதிதர்மர் சூர்யாவின் உடலில் இறங்குகிறார்(?) பிறகு என்ன? வில்லன் க்ளோஸ். சூர்யா அந்த மருந்தை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து வியாதியையும் கட்டுப்படுத்துகிறார் .கடைசியில் ஒரு மொக்கை சொற்பொழிவு வேறு ஆற்றுகிறார். தியேட்டரில் திரை விழ நம் எதிர்பார்ப்பும் விழுந்து விடுகிறது.(நிறைய எதிர்பார்த்து விட்டோமோ?)

படத்தில் சில சபாஸ்-கள்:

* அரிய தமிழர் ஒருவரை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.
*
டி.என்.ஏ, ஜெனெடிக் மெமரி என்று சயின்ஸ் பிக்ஷனை உள்ளே நெருடாமல் நுழைத்தது.
* சூர்யா-ஸ்ருதி காதலை அளவோடு நிறுத்திக் கொண்டது.
* நம் கலாச்சாரம் பண்பாடு இவற்றை மறக்கக் கூடாது என்று ஒரு மெசேஜ் சொன்னது.
* ஒரு மில்லி-செகண்ட்டாவது தமிழர்களை நாம் தமிழர் என்று பெருமைப்பட வைத்தது.விசில் அடித்து கை தட்ட வைத்தது.
* ஒரு மனிதனின் நல்லதை பார்க்க வேண்டும் என்றால் அவன் படிக்கும் புத்தகங்களில் பார், கெட்டதைப் பார்க்க வேண்டு
ம் என்றால் அவன் வீட்டு குப்பைத் தொட்டியில் பார் என்று சூர்யாவைப் பேச விட்டது. உடனே ஸ்ருதி ஜி-மெயிலின் Trash ஐப் பார்ப்பது.
* லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் , சந்தானத்தை சூர்யாவுக்கு நண்பனாகப் போட்டு இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவதை செய்யாமல் இருந்தது.

படத்தில் சில (பல) சொதப்பல்கள்

* ஜென் மாஸ்டரான போதிதர்மரைப் பற்றி படம் எடுத்து விட்டு ஜென் என்று ஒரு இடத்தில் கூட குறிப்பிடாதது.

* சீனாவில் பரவி வரும் நோய் இந்தியாவுக்கு வந்து விடக்கூடாது என்று போதி புறப்பட்டு செல்கிறார். அங்கே செல்ல அவருக்கு சரியாக மூன்று வருடம் பிடிக்கறது.நோய் அதற்குள் பரவி இருக்காதா? சூர்யா குதிரையில் சென்றால் நோய் என்ன கழுதையில் ஏறியா இந்தியாவுக்கு வரும்?

*'மரணம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆசையில் போதிதர்மர் இளவயதிலேயே துறவறம் பூணுகிறார் என்பது தான் வரலாறு. ஆக அவர் கல்யாணமே செய்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. அப்படியிருக்க அவருக்கு சந்ததி எங்கே வந்தது?

*இந்தியாவை கவிழ்க்க சீனா இவ்வளவு மெனக்கெட வேண்டியது இல்லை.காதை சுற்றி மூக்கை தொடுவது.டோங் லீ வை அனுப்பி இந்தியாவின் பிரதமரை முக்கிய ஆவணங்களில் கையெழுத்து போடும் போது வசியம் செய்திருந்தால் மதி.

* நம் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதற்காக இன்னொரு நாட்டை வஞ்சம் நிறைந்ததாகவும் துரோகியாகவும் காட்டியிருப்பது கண்டிக்கத் தக்கது.முதலில் நாம் மறந்து விட்ட போதிதர்மரை அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்று சொல்லிவிட்டு பிறகு அதே நாட்டை வில்லன்களாக காட்டுவது.

* ஒருவரை ஹிப்னாடைஸ் செய்வது என்றால் அவரது பூரண ஒத்துழைப்பு வேண்டும். It's a time taking process! சும்மா ஒரு வினாடி முறைத்துப் பார்த்து விட்டு உன்னை நீயே சுட்டுக் கொள் என்று கட்டளை இடும் கதையெல்லாம் அங்கே நடக்காது.

* உயிரியல் பற்றி படம் எடுத்து விட்டு கெமிஸ்ட்ரியை மறந்து விட்டிருப்பது.பேசாமல் ஸ்ருதியை சூர்யாவின் சகோதரியாகப் போட்டிருக்கலாம். சரி முதல் தமிழ்ப்படம் என்பதால் உலகநாயகனின் மகளை மன்னிப்போமாக.

*கதையின் க்ளைமாக்சில் so called ட்விஸ்ட் இல்லாதது. கதை ஆரம்பித்த அரை மணியிலேயே முடிவை ஊகிக்க முடிகிறது.

* 'வானத்தைத் தொடலாம் பூமிப் பந்தை எட்டி உதைக்கலாம்' என்ற தன்னம்பிக்கைப் பாடல்களை தமிழ் சினிமா என்று தான் கைவிடுமோ தெரியவில்லை.

* பாடல்களின் போது தியேட்டர் கிட்டத்தட்ட காலியாகி விடுகிறது. (பாடல்கள் ரசிகர்களை சிகரெட்டை மறக்க வைக்க வேண்டும்)கதையோடு கொஞ்சமும் ஒட்டாத பாடல்கள்.போதிக்கு ஒரு பாடல் கொடுத்திருக்கலாமே! சுமாரான சில சமயம் புரியாத பாடல் வரிகள். (மதன்கார்கி கவனிக்கவும்)

* இந்த படத்துக்காக ரொம்பவே மெனக்கெட்டு போதிதர்மர் பற்றி ஒரு பி.ஹெச்.டி.செய்தோம் என்று பில்ட்-அப் கொடுத்தது. எனக்கு என்னவோ விக்கி-பீடியா வில் முதல் இரண்டு பேரா படித்திருந்தாலே போதும் என்று தோன்றுகிறது அந்த பதினைந்து நிமிட வேஷத்துக்கு.

* குழந்தைத் தனமான சண்டைக் காட்சிகள். உதாரணம் புழுதியை கிளப்பி விடுவது.

*சூர்யா , சிக்ஸ் பேக் மட்டும் இருந்தால் யாராக வேண்டுமானாலும் நடித்து விடலாம் என்று நினைக்கிறாரா? சில இடங்களில் immaturity வெளிப்படுகிறது.அது ஏனோ சில இடங்களில் தேவையில்லாமல் கத்துகிறார்.

தீபாவளிக்கு நாம் சில பட்டாசுகளை வெடிப்போம். டம் என்று பெரும் சத்தத்துடன் வெடிக்கும் என்று நினைத்து பற்ற வைத்து வழியில் வருபவர்களை நிறுத்தி, காதை மூடிக் கொண்டு எதிர்பார்ப்புடன் நிற்போம். அது கொஞ்ச நேரம் புகைந்து விட்டு கடைசியில் புஸ் என்று படுத்து விடும்.அது போல தான் இந்த தீபாவளி ரிலீஸ் 'ஏழாம் அறிவும்'.போதிதர்மா இவர்கள் சிறுபிள்ளைகள். இவர்களை மன்னியும்.(அவர் மன்னிக்க மாட்டாரோ என்று பயமாக இருக்கிறது . உன்னை நீயே வாளால் வெட்டிக் கொள் அப்போது தான் சுவற்றை விட்டு உன் பக்கம் திரும்புவேன் என்று சீடரிடம் சொன்னவர் ஆயிற்றே!)

சமுத்ரா

Monday, October 24, 2011

கலைடாஸ்கோப்-42

லைடாஸ்கோப்-42 உங்களை வரவேற்கிறது.

ஒன்று
=======

போன வாரம் சன்.டி.வி யில் Bruce Almighty என்ற ஹாலிவுட் படம் போட்டிருந்தார்கள். சாதாரண மனிதன் ஒருவன் , சாதாரண என்றால் மிகச்சாதாரண மனிதன், கண்டக்டர் இரண்டு ரூபாய் பாக்கி தரவில்லையே என்று வருத்தப்படும், மனதுக்குள் ஆயிரம் தடவை மாத பட்ஜெட் போடும், உள்ளே அழுகை வந்தாலும் வெளியே பல்லைக் காட்டி சிரிக்கும், சம்பளமெல்லாம் இ.எம்.ஐ.யில் போவதை பரிதாபமாக வேடிக்கை பார்க்கும் ஒரு சாதாரண மனிதன்! அவன் திடீரென்று கடவுளாக மாறி விட்டால் எப்படி இருக்கும்?

இந்த திடீரென்று கடவுளாக மாறுவது, எங்கிருந்தோ சக்தி பெற்று சூப்பர் மேனாக மாறுவது இவையெல்லாம் சினிமாக்களில்
புதிது அல்ல. பக்த பிரகல்லாதா வில் இருந்து எந்திரன் வரை இதே கான்செப்ட் தான்.இந்த 'வட்டத்துக்குள் வாழும்
வாழ்க்கையில்'
நம் எல்லாருக்கும் கடவுளாக அல்லது சூப்பர் மேனாக மாறும் ஆசை எப்போதாவது மனதில் வந்து போகிறது என்பது உண்மை தான்.நேற்று நம்மை கண்டபடி திட்டிய மேனேஜரை வெறிநாய் துரத்தும்படி செய்ய, நம்மை நீ ஒரு ஆம்பிளையா என்று கேட்டவனை ரத்தவாந்தி எடுக்க வைக்க, நம் நிலத்தை அபகரித்தவனை நம் காலில் விழவைக்க, நம் சகோதரியை அவமானப்படுத்தியவனின் (some text omitted ) இதையெல்லாம் செய்ய நாம் சூப்பர் மேனாக மாறிவிடக் கூடாதா என்று சிலசமயம் தோன்றும்.

ஆனால் கடவுளாக இருப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. கடவுளின் 'Possessing enormous power ' என்ற ஒரு முகத்தை மட்டும்தான்
நாம் பார்க்கிறோம். What about his other faces ?கடவுளுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றி மறந்து விடுகிறோம்.It's easy to take authority. It's very difficult to take responsibility என்று சொல்வார்கள் .ஹிரண்யகசிபு தவம் செய்த போது கடவுளின் Authority யை நினைத்துப் பார்த்தானே தவிர அவரின் அவரின் Responsibility யை நினைத்துப் பார்க்கவில்லை.

தன் எதிரியை வெறிநாய் துரத்தும்படி செய்யும் விஷயம் அல்ல கடவுளாக
இருப்பது.'மழை வரவேண்டும்' என்று பிரார்த்திக்கும் விவசாயியையும் 'மழை வரக்கூடாது' என்று பிரார்த்திக்கும் குயவனையும் ஒரே சமயத்தில் Handle செய்யவேண்டி இருக்கிறது கடவுளுக்கு.உடலெல்லாம் துப்பாக்கியாக மாறி எல்லாரையும் சுட்டுத் தள்ளுவது கடவுளின் ஒரு அம்சம் மட்டும்தான்.ஆனால் அவரின் இன்னொரு அம்சம் ஒரு தக்கனூண்டு விந்துத்திரவத்தில் ஒரு பரம்பரைக்கான அத்தனை செய்திகளையும் ப்ரோக்ராம் செய்து வைக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இந்த விஷயம் கடவுளுக்கு மட்டும் அல்ல. உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.'நான் ஊழலை எதிர்த்து ஐந்து வருடம் மௌன விரதம்' என்று நம் பிரதமர் சொல்வதாக இன்றைக்கு மன் மோகன் சிங்கைப் பற்றி ஏராளமான ஜோக்குகள்
நெட்டில் கிடைக்கின்றன.ஆனால் ஜோக் அடிப்பது எளிது. கொஞ்சம் (மட்டமான) கற்பனைத்திறன் இருந்தால் யாரையும் ஜோக் அடிக்கலாம்.ஒருவாரம், இல்லை அர்ஜுன் பாணியில் சொல்வதென்றால், ஒருநாள் பிரதமாராக இருந்து பார்த்தால் தான் நமக்கு அவருடைய பொறுப்புகள், அவருடைய கஷ்டம் எல்லாம் தெரியும்.மேலும்:அக்கரைக்கு மாட்டுக்கு இக்கரை பச்சை.நாம் பிரதமராக ஆசைப் படுகிறோம். பிரதமரோ ஒரு சாதாரண மனிதன் போல ரோட்டோரக் கடையில் நின்று கொண்டு பானிபூரி சாப்பிட ஆசைப்படக்கூடும்.

சைடு பிட்: நேற்றைய G -Force படத்தில் ஒரு எலி சர்வாதிகாரியாக மாறுகிறது.சிரிக்க வேண்டாம். ஒரு நாள் ஆபீஸ் விட்டு வீட்டுக்குப் போகும் போது
மனிதன் மீது பழி தீர்த்துக் கொள்ள தெருநாய்கள் எல்லாம் கையில் ஏ.கே.47 உடன் நின்று கொண்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இரண்டு
=======

' எனக்கு தீபாவளிக்கு ஊருக்குப் போக நார்மல் டிரெய்ன் டிக்கெட் கிடைத்து விட்டது' -நான் அடுத்த வருஷ தீபாவளியை சொன்னேன். இந்த ட்விட் எனக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை.ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கும் அபத்தங்கள் இவை.தீபாவளிக்கு பட்டாசு, ஆடைகள்,பலகாரங்கள் இந்த விளம்பரங்கள் வருகிறதோ இல்லையோ இப்போது தங்கநகை விளம்பரங்கள் அதிகம் வருகின்றன.தீபாவளிக்கு குளிக்க தலைக்கு எண்ணெய் வாங்காவிட்டாலும் அணிந்து கொள்ள நகைகள் வாங்கியே ஆக வேண்டும் என்று சாத்வீகமாய் மிரட்டுகின்றன விளம்பரங்கள். அழகான பெண்களைக் காட்டி 'மனதில் உற்சாகம் பொங்குதே' 'இன்ப அலை வந்து அடிக்குதே' 'குதூகலத்தில் உள்ளம் துள்ளுதே' என்றெல்லாம் பாட்டுப்பாடி ஆசை காட்டுகின்றன. தத்காலில் கொள்ளை விலைக்கு டிக்கெட் புக் செய்து ,ட்ராபிக்-கொடுமையில் நான்கு மணிநேரம் முன்னதாகவே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டு மூச்சு முட்டி,வாடி வதங்கி ஊர் வந்து சேரும் அற்பப் பதர்கள் நமக்கு தான் இந்த உற்சாகம்,இன்பம், குதூகலாம் இவையெல்லாம் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை.

புத்தர் போன்ற ஞானிகள் தவறியும் பேரின்பம் ஆனந்தம் போன்ற வார்த்தைகளை சீடர்களிடம் உபயோகிப்பதில்லை.அதிக பட்சம் 'துன்பம் அற்ற நிலை' என்றுதான் சொல்கிறார்கள்.விளம்பரங்களில் வருவது போல உஷா சன் ப்ளவர் ஆயில் வாங்கியத
ற்கெல்லாம் ஓவராக உற்சாகப்பட்டால் நமக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும்.3 .42 happiness (அதாங்க 24 /7 ) என்பது யாருக்கும் சாத்தியம் இல்லை.எல்லாரும் சிரித்துக் கொண்டே இருப்பது போலவும், ஹீரோவும் ஹீரோயினும் ரொமான்ஸ் செய்து கொண்டு இருப்பது போலவும் திரைப்படங்கள் முடிகின்றன.அதைப் பார்த்து நாம் ஏமாந்து போகக் கூடாது.சுபம் போட்ட பிறகு இருவருக்கும் பசிக்கும். யார் வெங்காயம் நறுக்குவது என்று இரண்டு பேருக்கும் சண்டை வரும்.சிரிப்பவர்கள் வாய்வலித்து சிரிப்பதை நிறுத்திக் கொள்வார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது.

'இன்பம் அனுபவிக்கும் போதே முடிந்து விடுகிறது.துன்பம் அனுபவித்த பின்னும் உணரப்படுகிறது'

மூன்று
======

பழமொழி என்றதும் இந்த 'பழமொழி'களைப் பற்றி நினைக்கத் தோன்றுகிறது.எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சாதாரணமாக சொல்லி விடுகின்றன அவை.உபநிடதங்களும் தத்துவ விசார நிர்ணயங்களும் சொல்லாததை அவை சைக்கிள் கேப்பில் சொல்லி விடுகின்றன.பழமொழிகளை அமைத்தவர்கள் நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்சிகளை வைத்தே அதை அமைத்திருக்கிறார்கள். விலங்குகளை வைத்து எத்தனை பழமொழிகளை சொல்லியிருக்கிறார்கள். ( சிங்கம்
சிங்கிளா தான் வரும் என்பது பழமொழி அல்ல) உதாரணத்துக்கு யானையை எடுத்துக் கொள்வோம்.

*ஆனைக்கும் அடி சறுக்கும் ( எடுக்கும் அடியை கவனமாக எடுத்து வைப்பதில் யானையை யாராலும் மிஞ்ச முடியாது. நீ என்னதான் கில்லாடியாக இருந்தாலும் உனக்கும் ஆப்பு உண்டு)
*ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்
*ஆனைப் பசிக்கு சோளப் பொறி
*அசைந்து தின்கிறது யானை; அசையாமல் தின்கிறது வீடு
*வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல
*ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
*ஆனை படுத்தாலும் ஆள் மட்டம்
*ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.


நம் முன்னோர்கள் விலங்குகளிடமிருந்து கூட பாடம் கற்றுக் கொண்டார்கள்.நாம் கடவுளே வந்தாலும் அவரை போட்டோ எடுக்க கேமரா தான் தேடுவோம். ஒரு ஞானி தனக்கு ஒரு நாய் தான் குரு என்று சொல்வாராம். ஏன் என்று கேட்டால் இப்படி சொல்வாராம்:

*நாய் அடுத்த நாளைக்கான உணவை சேர்த்து வைப்பதில்லை
*நாய் தான் படுத்திருந்த இடத்தை திரும்பிப் பார்ப்பதில்லை
*நாய் தனக்கு உதவியவர்களை மறப்பதில்லை.

சரி நாயை வைத்து அமைந்திருக்கும் பழமொழிகளை சொல்லுங்களேன்.

நான்கு
======

ஐஸ்வர்யாராயை அதிசயம் என்று வர்ணித்து விட்டு நாம் உண்மையான அதிசயங்களை பாதுகாக்கத் தவறி விட்டோம் என்று தோன்றுகிறது. தாஜ்மஹா
ல் மாசுபட்ட காற்று காரணமாக கறுத்துக் கொண்டு வருகிறதாம்.சீனப் பெருஞ்சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு விட்டதாம்.நம்மூரில் ரோடு போடுவதற்கு ஜல்லியைக் கொட்டியிருந்தால் அதை இரவோடு இரவாக எடுத்து ஒளித்து வைத்துக் கொள்வோமே அது போல சீனர்கள் பெருஞ்சுவரின் கற்களைக் கடத்திக் கொண்டு போய் விடுகிறார்களாம்.
சுவரின் உள்ளே புதையல் ஒளிந்திருக்கலாம் என்று யாரோ புரளியை வேறு கிளப்பி விட ஆங்காங்கே சுவரில் அகழ்வாராய்ச்சி செய்து சீனப்பெருஞ்சுவர் பார்க்கவே பாவமாக நிற்கிறது.அதிசயங்களை நம்மால் உருவாக்க முடியாவிட்டாலும் இருக்கும் அதிசயங்களையாவது பாதுகாக்கலாமே?மதுரை மீனாட்சி கோயிலுக்குப் போனால் குங்குமத்தை தூண்களில் அப்பாமல் இருக்கலாமே?ஏனென்றால் நாம் அதிசயம் என்று வர்ணித்த ஐஸ்வர்யா ராய்க்கு சீக்கிரம் வயசாகி விடும்.

ஐந்து
=====
சமுத்ரா'ஸ் ட்வீட்ஸ்:

There are 2 approaches to Life: 1. Nothing is so easy as you think 2. Nothing is so difficult as you think .And I want to follow the second!

How are you என்று கேட்பதும் ஒரு சடங்கு ஆகி விட்டது. I'm fine என்று சொல்வதும் ஒரு சடங்கு ஆகி விட்டது.

நல்லவன் ஒருவனுடைய வாழ்க்கை வரலாறு அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதில்லை.

சொர்க்கத்தில் இருப்பவரின் பிரச்சனை அது அவருக்கு சொர்க்கம் என்று தெரியாதது.நரகத்தில் இருப்பவரின் பிரச்சனை அது அவருக்கு நரகம் என்று தெரிவது

ஒருத்தன் கிட்ட இருந்து திருடினா அவன் பேரு திருடன். நிறைய பேர் கிட்ட இருந்து திருடினா அவன் பேரு அரசியலவாதி

தீபாவளிக்கு டி.வி யில் படங்கள்: 'வேட்டைக் காரன்' &'சிங்கம்' நாம் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறோம் போலத் தோன்றுகிறது.

பேச்சுலர்களுக்கு வீடு வேண்டுமா? தீபாவளிக்கு முதல்நாள் ஏதாவது வீட்டுக்கு போய் ஓனருக்கு
ஹேப்பி தீபாவளி சொன்னால் போதும்!

ஒரு கருவறைக்குள் தெய்வம் இருந்தால் அது கோவில் ஒரு தெய்வத்துக்குள் கருவறை இருந்தால் அது 'தாய்'

I 'm busy என்று ஒருவர் சொன்னால் இரண்டு காரணங்கள் இருக்கும்(1 ) அவர் உண்மையிலேயே பிஸி (2 ) அவர் உங்களிடம் பேச விரும்பவில்லை.

அர்த்த நாரீஸ்வரன் என்று சொல்கிறார்களே தவிர அர்த்த புருஷ ஈஸ்வரி என்று யாரும் சொல்வதில்லையே ஏன்? -ஆணாதிக்கம்!

ஆறு
=====

ஓஷோ ஜோக்குடன் முடித்து விடுவோம்.

இரண்டு குடிகாரர்கள் (ரயில்வே ட்ராக்கில் நடந்தபடி)

குடி 1 : என்னப்பா இந்த மாடிக்கு இத்தனை படி? முடியவே மாட்டேங்குது? பேஜாருப்பா
குடி 2 : ஆமாம்பா..அப்புறம் இந்த கஞ்சப்பயலுக பாரு கைப்பிடிய எத்தனை கீழ வச்சிருக்காங்க.

இரண்டு நண்பர்கள்:

ஒருவன்: எனக்கு கம்ப்யூட்டர்ல வேலை பண்ணி கண்ணுக்கு முன்னால கறுப்புப் புள்ளியா தெரியுதுப்பா
இன்னொருவன்: கண் டாக்டர் யாரையாவது பார்த்தாயா?
அவன் : இல்லை..இதுவரைக்கு
ம் கறுப்பு புள்ளியை தான் பார்த்தேன்.

ஒரு அரசியல்வாதி ஒருநாள் காட்டுவழியே தனியே போய்க் கொண்டு இருந்தார்.
அப்போது ஒரு திருடன் வந்து வழிமறித்து 'ஏய், உன் பணத்தை மரியாதையா எடுத்துக் கொடுத்திரு' என்று மிரட்டினான்.
'நான் யார் தெரியுமா? நான் ஒரு அரசியல்வாதி' என்றார் அவர்

திருடன்: அப்ப 'என் பணத்தை மரியாதையா கொடுத்திரு'


முத்ரா


Monday, October 17, 2011

தேநீர்ப்பேச்சு- 2


தேநீர்ப் பேச்சு- 2 உங்களை வரவேற்கிறது.இந்த டீடைமின் கற்பனை கதாபாத்திரங்கள் சாரதா மாமி மற்றும் கோவிந்தன் மாமா.

சாரதா மாமி: வாங்க, மாமா, என்ன ரொம்ப நாளா ஆத்துப்பக்கம் காணோம்?

கோவிந்தன் மாமா: என்ன மாமி சௌக்யமா? வயசு ஆறதில்லையா? அதான் பழைய படி ஓடியாட முடியறதில்லை.
வர்ற வாரம் என் பேத்திக்கு காது குத்து இருக்கு. அவசியம் வரணும்.

சா. மாமி: பேத்தியா? ரொம்ப சந்தோஷம்.ஆஸ்திக்கு ஒரு ஆண் இப்ப ஆசைக்கு ஒரு பெண் ஆச்சு. என்ன தான்
சொன்னாலும் பெண் பிள்ளைகள் இல்லாத வீடு அத்தனை ஷோபிக்கறது இல்லை பாருங்கோ.என்ன பேரு கொழந்தைக்கு?

கோ.மாமா: எனக்கு ராகத்தோட பேரு தான் வைக்கனும்னு. 'கல்யாணி' ன்னு சொன்னா ரொம்ப காமன் பேரா இருக்குங்கறா.
'பைரவி' ரொம்ப ஹெவியான பேராம்.ரஞ்சனி ன்னு வைக்கலாம்னா நம்ம ராகவன் பொண்ணு ரஞ்சனி அல்பாயிசுலையே போயிட்டது. தேனுகான்னு வைச்சா குழந்தை பிறக்காதாம்.'சஹானா' நல்ல பேர் ஆச்சேன்னா ஏதோ முஸ்லிம் பேரு மாறி இருக்குங்கறா. எப்படியோ கடைசில 'பிந்து மாலினி' ன்னு வச்சிருக்கோம். நீங்க வந்திருந்து ஆசீர்வாதம் பண்ணனும்.

சா.மாமி: பிந்து மாலினி? தியாகராஜரோட 'எந்த முத்தோ' ஞாபகம் வர்றது.

கோ.மாமா: ராமனை எல்லாக் கோணங்களிலும் அனுபவிச்சு பாடினவர் அவர் ஒருத்தர் தானே மாமி?

சா.மாமி: சரியா சொன்னேள்..என்னோட பேசமாட்டாயான்னு கேட்கறார் 'ஆட மோடி கலதே' ல்ல. சீதா, லக்ஷ்மணன், அனுமார் இவர்களெல்லாம் இருக்காங்கன்னு என்னை மறந்துட்டயா ன்னு கேட்கறார் 'உபசாரமு' கீர்தனைல. அவன் சாதிச்சுட்டான் என்னை காப்பாற்றக் கூடாதுங்கற கொள்கைல உறுதியா நின்னு
சாதிச்சுட்டான் அப்படீங்கறார் இன்னொண்ணுல .ராமன் அருளைப் பெற நான் கொடுத்து வைக்கவில்லை அப்படிங்கறார் கலிகி உண்டேகதா வுல. ராமனைப் பார்த்து 'எச்சரிக்கையாய் பாத்து வா ராமா, ஏழை என் வீடு குண்டும் குழியுமா இருக்கும்கறார் 'ஹெச்சரிககா ரா ரா ' வுல.'மனசே என் பேச்சைக் கேட்கமாட்டாயா' என்று அலுத்துக்கறார் 'மனசா எடுலோ' வுல. இதுக்கெல்லாம் மேல, ஒரு கீர்த்தனையில 'நீ ஒரு ஆம்பிளையா' ன்னு ராமனைக் கேட்கறார் பாருங்கள்.

கோ.மாமா: ஐயோ, அது எதுல மாமி? நீங்களே ராமனுக்கும் தியாக ராஜருக்கும் சண்டை மூட்டி விட்டுடுவேள் போலருக்கே?

சா.மாமி: அதான் 'ரமா ரமண பாரமா' -வசந்த பைரவி ராகத்துல.

கோ.மாமா: அது மட்டும் இல்லை. அபூர்வமான ராகங்கள்ல கூட அவர் கீர்த்தனைகள் பண்ணி இருக்காரே மாமி!

சா.மாமி:ஆமா. கிரணாவளி, அப்புறம் பிரதாப வராளி, வெஸ்டர்ன் மாதிரி வருமே அதான் சுபோஷினி, அப்புறம் ஜிங்களா ன்னு ஒண்ணு.

கோ.மாமா: ஜிங்க்லா வா? இது என்ன ஜிங்குசா மாதிரி?

சா.மாமி: அனாதுடனு கானு..அவர் சொல்றார்: 'ராமா, நான் அனாதை இல்லை..அப்பா அம்மா இல்லாத நீ தான் அனாதை' அப்படீன்னு..இதுக்கு பேர் நிந்தாஸ்துதி ..இகழ்வது போலப் புகழ்வது.

கோ.மாமா: 'தந்தை தாய் இருந்தால் உனக்கிந்தத் தாழ்வெல்லாம் வருமோ அய்யா' அது மாதிரியா?

சா.மாமி: அதே தான். சிவன் தான் பரம்பொருள் அப்படின்னு சொல்லாமல் சொல்றார். இன்னொன்னு கல்யாணி ல எத்தைக் கண்டு நீ இச்சை கொண்டாய் மகளே? ன்னு வருமே.


சுத்தப் பைத்தியக்காரன் கங்காதரன் தோகையை முன்னவன் பேயுடன் ஆடிய
தொந்திக்கோ ஏறும் நந்திக்கோ செய்யும் விந்தைக்கோ நீ


இன்னிக்கு சினிமாவுல பரதேசிகளையும் ரவுடிகளையும் காதலிக்கிற ஹீரோயின்களைப் பார்த்து எத்தைக் கண்டு நீ இச்சை கொண்டாய் மகளேன்னு பாடுனா சரியா இருக்கும்.

கோ.மாமா: எல்லாம் மறந்துட்டது மாமி. எங்கே ? Practice பண்ணிண்டே இருந்தாதானே ஞாபகம் இருக்கும். ஏதோ உங்க கூட
பேசறப்ப சங்கீதத்தைப் பற்றி கொஞ்சம் மனம் விட்டு பேசறேன். மத்தபடி எல்லாரும் ரொம்ப De-motivate பண்றா.இப்போ பசங்களுக்கு இதில் எல்லாம் எங்கே Interest இருக்கு? எல்லாம் சினிமா சினிமான்னு அலையறதுகள். கர்நாடக சங்கீதம் -
ன்னாலே காத தூரம் ஒடரதுகள்.என் மக வயித்து பேரன் சொல்றான்.தியாகராஜர் ,தீக்சிதர் எல்லாம் 'ஓல்டு பீஸாம்' அவங்களை இன்னும் ஏன் புடிச்சு தொங்கிண்டு இருக்கேள் னு கேட்கறான்.

சா.மாமி: உண்மை தான். ஆனால் முழுக்க முழுக்க அவங்களையும் குறை சொல்ல முடியாது. கர்நாடக சங்கீதம்கறது மலை ஏறுவதைப் போல கசப்பாகவும் கஷ்டமாகவும் இருக்கும். ஆனால் ஒருதரம் ஏறிட்டா மலை உச்சியின் கிரணங்கள், சுகந்த தென்றல்,மேகங்களின் அழகு எல்லாம் அமர்களமா இருக்கும். இந்த பாப், ராக், ஜாக்குன்னு என்னென்னவோ சொல்றாளே , அந்த மேற்கத்திய சங்கீதம் எல்லாம் கிராபிக்ஸ்ல மேகத்தையும் தென்றலையும் இன்ஸ்டன்ட்டா கொண்டு வர்ற மாதிரி.கொஞ்ச நேரம் இனித்து விட்டு அப்புறம் விண்ணு விண்ணுன்னு தலைவலிக்க ஆரம்பித்து விடும்.

கோ.மாமா: சரியா சொன்னேள்.. அப்புறம் சாதிஞ்சனே பத்தி சொன்னேள். அதுல மட்டும் ஏன் விதிவிலக்கா ஸ்வர சாஹித்யத்துக்கு அப்புறம் பல்லவியை எடுக்காம 'சமயானிகி தகு' ன்னு பாடறா?

சா.மாமி: சரிதான் மாமா. உண்மையில் மற்ற பஞ்சரத்ன கிருதிகளைப் போல, ரி சாதிஞ்சனே ன்னு தான் எடுக்கணும். இன்னும் சில பேர் அப்படி எடுத்துப் பாடுறா.ஆனால் 'சமயத்துக்குத் தகுந்த படி பேசிவிட்டான்' என்ற வரி கொஞ்சம் கவர்ச்சியா இருக்கறதாலே அதை ஹைலைட் பண்றா. அவ்ளோ தான்.சரி எந்தரோ மகானு பாவுலு அதுல ரெண்டாவது சரணம் பாடுங்கோளேன்.

கோ.மாமா: ரீ க ரி ரி க ரி ரி ஸ நி ..

சா.மாமி:சாஹித்யம் மட்டும் பாடுங்கோளேன்.

கோ.மாமா: மானஸ வனசர வர சஞ்சாரமு நிலிபி மூர்த்தி..

சா.மாமி: அது நிலிபி இல்லை சலிபி..

கோ.மாமா: 'மனமென்னும் குரங்கின் ஆட்டத்தை நிறுத்தி ' இதுதானே அர்த்தம்?

சா.மாமி: குரங்கின் ஆட்டத்தை யாரவது 'வர சஞ்சாரம்' அதாவது நல்ல 'திருநடனம்' அப்படின்னு சொல்வாளா?

கோ.மாமா: என்னவோ மாமி இத்தனை நுணுக்கமா யார் கவனிக்கிறா? பாடறவாளும் ஏதோ கடனேன்னு பாடறா. கேட்கறவாளுக்கும் அவ என்ன புடவை உடுத்தி இருக்கா ? வைரத்தோடு என்ன விலை இருக்கும்? காண்டீனில் கீரை வடை போட்டிருப்பாளா , ரிட்டர்ன் பஸ் கிடைக்குமா, யாராவது எழுந்து போறாளா நாமளும் போலாம் இத்தனை கவலைகள். இதுல அந்த வார்த்தை நிலிபியா சலிபியான்னு யாருக்குக் கவலை மாமி? ஏதோ ஒரு ..ஒ மன்னிச்சுக்கங்க மாமி.

சா.மாமி: சரி அந்த எழுத்தை சொல்லலையில்ல விடுங்கோ. போன வாரம் விகடன்ல ஒரு கவிதை படித்தேன்.அது நான் எத்தனை சத்தியம்!

கோ.மாமா: என்ன மாமி அது? எங்க வீட்டுல எல்லாம் இங்கிலீஷ் பத்திரிகை தான் வாங்கறா. கிழம் ஒண்ணு விகடன் கேட்டதே வாங்கிட்டு வரலாம்கற எண்ணம் யாருக்காவது இருக்கா? பெங்களூர்ல இருக்கற ரகு வாங்கிண்டு வந்தா தான் உண்டு.அவன் ஒருத்தனுக்கு தான் இன்னும் பழைய விஷயங்களில் அபிமானம் இருக்கு.

சா.மாமி: வாஸ்தவம் தான் மாமா.
ஆனால் இப்போ விகடன் பழையபடி இல்லை .முக்கால் வாசி சினிமா வாடை தான் வீசறது .அப்புறம் சொல்லறனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. ரிட்டையர் ஆயிட்டாலே மனுஷன் பாதி பிணம் தான்.

கோ.மாமா: சரியா சொன்னேள்..இதுல
தப்பா எடுத்துக்க என்ன இருக்கு? சரி கவிதையை சொல்லுங்கோ.

சா.மாமி: படிச்சே காட்டிடுறேன்.

நின்னே பஜன
=============
இந்த வருடம் கலைமாமணி கிடைக்குமா?
சபாவில் கூட்டமே இல்லையே?
ஏனோ இந்த வருடமும்
மத்தியான ஸ்லாட் தான் கிடைக்கிறது
மைக் சரியாக வேலை செய்யுமா?
புடவைக்கு மேட்சாக எடுத்து வைத்த
நெக்லஸ் மறந்து விட்டதே!
.
..
...
....
'ராமா, உன்னை அல்லால் ஒரு நினைவே இல்லை'
என்ற பொருள் கொண்ட கீர்த்தனையை
பாடகி ஆரம்பித்தார்...

கோ.மாமா: ஆமாம் மாமி. நல்ல கவிதை. இப்போ சாஹித்யத்தைப் பற்றி ரொம்ப சில பேர் தான் அக்கறை எடுத்துக்கறா. த்யாகய்யர் சொல்றாப்புல சங்கீதம்ங்கறது நாபியில் இருந்து இருதயம் தொண்டை வழியா மேலே ஏறி வரணும்.இப்ப நிறைய பேருக்கு உதட்டில் இருந்து தான் வர்றது. சமீபத்துல பின்னணிப்பாடகி ஒருத்தர் பாவயாமி ரகுராமம் பாடினார்.ராகம் எல்லாம் சரியாதான் இருந்துச்சு. ஆனா சாஹித்யம் தான் கேட்க முடியலை.சிலபேர் Paaவயாமி ன்னு பாடறா! பாவம்!

சா.மாமி: ஆமாம். எந்த பாஷையா இருந்தாலும் அர்த்தம் புரிஞ்சு பாடணும். நிறைய பேருக்கு ராக சுத்தம், ஸ்வர சுத்தம் வந்தாலும் சாஹித்ய சுத்தம் வர மாட்டேன்றது.

கோ.மாமா: சரி மாமி. சுஹாசினி சொல்றாப்டி தமிழ்ல இருந்தா சுலபமா புரிஞ்சிண்டு பாடிடலாம். 'மெப்புலகை கன்னதாவு நப்பு படக விர்ர வீகி' -ஏதாவது ஒண்ணு புரியறதா?

சா.மாமி: 'பணத்துக்காகவும் புகழுக்காகவும் பிறர் வீட்டு வாசலில் தவம் கிடந்து' ன்னு அர்த்தம்.

கோ.மாமா: இதை தான் புரந்தர தாசரும் 'தனதாசெகாகி நானு தணிகர மனேகள' ன்னு பாடறார்.

சா.மாமி: அதே தான். சரியாவே பாடினாலும் பாடகர்கள் செய்யும் இன்னொரு தப்பு நிரவல் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் சாஹித்யம். ராமா நன்னு ப்ரோவராவுல 'மெப்புலகை கன்னதாவு' அப்படீன்னு திரும்பத் திரும்ப நிரவல் பண்றா. எம்.எஸ்.ஸே கூட அதை தான் நிரவல் பண்றா.அது த்யாகராஜர் தன்னைப் பற்றி நொந்துகொண்டு பாடிய ஒரு வரி. அதைத் திரும்பத் திரும்ப பாடறது நிறைஞ்ச சபையில் அவ்ளோ நல்லா இருக்காது இல்லையா? பஞ்சமத்துல எடுப்புங்கரதால நி மெப்புலகை அப்படின்னு அழகா ஸ்வரம் போடலாம். ஆனா எடுப்பு சரியா வருதுன்னு எந்த வரியையும் நிரவல் செய்ய எடுத்துக்கக் கூடாது. ரி ராமா நன்னு ப்ரோவரா ன்னு பாடினாலும் அழகா இருக்குமோ இல்லையோ?

கோ.மாமா: அப்ப இறைவனைப் பெருமையா பேசும் வரிகள்ல நிரவல் செய்யணும் இல்லையா?

சா.மாமி: சரிதான். ஆனா அதுலயும் கவனமா இருக்கணும். சமஸ்கிருதத்துல பொதுவா ஒரு வார்த்தைக்கு முன்னாடி '௮' சேர்த்தா அதோட எதிர்மறை அர்த்தம் வந்துரும்.இப்ப ஒரு பாட்டுல ராகவேந்திர சுவாமிகளைப் பத்தி 'த்வைத மதாம்புதி சந்த்ர' அப்படின்னு பாடறான்னு வச்சிக்குவோம்.
த்வைத மதம் என்னும் சமுத்திரத்தில் எழும் சந்திரனேன்னு அர்த்தம். அதை நிரவல் செய்ய எடுத்துக்கக் கூடாது.நிரவல் பண்றப்ப நம்மை அறியாம அகாரம் சேர்ந்து 'அத்வைத மதாம்புதி சந்த்ர' அப்படின்னு பாடி ராகவேந்திரர் அத்வைதத்தை வளர்த்தார் ன்னு அர்த்தமே எசகு பிசகா மாறிடும்.

கோ.மாமா: கலக்கறேள் மாமி.சரி இன்னும் நிறைய பேரை அழைக்க வேண்டி இருக்கு,நான் இப்போ கிளம்பறேன்.. இன்னும் சங்கீதத்தைப் பற்றி நிறைய பேசலாம்.குட்டிப் பொண்ணு பிந்துவுக்கு மூணு வயசிலேயே சரளி வரிசை ஆரம்பிச்சுர வேண்டியது தான்.

சா.மாமி: ரொம்ப சரி. உங்க பேர் சொல்ல ஒரு பேத்தியாவது இருக்கட்டும். நம்ம சங்கீதம் நம்மோடவே முடிஞ்சுர வேண்டாம்.ஏம்மா சந்திரா, மாமாக்கு ஸ்ட்ராங்கா ஒரு பில்டர் காபி கொடும்மா...


கோ.மாமா: மாமி இது காபி சாப்பிடற டயமா? வேண்டாம் விடுங்கோ

சா.மாமி: வள்ளுவர் சொல்றதைப் போல செவிக்கு உணவு இல்லாதப்பவே பில்டர் காபி குடுச்சுக்கங்கோ.
இன்னிக்கு சாயந்திரம்
ஏதாவது ஆர்.டி.பி கேட்டு அப்புறம் சாப்பிடறதைக் கூட மறந்துடப் போறேள்.


சமுத்ரா



Friday, October 14, 2011

தேநீர்ப்பேச்சு -1


தேநீர்ப் பேச்சு -1 உங்களை வரவேற்கிறது.

(கலைடாஸ்கோப் போல தேநீர்ப் பேச்சு நீண்டதாக இல்லாமல் நண்பர்களுடன் தேநீர் இடைவெளியில் அரட்டை அடிப்பது போல இருக்கும்.ஒவ்வொரு டீ-டைமுக்கும் கற்பனை கதாபாத்திரங்கள் வருவார்கள். அவரகள் ஃ பிகரில் இருந்து பீத்தோவான் வரை நிறைய விஷயங்கள் பேசுவார்கள் )


ரகு : என்ன மீனா? ரொம்ப பிசியா? Pantry பக்கம் வரதே இல்லை போல இருக்கு?

மீனா: ஹ்ம்ம் இந்தக் கொடுமையைக் கேளு..டைலி நாலு டெஸ்ட்-கேஸ் பண்ணனுமாம். எங்க மானேஜர் சொல்லிட்டார்.

ரகு: சரி விடு..எப்பவும் போல 'பாஸ்' தான பண்ணப் போறே..

மீனா: டேய், அடி வாங்குவ..

ரகு: சரி சரி விடு..உனக்கு தான் ஹைக்கூ என்றால் பிடிக்குமே. ஒண்ணு சொல்லேன்.

மீனா: டேய், திங்கக்கிழமை காலைல பத்து மணிக்கு ஆபீஸ்ல ஹைக்கூ கேட்கறியே? சைக்கோவா நீ?

சரி: கூல்டவுன்...நானே ரெண்டு மூணு சொல்லறேன்..ராஜு என்பவர் எழுதி இருக்கார். தமிழ்ல சொல்றேன்..

I
ride on long lonely road
horizon on one side darkness on other ...
destination unknown ..

ஒரு நீண்ட சாலையில் நடக்கிறேன்.
ஒருபக்கம் தொடுவானம்; ஒருபக்கம் இருட்டு
செல்லும் இடம் தெரியவில்லை.

மீனா: இப்ப சாப்ட்வேர்ல இருக்கறவங்க எல்லாம் இப்படி தான் இருக்கறாங்க.அதுக்க என்ன இப்போ?

ரகு: இன்னொன்னு கேளு..

I want to fly,
the sky wants me,
but earth has me by feet

நான் பறக்கவேண்டும்
வானம் என்னை அழைக்கிறது
ஆனால் என் வேர்கள் பூமியில் இருக்கின்றன.

மீனா: உனக்கு என்ன ஆச்சு? உன் கேர்ள் பிரென்ட் விட்டுட்டு போயிட்டாளா?

ரகு: ஹி ஹி
..கேர்ள் பிரென்ட் என்றதும் ஞாபகம் வருது..அவரது இன்னொரு ஹைக்கூ..


A boy so afraid of the dark
but now in the dark with her
so afraid of being a
boy

ஆணாக இருந்தாலும்
இருட்டு என்றால் பயம்
இன்று உன்னுடன் இருட்டில்
ஆணாக இருப்பதற்கே பயம்!

மீனா: எல்லாப் பசங்களும் இப்படி தானா?..சரி நல்லா தான் எழுதி இருக்கார்.எப்படி தான் உனக்கு ஆபீசில் ஹைக்கூ எல்லாம் படிக்க டைம் இருக்கோ?அது சரி.நிறைய பேர் இந்த ஹைக்கூ பைத்தியம் பிடித்து அலையறாங்களே? உண்மையில் ஒரு ஹைக்கூ எப்படி இருக்கணும்?

ரகு: சுஜாதா ,ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் னு ஒரு புக் எழுதி இருக்கார். உன் ஜி.மெயில் ஐ.டி.கொடு ..அனுப்பறேன்.
SONET,SDH கருமம் எல்லாம் கொஞ்ச நேரம் மறந்து விட்டு படிச்சுப் பாரு.அந்த புக்கே இப்படி தான் ஆரம்பிக்குது.

நள்ளிரவில்
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து சார்த்தப்பட்டது.

மீனா: டேய், உன்னை நான் இப்போ சாத்தப் போறேன்..டைம் ஆயிடுச்சு..கதவு சாத்தறது, காப்பி குடிக்கறது எல்லாம் கவிதையா?

ரகு: கவிதை இல்லை மீனா.ஹைக்கூ.அனுபவத்தை குறைந்த பட்ச சொற்களால் வடிப்பது.சரி ரெண்டு நிமிடத்தில் முடிச்சுர்றேன். பாஷோ என்பவர் எழுதிய இந்த ஹைக்கூ வை அடித்துக் கொள்ள இது வரை ஒரு ஹைக்கூ எழுதப்படலை என்கிறார்கள்.

பழைய குளம்
தவளை குதிக்கையில்
தண்ணீரில் சத்தம்.

சுருக்கமாக சொல்வது என்றால் ஹைக்கூ என்பது ஒருவித தியானநிலையை படம் பிடிக்கும் ஒரு கேமரா 'க்ளிக்'. சில சமயம் நமக்கு உணர்வுப் பூர்வமான அனுபவங்கள் சில ஏற்படும். 'உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது;அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது' என்று கமல் சொல்வாரே. அது மாதிரி ...அந்த உணர்சிகளின் பிரவாகத்தில் நம்மால் அதை வார்த்தைகளில் கொண்டு வர முடியாது. ஆனாலும் கொண்டு வர முயலும் ஒரு முயற்சி தான் ஹைக்கூ.எவன் வேண்டுமானாலும் ஹைக்கூ எழுதி விட முடியாது. ஒரு வித புத்தா நிலையில் இருக்கிறவர் மட்டுமே எழுத முடியும். இந்த இயந்திர வாழ்வில் இயந்திரமாகப் போய்விட்ட நம்மால் தூரத்தில் சார்த்தப்படும் கதவையும், தவளை குதிக்கும் சத்தத்தையும்
கவனிக்க முடியுமா? கவனிக்க வேண்டும்.அப்ப தான் ஹைக்கூ எழுதும் தகுதி நமக்கு வரும்.

மீனா: நினைவு எங்கோ நீந்திச் செல்ல கனவு வந்து கண்ணைக் கிள்ள ,நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா கண்ணே அப்படின்னு ஜோதிகாவைத் தொலைத்த சூர்யா மாதிரி திரிந்தால் தான் ஹைக்கூ வருமா?

ரகு: இல்லை. புத்தா நிலையில் கனவு வராது.

மீனா: அப்ப யாருக்குமே புரியாம எழுதுனா தான் அது ஹைக்கூ இல்லையா?எழுதுறவருக்காவது புரியுமா?

ரகு: விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்கற?

மீனா: சரி 'கேப்புசினோ' ஆறியே போயிருச்சு. எனிவே, ஹைக்கூ பற்றி மொக்கை போட்டதற்கு நன்றி..சரி உன்னோட ஹைக்கூ ஒண்ணு சொல்லேன்..

ரகு: Here you go..

சிக்னலில் வரிசையாக
வாகனங்கள்
திடீரென்று விதியை மீறும் -ஒரு
சைக்கிள்.

மீனா: இப்பவே கண்ணைக் கட்டுதே.. இதுக்கு அந்த தவளை ஹைக்குவே பரவால்லை.

ரகு: சரி சரி அங்கே என் மேனேஜர் சொட்டைத் தலை முறைச்சு முறைச்சு பாக்குது..See you later...

சமுத்ரா

Wednesday, October 12, 2011

கலைடாஸ்கோப் - 41

லைடாஸ்கோப் - 41 உங்களை வரவேற்கிறது.



$ ஒரு வினாடி நேரத்தை அப்படியே உறைய வைக்கும் சக்தி புகைப்படங்களுக்கு இருக்கிறது என்று சொல்வார்கள். புகைப்படம் என்பது ஒரு விதமான டைம் மெஷின். பார்த்த மாத்திரத்தில் நம்மை கடந்த காலத்துக்கு நேரடியாகக் கொண்டு போய் சேர்த்து விடுபவை அவை. பழைய ஆல்பங்களைப் புரட்டிப் பார்ப்பது என்பது ஏதோ ஒரு பொக்கிஷத்தை திறந்து பார்ப்பது போல. கருப்பு வெள்ளையில், நம் தாத்தாக்கள் குட்டிப் பையன்களாக, பாட்டிகள் குட்டிப் பெண்களாக, இன்றைய நோயாளிகள் அன்றைய பலசாலிகளாக.(எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!) ஒரு ஆல்பத்தைப் புரட்டுவது என்பது ஒரு வாழ்க்கையையே புரட்டுவது போல.சரி எதற்காக சொல்கிறேன் என்றால் நம் இந்தியத் துணைக்கண்டத்தின் சென்ற இரண்டு நூற்றாண்டுகளின் மனிதர்களையும் ,காட்சிகளையும்,சம்பவங்களையும் படம்பிடித்த புகைப்படங்களை காட்சிக்கு வைக்கிறது http://www.oldindianphotos.in/ என்ற வெப் சைட். இங்கே, பழமை ததும்பும் நம் இந்தியாவின் அழகை ஆயிரக்கணக்கான படங்கள் மூலம் கண்டு மகிழலாம்.


$$ .com டொமைனுக்கு மாறியதும் வாசகர்களின் வருகை குறைந்துள்ளது போலத் தோன்றுகிறது. சொந்தமாக வெப்சைட் வைத்துள்ளதால் பெரிய எழுத்தாளர் (?) ஆகி விட்டேன் என்று நினைக்காதீர்கள்.அதே பழைய சமுத்ரா தான். (உண்டதே உண்டு நித்தம் உடுத்ததே உடுத்தி கோலம் கொண்டதே கொண்டு ...)வெப்சைட்டுக்கு (வருடம்) பத்து டாலர் பணம் கட்டுவதற்கு கடன் அட்டை (அதான் கிரெடிட் கார்டு!)வேண்டும். அதையே கடன்வாங்கி தான் கட்டினேன்.ஹ்ம்ம்..

அப்புறம் இன்னொரு விஷயம். பல்சுவை என்ற பெயரில் அன்றைக்கு பேப்பரில் வந்த செய்திகளை எழுதுவதோ, அரசியலில் ஜெயலலிதா, விஜயகாந்த் ,தங்கபாலு பற்றி எழுதுவதோ எனக்கு உடன்பாடு இல்லை.அரசியல் ஒரு சாக்கடை என்றால் அதை என் கிளற வேண்டும்? எனவே சினிமா, அரசியல், காதல் கவிதை இதையெல்லாம் நீங்கள் எதிர்பார்த்தால் samudrasukhi.com ஐ உங்கள் FAVORITES இல் இருந்து நீக்கி விடவும்.

(ஒரு exception : 'கஜல்' டைப் காதல் கவிதைகளை எழுதலாம் என்று ஒரு ஐடியா இருக்கிறது) கஜல் கவிதை என்றால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு: அதில் பால் வேறுபாடு இருக்கக்கூடாது. ஒரே கவிதையை ஆண் பெண்ணை நோக்கியும்
பெண் ஆணை நோக்கியும் பாடலாம். 'பெண்ணே உன் உதடுகள் படுத்திருக்கும் வரிக்குதிரை' என்றெல்லாம் எழுதினால் அதில் மறைமுகமாகக் காமம் கலந்து விடுகிறது. சினிமாவில் இந்த கஜல் டைப் பாடல்களைப் பார்ப்பது அபூர்வம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் "என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா, உன்னை சீராட்டும் பொன்னூஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா, உன்னை நான் என்பதா!' இந்தப் பாடலை ஆண் பெண்ணை நோக்கிப் பாடலாம்,பெண் ஆணை நோக்கிப் பாடலாம்.ஏன் ஒரு பக்தன் கடவுளை நோக்கிக் கூடப் பாடலாம்.அர்த்தம் தெரியாத ஸ்லோகங்களை முணுமுணுப்பதை விட கோவிலில் கடவுள் முன்னால் இது போல கஜல் சினிமாப் பாடல்களை மனதுக்குள் பாடிப் பாருங்கள்.கடவுள் தப்பாக நினைக்க மாட்டார். (யாரது? நாக்கமுக்க எல்லாம் கடவுள் முன்னாடி பாடக்கூடாது ஆமாம்!)

இன்னொரு விஷயம்: ஒரு காதல் கவிதையைப் படிக்கும் போது நம் இதயத்துக்குள் யாரோ சம்மட்டியால் ஓங்கி அடிப்பது போல இருக்க வேண்டும். கவிதை எழுதியவரை சம்மட்டியால் அடிக்கலாம் என்று தோன்றக் கூடாது.அப்படி எழுத முடியாவிட்டால் தயவு செய்து யாரும் கா.கவிதைகளை எழுதாதீர்கள் (#என்னை சொன்னேன்!)


$$$ சீரியலில் அழுகை இருக்கலாம். அழுகையே சீரியலாக இருக்கும் பெருமை 'நாதஸ்வரம்' சீரியலுக்குப் போகிறது. மேலும் வசனமே இல்லாமல் அழுவது, விளம்பர இடைவேளை இல்லாமல் அழுவது என்று அழுவதில் பல புதுமைகளைப் புகுத்திய பெருமையும் நாதஸ்வரம் சீரியலுக்கே போகிறது. சில பேர் அழுதால் இயல்பாக இருக்கும்.அதைக் கூட தலைவிதியே என்று பார்க்கலாம்.சில பேர் அழுதால் காமெடியாக இருக்கும்.(உதாரணம்: பூவிலங்கு மோகன்) .சிரிப்பது, அழுவது, தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது, விக்குவது,இருமுவது இந்த எல்லா செயல்களையும் ஒருசேர செய்வது போல இருக்கிறது அவர் அழுவதைப் பார்க்கும் போது!கொடுமை என்ன என்றால் அவர் நாதஸ்வரம் வாசிப்பது. நல்ல வேளையாக இது வரை ஒரே ஒரு தடவை தான் அவர் வாசித்திருக்கிறார் .சின்னக் குழந்தைகள் கலர் பீப்பி வாசிப்பது போல வாசிக்கிறார்! நாதஸ்வரம் என்று மங்களகரமாகப் பெயர் வைத்து விட்டு சதா இழவு வீடு போல அழுது கொண்டு இருக்கிறார்கள்.இன்னொன்று அதன் இயக்குனர் டைலர் கோபி. அவர் ஏதாவது அப்பா பாத்திரம் எடுத்துக் கொண்டு செய்திருக்கலாம். காதல் காட்சிகளில் அவரும் அவர் வயதும் பொருந்துவதே இல்லை!

ஆனால் சீரியல் கேரக்டர்களுக்கு தொடர்ந்து துன்பங்கள் வரும்படி காட்டுவதில் ஒரு சைக்காலஜி இருக்கிறது

# சிலர் பிறரது துன்பங்களைப் பார்த்து உள்ளூர மகிழ்வார்கள் (சீரியலாக இருந்தாலும்)
# அந்த செல்வத்துக்கு வரும் சோதனைகளுக்கு முன்னால் நம்முடையது எல்லாம் ஜுஜுபி
# கஷ்டம் வந்தாலும் எப்படி மனம் தளராம இருக்கணும் என்று நம்ம துளசியைப் பார்த்து தெரிஞ்சுக்கணும்

ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம். ஒரு சீரியலில் எல்லாரும் உட்கார்ந்து சந்தோஷமாக சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு வில்லங்கம் கூடிய சீக்கிரம் வர இருக்கிறது என்று தைரியமாகச் சொல்லலாம். (கூடிய சீக்கிரம் என்ன? அப்போதே பின்னால் நின்று கொண்டிருக்கும் ஜெயந்தி குண்டுக் கண்களை உருட்டி ஒரு சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பாள்)

$$$$ தமிழ் இலக்கணத்தில் 'அணி' தெரியுமா? சரி சரி தமிழே ஒழுங்காகத் தெரியாது என்கிறீர்களா? கொஞ்சம் விளக்கலாம்.அணி என்றால் ஒரு செய்யுளையோ கவிதையையோ கு டுத்துது.பெண்களுக்கு எப்படி ஒட்டியாணம், நெக்லஸ், நெத்திச் சுட்டி, கொலுசு,கம்மல்,வளையல், FAIR N LOVELY எல்லாம் இருக்கிறதோ அதே போல ஒரு கவிதைக்கும் நிறைய அணிகள் இருக்கின்றன.

ஒரு செய்யுளைக் கேட்ட உடனேயே அதில் என்ன அணி வருகிறது என்று சொல்லும் திறமை தமிழர்களுக்கு இருக்க வேண்டும். (பல பேர் இன்று இது தமிழா என்று அப்பாவியாகக் கேட்கும் நிலையில் தான் இருக்கிறார்கள்!)சரி தமிழ் தானே, கொஞ்சம் முயற்சி செய்து கற்றுக் கொள்வோம்.ஒன்றும் பிரம்ம வித்தை இல்லை. முதலில் எளிமையான இயல்பு நவிற்சி அணி. உள்ளதை உள்ளபடி சொல்வது. ஆனால் இது நம்மில் நிறைய பேருக்கு கஷ்டம். நாம் எப்போதும் ஒன்றை மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடி சொல்ல விரும்புவது இல்லை.சுஜாதா சொல்வது போல 'வரலாறு காணாத கூட்டம்' என்றால் மைக்காரர்களையும் சேர்த்து பதினைந்து பேர். சிறிய தலைவலி வந்தாலும் அதை நாம் மிகைப்படுத்தி 'தலைவலியில் உயிரே போகிறதே' என்கிறோம்.இயல்பு நவிற்சி அணி என்பது எளிமையாக இருந்தாலும் அது பிளாட்டின நகை போல. அதை நிறைய கவிதைப் பெண்கள் அணிய விரும்புவதே இல்லை! காதல் கவிதை என்றால் அதில் கண்டிப்பாக 'மிகைப்படுத்துதல்' இருக்க வேண்டும். 'அந்த நிலாவத்தான் நான் கையிலே பிடிச்சேன்' 'கைகால் முளைத்த காற்றா நீ' 'கடல்மேல் சிவப்பு கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்' 'அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி' என்றெல்லாம் சாத்தியமில்லாததை எழுத வேண்டும். இ.ந.அணி தமிழ்த் திரையிசைப் பாடல்களில் எங்கே வந்திருக்கிறது என்று தேடினேன். ஒன்று கூட கிடைக்கவில்லை.ஏதாவது ஒரு இடத்தில் மிகைப்படுத்தி விடுகிறார்கள்.தமிழ் இலக்கியத்தில் உதாரணம் வேண்டும் என்றால் எங்கெங்கோ போக வேண்டாம். நம் ஆண்டாளையே எடுத்துக் கொள்ளலாம்.காலை மலர்வதை எந்த பில்ட்-அப்பும் இன்றி மிக இயல்பாக வர்ணிக்கிறாள் :-

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண். செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்..

(உங்கள் தோட்டத்தில் காலையில் மலரும்
செங்கழுனீர் பூக்கள் மலர்ந்தன. மாலையில் மலரும் ஆம்பல் பூக்கள் கூம்பின.,,இப்படி இயல்பாக ஆரம்பிக்கும் ஆண்டாள் கடைசியில் பங்கயக் கண்ணனைப் பாடேலோரெம்பாவாய் என்று கண்ணனின் கண்களை தாமரையோடு ஒப்பிட்டு தன இயல்பு நவிற்சியில் இருந்து விலகி விடுகிறாள்)

எங்கேயோ படித்தது:

ஒரு பெண் அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து தான் அம்மாவிடம் 'அம்மா என்னை ஒரு சிங்கம் துரத்திக் கொண்டு வந்தது'
என்றாளாம். அம்மா அலட்சியமாக வெளியே வந்து பார்த்ததில் ஒரு தெரு நாய்தான் நின்றிருந்ததாம்.

"இதப் பாரு , உனக்கு இதோட லட்சம் தடவை சொல்லியாச்சு, எதையும் exaggerate பண்ணாதேன்னு' என்றாளாம்.

(புரிகிறதா?)

$$$$$ இரண்டு கவிதைகள்

> C
===
ஒளியை விட வேகமானது
எது தெரியுமா?
'ஹலோ' என்ற வார்த்தை தான்
எவ்வளவோ தூரத்தில் இருப்பவர்களை
எவ்வளவு சீக்கிரம்
பக்கத்தில் கொண்டுவருகிறது?

God is for sale
==========


கடவுள்கள் எவ்வளவு சீக்கிரம்
விற்கப்பட்டு விடுகிறார்கள்!
சிவப்பு சிக்னலின் அவசரத்தில்;
நடைபாதை கடைகளின்
களேபரத்தில்;
பரபரப்பான நெடுஞ்சாலை
வழித்தடங்களில்;
மனிதர்கள் நிரம்பி வழியும்
கோவில் பிரகாரங்களில்
பேருந்துகளின் இரைச்சலில்
ஜன்னல்வழியாக;
கடவுள்கள் எவ்வளவு சுலபமாக
விற்கப்பட்டு விடுகிறார்கள்!



$$$$$$ ஓஷோ ஜோக்

ஒரு ஆள் பைக்கில் போய்க் கொண்டிருந்த போது பாலத்தின் மேலே நின்று கொண்டு ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதைப் பார்த்தான். அருகில் சென்று 'என்ன செய்கிறாய்' என்று கேட்டான்.

'நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்'

'சரி, தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எனக்கு ஒரு முத்தம் கொடு'

இருவரும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.

'சரி நீ ஏன் தற்கொலை செய்து கொள்கிறாய்?'

'என் பெற்றோர்களுக்கு ஒன்று பிடிக்கவில்லை; எதிர்க்கிறார்கள்'

'என்ன? உன் காதலையா?'

'இல்லை; நான் பெண்ணைப் போல உடை உடுத்துவதை'

இப்போது பைக்கில் வந்தவன் பாலத்தில் இருந்து கீழே குதிக்கிறான்.


சமுத்ரா