Tuesday, January 10, 2012

கலைடாஸ்கோப் -50

எப்படியோ லைடாஸ்கோப் -50 வரை என்னை (யும்) எழுத வைத்த (ஒரு சில) வாசக உள்ளங்களுக்கு (மிக்க) நன்றிகள்.

ஒன்று
======

கு.கா...பூ
------------

சாலையில் நடந்து செல்லும் போது
ஒரு கம்பளிப்பூச்சி தென்பட்டது
பெரும்பாலும் அது
குளிர்காலத்தின் கடைசி கம்பளிப்பூச்சியாக இருக்கலாம்!

மீண்டும் ஒன்று
==============
தமிழில் பெரும்பாலும் உணர்ச்சிப் பூர்வமான சொற்கள் உயிர் எழுத்துகளில் தான் ஆரம்பிக்கின்றன. அன்பு, இதயம், உணர்ச்சி, ஆனந்தம், உள்ளம்,இன்பம், ஆத்திரம்,அழகு, அனுஷ்கா ...சரி.. உயிர் எழுத்துக்கள் இல்லாமல் ஒரு கவிதையை எழுதுவது கொஞ்சம் கஷ்டம் தான்.அதுவும் காதல் கவிதை.நீங்களும் முயற்சிக்கலாம். உதாரணத்துக்கு ஒன்று:

குடித்து விட்டு வருபவன்
முயற்சிக்குக் கட்டுப்படாமல் வாசனை
வெளிவருவதைப் போல
காதலும் வெளிப்பட்டு விடுகிறது
தூக்கத்திலோ
பேசும்போதோ
நடக்கும் போதோ
சிரிக்கும் போதோ-காதல்
வெளிப்பட்டே விடுகிறது.
காதல் விதையை
விழுங்கியவன் நான்
கஸ்தூரி விருட்சம் வளர்ந்துள்ளது.
வாசனை வராமல் வேறென்ன செய்யும்?
நான் செய்யும் செயல்களில்
தெரியாமலேயே தோன்றிவிடுகிறது
நின் கையெழுத்து!
நான் பேசும் போது
குரலில் ஸ்ருதிபேதம் செய்து
வந்துவிடுகிறது நின் குரல்!
கண்ணாடி சில சமயங்களில்
பௌதீக விதிகளுக்கு மாறாக
பிம்பங்களைத் திரித்துக் காட்டுகிறது.
நான் நடந்தால் வானம் தலையைத் தொடுகிறது.
படுத்தால் விண்மீன்கள் வந்து கிச்சுகிச்சு மூட்டுகின்றன.
காதலை நான் விரைவில் சொல்லப்போவதில்லை
கொஞ்ச காலம் போகட்டும்.
பகல்கள் பரவசத்தில் தொடங்கட்டும்
காலடியில் கனவுநதி நகரட்டும்
திசை மாறி பூமி சுழலட்டும்
கண்கள்
காணும் பொருட்களுக்கெல்லாம்
காதல் வண்ணம் பூசட்டும்!


இரண்டு
========

இரண்டு.ஒன்று

சமீபத்தில் எழுத்தாளர் சாரு.நிவேதிதாவின் 'எக்சைல்' நாவலை (ஒரு வழியாக) படித்து முடித்தேன். (இப்போதெல்லாம் 'Flipkart ' இருப்பதால் நிறைய புத்தகங்களை அனாயாசமாக வாங்க முடிகிறது) மேலோட்டமாகப் பார்க்கும் போது அந்த நாவல் ஒரு குடிகாரன் நன்றாகக் குடித்து விட்டு உச்சகட்ட போதையில் உளறுவது போல இருக்கிறது. இருந்தாலும் அதில் ஏதோ ஒரு சரக்கு இருக்கிறது என்று தோன்றுகிறது! அது என்ன என்று தான் தெரியவில்லை. சாரு நிவேதிதாவே சொல்வது போலநாம் அப்படிப்பட்ட 'நான் லீனியர்' எழுத்துகளுக்குப் பழக்கப்படவில்லை.நாமெல்லாம் ராஜேஸ்குமார் மர்ம நாவல் படிப்பதற்கும் ,வாரப் பத்திரிக்கைகளில் சினிமா விமர்சனம் படிப்பதற்கும் தான் லாயக்கு போலிருக்கிறது.

இரண்டு.இரண்டு

நான் பார்த்து (கேட்டு) பொறாமைப்படுபவர்கள் லிஸ்டில் பெங்களூர் ஆட்டோக் காரர்களும் உண்டு. முன்னால் போய் நின்றால் ,கன்னடா, தமிழ், தெலுகு, ஹிந்தி?' என்று டூரிஸ்ட் கைடு ரேஞ்சுக்கு கேட்டு ஆச்சரியப்பட வைக்கிறார்கள். இந்த லிஸ்டில் ஒரு ஆ.டிரைவர் இங்கிலீஷ்-ஐயும் சேர்த்தது தான் ஹைலைட். [தமிழ் நாட்டு ஆட்டோ டிரைவர்கள் தமிழை தவிர வேறு பாஷை பேசமாட்டார்கள்!] சரி.அது இருக்கட்டும்

இரண்டு.மூன்று

தாய் மொழிக்கும் நகைச்சுவை உணர்வுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது போலத் தோன்றுகிறது. எனக்கு பொதுவாகவே இங்கிலீஷில் காமெடி பிடிக்காது. மிகவும் செயற்கையாக இருப்பது போலத் தோன்றும்.(Mr . Bean மிகக் குறைவாகவே ஆங்கிலம் பேசுவார் என்பதை கவனிக்கவும்)கன்னடத்திலும் காமெடி பார்க்கும் போது ஏனோ அத்தனை சுவாரஸ்யமாக இருப்பதில்லை. தமிழில் பார்த்தால் தான் காமெடி பார்த்த திருப்தி ஏற்படுகிறது.ஒவ்வொரு மொழிக்கும் அதற்கே உரிய சில காமெடி Phrase கள் இருக்கின்றன போலும்.அவற்றை மொழி பெயர்த்தால் அவற்றின் சுவாரஸ்யம் வடிகட்டப்பட்டு விடுகிறது. 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்''ஏன் இந்த கொலை வெறி' 'வந்துட்டான்யா வந்துட்டான்' 'நீங்க வெறும் தாஸா லாடு லபக்கு தாஸா?' 'மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு' -இவையெல்லாம் தமிழுக்கே உரிய வெளிப்படுத்தல்கள். அப்படியே மொழிபெயர்த்தால் நன்றாக இருக்காது. "Son in law fixed the Wedge " என்றா சொல்ல முடியும்? ;)

மூன்று
=======

தமிழின் 'அணி'களைப் பற்றி அவ்வப்போது சொல்லி வருகிறோம். இன்று அந்த வரிசையில் 'இல்பொருள் உவமை அணி'...

உலகத்தில் இல்லாத ஒரு பொருளை, அல்லது இயற்கையாக நடக்காத ஒரு நிகழ்ச்சியை செய்யுளில் புகுத்தி எழுதுவது இ.பொ.உ.அணி என்று சொல்லப்படும்.

உதாரணமாக ஆண்டாளின்

'திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்' என்ற வரிகள். கம்பரின் 'இருக்கை வேழத்து யானை!'

'சந்திரனும் சூரியனும் பக்கத்து பக்கத்தில் உதித்தது போன்ற உன் (அழகிய) கண்களை ' ...இது நடக்காத ஒன்று

சினிமா உதாரணம் வேண்டும் என்றால் நிறைய இருக்கிறது. 'ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் கண்ணே' அப்புறம்

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
'

பாய்ஸ் படத்தின் 'அலை அலை ' பாட்டில் இந்த அணி நிறைய வரும்.

பாதங்கள் இரண்டும் பறவையானது!
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது!
புருவங்கள் இறங்கி மீசை ஆனது

சரி. லஞ்சம் வாங்காத அரசாங்க அதிகாரி, நேர்மையான அரசியல் வாதி, தானம் செய்யும் பணக்காரர், பேரனும் தாத்தாவும் ஒரே வீட்டில் இருத்தல், ரேஷன் கடையில் சுத்தமான அரிசி, காலையில் கூட்டம் இல்லாத நகர பஸ் , சுத்தமான (தமிழ்நாட்டில்) பஸ் நிலையம், பிச்சைக்காரர்கள் இல்லாத கோயில் இவை எல்லாம் கூடிய சீக்கிரம் இல்பொருள் உவமையில் வந்து விடும் போலிருக்கிறது.

நான்கு

======

இதுவும்
இலக்கியம் தான். பிடிக்கவில்லை என்றால் ஓஷோ ஜோக் (ஏழு) படித்து விட்டு ப்ளாக்கை மூடி விடவும். திருப்பாவை இன்று தமிழ்ப்பதிவுலகில் பெரிதும் விவாதிக்கப்படுகிறது, திருவெம்பாவை (திருப்பள்ளி எழுச்சி) அந்த அளவுக்குப் பிரபலமாக இல்லை. திருப்பாவை ,ஒரு பெண் பாடியது என்பதால் கொஞ்சம் 'ஸ்பெஷல்' போலும்!ஆண்டாள் மழை பொழிவதை விவரிக்கும் 'ஆழி மழைக்கண்ணா' பாடலைப் போன்று மாணிக்கவாசகரும் 'முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்' என்று ஒரு பாட்டுப் பாடுகிறார்: அதன் பொருள்: "இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல ,மழையே நீ விடாமல் பொழிவாயாக"

நான்கு.ஒன்று
=============
எனக்குப் பிடித்த பொன் மொழி

There are as many reasons to be happy as there are to be sad.

தமிழிலும் :

சோகமாக இருப்பதற்கு உங்களுக்கு எத்தனை காரணங்கள் இருக்கின்றனவோ அதே அளவு காரணங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் இருக்கின்றன.


ஐந்து
=====
இன்னிசை
வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு
தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர்
அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை
சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

' அடுத்தவர் பார்ப்பாரோ , நம்மைப் பற்றி அடுத்தவர் என்ன நினைப்பார்? '- கேசுகளில் நானும் அடக்கம். எனவே கோயிலுக்குப் போகும் போது ஓவராக பக்திப் பரவசத்தைக் காட்டாமல் நார்மலாக சாமி கும்பிடுவது தான் என் பாலிசி. ஆனால் எல்லாரும் நம்மைப் போல இருப்பார்களா என்ன? கோயிலில் சில பேர் சாமி வந்து ஆடுவார்கள். சில பேர் சாஸ்டாங்கமாக விழுந்து சேவிப்பார்கள். சில பேர் சற்று உரக்கமாகவே ஏதோ முணுமுணுப்பார்கள். சில பேர் (பெரும்பாலும் அபஸ்வரமாக) பாடுவார்கள்.(சரி பக்தி தானே முக்கியம்) .சிலர் தலை மேல் கை வைத்து கும்பிடுவார்கள்.சில பேர் பிரகாரத்தில் உருளுவார்கள்.சில பேர் அழுவார்கள்! சரி இப்படி ஏதாவது Extra -ordinary யாக செய்தால் தான் உள்ளே இருக்கும் இறைவன் There's something crazy out there என்று நம் பக்கம் பார்ப்பான்? சரி இந்த ஆள் ஏதோ செய்கிறானே பார்க்கலாம் என்று கடைக்கண் பார்வையை வீசுவான்? இவர்களுக்கு மத்தியில் நான் எதுவுமே செய்யாமல் மன் மோகன் சிங் போல சிவனே என்று நிற்கிறேனே? இந்த களேபரங்களுக்கு இடையில் என்னையும் நீ ஒரு சில கணங்கள் பார்க்கக்கூடாதா? என்று இறைஞ்சும் பாடல்.எனக்கு மிகவும் பிடித்த பாடல். எந்தக் கோயிலுக்கு சென்றாலும் அந்தந்த சாமிக்கு ஏற்ற மாதிரி ஆறாவது வரியை மட்டும் மாற்றிப் பாடி விடலாம்.
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! அல்லது திருப்பாற்கடலுறை எம்பெருமானே!


ஆறு
=====
http://graphjam.memebase.com/ இல் இருந்து இப்போது ஒரு படம் ....




ஏழு
===

ஓஷோ ஜோக்.

கல்யாணத்தில் ஒருத்தன் நடுங்கிக் கொண்டிருந்தான் (வேறு யார் மாப்பிள்ளை தான்!)

பக்கத்தில் இருந்த ஒரு நண்பன் 'ஏன் நடுங்குகிறாய்?' என்று கேட்டான்.

அவன் " திருமணம் , திருமண வாழ்க்கை இதைப் பற்றி எல்லாம் எதுவுமே எனக்குத் தெரியாது. இது தான் முதல்முறை அல்லவா? அதான் நடுங்குகிறேன்" என்றான்

அதற்கு நண்பன் "சரி தான். தெரியாத வரை நல்லது. தெரிந்திருந்தால் இதை விட இன்னும் பயங்கரமாக நடுங்கிக் கொண்டிருப்பாய்"

சமுத்ரா

27 comments:

  1. 50-க்கு வாழ்த்துகள் !தொடர்ந்து அசத்துங்கள் !

    ReplyDelete
  2. Golden kaleidoscope, wishes to turn out to be diamond soon

    ReplyDelete
  3. 50-க்கு வாழ்த்துகள் !தொடர்ந்து அசத்துங்கள் !

    ReplyDelete
  4. நான் ரசித்துப் படிக்கும் கலைடாஸ்கோப் 50 தொட்டதற்கு வாழ்த்துக்கள். ஐந்தாம் எண்ணில் நீங்கள் கொடுத்துள்ள பாடலுக்கும் கருத்துக்கும் நூறு சதம் உடன்படுகிறேன். ஆண்டாளின் திருப்பாவை ஸ்பெஷல் என்பதற்கு பெண் என்பது மட்டும் காரணமல்ல. அழகிய தமிழ்நடை, மறைபொருளாய் பலவற்றை உணர்த்துவது என்று பல உண்டு. இல்பொருள் உவமை அணி எனக்கு மிகவும் பிடிக்கும். சரியான உதாரணம்- ஒரு பைசா லஞ்சம் வாங்காத அரசியல்வாதி (நீங்களே குறிப்பிட்டிருக்கீங்க.) தமிழ்ல கமல் ‘அப்பாராவ், நரசிம்ம ராவ், ரெண்டு பேரும் ‘ராவோட ராவா’ சர்ச் பண்ணுங்க’ என்பதற்கு தமிழில் மட்டும்தான் சிரிக்க முடியும். கவிதை... அதற்கும் எனக்கும் ஏராள கிலோமீட்டர் தூரம். சகலகலா சமுத்ரா எழுதினதை படிச்சதோட விட்டுர்றேன். ஓஷோ ஜோக் (வழக்கம் போல்) அருமை. மீண்டும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அரை சதத்திற்கு வாழ்த்துக்கள்! கூடிய விரைவில் சதம் எதிர்பார்க்கிறேன்.

    திருப்பாவை போல் திருவெம்பாவை/திருப்பள்ளியெழுச்சி பிரபலமாகாதது ஏன் என்று நானும் அவ்வப்போது யோசித்திருக்கிறேன். காலத்தால் பிந்தியதாய் இருந்தாலும் திருப்பாவைக்கு கொஞ்சமும் குறையாத சொல்/பொருள் சுவையோடு தான் மாணிக்கவாசகர் பாடியுள்ளார். திருப்பாவை அளவுக்கு மக்களுக்கு சொல்லப்படாததால் பிரபலமடையவில்லை போலும்..

    இன்னிசை வீணையர் பாடல் விளக்கம் அருமை.. நானும் மாணிக்க வாசகர் கேஸ் தான்..

    ReplyDelete
  6. Congratulations!!!

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. 50 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
    தாங்கள் தங்கள் பதிவுக்கு கலைடாஸ்கோப் எனப் பெயர் வைத்தது சரியே
    அத்தனை மனம் கவரும் வண்ணங்கள்
    பதிவுகள் நூறாய் ஆயிரமாய் பல்கிப் பெருக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அரை சதத்திற்கு வாழ்த்துக்கள்... எப்பொழுதும் போல ரசித்துப் படித்தேன்... இலக்கியப்பிரியர்கள் இன்னும் அதிகம் ரசிப்பார்கள்...

    ReplyDelete
  9. வாழ்த்துகள்

    ReplyDelete
  10. Add facebook comment and like box to your blog. that will increse your page views.

    ReplyDelete
  11. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. தமிழ் ஆர்வம் , விஷய ஞானம் , கலை ஈடுபாடு , அறிவியல் அறிவு எல்லாம் ஒருங்கே அமையபெற்று அதை சுவாரசியமாக தொடர்ந்து வருவது ஓரு பெரிய சாதனை ... ஐம்பது நூறாகி , நூறு ஆயிரமாகி , ஆயிரம் பல்லாயிரமாக வாழ்த்துகள் ...

    ReplyDelete
  13. காமெடி சம்பந்தமாக நீங்கள் சொன்னது உண்மைதான். நம் மொழியில் இருக்கும் இனிமை வேறு மொழியில் கிடைப்பதில்லை. இது அனைவருக்கும் பொறுந்தும்...

    ReplyDelete
  14. வாழ்த்துகள் சமுத்திரா.

    ReplyDelete
  15. \\கலைடாஸ்கோப் -50 \\ சுவராசியமான சங்கதிகள், நல்ல எழுத்து நடை- எல்லோரையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை. மேலும் வளர்க.

    ReplyDelete
  16. \\அந்த நாவல் ஒரு குடிகாரன் நன்றாகக் குடித்து விட்டு உச்சகட்ட போதையில் உளறுவது போல இருக்கிறது. \\ சொந்தக் கதை போல!!

    ReplyDelete
  17. \\நான் பார்த்து (கேட்டு) பொறாமைப்படுபவர்கள் லிஸ்டில் பெங்களூர் ஆட்டோக் காரர்களும் உண்டு. முன்னால் போய் நின்றால் ,கன்னடா, தமிழ், தெலுகு, ஹிந்தி?' என்று டூரிஸ்ட் கைடு ரேஞ்சுக்கு கேட்டு ஆச்சரியப்பட வைக்கிறார்கள். \\ பெங்களூரில் ஐந்து வயது குழந்தைகளே இந்த மொழிகளைப் பேசுமே!! அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் பழகும் போது, being children they pick up all the languages easily.

    \\[தமிழ் நாட்டு ஆட்டோ டிரைவர்கள் தமிழை தவிர வேறு பாஷை பேசமாட்டார்கள்!] \\ அவங்க மீட்டர் தான் போட மாட்டாங்க, [இல்லாட்டி சூடு வச்ச மீட்டர் போடுவாங்க], ஆனால், சென்னையில் உள்ளவர்கள் பல மொழிகளில் பேசுவார்களே!!

    ReplyDelete
  18. \\ 'நீங்க வெறும் தாஸா லாடு லபக்கு தாஸா?'\\ என்னைய வச்சு காமடி கீமடி எதுவும் பண்ணலியே!!!

    ReplyDelete
  19. \\சரி இந்த ஆள் ஏதோ செய்கிறானே பார்க்கலாம் என்று கடைக்கண் பார்வையை வீசுவான்? \\ கடவுள் நம்ம இதயத்திலேயே உட்கார்ந்திருக்கிரனாம், நம்ம கோவிலில் என்னதான் சீன் போட்டாலும், மனதில் என்ன இருக்கிறது என்பதை கரெக்டா அவன் கண்டுபிடிச்சுடுவானாம்.

    ReplyDelete
  20. \\graphjam.memebase.com\\ ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை ஒரு படம் சரியாகச் சொல்லிவிடும் என்பது சரியாத்தான் இருக்கும் போல.

    ReplyDelete
  21. உயிர் எழுத்தில்லாத கவிதை. இதுவரை யோசிக்கவேயில்லை. நன்றாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  22. //இவர்களுக்கு மத்தியில் நான் எதுவுமே செய்யாமல் மன் மோகன் சிங் போல சிவனே என்று நிற்கிறேனே? //

    போகிறபோக்கில் மன்மோகன்சிங்கை வாரி விட்டீர்கள்... :D

    சுவாரஸ்யமான கலைடாஸ்கோப் மேலும் தொடரட்டும்.

    ReplyDelete
  23. எத்தனை வண்ணங்கள்!எத்தனை உருவங்கள்!

    ReplyDelete
  24. மெல்லிய நக்கலும் நையாண்டியுமாய் ஐம்பதாம் பதிவு.

    திருப்பள்ளி எழிச்சியை அழகாக மேற்கொண்டீர்கள்.

    ஐம்பாதவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. ஐம்பாதவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. மேலும் பல ஆயிரம் பதிவுகள் செய்ய வாழ்த்துக்கள்.

    அப்படியே இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. //அப்படியே மொழிபெயர்த்தால் நன்றாக இருக்காது. "Son in law fixed the Wedge " என்றா சொல்ல முடியும்? ;)//

    என்னுடன் பனியாற்றும் செளகார்பேட் வட இந்தியர், வெளிநாட்டிற்கு வந்த போதும் ஆனந்தவிகடனிலிருந்து வடிவேல் காமெடி வரை தேடித்தேடி ரசிப்பார். அவர் சொன்னார் தமிழ்-ல காமெடி ரசிக்க முடிகிற அளவிற்கு ஹிந்தி காமெடிகளை ரசிக்க முடியாது என்று.

    நீங்க சொன்ன மாதிரி சாதாரன வார்த்தைகளில் வருகிற காமெடிகள் எல்லாம் வடிவேல் போன்றவர்களின் மாடுலேஷன் -ல் வருபவை.

    மற்றபடி சில தமிழ் வார்த்தைகளை வைத்து செய்யும் காமெடி போல் மற்ற மொழிகளில் செய்ய முடியாது என்றே நினைக்கிறேன்.


    சாமிலிங்கம்

    ReplyDelete