Friday, October 26, 2012

கலைடாஸ்கோப்-75

லைடாஸ்கோப்-75 உங்களை வரவேற்கிறது
“Knowledge is knowing a tomato is a fruit; Wisdom is not putting it in a fruit salad.” - Brian Gerald O’Driscoll

இன்றைய உலகம் தகவல்களால் நிரம்பி இருப்பதாகத் தோன்றுகிறது. மூட்டை மூட்டையாக, குப்பை குப்பையாகத் தகவல்கள்! நியூஸ் பேப்பர்கள், டி.வி.சானல்கள், பத்திரிக்கைகள் , இன்டர்நெட் ....எல்லாம் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றன.ஒரு பத்திரிக்கையை ,ஒரு செய்தித்தாளை படித்து முடித்தால் எந்தத் திருப்தியும் ஏற்படுவதே இல்லை....இந்த தகவல் ஞானம் உண்மையான அறிவு என்று தவறாக எடுத்துக் கொள்ளப்படுவது தான் வேதனை.
இதில் நான்கு நிலைகள் உள்ளன என்று தோன்றுகிறது.

1 . Information : தகவல்: பத்திரிக்கையைப் பார்த்து , நியூஸ் கேட்டு, இன்று எங்கெல்லாம் மழை பொழிந்தது ,எத்தனை செ.மீ.பொழிந்தது,எங்கெல்லாம் மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது என்று 'வெறுமனே' தெரிந்து கொள்வது.
2 . Knowledge :அறிவு: மழை எப்படிப் பொழிகிறது , கடல் நீர் ஆவியாகி மேகம் குளிர்ந்து நீர் எப்படி மழையாகப் பொழிகிறது என்று அறிவியல் பூர்வமாக மழையைப் பற்றிய அறிவு கொண்டிருப்பது.

3 .Awareness : ஞானம்:ஞான திருஷ்டி மூலம் அல்லது அறிவியல் கணிப்புகள் மூலம் எங்கெங்கே நாளை மழை பொழியும் எத்ததனை நாள் மழை நீடிக்கும் என்ற அறிவை பெற்றிருப்பது.

4 . Wisdom : புரிதல்:இது முதல் மூன்று நிலைகளையும் கடந்த ஒரு வித 'ஜென் நிலை' என்று சொல்லலாம்.அதாவது, மழை பொழியும் போது நிகழ்காலத்துடன் முழுவதும் ஒருங்கிணைந்து மனமற்ற நிலையில் அந்த மழையாகவே மாறி விடுவது...

இந்த நான்கில் எது உயர்ந்தது என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். 
*************************************

ஜென் என்றதும் சில ஜென் கவிதைகள் ஞாபகம் வருகின்றன.


ஞானம் என்பது யாதப்பா
நீரில் தெரியும் நிலவப்பா
நீரும் நிலவை நனைத்திடுமோ -இல்லை
நிலவு நீரினைக் கிழித்திடுமோ

நீர் அது  கொஞ்சம் என்றாலும் -அதில்
நிலவின் பிம்ப
ம் சிதைந்திடுமோ
புல்லின் முனையின் தண்ணீரில்
பிரபஞ்சமே பிரதிபளித்திடுமே!

-டோஜென்

அழகைப் பார் அங்கே அசிங்கமும் இருக்கும்
நன்மை பார் அங்கே தீமை ஒளிந்திருக்கும்
அறிவைப் பார் அதில் இருக்கும் அறியாமை
ஞானம் பார் அதில் நடமிடும் மாயை

எப்போதும் இது இப்படித்தான்
இருமை இருமை இருமை!!
ஒன்றை அல்ல நீ இரண்டையும் கைவிடு -அதுவே
பெருமை பெருமை பெருமை

-ரியூகன்

கடந்த காலம் போயிற்று
கனவிலும் அதை நீ நினையாதே
நிகழ்காலம் நிலையாது
நீ அதைத் தொடவும் முயலாதே

எதிர்காலம் இன்னும் வரவில்லை
ஏன் நீ நினைந்தே வருந்துகிறாய்
கண்முன் வருவதை ஏற்றுக்கொள்
கவலை இன்றி இருந்திடுவாய்

விதிகள் இங்கே ஏதும் இல்லை
வாழ்வில் நெறிகள் ஒன்றுமில்லை
மனமது இறக்கும் கலை அறிந்தால் -நீ
மார்க்கம் தன்னை அடைந்திடுவாய்

-பாங்
அப்பா? உன் அறிவு எத்தனை ஆழம்?
ஆழத்திலும் ஆழம்!
அப்படியா?
அண்டத்தின் அகண்டாகாரத்தில்
அது ஒரு முடிக்கு சமானம்

அப்பா? உன் அனுபவம் எத்தனை பெரிது?
அகன்று விரிந்த  அனுபவம் எனது!
அப்படியா?
காலத்தின் கரையில்லாக் கடலில்
உன் அனுபவம் துளியினும் சிறிது!

-டோகூசான்


###############################

ஒரு 'சிறிய' சிறுகதை.......

செந்தில் ஒருவன் தான் அவனது கிராமத்தில் பட்டப்படிப்பு முடித்தவன்.. மிகவும் நேர்மையானவன்.நல்லவன்.பிறருக்கு உதவும் உள்ளம் படைத்தவனும் கூட.கிராமத்தில் மற்றவர்கள் எல்லாம் படிப்பறிவு இல்லாத ஏழைகள். வறுமைக்கோட்டுக்கு சற்றே சற்று மேலே வாசம். செந்திலின் திறமைக்கு ஏற்ப பெருநகரம் ஒன்றில் பிரபலமான தொழிற்சாலையில் அவனுக்கு இஞ்சினியர் வேலை  கிடைத்தது. முதன் முறையாக தன் கிராமத்தை விட்டு நகரம் வந்து சேர்ந்தான்.

வேலைக்கு சேர்ந்த ஆறு மாதத்திலேயே தன் கடின உழைப்பால் நல்ல பெயர் பெற்று பதவி உயர்வும் பெற்று விட்டான். நல்ல சம்பளமும் கூட.ஒரு நாள் நகரத்தில் காலாற நடந்து கொண்டிருக்கும் போது செந்திலுக்கு ஒரு யோசனை தோன்றியது. தன் கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் சிலரை நகரத்துக்கு அழைத்து வந்து காட்டினால் என்ன? இந்த நகரம் அறிவால் நிரம்பி வழிகிறது.தொழிற்சாலைகள், நிறுவனங்கள் , கணினி மையங்கள் நூலகங்கள், பதிப்பகங்கள், பொருட்காட்சிகள்!இதையெல்லாம் செயல்முறையில் காட்டினால் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை உதவியாக இருக்கும்? என்னைப் போலவே அவர்களுக்கும் பின்னாளில் நல்ல வேலையும் கிடைக்கும்.

நினைத்தபடியே  அடுத்த வாரமே தன் கிராமத்துக்கு சென்று 
+2 படிக்கும் ஐந்தாறு பையன்களை கூட்டி வந்து விட்டான் செந்தில். பையன்களுக்கு இதுதான் முதல் மாநகரப் பயணம். நகரத்தின் விஸ்தாரத்தை, பிரம்மாண்டத்தைக் கண்டு வியந்தார்கள் கிராமத்து மாணவர்கள். 

ஒரு நல்ல ஹோட்டலில் மாணவர்களுக்கு ரூம் போட்டுத் தந்தான் செந்தில். அன்றிரவு " இதைப் பாருங்க பசங்களா,,,நீங்கள் வாழ்க்கையில் முன்னேறனும்னு தான் இங்க ஒரு வாரம் கூட்டி வந்திருக்கேன்...பாடத்தில் படிப்பதை எல்லாம் நீங்க இங்க செயல்முறையாப் பார்க்கலாம்.இந்த வாய்ப்பை நல்லா உபயோகப்படுத்திக்கிட்டு வாழ்க்கையில் முன்னேறனும்
நல்லாப் படிச்சு அப்பா அம்மாக்கு ,நம்ம கிராமத்துக்கு நல்ல பேர் வாங்கித் தரணும் "என்றான்.

'சரி சார்' என்ற பையன்கள் முகத்தில் ஒரு வித தயக்கம் நிழலாடியதை உணர்ந்தான் செந்தில்.

'இதப் பாருங்க...சார் கீர் எல்லாம் வேண்டாம். அண்ணான்னே கூப்பிடுங்க... நான் உங்க செந்தில்..என்னை உங்க சொந்த அண்ணன் போல நினைச்சுக்குங்க. உங்க முன்னேற்றம் தான் எனக்கு முக்கியம். எந்த உதவி வேணும்னாலும் தயங்காமே கேளுங்க...நாளைக்கு சிடி லைப்ரரி போலாம்.. அப்புறம் ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியில் இன்டெர்னல் டூருக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்..'

'அண்ணா ...அது வந்து....வந்து...தப்பா எடுத்துக்காதீங்க...  அது என்னவோ சொல்லுவாங்களே.. பப்பு..இந்த பொம்பளைப் புள்ளைகள் எல்லாம் ராத்திரி  டான்ஸ் ஆடுமே...அந்த இடத்துக்கு ஒருநாள் எங்களை எல்லாம் கூட்டிப் போறீங்களா??. சும்மா பாக்கறக்கு தான் அண்ணே....' என்று எச்சில் முழுங்கியபடி பேசினான் ஒரு பையன்..
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


தமிழர்களுக்கு 'சர் நேம்' என்ற இணைப்புப் பெயர் இருப்பதாகத் தெரியவில்லை. ஆபீசில் சர் நேரம் கேட்டால் தமிழர்கள் அப்பா பெயரையே கொடுத்து விடுகிறோம்.மற்ற எல்லா மாநிலத்தவர்களுக்கும் இருக்கிறது. ஆபீசில் சிலரது சர்- நேம்கள் விசித்திர விசித்திரமாக இருக்கின்றன..

* சேத்தன் தெங்கின்காய் (தெங்கின்காய் என்றால் கன்னடத்தில் தேங்காய்)
* பிரவீண் கரிச்சட்டி ( கரிச்சட்டி என்பது ஒரு ஊராம்!!!)
* சௌம்யா தும்மலா ( ஆமாங்க ஜலதோஷம்)
* ரகு கரபாகுலா
* விஜய் பெசரிட்டு (பெசரிட்டு என்றால் பயத்த மாவு!)
* அபிஷேக் பஹுகுணா
* அஜித் கங்கன்வாடி
* மகிந்தர் யாவாகனி
* வேணுகோபால் பாமிடிபட்டி
* ஹரிஹரன் பங்குலூரி
* மேனகா பப்பலா
* கேசவன் கோமுகுட்டி (நான் கன்னுகுட்டின்னு நினைச்சேன்!) 
* மனோகர் கொண்ட்ரகொண்டா (என்னத்தை கொண்டாறது?)
* ஷீதள் பாப்பா (இன்னும் பாப்பா தானா?)
* ஷஷிதர் கனுமரலாபுடி ( என்னது கண்ணுல மொளகாப்புடியா?!)
* ராமகிருஷ்ணா குண்டுரெட்டி (தெலுங்குப் படத்தில் வில்லன் சான்ஸ் கேட்கவும்)
* அபினவ் கரக்கா  (நா கொடுகா!)
* ரவீந்தர் கோனகஞ்சி 
* ராஜு பெரிச்சாலா (பெருச்சாளின்னு வைக்கலை!)
* கிருஷ்ண ரெட்டி உம்மா (கேரளாப்பக்கம் பேரை சொல்லிறாதீங்க)
* குப்புசாமி மயில்வாகனம் (ஆஹா! அப்படியே முருகனை தரிசிச்ச பீலிங்!)
* ரவிகுமார் பொம்மிசெட்டி
* ராஜேந்தர் குண்டுகுன்ட்லா (குண்டு குண்
டா பேர் வச்சுருக்கீங்களே!)
* செந்தில் சுடலையாண்டி
* கபில் உள்ளவாலே (லே! நீ வெளில போலே!)
* கோபு மதாமஞ்சி (என்ன பேரு மச்சி?)
* ஜனார்தன உடுப்பி சபாபதி பெரிய ஐயங்கார் ரெட்டி (டேய் நீ எந்த மாநிலத்துக் காரன்?)

நாமும் கொஞ்சம் கிரியேடிவ்-ஆக சுகுமார் சும்மாதான் இருக்கேன் ,  கோபி கத்தரிக்காய், பரமசிவம் பைப்பில்தண்ணிவரலை ,உமாபதி உப்புமாகிண்டி, ஆயிஷா அரிசிக்கடை, விவேக் வீடுகாலி, கோடீஸ்வரன் கூடவரியா, மேனகா மிளகாய்பொடி, கதிர்வேல் காதுகேக்கலை, அகிலா அம்மா அடிச்சிட்டா , விவேக் வீடுபூட்டி , வாசுதேவன் வேலைவேனும் , சபாபதி சம்பளம்பத்தலை, தினேஷ் தூங்குமூஞ்சி , செந்தில் சரியாயிருக்கா
திவ்யா தலைபொடுகு, சங்கரன் சாப்பிட்டாச்சா , டேனியல் டின்னர்வேனும் என்றெல்லாம் தினம்தினம் புதுப்பெயர் வைத்துக் கொள்ளலாம்!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 ஐன்ஸ்டீனைப் போலவே இருக்கும் ஒரு குரங்கைப் படம் பிடித்துள்ளார்கள் ..... போட்டோ கலாட்டா..:)

இங்கே பார்க்கவும்....(படம் காபிரைட்) 
குரங்கு என்றதும் கேவலமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.. நம்முடைய டி.ஏன்.ஏ வும் எலியினுடையதும் 90 % மேட்ச் ஆகிறதாம்.உராங் உடான் என்ற குரங்குடன் 96 % மேட்ச் ஆகிறதாம்.  நாலு சதவிதத்தில் நாம் 'மனிதன்' ஆகிவிடுகிறோம்...சினிமாப்படம் எடுக்கிறோம்.. டயலாக் பேசுகிறோம்!
%%%%%%%%%%%%%%%%%%%%%%%



ஓஷோ ஜோக்.

மது மறுவாழ்வு மையத்துக்கு ஒருவன் வருகிறான்.டாக்டர் அவனுக்கு நல்ல ட்ரீட்மென்ட் கொடுத்து அனுப்புகையில்

"இதைப் பாரப்பா, இனிமேல் கண்டிப்பா குடிக்காதே, தப்பித் தவறி நீ  தவிர்க்க முடியாம குடித்து விட்டால் மறுநாளே வந்து என்னிடம் உண்மையை ஒப்புக் கொண்டு விடு" இது நீ மீண்டும் குடிக்காம இருக்க உதவும்" என்றார்.

சிறிது நாள் கழித்து அதே ஆள் வந்தான்.

"டாக்டர், நான் எதுக்கு வந்தேன்னா, நான் நேத்து தவிர்க்க முடியாம குடிக்கும் படி ஆயிடுத்து" என்றான். 
டாக்டர் " ஆனா உன்னைப் பார்த்தா இப்பவே நல்லா தண்ணி அடிச்சுட்டு வந்த மாதிரி இருக்கே?" என்றார்.

"அமாம் டாக்டர்..அனால் இதைப் பற்றி நான் உங்க கிட்ட நாளைக்கு வந்து சொல்வேன்".....


Osho: The drunkard has his own logic!
உங்களுக்காக இன்னொரு ஜோக்.. சிரியுங்கள்...Happy Weekend !

ராணுவ கார்போரல் புதிதாக வந்த ராணுவ வீரர்களிடம் பேசுகிறார்.

முதல் வரிசையில் முதல் ஆளாக நின்று கொண்டிந்த ஒருவனைப் பார்த்து , "ராபர்ட், உன்னைப் பொறுத்த வரை கொடி என்றால் என்ன?"
என்றார்.

அந்த ஆள், "கொடி என்பது வண்ணங்கள் நிறைந்த ஒரு துணி" என்றான்.

"என்ன, என்ன சொன்னாய் நீ? முட்டாளே, தேசத்தின் கொடி! அது தான் எல்லாம்....கொடி என்பது உன் தாய், உன் தாய்! நினைவிருக்கட்டும்.. கொடி உன் மாதா"

பிறகு வரிசையில் அடுத்ததாக நின்றிருந்த ராணுவ வீரனைப்பார்த்து "நீ, சொல், கொடி என்பது என்ன?" என்றார்.

அவன் உடனே " ராபர்ட்டின் அம்மா  சார்" என்றான்.

முத்ரா

11 comments:

  1. எல்லாவற்றையும் போட்டு ஒரு கலக்கு கலக்கிட்டீங்க...

    சிறுகதை, ஓஷோ ஜோக்ஸ் மிகவும் அருமை...

    நன்றி...

    ReplyDelete
  2. ஒரே பதிவில் பல விஷயங்களை சொல்லி விட்டீர்கள்.தகவல்,அறிவு ஞானம் விளக்கம் நன்று.குட்டிகதை ஜோக்குகள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  3. //சுகுமார் சும்மாதான் இருக்கேன் , கோபி கத்தரிக்காய், பரமசிவம் பைப்பில்தண்ணிவரலை ,உமாபதி உப்புமாகிண்டி, ஆயிஷா அரிசிக்கடை, விவேக் வீடுகாலி, கோடீஸ்வரன் கூடவரியா, மேனகா மிளகாய்பொடி, கதிர்வேல் காதுகேக்கலை, அகிலா அம்மா அடிச்சிட்டா , விவேக் வீடுபூட்டி , வாசுதேவன் வேலைவேனும் , சபாபதி சம்பளம்பத்தலை, தினேஷ் தூங்குமூஞ்சி , செந்தில் சரியாயிருக்கா
    திவ்யா தலைபொடுகு, சங்கரன் சாப்பிட்டாச்சா , டேனியல் டின்னர்வேனும் என்றெல்லாம் தினம்தினம் புதுப்பெயர் வைத்துக் கொள்ளலாம்!//
    சிரிச்சு மாளலை!

    ReplyDelete
  4. m very happy to see your article. Thanks so much and i am taking a look forward to contact you. Will you kindly drop me a mail?

    ReplyDelete
  5. Hai samudra
    i have recently came across ur blog. A big fan of ur anu andam ariviyal. Had read all ur aaa post. Some dbts in that. Will ask one by one. Waiting for ur next aaa. When is ur next post samudra

    ReplyDelete
  6. # சர் நேம்
    எனக்கும் இந்த சர் நேம் காரணமா பல பிரச்சனை வந்திருக்கு. சின்ன வயசுல, அப்பாவோட பேரை என் பேருக்கு முன்னால Gnaneswaran Abarajithan னு போட வச்சாங்க. அப்புறம், ஜிமெயில் அக்கவுன்ட் ஆரம்பிச்சபோது அதையே பாலோ செய்ய, 'Hi Gnaneswaran' ன்னு வந்துச்சு. இந்தப் பிரச்னைக்கு தீர்வா, என்னோட ஏரியாவுலேயே ஒரு புரட்சியா (?!) அப்பாவோட பேரைத் தூக்கி பின்னால போட்டுகிட்டேன். அப்பவும் சில நூலகங்களோட official documentsல A.Gnaneswaran னு போட ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ Abarajithan G. ன்னு சில இடங்கள்ல யூஸ் பண்றேன்.

    # //நம்முடைய டி.ஏன்.ஏ வும் எலியினுடையதும் 90 % மேட்ச் ஆகிறதாம்.//

    Primates ஆன எங்களுக்கும் Rodents ஆன எலிகளுக்கும் இவ்வளவு ஒற்றுமை எப்படி வந்தது? co-incidence?

    # ஜோக்ஸ்

    :D

    ReplyDelete
  7. மொழிபெயர்ப்பு கவிதைகள் அற்புதம்

    ReplyDelete
  8. ரொம்ப நாளாச்சு இங்கே வந்து. அதே சுவாரசியம்.

    ReplyDelete
  9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/5.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
  10. கவிதைகள் அற்புதம்

    ReplyDelete
  11. hii..
    akila amma adichuta is the best of all....laughing uncontrolably
    sam

    ReplyDelete