உன் நட்பால் நான் நாளும் மகிழ்ந்தேன்
வாழ்வின் வரம் என்று வலிகள் மறந்தேன்!
இன்று தான் ஓர் உண்மை தெரிந்தது
நீ முகங்கள் பலவற்றைக் கொண்டவன் என்பது....
அன்று பள்ளியில் என் உணவு கெட்டது
பசியோ என் வயிற்றைச் சுட்டது
நீ உன் உணவை எனக்குத் தந்தாய்
நீ எனக்கன்று தாயாகத் தெரிந்தாய்....
பள்ளியில் அன்று சுற்றுலா நேரம்
பணம் இன்றி நானோ பின்னால் நின்றேன்
பரிவினால் நீ அதை செலுத்திய போது
பார்த்தேன் உன்னை, ஒரு தந்தையாய்த் தெரிந்தாய்....
அந்தி மாலை மழை வரும் நேரம்
அருகினில் இருவரும் நடந்து கொண்டிருந்தோம்
சிந்திய மழையில் என்னைக் குடைக்குள் இழுத்தாய்
சிறிதுன்னைப் பார்த்தேன் என் அண்ணன் போல் தெரிந்தாய்...
நோயினால் நானன்று நலிந்து போய் இருந்தேன்
நலமின்றி பள்ளியின் வகுப்புகள் துறந்தேன்
தேடி நீ வந்தன்று பாடம் புகட்டினாய்
திரும்பிய போதொரு ஆசான் போல் தெரிந்தாய்...
காலம் நகர்ந்து நான் ஊர் விட்டுப் போனேன் -உன்
கண்களில் அன்றொரு காதலி கண்டேன்
காலம் கடந்து நான் திரும்பிய நாளில் - உன்
களிப்பினில் அன்றொரு குழந்தையைக் கண்டேன்...
வெளி நாடு போய் நான் வாழ்வேன் என்று
விளையாட்டைத் தான் நான் உன்னிடம் சொன்னேன்
வருந்தி நீ என்னைக் கன்னத்தில் அடித்தாய்
தெரிந்தாய் அன்றொரு எதிரியாய் எனக்கு!
பொய் தான் சொன்னேன் என்று நான் சொல்ல
புன்னகையோடென்னை வந்து நீ அணைத்தாய்
மெய்யாய் அன்று உன் முகத்தில் நானோ
மேன்மை தங்கிய கடவுளைப் பார்த்தேன்
நண்பனே!
ஏன் உந்தன் முகங்களை இப்படி மாற்றினாய்
நிலையாக இல்லாமல் என்னை ஏமாற்றினாய்
மன்னிப்பதில்லை இதை, இதோ தண்டனைச் செய்தி!
நீ என் இதயச் சிறையில் இனி ஆயுள் கைதி!
~ சமுத்ரா
(இதன் ஒரிஜினல் ஆங்கில வடிவம் நீங்கள் கேட்டுக் கொண்டால் கொடுக்கிறேன்)
i need english version... pls send
ReplyDeletebetter publish here na tat ll b great
ReplyDelete