Monday, March 5, 2012

சமுத்ரா திமிர் பிடித்தவரா? -ஓர் அலசல்

இந்த ப்ளாக்கின் ஓனர் (அது நான் தான் என்று நினைக்கிறேன்) மேல் வைக்கப்படும் சில குற்றச்சாட்டுகள்:

அவர் :


* திமிர் பிடித்தவர்
* மற்ற யாருடைய ப்ளாக்கிற்கும் சென்று பின்னூட்டம் போடாதவர்
* தனக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாதவர்
* காப்பி அடித்து எழுதுபவர்
* ஆங்கிலத்தில் இருப்பதை மொழிபெயர்த்து அப்படியே தமிழில் எழுதுபவர்

-இன்னும் ஏதாவது இருந்தால் இப்போதே சொல்லிவிடவும். ஏனென்றால் நான் பாட்டுக்கு நான் அபாரமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்; கூடிய சீக்கிரம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்து விடும் என்று கற்பனைக் குதிரையை கட்டுப்பாடின்றி தறிகெட்டுப் பறக்க விட்டுக் கொண்டிருந்தேன். என் கற்பனைக் குதிரைக்கு கடிவாளம் இட்டு கட்டுப்படுத்தியதற்கு
உங்களுக்கெல்லாம் முதலில் நன்றிகள்!

மேலே கூறிய குற்றச்சாட்டுகள் ஓரளவு உண்மை தான். எனவே இவற்றைத் தவறு என்று நிரூபிக்கப் போவதில்லை. ஆனால் இதில் உள்ளே நிதர்சனங்கள் என்ன என்று சொல்லி விடுகிறேன்.

பெரிய எழுத்தாளர் ஆக வேண்டும் என்றோ , ஒரு நாள் தமிழ்த் திரைப்பட இயக்குனர் யாராவது என் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதித் தருவீர்களா என்று கேட்பார் என்ற ஆசையிலோ நான் எழுத ஆரம்பிக்கவில்லை.மனிதனுக்கு மொழி என்பது ஒரு camouflage என்று மதன் (ஹாய் மதன்) சொல்கிறார். அதாவது தான் மனதில் நினைப்பதை வெளிக்காட்டாமல் இருப்பதற்கு தான் மனிதன் மொழியைக் கண்டுபிடித்தான். அது போல தான் எழுத்தும். நம் மனதில் இருப்பதை வெளிப்படுத்த தான் எழுதுகிறோம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. எழுத்தும் ஒரு மறைப்பு தான். நாம் எதுவாக இல்லையோ அதைப்பற்றி தான் எழுதுகிறோம். உதாரணமாக நான் ஓஷோ பற்றி இவ்வளவு எழுதுகிறேன். அப்படியென்றால் நான் ஓஷோவை சரியாக இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். இயற்பியல் பற்றி எழுதுவது எனக்கு இன்னும் இயற்பியல் சரியாகத் தெரியாது என்பதையே காட்டுகிறது.எனவே ஒரு camouflage ஆகத்தான் நான் எழுதத் தொடங்கினேன்.என் எழுத்தின் மூலம் என்னை மறைத்துக் கொள்ள!!ஆனாலும் இந்த ப்ளாக்கின் ஆரம்ப கால பதிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் நான் ஒரு அமெச்சூர்-ஆக இருந்திருக்கிறேன் என்பது தெரியவரும் (இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன் என்பது வேறு விஷயம்) மறுமொழி எழுதுங்கள் என்று கிட்டத்தட்ட கெஞ்சியிருப்பேன். யாராவது கமென்ட் போடுகிறார்களா என்று தினமும் எதிர்பார்ப்பேன்.இது தவிர்க்க முடியாத ஒன்று. புது ப்ளாக் மோகம்.முப்பது நாளில் போய் விடும் . ஆனால் இப்போதெல்லாம் I'm used to reality.ப்ளாக் எழுதுவதால் பெரிதாக லாபம் எதுவும் கிடைக்காது ; தமிழில் எழுதுவதால் Ad -sense விளம்பரங்கள் மூலம் காசும் சம்பாதிக்க முடியாது என்பதெல்லாம் தெரிய வந்துள்ளது. எழுதி தான் காசு சம்பாதிக்க வேண்டும் என்பது இல்லை. பன்னாட்டு நிறுவனத்தில் இருப்பதால் ஓரளவு DECENT LIVING -கிற்கு வகை இருக்கிறது.'செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசித் தினந்தினமும் பல்லினைக் காட்டி' என்று பட்டினத்தார் சொல்லும் நிலைமை இன்னும் வரவில்லை.

ஐ.டி. கம்பெனியில் வேலையில் இருந்து கொண்டு 'இல்பொருள் உவமை அணி' 'எலக்ட்ரான் -ஃபோட்டான் வினைகள்' என்று தமிழில் வேலை மெனக்கெட்டு ப்ளாக் எழுத வேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லை. In fact இப்படி எழுதுவதால் நிறைய வாய்ப்புகள் கைநழுவிப் போயிருக்கின்றன.
ப்ளாக் எழுதும் நேரத்தில் ஒரு ஃபிகரை 'கரெக்ட்' செய்து சுற்றி இருக்கலாம். அவளையே கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம்.முன்பின் தெரியாத பெண் ஒருத்தி 'உன் BANK பேலன்ஸ் என்ன? சொந்த வீடு இருக்கிறதா? கார் இருக்கிறதா என்று தனியே அழைத்துக் கேட்கும் சங்கடங்களாவது இல்லாமல் இருந்திருக்கும்.ப்ளாக் எழுதும் நேரத்தில் மேனஜரை தாஜா செய்தோ கஸ்டமரை தாஜா செய்தோ இந்நேரத்தில் வெளிநாடு ஒன்றில் நான் உண்டு என் குடும்பம் உண்டு, இலக்கியமாவது மண்ணாங்கட்டியாவது என்ற மனப்பான்மையுடன் செட்டில் ஆகி இருக்கலாம் தான் . இந்த ப்ளாக்கில் இருந்தே ஒரு கவிதை:

கம்பன் விற்பனைக்கு:

பெண் பார்க்கச் சென்ற போது
சம்பளம் எவ்வளவு என்று கேட்டார்கள்..
சொந்த வீடு இன்னும் வாங்கவில்லையா?
லோன் ஏதாவது இருக்கிறதா?
வெளிநாடு எதேனும் சென்றிருக்கிறாயா?
அப்பாவுக்கு பென்சன் வருகிறதா? என்றெல்லாம்...
ரிலேடிவிட்டி தியரியும்
கம்பன் இலக்கியமும்
பஞ்சரத்ன கீர்த்தனைகளும்
ப்ளாக் எழுதுவதற்கு மட்டும் பயன்படுகின்றன.....


ஆனால் ஏன் இப்படி லூசு மாதிரி எழுதுகிறேன்? பிழை எதுவும் இல்லையே என்று மூன்று முறை படித்துப் பார்த்து பப்ளிஷ் செய்கிறேன்? DONNO. MAY BE நான் எழுதியதைப் படித்த ஒரு நூறு உதடுகளில் ஒரு இரண்டு உதடுகளிலாவது படித்து முடித்ததும் ஒரு சிறு புன்னகை அரும்பி இருக்குமானால் அது தான் எனக்கு உண்மையான மகிழ்ச்சி. திமிர், கர்வம் , தலைக்கனம் எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. சரக்கு இருந்தால் தானே திமிர் இருக்கும்? நான் செய்வதெல்லாம் அங்கங்கே கிடக்கும் மலர்களை கோர்த்து சரமாக முடிப்பது மட்டுமே.மேலும் தமிழில் எழுதுவதற்கு எனக்கெல்லாம் அருகதை இருக்கிறதா என்றே தெரியவில்லை.

'விண் பறக்கும் கழுகுகண்டு வேட்கை கொண்டு
வீட்டு ஈ யதன் சிறகை விரித்தல் போல
கண்பறிக்கும் கதிர்கண்ட கானகத்து மின்மினியும்
களிப்புற்று ஒளிச்சிறகைக் காட்டல் போல
கம்பன் வாய்த்தமிழை கவிக்கோமான் இளங்கோவின்
கவித்தமிழை வள்ளுவனின் வண்டமிழை
கொம்பன் யான் எழுதப் புகுந்தேன் காசினியில்
கற்றுணர்ந்த சான்றோர்காள்
பொறுத்தருள்வீரே !

என்று சொல்வது போல நானும் ஏதோ எழுதுகிறேன் அவ்வளவு தான்.


ஒரு விதத்தில் பார்த்தால் எழுத்து ஒருவகை இசை. மௌன சங்கீதம். வாத்தியம் வாசிப்பதை நிறுத்திய பின் வரும் சங்கீதத்தைக் கேள் என்று தான்சேனின் குரு சொல்வதுண்டாம் .சில வகையான சங்கீதங்களைக் கேட்டால் உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விடும். அது போல சிலபேரின் எழுத்துகளைப் படித்தாலும் தான்.இனிமையான சங்கீதம் போல எழுத்தும் உங்களுக்கு கவலையை மறக்க வைத்து புத்துணர்வு அளிக்கக்கூடும். மனசு சரியில்லை என்றால் நம்மில் பெரும்பாலானோர் இசையையே விரும்புவோம் .சில பேருக்கு 'க்ஷீர சாகர சயனா' சில பேருக்கு இளையராஜா சில பேருக்கு ரகுமான் சில பேருக்கு குத்துப்பாட்டு; ஆனால் அது எல்லாமும் இசை தான். அதே போல சிலரின் எழுத்துகளும் உங்களுக்கு RELAXATION கொடுக்க முடியும்.மனசு சரியில்லை என்றால் எஸ்.ரா வையோ ஜெயகாந்தனையோ சாரு நிவேதிதாவையோ நீங்கள் படிக்கக் கூடாது. அவை உங்களை மேலும் கவலை கொள்ள வைத்து விடும்.சுஜாதாவின் எழுத்துகளைப் படிக்கலாம். அவை ஒரு மாஜிக் போல செயல் பட்டு உங்கள் கவலையை இருந்த இடம் தெரியாமல் விரட்டி விடும்.சாரு (நிவேதிதா)நன்றாகவே எழுதுகிறார். ஆனால் அதைப் படிப்பதற்கு நாம் வேறு ஒரு தளத்தில் இயங்க வேண்டியுள்ளது. நவீன ஓவியம் போன்றது அது. சாதாரண ரசிகர்கள் பார்த்தால் பைத்தியம் பிடித்து விடும். ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் என் எழுத்தைப் படித்து யாராவது ஒருவர் , ஒரே ஒருவர் தன் கவலையை மறந்து RELAXED ஆக FEEL செய்தார் என்றால் அதுதான் எனக்கு நூறு பிரமோஷன் கிடைத்த நூறு கோடி சம்பாதித்த சந்தோஷம்.

அடுத்து இந்தப் பின்னூட்டம், கருத்துரை, மறுமொழி WHATEVER ..ஒரு பத்திரிகையில் ஒரு நல்ல கதை படிக்கிறீர்கள். அதை எழுதியவரை உடனுக்குடனே நீங்கள் பாராட்ட முடியாது.வாசகர் கடிதம் எழுதிப் போட்டு அடுத்த வாரம் வரை வெயிட் செய்ய வேண்டும். அந்தப் பாராட்டையும் அதை எழுதியவர் படிப்பாரா என்பது தெரியாது.ஆனால் வலைப்பூ ஒன்றில் உடனுக்குடன் பாராட்ட முடியும் அல்லது திட்ட முடியும். அதை எழுதியவரும் நன்றி என்று உடனடியாக சொல்ல முடியும்.எனக்கு இந்த கமென்ட் செய்வது கொஞ்சம் பேஜாரான விஷயம். I 'M LAZY ...நீ என்ன என் எழுத்தைப் பற்றி கமென்ட் செய்வது என்ற திமிரெல்லாம் கிடையாது.யாருடைய பதிவாவது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் நிச்சயம் என் சோம்பேறித் தனத்தையும் மீறி கமென்ட் போடுவேன். அதுவும் GOOD ONE , NICE POST என்றெல்லாம் தான்.அந்த எழுத்து உங்களை பாதித்தது. அதை எழுதியவருக்கு நீங்கள் என்னதான் செய்ய முடியும்? ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும் உங்களால் உங்கள் நன்றியை வெளிப்படுத்த முடியாது. எனவே கமென்ட் போடுவது என்பது ஒரு ACKNOWLEDGMENT அவ்வளவே.

நான் மறுமொழி சொல்ல மாட்டேன் என்று தெரிந்திருந்தும் என் பதிவுகளுக்கு கமென்ட் செய்பவர்கள் தான் (என்) உண்மையான வாசகர்கள். மற்றவர்கள் எல்லாம் GIVE AND TAKE வியாபாரிகள். இந்த ப்ளாக்கிலும் அப்படிப்பட்ட வியாபாரிகள் வந்தார்கள் ; வருகிறார்கள்; நன்றாக இருக்கிறது என்று கமென்ட் போட்டு விட்டு எங்கள் கடைப்பக்கம் கொஞ்சம் வாருங்கள் என்று அழைப்பார்கள். எனக்கு இந்த வியாபாரம் பிடிக்கவில்லை.அவ்வளவு தான். இதைத் திமிர் என்று நீங்கள் நினைத்தால் I CANT HELP ..நான் அவர்கள் ப்ளாக்கில் கமென்ட் போடமாட்டேன் ; நன்றி சொல்ல மாட்டேன் திமிர் பிடித்த ஆசாமி என்று தெரிந்ததும் அவர்கள் மீண்டும் இங்கே வருவதை நிறுத்திக் கொண்டார்கள். சரி அது அவர்கள் விருப்பம். அதே சமயம் ஒருவரை நீங்கள் பாராட்டுகிறீர்கள் அதற்கு அவர் THANKS கூட சொல்லாமல் இடித்தபுளி போல இருந்தால் உங்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்.WHAT TO DO ? என் நிலைமையில் இருந்தும் கொஞ்சம் யோசியுங்கள்.ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஓர் அரிய இசைக்கலைன் ஒருவன் ஒரு நாட்டில் தன் இசைக்கச்சேரி நடத்த ஒப்புக் கொண்டானாம். ஒரு கண்டிஷனின் பேரில். அதாவது இசையைக் கேட்கும் மக்களில் ஒருவர் கூட மெய்மறந்து தலையை அசைக்கக் கூடாது; மீறி அசைத்தால் அப்போதே அவர்கள் தலை வெட்டப்படும் என்று. நிறைய காவலர்கள் வாளுடன் கவனித்துக் கொண்டே இருப்பார்கள்; யார் தலை ஆடுகிறது என்று.கச்சேரி தொடங்கியது. அவன் பாடியது அத்தனை இனிமையாக இருந்தது; ஆனாலும் பயத்தில் ஒருவரும் கண்ணைக் கூட இமைக்கவில்லை.ஆனால் அந்த இசையின் இனிமையை அதன் இன்பத்தை உள்ளே அடக்கி வைக்க முடியாமல் கடைசியில் ஒரு நாலைந்து பேர் கண்டிஷனை மறந்து தலை அசைத்து விடுகிறார்கள். அரசன் அவர்களைக் கொல்ல ஆணையிடுகிறான்.அப்போது
இசைக்கலைன் தடுத்து, இந்த நாலைந்து பேரைத் தவிர மற்ற எல்லாரையும் துரத்தி விட்டு விடுங்கள். இவர்கள் தான் என் உண்மையான ரசிகர்கள். உயிர் போய்விடும் என்று தெரிந்தும் என் இசையை ரசித்த மகாத்மாக்கள் " என்று சொல்கிறான். அது போல நான் எந்த வித மறுமொழியும் சொல்ல மாட்டேன்; அவர்கள் ப்ளாகிற்கு போக மாட்டேன் என்று தெரிந்தும் கூட என்னை ஆதரிக்கும் , உற்சாகப்படுத்தும் அந்த நாலைந்து பேர் தான் உண்மையான வாசகர்கள். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இப்படிப்பட்ட கைம்மாறு கருதாத வாசக வட்டம் தான் உண்மையான சொத்து.

அடுத்து இந்த காப்பி அடித்தல் , இங்க்லீஷில் இருப்பதை அப்படியே தமிழில் எழுதுதல் etc ., உண்மை சொன்னால் எல்லாமே காப்பி தான். காப்பி அடிக்காமல் யாராலும் எழுத முடியாது. காபி அடிப்பது மொழிபெயர்ப்பது போன்றவை இன்று அங்கீகரிக்கப்பட்ட கலைகள் (ARTS ). காப்பி அடித்ததில் உங்கள் சொந்த வண்ணங்களை எப்படி லாவகமாக கண்ணை உறுத்தாமல் சேர்க்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.யாருமே காப்பி அடிக்கக் கூடாது என்றால் உலகில் இலக்கியங்களே இருக்காது. வெறும் டிக்சனரிகள் தான் இருக்கும். உதாரணம் :"செவ்வாயில் ஜீவராசி உள்ளதா என்று வி
ஞ்ஞானிகள் தேடல் " என்பது ஒரு செய்தி. இதை யார் வேண்டுமானாலும் காப்பி அடிக்கலாம். ஆனால் காப்பி அடித்ததை ஒரு அழகிய கவிதையாக மாற்ற வைரமுத்துவால் மட்டுமே முடிந்தது.(பாடலை சொல்ல அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்) .ஆங்கில டிக்சினரியில் இல்லாத வார்த்தைகளையா சேக்ஸ்பியர் எழுதி விட்டார்? ஆனால் எல்லாராலும் ஏன் ஒரு சேக்ஸ்பியர் ஆக முடியவில்லை? ஜாய் ஆலுக்காஸில் 45 கிலோ தங்கநகை திருட்டு என்பது செய்தி. அதை காப்பி அடித்து ஜாய் ஆலுக்காஸில் 45 கிலோ தங்கநகை திருட்டு. #கல்யாண் ஜீவர்லர்ஸோட புரட்சிப் படையோட வேலையா இருக்குமோ என்ற சுவையான ட்விட்டாகத் தர ஒரு ட்விட்டரால் மட்டுமே முடிகிறது.

TRANSLATION : இதைப் பற்றி முன்பே சொல்லி இருக்கிறோம்.Spinning Technology என்பதற்கு பன்னல் நுட்பியல் என்று மொழிபெயர்த்து எழுதலாம் தப்பில்லை. ஆனால் யாருக்கும் புரியாது. Autumn equinox = கூதிர் ஒக்கம் என்று எழுதினால் சில பேர் அடிக்கக் கூட வரலாம். கீழே ஏதாவது புரிகிறதா பாருங்கள். இது ஃபிரிட்ஜாப் கேப்ராவின் TAO of PHYSICS இன் ஒரு பகுதியின் தமிழாக்கம்:

"நியூக்ளியான்கள் தம்முடைய வலிமையான உள்வினை ஆற்றல் காரணமாக இத்தகைய சுய உள்வினை செயல்முறை மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன; உண்மையைச் சொல்வதென்றால் நியூக்ளியான்கள் கருத்தியலான துமிகளை சதா உமிழ்ந்து கொண்டும் உட்கிரகித்துக் கொண்டும் இருக்கின்றன.புலக் கொள்கைப்படி , கருத்தியலான துமி மேகங்கள் சூழ்ந்துள்ள இடையறாச் செயல்பாட்டு மையங்களாக அவை கருதப்படுகின்றன.கருத்தியலான மேசான்கள் தாம் தோற்றுவிக்கப்பட்ட , மீச்சிறு தருணத்திற்குள் மறைந்து விடுகின்றன.மேஸான் மேகம் எனப்படுவது மீச்சிறிய ஒன்று. அதன் புறப்பரப்புகளில் இலகுவான மேசான்கள் பெரும்பாலும் பையான்கள் நிரம்பி உள்ளன.மீச்சிறு காலத்துக்குப் பின்னர் உட்கிரகிக்கப் படக்கூடிய கனத்த மேசான்கள் மேகத்தின் உட்பகுதியில் உள்ளன"

-குறைந்த பட்சம் இது எதைப்பற்றி சொல்கிறது என்று நீங்கள் ஊகித்தாலே உங்களுக்கு VERSATILE BLOGGER அவார்டு கொடுக்கலாம்.


கடைசியாக VERSATILITY ... it 's a myth !யாராலும் VERSATILE ஆக ,அது சுஜாதாவாகவே இருந்தாலும் எழுத முடியாது.நீங்கள் எதைப்பற்றி எழுதினாலும் உங்கள் 'டச்' அதில் நிழல் போலத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். சுதாதாவின் ஒரு பத்து கதைகளை தொடர்ந்து வாசித்தால் ஒருவிதமான சலிப்பு தட்டுவதை நீங்கள் உணரமுடியும்.

என் பக்கம் உள்ள நியாயங்களை சொல்லி விட்டேன். இதையும் மீறி , யாருடைய மனதையாவது என் எழுத்தின் மூலம் புண்படுத்தி இருந்தால் அவர்களிடம் பகிரங்கமாக மனப்பூர்வமான மன்னிப்பு கோருகிறேன்.

சமுத்ரா

51 comments:

  1. Enga... intha blog ezhutina neraththukku mahidhar nee marainthu vidu innoru episode eluthi iruntha santhosha pattu iruppen...

    ReplyDelete
  2. "Artists add pride to titles and awards not the vice versa"

    ithu correct thaananga? unga view enna? ithu puriyaama oru sila peru viruthu tarennum, viruthu vangitennum sollitu irukkaanga (my humble thought)

    ethanayo peru intha maatiri viruthu taravangakitta enakku oru viruthu kodukka maatangalaanu kaathutu iruppanga (nammala paaratta maataangalaanu tavippathu manitha iyalbu) appadi irukka naam koduththa viruthai vendam endru oruvar solvathai thangikollum (keeping aside ego, prestige and everything) pakkuvam ellarukkum irukkumaanu terilai. manitha manam mandhi thaan...

    ReplyDelete
  3. c'mmon. Carry on with your work.

    Cheers
    Nambi

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. பேசி கொண்டிருக்கும் சில நிமிடங்களில் முடிந்த அளவிற்கு பல தகவல்களை தூவி கொண்டே பேசுவது எனது இயல்பு. அதனால் சற்று தலைகனம் பிடித்தவன் / தற்பெருமை உள்ளவன் என்றே நினைக்க தோன்றும் -அனால் அதனை முதலில் / ஆரம்பத்தில் கேட்பவர்களுக்கு மேல் சொன்னவாறு தெரிவது இயல்பு! அதனை உணர்ந்து மேலும் மேலும் நம்மை / உங்களை மெருகேற்றி கொண்டே போவதுதான் நமது இயல்பாக இருக்க வேண்டும்! முடிந்தது விஷயம்

    ReplyDelete
  6. தயவு செய்து இப்படிப்பட்டவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீர்கள். தங்களின் வலைப்பூவை சில நாட்களாகத்தான் மேய்ந்து வருகிறேன்... என்னைப்போல் பலரும் இருக்கலாம்... எனவே தொடர்ந்து எழுதுங்கள்.... தங்களுக்கு என்றாவது யாருக்காக எழுத வேண்டும் என்றோ எதற்காக எழுத வேண்டும் என்றோ தோன்றினால் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை படித்து பார்க்கவும்... உபயோகப்படலாம்.

    http://www.jeyamohan.in/?p=23725

    ReplyDelete
  7. யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
    பொருள்
    ---------------
    ஒருவர் எதைக் காத்திட முடியாவிடினும் தம் நாவைக் காக்க வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்கு காரணமாகிவிடும்.
    ---------------

    நம் மனதில் எத்தனையோ எண்ணங்கள் சிந்தனைகள் ஏற்படலாம், அவற்றில் சிலவற்றை வெளிப்படையாகச் சொல்லலாம், சிலவற்றை வெளியில் சொல்லக் கூடாது, குறிப்பாக அது மற்றவர்கள் மனதைப் புண்படுத்தும் அல்லது வேறு பிரச்சினைகளைக் கிளப்பி விடும் என்னும் பட்சத்தில். அப்படி மீறிச் சொல்வது பலமுறை என்னை பெரிய சிக்கல்களில் கொண்டுபோய் விட்டதைப் பார்த்திருக்கிறேன். தேர்தலின்போது வடிவேலு பேசிய பேச்சுக்கள் இன்றைக்கு அவரை படங்களில் நடிக்க விடாமல் முடக்கி வைத்திருக்கிறது. பேரிழப்பு அவருக்கு மட்டுமல்ல, அவரி பார்க்க ஏங்கி நிற்கும் அவரது ரசிகர்களுக்கும்தான். பேசும்போது விளைவுகளையும் ஒருகணம் யோசித்து பேசுவது நல்லது. நீங்கள் உங்களது குறைபாடாக மற்றவர்கள் என்னென்னவெல்லாம் நினைக்கக் கூடும் என்று ஒரு பட்டியல் போட்டிருக்கிறீர்கள், இவ்வளவு நாட்கள் அவை அத்தனையும் இருந்திருந்தாலும் உங்கள் மீது இதுவரை யாரும் குற்றம் சுமத்தவில்லை. திடீரென குற்றம் சுமத்த வேண்டிய அவசியம் எப்படி ஏற்ப்பட்டது? யோசியுங்கள் விடையை கண்டுபிடியுங்கள், மீண்டும் இந்த மாதிரி சந்தர்ப்பம் உங்கள் சொந்த வாழ்விலும் ஏற்ப்படுவதை தவிர்க்க முயலுங்கள் என்பது............... எனது அன்பான வேண்டுகோள்.

    ReplyDelete
  8. சமுத்ரா,

    வணக்கம்,

    ஹா ..ஹா (அ) தமிழில் கா..கா கி.கி என சிரித்துக்கொள்(ல்)கிறேன்! இதெல்லாம் ஒரு சமாச்சாரமா? யாருக்காக ,எதற்காக நாம் எழுதுகிறோம்? எல்லாம் நம்ம மண்டைய குடைவதை வெளியில் தள்ள அவ்வளவு தான் ,இதான் என் சித்தாந்தம்.படிச்சா படிக்கட்டும்,இல்லைனா போகட்டும், அவ்ளோ தான்!

    அடுத்தவருக்கு பின்னூட்டம் போடுவது,நமக்கு பின்னூட்டம் போட்டவருக்கு மறக்காமல் நன்றி கூறுவது எல்லாம் ஒரு சடங்கே.முடிந்தால் சடங்கு செய்வேன் ,முடியாவிட்டால் மூடிக்கொண்டு போய்விடுவேன். இதற்கெல்லாம் கவலைப்பட்டால் அடித்த சரக்கின் போதையும், தின்ன சோறும் உடலுக்கு ஒவ்வாமை ஆகிவிடும் :-))

    என்ப்பதிவே படிக்காத ஒருவரின் பதிவுக்கு போய் மல்லுக்கட்டவும் செய்வேன், நெருக்கமான பதிவருக்கு பின்னூட்டம் போடாமலும் இருப்பேன் எல்லாம் கருத்து மற்றும் சூழ்நிலைப்பொறுத்தே, அதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும், அடுத்தவர் தீர்மானிக்க நாம் தலை ஆட்டினால் ஆட்டு மந்தையில் நாமும் ஒருவர்!

    எந்த வித நிர்பந்தங்களும் இல்லாமல் செயல்படுவதே சுதந்திர கருத்தாளனின் நோக்கமாக இருக்க வேண்டும், நீங்களும் அப்படியாக இருப்பவர் எனில் கவலை வேண்டாம், எல்லாம் நமதே !

    பின்குறிப்பு:

    நீங்கள் குறிப்பிட்ட அவ்வகையிலான எல்லாக்குற்ற சாட்டுகளுக்கும் நானும் ஆளானவன் ஆனால் அவற்றை எல்லாம் பீச்சாங்கையால் ஒதுக்கி விடுவேன் :-))

    *****
    //சுதாதாவின் ஒரு பத்து கதைகளை தொடர்ந்து வாசித்தால் ஒருவிதமான சலிப்பு தட்டுவதை நீங்கள் உணரமுடியும்.//

    அதே ,இதை நான் ரொம்ப ஆரம்பத்திலேயே உணர்ந்து இருக்கிறேன்,அதையே சிலரிடம் சொன்னப்போது நீ என்ன அவர விட பெரிய இவன்னு நினைப்பானு கேட்டாங்க.எல்லாத்தையும் ஒரே நேரத்தில் படித்தாலோ பார்த்தாலோ சலிப்பு ஆகிவிடும் அது போர்னோ கிராபியாக இருந்தாலுமே.

    ReplyDelete
  9. கடமயைச்செய்!, பலனை எதிர்பாராதே!! - கிருஷ்ணன்

    ReplyDelete
  10. கொஞ்ச நாட்களாகத் தான் உங்கள் ப்ளாக்கை வாசித்து வருகிறேன். உங்கள் போன்ற நல்ல வலைப்பதிவாளர்களின் எழுத்துக்கள், அதிகம் வாசிக்காத எம் போன்ற மொக்கை எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்களின் எழுத்து திறனை கொஞ்சமாவது கூட்டும் என்பது என் கருத்து. தொடர்ந்து எழுதுங்கள். பலன் தன்னால் வரும்.

    ReplyDelete
  11. இதெற்கெல்லாம் பதில்சொல்லி நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் உண்மையான வாசகர்கள் இந்தப் பதிவில் உங்களைப் பற்றிச் சொன்ன பலவற்றையும் ஏற்கனவே அறிந்தவர்கள். நீங்கள் வழக்கம் போலவே நடந்துகொள்ளுங்கள் எழுதுங்கள். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.



    //சுதாதாவின் ஒரு பத்து கதைகளை தொடர்ந்து வாசித்தால் ஒருவிதமான சலிப்பு தட்டுவதை நீங்கள் உணரமுடியும்.//

    ஆஹா.. இப்போதுதான் சில வாரங்களாக பொதுநூலகத்தில் அங்கத்துவம்பெற்று சுஜாதாவின் நாவல்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறேன் சில நாவல்கள் சலிப்புத் தட்டத்தான் செய்கின்றன. கொஞ்ச நாளைக்கு வேறு நாவல்களை வாசித்துப் பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  12. வண்க்கம் சகோ சமுத்ரா

    இவர்களுக்கு பதில் சொல்வது தேவையில்லை எனினும் நம் பங்குக்கு சில கருத்துகள்.
    //* காப்பி அடித்து எழுதுபவர்
    * ஆங்கிலத்தில் இருப்பதை மொழிபெயர்த்து அப்படியே தமிழில் எழுதுபவர்
    //
    பல அறிவியல் கருத்துகள் அங்கில மொழியில் உள்ளது உண்மைதான்.ஆங்கிலம் அறிந்தவர்கள் அனைவரும் அதை படித்து அறிந்து கொள்ள முடியுமா? உங்களின் புரிதல் என்பது உங்களுக்கு மட்டுமே உரித்தான‌தல்லவா!.அதனைத்தான் எளிய முறையில் அழகாக் அன்னைத் தமிழில் எழுதுகிறீர்கள்.அதுவும் நீங்கள் தமிழ் சொற்கள் மட்டுமே பயன்படுத்தி. மட்டுமே எழுதுவது என்பது மிக கடினமான் செயல்..

    உங்கள் பதிவு படித்து ஏற்பட்ட தாகத்திலே ஏற்பட்ட புரிந்துணர்வில் பல பதிவுகள் இட்டுள்ளேன்.
    ஆகவே பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அன்ன்னைத் தமிழில் ஆக்கும் முயற்சி பாராட்டத்தக்கதே.
    **********
    //* திமிர் பிடித்தவர்
    * மற்ற யாருடைய ப்ளாக்கிற்கும் சென்று பின்னூட்டம் போடாதவர்//
    • தனக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாதவர்

    முதல் கருத்துக்குக்கு நம் பதில் ஹி ஹி நீங்கள் போடும் பல‌ பின்னூடங்களுக்கும் வாசகன் என்ற முறையில் அப்படி எதுவும் கிடையாது.கருத்தாளரின் புரிதல் தவறு.
    .
    சென்ற வார உங்களின் ஒரு பின்னூட்டம் "பெருவிரிவாகத்தின் முதல் க்ஷணத்தின் போதே அனைத்து உயிரினங்களின் விதைகளும் சேர்ந்து உருவாகியிருக்க்லாம்." என்பது பரிணாம்ததின் மீதான் எனது புரிதலை வேறு பரிமாணத்தில் நக்ர்த்தியது.
    *********
    இதனை பகிந்ததும் நன்றே!!!!!!!.எப்ப ஸ்டிரிங் தியரிக்குள் செல்வீர்கள் என ஆவலுடன் காத்து இருக்கும் போது இப்படி இடையில் ஏற்படும் நகைச்சுவை தடங்கல்களை கண்டு கொள்ளாதீர்கள்.

    இக்கருத்துகளில் நகைச்சுவை மட்டுமே என்க்கு தெரிகிறது.
    நன்றி

    ReplyDelete
  13. நான் வழமையாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். எதையும் எதிர்பாராமல் தொடர்ந்து உங்களுக்குப் பிடித்ததை உங்கள் பாணியில் எழுதி வருவதே மிகவும் சிறப்பான விஷயம்.

    தற்போது தமிழ் பதிவர்கள் மத்தியில் மற்றவர்களுக்கு கருத்துரையும், ஓட்டுக்களையும் அளிக்காதவர்களை ஓரங்கட்டுவது இயல்பான ஒன்றாகிவிட்டது.

    அது ஒருவகையில் யதார்த்தமும் கூட. தமிழ்ப் பதிவுலம் வெகுவேகமாக விரிவடைந்து வரும் வேலையில் எத்தனை பேரை ஞாபகம் வைத்துக் கொள்வது? எனவே தான் பலர் பின்னூட்டங்கள் மூலம் மறைமுகமாக தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்கிறார்கள் போலும்(மொய்க்கு மொய் பின்னூட்டங்கள் வேறு கதை).

    ஆனால் அறிவியல் விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்மையில் எத்தனை பேருக்கு இருக்கிறது? சினிமாக்களில் மசாலா படங்கள் ஹிட்டாகி ஓடுவது போல்தான் இங்கும் நடக்கிறது.
    நன்றி!

    ReplyDelete
  14. எல்லா ப்ளாக்கருக்கும் இந்த சலிப்பு மனநிலை ஒரு கட்டத்தில் வந்தே தீரும்.
    இதைக் கடந்து வெற்றிகரமாக எழுதிக் கொண்டிருப்பரக்ளும் இருக்கிறார்கள். விரக்தியுற்று வெளியேறியவர்களும் இருக்கிறார்கள்.

    எழுத்து என்பது ஒருவித வெளிப்பாடுதான். யாருக்காவும்/எதற்காகவும் நிறுத்தவோ மாற்றவோ வேண்டாம்.

    நல்லா இருந்தா இன்னும் நாலு பேரிடம் படிக்கச் சொல்லி பரிந்துரைக்கிறோம் இல்லையெனில் ஒதுக்கி விடுவோம். இதுதான் இயல்பு.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  15. //அதாவது தான் மனதில் நினைப்பதை வெளிக்காட்டாமல் இருப்பதற்கு தான் மனிதன் மொழியைக் கண்டுபிடித்தான்.எழுத்தும் ஒரு மறைப்பு தான்//

    என் பிளாக்கை படிப்பவர்களுக்கு, நான் தமிழ் கலாச்சாரத்தை விடாபிடியாய் பின்பற்றுபவன் என்று புலனாகும். உண்மையிலும் அப்படியே! எந்த பிகரையும் ஏறெடுத்து பார்க்க மாட்டேன். எல்லா பிகரையும் அக்கா தங்கட்சியாகவே நினைப்பேன். ஒரு "கற்பு" கண்ணன். அனால் எனக்கு கல்யாணம் தான் ஆகாது.

    எப்படியெல்லாம் எழுதி நம்மளை நல்லவன் என்று காமிப்பது!! ரொம்ப கஷ்டமாயிருக்கு!

    அந்த ட்விட்டர் படித்து ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டிருந்தேன். யாருப்பா அது? killing ஜோக்.

    //TRANSLATION : இதைப் பற்றி முன்பே சொல்லி இருக்கிறோம்.Spinning Technology என்பதற்கு பன்னல் நுட்பியல் என்று மொழிபெயர்த்து எழுதலாம் தப்பில்லை. ஆனால் யாருக்கும் புரியாது. Autumn equinox = கூதிர் ஒக்கம் என்று எழுதினால் சில பேர் அடிக்கக் கூட வரலாம். கீழே ஏதாவது புரிகிறதா பாருங்கள். இது ஃபிரிட்ஜாப் கேப்ராவின் TAO of PHYSICS இன் ஒரு பகுதியின் தமிழாக்கம்://


    :-D.

    உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்க வில்லை என்றால் கூட, சாகித்ய அகடாமி விருதாவது கிடைக்கும். சீரியஸாக நம்புகிறேன். நீங்களும் சீரியஸாக நம்புங்கள். Jj


    அப்புறம் நம்ம கடைக்கும் வந்துட்டு போங்க.

    இன்று என் (மீன்) வலையில்,

    சுறா


    முதலில் தமிழ் aggregator சைட்டுகளில் இருந்து வெளியே வாருங்கள். பிரச்சினை குறையும். உங்கள் பிளாகிற்கு Facebook பேஜ் ஒன்று create செய்து அதை பிளாக்கில் இணையுங்கள். அங்கு என்னை போன்ற பிளாகர்கள் தொல்லை இருக்காது. FB யில் நிறைய பேர் வாசகர்களாகத்தான் இருப்பார்கள்.
    பிடிப்பவர்கள் அதில் follow செய்யட்டும்.

    ReplyDelete
  16. வாத்தியார் சுஜாதாவே வலைப்பூ எழுதினாலும் வாசகர்களின் கிண்டலில் இருந்து தப்பிக்கமுடியாது ..ஆனா அவர் அதை கையாளும் விதம் சுவாரசியமாக இருக்கும் ... அந்த சுவாரசியத்தை இங்கும் உணர்ந்தேன்..

    விருது விஷயத்தை ஒரு satire ஆகத்தான் பார்த்தேன்...

    பத்துக் கதை விஷயம் ... அலுப்பு தட்டும் என வாத்தியாருக்கு தெரியாதா என்ன ? அதனால தான் வெரைட்டியா தட்டி விடுவார்.

    வலைப்பூ ஒரு நட்பு வட்டம்.. நட்பை தாண்டி சுவாரசியமாக வாசிக்க கிடைப்பது போனஸ்..

    ReplyDelete
  17. சென்ற பதிவில் பொது வெளியில் சண்டையிட்ட சமுத்ராவும் நானும் இந்த பதிவு வந்த பின் தனி மெயிலில் சமாதானம் ஆகி விட்டோம். இந்த அனுபவங்கள் எனக்கும் சரி, அவருக்கும் சரி என்ன செய்ய கூடாது என்பதை கற்று தந்திருக்கும் என நம்புகிறேன்.

    தீ அணைந்து விட்டது. இனியும் எண்ணெய் ஊற்ற வேண்டாம்.

    ஒவ்வொரு இணைய சண்டையிலும் குறைந்தது பத்து பேராவது ப்ளாக் உலகை வெறுத்து வெளியேறுகின்றனர். இந்த சண்டைகள் சரி ஆகும் என்பதறிக !

    ReplyDelete
  18. //சென்ற பதிவில் பொது வெளியில் சண்டையிட்ட சமுத்ராவும் நானும் இந்த பதிவு வந்த பின் தனி மெயிலில் சமாதானம் ஆகி விட்டோம். //
    glad to hear this!

    ReplyDelete
  19. தன்னிலை விளக்கம் வெளிப்படையாக இருந்தது., நீங்க பாட்டுக்கு எழுதுங்க பாஸ்.,.,

    படிக்க என்னை மாதிரி நிறையப்பேர் இருக்கோம்.....!!

    ReplyDelete
  20. நான் உங்களின் நீண்டநாள் வாசகன். அடிக்கடி கமெண்ட் இடுவதில்லை. காரணம் எனக்கு சரியாகக் கமெண்ட் எழுத தெரியாது (பதிவு மட்டும் ஒழுங்கா எழுதுதுறியான்னு கேட்கக் கூடாது) கவலையே படாமல் தொடர்ந்து எழுதுங்க பாஸ்!

    ReplyDelete
  21. விளக்கங்களுக்கு முடிவே இல்லை... உங்க பாணியிலே நீங்க எழுதுங்க சார்...

    ReplyDelete
  22. \\சென்ற பதிவில் பொது வெளியில் சண்டையிட்ட சமுத்ராவும் நானும் இந்த பதிவு வந்த பின் தனி மெயிலில் சமாதானம் ஆகி விட்டோம்.\\ மிக்க மகிழ்ச்சி நண்பரே!!

    ReplyDelete
  23. இன்று தான் முதன் முதலாக தங்களின் வலைத்தளத்தை பார்வையிடுகிரேன் ..., பல நல்ல பதிவுகளை தாங்கி நிற்கிறது தங்களது இணையம். தொடர்ந்து எழுதுங்கள்..!

    ReplyDelete
  24. //அதாவது தான் மனதில் நினைப்பதை வெளிக்காட்டாமல் இருப்பதற்கு தான் மனிதன் மொழியைக் கண்டுபிடித்தான். அது போல தான் எழுத்தும். நம் மனதில் இருப்பதை வெளிப்படுத்த தான் எழுதுகிறோம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. எழுத்தும் ஒரு மறைப்பு தான். நாம் எதுவாக இல்லையோ அதைப்பற்றி தான் எழுதுகிறோம்//.
    இதில் உடன்பாடில்லை. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  25. நான் திரும்பத் திரும்ப படிக்கும் பதிவு உங்களுடையது.

    யார் கருத்திற்கும் சலனப்படத் தேவையில்லை.

    யாரையும் திருப்திப்படுத்த யாரும் எழுத முடியாது.

    நல்ல கருத்துள்ள எழுத்துக்கள் காலத்தில் நிற்கும்

    தொடருங்கள்

    ReplyDelete
  26. நான் ஆரம்பகாலங்களில் இருந்து அதாவது இரண்டுமுறை நான் வெளியேறுகிறேன் என்று நீங்கள் கூறியகாலத்திற்கு முன்பிருந்து படித்து வருகிறேன் அவ்வப் பொழுது பின்னூட்டமும் இடுகிறேன்.உங்களிடம் உள்ள திமிரினால் உங்களை எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நீங்கள் தமிழுக்கு செய்யும் தொண்டிற்காக நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். எனது ஃபேஸ் புக்கில் கூட உங்களது பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
    பாராட்டுபவனுக்குத்தான் பாராட்டின் அருமை புரியும் அடிவாங்கியவன்தான் அடி கொடுக்கமுடியும் என்பார்கள். சண்டை என்றால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு ”ஆட்டுக்குட்டி சொன்னது”வரைக்கும் செல்கிறீர்களே. அது போல் நல்ல பதிவென்றால் நான்கு வரிகளில் ஒரேஒரு பின்னூட்டத்தால் பாராட்டுங்களேன். ஒவ்வொரு பதிவிலும் கடைசியாக மொத்தமாக ஒரு நன்றி சொல்லுங்களேன் குடியாமுழ்கிவிடும்.எனவே பதில் கமென்ட் போடுவது என்பது ஒரு ACKNOWLEDGMENT தான்.
    உலகத்தோடு ஒட்டஒழுகலான், உலகத்தார் உண்டென்பது இல்லென்பான், ஆகிவிடக்கூடாது. மகுடத்தின் கணத்தை முகத்தில் காட்டக்கூடாது.

    திமிர் இருக்கிறதா என்று பதிவாகப் போட்ட பணிவிற்காகவும், அத்தனையும் கேட்டுக் கொண்டதால் தான் இத்தனையும்.........

    ReplyDelete
  27. அதாவது தான் மனதில் நினைப்பதை வெளிக்காட்டாமல் இருப்பதற்கு தான் மனிதன் மொழியைக் கண்டுபிடித்தான். அது போல தான் எழுத்தும். நம் மனதில் இருப்பதை வெளிப்படுத்த தான் எழுதுகிறோம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. எழுத்தும் ஒரு மறைப்பு தான். நாம் எதுவாக இல்லையோ அதைப்பற்றி தான் எழுதுகிறோம்//. இதில் எனக்கும் உடன்பாடில்லை.

    ReplyDelete
  28. ஒவ்வொரு வரிக்கும் உடன் படுகிறேன்... :-)

    ReplyDelete
  29. //ஒவ்வொரு வரிக்கும் உடன் படுகிறேன்... :-)//


    இவருக்கு அதிகமாக வரி போடுங்கப்பா!

    ReplyDelete
  30. //அதிகம் வாசிக்காத எம் போன்ற மொக்கை எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்களின் எழுத்து திறனை கொஞ்சமாவது கூட்டும் என்பது என் கருத்து.//

    ரிப்பீட்டு.... :)

    ReplyDelete
  31. எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கருத்துச் சொல்பவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.

    தாங்கள் வகுத்துக் கொண்ட பாதையில் திரும்பிப் பார்க்காமல் செல்லலாம்.

    ReplyDelete
  32. உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  33. ஏதாவது சொல்லணும் , என்ன சொல்லலாம்??!! :-)

    ReplyDelete
  34. உங்களின் எழுத்துக்களில் திரு சுஜாதாவின் தாக்கம் அப்பட்டமாக தெரிகிறது. சமுத்திரா என்கிற பெயரை நீங்கள் போட்டுக்கொள்ளாவிட்டால் இதை படிக்கிற யாருமே இதை எழுதியது சுஜாதாதான் என்று நினைக்கும் படி ரொம்பவும் மெனக்கெட்டு நீங்கள் சுஜாதாவை ஒரு அடிகூட பிறழாமல் பின்தொடர்ந்து எழுதுகிறீர்கள். ஒருவரின் பாதிப்பு அவசியம்தான் ஆனால் அதை ஒரு முன் தள்ளும் சக்தியாக வைத்துக்கொண்டு சுய அடையாளத்தோடு எழுத்துக்களை கையாள்வது மிக நன்று. வரும் நாட்களில் உங்களிடம் இருக்கும் சுஜாதா பிம்பம் குறைந்து ஒரு உண்மையான சமுத்ரா வெளிப்பட்டால் மிக்க மகிழ்வேன்.

    ReplyDelete
  35. உங்களின் எழுத்துக்களில் திரு சுஜாதாவின் தாக்கம் அப்பட்டமாக தெரிகிறது. சமுத்திரா என்கிற பெயரை நீங்கள் போட்டுக்கொள்ளாவிட்டால் இதை படிக்கிற யாருமே இதை எழுதியது சுஜாதாதான் என்று நினைக்கும் படி ரொம்பவும் மெனக்கெட்டு நீங்கள் சுஜாதாவை ஒரு அடிகூட பிறழாமல் பின்தொடர்ந்து எழுதுகிறீர்கள். ஒருவரின் பாதிப்பு அவசியம்தான் ஆனால் அதை ஒரு முன் தள்ளும் சக்தியாக வைத்துக்கொண்டு சுய அடையாளத்தோடு எழுத்துக்களை கையாள்வது மிக நன்று. வரும் நாட்களில் உங்களிடம் இருக்கும் சுஜாதா பிம்பம் குறைந்து ஒரு உண்மையான சமுத்ரா வெளிப்பட்டால் மிக்க மகிழ்வேன்.

    ReplyDelete
  36. hello, மிஸ்டர். காரிகன், சுஜாதா நடை என்று காப்பி ரைட் செய்யப்பட
    எதுவும் இல்லை. அதை அவர் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று
    எந்த விதியும் இல்லை. மேலும் நான் சுஜாதாவை அதிகம் படித்ததில்லை.

    ஒரே எழுத்து நடையை இரண்டு பேர் பின்பற்றுவதில் எந்தத் தவறும்
    இல்லை. HE HAPPENED TO BE FIRST அவ்வளவு தான்.

    ReplyDelete
  37. என் கருத்திற்கு இப்படி ஆவேசமாக பதில் சொல்வீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. யாரையும் காப்பி அடிக்காமல் எழுத முடியாது என்று நீங்கள்தான் இதே பதிவில் குறிப்பிட்டு அப்படி எழுதப்பட்டது டிக்ஷனரிதான் என்று சொல்லி இருந்தீர்கள். எனவே உண்மையை ஒத்துக்கொள்வதில் உங்களுக்கு திடீரென்று பிரச்சினை ஏற்பட்டது ஒருவேளை தன்னை ஒரு ஆள் சுஜாதாவின் காப்பி என்று உண்மையை சொல்லிவிட்டானே என்பதற்காக இருக்கலாம்.இரண்டாவதாக நீங்கள் பல முறை சுஜாதாவை மேற்கோள் காட்டி உங்கள் பதிவுகளில் நிறைய எழுதி இருக்கிறீர்கள். ஆனால் இப்போது நான் அவரை அதிகம் படித்தது கிடையாது என்று யு டர்ன் அடிக்கிறீர்கள். மேலும் சுஜாதாவின் நடை என்று காப்பி ரைட் செய்யப்பட்ட எதுவும் கிடையாது என்று சிறு பிள்ளைத்தனமாக பேசுகிறீர்கள். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு நடை உண்டு என்பது எல்லோர்க்குமே தெரியும். இதை நீங்கள் ஏன் அவுட் ரைட் டாக மறுக்கிறீர்கள் என்று புரியவில்லை.ஒரே மாதிரியான நடையில் இரண்டு பேர் எழுதுவது குற்றமா என்ற கேள்விக்கு உங்களுக்கே பதில் தெரிந்திருக்கும். He happened to be first என்று சற்று முட்டாள்தனம் மேலும் குற்ற உணர்ச்சி யுடன் அதே நேரம் ஆணவத்துடன் நீங்கள் சொல்வதைத்தான் நான் சாதாரணமாக சொன்னேன் அதாவது நீங்கள் சுஜாதாவை பின் பற்றி எழுதுகிறீர்கள் என்று.எண்பதுகளின் முடிவிலிருந்து எழுத வந்த முக்கால் வாசி பேர் சுஜாதாவை அப்படியே பிரதி எடுத்தது போலதான் எழுதினார்கள்,திரு மதன் உட்பட.எந்த பத்திரிக்கை எந்த எழுத்து எந்த கட்டுரை எந்த கதை வேறுபாடே இல்லாமல் எல்லோருமே சுஜாதாவின் cloning தான். அவர் இறந்து விட்டதால் இந்த mass hysteria சற்று குறைந்திருக்கிறது இப்போது. சுஜாதாவை அதிகம் படிக்காத போதே இந்த அளவுக்கு அவரை சிறிதும் நன்றி உணர்ச்சி இன்றி பிரதி எடுக்கும் திரு சமுத்ரா அவரை இன்னும் நிறைய படித்திருந்தால் எப்படி எழுதி இருப்பார் என்று நினைக்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.கடைசியாக இதையும் நான் சொல்ல வேண்டும். திரு சுஜாதா அவர்களே ஆங்கில எழுத்தாளர்களை பிரதி எடுத்தவர்தான்.எனவே அவரின் எழுத்துக்கள் என்னை வசீகரிப்பதில்லை.ஆனால் தமிழில் ஒரு மின்சார நடையை புகுத்தியவர் என்பதால் அவரின்றி நவீன தமிழ் இலக்கியங்களை கற்பனையே செய்து பார்க்க முடியாது. உங்களால் சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல் ஒரு வாக்கியம் கூட எழுத முடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்.உங்களை நீங்கள் கண்டுபிடித்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்.

    ReplyDelete
  38. என் கருத்திற்கு இப்படி ஆவேசமாக பதில் சொல்வீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. யாரையும் காப்பி அடிக்காமல் எழுத முடியாது என்று நீங்கள்தான் இதே பதிவில் குறிப்பிட்டு அப்படி எழுதப்பட்டது டிக்ஷனரிதான் என்று சொல்லி இருந்தீர்கள். எனவே உண்மையை ஒத்துக்கொள்வதில் உங்களுக்கு திடீரென்று பிரச்சினை ஏற்பட்டது ஒருவேளை தன்னை ஒரு ஆள் சுஜாதாவின் காப்பி என்று உண்மையை சொல்லிவிட்டானே என்பதற்காக இருக்கலாம்.இரண்டாவதாக நீங்கள் பல முறை சுஜாதாவை மேற்கோள் காட்டி உங்கள் பதிவுகளில் நிறைய எழுதி இருக்கிறீர்கள். ஆனால் இப்போது நான் அவரை அதிகம் படித்தது கிடையாது என்று யு டர்ன் அடிக்கிறீர்கள். மேலும் சுஜாதாவின் நடை என்று காப்பி ரைட் செய்யப்பட்ட எதுவும் கிடையாது என்று சிறு பிள்ளைத்தனமாக பேசுகிறீர்கள். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு நடை உண்டு என்பது எல்லோர்க்குமே தெரியும். இதை நீங்கள் ஏன் அவுட் ரைட் டாக மறுக்கிறீர்கள் என்று புரியவில்லை.ஒரே மாதிரியான நடையில் இரண்டு பேர் எழுதுவது குற்றமா என்ற கேள்விக்கு உங்களுக்கே பதில் தெரிந்திருக்கும். He happened to be first என்று சற்று முட்டாள்தனம் மேலும் குற்ற உணர்ச்சி யுடன் அதே நேரம் ஆணவத்துடன் நீங்கள் சொல்வதைத்தான் நான் சாதாரணமாக சொன்னேன் அதாவது நீங்கள் சுஜாதாவை பின் பற்றி எழுதுகிறீர்கள் என்று.எண்பதுகளின் முடிவிலிருந்து எழுத வந்த முக்கால் வாசி பேர் சுஜாதாவை அப்படியே பிரதி எடுத்தது போலதான் எழுதினார்கள்,திரு மதன் உட்பட.எந்த பத்திரிக்கை எந்த எழுத்து எந்த கட்டுரை எந்த கதை வேறுபாடே இல்லாமல் எல்லோருமே சுஜாதாவின் cloning தான். அவர் இறந்து விட்டதால் இந்த mass hysteria சற்று குறைந்திருக்கிறது இப்போது. சுஜாதாவை அதிகம் படிக்காத போதே இந்த அளவுக்கு அவரை சிறிதும் நன்றி உணர்ச்சி இன்றி பிரதி எடுக்கும் திரு சமுத்ரா அவரை இன்னும் நிறைய படித்திருந்தால் எப்படி எழுதி இருப்பார் என்று நினைக்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.கடைசியாக இதையும் நான் சொல்ல வேண்டும். திரு சுஜாதா அவர்களே ஆங்கில எழுத்தாளர்களை பிரதி எடுத்தவர்தான்.எனவே அவரின் எழுத்துக்கள் என்னை வசீகரிப்பதில்லை.ஆனால் தமிழில் ஒரு மின்சார நடையை புகுத்தியவர் என்பதால் அவரின்றி நவீன தமிழ் இலக்கியங்களை கற்பனையே செய்து பார்க்க முடியாது. உங்களால் சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல் ஒரு வாக்கியம் கூட எழுத முடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்.உங்களை நீங்கள் கண்டுபிடித்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்.

    ReplyDelete
  39. மிக்க நன்றி காரிகன் சார், இனிமேல் என் பெயரை சுஜாதா-v2 என்று
    மாற்றி வைத்துக் கொண்டு எழுதுகிறேன்.அப்போது உங்களுக்கு
    மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  40. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்..நான் எழுதுவேன்..
    தமிழுக்கு என்னால் ஆன சேவையை செய்வேன்.

    ReplyDelete
  41. சமுத்திரா,

    உங்களோட கலைடாஸ்கோப் அதிகம் படிச்சதில்லை , இப்போ தான் ஒரு இரண்டு பகுதி படிச்சு இருக்கேன், எனவே முழுசா படிச்சவன் போல கருத்து சொல்லிவிட முடியாது. எழுத பயன்படுத்தும் டெம்ப்ளேட் ஆனது சுஜாதா ஜாடையில் இருக்கிறது என நினைக்கிறேன் , உங்கள் நடையில் , வேறு பல விஷயங்கள் எழுதினாலும் அந்த டெம்ப்ளேட் சுஜாதாவை ,சுஜாதாவின் ரசிகர்களுக்கு நினைவூட்டுகிறது என நினைக்கிறேன். கொஞ்சம் அறிவியல், கர்நாடிக் இசை, அப்போ அப்போ திடீர்னு ஆண்டாள் பாசுரத்துக்கோ , நச்சினார்கினியர் உரைக்கோ ஒரு விளக்கம் என்பது போல தொட்டுக்க ஊறுகாயாக தமிழ்னு சுஜாதா எழுதுவார் , அதே டெம்ப்ளேட் உங்கள் பதிவில் தென்ப்படவும் அப்படி சொல்லுகிறார்கள் என நினைக்கிறேன்.அப்படி எல்லாம் தொடனும்னு போனால் அப்படி ஆக எல்லாருக்குமே வாய்ப்பு இருக்கு.அதற்கு சுஜாதாவை ஆதியோடு அந்தமாக படித்து இருக்க வேண்டும் என்றில்லை. நீங்க சொன்னாப்போல முதல் வாய்ப்பு அவருக்கு போய்விட்டது எனலாம்.

    அதென்ன தமிழ், அறிவியல், கொஞ்சம் இசைனு வேற யாரும் எழுதக்கூடாதா, நிறைய பேர் அப்படி எழுதி இருக்காங்க, சிலருக்கு சிலது தூக்கலாக போகும், எல்லாமே கொஞ்சமா கலந்துக்கட்டி எழுதினா எல்லாம் சுஜாதாவின் குளோனா? சுஜாதாவே ஆங்கில பத்தி எழுத்தாளர்களை காப்பி அடிச்சு அதுக்கு இணையா தமிழில போட்டு எழுதினார். ஷேக்ஸ்பியர ஆங்கிலத்தில தொட்டுக்கொண்டால் இவர் பரிமேலழகர் போல ஏதோ ஒன்றை தமிழில் இழுத்துப்போட்டு எழுதுவார்.

    உண்மையில் தமிழ் இலக்கிய,இலக்கணத்துக்கு எல்லாம் புதிய பரிந்துரை செய்ய இவர் யார் என்று கூட எனக்கு தோன்றும், ஆனால் இவருக்கு எழுத பத்திரிக்கை கிடைத்து இருக்கு எழுதுரார் என்ன செய்வது என்று நினைத்துக்கொள்வேன்(நான் அவரை விட அதே பத்திகளை நன்றாக எழுதுவேன் என நினைத்துக்கொள்வேன்) இப்போ எல்லாருக்கும் பிலாக் கிடைத்து இருக்கு எழுதுகிறோம். ஆனால் காரிகன் போன்றவர்கள் இன்னும் மாறாமல் அதே போல அச்சு ஊடக வாசகர்களாக இருக்கிறார்கள், காலம் மாறிவிட்டதையோ, எல்லாரும் எழுதுவார்கள் என்பதையோ இன்னும் மனம் ஏற்க மறுக்கிறது.

    காரிகன் என்ற பெயர் கூட சின்ன வயதில் நான் படிச்ச ஒரு காமிக்ஸ் கேரக்டர் பெயர் தான் அப்படியானால் அப்படியானால் அந்த காமிக்ஸ் கேரக்டர் இப்படி தான் பேசுமா? :-))

    போகிறப்போக்கைப்பார்த்தால் தமிழில் அறிவியல் பற்றி எழுதுபவர்கள் எல்லாமே சுஜாதாவின் குளோன் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது :-))

    ReplyDelete
  42. எல்லோரும் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம். ஒரு காலத்தில் எழுத்து என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பாக இருந்தது. தற்போது வலைப்பூக்கள் அந்த சுவரை உடைத்து விட்டன.ஆனால் எழுத வருபவர்கள் தங்களின் தனி தன்மையோடு எழுத வேண்டும் என்று சொல்கிறேன்.கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் எல்லாமே கருப்பாக தெரிவது போல சிலர் ஒரே மாதிரியாக எழுதுவதைத்தான் நான் விமர்சனம் செய்கிறேன்.என் பெயர் காரிகன் தான் அதற்காக நான் காமிக்ஸ் புத்தகங்களே படித்ததில்லை என்று உளற மாட்டேன். அது சரி திரு வவ்வால் அவர்களே உங்கள் பெயரில் கூட தலை கீழாக தொங்கும் ஒரு வினோத உயிரினம் இருப்பதாக ஞாபகம். அதுதான் எல்லாமே உங்களுக்கு தலை கீழாக தெரிகிறது போல.நல்ல பெயர்தான் போங்கள்.

    ReplyDelete
  43. எல்லோரும் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம். ஒரு காலத்தில் எழுத்து என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பாக இருந்தது. தற்போது வலைப்பூக்கள் அந்த சுவரை உடைத்து விட்டன.ஆனால் எழுத வருபவர்கள் தங்களின் தனி தன்மையோடு எழுத வேண்டும் என்று சொல்கிறேன்.கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் எல்லாமே கருப்பாக தெரிவது போல சிலர் ஒரே மாதிரியாக எழுதுவதைத்தான் நான் விமர்சனம் செய்கிறேன்.என் பெயர் காரிகன் தான் அதற்காக நான் காமிக்ஸ் புத்தகங்களே படித்ததில்லை என்று உளற மாட்டேன். அது சரி திரு வவ்வால் அவர்களே உங்கள் பெயரில் கூட தலை கீழாக தொங்கும் ஒரு வினோத உயிரினம் இருப்பதாக ஞாபகம். அதுதான் எல்லாமே உங்களுக்கு தலை கீழாக தெரிகிறது போல.நல்ல பெயர்தான் போங்கள்.

    ReplyDelete
  44. ஒரு பிரச்சினை போனால் இன்னொரு பிரச்னை வந்து விடுகிறது.

    ReplyDelete
  45. சார் இது எனது தனிப்பட்ட கருது .....
    அறிவியலில் நாம் நிறைய படிக்கின்றோம் . நமக்கு தொடர்பில்லாத துறையில் வேலை செய்யும் போது அந்த அறிவு துருபிடித்து போகிறது ( நான் தற்போது பார்க்கும் வேலையில் அதிக பட்சம் முப்பது மருந்துகளை ஞாபகம் வைத்திருந்தாலே போதும் , வாழ்கையை ஒட்டி விடலாம் ), ஆனால் அதற்காகவா நமக்கு அரசாங்கமும் , இத்தனை ஆசிரியைகளும் உறமேற்றினர்? பின்னூட்ட கேள்விகளால் புதிய சிந்தனைக்கான பாதையின் கதவுகள் திறக்கப்டுகின்றதே . நிச்சயம் தங்களின் இந்த செயல் போற்றத்தக்க ஒன்றே. தொடருங்கள் உங்கள் பணியை .

    ReplyDelete
  46. சுஜாதா மட்டுமே தமிழில் அறிவியலை அவ்வளவு ஜாலியாக கொண்டு சென்றார்.. மற்றவர்களெல்லாம் மெனக்கெட்டு serious ஆக எழுதினார்கள்.. அதற்காக மற்ற யாரும் ஜாலியாக எழுதக்கூடாது என்று சொல்லக்கூடாது.. அடச்சே... காப்பி அடிக்கற மேட்டர, கடவுள் இருக்காரா இல்லயா ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்கோம்...

    அது சரி, அவர் காப்பி அடிக்கறாரோ இல்லையோ, எங்கிருந்தோ எடுத்து சொல்றாரோ இல்லையோ, அந்த content ரசிக்கும் படியா இருக்கு இல்லயா? ஈயடிச்சான் காப்பி என்ற வகை காப்பிக்கு மட்டும் தான் courtesy போட வேண்டும் என்பது எனது தாழ்மையான திமிர் பிடித்த கருத்து! :)


    - parthi2929

    ReplyDelete
  47. விளக்கம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை எனினும் விளக்க முன்வந்ததற்குப் பாராட்டுக்கள். 'திமிர் எல்லாம் இல்லை' என்றபின் இந்த இடத்தில் கொஞ்சம் இடறியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்: "யாருடைய பதிவாவது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் நிச்சயம் என் சோம்பேறித் தனத்தையும் மீறி கமென்ட் போடுவேன்."

    ReplyDelete
  48. தமிழ்மண நட்ச்சதிரமாய்ப் பார்த்து உங்கள் பதிவுக்கு வருவது முதல்முறை. நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள். நீங்களாகவே இருங்கள். இயல்பாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  49. //ஆங்கிலத்தில் இருப்பதை மொழிபெயர்த்து அப்படியே தமிழில் எழுதுபவர்//

    இனையத்தை நிறைய பேர் பயன்படுத்தி வந்து கொண்டிருக்கும் இவ்வேலையில் தமிழில் அறிவியல் கட்டூரைகள் எழுதுவோர் மிகவும் குறைவு. 7 கோடிக்கும் மேல் தமது தாய் மொழியாக தமிழை பேசக்கூடிய ஒரு மாநிலத்தில் இங்கு எத்தனை பேருக்கு அறிவியலை தாய் மொழியில் பரப்பவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது? இப்படி யாராவது முயன்றால் விமர்சனம் பன்னமட்டும் தான் இவர்களுக்கு தெரியும். ”அந்நிய மொழியில் குழந்தைகள் பாடங்கள் படிப்பதால் அவர்களுக்கு அளவுக்கு மீறிய நிர்பந்தமும், எல்லாவற்றையும் மனப்பாடம் பண்ணுவர்களாகவும், சுயமாக சிந்திக்கவோ செயல்படவோ தகுதியற்றவர்களாகவும் தான் ஆகிறார்கள்” என்ற காந்தியடிகளின் மோற்கோளை இங்கு சுட்டிகாட்ட ஆசைப்படுகிறேன். ஆக சமுத்ரா அவர்களே இது போன்ற உப்புச்சப்பில்லாத விமர்சன்ங்களை கண்டு சோர்ந்து விடாமல் உங்கள் சேவையை தொடர்ந்து செய்யவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

    ReplyDelete
  50. **********சமுத்ரா said...

    யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்..நான் எழுதுவேன்..
    தமிழுக்கு என்னால் ஆன சேவையை செய்வேன்.
    March 8, 2012 at 6:18 AM **************************


    இதைப் பார்த்த பிறகுதான் போன உயிர் திரும்ப வந்தது.

    சிறு வயதில் சுட்டி விகடன் படித்த அனுபவம் சமுத்ரா அவர்களின் பதிவுகளைப் படிக்கும்போது கிடைக்கிறது.

    சமுத்ரா அவர்களின் பதிவுகள்(per year)குறைவது வருத்தமாக உள்ளது.

    அணு அண்டம் அறிவியல் - 76ஐ எதிர்நோக்கி உள்ளேன்.

    (AM I TOO LATE ? )

    ReplyDelete